உயிரைக் காக்கும் உப்புச் சத்துள்ள பானம்!
சியரா லியோனிலுள்ள “விழித்தெழு!” நிருபர் எழுதியது
மாலை நேரமாக இருக்கும்போது இரண்டு வயது ஜெனிபா தன்னுடைய வயிறு நன்றாக இல்லையென்று முறையிட்டாள். அவளுடைய தாயாகிய மரியம்மா அதைக் குறித்து அதிகமாகக் கவலைப்படவில்லை. ஜெனிபாவுக்கு இதற்கு முன்புகூட வயிற்றுக் கோளாறு இருந்திருக்கிறது, இம்முறையும் அவ்வாறுதான் இருக்கும்.
ஆனால் வயிற்றுப் போக்கு தொடர்ந்திருந்தது—அடிக்கடி, தண்ணீராக, கட்டுப்படுத்த முடியாததாக இருந்தது. அதற்கு பிறகு வாந்தி ஆரம்பித்தது. ஜெனிபா மடமடவென்று பலத்தை இழந்துவிட்டாள். மரியம்மா தன்னுடைய பிள்ளையை காலில் போட்டுக் கொண்டு அவளுடைய முதுகை தடவிக் கொடுத்தாள். அது சற்றேனும் பயன்தரவில்லை.
காலை விடிந்தபோது, ஜெனிபா பலமிழந்து, சோர்வுற்ற நிலையில் தரையில் காணப்பட்டாள்—பெருமூச்சு விட்டுக் கொண்டும், பலவீனமாகவும், இருதய படபடப்புடன் தலையை ஓய்வில்லாமல் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக திருப்பிக் கொண்டிருந்தாள், அவளுடைய அழகிய கண்கள் உள்ளே சென்று, பாதி மூடினதாக இருந்தன, அவளுடைய கன்னங்கள் குழி விழுந்ததாகவும், வாய் காய்ந்ததாகவும் இருந்தது. மரியம்மா முழுவதும் சோர்வுள்ள நிலையிலிருந்தாள்.
உதயமாகும் கதிரவனை புலம்பல் வாழ்த்தியது. ஜெனிபா இறந்துவிட்டாள்.
பிள்ளைகளையும் குழந்தைகளையும் கொல்லும் மாபெரும் நோயாளி எது? நீங்கள் நம்பினாலும்சரி நம்பாவிட்டாலும்சரி, அதுதான் உடலில் நீரிழப்பு (dehydration)—சாதாரண வயிற்றுப் போக்கினால் உடலில் ஏற்படும் நீரிழப்புa ஒவ்வொரு வருடமும் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள், இதனால் மரிக்கிறார்கள்—ஒவ்வொரு ஆறு வினாடிக்கு ஒரு குழந்தை இறந்துவிடுகிறது. வளர்ந்துவரும் தேசங்களில், ஐந்து வயதுக்கு முன்பே 20 பிள்ளைகளில் ஒன்றின் உயிரை இது அழித்துவிடுகிறது. பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்துள்ள தேசங்களில், சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு அடுத்ததாக வயிற்றுப் போக்கின் காரணமாக பிள்ளைகள் மருத்துவ மனைகளில் சேர்க்கப்படுகின்றனர்.
என்றபோதிலும் இதனால் ஏற்படும் வேதனையும் மரணமும் ஒரு சாதாரண உப்பு சத்துள்ள பானத்தை உட்கொள்வதன் மூலம் மேற்கொள்ளப்படக்கூடும்.
எவ்விதமாக? முதலாவதாக, வயிற்றுபோக்கு தானே கொல்வதில்லை. அது பொதுவாக, எந்தவொரு சிகிச்சையும் இல்லாமலேயே தானே சரியாகிவிடுகிறது. வயிற்று போக்குடைய ஒரு நபர் தன்னுடைய உடலிலிருந்து தண்ணீரையும் உப்புச் சத்துவையும் இழந்துவிடுவதே பிரச்னையாக இருக்கிறது—அவன் உடலிலுள்ள நீரை இழந்துவிடுகிறான். அளவுக்கு மிஞ்சி உடலில் நீர் இழக்கப்பட்டால், அது ஈடு செய்யப்படாவிட்டால் மரணம் நேரிடும்.
முன்னேற்றமடையும் உலகத்தில், கணக்கிடப்பட்ட 50 கோடி சிறுவர்கள் ஒவ்வொரு வருடமும் வயிற்றுப் போக்கை மேற்கொள்கின்றனர். வறுமையில் வாடும் வட்டாரங்களில் சராசரியான பிள்ளைக்கு ஒரு வருடத்தில் மூன்று அல்லது நான்கு முறை ஏற்படுகிறது. அடிக்கடி ஏற்பட்டால், இது சிறிது கஷ்டத்தை விளைவிக்கிறது. ஆனால் சில சமயங்களில் சில மணி நேரங்களுக்குள்ளாக காலராவைப் போன்று அது மரணத்தில் விளைவடையக்கூடும். அதனுடைய ஆரம்ப பகுதிகளில், இந்த வியாதி ஆபத்தில் விளைவடையுமா அல்லது இல்லையா என்று சொல்வது கடினமாக இருக்கிறது. எனவே பெற்றோர்கள் உடலில் இந்த நீரிழப்பு நிலையைக் கணிப்பது மட்டுமின்றி அதை உடனடியாக தவிர்க்கவும் சரிபடுத்தவும் தெரிந்திருக்க வேண்டும்.—பக்கங்கள் 13, 14-லுள்ள பெட்டிகளை பாருங்கள்.
இழக்கப்பட்ட நீர் எவ்வாறு ஈடு செய்யப்படுகிறது?
ஒழுகிக் கொண்டிருக்கும் வாளியில் தண்ணீர் மட்டத்தைக் காத்துக்கொள்ள வேண்டுமென்றால், நீங்கள் வெறுமென அதில் தண்ணீரை ஊற்றிக் கொண்டே இருப்பீர்கள். வயிற்றுப் போக்குடைய பிள்ளையின் விஷயத்திலும் இது உண்மையாகவே இருக்கிறது—அவனுடைய உடலில் இழக்கப்படும் நீர் ஈடு செய்யப்பட வேண்டும். இதுதான் நீரிழப்பை ஈடுசெய்தல் (rehydration) என்று அழைக்கப்படுகிறது.
சமீப வருடங்கள் வரையாக, உப்பு நீரை நரம்புகளில் நேரடியாக செலுத்துவது (intervenous therapy), சிகிச்சையின் ஒரு முறையாகக் கையாளப்பட்டது. இது தானே திறம்பட்டதும் சிறந்ததோர் சிகிச்சை முறையாகவும் இருந்தபோதிலும், இது பிரச்னைகளை கொண்டிருக்கிறது. இது அதிக செலவை உட்படுத்துவதாகவும், திறம்பட்ட பணியாளர்களையும், விலையுயர்ந்த நவீன சாதனங்களை தேவைப்படுத்துவதாகவும் இருக்கிறது. இவை சுகாதார நிலையங்களிலும் அல்லது மருத்துவ மனைகளிலும் மட்டுமே கிடைக்கக்கூடியதாக இருக்கும். இது வேதனை அனுபவிக்கும் பிள்ளைக்கு வெகு தூரத்தில் இருக்கும் உப்புநீர் நரம்பு வழியாகச் செலுத்தப்படுகிற இந்த சிகிச்சை முறை தேவையிலிருப்பவர்களுக்கு எட்ட முடியாத தூரத்திலிருக்கிறது.
என்றாலும், 1960 முதற்கொண்டு நரம்பு மூலமாக உப்பு நீர் செலுத்தப்படுகிற இந்த சிகிச்சை முறையைவிட இன்னொரு பாதுகாப்பான, எளிதான மற்றும் அதிக செலவில்லாத ஒரு முறை இருக்கிறது. அது உடலில் நீரிழப்பை வாய் வழியே ஈடுசெய்யும் சிகிச்சை முறை என்றழைக்கப்படுகிறது. [ORT, Oral Rehydration Therapy] நரம்பு மூலம் செலுத்தப்படுகிற சிகிச்சை போலவே இந்த வாய் மூல சிகிச்சையும் தண்ணீரையும் உப்புச் சத்துக்களையும் ஈடு செய்கிறது. ஒரு பிள்ளை தண்ணீரை நரம்புகளினூடாகச் செலுத்திக் கொள்வதற்கு பதிலாக, அதை வாய் வழியாய்ப் பருகலாம்.
இந்த முறை ஏன் இதற்கு முன்பு யோசிக்கப்படவில்லை? இல்லை, இந்த முறை இருந்தது. வயிற்று போக்கு ஏற்படும்போது, சரீரத்திலிருந்து நீரை இழந்து விடுவதுமன்றி, குடலின் சுவர்கள் வழியாய் நீர் இழந்துக் கொள்ளப்படுவதையும் தடை செய்கிறது. எனவே வெறுமென நீரகப் பானங்களை உட்கொள்வது பயனற்றது—அதில் பெரும்பகுதியானது உடல் வழியாய் நேரே சென்றுவிடுகிறது.
ஆனால், தற்செயலாக, ஒரு முக்கிய கண்டுபிடிப்பு செய்யப்பட்டது. வாய் மூலம் நீரிழப்பை ஈடுசெய்யும் சிகிச்சை முறையில் பணி புரிந்த மருத்துவ விஞ்ஞானிகள், உப்பு சத்துள்ள பானங்களோடு சர்க்கரையைச் சேர்த்து, அதைப் பருகுவதற்கு சுவையாக ஆக்கினர். அப்படி செய்வதன் மூலம், உடல் இழந்துவிட்ட சக்கரையை மட்டுமல்லாமல், உயிரைக் காக்கும் உப்பையும் தண்ணீரையுங்கூட ஈர்த்துக் கொள்கிறது என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்! சர்க்கரை ஒரு சாவியைப் போன்று, அந்த பிரச்னையைத் தீர்ப்பதற்கான உப்புநீர்க் கரைசலுக்கு அமைந்த பூட்டைத் திறந்தது. சரியான விதமாக கலந்து கொடுக்கப்படும் போது உடலில் ஈர்ப்புச் சக்தியை சர்க்கரை 25 சதவிகிதமாக அதிகரிக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டது!
இது குறிப்பிடத்தக்கதா? லான்செட் என்ற ஒரு பிரிட்டிஷ் மருத்துவ பத்திரிகை, இந்த கண்டுபிடிப்பை, “இந்த நூற்றாண்டின் அதிக குறிப்பிடத்தக்க ஒரு மருத்துவ முன்னேற்றம்” என்று போற்றினது. மேலும் [ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதி (UNICEF)] “அதிக எளிதான ஆனால் விஞ்ஞான சரித்திரத்தில் அதிக முக்கியமான சாதனைகளில் ஒன்றாக இருக்கிறது,” என்று குறிப்பிட்டது.
ஏன்? ஏனென்றால் இப்போது பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை கொடுக்கலாம்! எந்த விசேஷமான சாதனங்களோ அல்லது விசேஷமான ஒரு பயிற்றுவிப்போ தேவையில்லை. வாய்மூலம் உடலில் நீரிழப்பை ஈடுசெய்யும் உப்புக்கலவை பாக்கெட்டில் மலிவாக விற்கப்படுகின்றன. இவை அநேக உடல்நல நிகழ்ச்சிகள் மற்றும் அமைப்புகள் மூலம் விரிவாக கிடைக்கப் பெறுகிறது. பெற்றோர்கள் இந்த உப்புகளை தண்ணீரில் கலந்து அந்தக் கரைசல் நீரைப் பிள்ளை குடிக்கும்படி செய்வது மட்டுமே தேவைப்படுகிறது.
ஆனால் இப்படியாக பாக்கெட்டுகள் கிடைக்காவிட்டால் என்ன செய்வது? உடலில் நீரிழப்பை ஈடுசெய்யும் ஒரு பானத்தை தங்கள் வீட்டிலுள்ள பொருட்களைக் கொண்டே அவர்கள் தயாரித்துக் கொள்ளலாம், வீட்டில் செய்யப்படும் கரைசல் தண்ணீர், பாக்கெட்டுகளில் கிடைப்பவைப் போன்று அவ்வளவு நன்றாக இல்லாவிட்டாலும், அவற்றிற்கு அடுத்தபடியாக சிறந்தது. கடுமையான நீரிழப்பை இவை எந்தளவுக்கு ஈடுசெய்யும் என்பதை மருத்துவர்கள் கேள்வி கேட்டாலும், வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் ஆரம்பத்திலேயே வீட்டில் தயாரிக்கப்படும் இந்தக் கரைசல் நீரைக் கொடுப்பது ஒரு முக்கிய பங்கை கொண்டிருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கின்றனர்.
பிள்ளைகள் ஏன் இன்னும் மரிக்கிறார்கள்
உடலில் நீரிழப்பை ஈடுசெய்யும் வாய்மூல சிகிச்சை முறை நன்றாக வேலை செய்தாலும் உலக சமுதாயம் இதை பயன்படுத்தச் செய்வது ஒரு சவாலாக இருக்கிறது. என்ன முன்னேற்றம் செய்யப்பட்டிருக்கிறது? மருத்துவ மனைகளில், நரம்பு வழியாய் உப்புநீர் செலுத்தப்படும் சிகிச்சைக்கு பதிலாக, வாய் மூலமாக இந்த சிகிச்சை முறை விரும்பப்படும் ஒரு சிகிச்சை முறையாக இருக்கிறது. 1983-ன் பிற்பகுதியில் முன்னேறி வரும் 30 நாடுகள் உடலில் நீரிழப்பை ஈடுசெய்ய வாய் மூல சிகிச்சையை பின்பற்ற ஆரம்பித்திருக்கின்றன. அதில் 20 நாடுகள் தங்களுடைய சொந்த உப்புக் கலவைகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்திருக்கின்றன.
மேலும் அநேக சர்வதேச சுகாதார அமைப்புகள் வாய்மூல சிகிச்சை முறையை பரப்பிக் கொண்டிருக்கின்றன. இதில் நல்ல விளைவுகள் இருந்திருக்கிறது. இந்த சிகிச்சை முறை, உடலில் நீரிழப்பினால் ஏற்படும் மரண எண்ணிக்கை 60 சதவீதத்திலிருந்து 50 ஆக குறைத்திருக்கிறது என்று உலக முழுவதிலும் செய்யப்படும் ஆய்வுகள் காண்பிக்கின்றன. என்றபோதிலும் ஆண்டுதோறும் 50 கோடி பிள்ளைகள் வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்படுவதால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் உப்புச் சத்துள்ள கலவைப் பாக்கெட்டுகளை விநியோகிப்பது மிகப் பிரமாண்டமான வேலையாக இருக்கிறது.b
ஆனால் வீட்டில் தாங்களாகவே தயாரிக்கும் இந்த உப்புச் சத்து பானத்தை தங்கள் பிள்ளைகளுக்கு தயாரித்துக் கொடுத்தால் என்ன? உப்பு, சர்க்கரை மற்றும் அளவுகள் எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. கிடைக்கும் இடங்களிலுங்கூட நீரிழப்பை ஈடுசெய்யும் உப்புப் பானத்தை தயாரிப்பதற்கு தகுந்த பயிற்றுவிப்பு தேவையாக இருக்கிறது. உதாரணமாக, அந்தக் கரைசலில் சர்க்கரைச் சத்து கூடுதலாகிவிட்டால் அவற்றை ஈர்த்துக் கொள்ளும் சக்தி குறைந்து வயிற்றுப் போக்கு அதிகமாகிவிடும். அதே விதமாக அதிகமான உப்புச் சத்தும் அபாயகரமானது. மேலும் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதும் முக்கியம். அதிகமாக கொடுத்துவிட்டால், வயிற்றுப் போக்கு நீடிக்கும். வெகு குறைவாக கொடுப்பதானது உடலில் நீரிழப்பை நீடிக்கச் செய்கிறது.
மக்களுடைய மனநிலைகள் மாறுவதன் காரணமாகவும் ஒரு பிரச்னை இருந்து வருகிறது. அநேகர் இந்த வாய்மூல சிகிச்சை முறையைக் கடைபிடிக்க சிறிதும் மனமில்லாதவர்களாக இருக்கின்றனர். தங்களுடைய பிள்ளைகளுக்கு சாப்பாடும், பானங்களும் கொடுப்பதை நிறுத்தி விடுவதே சிறந்த சிகிச்சை முறை என்று சில தாய்மார்கள் நினைக்கின்றனர். மற்றவர்கள் உள்ளூர் வைத்தியரின் ஆலோசனையை பின்பற்றுகின்றனர்—அது கவலைக்குரிய பலன்களை கொண்டிருக்கிறது.
உடலில் நீரிழப்பை ஈடுசெய்யும் வாய்மூல சிகிச்சை (ORT) வெறும் ஒரு சிகிச்சை முறையாகத்தான் இருக்கிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். அது வயிற்று போக்கை நிறுத்துவதுமில்லை அல்லது தடுப்பதுமில்லை. வயிற்று போக்கை முழுவதுமாக நீக்க, மோசமான தண்ணீர் கழிவு நீக்க ஏற்பாடுகள் மற்றும் சுகாதாரம் ஆகிய உலகளாவிய பிரச்னைகளை தீர்க்க வேண்டும்.c ஊட்டச்சத்துக் குறைவும் முடிவுக்கு வர வேண்டும், ஏனெனில் ஊட்டச் சத்துக் குறைவு வயிற்றுப் போக்கை ஏற்படுத்துகிறது, வயிற்றுப் போக்கு ஊட்டச் சத்துக் குறைவை ஏற்படுத்துகிறது.
ஆகிலும், கடவுளுடைய ராஜ்யம் மட்டுமே ஊட்டச் சத்துக் குறைவு, நோய்கள் மற்றும் மரணத்திற்குங்கூட முழுமையான பரிகாரம் என்று கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கின்றனர். (வெளிப்படுத்துதல் 21:4; சங்கீதம் 72:16) இதற்கிடையில் உடலில் நீரிழப்பை ஈடுசெய்யும் வாய்மூல சிகிச்சை முறை கோடிக்கணக்கான பிள்ளைகளை கொல்லுவதற்கு எதிரான போராட்டத்தில் எளிய ஆனால் வல்லமை வாய்ந்த கருவியாக இருக்கிறது. (g85 9/22)
[அடிக்குறிப்புகள்]
a ஒவ்வொரு வருடமும் 8 கோடி பாக்கெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.
b வயிற்று போக்கு தொற்று நோயை மலம் அல்லது சிறுநீர் கழித்த பிறகும் சாப்பிடுவதற்கு முன்பும் கைகளை சோப்பாலும் தண்ணீராலும் கழுவுவது மூலம் 50 சதவீதத்திற்குக் குறைக்க முடியும்.
c இதுவரை 25 வித்தியாசமான நோய்க்கிருமிகள் வயிற்றுப்போக்குக்குக் காரணமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதுவும் மற்ற அம்சங்களும் வயிற்றுப்போக்குக்கு ஒரு குறிப்பிட்ட விளக்கத்தைக் கொடுப்பதைக் கடினமாக்குகிறது. விவரமாக சொல்ல வேண்டுமானால் ஒரு நாளில் மூன்று முறை தண்ணீராக மலங்கழித்தலாகும்.
[பக்கம் 13-ன் பெட்டி]
“இந்த நூற்றாண்டின் அதிக குறிப்பிடத்தக்க ஒரு மருத்துவ முன்னேற்றம்.”—லான்செட்
“அதிக எளிதான ஆனால் விஞ்ஞான சரித்திரத்தில் அதிக முக்கியமான சாதனைகளில் ஒன்றாக இருக்கிறது.”—ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதி.
[பக்கம் 13-ன் பெட்டி]
வயிற்றுப்போக்கு ஏற்படுமானால்: பிள்ளைகளுக்கு சிகிச்சை கொடுப்பதற்கான வழிகாட்டிகள்
உணவூட்டுவதை நிறுத்தி விடாதீர்கள்: தண்ணீர் சத்துள்ள ஆகாரங்கள் கொடுக்கப்பட வேண்டும். தேனீர், அரிசி கஞ்சி தண்ணீர் மற்றும் சூப்புகள் மிகவும் முக்கியமானவை. குடிக்கும் தண்ணீரை கையிருப்பில் வைத்திருங்கள், பால் குடிக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுங்கள். பிள்ளை சாப்பிடும் நிலையிலிருக்கும் போது அவனுக்கு சாப்பாடு கொடுக்க வேண்டும். சிறிது ஆனால் அடிக்கடி உணவுகளை கொடுப்பதே சிறந்தது. எளிதில் ஜீரணிக்கக்கூடிய சக்தியளிக்கும் பலமுள்ள உணவு வகைகளாகிய வேக வைத்த பருப்பு வகைகளும், வாழைப்ப பழங்களும் நல்லது.
ஆரம்பத்திலிருந்தே வாய்மூலம் உடலில் நீரிழப்பை ஈடுசெய்யும் பானத்தை கொடுங்கள்: இது நீரிழப்பை ஈடுசெய்து, உடலில் நீரிழப்பை தவிர்க்கிறது. எங்கெல்லாம் முடியுமோ ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட நீரிழப்பை ஈடுசெய்யும் உப்புக் கலவைகளை உபயோகியுங்கள். இவை கிடைக்காவிட்டால், பின்வரும் கரைசலைத் தயார் செய்யுங்கள். (கலக்கும்போது அளவுகளைக் குறித்ததில் அதிக திருத்தமாக தயாரிக்க வேண்டும்!):
தூள் உப்பு: தலைமட்ட ஒரு தேக்கரண்டி
சர்க்கரை: தலைமட்டமாக எட்டு தேக்கரண்டிகள்
தண்ணீர்: ஒரு லிட்டர் (5 கப்புகள், ஒவ்வொன்றும் 200 மில்லி லிட்டர் கொண்டது)
எவ்வளவு கொடுக்க வேண்டும்: கொடுக்கப்படும் தண்ணீர் ஆகாரம் தண்ணீர் இழப்பை ஈடு செய்ய வேண்டும். சராசரியாக நீரிழப்பை ஈடுசெய்யும் பானம் ஒவ்வொரு முறையும் மலம் கழிந்த பிறகு கொடுக்கப்பட வேண்டும்; அதில் பாதி அளவே பிள்ளைகளுக்கு கொடுக்கப்பட வேண்டும். (சிறு குழந்தைகளுக்கு இதில் பாதியளவு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும்.) பிள்ளை விரும்பும் அளவுக்கு அதை குடிக்கட்டும்!
நீரிழப்பை ஈடுசெய்யும் பானத்தை எப்போது நிறுத்த வேண்டும்: பொதுவாக வயிற்றுப் போக்கு நின்றவுடன் அல்லது நீரிழப்பை ஈடுசெய்யும் பானத்திற்கான தேவை இல்லாதபோது.
எப்போது மருத்துவ உதவியை நாடவேண்டும்:
நீரிழப்பு அறிகுறிகள் தெரியும்போது.
ஒரு நபர் குடிக்க முடியாத நிலையிலிருக்கும்போது.
வயிற்றுப் போக்கு எந்த ஒரு முன்னேற்றமுமில்லாமல் நான்கு நாட்களுக்குத் தொடரும் போது (குழந்தைகளில் விஷயத்தில் ஒரே நாள் கடும் வயிற்றுப் போக்கிற்கு பிறகு.)
தொடர்ச்சியாக வாந்தியெடுக்கும்போது.
[பக்கம் 14-ன் பெட்டி]
கடுமையான நீரிழப்பின் அறிகுறிகள்
திடீரென்று எடை குறைந்து விடுவது
வாய் வறட்சி
குழந்தைகளில் குழி விழுந்து காணப்படும் இடங்கள்
குழி விழுந்த கண்கள்
வேகமான, பலவீனமான நாடித் துடிப்பு
தோலில் நெகிழ்திறம் இழந்த நிலை
இரண்டு விரல்களால் தோலை தூக்கி விடுங்கள். தோலின் மடிப்பு சாதாரண நிலைக்குச் செல்லாமலிருந்தால், பிள்ளை உடலில் நீரிழந்த நிலையிருக்கிறது.
மேற்கூறப்பட்டிருப்பது லண்டனிலுள்ள D. Werner என்பவரால் எழுதப்பட்ட டாக்டர் இல்லா இடங்களில் (Where There Is No Doctor) என்ற புத்தகம் 1981, பக்கம் 159-லிருந்து எடுக்கப்பட்டது.