பிள்ளைகளைக் காப்பாற்ற முயற்சிகள்
“ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு மேம்பட்ட எதிர்காலத்தைக் கொடுக்கும்படி, ஒரு கூட்டுப் பொறுப்பை ஏற்கவும் எல்லாருக்கும் ஒரு அவசர கோரிக்கையை விடுக்கவும் நாம் பிள்ளைகளுக்கான உலக மாநாட்டிற்குக் கூடிவந்திருக்கிறோம்.”—ஐக்கிய நாடுகள் மாநாடு, 1990.
உலக பிள்ளைகளின் துயர நிலைமையைப்பற்றி சிந்திக்க, 1990, செப்டம்பர் 29 மற்றும் 30-ம் தேதிகளில் நியூ யார்க் நகரில் 70-க்கும் அதிகமான நாடுகளிலிருந்து ஜனாதிபதிகளும் பிரதம மந்திரிகளும் கூடிவந்தனர்.
அந்த மாநாடு பிள்ளைகளின் வருந்தத்தக்க துன்பங்களுக்கு, கம்பளத்தின் அடியில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு உலகளாவிய துயரத்திற்கு சர்வதேச அளவில் கவனத்தை ஒருமுகப்படுத்தியது. ஐக்கிய மாகாணங்களின் பிரதிநிதி பீட்டர் டீலி இவ்வாறு குறிப்பிட்டுக் காட்டினார்: “40,000 நாட்டு ஆந்தைகள் தினமும் மரித்தனவென்றால், பெரிய கலகம் நடக்கும். ஆனால் 40,000 பிள்ளைகள் மரிக்கின்றனர், அது கவனிக்கப்படுகிறதே இல்லை.”
கூடிவந்திருந்த நாட்டுத் தலைவர்கள் அனைவருமே—அவசரமாக—ஏதாவது செய்யப்படவேண்டும் என்று ஒப்புக்கொண்டனர். அவர்கள் “பிள்ளைகளின் உரிமைகளுக்கும், அவர்களுடைய உயிர்ப்பிழைத்தலுக்கும், அவர்களுடைய பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்கும் உடனடி முன்னுரிமை கொடுக்க ஏகமனதாக உறுதிமொழி” எடுத்துக்கொண்டனர். அவர்கள் கொடுத்த குறிப்பான ஆலோசனைகள் யாவை?
ஐந்து கோடிக்கும் அதிகமான இளம் உயிர்கள் தராசில் நிறுக்கப்படுகின்றன
முதன்மையான குறிக்கோள் என்னவென்றால் 1990-களின்போது மரிப்பதற்கான வாய்ப்புடைய ஐந்து கோடிக்கும் அதிகமான பிள்ளைகளைக் காப்பாற்றுவதாகும். பின்வரும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இந்த இளம் உயிர்களில் அநேகம் காப்பாற்றப்படலாம்.
● வளரும் நாடுகளில் உள்ள தாய்மார்கள் அனைவரும் தங்களுடைய குழந்தைகளுக்கு குறைந்தது நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுக்கும்படி தூண்டுவிக்கப்பட்டால், வருடந்தோறும் 10 லட்சம் பிள்ளைகள் காப்பாற்றப்படலாம்.
● வாய்வழி நீரூட்ட சிகிச்சையைப் [oral rehydration therapy (ORT)] பரவலாக பயன்படுத்துவது வயிற்றுப் போக்கினால் ஏற்படும் மரணவீதத்தை பாதியாகக் குறைக்கக்கூடும். வயிற்றுப் போக்கு ஒவ்வொரு வருடமும் 40 லட்சம் பிள்ளைகளைக் கொல்லுகிறது.a
● பரவலாக தடுப்பூசி போடுதலும் மலிவான நோயுயிர்முறிகளை (antibiotics) பயன்படுத்துதலும் மணல்வாரியம்மை (measles), தசைவிறைப்பு ஜன்னி (tetanus), நுரையீரல் அழற்சி (pneumonia) போன்ற நோய்களால் ஏற்படும் மற்ற லட்சக்கணக்கான மரணங்களைத் தவிர்க்கலாம்.
அவ்வகையான சுகாதார திட்டம் நடைமுறையானதுதானா? அதற்கான செலவு இந்தப் பத்தாண்டுகளின் இறுதியில் ஒருவேளை வருடத்திற்கு இருநூற்றைம்பது கோடி டாலர்களைச் சென்றெட்டும். உலகளாவிய கணக்கின்படி இந்தத் திட்டச்செலவு குறைவானதே. அமெரிக்க புகையிலை கம்பெனிகள்—வெறுமனே சிகரெட் விளம்பரத்திற்கு மட்டும்—அதே தொகையைத்தான் ஒவ்வொரு வருடமும் செலவு செய்கின்றன. ஒவ்வொரு நாளும் உலக நாடுகள் அதே தொகையை இராணுவ செலவுக்கு வாரியிரைக்கின்றன. அத்தகைய தொகைகள் ஆபத்தில் இருக்கும் பிள்ளைகளின் உடல்நலத்திற்காக நல்வழியில் செலவு செய்யப்படலாமா? “மிகச் சிறந்ததை பிள்ளைக்குக் கொடுக்க மனிதவர்க்கம் கடமைப்பட்டிருக்கிறது,” என்று பிள்ளையின் உரிமைகள் பேரிலான ஐக்கிய நாடுகளின் அறிக்கை குறிப்பிட்டுச் சொல்கிறது.
“ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு மேம்பட்ட எதிர்காலத்தை” கொடுப்பதானது நிச்சயமாகவே, உரியகாலத்திற்கு முன் இறப்பதிலிருந்து அவர்களை பாதுகாப்பதைவிட வெகு அதிகத்தை உட்படுத்துகிறது. குழந்தைப்பருவ ஊட்டச்சத்துக்குறைவு தடுப்பு மையத்தின் தலைவரான சேன்ட்ரா ஹஃப்மன், டைம் பத்திரிகையில் இவ்வாறு விளக்குகிறார்: “ORT வயிற்றுப் போக்கைத் தடுப்பது கிடையாது. அது, அதனால் பிள்ளைகள் இறந்துபோகாமல் காப்பாற்றவே செய்கிறது. . . . நாம் இப்போது செய்யவேண்டியது, வியாதியை எவ்வாறு தடுக்கலாம் என்பதன் பேரில் கவனம் செலுத்துவதே, வெறுமனே மரணத்தின்மீதல்ல.”
இலட்சக்கணக்கான பிள்ளைகளின் வாழ்க்கையை—காப்பாற்றுவதோடு மட்டுமல்லாமல்—மேம்படுத்துவதற்கு, பேராவலோடு பல திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டிருக்கின்றன. (பக்கம் 6-ல் உள்ள பெட்டியைப் பாருங்கள்.) எதையும் செய்து முடிப்பது எளிதல்ல.
நடக்கும் தொலைவில் சுத்தமான தண்ணீர்
ஃபலிஷியா ஓனூ தன்னுடைய குடும்பத்திற்குத் தண்ணீர் கொண்டுவர தினமும் ஐந்து மணி நேரம் செலவு செய்தாள். அவள் வீட்டிற்குக் கொண்டுவந்த அந்தத் தண்ணீர் பெரும்பாலும் மாசுப்படுத்தப்பட்டதாகவே இருந்தது. (அப்படிப்பட்ட தண்ணீர் அதனோடு நரம்புச் சிலந்திப்புழுவின் (guinea worm) வருடாந்தர பாதிப்பின் கொள்ளைநோயைக் கொண்டுவந்து வயிற்றுப் போக்கு பரவுவதற்கு பங்களிக்கிறது.) ஆனால் 1984-ல் நைஜீரியாவின் கிழக்குப் பாகத்தில் உள்ள அவளுடைய கிராமமாகிய ஊக்வூலாங்வூவில் ஒரு கிணறு தோண்டப்பட்டு கை பம்ப் ஒன்று பொருத்தப்பட்டது.
இப்போது சுத்தமான தண்ணீர் கொண்டுவருவதற்கு அவள் ஒருசில நூறு மீட்டர்கள் மட்டுமே நடக்கவேண்டியிருக்கிறது. அவளுடைய பிள்ளைகள் நல்ல ஆரோக்கியத்துடன் விளங்குகின்றனர்; அவளுடைய வாழ்க்கையும் மிகவும் சுலபமாகிவிட்டது. 1980-களின்போது ஃபலிஷியாவைப் போலுள்ள 100 கோடிக்கும் அதிகமான மக்கள் சுத்தமான தண்ணீர் பெறுவதற்கான வசதியைப் பெற்றனர். ஆனாலும் லட்சக்கணக்கான பெண்களும் பிள்ளைகளும் தண்ணீர் வாளிகளைச் சுமப்பதில் இன்னும் தினமும் பல மணி நேரங்களைச் செலவிடுகின்றனர். இந்த வாளிகள் ஒரு சராசரி மேற்கத்திய நாட்டுக் கழிப்பிடத்தில் சாதாரணமாக ஊற்றியடிக்கப்படும் தண்ணீரின் அளவைவிட குறைவான கொள்ளளவையே கொண்டிருக்கின்றன.
கல்வியில் ஏற்றத் தாழ்வுகள்
மாக்ஸிமீனோ பதினொரு வயது நிரம்பிய புத்திசாலியான ஒரு பையன். அவன் கொலம்பியாவின் ஒரு ஒதுக்குப்புற பகுதியில் வாழ்ந்துவருகிறான். அவர்களுடைய பயிரிடுதலில் தன்னுடைய அப்பாவுக்கு உதவி செய்வதில் ஒரு நாளில் பல மணி நேரங்களைச் செலவிடுகிறான். இருந்தபோதிலும் பள்ளியில் நன்கு படித்துவருகிறான். அவன் எஸ்க்வெலா நுயெவா அல்லது புதிய பள்ளிக்குச் சென்று வருகிறான். அந்தப் பள்ளி பிள்ளைகள் சில நாட்கள் பள்ளிக்கு போக முடியாத நிலைமை வரும்போது தவறவிட்ட பாடத்தைக் கற்றுக்கொள்ள உதவுவதற்கு அமைக்கப்பட்ட, எளிதில் பின்பற்றக்கூடிய பாடத்திட்டத்தைக் கொண்டிருக்கிறது. பிள்ளைகள் பள்ளிக்குப் போகமுடியாமல் ஆவது, முக்கியமாக அறுவடை காலத்தில் பொதுவாக நிகழக்கூடியதாகும். மாக்ஸிமீனோவின் பள்ளியில் ஆசிரிய ஆசிரியைகள் வெகு சிலரே உள்ளனர். பாடப்புத்தகங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படுகிறது. தங்களுக்குப் புரியாத பாடத்தில் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ளும்படி பிள்ளைகள் உற்சாகப்படுத்தப்படுகின்றனர். பள்ளியை நடத்துவதில் உட்பட்டிருக்கும் பெரும்பாலான வேலையை அவர்களே செய்கின்றனர். ஒரு கண்டுபிடிப்பாக இருக்கும் இந்த முறை பல நாடுகளிலும் இப்போது செயல்படுத்திப் பார்க்கப்படுகிறது. இந்த முறையானது ஏழை கிராமவாசிகளின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு ஏற்ப சிறப்பாக பொருத்தி அமைக்கப்பட்டிருக்கிறது.
கொலம்பியாவிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்திற்கப்பால், ஆசியாவின் ஒரு பெரிய நகரத்தில், மெலின்டா என்ற மற்றொரு 11 வயது புத்திசாலிப் பெண் வாழ்கிறாள். நகரத்தின் பெரிய குப்பை மேடுகள் ஒன்றிலிருந்து உலோக மற்றும் பிளாஸ்டிக் துண்டுகளைத் தேடிப் பொறுக்குவதில் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் செலவிடுவதற்காக சமீபத்தில் அவள் பள்ளியிலிருந்து நின்றுவிட்டாள். “எங்களுடைய அனுதின சாப்பாட்டுக்காக என் அப்பாவுக்கு உதவி செய்ய நான் விரும்புகிறேன். அவருக்கு நான் உதவி செய்யவில்லையானால், எங்களுக்கு சாப்பாட்டுச் செலவுக்கு ஒன்றுமே இல்லாமல் போகலாம்,” என்கிறாள் மெலின்டா. நன்கு வேலைசெய்த நாளிலும்கூட அவள் சுமார் 10 ரூபாயையே சம்பாதிக்கிறாள்.
குழந்தை சுகாதார பணியாளர்கள்
பம்பாய் என்ற இந்திய நகரத்தின் நகர்ப்புற எல்லையில் மால்வணி என்றழைக்கப்படும் குடிசைப் பகுதிகள் மிகுந்த ஒரு பட்டணம் இருக்கிறது. அங்கு அவ்விடத்திற்கே உரித்தான நோய் நீண்ட காலமாக பீடித்து வருகிறது. எப்படியோ இறுதியில் நிலைமைகள் முன்னேறிவருகின்றன. நீட்டூ, ஆஸிஸ் போன்ற நல்ல துடிப்பான சுகாதார பணியாளர்களுக்கு நன்றி. சிறு பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறதா அல்லது அவர்கள் வயிற்றுப் போக்கு, சொறிசிரங்கு, அல்லது ரத்தசோகை போன்ற நோய்களால் அவதிப்படுகின்றனரா என்று பார்ப்பதற்காக அவர்கள் குடும்பங்களைச் சென்று சந்திக்கின்றனர். நீட்டூவுக்கும் ஆஸிஸுக்கும் 11 வயதே ஆகிறது. ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க பெரிய பிள்ளைகள் நியமிக்கப்படும் ஒரு திட்டத்தில் வேலைசெய்ய தங்களை மனமுவந்தளித்திருக்கின்றனர். நீட்டூ மற்றும் ஆஸிஸின் முயற்சிகளாலும் அவர்களைப் போன்ற டஜன்கணக்கான மற்ற பிள்ளைகளின் முயற்சிகளாலும், கிட்டத்தட்ட மால்வணியின் இளவயதினர் அனைவரும் நோய்த்தடைக்காப்பு அளிக்கப்பட்டிருக்கின்றனர்; வாய்வழி நீரூட்ட சிகிச்சையளிப்பது எவ்வாறு என்று பெரும்பாலான பெற்றோர் அறிந்திருக்கின்றனர்; மேலும் பொது சுகாதாரம் மேம்பட்டிருக்கிறது.
உலகம் முழுவதும் மிகப் பொதுவான நோய்களுக்கு எதிராக இளம் பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடுவதில் பல முன்னேற்ற அடிகள் எடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. (பக்கம் 8-ல் உள்ள அட்டவணையைப் பாருங்கள்.) வங்காள தேசம் இப்போது அதன் குழந்தைகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு நோய்த்தடைக்காப்பு அளித்திருக்கிறது. சீனா 95 சதவீதத்திற்கு மேல் நோய்த்தடைக்காப்பு அளித்திருக்கிறது. வளரும் நாடுகள் ஒவ்வொன்றும் 90 சதவீத குறியை அடைய முடியுமானால், ஒரு மொத்த நோய்த்தடைக்காப்பு விளையும் என்பதாக சுகாதார நிபுணர்கள் கருதுகின்றனர். பெரும்பகுதியினருக்கு நோய்த்தடைக்காப்பு அளிக்கப்பட்டிருந்தால், நோய்க் கடத்தப்படுவது மிகக் கடினமாக இருக்கும்.
வறுமை, போர், எய்ட்ஸ்
இருந்தபோதிலும், வருந்தத்தக்க உண்மை என்னவென்றால், சுகாதாரப் பராமரிப்பிலும் கல்வியிலும் நல்ல முன்னேற்றம் காண்பித்திருந்தாலும், மற்ற பிரச்னைகள் எப்பொழுதும் போலவே அசைக்கமுடியாமல் கிடக்கின்றன. எளிதில் சமாளிக்க முடியாத மூன்று காரியங்களாக வறுமை, போர், எய்ட்ஸ் இருக்கின்றன.
சமீப ஆண்டுகளில் உலகின் ஏழை மக்கள் பரம ஏழைகளாகிவருகின்றனர். ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா போன்றவற்றின் வறுமை மிகுந்த பகுதிகளில் கடந்த பத்தாண்டுகளில் உண்மையான வருமானம் 10 சதவீதமோ அதற்கு அதிகமோ குறைந்திருக்கிறது. இந்தத் தேசங்களில் உள்ள பெற்றோரால் தங்களுடைய பிள்ளைகளுக்கு ஒரு சரிவிகித உணவைத் தர இயலவில்லை. இங்குக் குடும்ப வருமானத்தின் 75 சதவீதம் சாப்பாட்டிற்குச் செலவழிக்கப்படுகிறது.
‘பிள்ளைகளுக்கு காய்கறிகளையும் வாழைப்பழங்களையும் கொடுங்கள்,’ என்று தன்னுடைய உள்ளூர் சுகாதார நிலையத்தால் கிரேஸுக்கு சொல்லப்பட்டது. ஆனால் பத்துப் பிள்ளைகளுக்குத் தாயாக இருக்கும் கிழக்கு ஆப்பிரிக்காவில் வாழும் கிரேஸுக்கு சாப்பாட்டு செலவுக்கு பணம் இல்லை. அவளுடைய குடும்பத்தின் 1/4 ஏக்கர் [0.1 ஹெக்டேர்] நிலத்தில் அந்தப் பயிர்களை வளர்க்க போதுமான தண்ணீரும் இல்லை. மக்காச்சோளத்தையும் மொச்சையையும் உட்கொண்டு வாழ்ந்து அவ்வப்போது பட்டினி கிடப்பதைவிட அவர்களுக்கு வேறு வழியில்லை. இந்தத் தற்போதைய நிலைமைகள் நீடிக்குமானால், கிரேஸின் குடும்பத்திற்கோ அவளுடையதைப் போன்ற மற்ற லட்சக்கணக்கானோரின் குடும்பங்களுக்கோ வருங்காலம் மேம்பட வாய்ப்புகள் இல்லை.
கிரேஸின் பிள்ளைகள், ஏழைகளாக இருந்தபோதிலும், தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த கிம் செங் என்ற எட்டுவயது பையனைவிட நன்றாகவே வாழ்ந்துவருகின்றனர். அவனுடைய அப்பா உடன்பிறந்தோரின் தகராறில் கொல்லப்பட்டார். அவனுடைய அம்மாவோ அதைத் தொடர்ந்து பட்டினியால் இறந்துபோனார். ஊட்டச்சத்துக்குறைவினால் கிட்டத்தட்ட இறந்துபோன நிலையிலிருந்த கிம் செங் இறுதியாக ஒரு அகதிகள் முகாமில் புகலிடம் பெற்றான். உலகம் முழுவதும் உள்ள அகதிகள் முகாமில் வாடிக்கிடக்கும் 50 லட்சம் பிள்ளைகளில் அநேகர் இதைப்போன்ற கஷ்டங்களையே அனுபவித்திருக்கின்றனர்.
இந்த நூற்றாண்டின் துவக்கத்தில், போரில் உயிரிழந்தவர்களில் 5 சதவீதத்தினர் மட்டுமே பொதுமக்களாக இருந்தனர். இப்போதோ அந்த எண்ணிக்கை திடீரென்று 80 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இந்தப் போர் பலியாட்களில் பெரும்பகுதியினர் பெண்களாக அல்லது பிள்ளைகளாக இருக்கின்றனர். ஒருவேளை சரீரப்பிரகாரமான காயத்துக்கு தப்புகிறவர்கள் இன்னும் உணர்ச்சிசம்பந்தமாக துன்புறுகின்றனர். “என்னுடைய அம்மா எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதை என்னால் மறக்கவே முடியாது. அவர்கள் என் அம்மாவைப் பிடித்திழுத்து அவர்களிடம் மோசமாக நடந்துகொண்டனர். அதன்பிறகு அவர்களைக் கட்டிவைத்து குத்திக் கொன்றனர். . . . சிலசமயங்களில் நான் அதைக் கனவில் காண்பதுண்டு,” என்கிறாள் தென்-மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாட்டைச் சேர்ந்த ஒரு அகதிப் பிள்ளை.
ஒவ்வொரு நாட்டிலும் வன்முறை முரண்பாடுகள் தொடர்ந்து வெடித்தெழும்போது, போரின் அழிவுகளினால் அப்பாவி பிள்ளைகள் தொடர்ந்து துன்பப்படுவது தவிர்க்கமுடியாததாக தெரிகிறது. மேலுமாக, சர்வதேச கொந்தளிப்பும் முரண்பாடுகளில் நேரடியாக உட்படாத பிள்ளைகளுக்குத் தீங்கிழைக்கிறது. தரமான கல்வி, மேம்பட்ட சுகாதாரம் (sanitation), உடல்நல பராமரிப்பு ஆகியவற்றைக் கொடுப்பதில் செலவிடக்கூடிய பணத்தை ராணுவம் விழுங்குகிறது. தொழில் முன்னேற்றமடைந்த நாடுகளால் செய்யப்படும் உலக ராணுவ செலவு, பரம ஏழையாயிருக்கும் பாதி மனிதவர்க்கத்தின் ஒட்டுமொத்த வருட வருமானத்தைவிட அதிகமாக இருக்கிறது. உலகத்தின் மிகவும் ஏழ்மையான நிலையிலிருக்கும் 46 நாடுகளும்கூட உடல்நலத்திற்கும் கல்விக்கும் செலவுசெய்யும் மொத்த தொகைக்கு சமமாக தங்களுடைய ராணுவ இயந்திரங்களுக்காக செலவிடுகின்றன.
வறுமை, போர் ஆகியவை மட்டுமல்லாமல், மற்றொரு கொலையாளியும் உலக பிள்ளைகளை வேட்டையாடி வருகிறது. 1980-களின்போது, மணல்வாரியம்மை, தசைவிறைப்பு ஜன்னி, வயிற்றுப் போக்கு ஆகியவற்றிற்கு எதிரான போராட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடையப்பட்டது. இருப்பினும், ஒரு புதிய உடல்நல கொடுங்கனவு உதயமாயிற்று: எய்ட்ஸ். 2000-வது வருடத்திற்குள் ஒரு கோடி பிள்ளைகளுக்கு இந்நோய் தொற்றியிருக்கும் என்பதாக உலக சுகாதார நிறுவனம் கணக்கிடுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய இரண்டாவது பிறந்த நாளை ஒருபோதும் காணமாட்டார்கள்; ஐந்து வருடங்களுக்கு கூடுதலாக எவரும் வாழப்போவதில்லை. “விரைவில் ஏதேனும் செய்யப்படாவிட்டால் பிள்ளைகளின் உயிர்ப்பிழைப்பு சம்பந்தமாக கடந்த 10 வருடங்களில் நாம் என்னென்ன முன்னேற்றத்தை செய்தோமோ அவையனைத்தையும் துடைத்தழிக்கப்போவதாக எய்ட்ஸ் அச்சுறுத்துகிறது,” என புலம்புகிறார் ஹைதி நாட்டைச் சேர்ந்த குழந்தை மருத்துவர் டாக்டர் ரெஜினல் ப்யூலோஸ்.
இந்தச் சுருக்கமான மறுகண்ணோட்டத்திலிருந்து ஒரு காரியம் தெளிவாக இருக்கிறது. அது போற்றிப்புகழத்தக்க சில சாதனைகள் இருந்தபோதிலும் ‘ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு மேம்பட்ட எதிர்காலத்தைக் கொடுப்பது’ என்ற குறிக்கோள் மிகப் பெரிய பொறுப்பாகவே இருந்துவருகிறது என்பதே. என்றாவது ஒருநாள் அந்தக் கனவு நினைவாகும் என்பதற்கு ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா?
[அடிக்குறிப்புகள்]
a ORT வயிற்றுப் போக்கின் சாவுக்கேதுவான நீரிழப்பு விளைவுகளை எதிர்க்கத் தேவையான திரவம், உப்பு, குளுகோஸ் போன்றவற்றை தருகிறது. ஏற்கெனவே இந்த முறையால் வருடத்திற்கு பத்து லட்சத்திற்கும் அதிகமான உயிர்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றன என்பதாக 1990-ல் உலக சுகாதார நிறுவனம் அறிக்கை செய்தது. கூடுதல் விவரங்களுக்கு, 1985, செப்டம்பர் 22, ஆங்கில விழித்தெழு! இதழில் பக்கம் 23-5-ஐப் பார்க்கவும்.
[பக்கம் 6-ன் பெட்டி]
1990-களுக்கான குறிக்கோள்கள் —பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்கான சவால்
பிள்ளைகளுக்கான உலக மாநாட்டிற்குக் கூடிவந்த நாடுகள் அநேக குறிப்பான உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டனர். அவர்கள் 2000-வது ஆண்டிற்குள் நிறைவேற்றப்போவதாக நம்பியிருப்பது இதுதான்.
தடுப்பூசி போடுதல். தற்போதைய தடுப்பூசி திட்டங்கள் ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சம் பிள்ளைகளைக் காப்பாற்றுகின்றன. ஆனால் மற்ற 20 லட்சம் பிள்ளைகள் இன்னும் இறந்து கொண்டிருக்கின்றனர். உலக பிள்ளைகளில் 90 சதவீதத்தினருக்கோ அதிலும் அதிகமானோருக்கோ மிகவும் சாதாரண நோய்களுக்கு எதிராக நோய்த்தடைக்காப்பு அளிப்பதன் மூலம் இந்த மரணங்களில் பெரும்பாலானவை தடுக்கப்படலாம்.
கல்வி. 1980-களின்போது உலகின் மிகவும் ஏழ்மையில் உள்ள அநேக நாடுகளில் பள்ளியில் சேர்க்கப்படுவது உண்மையில் குறைந்துவிட்டது. இந்தப் போக்கில் திருப்பம் ஏற்படுத்தி, இந்தப் பத்தாண்டுகளின் முடிவிற்குள் ஒவ்வொரு பிள்ளையும் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பைப் பெறுவதை நிச்சயித்துக்கொள்வதே குறிக்கோளாக இருக்கிறது.
ஊட்டச்சத்துக்குறைவு. “சரியான கொள்கைகளைக்கொண்டு, . . . உலக பிள்ளைகள் அனைவருக்கும் உணவளிக்கவும், மிக மோசமான வகை ஊட்டச்சத்துக்குறைவுகளை மேற்கொள்ளவும் இவ்வுலகம் வல்லமை படைத்ததாய் இருக்கிறது,” என்று ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதி (United Nations Children’s Fund) அதிகாரிகள் கருதுகின்றனர். தற்போதைய பத்தாண்டுகளின்போது உள்ள ஊட்டச்சத்துக்குறைவுபடும் பிள்ளைகளின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க திட்டங்கள் தீட்டப்பட்டன. அத்தகைய ஒரு சாதனை பத்து கோடி பிள்ளைகளைப் பசியின் வேதனைகளிலிருந்து காப்பாற்றும்.
சுத்த தண்ணீரும் துப்புரவும். 1987-ல், ப்ரூன்ட்லாண்ட் அறிக்கை இவ்வாறு விளக்கிற்று: “வளரும் உலகில், அருகில் உள்ள மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிக்கையைவிட தண்ணீர்க் குழாய்களின் எண்ணிக்கையே ஒரு சமுதாயத்தின் ஆரோக்கியத்திற்கான நல்ல ஒரு அடையாளமாக இருக்கிறது.” தற்போது 100 கோடிக்கும் அதிகமான மக்கள் சுத்த தண்ணீர் கிடைப்பதற்கான வழியில்லாமல் இருக்கின்றனர். அதைப்போன்று இரண்டு மடங்கு மக்கள் கழிவு அப்புறப்படுத்தும் சுகாதார வசதியின்றி வாழ்கின்றனர். பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதற்கான பொது வழிமுறையையும் மனித கழிவை அப்புறப்படுத்துவதற்கான சுகாதார வழிமுறைகளையும் சர்வதேச அளவில் ஏற்படுத்தித் தருவதே குறிக்கோளாக இருக்கிறது.
பாதுகாப்பு. கடந்த பத்தாண்டுகளில், போர்கள் 50 லட்சத்திற்கும் அதிகமான பிள்ளைகளைக் காயப்படுத்தியும் கொன்றும் இருக்கின்றன. மற்ற 50 லட்சம் பிள்ளைகள் வீடற்றவர்களாக விடப்பட்டிருக்கின்றனர். இந்த அகதிகளுக்கும் லட்சக்கணக்கான தெருப்பிள்ளைகளுக்கும் குழந்தைத் தொழிலாளர்களுக்கும் அவசரப் பாதுகாப்புத் தேவைப்படுகிறது. இப்போது நூற்றுக்கும் அதிகமான நாடுகளால் ஏற்கப்பட்டிருக்கும், பிள்ளையின் உரிமைகளின் பேரிலான ஒப்பந்தம், இந்த எல்லா பிள்ளைகளையும் வன்முறையிலிருந்தும் தவறாக பயன்படுத்தப்படுவதிலிருந்தும் பாதுகாக்க முயற்சிக்கிறது.
[பக்கம் 7-ன் அட்டவணை]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
குழந்தை மரணங்களுக்கான முக்கிய காரணங்கள்
(ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகள்)
ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான மரணங்கள் (1990 கணக்கீடுகள்):
5.1 லட்சம் கக்குவான் இருமல்
7.9 லட்சம் சிசு தசைவிறைப்பு ஜன்னி
10.0 லட்சம் மலேரியா
15.2 லட்சம் மணல்வாரியம்மை
22.0 லட்சம் இதர சுவாச நோய்கள்
40.0 லட்சம் வயிற்றுப்போக்கு நோய்
42.0 லட்சம் இதர காரணங்கள்
மூலம்: WHO மற்றும் UNICEF
[பக்கம் 8-ன் அட்டவணை]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
வளரும் உலகத்திலுள்ள பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடுதலில் முன்னேற்றம் 1980-1988
தடுப்பூசி போடப்பட்ட 12 மாதங்களுக்குட்பட்ட பிள்ளைகளின் சதவீதம்
வருடங்கள்
1980 1988
DPT3: 24% 66%
போலியோ 20% 66%
காசநோய் 29% 72%
மணல்வாரியம்மை 15% 59%
DPT3* தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல்
(கக்குவான்), தசைவிறைப்பு ஜன்னி ஆகியவற்றுக்கான கூட்டு தடுப்பூசி.
மூலம்: WHO மற்றும் UNICEF (1980-ன் புள்ளிவிவரங்களில் சீனா சேர்க்கப்படவில்லை)
[பக்கம் 4-ன் படத்திற்கான நன்றி]
Photo: Godo-Foto