விறகுக்கட்டை—எதிர்காலம் எரித்தழிக்கப்படுகிறதா?
நைஜீரியாவிலுள்ள விழித்தெழு! நிருபர் கூறியது
சூரியன் அஸ்தமித்து ஆப்பிரிக்க வானத்தை சிவக்கவைக்கிறது. சம்பா தன்னுடைய கணவனுக்கும் தங்களுடைய பிள்ளைகளுக்கும் அரிசி வேகவைக்கிறாள். அவள் கரண்டியைப் பயன்படுத்தி ஒரு வாளியிலிருந்து தண்ணீரை மொண்டெடுத்து, புகை படிந்து கருகியுள்ள ஓர் அலுமினிய பாத்திரத்திற்குள் அதைக் கொட்டுகிறாள். அந்தப் பாத்திரத்தின்கீழ் மூன்று தடித்த விறகுக் கட்டைகளைக்கொண்டு நெருப்பு மூட்டப்படுகிறது.
பக்கத்தில் நிறைய விறகுக்கட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன. சம்பா மலைகளிலிருந்து வண்டிகள் மூலம் கொண்டுவந்து விற்கும் ஆட்களிடமிருந்து விறகுக்கட்டை வாங்குகிறாள். விறகுக்கட்டை மிகவும் தேவையாயிருக்கிறது. விறகில்லாமல் நெருப்பில்லை. நெருப்பில்லாமல் நீங்கள் அரிசியை வேகவைக்க முடியாது.
சம்பாவின் மூத்த மகன் சொல்கிறான்: “விறகில்லையென்றால், நாங்கள் சாப்பிடுவது கிடையாது.” மலைகளில் உள்ள பணக்காரருடைய வீடுகளை நோக்கி சைகைக் காட்டுகிறான். “அந்த வீடுகளில் மின்சாரம் இருக்கிறது. மின்சாரத்தினால் வேலைசெய்யக்கூடிய அடுப்புகளும் கேஸினால் வேலைசெய்யும் அடுப்புகளும் அங்கு உள்ளன.” அவன் அடுப்பைத் திரும்பிபார்த்து, வெறுப்போடு, “நாங்கள் விறகுக்கட்டைகளை உபயோகிக்கிறோம்,” என்று சொல்லுகிறான்.
இதைப் பொருத்தமட்டில், அநேகருக்கு அதேவிதமான சூழ்நிலைமைகள்தான் இருக்கின்றன. வளர்ந்துவரும் உலகில் ஒவ்வொரு 4 ஆட்களில் 3 பேர் சமைப்பதற்கும் சூடு பண்ணுவதற்கும் விறகுக்கட்டைகளே தங்களுடைய ஒரே மூலமாக அதை நம்பியிருக்கின்றனர். ஆனால் விறகுக்கட்டைகள் குறைபாடு மிகவும் அதிகமாயிருக்கிறது.
ஐக்கிய நாட்டுச் சங்கத்தின் உணவுப்பொருள், வேளாண்மை அமைப்பின் (FAO) பிரகாரம், விறகுக்கட்டை நெருக்கடி அளவு உண்மையிலேயே கடுமையாயிருக்கிறது. வளர்ந்துவரும் நாடுகளில் சுமார் 100 கோடி மக்கள் விறகுக்கட்டை குறைபாட்டை எதிர்ப்படுகின்றனர். தற்போதைய போக்கு தொடர்ந்து நீடிக்குமேயானால், இந்த எண்ணிக்கை எளிதில் இந்த நூற்றாண்டின் முடிவுக்குள்ளாக இரண்டு மடங்கு ஆகிவிடும். ஐக்கிய நாட்டுச் சங்கத்தின் உணவு, வேளாண்மை அமைப்பின் பிரதிநிதி ஒருவர் இவ்வாறு கூறினார்: “உலகில் பசியுள்ளோருக்கு உணவை சமைத்துச் சாப்பிட எரிபொருள் இல்லையென்றால், அவர்களுக்கு அதைக் கொடுப்பதில் எந்தவொரு பிரயோஜனமுமில்லை.”
ஏன் இந்தக் குறைபாடு?
பூர்வ காலங்களிலிருந்தே மனிதவர்க்கம் எரிபொருளாக விறகை உபயோகித்து வந்திருக்கிறது. காரணம்? விறகு மிக எளிதில் கிடைக்கிறது. அதைப் பொறுக்க ஒரு விலையுயர்ந்த சாதனமோ நுண்மையான தொழில்நுட்பமோ உங்களுக்குத் தேவையில்லை. அதை அதிகமாக தவறாக உபயோகிக்காமலிருந்தால், புதிய மரங்கள் வளர்ப்பதனிமித்தம் அது தொடர்ந்து கிடைக்கும். விறகை உபயோகித்து சமைக்கவும் சூடுப்படுத்தவும், அடுப்புகளும் சூடுண்டாக்கும் சாதனங்களும் தேவையில்லை. மேலும் பக்கத்திலிருக்கும் மரத்தைப்போல விறகு அவ்வளவு எளிதில் இலவசமாக கிடைப்பது வசதியாயிருக்கிறது. கடந்த இருநூறு வருடங்களாகத்தான் உலகிலுள்ள பணக்கார நாடுகள் கேஸ், நிலக்கரி, எண்ணெய் போன்ற மற்ற எரிபொருளை உபயோகிக்கத் தொடங்கியிருக்கின்றனர். மற்ற நாடுகள் விறகையே தொடர்ந்து உபயோகிக்கின்றன.
இன்றுள்ள இந்தப் பிரச்னைக்கு முக்கியமான காரணமென்னவென்றால், திடீரென ஏற்பட்ட மக்கள்தொகை வளர்ச்சியே ஆகும் என்று சில வல்லுநர்கள் கூறுகின்றனர். மக்கள் எண்ணிக்கையில் அதிகரிக்க, குடியிருப்பை விரிவாக்கவும் வேளாண்மையை அதிகப்படுத்தவும், தொழிற்சாலைக்கு மரக்கட்டை மற்றும் எரிபொருளைக் கொடுக்கவும் காடுகள் அழிக்கப்படுகின்றன. பெரும்பாலும் ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியிலும் அநேக காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. வட அமெரிக்காவும் ஐரோப்பாவும் அப்பேர்ப்பட்ட நிலையை அனுபவித்தன.
ஆனால் இன்றைய மக்கள்தொகை பீதிதரும் வேகத்தில் வளர்ந்துவருகிறது. இப்பொழுதே இந்தக் கிரகத்தில் 550 கோடி மக்கள் வாழ்கின்றனர். வளர்ந்துவரும் நாடுகளில், மக்கள்தொகை ஒவ்வொரு 20 முதல் 30 வருடங்களுக்கு இரண்டு மடங்கு அதிகமாகி வருகிறது. மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க, விறகின் தேவையும் அதிகரிக்கிறது. பசிதணியாத ஒரு பேருருகொண்ட காடு-உண்ணும் மிருகமாக, ஒவ்வொரு நாளும் உருவத்தில் பெரிதாகி, பசி அதிகரித்துவரும் ஒரு மிருகத்தைப்போல மக்கள்தொகை ஆகியிருக்கிறது. இவ்வாறு, விறகுக்கட்டையின் அடுத்தச் சரக்கு வருவதற்குள் பழைய சரக்கு தீர்ந்துவிடுகிறது. ஐக்கிய நாட்டுச் சங்கத்தின் உணவுப்பொருள், வேளாண்மை அமைப்பின் பிரகாரம், 26 நாடுகளிலுள்ள பத்து கோடி மக்களுக்கும் மேற்பட்டோர், தங்களுடைய மிகவும் அடிப்படையான தேவைகளை பூர்த்திசெய்துகொள்வதற்கு ஏற்கெனவே போதிய விறகுக்கட்டைகளைப் பெறமுடியாத நிலையிலிருக்கிறார்கள்.
இருப்பினும், கிடைக்கப்பெறாத நாடுகளிலுள்ள அனைவருமே அதேவிதமாக பாதிக்கப்படுவது கிடையாது. வாங்க முடிந்தவர்கள் வெறுமனே மண்ணெண்ணெய், கேஸ் போன்ற மற்ற எரிபொருட்களை வாங்கத் தொடங்குகின்றனர். விறகுக்கட்டை நெருக்கடிநிலை எண்ணிக்கையில் வளர்ந்துவரும் ஏழ்மையானவர்களுக்கே இக்கட்டான நிலைமையாக இருக்கிறது.
மக்கள்மீது பாதிப்பு
சமீப வருடங்களில் விறகின் விலை இரண்டு மடங்காகவும் மூன்று மடங்காகவும் சில இடங்களில் நான்கு மடங்காகவும் அதிகரித்திருக்கிறது. இன்று, நகர்ப்புறத்தைச் சுற்றியுள்ள இடங்கள் வெறுமையாக்கப்படுவதனால், விலைகள் அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றன. ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் உள்ள அநேக நகரங்கள் இப்போது முற்றிலும் காடுகளேயிராத இடங்களைச் சூழ உள்ளன. ஒருசில நகரங்கள் 160 கிலோமீட்டர் தொலைவிலிருக்கிற இடங்களிலிருந்து விறகை கொண்டுவரவேண்டும்.
விலைகள் அதிகரிப்பது ஏற்கெனவே மிகவும் ஏழ்மையிலிருப்பவர்களுடைய கவலையை அதிகரிக்கிறது. மத்திய அமெரிக்காவிலும் மேற்கு ஆப்பிரிக்காவிலும் உள்ள பகுதிகளில், வேலைசெய்யும் குடும்பங்கள் தங்களுடைய மொத்த வருமானத்தில் 30 சதவீதத்தை விறகுக்கட்டைகள் வாங்குவதற்குச் செலவிடுகின்றனர் என்று ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. மற்ற எல்லாமே—உணவு, உடை, வீட்டுவசதி, போக்குவரத்து, கல்வி—மீந்திருக்கும் வருவாயிலிருந்துதான் சமாளிக்கவேண்டும். “பாத்திரத்துக்கு அடியில் செல்வதே பாத்திரத்துக்குள் செல்வதைவிட அதிகம்” என்ற முதுமொழி அவர்களுடைய விஷயத்தில் உண்மையாயிருக்கிறது.
அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள்? விறகு அரிதாகக் கிடைக்கும் இடங்களிலும் விலை அதிகமாயுள்ள இடங்களிலும், மக்கள் சூடுள்ள உணவு அருந்தும் உணவு வேளைகளைக் குறைக்கின்றனர். அவர்கள் மலிவான விலையில் கிடைக்கும் உணவையோ குறைந்த உணவையோ வாங்கி அருந்துகின்றனர். இது வேளாவேளைக்கு உணவை சரியீடாக உண்ணாமலிருக்கச் செய்கிறது. அவர்கள் குறைந்த உணவையே சமைத்து அருந்துகின்றனர். கிருமிகளும் ஒட்டுண்ணிகளும் கொல்லப்படாமல் உட்கொள்ளப்படுகின்றன, சரீரம் வெகு குறைந்த போஷாக்குள்ள உணவையே உறிஞ்சுக்கொள்கிறது. அவர்கள் குடிநீரைக் கொதிக்கவைத்துப் பருகுவதில்லை. எரிகிற எந்தப் பொருளையும் குப்பையிலிருந்து பொறுக்கி எடுத்து நெருப்பிலிடுகின்றனர்.
இலட்சக்கணக்கான ஆட்கள் வைக்கோல், தாள்கள், வறட்டி போன்ற தரக் குறைவாயுள்ள எரிபொருட்களை உபயோகிக்கத் தொடங்கியிருக்கின்றனர். விறகு விலை அதிகமாயிருந்து வறட்டியின் விலை குறைவாயிருந்தால், வயலில் எருவாக பயன்படுத்துவதற்கு பதிலாக சாணத்தை நெருப்பிலிடுவது சிக்கனமாக தோன்றுகிறது. தெரிவு செய்வதற்கு இடமில்லை. ஆனால் விளைபயன் என்னவென்றால், நிலம் வேண்டிய கரியச் சேர்மான பொருட்களைப் பெறுவதில்லை. காலப்போக்கில் நிலம் உரவளத்தை இழந்து காய்ந்துவிடுகிறது.
சாதாரணமாக, நாட்டுப்புறங்களில் வாழும் ஆட்கள் விறகை விலைகொடுத்து வாங்கவேண்டாமென்றாலும், அது கிடைக்காமலிருப்பது அதைப் பொறுக்கியெடுக்கிற நேரத்தைப் பெரிதும் பாதிக்கிறது. தென்னமெரிக்கப் பகுதிகளில், பெண்கள் ஒரு நாளின் 10 சதவீதத்தை விறகு பொறுக்குவதில் செலவிடுகின்றனர். சில ஆப்பிரிக்க நாடுகளில், ஒரு முழு நாளும் பொறுக்கியெடுப்பது, வெறும் மூன்று நாட்களுக்குரிய விறகைத்தான் கொடுக்கிறது. சிலசமயங்களில் எரிபொருளைப் பொறுக்கி எடுப்பதற்கென்றே குடும்பங்கள் ஒரு பிள்ளையை முழுநேரமாக அந்த வேலைக்கு நியமித்துவிடுகின்றனர்.
எப்போதுமே, நகரத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கென்றே நாட்டுப்புறச்சூழல் அர்ப்பணிக்கப்படுகிறது. விறகு வளரும் வேகத்தைவிட வெட்டப்பட்டு சீக்கிரத்தில் அது விற்கப்படுகிறது. இப்படி விறகுசரக்குகள் படிப்படியாக குறைவதன் காரணமாக குடும்பங்கள் நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்து செல்கின்றனர் அல்லது தங்களுக்கென்று விறகைப் பொறுக்குவதற்கு அதிக நேரம் செலவழிக்கின்றனர்.
இவ்வாறு, லட்சக்கணக்கான மக்கள் தங்கள் அடிப்படைத் தேவையான எரிபொருளைப் பெற அதிக நேரத்தையும் பணத்தையும் செலவழிக்கின்றனர். வேறு வழிகள்? ஏழ்மை நிலைமையிலுள்ளோருக்குக் குறைந்த அளவு உணவு அருந்துவதையும், குளிரிலிருப்பதையும், இரவில் வெளிச்சமில்லாமல் இருப்பதையுமே குறிக்கிறது.
என்ன செய்யப்பட்டு வருகிறது
சில வருடங்களுக்கு முன்னால் இந்த விறகுக்கட்டைச் சார்ந்த நெருக்கடிநிலையின் முக்கியத்துவம் சர்வதேச கவனத்தைப் பெறத் தொடங்கியது. காட்டை வளர்க்கும் திட்டங்களுக்கு உலக வங்கியும் மற்ற நிறுவனங்களும் பணத்தை அள்ளிக்கொடுத்தனர். இத்தகைய அனைத்துத் திட்டங்களுமே வெற்றிகரமாக ஆகவில்லையென்றாலும், அதிகம் கற்றுக்கொள்ளப்பட்டது. இந்த விறகுக்கட்டைச் சார்ந்த நெருக்கடிநிலைக்கு தீர்வு வெறுமனே அதிக மரங்களை நடவுசெய்கிற ஒரு காரியம் மட்டுமல்ல என்று அனுபவம் காட்டியது. சிலசமயங்களில் திட்டமிடுபவர்கள் உள்ளூர் மக்களின் உணர்ச்சிகளைச் சிந்தித்துப்பார்க்கத் தவறுவது ஒரு பிரச்னையாகும். இவ்வாறு, ஒரு மேற்கத்திய ஆப்பிரிக்க நாட்டில், வழக்கமான மேய்ச்சல் நிலங்களில் விதைக்கன்றுகளை நடவுசெய்ததனிமித்தம் கிராமவாசிகள் அவற்றை அழித்துப்போட்டனர்.
மற்றொரு கஷ்டம் என்னவென்றால் மீண்டும் காடாக மாற்றுவது என்பது ஒரு நீண்டகால காரியமாகும். மரங்கள் தானாக வளர்ந்து விறகுக்கட்டைகளை உற்பத்திச்செய்ய 25 வருடங்கள் எடுக்கும். அப்படியென்றால் முதலீடு செய்ததற்கும் ஆதாயத்திற்குமிடையே காலதாமதம் ஏற்படும். நடவுசெய்வது தற்போதைய தேவையை பூர்த்திசெய்ய எதையும் செய்யமுடியாது என்பதையும் அது குறிக்கும்.
மீண்டும் காடாக மாற்றுவதற்கு அநேக நாடுகளில் திட்டங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் அவை எதிர்காலத் தேவைகளைப் பூர்த்திசெய்யுமா? காட்டியல் வல்லுநர்கள் பூர்த்திசெய்யமுடியாது என்று சொல்லுகின்றனர். மரங்கள் நடப்படும் வேகத்தைவிட அவை வெட்டி அழிக்கப்படும் வேகம் அதிகமாக இருக்கிறது. ஓர் உலகக் கவனிப்பு நிறுவனத்தின் ஆய்வாளர் எழுதுகிறார்: “துரதிர்ஷ்டவசமாக, காட்டை அழிப்பதன் மூலம் ஊக்கமளிக்கப்படுகிற இந்தச் சுழற்சியைத் தடுப்பதற்குத் தேவைப்படுகிற அரசியலின் விருப்பமும் வளஆதாரங்களின் ஒப்படைப்பும் பெரும்பான்மையான வெப்பமுள்ள மூன்றாம் உலகில் குறைவுபடுகிறது. தற்போது, அழிக்கப்படுகிற ஒவ்வொரு பத்து ஹெக்டருக்கும் வெறும் ஒரு ஹெக்டர் மரங்களே நடவுசெய்யப்படுகிறது. ஆப்பிரிக்காவில் இந்த இடைவெளி மிகவும் அதிகமாக இருக்கிறது, மரங்கள் வெட்டி அகற்றப்படுவதற்கும் நடவுசெய்யப்படுவதற்குமுள்ள விகிதம் இருபத்தொன்பதுக்கு ஒன்றாக இருக்கிறது. மூன்றாம் உலகத்தின் திட்டமிடப்பட்டிருக்கிற விறகுக்கட்டையின் தேவைகளை 2000-க்குள் [வருடத்திற்குள்] எதிர்ப்படுவது தொழிற்சாராத பயன்பாடுகளுக்கு மரங்கள் நடவுசெய்யப்படுவதன் தற்போதைய விகிதத்தில் பதின்மூன்று மடங்கு அதிகரிப்பை அவசியப்படுத்தும்.”
எதிர்கால எதிர்பார்ப்புகள்
விறகுக்கட்டை குறைபாடு பிரச்னைக்குத் தீர்வுகாணும் முயற்சியில் இன்று அநேக உண்மைமனமுள்ள மக்கள் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருக்கின்றனர். என்றாலும், அவர்களுடைய எதிர்கால ஊகிப்புகள் எப்போதும் நம்பிக்கையற்றதாகவே இருக்கின்றன. பூமியை அலகிடும் ஆய்வாளர்கள் விறகுக்கட்டை—தீராத ஆற்றல் நெருக்கடிநிலை (Fuelwood—The Energy Crisis That Won’t Go Away) என்ற தங்களுடைய புத்தகத்தில் எழுதுகின்றனர்: “[விறகுக்கட்டை நெருக்கடிநிலையைச் சமாளிக்க] எடுக்கப்படும் அப்படிப்பட்ட அனைத்து கூட்டு நடவடிக்கைகளும், விறகுக்கட்டை கிடைக்காமின்மையும் விறகின் விலைகள் உயர்ந்துகொண்டுச்செல்வதும் ஏழ்மையுள்ளோர்மீது சுமத்தக்கூடிய பாரங்களை முழுமையாக இலகுவாக்க முடியாது.” விறகுக்கட்டை நெருக்கடிநிலையும் மக்கள்தொகையும்—ஆப்பிரிக்காவில் (The Fuelwood Crisis and Population—Africa) என்ற ஐக்கிய நாட்டுச் சங்கத்தின் உணவுப்பொருள், வேளாண்மை அமைப்பின் கற்பிக்கும் கையேடு சொல்லுகிறது: “மக்கள்தொகை வளர்ச்சி கட்டுப்படுத்தப்படுமட்டும் இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு எடுக்கப்படும் எந்த முயற்சியும் வெற்றியடைவதற்கு எந்தவித வாய்ப்புமில்லை.” என்றாலும், மக்கள்தொகை தொடர்ந்து வளர்ந்துகொண்டேபோகும் “ஏனெனில், நாளைய பெற்றோர் இன்றைய பெற்றோரைவிட மிகவும் அதிகமாக இருக்கிறார்கள். நாளைய பெற்றோர் ஏற்கெனவே பிறந்துவிட்டார்கள்,” என்று அதே பிரசுரம் காட்டுகிறது.
இத்தகைய விசாரந்தரும் முன்னறிவிப்புகளுக்கு முரணாக, சர்வவல்லமையுள்ள கடவுள் இந்தப் பூமிக்கு முழு பரதீஸை மறுபடியும் ஸ்தாபிக்க நோக்கங்கொண்டிருக்கிறார் என்று பைபிள் தீர்க்கதரிசனம் தெளிவாக காட்டுகிறது. (லூக்கா 23:43) விறகுக்கட்டை, மக்கள்தொகை, வறுமை ஆகியவை சம்பந்தப்பட்டச் சிக்கலான பிரச்னைகளுக்குத் தீர்வுகாண்பது அவருடைய திறமைக்கு அப்பாற்பட்டதாயில்லை.—ஏசாயா 65:17-25.
எதிர்காலம் எரித்தழிக்கப்படுகிறதா? இல்லவே இல்லை! நம்முடைய அன்பார்ந்த சிருஷ்டிகர் சம்பந்தமாக உள்ள தீர்க்கதரிசனம் விரைவில் நிறைவேற்றப்படும்: “நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.”—சங்கீதம் 145:16. (g92 12/8)
[பக்கம் 14-ன் சிறு குறிப்பு]
‘உணவை சமைத்துச் சாப்பிட எரிபொருள் இல்லையென்றால், அவர்களுக்கு அதைக் கொடுப்பதில் எந்தவொரு பிரயோஜனமுமில்லை’