டால்மென்களின் விளங்கா புதிர்—ஏன், எப்போது, எவ்வாறு?
நெதர்லாந்திலிருந்து விழித்தெழு! நிருபர்
‘டால்மென் என்றால் என்ன?’ என்று ஒருவேளை நீங்கள் கேட்கலாம். இது ஒரு வரலாற்றுக்கு முந்திய காலக் கல்லறைப்படிவமாக பொதுவாக பயன்படுத்தப்பட்டது; இதில் பொதுவாக இரண்டு அல்லது மூன்று கனமான செங்குத்து கற்களும் அவற்றின்மேல் ஒரு தட்டையான கல்லும் இருப்பதால் பெரும்பாலும் ஒரு அறைபோல் இருக்கும். அவை மேற்கு, வடக்கு, தெற்கு ஐரோப்பாவில் அதிகமாகக் காணப்படுகின்றன.
ட்ரென்டா என்ற டச்சு பகுதியில் டால்மென்கள் கண்ணைக் கவரும், மிக அழகான இடங்களில் அமைந்திருக்கின்றன. பிரபலமான ஓவியர், வின்சன்ட் வான் கோக் ஒரு கடிதத்தில் இவ்விதம் குறிப்பிட்டார்: ‘ட்ரென்டாவின் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது; எந்நாளும் இங்கேயே வாழ முடியாது என்றால் இந்த இடத்தை நான் பார்த்திருக்கவே கூடாது.’ ட்ரென்டாவிலுள்ள டால்மென்களைப் பார்ப்பதற்காக வரும் இயற்கை அழகை ரசிப்பவர்களும், புதைபொருள் ஆராய்ச்சியாளர்களும் தாங்கள் எதிர்பார்க்கும் அத்தனை விஷயங்களையும் ஒருங்கே காண்கிறார்கள்.
தொன்மையான கற்கள் நம்மை எவ்விதத்தில் கவரக்கூடும்? இதற்கான ஒரு விடை, வித்தியாசமாக இருப்பவற்றை பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்னும் ஆவல். பூர்வீகத்தில் வாழ்ந்த ஜனங்கள் ஏன் இவ்வளவு முயற்சி எடுத்து, இப்படிப்பட்ட கற்களை இடம்விட்டு இடம் நகர்த்தி, வடிவமைத்து, அவ்வளவு கனமானவற்றை தூக்க வேண்டும்? சில கற்கள் பல டன் எடையுடன் இருக்கின்றன. அக்காலத்திலே, கனமுள்ளதை தூக்குவதற்கு நவீன நாளில் இருப்பதுபோல் கிரேன் வசதியெல்லாம் கிடையாது! அப்படியென்றால் டால்மென்களைப்பற்றி நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்?
பெருங்கற்களாலான நினைவுச் சின்னங்கள்
டால்மென்கள் பெருங்கற்களாலான நினைவுச் சின்னங்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றன (கிரேக்க மொழியில் “மெகாலித்” என்பதற்கு “பெருங்கல்” என்பது பொருள்). ஒருவேளை பிரான்ஸ் தேசத்திலுள்ள மென்ஹிர்களைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்; இவை பிரிட்டனி பழங்குடியினரின் மொழியில் அவ்விதம் பெயரிடப்பட்டிருக்கிறது, அதற்கு “நீண்ட கல்” என்று பொருள். பலீரிக் தீவான மினோர்க்காவில் டவுலாஸ் (மேஜைகள்) என்ற பெருங்கல் திட்டைகள் இருக்கின்றன; அவை, ஒரு செங்குத்தான கல் மீது ஒரு பெரிய கல் கிடைநிலையில் பொருத்தப்பட்டு, ஆங்கில எழுத்தான T போன்ற ஒரு பெரிய உருவமாகத் தோற்றமளிக்கின்றன.
இங்கிலாந்திலுள்ள ஸ்டோன்ஹென்க் என்ற இடத்தில் மிகப்பெரிய கற்களால் செய்யப்பட்டிருக்கும் வட்ட வடிவமான அமைப்பைப் பார்த்து ஜனங்கள் அதிசயப்படுகின்றனர்; அவற்றில் சில கற்கள் நான்கு டன் அளவு எடையுடன் இருக்கின்றன, அவற்றை 300 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திலிருந்த வேல்ஸிலுள்ள பிரஸலி மலைகளிலிருந்து கொண்டு வந்திருக்கின்றனர். மிஸ்டரீஸ் ஆஃப் மான்கைன்ட்—எர்த்ஸ் அன்எக்ஸ்பிளைன்ட் லான்ட்மார்க்ஸ் என்ற நேஷனல் ஜியோகிராஃபிக் சொஸைட்டி புத்தகத்தில் இவ்விதம் சொல்லப்படுகிறது: “அந்த நினைவுச் சின்னம் [ஸ்டோன்ஹென்க்] . . . ஒரு கோயிலாக இருந்திருக்க வேண்டும்; ஆகாயத்தில் நித்தியமாக சுழன்று வரும் சூரியன், சந்திரன், நட்சத்திரங்களின் இயக்கங்களை பிரதிபலித்துக் காட்டியிருக்கவேண்டும்; வேறு எதற்காகவும் இது கட்டப்படவில்லை.”
இன்று இருக்கும் டால்மென்களை பூர்வீக கல்லறை நினைவுச் சின்னத்தின் ஒரு எஞ்சிய பகுதி என்றே குறிப்பிடலாம்; ஏனென்றால் பூர்வீகத்தில் இப்படிப்பட்ட பிரமாண்டமான பெருங்கற்களெல்லாம் பெரிய மண்மேட்டின் அடியில் அல்லது நிலத்தின் அடியில் புதைக்கப்பட்டிருந்தன; ஆகவே அந்தக் கற்களை பார்க்க முடியாது. டால்மென்கள் சமுதாய கல்லறைகளாக இருந்தன என்பதைக் கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்தின. சில அத்தாட்சிகள் காட்டுவது என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட டால்மெனில் நூற்றுக்கும் அதிகமான ஆட்கள் புதைக்கப்பட்டிருந்தனர்—அது, உண்மையில் ஒரு கல்லறை தோட்டமாகவே விளங்கியது!
நெதர்லாந்தில் 53 டால்மென்கள் இந்நாள்வரை பாதுகாக்கப்பட்டிருக்கின்றன; அவற்றில் 52 ட்ரென்டா பகுதியில் அமைந்திருக்கின்றன. கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் அவை குறிக்கோளில்லாமல் அமைக்கப்படவில்லை; அவற்றில் பெரும்பாலானவை கிழக்கு மேற்காக அமைக்கப்பட்டு, அவற்றின் வாசல் தெற்கு நோக்கி இருக்கின்றன; ஆகவே அதன் அமைப்பிற்கும் சூரியன், பருவநிலைக்கேற்ப பூமத்திய ரேகைக்கு வடக்கிலோ அல்லது தெற்கிலோ மையங்கொண்டிருப்பதற்கும் (seasonal positions of the sun) இடையே ஏதோ தொடர்பிருக்கிறது என்று காட்டுகிறது. பூர்வீக கட்டடப் பணியாட்கள் ஆதாரத்திற்கு செங்குத்துக் கற்களையும், பெரிய தட்டை கற்களையும் பயன்படுத்தினர்; பெருங்கற்களுக்கு இடையே ஏற்படும் இடைவெளிகள் துண்டு கற்களால் அடைக்கப்பட்டன. தரையின் தளவரிசை, கற்களால் அமைக்கப்பட்டது. நெதர்லாந்திலிருக்கும் மிகப்பெரிய டால்மென், பார்கர் என்ற கிராமத்திற்கு அருகில் இருக்கிறது; அது 22 மீட்டர் நீளத்துடன் இன்னும்கூட 47 கற்களுடன் காணப்படுகிறது. அதில் இருக்கும் ஒரு தட்டை கல் மூன்று மீட்டர் நீளத்துடன் இருபது டன் எடையுடன் காட்சியளிக்கிறது! இவையெல்லாம் அநேக கேள்விகளை எழுப்புகின்றன.
எப்பொழுது? யாரால்? எவ்விதம்? ஏன்? கட்டப்பட்டன?
இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் மிகவும் தெளிவற்றிருக்கின்றன; அச்சமயத்தில் எழுதப்பட்ட சரித்திர ஆதாரங்கள் எதுவும் கிடையாது. ஆகவே டால்மென்களை விளங்கா புதிரான நினைவுச் சின்னங்கள் என்று அழைப்பது பொருத்தமாகவே இருக்கும். அப்படியென்றால் அவற்றைப்பற்றி நாம் அறிந்தவை யாவை? இவற்றைப் பற்றி என்ன சொல்லப்படுகின்றன?
1660-ஆம் ஆண்டு, ட்ரென்டாவிலுள்ள சிறு நகராகிய குஃபாடன் என்ற இடத்தில் வசித்த “ரெவரன்ட்” பிகார்ட் என்பவர் தான் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தைப்பற்றி குறிப்பிடும்போது, அவை அரக்கர்களால் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்தார். அதற்கு பின்னர் உள்ளூர் அதிகாரிகள் இந்தக் கல்லறைகளில் அக்கறை காட்ட ஆரம்பித்தனர். அக்காலத்தில் அந்தக் கற்களை எடுத்து நீர்க்கால்களுக்கு கரைகட்டவும், சர்ச்சுகள், வீடுகள் ஆகியவற்றைக் கட்டவும் தொடங்கியபடியால் டால்மென்களை பாதுகாக்க, ட்ரென்டா லேன்ட்ஸ்கேப் அட்மினிஸ்ட்ரேஷன், 1734-ஆம் வருடம் ஜூலை 21-ஆம் தேதி ஒரு சட்டத்தை ஏற்படுத்தியது.
1912-ஆம் ஆண்டுவரை பல டால்மென்கள் நிபுணர்களால் முழுமையாக பரிசோதிக்கப்படவேயில்லை. பானை துண்டுகள், ஆயுதங்கள் (கற்கோடாலிகளின் தலைபாகங்கள், அம்புகளின் இரும்பு பாகங்கள்), ஆபரணமாக உபயோகிக்கப்பட்ட அம்பர் மணிகள் போன்றவை சில டால்மென்களில் கிடைத்தன, ஆனால் மணலான நிலத்தில் சரியாக பாதுகாக்கப்படாததால் சில எலும்புகளே கிடைத்தன. சில சமயங்களில் 600 பானைகளின் துண்டுகள் வரை கிடைத்தன. ஒரு நபருக்கு இரண்டு அல்லது மூன்று பானைகளில் உணவு வழங்கப்படுவதாக ஊகித்தாலும், சில கல்லறைகளில் அநேக ஜனங்களை அடக்கம் செய்திருக்கின்றனர் என்பது இதிலிருந்து தெரிகிறது.
தொடக்க காலத்தில் ஐஸ் கட்டிகள் ஸ்கான்டினேவியாவிலிருந்து தாறுமாறாக நகர்ந்த சமயத்தில் அவற்றால் இடம்பெயர்ந்த பாறைகளால் டால்மென்கள் கட்டப்பட்டன என்று விஞ்ஞானிகள் உரிமை பாராட்டுகிறார்கள். புனல் வடிவ குவளைகளை உபயோகித்த விவசாயிகளின் காலத்தில், அவர்களால் கட்டப்பட்டது என்றும் ஊகிக்கப்படுகிறது; இப்படிப்பட்ட குவளைகள் கிடைத்ததால் “புனல் வடிவ குவளை” கலாச்சாரம் என்று அவர்கள் கலாச்சாரம் அழைக்கப்பட்டது.
எவ்விதம் கட்டப்பட்டது என்பதை ஊகித்த ஒரு கருத்து இவ்விதம் குறிப்பிடுகிறது: “அதிக எடையுள்ள பாறைகள் கட்டைகளால் செய்யப்பட்ட உருளைகளில் வைத்து தோல் கயிறுகளால் இழுத்துவரப்பட்டன. தட்டையான கற்களை மேலே இழுத்து செல்ல மணல், களிமண் ஆகியவற்றால் ஆன ஒரு சாய்வுதளம் அமைக்கப்பட்டிருக்கவேண்டும்.” ஆனால் எவ்விதம் இது செய்யப்பட்டது என்பது யாருக்கும் நிச்சயமாய் தெரியாது. சாதாரணமாகப் புதைப்பதைப்போல், மரித்தவர்கள் ஏன் புதைக்கப்படவில்லை? இறந்தபின் வாழ்க்கையைப்பற்றி, அதைக் கட்டியவர்களுக்கு என்ன நம்பிக்கை இருந்தது? கல்லறையில் ஏன் கலை வேலைப்பாடுடைய பொருட்கள் வைக்கப்பட்டன? ஆராய்ச்சியாளர்களால் இதற்கான பதில்களை ஊகிக்க மட்டுமே முடியும். ஏனென்றால் இந்த டால்மென்கள் வெகு காலத்திற்கு முன்பே கட்டப்பட்டதால் இவை துல்லியமாக எப்பொழுது, யாரால், ஏன், எவ்வாறு கட்டப்பட்டன என்பதை எல்லாம் சொல்லமுடியாது.
தேவன் குறித்திருக்கும் காலத்தில் மரித்தவர்கள் உயிர்த்தெழுந்து வரும்போது, அவர்களில் சிலர் இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கலாம். (யோவான் 5:28; அப்போஸ்தலர் 24:15) கடைசியாக, டால்மெனை கட்டியவர்கள் தாங்கள் எப்பொழுது வாழ்ந்தார்கள் என்பதையும், அவர்கள் யார் என்பதையும், ஏன் இப்படிப்பட்ட ஆச்சரியப்படத்தக்க நினைவுச் சின்னங்களை கட்டினார்கள், எப்படிக் கட்டினார்கள் போன்ற தகவல்களையும் வெளிப்படுத்துவார்கள்.
[பக்கம் 25-ன் படம்]
ஸ்பெய்னிலிருக்கும் மினோர்க்காவிலுள்ள ஒரு டவுலா
[பக்கம் 25-ன் படம்]
நெதர்லாந்தில் ஹவல்டாவிற்கு அருகேயுள்ள டால்மென்
[பக்கம் 26, 27-ன் படங்கள்]
ஸ்டோன்ஹென்க், பிரிட்டன்
கீழே: நெதர்லாந்தில் பார்கர் அருகேயிருக்கும் பெரிய டால்மென்
[பக்கம் 26-ன் படங்கள்]
நெதர்லாந்தில் ச்சானார்ட் என்ற கிராமத்திற்கு அருகில் மறுபடியும் கட்டப்பட்ட டால்மென்; இதில், மண்மேட்டையும் கற்கள் வெளியே தெளிவாக தெரிவதையும் கவனிக்கலாம்
[பக்கம் 27-ன் படங்கள்]
நெதர்லாந்தில், ஏம்மென் (ச்சமரஸ்) என்ற இடத்தில் இருக்கும் நீண்ட கல்லறை