உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g93 3/8 பக். 4-7
  • இக்கட்டிலிருக்கும் பிள்ளைகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இக்கட்டிலிருக்கும் பிள்ளைகள்
  • விழித்தெழு!—1993
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நோய்
  • ஊட்டச்சத்துக் குறைவு
  • சுற்றுச்சூழல் பிரச்னைகள்
  • போர்
  • பிள்ளை துர்ப்பிரயோகம்
  • முதன்மையான முக்கியத்துவம் வாய்ந்தவை
  • பிள்ளைகளைக் காப்பாற்ற முயற்சிகள்
    விழித்தெழு!—1994
  • ஆழ வேரூன்றிய காரணிகள், பயங்கர பாதிப்புகள்
    விழித்தெழு!—2003
  • பிள்ளைகள் உயிருடன் இருப்பதற்கு உதவுதல்!
    விழித்தெழு!—1989
  • மனித துன்பத்திற்கு காரணம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
மேலும் பார்க்க
விழித்தெழு!—1993
g93 3/8 பக். 4-7

இக்கட்டிலிருக்கும் பிள்ளைகள்

ஒரு சிறுவன், 12 வயதுடையவன், இந்தியாவிலே ஒரு கற்சுரங்கத்தில் ஒரு நாளைக்கு 11 மணிநேரங்கள் பெருங்கற்களை உடைக்கும் வேலை செய்து கடுமையாக உழைக்கிறான் அவன் ஒரு நாளைக்கு 85 சென்ட்டுகள் (ஐ.மா.) சம்பாதிக்கிறான்.

பத்து வயதையுடைய ஒரு சிறுமி பாங்காக் நகரிலுள்ள வேசி மனையில் தன் உடலை விற்கிறாள். அவள் அங்கு இஷ்டப்பட்டு இல்லை. அவளுடைய அப்பா அவளை $400-க்கு விற்றுப்போட்டார்.

ஓர் ஆப்பிரிக்க நாட்டில் பத்து வயதுள்ள இளம் இராணுவ வீரன் ஒருவன் சாலைத் தடுப்புக் காக்கும் வேலையைச் செய்துவருகிறான். அவன் தோளில் ஓர் இயந்திர துப்பாக்கித் தொங்குகிறது. அவன் மரிஹுவானாவைப் புகைத்துக் காலந்தள்ளுகிறான்.

வளர்ந்துவரும் நாடுகளில் இதெல்லாம் சர்வசாதாரணமான நிலைமைகள். இலட்சக்கணக்கான பிள்ளைகள் இக்கட்டான நிலையில் இருக்கிறார்கள். எழுபது லட்சம் பேர் அகதி முகாம்களில் தோய்ந்துவிடுகிறார்கள்; மூன்று கோடி பேர் தங்க வீடில்லாமல் தெருத்தெருவாய் சுற்றித்திரிகிறார்கள்; பத்து முதல் பதினான்கு வயதிலுள்ள எட்டுக் கோடி பேர் தங்களுடைய இயற்கை வளர்ச்சியைக் குன்றிவிடச்செய்யும் வேலைகளைச்செய்து அவதியுறுகிறார்கள்; உணவு, சுத்தமான தண்ணீர், உடல்நல கவனிப்பு போன்றவை இல்லாமல் இந்தப் பத்தாண்டில் பத்துக் கோடிக்கும் மேற்பட்ட பிள்ளைகள் இறந்துவிடுகிறார்கள்.

பூமியைச் சுற்றிலுமுள்ள பிள்ளைகள் எதிர்ப்படும் ஒருசில பிரச்னைகளைக் கவனியுங்கள்.

நோய்

தட்டம்மை, கக்குவான் இருமல் போன்ற நோய்களுக்கெதிராக தடுப்பூசி குத்தப்படாததன் காரணமாக ஒவ்வொரு நாளும் சுமார் 8,000 பிள்ளைகள் இறக்கின்றனர். பேதியின் விளைவாக வரும் உடல் நீர்க்குறைவை எப்படி சமாளிப்பது என்பதைக் குறித்துப் பெற்றோருக்குத் தெரியாததன் காரணமாக கூடுதலாக 7,000 பேர் நாள்தோறும் இறக்கின்றனர். சுவாச நோய்களை எதிர்த்துப் போராட வெறும் ஒரு டாலர் விலையுள்ள நோய் நுண் உயிர்க்கொல்லி மருந்துகளை வாங்கிக் கொடுக்காமல் இருப்பதன் காரணமாக இன்னும் 7,000 பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் இறக்கின்றனர்.

மனித குடும்பத்தை நீண்டகாலமாக தொல்லைப்படுத்தி வரும் பெரும் வியாதிகளைத் தடுக்கவோ சுகப்படுத்தவோ வருடங்களாக மருந்துகளும் நோய் நீக்கல்முறைகளும் இருந்துவருகின்றன. தேவையிலிருக்கும் லட்சக்கணக்கானோரையோ அவை சென்றெட்டவில்லை. இதன் விளைவாக, கடந்த இரண்டு பத்தாண்டுகளின்போது, வெறும் வயிற்றுப் போக்கு, சுவாச நோய்களினிமித்தம் மட்டும் சுமார் பத்துக் கோடி பிள்ளைகள் இறந்திருக்கிறார்கள். ஐக்கிய நாட்டுச் சங்கத்துடைய பிள்ளைகளின் நிதி ஸ்தாபனத்தின் 1990-ல் உலகத்திலுள்ள பிள்ளைகளின் நிலைமை (UNICEF’s State of the World’s Children 1990) என்ற அறிக்கை இவ்வாறு வருத்தம் தெரிவித்தது: “இறுதியில் புற்றுநோயைத் தீர்க்க ஏதோ ஒரு நோய்நீக்கல் முறையைக் கண்டுபிடித்ததாக தோன்றுகிறது, 20 வருடங்களிலோ எதுவுமே உபயோகிக்கப்படவில்லை.”

இப்படிப்பட்ட பயங்கரமான சூழ்நிலைமை நிலவியபோதிலும் முன்னேற்றம் இருந்துவருகிறது. உதாரணமாக, ஐக்கிய நாட்டுச் சங்கத்துடைய பிள்ளைகளின் நிதி ஸ்தாபனமும் உலகச் சுகாதார அமைப்பும் (WHO) தடுப்பூசி குத்தும் செயலில் மும்முரமாக ஈடுபட்டு வந்திருக்கின்றனர். தட்டம்மை, நரப்பிசிவுநோய், தொண்டை அழற்சி நோய், போலியோ நரம்பழற்சி நோய், காசநோய், கக்குவான் இருமல் நோய் போன்ற ஆறு தடுப்பூசி-குத்தித்-தவிர்க்கப்படக்கூடிய நோய்களுக்கெதிராக உலகத்திலுள்ள பிள்ளைகளில் 80 சதவீதத்தினர் நோய் வராமல் தடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்று 1991-ல் அறிவிக்கப்பட்டது. அதேசமயத்தில் வயிற்றுப்போக்கு நோய்களைக் கட்டுப்படுத்துவதற்குவேண்டிய முயற்சிகளையும் செய்ததன் விளைவாக, ஒவ்வொரு வருடமும் பல லட்சக்கணக்கான இளம் உயிர்கள் சாகாமல் காக்கப்படுகின்றன.

ஆனால் சமீப வருடங்களில், எய்ட்ஸ் என்ற மற்றொரு நோய்த் தோன்றியிருக்கிறது, இது கடந்த பத்தாண்டாக ஆப்பிரிக்க பிள்ளை பிழைப்புக்குச் செய்யப்படும் அனைத்து முன்னேற்றத்தையும் அச்சுறுத்தவும் ஒருவேளை தடுத்துநிறுத்தவுங்கூட செய்யக்கூடும். இந்த 90-களின் பத்தாண்டின்போது ஆப்பிரிக்காவில் மட்டும் ஏறக்குறைய 27 லட்சம் பிள்ளைகள் எய்ட்ஸினால் இறக்கக்கூடும். எய்ட்ஸினால் அவர்களுடைய பெற்றோர் இறப்பதன் காரணமாக 2000 வருடத்திற்குள், மத்திய, கிழக்கு ஆப்பிரிக்காவில் கூடுதலாக 30 முதல் 50 லட்சம் பிள்ளைகள் அநாதைகளாக ஆகிவிடக்கூடும்.

ஊட்டச்சத்துக் குறைவு

எலும்பும்தோலுமாக இருப்பவர்கள், உப்பிய வயிற்றையுடையவர்கள், பார்வையற்ற மங்கலான கண்களையுடையவர்கள் போன்று பட்டினியால் கிடக்கும் பிள்ளைகளின் வாடிய படங்களைக் கண்டு நாமெல்லாரும் கவலையுற்றவர்களாக இருக்கிறோம். பரிதாபகரமான அந்தப் பிள்ளைகள் ஊட்டச்சத்துக் குறைவு என்ற பெரும் பிரச்னையின் ஒரு சிறு முனையாக மட்டுமே இருக்கின்றனர். வளர்ந்துவரும் உலகில் சுமார் 17.7 கோடி பிள்ளைகள்—3-ல் 1 பிள்ளை—பசியோடு படுக்கைக்குச் செல்கின்றனர். அவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

தொடர்ந்து இருந்துவரும் ஊட்டச்சத்துக் குறைவு, பிள்ளைகள் தங்களுடைய முழு மனச்செறிவையும் உடற்செறிவையும் அடைவதைத் தடைசெய்கிறது. ஊட்டச்சத்துக் குறைவுள்ள அநேக பிள்ளைகள் நலிந்து, சக்தியில்லாமல், மங்கலான கண்களையுடையவர்களாக ஆர்வம்குன்றியிருக்கின்றனர். அவர்கள் அவ்வளவாய் விளையாடுவதில்லை, சத்துணவூட்டப்பட்ட பிள்ளைகளைப்போல அவ்வளவு மிகவும் சீக்கிரமாய் கற்றுக்கொள்வது கிடையாது. நோய் அவர்களை மிக எளிதில் தாக்குவதற்கு ஆளாகிவிடுகிறார்கள், ஒவ்வொரு வருடமும் வளர்ந்துவரும் நாடுகளில் 1.4 கோடி பிள்ளைகளில் சுமார் மூன்றில் ஒரு பங்கு பிள்ளைகள் இறப்பதற்கு உதவும் ஒரு முக்கியமான காரணமாயிருக்கிறது.

நவீன விஞ்ஞானம் நோய் தாக்கப்படாமல் தடுத்துநிறுத்த மருந்துகளை உண்டாக்கியிருப்பதைப்போலவே, பூமியிலுள்ள அனைவருக்கும் அளவுக்கதிகமான உணவை தயாரித்து வழங்குவதையும் கூடியகாரியமாக்கியிருக்கிறது. ஆனால் ஊட்டச்சத்துக் குறைவுக்கு எந்தவொரு உடனடியான பரிகாரங்களும் இல்லை. அது உணவு ஏற்றுமதி செய்யப்படுவதன் மூலமும் உயிர்ச்சத்து மாத்திரைகள் மூலமும் நீக்கப்பட முடியாது. கடுமையான வறுமை, எங்கும் பரவியிருக்கும் அறியாமை, அசுத்தமானத் தண்ணீர், ஆரோக்கியகரமற்ற நிலைமைகள், மிகவும் வறுமையிலிருக்கும் இடங்களில் விவசாய நிலம் இல்லாமை, ஆகியவற்றின்பேரில் அவை வேர்கொண்டிருக்கின்றன.

சுற்றுச்சூழல் பிரச்னைகள்

சுற்றுச்சூழல் சார்ந்த இக்கட்டான நிலை பூகோளரீதியில் அதிகரிக்கும்போது, பிள்ளைகளே இதற்கு அதிகமாக ஆளாகிறார்கள். நச்சுக் காற்றைப் பற்றி சிந்தித்துப் பார்க்கலாம். இளைப்பாறுகிற குழந்தை மூன்று வயதில், வயதுவந்த ஆள் இளைப்பாறும்போது உட்சுவாசிப்பது போல சுமார் இரண்டு மடங்கு காற்றையும் அதோடுகூட சுமார் இரண்டு மடங்கு நச்சையும் உட்சுவாசிக்கிறது. மேலும் பிள்ளைகள், வயதுவந்தவர்களைப் போல முழுமையாய் வளர்ச்சியடைந்த சிறுநீரகங்களையும் ஈரல்களையும், நொதிப்பி அமைப்புமுறைகளையும் கொண்டிராததன் காரணமாக, உட்கொண்ட மாசுகளை வயதுவந்த ஆட்களைப் போல் எளிதில் வெளித்தள்ள அவர்களால் முடிவதில்லை.

இவ்வாறு கல்லெண்ணெயில் உள்ள காரீயக் கூட்டுப்பொருட்கள் மேலும் கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரிக் ஆக்ஸைடுகள், சல்பர் டையாக்ஸைடு போன்ற வாயுக்களிலிருந்து பிள்ளைகள் வயதுவந்தவர்களைவிட அதிக உடல்நலக்கேட்டினால் துன்பப்படுகிறார்கள். இத்தகைய நோய்த் தாக்குதலுக்காளாகும் நிலைமை, ஒவ்வொரு வருடமும் வளர்ந்துவரும் நாடுகளில் சுவாசம் சார்ந்த நோய்களால் ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகள் 42 லட்சத்துக்கும் அதிகமானோர் இறப்பதற்கு நேரடியாக வழிநடத்துகிறது. அதில் தப்பித்து உயிர்வாழும் அநேக பிள்ளைகள் தங்களுடைய எஞ்சிய வாழ்நாள் முழுவதும் தொல்லைப்படுத்துகிற சுவாசஞ்சார்ந்த நோய்களோடு வளர்ந்துவருகிறார்கள்.

அவர்கள் இன்னும் சரீரப்பிரகாரமாக வளருவதனிமித்தம், வயதுவந்தவர்களைவிட பிள்ளைகள் சரியான உணவை உண்ணாமலிருப்பதனால் வரக்கூடிய பாதிப்புகளுக்கும் எளிதில் ஆளாகிவிடுகிறார்கள். நாட்டுக்கு நாடு காடுகள் அழிக்கப்படுவதாலும், பாலைவனங்கள் அதிகமாவதாலும், அதிகமாக பண்படுத்தப்பட்டப் பயிர்நிலம் சிதைவுண்டு விளைச்சல் குறைப்பட்டு அதிகுறைவான உணவை விளைவித்தலாலும் பிள்ளைகளே பெரிதும் இழப்பை அனுபவிக்கிறார்கள். ஆப்பிரிக்காவில் மட்டும் ஊட்டச் சத்துக் குறைபாட்டினால் சுமார் 3.9 கோடி பிள்ளைகள் வளர்ச்சியடையாமல் இருந்துவருகின்றனர்.

நல்ல தண்ணீர் பெரிதும் தட்டுப்பட்டிருப்பதும் மற்றொரு பிரச்னையாயிருக்கிறது. வளர்ந்துவரும் உலகமுழுவதும், வெறும் பாதி பிள்ளைகளே சுத்தமான குடிநீரைப் பருகுகின்றனர். வெகு சிலரே சுத்தமான கழிவு-நீக்க வசதிகளை உடையவர்களாயிருக்கின்றனர்.

போர்

கடந்த காலங்களில், போருக்கு பலியாகிற அநேகர் இராணுவ வீரர்களாக இருந்தனர். இப்போது அவ்வாறில்லை. இரண்டாம் உலகப் போர் நடந்தது முதற்கொண்டு, கொல்லப்பட்ட இரண்டு கோடி மக்கள் 80 சதவிகிதத்தினரும் பல்வேறு போராட்டங்களினால் காயமுற்ற ஆறு கோடி மக்களும் பொதுமக்களாகவே இருந்திருக்கின்றனர்—பெரும்பாலும் பெண்களும் பிள்ளைகளுமே ஆவர். ஒரு கட்டத்தில், 1980-களின்போது இப்பேர்ப்பட்ட போராட்டங்களினால் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 25 பிள்ளைகள் ஆப்பிரிக்காவில் இறந்துகொண்டிருந்தனர்! எண்ணிலடங்கா பிள்ளைகள் கொல்லப்பட்டு, காயமுற்று, கைவிடப்பட்டு, அநாதைகளாகி, பிணையாளிகளாக எடுத்துச்செல்லப்பட்டு இருக்கின்றனர்.

இப்போது அகதி முகாம்களில் வளர்ந்துவரும் லட்சக்கணக்கான பிள்ளைகள் எந்தத் தேசத்தான் என்றும், அடையாளங்கண்டுபிடிக்கப்பட முடியாமலும், போதிய உணவு, உடல்நல கவனிப்பு, கல்வி ஆகியவை இல்லாமலும் இருக்கிறார்கள். அநேகர் சமுதாயத்தில் வேலை கிடைப்பதற்குவேண்டிய வேலைத் திறமைகளை பெற்றுக்கொள்ள இயலாதவர்களாயிருக்கின்றனர்.

ஆனால் பிள்ளைகள், போர்களில் பலியாவது மட்டும் கிடையாது; போர்களில் ஈடுபடவும் செய்கின்றனர். சமீப வருடங்களில், 15 வயதுக்கு உட்பட்ட 2,00,000 பிள்ளைகள் புது இராணுவ வீரர்களாக சேர்க்கப்பட்டு, ஆயுதந்தரிக்கப்பட்டு கொன்றுபோடுவதற்குப் பயிற்சிக் கொடுக்கப்பட்டனர். இதில் வெடிச்சுரங்கப்பகுதி நிலங்களினூடே வழிபாதைகளை உண்டுபண்ணும்படியான கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து செயல்பட்டதினிமித்தம் உயிரையும் அங்கங்களையும் இழந்தவர்களும் உள்ளடங்குவர்.

பிள்ளை துர்ப்பிரயோகம்

வளர்ந்துவரும் உலகமுழுவதும், பெற்றோர் வறுமையின் காரணமாக பசியினால் அவதிப்படாமலும் தங்கள் கடன்களைத் தீர்க்கவும் தங்கள் பிள்ளைகளை அற்ப விலைக்கு விற்றுவிடுகின்றனர். இந்தப் பிள்ளைகளுக்கு என்ன நடக்கிறது? சிலர் வேசித்தனத்தில் ஈடுபடவும், கடின வேலைவாங்கும் கடைகளில் உழைக்கவும் வலுக்கட்டாயப்படுத்தப்படுகின்றனர். மற்றவர்கள் தரகர்களாலும் மேற்கத்திய தத்தெடுக்கும் நிறுவனங்களாலும் $10,000-க்கு திரும்பவும் விற்கப்படுகின்றனர்.

பிள்ளைகளை வேசித்தனத்தில் ஈடுபடச்செய்வது அதிகரித்துக்கொண்டு வருகிறது என்றும் மிகவும் இளவயதிலிருக்கக்கூடிய சிறுவர்களையும் சிறுமிகளையும் அது உள்ளடக்குகிறது என்றும் அத்தாட்சிகள் காட்டுகின்றன. பிரேஸிலில் மட்டும் ஏறக்குறைய 5,00,000 பருவவயது பிள்ளைகள் வேசித்தனத்தில் ஈடுபட்டிருப்பதாக ஊகிக்கப்படுகிறது. பிள்ளை ஆபாசமும் வளர்ந்து எளிதில் கிடைக்கிற வீடியோ சாதனத்தின் மூலம் விளம்பரம் செய்யப்படுகிறது.

முதன்மையான முக்கியத்துவம் வாய்ந்தவை

இந்தப் புள்ளிவிவரங்களுக்குப் பின்னாலிருக்கக்கூடிய வேதனையையும் தத்தளிப்பையும் நினைத்துப்பார்க்கவே கஷ்டமாயிருக்கிறது. இரக்கமுள்ளவர்களாக, ஆட்கள் லட்சக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் அவதிப்படுவதை நம்மால் மனதில் வைத்துப் பார்க்கமுடியாது. என்றாலும், வெறும் ஒரு பிள்ளை—அவனையோ அவளையோ போன்று சொந்த, தனிப்பட்ட பண்பியல்பைக்கொண்ட ஒரு நபர், கடவுளுக்கு அருமையாயிருக்கும் ஓர் உயிர், எல்லாரையும் போல வாழவும் வளர்ந்தோங்கவும்வேண்டிய உரிமையைக்கொண்ட தனிப்பட்ட ஒருவர்—அவதிப்படுவதையோ இறப்பதையோ பார்ப்பது எவ்வளவு வருத்தத்தை உண்டாக்குகிறது என்பதை நம்மில் பெரும்பான்மையினர் அறிந்திருக்கிறோம்.

பிள்ளைகளுக்கான உலகப் பெருந்தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தின் பிரதிநிதிகள், பிள்ளைகளுடைய நிலைமை ஏன் அதன் தற்போதைய நிலையில் இப்படி இருக்கிறது என்கிற சந்தோஷந்தராத கேள்வியை சிந்தித்துப் பார்ப்பதற்கு அதிக நேரத்தைச் செலவழிக்காமல், அவர்கள் எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையோடே பேசி இனிமேலும் அப்பேர்ப்பட்ட நிலைமையை அனுமதிக்கமுடியாது என வாக்குறுதி செய்தனர். மற்ற காரியங்களில், பின்வரும் இலக்குகளை 2000 வருடத்துக்குள்ளாக அடைவதற்கு அவர்களுடைய “செயல்படவேண்டிய திட்டம்” தீர்மானித்தது:

◻ வருடம் 1990-ன்போது இறந்த ஐந்து வயதுக்குட்பட்டப் பிள்ளைகளுடைய எண்ணிக்கையை மூன்றில் ஒரு பங்காக குறைப்பது.

◻ ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் கடுமையான, மிதமான ஊட்டச்சத்துக் குறைவை 1990-ன் விகிதங்களுக்கு பாதியாக குறைப்பது.

◻ எல்லாரும் நல்ல குடிநீரை குடிக்கும்படி ஏற்பாடு செய்வதும், எல்லாருக்கும் சுத்தமான மலம்-கழி நீக்குவதற்குரிய வசதிகளை செய்துதருவதும்.

◻ மிகவும் கடினமான சூழ்நிலைமைகளில் குறிப்பாக போர் தொடுக்கும் போராட்டங்களில் ஈடுபடுகிற நிலைமைகளில் உள்ள பிள்ளைகளைப் பாதுகாப்பது.

வருடம் 1990-களின்போது 5 கோடி பிள்ளைகளுடைய இறப்பைத் தடுக்கக்கூடிய இலக்குகளைக் கொண்டுவருவதற்குரிய திட்டங்களுக்குக் கூடுதல் செலவு ஒரு வருடத்துக்கு $250 கோடி என கணக்கிடப்பட்டிருக்கிறது.

பூகோள ரீதியில் கணக்கிட்டுப் பார்த்தால் அது ஒரு பெருந்தொகை அல்ல. ஒரு வருடத்தில் அமெரிக்கக் கம்பெனிகள் சிகரெட் விளம்பரங்களில் $250 கோடி செலவு செய்கின்றனர். உலகம் ஒரு நாளைக்கு இராணுவத்திற்கு $250 கோடி செலவு செய்கிறது.

தற்போது இராணுவ செலவுகள்—வருடத்துக்கு ஒரு லட்சக் கோடி டாலர்களுக்கும் மேற்பட்டு இருக்கிறது என்று ஐக்கிய நாட்டுச் சங்கம் கணக்கிட்டிருப்பது—மனிதவர்க்கத்தில் ஏழ்மையாயிருக்கும் பாதிப்பேருடைய ஒட்டுமொத்தமான வருடாந்தர வருமானங்களையும் மிஞ்சிவிட்டிருக்கின்றன. இந்தப் பெருந்தொகையில் 5 சதவீதத்தை வேறு வழியில் உபயோகிப்பதுங்கூட அந்த ஆலோசனை கூட்டத்தின் இலக்குகளை அடைவதற்குரிய முன்னேற்றத்தைத் தீவிரப்படுத்தப் போதுமானதாயிருக்கும். உதாரணமாக, ஓர் F/A-18 ஜெட் போர் விமானத்தின் விலை ($3 கோடிக்கும் மேல்), உயிர்க்கொல்லி நோய்களுக்கெதிராக 40 கோடி பிள்ளைகளைப் பாதுகாப்பதற்குரிய போதுமான தடுப்பூசி மருந்துகளுடைய விலைக்குச் சமானமாயிருக்கிறது.

அந்த ஆலோசனை கூட்டத்தில் விருப்பமுள்ள இலக்குகளாக விதிக்கப்பட்டவற்றை அடைவது தேசங்களால் கூடும். அந்த அறிவையும், தொழில்நுட்பத்தையும் பணத்தையும் அவர்கள் உடையவர்களாயிருக்கின்றனர். இப்போது இருக்கிற கேள்வி என்னவென்றால், அவர்கள் அடைவார்களா? என்பதே. (g92 12/8)

[பக்கம் 6-ன் பெட்டி/படம்]

ஊட்டச்சத்துக் குறைவை எதிர்த்து சமாளிப்பது பெற்றோர் தெரிந்திருக்கவேண்டிய ஆறு குறிப்புகள்

1. ஒரு குழந்தையுடைய வாழ்க்கையின் முதல் நான்கிலிருந்து ஆறு மாதங்கள், தாய்ப்பால் மட்டுமே கிடைக்கக்கூடிய உணவுப்பொருட்களில் மிகச் சிறந்த உணவாகும். அது முழுமையான சத்துள்ள உணவை கொடுத்து, குழந்தையைச் சாதாரண நோய்களிலிருந்து தடுக்கும் சக்தியுடையதாயிருக்கிறது.

2. நான்கு முதல் ஆறு மாதங்களில், குழந்தைக்கு மற்றவகையான உணவுப்பொருட்கள் அவசியமாயிருக்கிறது. ஆரம்பத்திலேயே பலமான உணவுப்பொருட்களைக் கொடுப்பது நோய்களுக்காளாவதன் ஆபத்தை அதிகரிக்கிறது; அவற்றை பிற்பாடு கொடுப்பதும் ஊட்டச்சத்துக் குறைவுக்கு வழிநடத்துகிறது.

3. வயதுவந்தவரைப்போல, மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைக்கு இரண்டு மடங்கு உணவு கொடுப்பது அவசியம், அதிக சத்துள்ள உணவை கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுக்கவேண்டும்.

4. குழந்தை நோய்வாய்ப்பட்டிருந்தால் அல்லது பேதி ஆகிறதென்றால், உணவையும் பானத்தையும் கொடுக்காமல் இருக்கக்கூடாது.

5. குழந்தைக்கு நோய் சுகமான பின்பு, ஒரு வாரத்துக்கு, இழந்த அந்த வளர்ச்சியை மீண்டும் அடைவதற்கு ஒவ்வொரு நாளும் கூடுதலான உணவை கொடுப்பது அவசியமாயிருக்கிறது.

6. குழந்தையைப் பெற்றப் பின், தாயும் குழந்தையும் முழுமையான ஆரோக்கியத்தைப் பெறுவதற்குக் குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் தேவையாயிருக்கிறது.

[படத்திற்கான நன்றி]

UNICEF/C/91/ Roger Lemoyne

[பக்கம் 5-ன் படம்]

வளர்ந்துவரும் உலகில் வெறும் பாதி பிள்ளைகளே சுத்தமான குடிநீரைப் பருகுகின்றனர்

[பக்கம் 7-ன் படம்]

ஒவ்வொரு பிள்ளையும் அதன் தனிப்பட்ட பண்பியல்பைக்கொண்டதாய், கடவுளுக்கு அருமையானதாக, எல்லாரையும் போல வளரும் உரிமையைக் கொண்டிருக்கிறது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்