எப்படிப்பட்டவர்களுக்கு நீங்கள் தயவுகாட்டுகிறீர்கள்?
“மணமகள் தேவை. செக்கச்சிவந்தவளாகவும், ஒல்லியாகவும் ஒரு பட்டதாரியாகவும் இருக்கவேண்டும் அல்லது முதுகலைப்பட்டதாரியாக இருந்தால் நல்லது. அநேக சொத்துக்களோடு, உயர்வகுப்பு குடும்பத்திலிருந்து வந்தவளாக இருக்க வேண்டும். ஒரே ஜாதி விரும்பத்தக்கது.”
இவ்வாறு வாசிக்கிறது, மணமகள் தேவை என்ற மாதிரி திருமண விளம்பரம் ஒன்று. இதை நீங்கள் இந்தியாவில் ஒரு செய்தித்தாளில் காணலாம். இதைப் போன்றவற்றை உலகின் மற்ற அநேக பாகங்களிலும் ஒருவேளை நீங்கள் காணலாம். இந்தியாவில் இந்த அறிவிப்பு பொதுவாக எதிர்கால மணமகன் வீட்டாரின் பெற்றோரால் கொடுக்கப்படுகிறது. இதற்கு வரும் பதில்கள், ஏராளமான தங்க நகைகள் அணிந்து பளிச்சிடும் சிவப்புநிற சேலையணிந்த பெண்ணின் நிழற்படத்தோடு வரலாம். பையனுடையக் குடும்பத்தினர் பிரியப்பட்டால், திருமணத்திற்கான பேரம்பேசுதல் ஆரம்பிக்கும்.
மதிப்பிடுவதற்குப் பொதுவான தராதரங்கள்
இந்தியாவில் ஒரு செக்கச்சிவந்திருக்கும் மணமகளுக்காக விளம்பரங்கள் அதிகம். இந்து சமுதாயத்தில் கீழ் ஜாதியினர் என்றழைக்கப்படுகிறவர்கள் கறுப்பு தோலுடையவர்கள் என்ற ஆழமாக வேரூன்றியிருக்கும் கருத்தே இதற்குக் காரணமாகும். இந்திய தொலைக்காட்சியில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி காட்டப்பட்டது. அது இரண்டு பெண்களைப் பற்றிய கதை, ஒருத்தி செக்கச்சிவந்த நிறமுடையவள், மற்றொருத்தி கறுப்புநிறமுடையவள். செக்கச்சிவந்து இருந்தவள் கொடூரமானவளாகவும் நடத்தைக்கெட்டவளாகவும் இருந்தாள்; அந்தக் கறுப்புநிறமுடையவளோ சாந்தமுடையவளாகவும் நல்லவளாகவும் இருந்தாள். ஓர் அற்புத மாற்றம் நடந்தது, செக்கச்செவேலென இருந்தவள் தண்டனையாக கறுப்பாக மாற்றப்பட்டாள், கறுப்பாக இருந்தவள் பரிசாக செக்கச்செவேலென்று ஆக்கப்பட்டாள். இந்தக் கதையின் ஒழுக்கப் பாடம், நல்ல குணம் எப்போதும் ஜெயிக்கும் என்பதாக இருந்தாலும், செந்நிறத் தோல் ஒரு விரும்பப்படுகிற பரிசு என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
இப்படிப்பட்ட நிற உணர்வுகள் அநேகமாக ஒருவர் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு மிக ஆழமாக ஊன்றி இருக்கின்றன. உதாரணமாக, ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒருவர், மேலைநாட்டுக்குச் செல்லும்போது, என்னை ஒருமாதிரி நடத்துகிறார்கள், காரணம் என் தோலின் நிறமும் என் கோணலான கண்களும் என்று ஒருவேளை குறை சொல்லலாம். இப்படிப்பட்ட நடத்தைகள் அவரைத் தொந்தரவு செய்கிறது, அவர் ஒருவாறு ஒதுக்கப்பட்டவர்போல் உணர்கிறார். ஆனால் அவர் தன்னுடைய சொந்த நாட்டிற்குத் திரும்பிவரும்போது வித்தியாசமான மனிதஇனத்தவரை அவ்வாறே நடத்துவார். இன்றும்கூட தோலின் நிறம், மனிதஇனப் பின்னணி போன்றவை, மற்றவரின் ஆஸ்தியை மதிப்பிட பலர் பயன்படுத்தும் ஒரு முக்கியமான பங்கை வகிக்கின்றன.
“பணமோ எல்லாவற்றையும் படியச் செய்யும்,” என்று பண்டைய காலத்தில் வாழ்ந்த சாலோமோன் ராஜா எழுதினார். (சங்கத் திருவுரை 10:19, தமிழ்க் கத்தோலிக்கப் பைபிள்) இது எவ்வளவு உண்மை! ஜனங்கள் எப்படி நம்மைக் கருதுகிறார்கள் என்பதை செல்வ வளமும் பாதிக்கிறது. அந்தச் செல்வத்தின் ஊற்றுமூலம் என்ன என்பது மிக அரிதாகவே கேட்கப்படுகிறது. கடினமாக வேலைசெய்வதால் அல்லது நன்றாக மேற்பார்வைசெய்ததால் அல்லது கள்ளத்தனத்தினால் ஒரு மனிதன் பணக்காரனாக ஆனானா? இது யாருக்கும் அவசியமில்லை. செல்வங்கள், தீய வழியில் சேர்க்கப்பட்டதோ இல்லையோ, இவை பலரை செல்வந்தரிடம் கவர்ந்திழுக்கிறது.
இந்தப் போட்டிபோடும் உலகத்தில் மேற்படிப்பும் ஓர் உயர்வான ஸ்தானத்தை வகிக்கிறது. ஒரு குழந்தை பிறந்தவுடனே, பெற்றோர் படிப்பிற்காக பெரிய தொகைகளைச் சேர்த்துவைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அவனுக்கு இரண்டு அல்லது மூன்று வயதாகும்போது, அவனை ஒரு நல்ல நர்சரி பள்ளியில் அல்லது பாலர் பள்ளிக்கூடத்தில் சேர்க்கவேண்டும் என்ற கவலை பெற்றோருக்கு வந்துவிடுகிறது, இது அவனுடைய பல்கலைக்கழக பட்டப்படிப்பு வரை செல்லும் ஒரு நீண்ட பயணத்தின் முதல் படி ஆகும். இந்த மதிப்புமிக்க பல்கலைக்கழக பட்டங்கள் மற்றவர்களிடமிருந்து மரியாதையையும் தயவையும் பெறுகின்ற உரிமையைப் பெற்றிருப்பதாக சிலர் நினைப்பதுபோல் தோன்றுகிறது.
ஆம், தோலின் நிறம், படிப்பு, பணம், மனிதஇனப் பின்னணி—ஆகிய இவையெல்லாம், மற்றொரு நபரை நிர்ணயிக்கும் அல்லது சரியாகச் சொன்னால், முன்தீர்மானிக்கும் தராதரங்களாக ஆகியிருக்கின்றன. இவர்கள் யாருக்குத் தயவுகாட்டுவார்கள், யாருக்குத் தயவுகாட்டமாட்டார்கள் என்பதை நிர்ணயிக்கும் காரணக்கூறுகளாக இவை இருக்கின்றன. உங்களைப் பற்றி என்ன? நீங்கள் யாருக்குத் தயவு காட்டுவீர்கள்? பணமுள்ள, செந்நிறத் தோலுடைய, அல்லது மேற்படிப்பு படித்த ஒருவரை நீங்கள் தயவுக்கும் மரியாதைக்கும் தகுதியுடையவர் என்று கருதுகிறீர்களா? அப்படியென்றால், உங்களுடைய உணர்வுகளின் அடிப்படைக் காரணத்தை நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக ஆராய்ந்துபார்க்க வேண்டும்.
இவை நல்ல தராதரங்களா?
இந்து உலகம் (Hindu World) என்ற புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “ஒரு பிராமணனைக் கொலைசெய்கிற எந்தத் தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவனும் மரணஅவஸ்தைப் பெறும்படி சாகடிக்கப்படலாம், அவனுடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம், அவனுடைய ஆத்துமா என்றென்றும் சபிக்கப்பட்டதாக இருக்கும். ஒரு பிராமணன் மற்ற எவனையாவது கொலைசெய்தால், வெறும் அபதாரம் மட்டும் கட்டவேண்டும், மரணதண்டனை கொடுக்கப்படவே கூடாது.” இந்தப் புத்தகம் பழங்காலத்தைப் பற்றிச் சொன்னாலும், இன்றைய நிலை என்ன? இந்த இருபதாம் நூற்றாண்டிலும், இனவேற்றுமையும் ஜாதிவெறியும் நதிக்கணக்காக இரத்தங்களைச் சிந்தியிருக்கின்றன. இது இந்தியாவில் மட்டுமல்ல. தென் ஆப்பிரிக்காவில் இனவெறி, ஐக்கிய நாடுகளில் இனவேற்றுமை, பால்டிக்ஸ்-ல் தேசிய வேற்றுமைகள்—என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகலாம்—இவற்றால் வெறுப்புணர்வும் வன்முறையும் என்றும் ஓய்வதில்லை, இவையெல்லாம் இரத்தத்தில் ஊறின வீறாப்பினால் உண்டான உணர்ச்சிகள். நிச்சயமாகவே, இவ்வாறு இனத்தினால், அல்லது தேசத்தினால் ஒருவரை மற்றவரிலிருந்து மேம்படுத்திக் காண்பிக்கும் இந்த ஓரங்காட்டும் உணர்வு, நல்ல, சமாதானமான விளைவுகளைக் கொடுத்தில்லை.
செல்வத்தைப் பற்றி என்ன? சந்தேகமில்லாமல், பலர் நேர்மையாக, கடின உழைப்பினால் பணக்காரர்களாக ஆகியிருக்கிறார்கள். எனினும், கொள்ளையர் கூட்டம், கள்ளச் சந்தை வியாபாரிகள், போதைமருந்துகளைக் கடத்துபவர்கள், சட்டவிரோதமாக ஆயுதங்களை விற்பவர்கள், இன்னும் அநேகரால் அளவிடமுடியாத அளவிற்கு செல்வம் பேரளவில் குவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் சிலர் அறநெறி அமைப்புகளுக்கு நன்கொடை கொடுப்பவர்களாகவும், ஏழைகளுக்கு உதவும் திட்டங்களுக்கு நிதியுதவி செய்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது உண்மையே. என்னதான் இருந்தாலும், இவர்களின் இந்தச் சட்டமீறியச்செயல்கள், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சொல்லமுடியாத துன்பத்தையும் வருத்தத்தையும் கொடுத்திருக்கிறது. தொடர்புபடுத்திப் பார்த்தால், மிகச்சிறிய காலத்துக்கு இவ்வாறு செய்பவர்களும்கூட, உதாரணமாக லஞ்சம் வாங்குபவர்கள் அல்லது சந்தேகமான தொழில் பழக்கங்களில் ஈடுபடுபவர்கள், தங்களுடைய தொழில்பொருள்களுக்கு அல்லது வாடிக்கைக்குப் பாதிப்புவரும்போது, துயரங்களையும் காயங்களையும் மரணத்தையும் உண்டாகச் செய்திருக்கிறார்கள். உண்மையில் செல்வத்தை மட்டும் வைத்திருப்பது தானே, ஒரு சாதகமான முடிவுக்கு அடிப்படையாக இருக்கமுடியாது.
அப்படியென்றால், படிப்பைப் பற்றி என்ன? ஒருவருடைய பெயருக்குப் பின்பாக பட்டங்களும் பதவிப்பெயர்களும் ஒரு நீண்ட பட்டியலாக எழுதப்படுவது, அவர் கண்ணியமிக்கவர், நேர்மையானவர் என்பதை நிச்சயப்படுத்துகிறதா? இது அவர் தயவுகாட்டப்படுபவராக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறதா? படிப்பு ஒருவருடைய புரிந்துகொள்ளும் திறனை அதிகரிக்கிறது என்பது உண்மையே. அநேகர் தங்களுடைய படிப்பை மற்றவர்களுக்கு நன்மையுண்டாக பயன்படுத்துகிறார்கள், இப்படிப்பட்டவர்கள் கனத்தையும் மரியாதையையும் பெறத் தகுதிபெற்றிருக்கிறார்கள். படித்த மக்கள்பிரிவு, பொதுமக்களைச் சுரண்டி, அடிமைப்படுத்தியது போன்ற செயல்களால் சரித்திரம் நிறைந்திருக்கிறது. ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழக காட்சியில் இன்று என்ன நடக்கிறது என்பதைக் கவனியுங்கள். இந்த வட்டாரங்களெல்லாம், போதைமருந்துகளாலும் பாலின ஒழுக்கக்கேட்டினால் வரும் நோய்களாலும் வந்த பிரச்னைகளால் ஆட்டிப்படைக்கப்படுகின்றன, பல மாணவர்கள் பணம், அதிகாரம், புகழ் ஆகியவற்றை அடைவதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார்கள். ஒருவருடைய படிப்பு மாத்திரமே, அவருடைய உண்மையான குணத்தினை நம்பத்தக்க விதத்தில் அளவிட்டுக்காட்டும் ஒரு கருவியாக எப்போதும் இருப்பதில்லை.
இல்லை, தோலின் நிறம், படிப்பு, பணம், மனித இனப் பின்னணி, அல்லது இதேபோன்ற மற்ற காரணங்களும் மற்றொருவருடைய மதிப்பை நிர்ணயிக்கும் ஒரு தரமான அடிப்படையாக இருக்க முடியாது. மற்றவர்களிடமிருந்து தயவைப் பெறுவதற்கான ஒரு முயற்சியில் இப்படிப்பட்ட காரியங்களில் கிறிஸ்தவர்கள் மூழ்கிவிடக்கூடாது. அப்படியென்றால், ஒருவர் எதைப் பற்றி அதிக அக்கறையுள்ளவராக இருக்க வேண்டும்? ஒருவர் எந்தத் தராதரங்களின்பேரில் நிதானிக்கவேண்டும்?