உலகை கவனித்தல்
சோகத்தில் ஆழ்ந்திருக்கும் யுத்தகால தளிர்கள்
“யுத்தகால தளிர்கள்” என்ற பதம் இரண்டாம் உலகப் போரின் முடிவுக்கும் 1960-களின் தொடக்கத்துக்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் பிறந்த மக்களைக் குறிப்பிடுவதற்கு புனையப்பட்டது. அக்காலப் பகுதியில் போரில் வெற்றி தழுவின அணியைச் சேர்ந்த அநேக நாடுகள் ஜனத்தொகையில் கவனிக்கத்தக்க அதிகரிப்பைக் கண்டதாக அறிக்கை செய்யப்பட்டது. ஒருசமயத்தில் கவலையற்றவர்களாகவும் எதிர்காலத்தைக் குறித்து நம்பிக்கையுடனும் இருந்த இந்த யுத்தகால தளிர்கள் இப்போது, “தங்களைக் குறித்தும் தங்களுடைய பிள்ளைகளைக் குறித்தும் பாதுகாப்பற்றவர்களாக உணருகிறார்கள்; அதோடு தங்களுடைய வயதான காலத்தை நினைத்துப்பார்க்கவே பயப்படுகிறார்கள்” என்று 16 தேசங்களில் எடுக்கப்பட்ட ஒரு சுற்றாய்வு காட்டுகிறது என்பதாக யூரோப்பியன் செய்தித்தாள் சொல்கிறது. அவர்கள் ஏன் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்? “இப்போது அவர்கள் பார்க்கும் உலகம் தனித்துவம், பொருள்பற்று, தன்னடக்கமின்மை, நல்லொழுக்கமின்மை போன்ற காரியங்களில் அளவுக்கு அதிகமாக சென்றுவிட்டிருப்பதாக உணருகிறார்கள்” என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
ஒளிந்திருக்கும் ஹெப்படைட்டஸ்-சி நோய்கள்
“ஹெப்படைட்டஸ்-சி நோய் பிரான்ஸ் மக்களுடைய ஆரோக்கியத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தலாகத் தோன்றுகிறது” என்று பிரெஞ்சு டாக்டர் குழு ஒன்றின் அறிக்கை காட்டுகிறது. 10 முதல் 30 ஆண்டுகளாக நீடித்து முற்றிப்போன ஈரல் நோய் அந்நோயாளிக்கு இருப்பதாக ஏற்கெனவே கண்டறியப்பட்ட பிறகே பெரும்பாலான ஹெப்படைட்டஸ்-சி நோய் தொற்றுகள் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது என்பதாக டாக்டர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஹெப்படைட்டஸ்-சி வைரஸால் வரும் நோய் சாவுக்கேதுவானதாக இருக்கலாம்; அதோடு, அது பெரும்பாலும் இரத்தமேற்றுதலினாலும், நரம்பு வழியாக போதைப் பொருளை ஏற்றிக்கொள்வதாலும் கடத்தப்படுகிறது. இதை கண்டறிய முழுமையான பரிசோதனை முறைகள் அவசரமாகத் தேவைப்படுகின்றன; ஏனென்றால், நோய் தொற்றப்பட்டிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டவர்களில் கால்வாசிக்கும் குறைவானோரே அதைக் குறித்து ஏற்கெனவே அறிந்திருந்தனரென அந்த அறிக்கை எச்சரிக்கிறது. ஹெப்படாலஜி இதழ் தெரிவிக்கிறபடி, 5,00,000-லிருந்து 6,50,000 வரையான பிரெஞ்சு குடிமக்கள் தற்போது இந்த வைரஸைப் பெற்றிருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது.
தாய்ப்பாலூட்டுதல் —நோய்க் காப்பாளன்
“2 வயதிலிருந்து ஏழு மாதங்களுக்கு உட்பட்ட 1,700-க்கும் அதிகமான குழந்தைகளை வைத்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, தாய்ப்பாலூட்டப்படுகிற குழந்தைகளுக்கு செவிக் கோளாறையும் வயிற்றுப் போக்கையும் பெறுவதற்கான சாத்தியம் குறைவாக இருக்கிறது” என்று பெற்றோர் (ஆங்கிலம்) பத்திரிகை குறிப்பிடுகிறது. “தாய்ப்பால் மட்டுமே குடிக்கிற குழந்தையைக் காட்டிலும் புட்டிப்பால் மட்டுமே குடிக்கிற குழந்தை இத்தகைய வியாதிகளில் ஒன்றைப் பெறுவதற்கு கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிக சாத்தியம் உள்ளது என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்திலுள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.” தாய்ப்பால், தாயினுடைய பாதுகாப்பளிக்கிற நோய் எதிர்ப்பொருட்களைக் குழந்தைக்கு கடத்துவதன்மூலம் நோய்கள் அண்டவிடாமல் காக்கிறது என்று டாக்டர்கள் வெகு காலத்திற்கு முன்னரே நம்பியபோதிலும், அதன் நன்மைகள் தனிச்சிறப்பு வாய்ந்தவையாக இருக்கின்றன என்று இந்த ஆய்வு காட்டுகிறது. இந்த ஆய்வின் எழுத்தாளர்களில் ஒருவரான லாரன்ஸ் க்ரம்மர் ஸ்டிரேன் இவ்வாறு சொல்கிறார்: “முதல் ஆறு மாதங்களுக்கு ஒரு சிசுவுக்கு எந்தளவுக்கு தாய்ப்பாலூட்டப்படுகிறதோ அந்தளவுக்கு நல்லது என்று அடித்துச் சொல்லலாம்.”
துளையிடுவதால் வரும் தொல்லைகள்
உடலில் துளையிடுவது, சில நாடுகளில் டாப் பாஷனாக இருக்கலாம்; ஆனால், “உதடுகள், கன்னங்கள், நாக்குகள் போன்றவற்றை துளையிடுவதால் உண்டாகும் காயங்களில் சீழ் பிடிப்பதைக் காட்டிலும் இன்னும் அதிக தொல்லைகள் ஏற்படுகின்றன” என த ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோஸியேஷன் அறிவிக்கிறது. மார்கன்டவுனிலுள்ள, பல் மருத்துவத்திற்கான மேற்கு வர்ஜீனியா யுனிவர்சிட்டி ஸ்கூலின் பல் மருத்துவர்கள் தெரிவிக்கிறபடி, “வலி, வீக்கம், காயத்தில் சீழ் வடிதல், பெருமளவில் எச்சில் ஒழுகுதல், ஈறுகளில் புண் போன்றவை வாயில் துளையிட்டுக் கொண்ட நோயாளிகளிடத்தில் பொதுவாகக் காணப்படுகின்றன. . . . வாயில் துளையிட்டு ஆபரணங்களை அணிவது இன்னும் அதிக தொல்லைகளை உண்டுபண்ணுகிறது.” அந்த ஆபரணம் பற்களில் விரிசல் ஏற்படுத்தலாம் அல்லது கீறலை ஏற்படுத்தலாம்; பேச்சுக் கோளாறை உண்டாக்கலாம், தழும்பை ஏற்படுத்தும் திசுவை உருவாக்கலாம்; மேலும் ஒருவேளை விழுங்கப்பட்டால் சுவாசப் பாதையே அடைபடலாம்.
தயவுசெய்து போட்டி வேண்டாம்
330 சர்ச்சுகளை அங்கத்தினராகக் கொண்ட உலக சர்ச்சுகளின் கவுன்சில் (WCC), “மற்ற சர்ச் அங்கத்தினர்களை, தங்கள் சர்ச்சில் புதிய அங்கத்தினர்களாக ஆக்குவதற்காக சில சர்ச்சுகள் ‘போட்டிபோட்டுக் கொண்டு’ முயற்சி எடுப்பதை நிறுத்தும்படி அழைப்பு விடுத்திருக்கிறது” என்று இஎன்ஐ புல்லட்டின் அறிக்கை செய்கிறது. WCC, “தங்களுடைய மதப்பிரிவின் மீதான பற்றை மாற்றிக் கொள்ளும்படி ஏழை எளியோர், தனிமையிலிருப்போர், ஒதுக்கப்பட்டோர் ஆகியோரை கவருவதற்காக, . . . வளரும் நாடுகளில் ‘மனிதநேய உதவிகளைப்’ பயன்படுத்துவதை குறிப்பாக குறைகூறியது.” ‘சுவிசேஷத்திற்கு சாட்சி கொடுக்கும் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க செயலுக்கும் ஏற்றுக்கொள்ளப்படத்தகாத மதமாற்றும் செயலுக்கும்’ இடையிலுள்ள வித்தியாசத்தை அறிவதற்காக வழிகாட்டு குறிப்புகள் கொடுக்கப்பட்டன. மற்றொரு சர்ச்சை “அநியாயமாக குறைகூறுவது,” தங்களுடைய சர்ச்சும் நம்பிக்கையும்தான் உண்மையானவை என்பதைப் போன்று எடுத்துரைப்பது, மற்றொரு சர்ச்சில் சேர்ந்துகொள்ளும்படி மற்றவர்களை இணங்க வைப்பதற்காக கல்வி வாய்ப்புகளையோ மனிதநேய உதவியையோ அளிப்பது, வற்புறுத்தியோ மனசம்பந்தமான அழுத்தத்தை கொடுத்தோ அவர்கள் இணைந்திருக்கும் மதத்தை மாற்றிக் கொள்ளும்படி மக்களைத் தூண்டுவது, அதோடு “அவர்களை ‘மதமாற்றுவதற்காக’” அவர்களுடைய துயரத்தை அல்லது “அவர்களுடைய சொந்த சர்ச்சின் மீதுள்ள தவறான எண்ணத்தை” சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது ஆகியவை இரண்டாவதாக சொல்லப்பட்டதில் உள்ளடங்கியிருந்தன.
இத்தாலியில் வனாந்தரமயமாக்குதல்
சாதாரணமாக இத்தாலிக்கும் பாலைவனங்களுக்கும் அவ்வளவு சம்பந்தம் இல்லாதபோதிலும்கூட, பாலைவனத்திற்கு எதிரான போராட்டத்திற்காக ஒரு தேசிய கமிட்டியை அது நிறுவியுள்ளது. அதற்கான காரணம்? இத்தாலியின் வடக்கு நோக்கிய பகுதிகளில் நிலங்கள் படுவேகமாக வறட்சியடைந்து வருகின்றன. “கண்ணாடி அறை விளைவுக்கு காரணமான வாயுக்களை குறைப்பதற்கும் சில தீங்குவிளைவிக்கிற விவசாய முறைகளை மாற்றுவதற்குமான முன்யோசனைமிக்க ஒரு சுற்றுச்சூழல் திட்டம் இனிமேலும் அறிமுகப்படுத்தப்படாவிட்டால், வெறும் ஒருசில பத்தாண்டுகளிலே, 27 சதவீத [இத்தாலிய] நிலப்பகுதி பொட்டல் நிலமாக ஆகக்கூடும்” என்று லா ஸ்டாம்பா செய்தித்தாள் கூறுகிறது. ரோமில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாயத் துறையின் வனாந்தரமயமாக்குதலின் பேரிலான கருத்தரங்கில் இந்த எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டது. சிசிலி, சார்டீனியா, கலாப்ரியா, அபுலியா, பசிலிகாட்டா போன்ற இத்தாலியின் தெற்குப் பிரதேசங்கள் மட்டுமே இனிமேலும் ஆபத்துக்குரிய பகுதிகளாக குறிப்பிடப்படுகிறதில்லை; ஆனால் காலங்காலமாக செழித்துவிளங்கிய வடக்கிலுள்ள சில பகுதிகளும்கூட பாதிக்கப்பட்டிருக்கின்றன; அதோடு அவை இப்போது செழிப்பு குறைவானவையாக பதிவு செய்யப்படுகின்றன.
குழந்தைப் பருவ வயிற்றுப்போக்கிற்கு சிகிச்சையளித்தல்
“பிள்ளைகளுக்கு வரும் கடுமையான வயிற்றுப்போக்கை கிட்டத்தட்ட முற்றிலுமாக ஒழித்துக் கட்டுகிற ஒரு தடுப்பு மருந்தை வெனிசுவேலாவிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்” என்று காரகாஸின் த டெய்லி ஜர்னல் சொல்கிறது. “இந்தத் தடுப்பு மருந்து . . . ஒவ்வொரு ஆண்டும் வளரும் நாடுகளிலுள்ள ஐந்து வயதுக்கும் குறைவான வயதுள்ள சுமார் 8,73,000 பிள்ளைகளைக் கொல்லுகிற வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் ரோட்டாவைரஸிடமிருந்து காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.” ஐக்கிய மாகாணங்களிலும்கூட, இந்த வியாதியால் ஒவ்வொரு ஆண்டும் 1,00,000-க்கும் அதிகமான பச்சிளம் குழந்தைகளும் பாலர் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இந்தத் தடுப்பு மருந்தைப் பயன்படுத்தியதால் அந்த வைரஸுக்கு எதிராக 88 சதவீத பாதுகாப்பு கிடைத்துள்ளது. அதோடு கடுமையான வயிற்றுப் போக்கால் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறவர்களின் எண்ணிக்கையை 70 சதவீதமாக குறைத்திருக்கிறது என்று த நியூ இங்லாண்ட் ஜர்னல் ஆஃப் மெடிசன்-ல் பிரசுரிக்கப்பட்ட இந்த ஆய்வு குறிப்பிடுகிறது. இருந்தபோதிலும், இதிலும் ஒரு குறை உள்ளது. “இந்தச் சிகிச்சை மிக அதிகமாக தேவைப்படுகிற வளரும் நாடுகளில், அதாவது, ஒவ்வொரு ஆண்டும், உடல்நலத்திற்காக ஒரு நபருக்கு 20 டாலருக்கும் குறைவாக செலவழிக்கப்படுகிற நாடுகளில், இது பெரும் செலவு பிடிக்கிறதாக இருக்கலாம்” என்று த டெய்லி ஜர்னல் கூறுகிறது. இந்தத் தடுப்பு மருந்து மலிவான விலையில் கிடைக்கும்படி தயாரிக்கப்படும் வரை, வயிற்றுப்போக்கால் ஏற்படும் நீரிழப்பு, இழந்தநீரை திரவங்களால் பதிலீடு செய்யும் முறையை உபயோகித்து சிகிச்சையளிக்கப்பட வேண்டும். இந்த முறை 20 ஆண்டுகளாக மிகவும் பயன்தரத்தக்க முறையில் செயல்பட்டு வருகிறது.
கண்டுபிடிக்கப்பட்ட ஆலய ரசீது
“யாவேயின் ஆலயத்துக்கு மூன்று வெள்ளி சேக்கல் நன்கொடையாகக் கொடுக்கப்பட்டதற்கான ரசீதைப்போல் தோன்றுகிற” ஒன்று “சமீபத்தில் பழைய பொருட்கள் அங்காடியில் கண்டுபிடிக்கப்பட்டது” என்று பிப்ளிகல் ஆர்க்கியாலஜி ரிவ்யூ குறிப்பிடுகிறது. “இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றில் சாலொமோன் அரசனின் ஆலயத்தைப் பற்றிய பைபிளுக்கு அப்பாற்பட்ட குறிப்புகளில் இது மிகவும் பழமையானது. BYT YHWH, ‘ஆண்டவரின் [யாவேயின்] வீடு’ [என்ற வார்த்தைகள்] . . . பைபிளுக்கு அப்பாற்பட்ட எழுத்துப் பொறிப்புகளில் வெறுமனே ஒன்றில் மட்டுமே முழுமையாக இருப்பதாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.” அதோடு அதன் தெளிவற்ற சூழமைவால், அதன் அர்த்தம் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. 10.9-க்கு 8.6 சென்டிமீட்டரென்ற அளவிலுள்ள பொறிக்கப்பட்ட புதிய மண்பாண்டத்துண்டில் ஐந்து வரிகளும் 13 வார்த்தைகளும் அடங்கியுள்ளன; அவை தெளிவாகவும் எளிதில் படிக்க முடிந்தவையாகவும் இருக்கின்றன. பொ.ச.மு. ஒன்பதாம் நூற்றாண்டு என்பதாக தேதியிடப்பட்ட அது, மற்ற எழுத்துப் பொறிப்புகளைக் காட்டிலும் குறைந்தது நூறு ஆண்டுகள் பழமையானது; மேலும் அது வல்லுநர்களால் நம்பகத்தன்மையுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சேபா தேசத்து ராணியைக் குறித்த சர்ச்சை
எதியோபியாவில் அவள் மாகடா என்று அழைக்கப்படுகிறாள். ஏமனில் அவள் பெயர் பெல்கீஸ். பைபிளிலும் குர்ஆனிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறபடி அவள் சேபா தேசத்து ராணி என்றே நன்கு அறியப்பட்டிருக்கிறாள். ஒவ்வொரு நாடும் அவளை தங்கள் தேசத்தை சேர்ந்தவளாக உரிமை பாராட்டுகின்றன. அதோடு அவளுடைய கல்லறை சீக்கிரத்தில் அங்கு கண்டுபிடிக்கப்படும் என்றும் நம்புகின்றன; நிரூபணத்திற்காகத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களை தொடர்ந்து தோண்டும்படி உற்சாகப்படுத்துகின்றன. சேபா தேசத்து ராணியைப் பற்றிய ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த இடம் சுற்றுலா பயணிகளை மிகப் பெரிய அளவில் கவருவதாக இருக்கும்; மேலும் நாகரிகத்தோடு அந்த நாட்டுக்குள்ள பழமை வாய்ந்த தொடர்பைக் குறித்த உரிமை பாராட்டலை உறுதிப்படுத்துவதாகவும் இருக்கும். “எதியோபியாவிலும் ஏமனிலும் உள்ள பழங்கால கற்களில் தொன்மை வாய்ந்த சேபா ராஜ்யத்தைப் பற்றிய ஏராளமான பொறிப்புகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர், ஆனால், ஒன்றுகூட ஒரு மாகடாவைப் பற்றியோ பெல்கீஸைப் பற்றியோ குறிப்பிடுகிறதில்லை என்பது விநோதமாக உள்ளது” என்று த வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவிக்கிறது. அது தொடர்ந்து சொல்வதாவது: “பைபிள் இந்த விஷயத்தில் அதிக உதவி அளிக்கிறதில்லை. சேபா சாலொமோனுக்கு கொண்டுவந்த எல்லா பொன்னையும் வாசனைப் பொருட்களையும் அது விவரிக்கிறது; ஆனால், அவள் எங்கிருந்து வந்தாள் என்று அது குறிப்பிடுகிறதில்லை.”
பிணைய சுருள்கள்
இப்போது வெறும் 600 பேர் என்ற எண்ணிக்கைக்கு குறைந்துவிட்ட சமாரியர்கள், தங்களுடைய புனித புத்தகங்களை திரும்பப் பெற்றுக்கொள்வதற்கு 10 லட்சம் டாலரைப் பிணையத் தொகையாக கொடுக்கவேண்டும். முறையே 700, 400 ஆண்டுகள் பழமையானதாக சொல்லப்படுகிற இந்த இரண்டு சுருள்களும், மூன்று வருடங்களுக்கு முன்பு, நாப்லஸிலுள்ள வெஸ்ட் பேங்க் நகரத்தின் சமாரிய ஜெப ஆலயத்திலிருந்து திருடப்பட்டன. திருடர்கள் அந்தச் சுருள்களை நாடு கடத்தி, சமீபத்தில்தானே ஜோர்டானிலுள்ள அம்மானில் அவற்றை வெளிப்படுத்தினர்; அங்கே அவை சமாரிய மூப்பர்களால் பார்வையிடப்பட்டன. அவை எங்கே வைக்கப்பட்டிருந்தன என்பதை நன்கறிந்த ஒருவர்தான் அதை திருடியிருக்கவேண்டும் என்பதாக நம்பப்படுகிறது. சமாரியர்களில் பெரும்பாலானோர், தங்களுடைய புனித ஸ்தலமான, நாப்லஸுக்கு மேலேயுள்ள மலையுச்சியில் வாழ்கின்றனர். இங்கே தான் கடவுள், ஆபிரகாமிடம் அவருடைய மகன் ஈசாக்கை பலி செலுத்துமாறு கட்டளையிட்டார் என்பதாக அவர்கள் நம்புகின்றனர்.
[பக்கம் 29-ன் படத்திற்கான நன்றி]
நன்றி: Shlomo Moussaieff