ஆசியாவின் மிகப்பெரிய விலங்கு கண்காட்சியில் ஒரு நாள்
இந்தியாவிலுள்ள விழித்தெழு! நிருபர்
மஹாராஜாக்கள் அழகாக அலங்கரிக்கப்பட்ட யானைகளின் மேல் வலம் வருவது அல்லது ஓர் எளிய விவசாயி பெரிய கொம்புகளையுடைய காளைகளால் இழுக்கப்படும் வண்டிகளில் சவாரி செய்வது—போன்ற காட்சிகள் இங்கு இந்தியாவில் அடிக்கடி புகைப்படம் எடுக்கப்படுகின்றன. ஆனால் இப்படிப்பட்ட பெரிய, விலையுயர்ந்த விலங்குகள் எங்கிருந்து கிடைக்கின்றன?
அதை அறிய, வடகிழக்கு இந்தியாவிலுள்ள, பீஹார் மாநிலத்திலுள்ள சோனபூருக்கு எங்களோடு வாருங்கள். அங்கு நீங்கள் அநேகமாக இதற்குமுன் கண்டதுபோலல்லாத ஒரு கண்காட்சிக்கு நாம் செல்லலாம். இது ஆசியாவிலேயே, ஒருவேளை உலகத்திலேயே மிகப்பெரிய விலங்கு கண்காட்சி என்றறிக்கைச் செய்யப்பட்டுள்ளது. இது அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சுமார் இரண்டு வாரங்களுக்கு நடத்தப்படுகிறது.
ஒரு கவர்ச்சிகரமான நிகழ்ச்சி
என்னே கூட்டம்! பெண்கள் பளபளப்பான சேலைகளை உடுத்தி, ஏராளமான நகைகளை அணிந்திருந்தனர். திருமணமான பெண்கள் தலையில் கோடெடுத்துச் சீவுமிடத்தில் சிகப்புக் குங்குமமிட்டுத் தனித்துக் காணப்பட்டனர். பெரும்பான்மையோர் தங்களுடைய கைகளில் ஒரு குழந்தையை வைத்திருந்தனர். மேலும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் சேலையின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டிருக்க தங்கள் கணவன்மார்களோடு சேர்ந்து நடக்க விரைந்துகொண்டிருக்கின்றனர்.
இப்படிப்பட்ட பெரிய கூட்டத்திலிருந்து எவ்வாறு குழந்தைகள் காணாமற்போகாமலிருக்கிறார்கள் என்று வியக்கிறோம். உண்மை என்னவென்றால், அநேகக் குழந்தைகள் காணாமற் போகிறார்கள். ஒரே வாரத்தில், 50 குழந்தைகள் காணாமற்போனார்கள், ஆனால் அவர்களில் 17 பேர் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டனர் என்பதை அறிந்தோம். மனச்சாட்சியற்ற ஆட்கள் அடிக்கடி குழந்தைகளைக் கடத்திச் சென்று அவர்களைப் பிச்சையெடுப்பதிலும் ஒழுக்கக்கேட்டிலும் ஈடுபட கட்டாயப்படுத்துவதாக நாங்கள் கேள்விப்பட்டதால், அந்தக் காணமாற்போன குழந்தைகளுக்கு என்ன நேரிடுமோ என நினைப்பது அதிர்ச்சியூட்டுவதாயிருக்கிறது.
தெருவோரக் கடைகள் அதிக நெருக்கத்தை உண்டாக்குகின்றன. ஆனாலும் அவை பார்ப்பதற்கு ஆர்வமூட்டுபவையாய் இருக்கின்றன. ஒரு கடையில், ஒரு நாணயத்தைக் கொடுத்தபோது, தனது கூட்டிலிருந்து ஒரு சிறிய பறவை வெளியே வந்து ஒரு சீட்டை எடுக்கிறது. அதை நடத்திக்கொண்டிருந்த ஆள் அதிலிருந்து ஒருவருடைய எதிர்காலத்தை விளக்குகிறான். உடனடியாக சவரம் செய்துகொள்ள வேண்டுமா? வெறுமனே முடிதிருத்துபவனின் முன் உட்காருங்கள், அவனுடைய நீண்ட, கூர்மையான சவரக்கத்தி நுரையிடப்பட்ட உங்கள் முகத்தில் சீராகக் கடந்து செல்கிறது. மூன்றே நிமிடங்களில், எந்தவொரு நவீன கருவியினால் செய்யப்படும் சவரத்துக்கும் நிகரான சவரம் செய்யப்பெறுகிறீர்கள்.
கடைகள் பலவகைப்பட்ட அழகான வளையல்களைக் கொண்டிருக்கின்றன. இந்தியப்பெண்கள் அவற்றை ஒவ்வொரு கைகளிலும், அவர்களுடைய சேலைகளின் வண்ணத்திற்கு ஒத்துப்போகும் நிறங்களில் அணிந்து மகிழ்கின்றனர். அனுபவமுள்ள வளையல் வியாபாரி சரியான அளவு மற்றும் வகை வளையல்களைக் கண்டுபிடிக்கும் வரை வாங்குபவரின் கைகளில் அவற்றைப் போட்டுப் போட்டு எடுக்கிறான். ஓர் இந்தியப் பெண் கண்ணாடி, உலோகம், அல்லது பிளாஸ்டிக் போன்றவற்றால் செய்யப்பட்ட வளையல்களை ஒவ்வொரு கையிலும் ஒரு டஜன் அல்லது அதற்குமேல் அணியக்கூடும்.
கடைகள் விலங்குகளுக்கான ஆபரணங்களையும் விற்கின்றன. என்ன இருந்தாலும் இது ஒரு விலங்கு கண்காட்சியல்லவா. கிராமவாசிகள் தங்களுடைய விலங்குகளை அலங்கரிக்க விரும்புவதனால், இங்கு வியாபாரம் சுறுசுறுப்பாகவே இருக்கிறது. இந்த ஆபரணங்கள் விலங்குகளின் கழுத்துகளுக்கு மணிமாலைகளையும் மற்றும் பல அளவுகளில் வண்ண மணிகளையும் உள்ளடக்கும்.
அந்தப் பரிதாபக் குரல் யாருடையது? ஏன், ஒரு பிச்சைக்காரன்! வாடி வதங்கி, தூசியின் போர்வையில் காணப்படும் அவன் தன்னுடைய பிச்சையெடுக்கும் பாத்திரத்தை நீட்டுகிறான். கூட்டத்தைப் பார்க்கையில் அவன் மிதிபடாமல் தப்பிச்செல்வது ஆச்சரியமாக இருக்கிறது! கண்காட்சியின்போது ஜனங்கள் பிச்சைக்காரர்களுக்குத் தாராள மனதுடன் கொடுக்கிறார்கள். எனவே இம்மனிதனின் பாத்திரம் ஏற்கெனவே நாணயங்களால் பாதி நிரம்பியிருக்கிறது. கோயிலின் அருகே நூற்றுக்கணக்கான பிச்சைக்காரர்கள் பிச்சைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்—முடவர்கள், குருடர்கள், தொழுநோயாளிகள். சிலர் தங்கள் விதியை சபிக்கின்றனர், சிலர் கடவுட்களின் பெயர்களைக் கூப்பிடுகின்றனர், இன்னும் சிலர் கொடுப்பவர்களை ஆசீர்வதிக்கின்றனர்.
மேலும் கண்காட்சிக்குப் பலவகையான விலங்குகளும் போய்க்கொண்டிருக்கின்றன. யானைகள் வர்ணம் பூசப்பட்டுப் பிரகாசமாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் தன்மீது ஒரு சவாரிக்காரனைக் கொண்டிருந்தது. அல்லது முன்நோக்கி நடப்பதற்கோ மெதுவாகப்போவதற்கோ அவன் யானையின் காதுகளின் பின்பாகத்தில் அவ்வப்போது ஒரு கோலினால் குத்தி சுருக்கமான கட்டளைகளைக் கொடுக்கிறான். நீர் எருமைகள், தலையை நிமிர்த்திய வண்ணம், தங்கள் பின்னால் தடையுற்றுக் கிடக்கும் போக்குவரத்தைப்பற்றி அக்கறையின்றி மிக மெதுவாகச் செல்கின்றன.
வழியில் பல பசுக்களையும் ஒரு சில ஒட்டகங்களையும்கூட நாங்கள் பார்க்கிறோம். பெரும்பாலும் நீண்டவாலுடைய இனத்தைச் சேர்ந்த குரங்குகள் ஏராளம். அடர்த்தியான முடிகளையுடைய கண்புருவங்களையும், குஞ்சத்தையுடைய முகவாய்க்கட்டைகளையும் கொண்டிருக்கின்றன. அலங்காரமான மயில்கள், சாதாரண கிளிகளிலிருந்து நீண்டவாலுடைய சிறியகிளிகள், புறாக்கள் வரையுள்ள, சிறகு கொண்ட படைப்புகளும்கூட ஏராளம். இவை எல்லாமே அருகிலிருந்தும் தொலைவிலிருந்தும் இந்தக் கண்காட்சிக்கு வந்திருக்கின்றன.
சில சிறப்புக் கவர்ச்சிகள்
பஞ்சாபிலிருந்து வருகிற தனிமதிப்புள்ள பசுக்கள் சிறப்புக் கவர்ச்சிகளில் சில. இவற்றில் சில, நாளுக்கு இருமுறை 25 லிட்டர் பால் கொடுக்கின்றன. உண்மையிலேயே, அவை அழகான விலங்குகள்! அநேகர் இவற்றை வெறுமனே காண்பதற்கென்றே வருகின்றனர், ஆனால் மற்றவர்கள் உண்மையிலேயே வாங்குபவர்கள். எப்பொழுதெல்லாம் ஒன்று விற்பனையாகிறதோ அப்பொழுதெல்லாம், அதன் உரிமையாளன், “போலோ, ஹரிஹர்நாத் கி” என்று சொல்லி ஓர் உள்ளூர் கடவுளின் பெயரை வாழ்த்தும்போது, சூழ்ந்திருப்பவர்கள், “ஜே” என்று இசைந்து பிரதிபலிக்கின்றனர். ஓர் இந்தியப் பசுவின் சராசரி விலை 3,000 முதல் 5,000 ரூபாய் இருக்கும், ஆனால் இந்தத் தனிமதிப்புள்ள அயல்நாட்டுக் கலப்பினமோ 20,000 முதல் 40,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.a
கண்காட்சியில் 15 ஒட்டகங்கள் மட்டுமே விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன. இந்தப் “பாலைவனக் கப்பல்கள்” ஒவ்வொன்றின் விலையும் 5,000 ரூபாய். இவை தங்களுடைய நீண்ட பயணத்தில் நீண்ட மணிநேரங்கள் வேலைசெய்யவும் வெப்பம், குளிர், தாகம், பசி போன்றவற்றை சகிக்கவும் முடியும். ஒட்டகங்களை வண்டியிழுத்தல், ஏர் உழுதல், நீர்ப்பாய்ச்சுதல் போன்ற பொதுவாக எருதுகள் அல்லது காளைகளைக்கொண்டு செய்யக்கூடிய அனைத்து வேலைகளுக்கும் பயன்படுத்தலாம்.
மிகவும் பிரபலமான விலங்குகள் காளைகள் ஆகும். விவசாயிகளின் பொருட்களையும் குடும்பத்தினரையும் நகரத்துக்குக் கொண்டுசெல்லும் எப்பொழுதும் நம்பகரமான காளை வண்டியைக் காணாமல் இந்திய சாலைகளிலே பயணம் செய்வது பெரும்பாலும் முடியாத காரியமாகும். ஒரு துணிச்சலான வியாபாரி “சூப்பர்ஸ்டார் காளைகள்” என்ற ஓர் அடையாள பலகையைத் தொங்கவிட்டிருக்கிறான். அவை உண்மையிலேயே சூப்பர்ஸ்டார்களைப்போல் காணப்படுகின்றன! ஒருவரும் அவனை ஏமாற்றவோ கொள்ளையடிக்கவோ முயற்சி செய்யாமலிருக்க அலங்கரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளைத் தயாராக வைத்திருக்கிறான். ஒரு சூப்பர்ஸ்டார் 35,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கனைத்துக்கொண்டிருக்கும் குதிரைகள் அடுத்து எங்களுடைய கவனத்தை ஈர்க்கின்றன. என்னே கவர்ச்சிகரமான விலங்குகள் இவை! இவற்றில் சில, காவல்துறை அல்லது இராணுவத்திற்குச் சவாரிக் குதிரைகளாகும், மற்றவை ஓட்டப்பந்தயங்களுக்காக வைக்கப்பட்டுள்ளன. சவாரி செய்யவும் வண்டியிழுப்பதற்கும் சாதாரணக்குதிரைகளும் கிடைக்கின்றன. ஒரு விற்பனைச் சாவடியில் பயிற்றுவிக்கப்பட்ட குதிரையின் மகிழ்ச்சிக்காக இசைக்குழு ஒன்று இசைத்துக்கொண்டிருக்க அந்தக் குதிரை இசைக்கேற்றாற்போல நடனமாடும் பாணியில் அடியெடுத்து வைக்கிறது.
உரத்த பிளிறும் சப்தம் வந்த திசைக்கு நாங்கள் போகிறோம். அங்கே, ஒரு மாமரத்தோப்பின் நடுவே, 250 யானைகள் என்னே கம்பீரமான படைப்புகள் இவை! இந்தியா மற்றும் நேப்பாளம் முழுவதிலிருந்தும் வந்திருக்கின்றன. இவை அமைதியற்றுக் காணப்படுகின்றன. இது ஒருவேளை சுற்றியிருக்கும் பெரிய கூட்டத்தின் காரணமாகவும், அவற்றின் வகையைச் சேர்ந்தவை அநேகம் இருப்பதனாலும் இப்படி இருக்கலாம்.
உரக்க பிளிறும் 25 வயதுள்ள ஓர் ஆண் யானை ஹரிஹர் பிரசாதை இங்கு நாங்கள் சந்திக்கிறோம். அவனுடைய உரிமையாளர் கங்கபூ சிங், அவனை இப்பொழுதுதான் 70,000 ரூபாய்க்கு விற்றுவிட்டான். ஒரு நல்ல ஜம்போ யானையின் தற்போதைய சந்தை விலை 1,30,000 ரூபாயோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்த விலை மிகக் குறைவே. ஆனால் ஹரிஹரைக் கையாளுவது சிறிது கடினமே.
இந்தக் கண்காட்சிக்கு வர ஹரிஹர் 22 நாட்கள் நடந்தான், இப்போது அவனுடைய உரிமையாளர் அவனை விட்டுப் பிரிய வருத்தப்படுகிறான். ஆனாலும் வியாபாரம் வியாபாரமே, உணர்ச்சி சம்பந்தப்பட்ட கட்டுகள் துண்டிக்கப்படவேண்டும். தன்னுடைய பழைய யானைப்பாகனை (பயிற்றுவித்தவன்) விட்டுப் பிரிய ஹரிஹரும்கூட வருத்தமாயிருக்கிறானா என்று வியக்கிறோம். அவனுடைய புதிய யானைப்பாகன் அவனைப் பிடிக்க முயற்சி செய்தபோது, ஹரிஹர் தன்னுடைய கயிற்றை அறுத்துவிட்டான், ஆகவே அவன் இப்போது சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறான்.
அவனை அமைதிப்படுத்தி மாறும் சூழ்நிலையை சுமுகப்படுத்திக் கொடுக்க அவனுடைய பழைய யானைப்பாகன் அவனோடு புதிய வீட்டுக்குச் செல்வான். அங்கே, ஹரிஹரோடு புதிய யானைப்பாகன் பழகும்வரை காரியங்களை இவர்கள் இருவரும் சேர்ந்து செய்வார்கள். இந்தப் புதிய யானைப்பாகன் ஹரிஹரை அதிக காலம் வைத்திருக்க எண்ணவில்லையென அறிகிறோம். எனவே அவன் சோனபூருக்குத் திரும்பவும் கொண்டுவரப்பட்டு இந்த வருடம் விற்கப்படலாம்.
ஒருவேளை தொலைவிடத்தில் கோயில் யானையாவதற்கு ராஜஸ்தானிலிருந்து வரும் மக்களால் ஹரிஹர் வாங்கப்படலாம். அப்படியானால் அவன் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு ஒரு கோயில் தேர் இழுக்க பயன்படுத்தப்படுவான். அல்லது வங்காள விரிகுடாப் பகுதியில், அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தொலைதூரக் காடுகளில் மரங்களை இழுப்பதற்குப் பயன்படுத்தப்படுவதில் முடிவடையலாம்.
நீண்ட சரித்திரத்தையுடைய ஒரு கண்காட்சி
உண்மையில் எப்பொழுது அல்லது எப்படி இந்த விலங்கு கண்காட்சி சோனபூரில் தொடங்கப்பட்டது என்பதைப்பற்றி ஒருவரும் நிச்சயமாய் அறியாததுபோல தோன்றினாலும் இது முகலாயப் பேரரசராகிய அலாம்கீரின் (1658-1707) ஆட்சியின்போது பிரபலமாயிருக்கலாம் என்று தோன்றுகிறது. ராஜேஷ்வர் பிரசாத் சிங் என்ற ஓர் உள்ளூர் மிராசுதாரர், அவருடைய குடும்பம் குதிரைகண்காட்சிக்கு வேண்டிய நிலத்தை 1887-லிருந்து வாடகைக்குக் கொடுத்துக்கொண்டிருக்கிறது என்பதாக சொன்னார். பின்னர் 19-ம் நூற்றாண்டிலிருந்து, பிரிட்டிஷ் ராஜ்யத்தைச் சேர்ந்த அவுரிச்செடி தோட்டக்காரர்கள், இந்தக் கண்காட்சியின்போது குதிரைப்பந்தாட்டம், குதிரைச்சவாரி, நடனம் போன்ற நிகழ்ச்சிகளுக்காக கூடிவந்தார்கள்.
பழங்காலத்தில் தங்களுடைய பெரிய சகாக் குழுக்களோடு இந்தக் கண்காட்சிக்கு வந்து விசேஷக் கூடாரங்களில் தங்கிவாழ்ந்த ராஜாக்கள் கண்காட்சிக்கு மிகுந்த புகழைத் தந்தனர். எனினும், விலங்குகளுக்கான தேவை இருக்கும்வரை, சோனபூர் கண்காட்சி தொடர்ந்து நடத்தப்படும். எல்லா வகையான விலங்குகளும் நட்சத்திர கவர்ச்சிகளாயிருக்கும், இந்த மிகவும் வித்தியாசப்பட்ட கண்காட்சியில் சிறிது நேரம் செலவு செய்ததற்காக நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். (g92 10/22)
[அடிக்குறிப்புகள்]
a ஓர் ஆயிரம் ரூபாய் சுமார் 60 ஐ.மா. டாலர்களுக்குச் சமம்.
[பக்கம் 13-ன் படம்]
அலங்கரிக்கப்பட்ட போர்க்குதிரை பார்வையாளர்களுக்கு வைக்கப்பட்டுள்ளது
[பக்கம் 14-ன் படம்]
விற்கப்பட்டதற்குப்பின் ஹரிஹர் பிரசாத்