படகோனியாவில் ஸ்வெட்டர் தயாரித்தல்
அர்ஜன்டினாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
“எனக்கு ரொம்ப குளுருது!” மித வெப்ப நாடுகளில் இந்த வார்த்தைகளை ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் யார்தான் சொல்லாமல் இருந்திருப்பார்? அதைத் தொடர்ந்து, ‘என் ஸ்வெட்டர் எங்க?’ என்று தொடர்ந்து கேட்பார் என்று எதிர்பார்க்கலாம்.
ஸ்வெட்டர் அணியும் லட்சக்கணக்கான ஆட்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், அதை எப்படி செய்கிறார்கள் என்று எப்பொழுதாவது நினைத்திருக்கிறீர்களா? கம்பளியிழை எவ்விதம் நூற்கப்படுகிறது? எவ்விதம் அவற்றிற்கு எவ்விதம் சாயம் ஏற்றப்படுகிறது? இங்கே அர்ஜன்டினாவில் இந்தியப் பழங்குடியினர் இவற்றையெல்லாம் தங்கள் கைகளாலேயே செய்துவிடுகின்றனர். நாம் அவர்களை சந்தித்து எப்படி இவற்றைச் செய்கிறார்கள் என்பதை கவனிக்கலாம்.
பழம் பாணியில் ஸ்வெட்டர் செய்தல்
அர்ஜன்டினாவில் தென் படகோனியா பகுதியில், அருக்கானிய ஜனங்களில், மபுச்சி என்ற இந்திய பழங்குடிப் பிரிவினர் வாழுகிறார்கள். அவர்கள் பாரம்பரிய முறைகளைக் கையாண்டு கம்பளியிழைகளை நூற்கவும் அவற்றிற்கு சாயமிடவும் செய்கிறார்கள். நவம்பர் மாத கடைசியில் அல்லது டிசம்பர் மாத ஆரம்பத்தில், தெற்கு அரைக்கோளத்தின் வசந்த காலத்தின்போது, விசேஷித்த இரும்பு கத்தரியால், அவர்கள் செம்மறியாடுகளை மயிர்க்கத்தரிக்கிறார்கள். மயிர்க்கத்தரிப்பது என்பது ஒரு கலை, அது கண்டு களிப்பதற்கு தகுந்ததே!
செம்மறியாடுகளிலிருந்து கம்பளியிழை எடுக்கப்படும்போது அதில் இறுகிய மண், புல் வகைகள், செடிகள் இருக்கும் என்பது எதிர்பார்க்கத்தக்கதே. ஆகவே அவை மிக சுத்தமாகக் கழுவப்படவேண்டும். இதைச் செய்வதற்கு சுடு தண்ணீரில் முக்கி பின்னர் வெயிலில் உலர்த்த வேண்டும். அதன்பின் மிஞ்சியிருக்கும் கழிவுப் பொருட்களெல்லாம் நீக்கப்படவேண்டும். இதைத்தான் எஸ்கர்டடொ அல்லது களையெடுப்பது என்று அழைக்கின்றனர். இந்தச் செயல் சரியாக செய்யப்பட்டால் கம்பளியிழை சுத்தமாகவும், உலர்ந்ததாகவும், மிக மென்மையாகவும் இருக்கும். அப்படியென்றால் அந்த ரோமம் பின்னப்படும் கம்பளித்திரியாக அல்லது நூலாக மாற்றப்படுவதற்கு தயார் என்று அர்த்தம்.
நூல் தயாரிப்பதற்கு இரண்டு பாரம்பரிய முறைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றில் ஒரு தக்ளி பயன்படுத்தப்படுகிறது. (படம் 1-ஐக் காண்க.) நூல்நூற்கும் பெண், கம்பளியிழையை தன்னுடைய ஒரு கையால் தொடையில் தேய்த்து, முறுக்கி, தக்ளியில் சுற்றி அதை நூலாக்குகிறார். அந்த நூல் தக்ளியில் திரட்டப்படுகிறது. தக்ளியில் எந்த அளவிற்கு கம்பளிநூல் சுற்றப்படுகிறதோ அதைப் பொருத்து நூலின் கனம் கட்டுப்படுத்தப்படுகிறது.
இன்னொரு நூல்நூற்கும் முறையில் நூல்நூற்கும் ராட்டை பயன்படுத்தப்படுகிறது, நூற்பவர் அதைத் தன்னுடைய காலில் உள்ள ஒரு பெடலால் இயக்குகிறார். சக்கரத்தில் ஒரு துவாரம் வழியாக கம்பளியிழை செலுத்தப்படுகிறது, நூற்பவர் அதன் கனத்தை கட்டுப்படுத்துகிறார். (படம் 2-ஐக் காண்க.) இவ்விதம் நூல் தயாரிக்கப்பட்டப்பின் அதனைக் கம்பளிப் பந்தாக்க முடியும்; இதைத்தான் பெரும்பாலான பெண்கள் வாங்கி உபயோகிக்கின்றனர். ஆனால் கம்பளிக்கு, வித்தியாசமான சாயங்கள் எவ்விதம் ஏற்றப்படுகின்றன? அதை எவ்விதம் செய்கிறார்கள்?
மபுச்சி இனத்தவர் சில வேர்கள் அல்லது செடிகளை சிறிதளவு உப்பு நீரில் சுமார் 30 நிமிடங்கள் கொதிக்க வைப்பதன் மூலம் சாயங்களைத் தயாரிக்கின்றனர். இது அ.ஐ.மா.-வின் அரிஜோனாவிலிருக்கும் சில இந்தியர்கள் தாங்கள் நெய்யும் கம்பளங்களுக்கு சாயம் முக்குவதை ஒத்திருக்கிறது. அர்ஜன்டினாவில், மஞ்சள் நிறத்திற்கு மபுச்சி இனத்தவர் மிச்சை புதர்ச்செடியின் வேர்களை கொதிக்க வைக்கின்றனர்; பெர்பெரிஸ் டார்வானி (Berberis darwinii) செடியை இந்தியர்கள் அவ்விதம் அழைக்கின்றனர். காவி நிறத்தில் வெள்ளைப் புள்ளிகள் ஏற்படுத்த ராடால் புதர்ச்செடிகளின் இலைகளை உபயோகிக்கின்றனர்; அல்லது காட்டு வால்நட் வகையை உபயோகிக்கின்றனர். சிகப்பு நிறத்திற்கு அவர்கள் பீட் உபயோகிக்கின்றனர். இது சிரமமான முறையாக இருந்தாலும் இதன் சாயங்கள் அவ்வளவு சுலபமாக வெளுத்துப் போவது கிடையாது. இப்பொழுது நூல்கள் எல்லாம் சாயம் முக்கப்பட்டபடியால் இனி நாம் ஸ்வெட்டர் பின்ன ஆரம்பிக்கலாம்.
பின்னுதல் —வித்தியாசமான முறைகளில்
பல நூற்றாண்டுகளாக பெண்கள் ஊசிகளால் கம்பளி நூலை துணிபோல் பின்னியிருக்கின்றனர்; அதைப் பின்னர் உடையாக தைக்க இயலும். காலுறைகள், சட்டைகள், குழாய் வடிவங்கள் ஆகியவற்றை பின்ன நான்கு ஊசிகளைப் பயன்படுத்தலாம். கிட்டத்தட்ட பொ.ச. 200-ல் பின்னுதல் அரேபியாவில் ஆரம்பித்திருக்கலாம் என்று ஒரு மூல ஆதார ஏடு குறிப்பிடுகிறது. இந்தத் திறமை பின்னர் ஐரோப்பாவிற்கும், அதைத் தொடர்ந்து ஸ்பானியர்கள் பின்னும் திறமையை தென் மற்றும் மத்திய அமெரிக்காவிற்கு 16-வது நூற்றாண்டில் அறிமுகப்படுத்தினர்; ஆனால், இந்தக் கலையை அங்கிருந்த ஒரு சில நாட்டுப்புறத்தவர் அதற்கு முன்பே அறிந்தவர்களாக இருந்திருக்கவேண்டும்.
நம்முடைய ஸ்வெட்டர் பின்னும் நண்பர் இவ்விதம் கேட்கிறார்: “உங்க ஸ்வெட்டர் எவ்வளவு கனமா இருக்கணுங்க?” அந்தப் பதில் ஊசிகளின் கனத்தையும் அவர் உபயோகிக்கும் கம்பளி நூலின் கனத்தையும் தீர்மானிக்க உதவும். அதைத் தொடர்ந்து வரும் கேள்வி, “உங்களுக்கு எந்தக் கலர் வேணும்?” இது தெரிந்தபின் அவர் பின்ன ஆரம்பித்துவிடுவார்.
பின்னும் கலை இரண்டுவிதமான தையலின் அடிப்படையில் சார்ந்திருக்கிறது என்ற விவரம், இதைப்பற்றிய விஷயம் தெரியாதவரை ஆச்சரியப்படவைக்கும்—சாதாப் பின்னல், இதனை ப்ளைன் (plain) என்றும், மணிப் பின்னல், இதனை பர்ல் (purl) என்றும் அழைக்கப்படுகிறது. பர்ல் என்பது தலைகீழாக பின்னப்பட்ட ப்ளைன் பின்னலே, அது நேர் வரி அமைய உதவியாக இருக்கிறது. இந்த இரண்டு வித்தியாசமான பின்னல்களை சேர்த்து உபயோகிப்பதன் மூலம் பல்வேறுபட்ட மாடல்களில் கம்பளியை உருவாக்கலாம்.
நமக்காக ஸ்வெட்டர் பின்னுபவர், அதைப் பகுதி பகுதியாகப் பின்னி அதன்பின் ஒன்றாக சேர்த்து இணைக்கிறார்; முன்புறம், பின்புறம், கைகள், கழுத்துப்பகுதி என பின்னி முடிக்கிறார். உடை தயாரிக்க பல மணிநேரம் அல்லது நாட்கள்கூட ஆகும் என்பது உண்மைதான். ஆகவே, இப்படியொரு பரிசு உங்களுக்குக் கிடைத்தால் அதை சாதாரணமாக எடைபோட்டுவிடாதீர்கள்! இதைச் செய்வதற்கு யாரோ ஒருவர் மிகப் பொறுமையாக பணி செய்திருக்கிறார்.
நவீன முறைகள்
தொழில் புரட்சியைத் தொடர்ந்து பல இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன; அவை ஆயிரக்கணக்கான ஸ்வெட்டர்களை வெகு வேகமாக பின்னக்கூடியவை. இன்றிருக்கும், இப்படிப்பட்ட தொழிற்சாலை இயந்திரங்களெல்லாம் கம்ப்யூட்டரால் கட்டுப்படுத்தப்படுகின்றன. அநேக பெண்கள் வீட்டில் ஒரு சிறிய இயந்திரத்தை உபயோகிக்கின்றனர், இது நேரத்தை மிச்சப்படுத்துகின்றது.
படகோனியாவில் ஸ்வெட்டர் பின்னுவது இன்றும் ஒரு குடும்ப தொழிலாகவே இருக்கின்றது; அந்த வேலையில், தாய், பின்னும் பணியைச் செய்கிறார், கணவனும் பிள்ளைகளும் ஸ்வெட்டரைச் செய்து முடிப்பதில் உதவுகின்றனர். அநேகமாக, அவர்கள் வீட்டில் பின்னும் இயந்திரத்தை உபயோகிக்கின்றனர்; பின்பு அவ்விதம் தயாரித்தவற்றை கம்பளி உடைகள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அவர்கள் விற்றுவிடுகின்றனர். இந்த வருமானம் குடும்ப செலவிற்கு உதவியாக இருக்கின்றது.
நீங்கள் ஒரு ஸ்வெட்டர் வாங்கப் போகிறீர்களா?
நீங்கள் ஸ்வெட்டர் வாங்குவதாக இருந்தால் எதையெல்லாம் கவனிக்க வேண்டும்? உங்களுக்கு கையால் பின்னப்பட்ட ஸ்வெட்டர் வேண்டும் என்றால் அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும், ஆகவே வாங்கும்போதே விலைக்கு ஏற்ற நல்ல பொருளை வாங்க முயற்சிக்கலாம். உங்களுடைய தேவைக்கேற்ற ஸ்வெட்டரை ஜாக்கிரதையாகத் தேர்ந்தெடுத்து, அதன் தரத்தை சோதியுங்கள். இதை நீங்கள் எவ்விதம் செய்யலாம்? உடையின் விளிம்புகள் எவ்விதம் முடிக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் அதன் கழுத்துப் பகுதி சரியாக இருக்கிறதா என்பதையும் சோதியுங்கள். கம்பளி நூலின் நயத்தையும் கூட்டமைவையும் சோதியுங்கள். அது 100 சதவீதம் சுத்த கம்பளிதானா? அதில் கலப்படமிருக்கிறதா? அதை இழுத்தால் நூல் நெகிழ்ந்துவிடுகிறதா இழுத்தபடியே இருக்கிறதா, அல்லது முன்பிருந்த நிலைக்குத் திரும்புகிறதா? பிறகு, நீங்கள் ஒவ்வொருமுறை ஸ்வெட்டர் அணியும்போதும், குறிப்பாக அது படகோனியாவில் செய்யப்பட்டிருந்தால் அது ஸ்வெட்டராக உருபெற செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட எல்லா வேலையையும் நினைத்துப்பாருங்கள்!
[பக்கம் 22-ன் வரைப்படம்]
தென் அமெரிக்கா
அர்ஜன்டீனா
படகோனியா
[படத்திற்கான நன்றி]
Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.
[பக்கம் 23-ன் படங்கள்]
1. தக்ளியை பயன்படுத்தி நூல் நூற்றல்
2. நூல்நூற்பதற்கு ராட்டையைப் பயன்படுத்தும் முறை வேகமானது
3. நூல்நூற்கும் ராட்டையில் கம்பளியிழை அனுப்பப்படுவதன் பெரிதாக்கப்பட்ட படம்
4. பாரம்பரிய முறையில் பின்னுதல்
5. ஸ்வெட்டரின் முன்பக்கம்
6. கம்ப்யூட்டரால் கட்டுப்படுத்தப்படும் நவீன இயந்திரம்