உருவாகும் வருடங்கள்—உங்களுடைய மிகச் சிறந்தது மிகவும் தேவைப்படும்போது
பிள்ளைகள் “கர்த்தரால் [யெகோவாவால், NW] வரும் சுதந்தரம்,” என்பதாகச் சொல்லப்படுகிறார்கள். அவர்கள் “பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்,” என்பதாகச் சொல்லப்படுகிறார்கள். (சங்கீதம் 127:3; 128:3) “கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக,” என்று பெற்றோர் அறிவுறுத்தப்படுகின்றனர்.—எபேசியர் 6:4.
நல்ல கனிகொடுக்க ஒலிவ மரங்களை நீங்கள் உருவமைக்கப்போகிறீர்கள் என்றால், அதைச் செய்வதற்கான நேரம் அவை ‘உங்கள் பந்தியைச் சுற்றி கன்றுகளாக இருக்கும்போதுதான்.’ ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. கடவுளுடைய வழிகளுக்கு இசைந்து செல்லும்படி உங்கள் பிள்ளைகளைப் பயிற்றுவிக்கவேண்டுமானால், குழந்தைப்பருவத்திலிருந்தே அதைத் தொடங்குவதுதான் சிறந்த சமயமாக இருக்கிறது. “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.” (நீதிமொழிகள் 22:6; 2 தீமோத்தேயு 3:15) மூளை, குழந்தைப்பருவத்தில் அதிவேகமாக, இனி ஒருபோதும் இருக்கமுடியாத வேகத்தில் தகவல்களை ஈர்த்துக்கொள்கிறது. உங்கள் பிள்ளைகளுக்கு உங்களுடைய சிறந்ததைச் செய்வதற்கு இதுவே ஏற்ற காலமாக இருக்கிறது.
ஸோனி கழகத்தின் ஸ்தாபகராகிய மாஸாரு இபூகா, பாலர் பள்ளி பருவம் மிகவும் தாமதமானது! என்ற தலைப்பைக் கொண்ட ஒரு புத்தகத்தை எழுதினார். அதன் அட்டையில் இந்த வார்த்தைகள் காணப்பட்டன: “உங்கள் குழந்தையின் கற்றுக்கொள்வதற்கான ஆற்றல், வாழ்க்கையின் முதல் இரண்டு அல்லது மூன்று வருடங்களிலே மிக அதிக அளவில் உள்ளது. எனவே, காத்திருக்காதீர்கள் . . . பாலர் பள்ளி பருவம் மிகவும் தாமதமானது!”
மனிதவர்க்க ஆற்றலின் செயல்வெற்றிகளுக்கான நிறுவனங்களின் இயக்குநராகிய கிளென் டோமென் என்பவர் முன்னுரையில் பின்வருமாறு கூறுகிறார்: “திரு. இபூகாவின் மகத்தான, மேன்மையான புத்தகம், எவ்விதத்திலும் அசைவிக்கக்கூடிய அத்தனை பெரிய தீர்ப்புகள் எதையும் செய்யவில்லை. சின்னஞ்சிறு பிள்ளைகள் அவர்கள் சிறுவர்களாய் இருக்கும்போது நடைமுறையான எதையும் கற்றுக்கொள்ளும் திறமையை தங்களுள் கொண்டிருக்கின்றனர் என்று அவர் வெறுமென கருத்து தெரிவிக்கிறார். அவர்கள் இரண்டு, மூன்று அல்லது நான்கு வயதுகளில் எந்த உணர்வான முயற்சியும் இல்லாமல் கற்றுக்கொள்வது, வாழ்க்கையின் பிற்பட்ட காலங்களில் கடும் முயற்சியோடுதான் கற்றுக்கொள்ளமுடியும் அல்லது கற்றுக்கொள்ள முடியாமலே போய்விடவும்கூடும் என்று குறிப்பிடுகிறார். பெரியவர்கள் கஷ்டத்துடன் கற்றுக்கொள்வதை குழந்தைகள் சந்தோஷமாகக் கற்றுக்கொள்கிறார்கள் என்று அவர் தெரிவிக்கிறார். பெரியவர்கள் ஆமை வேகத்தில் கற்றுக்கொள்வதைச் சின்னஞ்சிறு குழந்தைகள் மிகவும் வேகமாகக் கற்றுக்கொள்கிறார்கள் என்று குறிப்பிடுகிறார். சில நேரங்களில் வயதுவந்தவர்கள் கற்றுக்கொள்வதை தவிர்க்கிறார்கள், அதே சமயத்தில் சின்னஞ்சிறு குழந்தைகள் சாப்பிடுவதைவிட கற்பதைத் தேர்ந்தெடுப்பர் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.”
பாலர் பள்ளி பருவம் மிகவும் தாமதமானது என்று இபூகா சொல்வதற்கான காரணமென்னவென்றால், அந்தக் குழந்தையின் கற்றுக்கொள்வதற்கான சிறந்த வருடங்கள் அதற்குள் கடந்து சென்றுவிட்டிருக்கும். ஆனால் மற்றொரு காரணமும் இருக்கிறது. தற்காலத்தில் ஒழுக்க சீர்குலைவு பாலர் பள்ளி வரையாக சென்றெட்டியிருக்கிறது; எனவே, குழந்தை அங்கு செல்வதற்குள், அவனைக் கறைபடுவதிலிருந்து பாதுகாப்பதற்காக ஒரு பலமான ஒழுக்க நெறியை பெற்றோர் அந்தக் குழந்தைக்குள் ஆழப்பதியவைப்பது அவசியமாய் இருக்கிறது.
இந்தத் தேவையை, அப்போதுதான் பாலர் பள்ளிக்குச் சென்றிருக்கும் ஓர் ஆறு வயது சிறுவனின் பெற்றோரது அறிக்கை காண்பிக்கிறது. “பாலர் பள்ளியிலிருந்த முதல் வாரத்தில், பள்ளி பேருந்தில் செல்லும் 15 நிமிடங்களின்போது, எங்கள் மகன் மற்றொரு பையனால் பாலினம் சம்பந்தமாக அணுகி தாக்கப்பட்டிருக்கிறான். இது பல நாட்கள் நடந்து கொண்டிருந்தது. அது வெறும் குழந்தை விளையாட்டாகவோ மருத்துவரைப்போல் பாவனை செய்து விளையாடுவதாகவோ இருக்கவில்லை; ஆனால் இயல்புக்குமாறான, வெளிப்படையான நடத்தையாக இருந்தது.
“எங்களுடைய மகன் வகுப்பில் உள்ள அநேக பிள்ளைகள், பெரியவர்களுக்காக என்று A-தரமிடப்பட்ட திரைப்படங்களைப் பெற்றோருடன் சேர்ந்து பார்க்கின்றனர். ஒரு குழந்தை-பாதுகாவலரின் கேள்விக்குரிய கவனத்தில் விட்டுச்செல்வதைவிட அவர்களைக் கூட்டிக்கொண்டு செல்வது பாதுகாப்பானது என்பதாக ஒருவேளை பெற்றோர் உணரலாம். சில குழந்தைகள் A-தரமிடப்பட்ட திரைப்படங்களை கேபிள் டிவியில் அல்லது தங்கள் பெற்றோர் வீட்டில் வைத்திருக்கும் படங்களில் காண்கின்றனர்.
“குழந்தைப்பருவத்திலிருந்தே, அவனுடைய உருவாகும் வருடங்களில் எங்களுடைய மகனுக்கு ஒழுக்க தராதரங்களை ஆழப்பதியவைப்பதன் முக்கியத்துவத்தை எங்களுடைய சொந்த வீட்டில் ஏற்பட்ட திடுக்கிடவைக்கும் சம்பவம் ஒன்று அழுத்திக் காண்பித்தது. சில வயதுவந்த விருந்தாளிகளுடன் ஒரு நான்கு வயது சிறுமியும் இருந்தாள். அவளும், பாலினம் சம்பந்தமான காரியங்கள் திருமணமான வயதுவந்தோருக்கு மட்டுமே உரியது என்று நன்கு போதிக்கப்பட்டிருந்த எங்கள் மகனும் அவனுடைய விளையாட்டறையில் இருந்தனர். நிச்சயம் செய்யப்பட்டதைப்போல அவள் விளையாட விரும்பினாள்; அதற்கு அவன் கீழே படுக்க வேண்டும் என்று அவள் விவரித்தாள். அவன் களங்கமின்றி அவ்வாறு செய்தபோது அவள் அவன்மேல் படுத்தாள். அவன் திடுக்கிட்டு, ‘அது திருமணமானவர்களுக்கு மட்டும்தான்!’ என்று கத்தினான். அவன் விடுபட்டு விளையாட்டு அறையிலிருந்து வெளியே ஓடி வரும்போது, ‘யாரிடமும் சொல்லாதே!’ என்று அவள் சத்தமிட்டாள்.”—ஆதியாகமம் 39:12-ஐ ஒப்பிடவும்.
நகரங்களிலும் புறநகர்களிலும் நிகழும் சில காரியங்கள் கீழ்க்கண்டவாறு—குழந்தைப்பருவத்திலிருந்தே உங்கள் இளம் குழந்தைகளை இவற்றிற்கு எதிராகக் காத்துக்கொள்ளவேண்டிய காரியங்கள் இவை.
ஏழு வயது சிறுவர் இருவர் ஓர் ஆறு வயது சிறுமியை ஒரு பொது பள்ளிக்கூடத்தின் ஓய்வறையில் கற்பழித்ததற்காகக் குற்றஞ்சாட்டப்பட்டனர். ஆறு, ஏழு மற்றும் ஒன்பது வயதான மூன்று பையன்கள் ஓர் ஆறு வயது சிறுமியை பாலினம் சம்பந்தமாக தாக்குதல் செய்தனர். ஓர் எட்டு வயது சிறுவன் ஒரு பாலர்பள்ளிச் சிறுவனை ஓரினப்புணர்ச்சியில் ஈடுபடுத்தினான். ஒரு 11 வயது சிறுவன் ஓர் 2 வயது சிறுமியை கற்பழித்ததற்காகக் குற்றஞ்சாட்டப்பட்டான். அவ்வாறு தீங்கிழைப்போர், மிகவும் சிறுவராக இருந்தபோது பெரும்பாலும் பாலின துர்ப்பிரயோகத்திற்கு ஆளானோர் என்பதாக சில மருத்துவ வல்லுநர்கள் வாதிடுகின்றனர்.
இது ஓர் இளம் சிறுவனுடைய விஷயத்தில் உறுதிசெய்யப்பட்டது. அவன் ஒரு குழந்தையாய் இருந்தபோது அவனுடைய 20 வயது சித்தி அவனுடன் வாயால் பாலின தொடர்பு கொள்வதைப் பழக்கப்படுத்தினாள். அவன் 18 மாத வயதிலிருந்து 30 மாத வயதுவரையாக இந்தப் பாலின துர்ப்பிரயோகத்தை அனுபவித்தான். இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குப் பின்னர் அவன் இளம் சிறுமியரை பாலின தொந்தரவுகளுக்கு ஆளாக்கினான். அவன் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தபோது, இந்தக் காரியத்தைத் தொடர்ந்தான்; முதலாம் வகுப்பில் இருந்தபோதும், மறுபடியும் இரண்டாம் வகுப்பிலும் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டான்.
தொடக்கத்திலிருந்தே பயிற்றுவிப்பதற்கான தேவை
உருவாகும் வருடங்களில் சரியான பயிற்சியைக் கொடுக்க பெற்றோர் தவறுவது, குற்றங்களுக்கு வழிநடத்துகிறது; இது நாசம் செய்தல், கொள்ளையடித்தல், கொலை செய்தல் போன்ற அதிகப்படியான குற்றச்செயல்களுக்கு வழியைத் திறந்து வைக்கக்கூடும். ஒரு சில எடுத்துக்காட்டுகள் கீழ்க்கண்டவாறு.
ஆறு வயது சிறுவர் மூவர் தங்களுடைய விளையாட்டுக் கூட்டாளியின் வீட்டைக் கொள்ளையிட்டு, அங்கிருந்த ஒவ்வொரு அறையையும் நாசம் செய்தனர். ஓர் ஒன்பது வயதான அழிவுண்டாக்கும் சிறுவன் சட்டவிரோதமான சேதங்கள், கொள்ளையடிப்புகள், மற்றொரு சிறுவனைக் கத்தியைக்காட்டி மிரட்டல் மற்றும் ஒரு சிறுமியின் முடியில் தீ வைத்தல் ஆகியவற்றிற்காகக் குற்றஞ்சாட்டப்பட்டான். இரண்டு 11 வயது சிறுவர் ஒரு 10 வயது சிறுவனின் வாயில் கைத்துப்பாக்கியை திணித்துவிட்டு அவனுடைய கடிகாரத்தைத் திருடிச்சென்றனர். ஒரு வீடியோ விளையாட்டின்பேரில் எழுந்த வாக்குவாதத்தில் ஒரு பத்து வயது சிறுவன் ஓர் ஏழு வயது சிறுமியைச் சுட்டுக் கொன்றான். மற்றொரு பத்து வயது சிறுவன் தன்னுடைய விளையாட்டுக் கூட்டாளியைச் சுட்டு அவனுடைய சடலத்தை வீட்டின் அடியில் ஒழித்து வைத்தான். ஓர் ஐந்து வயது சிறுவன் ஒரு தத்திநடக்கும் குழந்தை சாகும்படியாக ஐந்தாம் மாடி படிக்கட்டிலிருந்து தள்ளிவிட்டான். அவனுடைய குடும்பத்திலிருந்து பணம் பிடுங்குவதற்காக ஓர் 7 வயது சிறுவனைக் கடத்தும் முயற்சியில் ஒரு 13 வயது சிறுவன் இரண்டு வாலிபர்களுடன் சேர்ந்து கொண்டான்; ஆனால் மீட்பிற்கான ஈட்டுத் தொகையைக் கோரி தொலைபேசி அழைப்பை அந்தக் குடும்பத்திற்கு விடுப்பதற்குமுன் அவர்கள் அந்தச் சிறுவனை உயிருடன் புதைத்துவிட்டனர்.
மேலும் நம் கவனத்திற்குக் கடைசியாக, பலவகை துப்பாக்கிகளை ஏந்திக்கொண்டு, கொள்ளையடிக்கும் நோக்கோடு தெருக்களில் சுற்றிக்கொண்டு, துப்பாக்கி சண்டைகளைத் தொடுத்து, குண்டுகள் வீசப்பட்டு, ஒருவரையொருவர் கொல்வது மட்டுமல்லாமல் குற்றமற்ற குழந்தைகளும் பெரியவர்களும் அந்தக் குண்டு வீச்சுகளால் தாக்கப்படும் பருவ வயது கும்பல்களின் பேரச்சுறுத்தலும் இருக்கிறது. அவர்கள் பெரிய நகரங்களின் பல சுற்றுவட்டாரங்களில் திகிலூட்டுகின்றனர்—லாஸ் ஏஞ்சலிஸ் மாவட்டத்தில் மட்டும், “800-க்கும் அதிகமான அடையாளங்கண்டுகொள்ளக்கூடிய கும்பல்களைச் சேர்ந்த 1,00,000-ற்கும் அதிகமான உறுப்பினர்கள் இருக்கின்றனர்.” (பதினேழு, [Seventeen], ஆகஸ்ட் 1991) அநேகர் பிளவுபட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அந்தக் கும்பல் அவர்களுடைய குடும்பமாகிவிடுகிறது. அநேகர் சிறையைச் சென்றடைகின்றனர். அநேகருக்கு மரணம் முடிவாக இருக்கிறது. சிறையிலிருந்து எழுதப்பட்ட மூன்று கடிதங்களின் இந்தப் பகுதிகள் மாதிரிகளாக இருக்கின்றன.
முதலாவது: ‘நான் திருடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டதற்காக, ஒரு சிறுவர் குற்றச்செயல் கட்டுப்பாடு முகாமில் இருக்கிறேன். அங்கு நாங்கள் நால்வர் இருக்கிறோம். பின்னர் காவல்துறையினர் வந்தனர். என்னுடைய வீட்டுப் பையன்களில் [கும்பல் குடும்பம்] இருவர் ஒரு திசைக்கு ஓடினர்; நானும் இன்னொருவனும் மற்றொரு திசையில் ஓடினோம்; ஆனால் எங்களைத் துரத்திப் பிடித்த காவல்துறை நாய்களைவிட வேகமாக ஓடவில்லை. நான் வெளியே வரும்போது, என்றோ ஒருநாள் ஒரு பெரிய ஆளாக இருப்பேன். பள்ளிக்குச் சென்று நல்ல மதிப்பெண்களைப் பெறுவது எனக்கு எப்போதுமே மிகக் கடினமான காரியம். ஆனாலும், தோழா, சிறையிலிருந்து நேரத்தைக் கழிப்பதைவிட கடினமாக வேறு எதுவும் இருந்ததில்லை!’
இரண்டாவது: ‘நான் முதல்முறையாக மெக்ஸிக்கோவிலிருந்து வந்தபோது, எனக்கு எட்டு வயதுதான். எனக்கு 12 வயதானபோது நான் ஒரு கும்பலிலிருந்தேன். எனக்கு 15 வயதானபோது நான் அதில் அதிகமாக ஈடுபட்டிருந்தேன். ஒரு காரில் சென்றுகொண்டே அநேகரை சுடுவதை பழக்கமாகச் செய்து வந்தேன். என்னுடைய கைத்துப்பாக்கியை எப்போதும் என்னுடன் கொண்டிருந்தேன். நான் 16 வயதுடையவனாய் இருந்தபோது, நான் சுடப்பட்டு, கிட்டத்தட்ட சாகும் நிலையில் இருந்தேன். நான் அவருடன் செல்வதற்குத் தயாராக இன்னும் இல்லாததால் அவர் என்னை எடுத்துக்கொள்ள விரும்பாததற்காக நான் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். இப்பொழுது என்னுடைய கால்களில் குண்டு வீச்சினால் ஏற்பட்ட துளைகள் உள்ளன. எனவே என்னுடைய ஆலோசனை என்னவென்றால் ஒரு கும்பலின் கூட்டாளி ஆகாதீர்!!! அல்லது தனிமையாக இருப்பீர்கள், சிறையில் என்னைப்போலவே முடமாக!’
மூன்றாவது: ‘நான் என்னுடைய 11-வது வயது முதற்கொண்டு நன்கறியப்பட்ட ஒரு கும்பலின் கூட்டாளி. நான் நான்கு முறை குத்தப்பட்டும், மூன்று முறை சுடப்பட்டும், சிறையிலடைக்கப்பட்டும், எண்ணிக்கையில் அடங்காத பல முறைகள் அடிக்கப்பட்டும் இருந்தேன். நான் சாகவேண்டியதுதான் பாக்கி; ஆனால் அதற்காக எனக்கு 13 வயதான அன்றுமுதல் காத்துக்கொண்டிருக்கிறேன், எனக்கு இப்போது வயது 16. நான் இப்போது ஓர் எட்டு மாத சிறைவிதிப்பில் இருக்கிறேன்; இன்னும் இரு ஆண்டுகளில் மரணமடைவேன்; ஆனால் ஒரு கும்பலில் சேர துவங்காமல் இருந்திருந்தால் நீங்கள் இவை அனைத்தையும் தவிர்க்கலாம்.’
ஏற்ற காலத்தைப் பற்றிக்கொள்ளுங்கள்
இப்பொழுது, பிள்ளைகளை அவர்களுடைய உருவாகும் வருடங்களில் பயிற்றுவிக்கத் தவறுவது நிச்சயமாக பயங்கரமான குற்றச்செயல்களில் விளைவடையும் எனக்கூறுவது இவையனைத்தின் நோக்கமல்ல. ஆனால் அவ்வாறு செய்யத் தவறுவது தகர்த்தழிக்கும் நடத்தைக்கு வழிநடத்தக் கூடும்; அது குற்றங்களில் ஈடுபடும்படி உருவெடுத்து, தொடர்ந்து கண்டிக்கப்படாவிட்டால் குற்ற இயல்புடைய நடத்தை, பின்னர் சிறை மற்றும் மரணத்தில் விளைவடையலாம்.
உங்கள் பிள்ளைகளில் அதுபோன்ற ஏதாவது மனசாய்வுகளைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கு, அவர்கள் பருவ வயதை அடையும்வரை காத்திருப்பதைவிட அதற்கு முன்னர் செய்வது எளிதாக இருக்கும். வெளிப்புற செல்வாக்குகள் அவர்கள் கவனத்தைக் கேட்குமுன், அவர்களுடைய உருவாகும் வருடங்களில் அவர்களுடைய பெரும்பாலான நேரம் உங்களுடனேயே செலவிடப்படும், பாலர் பள்ளிக்குச் செல்வதற்கு முன்னான காலமே, உண்மையில் நீங்கள் தொடங்குவதற்கான காலம். நீங்கள் அவர்களுடைய குழந்தை பருவத்தில் அவர்களுடன் நெருக்கமாக இராவிட்டால், பருவ வயதில் அவர்களுடன் நெருக்கமாக இருக்க அவர்கள் உங்களை அனுமதிக்கமாட்டார்கள். உங்களை அவர்களுடைய சகாக்கள் மாற்றீடு செய்திருப்பதாகக் காண்பீர்கள். ஆகவே பெற்றோருக்கு ஆலோசனை என்னவென்றால், இந்த உருவாகும் வருடங்களில் உங்களுடைய குழந்தைகளைப் புறக்கணிக்காதீர்கள்; இப்பொழுது உங்களுடைய மிகச் சிறந்ததைச் செய்வது உங்களுக்கும் அவர்களுக்கும் ஆசீர்வாதத்தில் விளைவடையும் மிகச் சிறந்த பலனை கொடுப்பதாக இருக்கும்.—மத்தேயு 7:16-20-ஐ ஒப்பிடவும். (g92 9/22)