கடவுளுடைய தயவைப் பெற்றிருக்கிறவர்கள் யார்?
நாம் அனைவருமே நம்முடைய கூட்டாளிகளால் விரும்பப்பட வேண்டும் என ஆசைப்படுகிறோம். ஒரு கிறிஸ்தவனுக்கு இன்னும் அதிக பலமான ஓர் ஆசை இருக்கிறது, கடவுளோடு நல்ல உறவைப் பெறுவதுதான் அது. யெகோவா தேவனைப் பற்றி சங்கீதம் 84:11-ல் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது: “தேவனாகிய கர்த்தர் கிருபையையும் [தயவையும், NW] மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.” இயேசுவின் பிறப்பின்போது, பரலோக தூதர்களின் சந்தோஷமான ஆர்ப்பரிப்பு, “பூமியிலே அவர் தயவுபெற்றவர்களுக்கு சமாதானம் உண்டாவதாக!” என்று வாக்குறுதி கொடுத்தது.—லூக்கா 2:14, மொஃபெட் ஆங்கில மொழிபெயர்ப்பு.
ஆனால் கடவுள் யாருக்குத் தயவுகாட்டுகிறார்? கடவுளுடைய தராதரங்கள் மனிதனுடையதைப் போன்றதா? இதற்கு முந்தின கட்டுரையில் விளக்கப்பட்டப் பிரகாரம், அவை அவ்வாறு இல்லை என்பது புரிந்துகொள்ளத் தக்கதே. கிறிஸ்தவர்கள் “தேவனைப் பின்பற்றுகிறவர்களாக” இருக்க எச்சரிக்கப்படுவதால், உண்மையில், நாம் ஒவ்வொருவரும் இவ்வாறு தெளிவாக கேட்டுக்கொள்ளலாம், கடவுள் தயவுகாட்டும் ஆட்களுக்கு நான் தயவுகாட்டுகிறேனா, அல்லது நபர்களை மதிப்பிடும்போது உலகப்பிரகாரமான தராதரங்களைப் பின்பற்றுவதற்கு மனவிருப்பமுள்ளவனாக இருக்கிறேனா? (எபேசியர் 5:1) யெகோவாவின் தயவையும் ஒப்புதலையும் சம்பாதிக்க, நாம் காரியங்களை அவருடைய நோக்குநிலையில் மதிப்பிட கவனமாக இருக்கவேண்டும்.
கடவுளுடைய உயர்ந்த தராதரங்கள்
“கடவுள் பட்சபாதமுள்ளவரல்ல, எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்,” என அப்போஸ்தலன் பேதுரு சொன்னார். மேலும் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு ஆணையிட்டுச் சொன்னார், கடவுள் “மனுஷஜாதியான சகல ஜனங்களையும் ஒரே இரத்தத்தினாலே [ஒரே மனிதனாலே, NW] தோன்றப்பண்ணி”னார். (அப்போஸ்தலர் 10:34, 35; 17:26) எனவே, எப்பேர்பட்ட வித்தியாசமான உடல் பண்புகளை உடையவர்களாக இருந்தாலும், கடவுளுடைய பார்வையில் எல்லா மனிதர்களும் சமமானவர்களே என்ற முடிவிற்கு வருவதே நியாயமானதாக இருக்கிறது. நிலைமை இப்படி இருக்கும்போது, ஒரு கிறிஸ்தவர் மற்றொருவருக்கு, அவர் ஒரு விசேஷித்த இடத்திலிருந்து வந்ததினாலோ அல்லது ஒரு குறிப்பிட்ட நிறத் தோலையுடையவராயிருப்பதாலோ அல்லது இன்னொரு இனத்தைச் சேர்ந்ததினாலோ, மட்டுக்குமீறிய தயவை அநாவசியமாக காட்டுவது, அந்தக் கிறிஸ்தவருக்குப் பொருத்தமானதாக இருக்காது. இதற்குப் பதிலாக, அவர் தம்முடைய முன்மாதிரியாகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற முயற்சிசெய்ய வேண்டும், அவர் ஓரவஞ்சனைக்காட்டவில்லை என்பதை அவர்களுடைய எதிரிகளும் ஒத்துக்கொண்டார்களே.—மத்தேயு 22:16.
“தோல்-ஆழம்” (skin-deep) என்ற சொல் சிலசமயங்களில் மேலோட்டமான அல்லது முக்கியமற்ற நிலையில் உள்ள ஒன்றைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. தோலின் நிறம் அப்படித்தான்; அது வெறும் தோல்-ஆழமே. ஒருவரின் தோலின் நிறம் எந்த வகையிலும் அவருடைய தனித்தன்மையை அல்லது உள்ளான பண்புகளை வெளிக்காட்டுவதில்லை. ஜனங்கள் மத்தியில் யாரோடு சகவாசம்கொள்ளலாம், சாப்பிடலாம், கைகுலுக்கிக்கொள்ளலாம், என்று தீர்மானிக்கும்நிலை வரும்போது நாம் நிச்சயமாகவே விசேஷமாக தோலின் நிறத்தை நோக்கக்கூடாது. இதுவரை எவராலும் எழுதப்படாத மிக கவர்ச்சிகரமான காதல் பாடல்களை ஆவியினால் ஏவப்பட்டு எழுதும்படி தூண்டிய இந்தக் கன்னிப்பெண்ணை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். தன்னைப்பற்றி அவள் சொன்னாள்: “நான் கறுப்பாயிருந்தாலும், அழகாயிருக்கிறேன். . . . நான் கறுப்பாயிருக்கிறேன் . . . [ஏனென்றால், NW] வெயில் என்மேற்பட்டது.” (உன்னதப்பாட்டு 1:5, 6) இனமோ, நிறமோ தயவைக் காட்டுவதற்கான சரியான அடிப்படைக் காரணத்தைத் தருவதில்லை. ஒரு நபர், தேவனுக்குப் பயந்து நீதியைச் செய்கிறாரா என்பது தான் மிக முக்கியம்.
பொருள் செல்வங்களை வைத்திருப்பதைப் பற்றி கடவுள் எவ்வாறு உணர்கிறார்? கடவுளால் நேசிக்கப்பட்டுத் தயவுகாட்டப்படுபவர்களில் எல்லாரையும்விட முதன்மையாக இருப்பவர், அவருடைய மகன், இயேசு கிறிஸ்து. ஆனாலும், பூமியில் இருந்தபோது, இயேசு ‘தன் தலைசாய்க்க இடமில்லாமல்’ இருந்தார். (மத்தேயு 8:20) அவருக்குச் சொந்தமான நிலம், வீடுகள், வயல்கள், பழம்தரும் மரங்கள், அல்லது விலங்குகள் இருந்ததில்லை. அப்படியிருந்தும், அவரை யெகோவா கனம்பண்ணி, தம்மைத்தவிர இந்தச் சர்வலோகத்தில் உள்ள அனைவரையும்விட மேலான ஒரு ஸ்தானத்தைப் பெறும்படி அவரை உயர்த்தினார்.—பிலிப்பியர் 2:9.
இயேசு கிறிஸ்து கடவுளின் தயவைப் பெற்றதற்குக் காரணம், அவர் பொருள்வளங்களில் செல்வந்தராக இருந்ததினால் அல்ல, ஆனால் நல்ல கிரியைகளில் அவ்வாறு இருந்ததினால் ஆகும். (1 தீமோத்தேயு 6:17, 18-ஐ ஒப்பிடுக.) அவரைப் பின்பற்றுகிறவர்களுக்கு அவர் சொன்னார்: “பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்: பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.” (மத்தேயு 6:19, 20) எனவே, இந்த உலகத்தின் பொருள்செல்வங்களில் செல்வமுடையவர்களாக இருப்பவர்களுக்கு மட்டும் தயவுகாட்டாமல் இருப்பதோடு, கிறிஸ்தவர்கள், உலகப்பிரகாரமான சொத்துக்களின் அடிப்படையில் வித்தியாசங்களையும் உண்டாக்குவதில்லை. பொருள்வளத்தில் இவர்கள் ஏழையோ அல்லது பணக்காரனோ என்பதை பொருட்படுத்தாமல், கடவுளிடத்தில் செல்வமுடையவராக இருக்கும் ஆட்களையே அவர்கள் தயவுகாட்டத் தேடுவார்கள். “தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், . . . ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்து” கொண்டார் என்பதை ஒருபோதும் மறக்கவேண்டாம். (யாக்கோபு 2:5) நீங்கள் கடவுளுடைய கண்ணோட்டத்தைக் காத்துக்கொண்டால், பொருள்வளத்தில் செல்வமுடையவர்களுக்குத் தயவு காட்டும் அல்லது தேவைக்கு உதவிசெய்யும் இந்த மலிவான நடத்தைக்கு நீங்கள் எப்போதும் அடிமையாக மாட்டீர்கள்.
படிப்பைப் பற்றி, பைபிள் மிகத் தெளிவாகவே, அறிவையும் ஞானத்தையும் பெறும்படி கடவுள் நம்மைத் தூண்டுகிறார் என்று காண்பித்து, பூமியில் இதுவரை வாழ்ந்தவர்களில் இயேசுவே பெரிய போதகராக இருந்தார் என்றும் கூறுகிறது. (நீதிமொழிகள் 4:7; மத்தேயு 7:29; யோவான் 7:46) ஆனால், கடவுளிடமிருந்து தயவைப் பெறுவதாக உலக ஞானமோ அல்லது படிப்போ இல்லை. இதற்கு மாறாக, பவுல் நமக்கு இவ்வாறு சொல்கிறார், ‘மனிதர் மதிப்பின்படி ஞானிகள் அதிகம் பேர் அழைக்கப்பட்டில்லை, இருப்பினும் ஞானிகளை வெட்கப்படுத்த, பைத்தியம் என இந்த உலகம் கருதுவதைக் கடவுள் தேர்ந்தெடுத்தார்.’—1 கொரிந்தியர் 1:26, 27.
உயர் கல்விநிலையங்களில் சொல்லிக் கொடுக்கப்படும் இந்த உலகம் சார்ந்த பாடங்களில் அல்ல, ஆனால் அவருடைய வார்த்தையாகிய பைபிளில் காணப்படும் சத்தியத்தின் “சுத்தமான பாஷை”யில், நன்றாக படித்திருக்கிறவர்களுக்குக் கடவுள் தயவுகாட்டுகிறார். (செப்பனியா 3:9) உண்மையில், இன்று பூமியின் கடைமுனைவரை செல்லும் ஒரு கல்விபுகட்டும் திட்டத்தின் மூலம் யெகோவா தாமேயும் தம்முடைய ஜனங்களுக்குப் போதித்துவருகிறார். ஏசாயா தீர்க்கதரிசி முன்குறிப்பிட்டதுபோல், “நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்,” என்று சொல்வதினால் எல்லா ஜாதிகளிலிருந்து வந்த ஜனங்கள் பிரதிபலிக்கிறார்கள். எனவே, உலகம் மதிக்கும் படிப்பைப் போற்றுவதற்குப் பதிலாக, கிறிஸ்தவர்கள், “கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்ப”வர்களாக இருக்கிறார்கள் என்பதைத் தங்களுடைய வார்த்தைகளினாலும் செயல்களினாலும் நிரூபிப்பவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க விரும்புவார்கள். இவ்வாறு செய்வதின் மூலம், கடவுள் கொடுக்கும் ‘மிகுதியான சமாதானத்தை’ அவர்கள் அனுபவிப்பார்கள்.—ஏசாயா 2:3; 54:13.
நாம் கடவுளுடைய தயவைப் பெற முடியும்
ஆம், மற்றவர்களின்மீது தயவுகாட்டுவதற்கான கடவுளுடைய தராதரங்கள், மனிதனுடையதைவிட அதிக வித்தியாசமானதாக இருக்கின்றன. எனினும், நாம் அவருடைய கண்களில் தயவைப் பெற விரும்பினால், அவருடைய வழிகளில் வழிநடத்தப்பட முயற்சிசெய்ய வேண்டும். இது எதைக் குறிக்கிறதென்றால், மற்றவர்களைச் சுயநலத்தினாலும் பெருமையினாலும் பாதிக்கப்பட்ட மனித தராதரங்களினால் எடைபோடுவதற்குப் பதிலாக, கடவுளுடைய நோக்குநிலையிலிருந்து அவர்களைக் காணவேண்டும். இதை நாம் எப்படிச் செய்யலாம்?
யெகோவா தேவன் ஓர் ஆளின் இருதயத்தை ஆராய்கிறார், அன்பு, நற்குணம், பரிவு, நீடியபொறுமை போன்ற குணங்களைக் காண்பிக்கிறவர்களுக்குத் தயவு செய்கிறார். (1 சாமுவேல் 16:7; கலாத்தியர் 5:22, 23) நாம் மனிதர்களாக எவ்வளவு தூரத்திற்கு ஓர் ஆளின் உள்ளான மனுஷனைப் பார்க்க முடியுமோ அவ்வளவு தூரத்திற்குப் பார்க்கவேண்டியது அவசியம், நாம் அவருடைய தோல் நிறத்தையோ அல்லது இன பின்னணியையோ பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. பொருள்சம்பந்தமான காரியங்களில் செல்வந்தர்களாக இருப்பவர்களை எட்டிப்பிடிக்க முயலுவதைக் காட்டிலும், ஜசுவரியங்களைப் பற்றி கடவுள் என்ன உணர்கிறாரோ அதை நம்முடைய மனதில் நன்றாக பதித்து, “நன்மைசெய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும்” ஆக இருக்க எல்லா முயற்சியும் செய்யவேண்டும். (1 தீமோத்தேயு 6:18) கடவுளுடைய தயவைப் பெற, நாம் கடவுளைப் பற்றியும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் திருத்தமான அறிவைப் பெற தொடர்ந்து தேடி, சத்தியத்தின் சுத்தமான பாஷையிலே நன்றாக படித்துத் தேறினவர்களாக ஆகுவதற்கு முயற்சிசெய்ய வேண்டும். (யோவான் 17:3, 17) இவ்வாறு செய்தால், நாமும் கடவுள் தயவுகாட்டும் நபர்களின் மத்தியில் நிச்சயமாக இருப்போம்.