மரத்தால் ஏன் கட்டவேண்டும்?
ஜப்பானில் உள்ள விழித்தெழு! நிருபர்
ரஷ்யாவின் வடமேற்குப் பகுதியில் மரத்தாலான ஒரு சர்ச்சின் உச்சியில் அமைந்துள்ள வெங்காய வடிவிலுள்ள 22 கலசங்கள் குளிர்ந்த சூரிய வெளிச்சத்தில் மீனின் வெள்ளிச் செதில்களைப்போல மினுமினுத்துக் கொண்டிருந்தன. பக்கத்தில்போய் பார்க்கும்போதுதான், அந்தக் கலசங்கள் காலத்தினால் பழமையடைந்து போயிருக்கும் ஆயிரக்கணக்கான மர ஓடுகளால் மூடப்பட்டிருப்பது தெரியவந்தது. கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டுகளாக, ஒனீகா ஏரியிலுள்ள ஒரு தீவில் இருக்கும் இந்த மரத்தாலான கட்டடம் அந்நாட்டின் கடுமையான குளிர்காலங்களை எதிர்த்து நின்றிருக்கிறது. இது மரத்தின் வியப்பூட்டும் நீடித்த உழைப்புக்கு மௌனமாக சாட்சி பகருகிறது.
மற்ற கட்டடங்கள் இதைவிடவும் வல்லமைமிக்க சாட்சியம் அளிக்கின்றன. வெகு காலங்களாக பயன்பட்டுவரும் மரத்தாலான கட்டடங்கள் ஐரோப்பாவின் வடபகுதி முழுவதிலும் இங்குமங்குமாக பரவிக் கிடக்கின்றன. உதாரணமாக, சுமார் 12-ம் நூற்றாண்டின்போது மரக் கட்டடங்களைக் கட்டுவதில் படுமும்முரமாக இருந்த நார்வே நாட்டினரின் கைவண்ணங்கள், கிராமப்புறங்களில் இங்குமங்குமாக சிதறிக் கிடப்பதை இன்றும்கூட காணலாம். இங்கிலாந்தில், எஸ்ஸெக்ஸைச் சேர்ந்த ஓங்கார் என்ற ஊரில், சுமார் 1013-ம் ஆண்டில் கட்டப்பட்ட சாதகமற்ற காலநிலையை இன்றும் சமாளித்துவரும் ஒரு மரக்கட்டடம் இருக்கிறது. ஆனால் இவையெல்லாவற்றிற்கும் தாத்தாவாக இருப்பதாகத் தோன்றுவது, ஜப்பானில் பல நூற்றாண்டுக்கு முன் கட்டப்பட்ட ஒரு மரக் கோயிலாகும்.
மிகப் பழைய மரக்கட்டடம்
இந்த ஹார்யூஜி மரக்கோயிலால் இவ்வளவு நீண்டகாலம் எவ்வாறு நிலைத்திருக்க முடிகிறது? அடிப்படையாகவே அதைக் கட்டிய தச்சுப் பணியாளர்களுக்கு மரத்தைப்பற்றி இருந்த மிகச்சிறந்த அறிவேயாகும். குறிப்பிட்ட வேலைகளுக்கு எந்த மரத்தை தெரிந்தெடுப்பது, எந்தப் பாகங்களை உபயோகிப்பது என்றெல்லாம் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. இந்தக் கோயிலுக்கு அவர்கள் தெரிந்தெடுத்திருந்தது ஹினோக்கி (ஜப்பானிய சைப்ரஸ்) மரமாக இருந்தது. இது வெட்டப்படுவதற்கு முன்பு குறைந்தது ஆயிர வருடங்களாவது வளர்ந்திருக்கிறது.
சமீபத்தில் இறந்துபோன, கைதேர்ந்த தச்சுப் பணியாளராகிய ட்சுனெக்காஸூ நிஷியோக்கா, தனது வாழ்நாளின் பெரும்பகுதியை இந்தக் கோயிலைப் புதுப்பித்துக் கட்டுவதில் செலவழித்தார். ஆணிகளும்கூட இந்தக் கோயில் நீடித்திருப்பதற்கு மிக முக்கிய பங்கு வகித்தன என்று அவர் அடித்துக்கூறினார். அந்த ஆணிகள், ஜப்பானிய படைத்துறை அதிகாரியின் வாள்கள் தயாரிக்கப்படுவதுபோலவே, திரும்பத்திரும்ப தீயில் பழுக்கவைத்து சுத்தியால் அடித்து உற்பத்தி செய்யப்பட்டன. புதுப்பித்துக் கட்டும் வேலையில் பழையகாலத்து ஆணிகள் உபயோகிக்கப்பட்டிருக்கின்றன, ஏனென்றால், அவர் சொன்னதுபோல, “நவீன காலத்து ஆணிகள் 20 வருடங்களுக்குக்கூட உழைப்பதில்லை.”
ஹார்யூஜி கோயிலின் சுமார் 35 சதவீதம் இந்த நூற்றாண்டில் மாற்றீடு செய்யப்பட்டதால், இது மெய்யாகவே 1,300 வருடங்களுக்குமுன் கட்டப்பட்டதுதானா என்று சிலர் சந்தேகிக்கலாம். எனினும், பெரிய பெரிய தூண்கள், முக்கியமான விட்டங்கள், கூரைத்தொங்கல்கள் போன்றவற்றில் அநேகம் முதன்முதலாக உபயோகிக்கப்பட்ட மரத்தினாலானவை. “இந்தக் கோயில் இன்னும் 1,000 வருஷங்களுக்குத் தாங்கும் என்று நினைக்கிறேன்,” என்று சொன்னார் நிஷியோக்கா.
இப்படிப்பட்ட தரத்தையுடைய மரங்கள் அவர்களைச் சுற்றி வளர்வதனால்தான், பண்டைய ஜப்பானியர்கள் மரத்திற்கான ஒரு ஆசையை வளர்த்துக்கொண்டனர் என்பதில் ஆச்சரியமேதுமில்லை. இந்த ஆசை கடத்தப்பட்டிருக்கிறது என்பதை இன்றும்கூட அவர்களுடைய வீடுகள் பிரதிபலிக்கின்றன.
ஜப்பானியரின் வீடுகள்
வீட்டிற்குள், மரம் தாராளமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது, ஆனால் வர்ணம் பூசப்படவில்லை. தூண்கள், கதவுகள், தட்டுமுட்டு சாமான்கள் போன்றவையும் மற்றவையும் அவற்றின் இயற்கையான நார்வரி அமைப்புமுறையும் வர்ணமும் போற்றப்படுவதை சாத்தியமாக்கக்கூடிய வகையில் கடைசிப் பூச்சுக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. வராந்தாவில் உள்ள மரப்பலகைகள் எந்தவிதப் பூச்சும் கொடுக்கப்படவில்லை. எந்தப் பூச்சும் கொடுக்கப்படாத இந்த மரக்கட்டை, தோட்டத்தில் உள்ள மரங்களுக்கும் புதர்களுக்கும் ஒரு இயற்கையான தொடர்பை ஏற்படுத்துகின்றது. ஆகவே அதனுடைய விளைவானது தூண்டுதலைவிட இசைவும் அமைதியுமாகவே இருக்கிறது.
இந்த மாதிரி வீட்டைத் தங்களுடைய சொந்த வீடாகக் கொண்டிருக்கவே ஜப்பானியர்கள் அநேகர் கனவு காண்கின்றனர். இருப்பினும், அத்தகைய வீட்டைக் கட்டுவதற்குத் தேவைப்படும் நல்ல தரமான மரம் சாதாரண தொழிலாளர்களால் வாங்கமுடியாத அளவுக்கு விலையுயர்ந்ததாய் இருக்கிறது. அப்படியிருந்தாலும், ஜப்பானியர்கள் தங்களால் எங்கெல்லாம் மரத்தை உபயோகப்படுத்த முடிகிறதோ அங்கெல்லாம் பயன்படுத்த விரும்புகின்றனர். காரணம் என்னவென்றால், நல்ல தோற்றத்தை அளிப்பது மட்டுமல்லாமல், அடிக்கடி ஏற்படும் பூமியதிர்ச்சிகள், சுழற்காற்றுகள், வெப்பமும் ஈரப்பதமும் நிறைந்த கோடைகாலங்கள், குளிரதிகமான குளிர்காலங்கள் ஆகியவற்றை உள்ளடக்குகிற தங்களுடைய சுற்றுச்சூழலுக்கு மரமே ஏற்றதாக இருக்கிறது என்பதை வரலாறு ஜப்பானியர்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது.
அடிக்கடி பூமியதிர்ச்சி ஏற்படும் நாடுகளில் மரம் அவர்களுக்கு ஒரு பேருதவியாக இருக்கிறது. காரணம், கல்லைப் போன்ற கட்டுமானப் பொருட்கள் அழுத்தத்தின்கீழ் விரிசல் விடுகின்றன. ஆனால் மரமோ வசதியாக வளைந்து கொடுக்கிறது, முறுக்கிக்கொள்கிறது. ஈரப்பதத்தைப் பராமரித்துக்கொள்ளும் மற்றும் பாதுகாத்துக்கொள்ளும் மிகச்சிறந்த தன்மைகளும் மரத்திற்கு இருக்கின்றன. ஜப்பானில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மழையும் ஈரத்தன்மையும் இருக்கிறபோதிலும் வீடுகள் மோசமடைவதில்லை. காற்றிலுள்ள ஈரத்தை உறிஞ்சி பின்னர் உலர்த்திக்கொள்ள மரத்தால் முடியுமாதலால், இந்தப் பருவத்தில் மரம் தகவமைத்துக்கொண்டு ஓரளவு சௌகரியத்தைத் தருகிறது. என்ன இருந்தாலும், பல்வேறு காரணங்களுக்காக மரம் சாதாரண மனிதனாலும் விரும்பப்படுகிறது.
மரத்தின் அழகு
மரத்தின் அழகான தோற்றத்திற்காக உலகம் முழுவதிலும் பெரும்பாலானோர் அதைத் தெரிந்தெடுக்கின்றனர். ஆல்பர்ட் ஜேக்ஸன் மற்றும் டேவிட் டே, காலின்ஸ் நல்ல மரக் கையேடு என்ற தங்களது ஆங்கில புத்தகத்தில் விவரிப்பதாவது: “மரம் இயற்கையின் உற்பத்திப் பொருளாகையால், ஒவ்வொரு மரத்துண்டும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. ஒரு மரத்திலிருந்து எடுக்கப்படும் ஒவ்வொரு மரப் பகுதியும், ஒரே பலகையின் ஒவ்வொரு பாகமும்கூட வித்தியாசமாக இருக்கும். உறுதியோ நிறமோ ஒரே மாதிரி இருக்கலாம், ஆனால் நார்வரி அமைப்புமுறையோ ஒரே மாதிரி இருப்பதில்லை. தன்மை, உறுதி, நிறம், வடிவமைக்கத்தக்க தன்மை போன்றவற்றின் வேறுபாடுகளும் அதன் வாசனையின் வேறுபாடுகளுமே மரத்தைக் கவர்ச்சியுள்ளதாக்குகிறது.”
மரத்தின் நார்வரி அமைப்புமுறையில் ஏன் இவ்வளவு வித்தியாசங்கள் காணப்படுகின்றன? உள்ள பல காரணங்களில் முதலாவதாக சிலவற்றைப் பார்ப்போம். சில மரங்கள் நேரான நார்வரிகளையும் மற்றவை முடிச்சி வடிவ நார்வரிகளையும் வளர்க்கின்றன. இன்னும் மற்றவையோ அலைகள் வடிவிலோ அல்லது வளைவுகள் வடிவிலோகூட நார்வரிகளை வளர்க்கின்றன. பின்னர், மரங்கள் வளரவளர அவை பெரும்பாலும் முறுக்கிக்கொள்கின்றன அல்லது அவை வளரும் திசையை மாற்றிக்கொள்கின்றன; கிளைகளை வளரச்செய்கின்றன, பூச்சிகள் வந்துவிட்டுப் போகின்றன. இவையனைத்தும் மிகவும் ரசிக்கத்தக்க அமைப்பு முறைகளை உண்டுபண்ணுகின்றன. அதுமட்டுமல்லாமல், மரம் எந்த வாக்கில் வெட்டப்படுகிறதோ அதற்கேற்றாற்போல அதன் அமைப்புமுறையும் வித்தியாசமாக தோன்றுகிறது. தெளிவாகத் தெரியும் கிட்டத்தட்ட கருத்த பட்டைகளையுடைய அமைப்புமுறையைக் கொண்டிருக்கும்படி வெட்டப்பட்ட ஒரு செம்பழுப்பு நிறமுடைய மரம் சில நாடுகளில் வரிக்குதிரைமரம் என்றும், மற்ற நாடுகளில் புலிமரம் என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.
மரத்திற்கு மென்மேலும் அழகைக் கூட்டுவது அதன் நிறத்திலிருக்கும் வியக்கத்தக்க பல்வேறு வகைகளாகும். எல்லா மரமுமே பழுப்பு நிறத்தில் இருப்பது கிடையாது. கருப்பு வயிரப் பகுதியை (heartwood) உடைய கருங்காலி மரம் இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் கிடைக்கிறது. கருஞ்சிவப்பும் பழுப்பும் கலந்த நிறமுடைய காம் மரம் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்தும், அடர்ந்த சிவப்பு மஹாகனி மரம் மத்திய மற்றும் தென் அமெரிக்காவிலிருந்தும் கிடைக்கின்றன. திறந்தவெளியில் கிடக்கும்போது பளபளக்கும் ஆரஞ்சு சிவப்பு நிறத்திலிருந்து அடர்ந்த செம்பழுப்பு நிறத்திற்கு மாறும் பிரேஸில் மரமானது பிரேஸிலில் விளைகிறது. சில மரங்கள் பச்சை நிறத்திலும் சில மரங்கள் இளஞ்சிவப்பு நிறத்திலும் இருக்கின்றன. வெளிர் மஞ்சள் நிறமுடைய மஞ்சள் கேதுருவை அலாஸ்கா உற்பத்தி செய்கிறது. ஐரோப்பிய சைக்கமோர் இதைவிடவும் வெளிறிய நிறத்திலிருக்கும். இந்த நிறமாலையின் கடைசியில் இருப்பவை, கிட்டத்தட்ட நிறமே இல்லாதளவுக்கு வெளிறிப்போயிருக்கும் வெள்ளைமரங்களாகும்.
மேலும் பலருக்கும் கவர்ச்சியளிப்பதாய் இருப்பது மரத்தின் வாசனை ஆகும். தேவாலய தளத்தில் தளவரிசைப்படுத்த சாலொமோனின் தச்சர்கள் பயன்படுத்திய தேவதாரு மரம் நறுமணமுள்ள ஒரு மரம் ஆகும். (1 இராஜாக்கள் 6:15) தேவதாரு மரத்தின் நறுமணம் காற்றில் பரவிச் சென்று அவ்வப்போது தூபத்தோடு ஒருவேளை கலக்கிறது. (2 நாளாகமம் 2:4) தேவதாரு மரம் நறுமணத்திற்கு மட்டுமல்லாமல் நீடித்த உழைப்புக்கும் சிதைவுறுதலை எதிர்ப்பதற்கும் பெயர்பெற்றதாய் இருக்கிறது.
மரத்தைப் புகழ்ந்து இன்னும் ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம். அதன் நற்பண்புகள் அநேகமிருப்பதால் இதற்கெதிராக சொல்ல ஏதேனும் இருக்கிறதா என்று நாம் யோசிக்கவேண்டும்.
மரத்தின் பரிசு
எல்லா மரமுமே அழிவுண்டாக்கும் பூச்சிகளை எதிர்ப்பதும் சிதைவுறுதலை எதிர்ப்பதும் கிடையாது அல்லது நூற்றாண்டுகள் நீடித்திருப்பது கிடையாது என்பது உண்மையே. மரத்தால் வீடு கட்டுவதில் இருக்கும் பெரிய பயம் தீ ஆகும். இருப்பினும், தீவிரமான தீயில் கெட்டியான மரம் மெதுவாகவே கருகுகிறது; சிறிதுசிறிதாகவே அதன் பெலனை இழக்கிறது; முறிந்து விழுவதற்கு ஸ்டீலைவிட அதிக நேரம் எடுக்கிறது. இருப்பினும், இன்று ஒருசில வீடுகளிலேயே பழைய காலத்தில் இருப்பதைப் போன்ற கெட்டியான மர விட்டங்களும் தூண்களும் இருக்கின்றன. ஆகவே எரியும் வீட்டில் இருக்கும் ஒரு நபர் முடிந்தளவு சீக்கிரம் வீட்டைவிட்டு வெளியேற வேண்டியிருக்கிறது.
மரம் மலிவான தரம்குறைந்த ஒரு கட்டடப் பொருள் கிடையாது. சரியாக தெரிந்தெடுத்து பதப்படுத்திய மரம் நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு உபயோகப்படுத்தப்படக்கூடிய நன்கு பாதுகாக்கப்பட்ட கட்டடமாக மாறலாம். நன்கு பராமரித்தால் இது ஒருபோதும் அழிந்தேபோகாது என்பதாக வல்லுநர்களில் சிலர் சொல்லுகின்றனர். இது உண்மையோ இல்லையோ, மரம் நிச்சயமாகவே படைப்பாளர் நமக்குக் கொடுத்திருக்கிற மிகச் சிறந்த கட்டடப் பொருட்களில் ஒன்றாக இருக்கிறது.
[பக்கம் 17-ன் படம்]
ஒனீகா ஏரியிலுள்ள ஒரு தீவில் இருக்கும் மரத்தால் கட்டப்பட்ட சர்ச்சின் உச்சியில் அமைந்துள்ள வெங்காய வடிவிலுள்ள கலசங்கள்
[படத்திற்கான நன்றி]
Tass/Sovfoto
[பக்கம் 18-ன் படங்கள்]
ஜப்பானில் உள்ள ஹார்யூஜி மரக்கோயில்