கீழுள்ள நாடுகளில் வாழ்க்கை வித்தியாசமாயுள்ளது
ஆஸ்திரேலியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
“கீழுள்ள நாடுகள்” என்பது டௌன் அன்டர் (Down under) என்ற ஆங்கிலச் சொல்லின் மொழிபெயர்ப்பு; இது சமீப ஆண்டுகளில் பலருக்குத் தெரியவந்துள்ளது. ஆனால் எதற்குக் கீழுள்ள நாடுகள்? இது, பூமத்தியரேகைக்கு அடியில் அல்லது கீழே உள்ள நாடுகளாகும். சொல்லர்த்தமாக எடுத்துக்கொண்டால், தென் அரைக்கோளத்தைச் சேர்ந்த எல்லா நாடுகளும் “கீழுள்ள நாடுகள்” என்று அழைக்கப்படலாம். என்றபோதிலும், ஆஸ்திரேலியாவும் நியூ ஜீலாந்துமே பொதுவாக அவ்வாறு அழைக்கப்படுகின்றன. ஆஸ்திரேலியாவைப் பற்றியே இந்தக் கட்டுரை கலந்தாராயும்; இந்தப் பெயர், “தெற்குப்பகுதி” என்று அர்த்தப்படுத்தும் ஆஸ்ட்ராலிஸ் என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வருகிறது.
வட அரைக்கோளத்தின் அநேக நாடுகளோடு ஒப்பிடுகையில் ஆஸ்திரேலியாவில் வாழ்க்கை வித்தியாசமாயுள்ளது. அதன் புவியியல் அமைப்பு மட்டுமே இந்த வித்தியாசத்தை ஏற்படுத்துவதில்லை. சுற்றுப்பயணிகள் காணும் இன்னும் பல வித்தியாசங்களும் உள்ளன.
ஐரோப்பியர் குடியேற்றம்
1788-ல், வெப்பம் மிகுந்த இந்தப் பெரிய நாட்டில் ஐரோப்பியர் குடியேற ஆரம்பித்தனர். ஃபஸ்ட் ஃபிளீட் என்று அழைக்கப்பட்ட பயணக்கப்பல்களின் ஒரு தொகுதி சிட்னி குடாவிற்கு பயணித்தது. அவற்றின் பயணிகள் பெரும்பாலும் இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து நாடுகளிலிருந்து வந்த குற்றவாளிகள்; அவர்கள் ஆங்கில மொழியை அறிந்தவர்கள். அடுத்த 150 ஆண்டுகளாக வந்துசேர்ந்த குடியேறிகளில் பெரும்பாலோர் ஆங்கிலேயர்களாகவே இருந்தனர்.
இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து, மற்ற நாடுகளிலிருந்தும் குடியேறிகள் வர ஆரம்பித்தனர். இன்று, ஆயிரக்கணக்கான, “புதிய ஆஸ்திரேலியர்கள்” இங்கு வசிக்கின்றனர்; அதிக எண்ணிக்கையானோர் இத்தாலியிலிருந்தும் கிரீஸிலிருந்தும் வந்தவர்கள். இந்தக் குடியேறிகள் ஆஸ்திரேலிய வாழ்க்கை முறையைப் பலதரப்பட்டவையாய் மாற்றியிருக்கின்றனர்; தங்களுடைய சொந்த மொழியையும் பரப்பியிருக்கின்றனர்; ஒரு தனிப்பட்ட ஆங்கில உச்சரிப்பையும் அத்துடன் தங்களுடைய சமையல் முறைகளையும் கலாச்சாரங்களையும் கொண்டுவந்திருக்கின்றனர்.
இதுவே, பல்வகைப்பட்ட குடியேறிகளே இங்குக் கேட்கப்படும் தினுசுதினுசான உச்சரிப்பு முறைகளுக்குக் (accents) காரணம். ஆனால் தலைமுறை தலைமுறையாக இங்கு வசித்துவரும் குடும்பங்களிலும்கூட, ஆங்கில உச்சரிப்பு முறையும் பேசும் விதமும் வித்தியாசமானவையாய் இருக்கின்றன. ஆங்கில உயிரெழுத்துக்களான a, e, i, o, u ஆகியவை ஆஸ்திரேலியாவில் இழுத்து இழுத்தும் பொதுவாக தெளிவற்றும் உச்சரிக்கப்படுகின்றன; இதனால் இவற்றை சரியாக புரிந்துகொள்வதற்கு அதிக நேரம் எடுக்கலாம். அத்துடன், ஆஸ்திரேலியாவுக்கே உரிய சொற்றொடர்களும் உள்ளன. உதாரணமாக, பகலோ இரவோ, எந்நேரமாக இருந்தாலும்சரி, “காலை வணக்கம்” (“Good morning”) அல்லது “மாலை வணக்கம்” (“Good evening”) என்பதற்குப் பதிலாக, “வணக்கம், அன்பரே!” (“G’day mate!”) என்று சிநேகப்பான்மையுடன் சொல்வது ஏற்றுக்கொள்ளப்பட்ட வாழ்த்துமுறையாய் இருக்கிறது. பொதுவாக இதைத் தொடர்ந்து, ஒருவருடைய சுகநலன்கள் பற்றி விசாரிக்கப்படுகிறது; விருந்தாளியிடம், “எப்படி இருக்கீங்க அன்பரே, சௌக்கியமா?” (“How yer goin’, mate, orright?”) என்று விசாரிக்கப்படலாம்.
மக்களும் வித்தியாசமானவர்கள்
இந்தக் கஷ்டமான தேசத்தில் வாழ, அனுசரிக்கும் தன்மையும், மனவுறுதியும் தேவைப்பட்டன. இதுவே, “எல்லாம் சரியாகிவிடும் அன்பரே!” (“She’ll be right, mate!”) என்று சொல்லும் ஆஸ்திரேலியர்கள் பலருடைய மிகவும் நம்பிக்கையான மனப்பான்மைக்குக் காரணம்; நிலைமை மோசமடைகையில் ஒருவர் மிகவும் கவலைப்பட வேண்டிய தேவையில்லை, ஏனெனில் எல்லாம் காலப்போக்கில் சரியாகிவிடும் என்பதை இது குறித்துக்காட்டுகிறது.
தி ஆஸ்ட்ரேலியன்ஸ் என்ற பிரசுரத்தின் அணிந்துரை இவ்வாறு குறிப்பிடுகிறது: “சிறைக்கைதிகளாய் இருந்த முதல் குடியேறிகளுடன் ஆரம்பமாகி, இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு, சிறு நாடுகளிலேயே மிகவும் சுறுசுறுப்பானதும், செல்வச்செழிப்புள்ள நாடாகவும் ஆகியிருக்கும் ஒரு நாடு, ஓரளவுக்கு வசீகரமான மற்றும் பலதரப்பட்ட மக்களை உருவாக்க வேண்டும் என்பதை எதிர்பார்ப்பது சரியே. இவர்களே . . . இந்த ஆஸ்திரேலியர்கள்.”
எப்படியாவது பிழைத்துக்கொள்ள வேண்டும் என்ற உள்ளுணர்வு கடந்த இரண்டு நூற்றாண்டுகளாய் ஆஸ்திரேலியர்களிடையே பலமாய் இருந்துவந்ததால், எந்தக் கஷ்டநஷ்டம் வந்தாலும் ஒரே துணையுடன் ஒத்துப்போகும் தன்மை அவர்களில் பலரால் மதிப்புள்ளதாக எண்ணப்படுகிறது. அவர்கள், முதல் உலகப் போரில் பங்குபெற்ற ஆஸ்திரேலிய வீரர்களின் தைரியத்தை கவனத்தில் வைக்கின்றனர். முறைப்படி பயிற்றுவிக்கப்படாத இந்தப் படைகள், நியூ ஜீலாந்தின் இராணுவப் படைகளுடன் சேர்ந்து அன்ஜாக்ஸ் (Anzacs) என்று அழைக்கப்பட்டன; இந்தப் பெயர், ஆஸ்திரேலிய மற்றும் நியூ ஜீலாந்து இராணுவ படைகள் என்ற சொற்றொடரின் முதல் எழுத்துக்களிலிருந்து வந்தது. இவர்கள், “தோண்டுபவர்கள்” என்று எங்கும் அறியப்படலாயினர், ஆனால் இவர்கள் மறைகுழிகளைத் தோண்டினதால் இந்தப் பெயர் ஏற்பட்டதா, அல்லது 1800-களின்போது ஏராளமானோர் வந்து குவிந்துகொண்டிருந்த இடமான ஆஸ்திரேலியாவின் தங்கச்சுரங்கங்களை வெட்டினதால் இந்தப் பெயர் ஏற்பட்டதா என்று நிச்சயமாய்த் தெரியவில்லை.
ஓட்டுதலில் பெரும் வித்தியாசம்
சாலையின் வலது பக்கமாய் வண்டி ஓட்டப்படும் நாடுகளிலிருந்து வரும் சுற்றுப்பயணிகளுக்கு, ஆஸ்திரேலியாவில் வண்டி ஓட்டிச்செல்வது மிகவும் வித்தியாசமாய் இருப்பதாகத் தெரிகிறது. நாடு முழுவதிலும், சாலையின் இடது பக்கத்தில் வாகனங்கள் ஓட்டிச்செல்லப்படுகின்றன.
ஆகவே, வலது பக்கமாய் வாகனங்கள் ஓட்டப்படும் சட்டம் அமலில் உள்ள ஒரு நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு நீங்கள் வந்துசேர்ந்தால், போக்குவரத்து நெரிசல்மிக்க ஒரு சாலையைக் கடந்துசெல்ல நீங்கள் முற்படுவது ஆபத்தாக மாறிவிடலாம். நீங்கள் வழக்கமாய், ‘இடது பக்கம் பார்த்து, பிறகு வலது பக்கமாய்ப் பார்த்து அதன் பிறகு மறுபடியும் இடது பக்கமாய்ப் பார்த்து’ சாலையைக் குறுக்காய்க் கடக்கும் பழக்கம் ஆபத்தானதாய் இருக்கலாம். இப்போதோ, சாலையைக் கடப்பதற்கு முன்பு, ‘வலது பக்கம் திரும்பி, பிறகு இடது பக்கமாய்ப் பார்த்து, அதன் பிறகு வலது பக்கமாய் மறுபடியும் திரும்பி’ செல்வதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். சபாஷ்! நீங்கள் வேகமாய்க் கற்றுக்கொள்கிறீர்கள். அச்சச்சோ! நீங்கள் காருக்குள் ஏறும்போது தவறான பக்கமாய் ஏறப்போனீர்கள். இந்த நாட்டில் ஓட்டுநர் வலது பக்கம் உட்கார்ந்திருப்பார் என்பதை மறந்துவிட்டீர்கள்!
வித்தியாசமான பருவகாலங்கள்
வட அரைக்கோளத்துடன் ஒப்பிடுகையில், கீழுள்ள நாடுகளில் பருவகாலங்கள் தலைகீழாக இருக்கின்றன. அனலான, வறண்ட காற்று வடக்கிலும் வடமேற்கிலும் இருந்து வீசுகிறது; குளிர்கால மாற்றங்கள் தெற்கிலிருந்து வருகின்றன. குளிர்ந்த வாடைக் காற்றைப் பற்றி இங்குப் பேசவில்லை; ஆனால், தெற்கிலிருந்து வரும் உறையச் செய்வதைப் போன்றதும், ஒருவேளை பனியும் குளிர்காற்றும் கலந்த பனிப்புயலைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்.
பூமியின் மிகவும் வறண்ட, வெப்பமான கண்டம் ஆஸ்திரேலியா; 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே வறண்ட உள்நாட்டுப் பகுதிகளில் இருக்கிறது. இதுவரையில் அதிகபட்ச வெப்பநிலையாக 53.1 டிகிரி பதிவாகியுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலையோ, -22 டிகிரி; இது ஆஸ்திரேலியாவின் மிக உயர்ந்த சிகரமான மவுண்ட் கோஸியுஸ்கோவுக்கு அருகில், ஸ்னோயீ மலைப்பகுதியில் பதிவுசெய்யப்பட்டது.
வட அரைக்கோளத்தின் அளவுக்கு இங்கு கடும் குளிர் இருப்பதில்லை. உதாரணமாக, விக்டோரியா மாநிலத்தின் தலைநகரான மெல்போர்னை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த நகர் ஆஸ்திரேலியாவின் தென்கோடியில் அமைந்திருந்தாலும், ஜூலை மாதத்தில் ஒரு நாளின் சராசரி வெப்பநிலை 6 முதல் 13 டிகிரி செல்சியஸ் வரை இருக்கிறது. இதை, சீனாவிலுள்ள பீஜிங் நகரில் ஜனவரி மாதத்தில் இருக்கும் ஒரு நாளின் சராசரி வெப்பநிலையான -10 முதல் +1 டிகிரியுடனோ, அல்லது நியூ யார்க்கின் -4 முதல் +3 டிகிரியுடனோ ஒப்பிட்டுப் பாருங்கள். இரு நகரங்களும், பூமத்தியரேகையிலிருந்து மெல்போர்ன் நகர் எவ்வளவு தூரத்தில் இருக்கிறதோ அவ்வளவு தூரத்திலேயே அமைந்திருக்கின்றன. கீழுள்ள நாடுகள் ஏன் அனலாய் இருக்கின்றன, அதுவும், பூமியிலேயே குளிர் மிகுந்திருக்கும் இடமான அன்டார்க்டிகாவுக்கு வெகு அருகில் ஆஸ்திரேலியா அமைந்திருந்தபோதிலும் ஏன் அவ்வாறு இருக்கின்றன?
வட அரைக்கோளத்தின் பெரும்பகுதி நிலப்பகுதியாயும், தென் அரைக்கோளத்தின் பெரும்பகுதி சமுத்திரங்களாயும் இருப்பதே வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. ஆஸ்திரேலியாவும் நியூ ஜீலாந்தும் ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு சமுத்திரத்தால் சூழப்பட்டிருக்கின்றன; இதுவே, உறையச்செய்யும் பலத்த அன்டார்க்டிக் காற்றுக்கு எதிராக பாதுகாக்கும் அனல்காற்றை உருவாக்குகிறது; இவ்வாறு அனலான தட்பவெப்பநிலை தொடர்ந்து இருக்கிறது.
ஆஸ்திரேலிய கண்டம் பெரியதாய் இருப்பதால், வெவ்வேறு பகுதிகளில் காணப்படும் தட்பவெப்பநிலையிலுள்ள வித்தியாசம் மிகவும் குறிப்பிடத்தகுந்தது. கண்டத்தின் தென்கோடி மாநிலங்களில் பருவகால வித்தியாசங்கள் தெளிவாகத் தெரிகின்றன; அதாவது, குளிர்காலங்களில், தெளிவான, குளிரான அல்லது பனிபெய்யும் இரவுப்பொழுதுகளைத் தொடர்ந்து, பொதுவாக இனிய அனலான பகற்பொழுதுகள் வருகின்றன. இந்த இனிய குளிர்நாட்கள், பெரும்பாலும் வட அரைக்கோளத்திலிருக்கும் நாடுகளில் கோடைக்காலத்தில் உள்ள வெப்பநிலைகளை ஒத்திருக்கின்றன. என்றாலும், ஆஸ்திரேலியாவின் வடக்கு மாநிலங்களில், ஓர் ஆண்டில் இரண்டே பருவகாலங்கள் ஏற்படுகின்றன; அதாவது, நீண்டிருக்கும் வறண்ட பருவகாலமும், பருவ மழையுடன் கூடிய ஈரமான பருவகாலமும் ஏற்படுகின்றன. வடக்குப் பிராந்தியத்தின் தலைநகரான டார்வினில், ஆண்டுமுழுவதிலும் வெப்பநிலை சுமார் 32 டிகிரி செல்சியஸாகவே இருக்கிறது.
மற்ற வித்தியாசங்கள்
இந்தக் கண்டத்தின் பெரும்பாலான பகுதியிலெங்கும் அனலான வானிலை இருப்பதன் விளைவாக, ஆஸ்திரேலியர்களில் பெரும்பாலானோர் சாதாரண உடைகளையே உடுத்துகின்றனர். ஆனால் அகல விளிம்புடைய ஒரு தொப்பியை அணிவது அவசியம். அதிக நேரம் சூரிய ஒளி படுவதால், பெரும்பாலான மிதவெப்பமண்டல நாடுகளில் ஏற்படுவதைவிட இங்கு தோல் புற்றுநோய் அதிகமாய் ஏற்படும் சாத்தியம் இருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் திறந்தவெளி இன்னும் ஏராளமாய் இருப்பதால், இறைச்சி சுட்டுத்தரும் திறந்தவெளிக் கடைகளுக்கான வசதிசெய்யப்பட்ட பல சுற்றுலாப் பகுதிகள் இருக்கின்றன. இறைச்சி, ஓரளவுக்கு குறைந்தவிலையில் இங்குக் கிடைப்பதால், சாசேஜ்களும் மாட்டிறைச்சி வறுவல்களும் இல்லாத திறந்தவெளிக் கடைகளே இல்லை எனலாம். திறந்தவெளிக் கடைகளைச் சுற்றி நிற்கும் மக்கள், ஒருவருக்கொருவர் ரகசியமான சைகைகளைக் காட்டிக்கொண்டா இருக்கிறார்கள்? இல்லை, அவர்கள் வெறுமனே ஈக்களை விரட்டிக்கொண்டிருக்கிறார்கள்! திறந்தவெளியில் உணவுப்பண்டங்களை வாங்கித் தின்னும்போது ஈக்களாலும் கொசுக்களாலும் ஒரே தொல்லைதான்; அதுவும் குறிப்பாக உஷ்ணமான காலங்களில்.
ஆகவே, கீழுள்ள நாடுகளில் வாழ்வதென்பது, ஈக்களையும் கொசுக்களையும் சமாளித்து வாழக் கற்றுக்கொள்வதை அர்த்தப்படுத்துகிறது; பெரும்பாலான வீடுகளில் முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் வலைக் கதவுகள் போடப்பட்டுள்ளன. முற்காலங்களில், ஈ விரட்டியாக செயல்படுவதற்காக, விளிம்பு பாகத்தில் பல கார்க்குகள் தொங்கவிடப்பட்ட தொப்பிகளை மக்கள் அணிந்தனர். பூச்சி விரட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, இப்படிப்பட்ட தொப்பிகள் இப்போதெல்லாம் அதிகமாய் காணப்படுவதில்லை.
இத் தேசத்தில் காணப்படும் மற்றொரு வித்தியாசம், சிறப்புவாய்ந்த வண்ண மலர்களும், பூக்கும் புதர்ச்செடிகளும் மரங்களுமாகும். வட அரைக்கோளத்தில் பொதுவாக உள்ள மூக்கைத்துளைக்கும் நறுமணம் இங்கில்லை. இங்கு, தோட்டப் பிரியர் ஒருவர், பூக்களுக்கு வெகு அருகில் வந்து முகந்துபார்த்தால்தான் அதன் வாசனையை முழுவதுமாய் நுகர முடியும். உண்மைதான், ஆஸ்திரேலியாவிலுள்ள எல்லா மலர்களுமே இப்படி இருப்பதில்லை. உதாரணமாக, டாஃப்னி, மல்லிகை ஆகிய புதர்ச்செடிகள் உங்கள் மூக்கைத் துளைக்கும் இனிய நறுமணத்தை வீசுகின்றன. ஆனால் பொதுவாக, குளிர்ப்பிரதேசங்களில் உள்ள மலர்களைக் காட்டிலும், இங்குள்ள மலர்கள் குறைந்தளவே மணம்வீசுகின்றன.
விசாலமான திறந்தவெளிகள்
திறந்தவெளியானது கீழுள்ள நாடுகளிலுள்ள முக்கிய வித்தியாசத்தின் ஓர் அம்சமாகும். அருகிலும் தொலைவிலும் இருப்பவை பற்றிய கருத்தும் வடக்கேயுள்ள நாடுகளிலிருந்து வித்தியாசப்படுகிறது. நகர்ப்பகுதிகளுக்கிடையில் உள்ள தூரம் அத்தனை அதிகமாய் இருப்பதால், மற்றொரு நகரத்தைக் காண்பதற்காக ஒருவர் மணிக்கணக்கில் பயணம் செய்ய வேண்டியதாகலாம். குறிப்பாக இது, தனித்திருக்கும் நாட்டுப்புறம் (outback) என பிரியத்துடன் அழைக்கப்படுவதைப் பொறுத்தவரை உண்மையாய் இருக்கிறது. இங்குள்ள திறந்தவெளியும் அமைதலான சூழலும் மனதைக் கொள்ளைகொள்வதால், சுற்றுப்பயணி ஒருவர், தூய, மாசற்ற காற்றால் தன் நுரையீரல்களை நிரப்பிக்கொள்ளலாம். பக்கத்திலோ யூகலிப்டஸ் மரம்; பொதுவாக பிசின் மரம் என்றும் அழைக்கப்படுகிறது. பிசின் மரங்களும் வேட்டல், அல்லது வேல மரங்களும் உள்நாட்டின் திறந்தவெளியில் எங்கும் நிறைந்து காணப்படுகின்றன.
மாலை நேரம் நெருங்க நெருங்க, அழகிய சூரிய அஸ்தமனம் உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கிறது. ஆனால் திடீரென்று இருட்டாகிவிடுகிறது; ஏனெனில் கீழுள்ள நாடுகளில் அந்திப்பொழுது வெளிச்சம் கொஞ்ச நேரத்திற்குத்தான் நீடித்திருக்கும். சீக்கிரத்தில், பளிச்சென்ற தெற்கத்திய இரவுநேர வானம், சதர்ன் கிராஸ் என்றழைக்கப்படும் சிலுவை வடிவிலமைந்த நான்கு நட்சத்திரங்கள் உட்பட, அதன் எண்ணற்ற நட்சத்திரங்களை வெளிக்காட்டுகிறது. காட்டுப்பிராணிகள் ஓய்வெடுக்க ஆரம்பிக்கையில், பிசின் மரங்கள் வானத்தில் வரையப்பட்டதுபோல் காட்சியளிக்கின்றன; அத்துடன், அங்கு நிலவும் மயான அமைதி, நீங்கள் இருப்பது ஒரு விசாலமான திறந்தவெளிதான் என்பதை உணர்த்துவதாக தோன்றுகிறது.
உங்கள் படுக்கை உறைக்குள் (sleeping bag) சொகுசாக தூங்கச்செல்வதற்கு முன்னதாக, கேம்ப் நெருப்பை கவனத்துடன் அணைத்துவிடுங்கள். அது மிகவும் முக்கியம்; ஏனெனில் ஆஸ்திரேலிய வனாந்தரவெளியில் கட்டுக்கடங்கா விதத்தில் நெருப்பு பற்றிக்கொள்ளும்போது, அதன் வழியிலுள்ள எதையுமே விட்டுவைக்காமல் சுட்டெரித்து, விரைவில் பேரழிவை ஏற்படுத்துகிறது. மிகுதியான வெப்பத்தால் பிசின் மரங்களின் நுனிப்பகுதி படார் படாரென்று வெடிக்கிறது; இதுவே காட்டுத்தீ வெகுவேகமாய் பரவும்படி செய்கிறது. அனலான, வறண்ட கோடைமாதங்களில் காட்டுத்தீயானது, புதர்ப்பகுதிகளுக்கு அருகில் வாழ்பவர்களுக்குத் தொடர்ந்து ஓர் அச்சுறுத்தலாய் இருக்கிறது. திறந்த வெளியில் நெருப்பு பற்ற வைப்பது பற்றிய விதிமுறைகளும் தடைகளும் கண்டிப்பாய்ப் பின்பற்றப்பட வேண்டியவை.
விரைவில் பொழுது விடிகிறது; அருகிலிருந்த பிசின் மரத்தில் தங்கள் இரவுப்பொழுதைக் கழித்த கூக்கபுரா பறவைகளின் உரத்த சிரிப்பொலி போன்ற இனிய பாடல் ஒலிகேட்டு நீங்கள் விழிப்பீர்கள். குழப்பமடைந்த நீங்கள் உங்கள் கூடாரத்துக்கு வெளியில் எட்டி பார்க்கும்போது, சுற்றிலுமுள்ள மற்ற மரங்களிலும் அழகிய வண்ணப் பறவைகள் ஏராளமாய் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறீர்கள். இதற்குள், ஏற்கெனவே அவற்றுள் பலவற்றையும், கங்காருக்கள், கோலாக்கள், ஈமுக்கள் ஆகியவற்றையும், அத்துடன், வாம்பட்டு உட்பட மற்ற பிராணிகளையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். நீங்கள் பார்க்க விரும்பாதவை பாம்புகளும் சிலந்திகளுமே. ஆம், உலகிலேயே மிகவும் நச்சுத்தன்மையுள்ள பாம்புகளிலும் சிலந்திப்பூச்சிகளிலும் சில இக் கண்டத்தில் இருக்கின்றன. ஆனால், இவற்றில் பெரும்பாலானவை, நீங்கள் அவற்றுக்குத் தொந்தரவு ஏதும் செய்யாவிட்டால், உங்களுக்கு ஒரு தீங்கும் செய்யா.
கேம்ப் நெருப்பைச் சுற்றியிருந்து சாப்பிடும் காலை உணவுக்கான நேரம் இது; அதாவது, பெரும்பாலும் பேக்கன் வகை பன்றியிறைச்சி, முட்டைகள், நன்றாக டோஸ்ட் செய்யப்பட்ட ரொட்டித்துண்டுகள் ஆகியவற்றைக் கொண்ட உணவு. தூய காற்று உங்களுக்கு நல்ல பசியைக் கிளறிவிட்டிருக்கிறது. பிறகு, உங்கள் காலை உணவை ஈக்களின் தொல்லைகளுக்கு மத்தியிலும் சாப்பிட நீங்கள் முயலுகையில், இந்தப் புதர் சம்பந்தமான அனுபவத்தைப் பற்றி நீங்கள் நினைத்துப்பார்க்க ஆரம்பிக்கிறீர்கள்; இது, ஆஸ்திரேலிய கண்டம் எந்தளவு விரிந்து பரந்திருக்கிறது என்பதைப் பற்றிய ஒரு காட்சியை உங்களுக்குக் கொடுத்துள்ளது.
விசாலமான இந்த நாட்டில் உங்களுடைய சுற்றுப்பயணங்கள் முடிந்து வீடுதிரும்பிக் கொண்டிருக்கிறீர்கள். சிநேகப்பான்மையான ஆஸ்திரேலியர்களைப் பற்றியும் அவர்களுடைய எளிய வாழ்க்கைமுறையைப் பற்றியும் நீங்கள் பெற்ற அனுபவம் நீங்காது நினைவில் நிற்கப்போகிறது என்பதில் சந்தேகமில்லை. பெரும்பாலான சுற்றுப்பயணிகளைப் போலவே, மீண்டும் எப்போதாவது ஒருமுறை இங்கு வர நீங்கள் ஒருவேளை விரும்பலாம். ஆனால் சந்தேகமின்றி நீங்கள் இந்த முடிவுக்கு வந்திருப்பீர்கள்: கீழுள்ள நாடுகளில் வாழ்க்கை வித்தியாசமாயுள்ளது!
[படத்திற்கான நன்றி]
பாராகித்து, பிங்க் நிற கக்கூட்டு: By courtesy of Australian International Public Relations; பெண்: By courtesy of West Australian Tourist Commission