மரசிற்பவேலை—ஆப்பிரிக்காவின் பழம்பெரும் கலை
நைஜீரியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
இப்போது தென் நைஜீரியாவாக இருக்குமிடத்தில் அமைந்திருக்கும், பெனின் மாநகரில் நீண்டகாலமாகவே மர சிற்பாசாரிகள் சுறுசுறுப்பாக இருந்திருக்கின்றனர். பெனின் மாநகரம், நானூறு வருடங்களுக்கு முன்பு வல்லமைமிக்க, நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு காட்டு ராஜ்யத்தின் தலைநகரமாக இருந்தது. ஐரோப்பாவிலிருந்து வரும் பார்வையாளர்கள் அந்த நகரின் அகலமான, நேரான தெருக்கள், சீராக அமைக்கப்பட்ட அதன் வீடுகள், கண்ணியமான, சட்டத்திற்கு கீழ்ப்படியும் அதன் குடிமக்களைக் கண்டு வியந்தனர். பல நூற்றாண்டுகளாக பெனின் மாநகரமானது மேற்கு ஆப்பிரிக்காவின் மிக முக்கியமான பொருளாதார மற்றும் கலாச்சார மையங்களுள் ஒன்றாக திகழ்ந்தது.
ஆபாக்கள் என்றழைக்கப்பட்ட ராஜாக்களின் வம்சத்தால் பெனின் ராஜ்யம் ஆளப்பட்டது. இவர்களால் கலை மும்முரமாக ஊக்குவிக்கப்பட்டது. மரத்தில் செதுக்கப்பட்ட தலை சிற்பங்களும், வெண்கலத்தில் வார்க்கப்பட்ட எழில்மிகுந்த சுவர் அலங்காரப் பொருட்களும், தந்தத்தில் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட தலைசிறந்த படைப்புகளும் பெனின் மாநகரிலுள்ள அவர்களது பகட்டான அரண்மனைகளுக்கு அழகு சேர்த்தன. காலம் மற்றும் கரையான்களினால் ஏற்படும் அழிவுகளிலிருந்து பழமையான மர சிற்பவேலைகள் காப்பாற்றப்பட முடியாதபோதிலும், அந்த ராஜ்யத்தில் மர சிற்பாசாரிகள் சுறுசுறுப்பாக இருந்தார்கள் என்பது தெளிவாக இருக்கிறது. லாகோஸிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தின் முன்னாள் காப்பாளரான மார்டின்ஸ் அகன்பியெமூ இவ்வாறு எழுதுகிறார்: “மர சிற்பாசாரிகளின் சங்கம்தான் . . . ஆபாக்களுக்காக வேலைசெய்த மிகப்பழைய சங்கமாக இருந்தது எனத் தோன்றுகிறது.”
1897-ல் பிரிட்டிஷ் படைகள் பெனின் மாநகரை சூறையாடி, இப்போது மதிப்புமிக்கதாக இருக்கும் அதன் கலைப் பொக்கிஷங்களை—2,000-த்திற்கும் அதிகமான பொருட்களை—ஐரோப்பாவிற்கு எடுத்துச்சென்றன. இன்று பூர்வீக பெனின் நாட்டின் கலைப்பொருட்களின் மிகப்பெரிய தொகுப்பு, நைஜீரியாவில் அல்ல, ஆனால் லண்டனிலும் பெர்லினிலுமுள்ள அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
இன்று மர சிற்பவேலை
நைஜீரியாவிலுள்ள மற்ற அநேக நகரங்களைப்போலவே பெனின் மாநகரமும் இன்று சந்தடிமிக்க ஒரு நகரமாகும். என்றாலும் அதன் பூர்வீக மகிமையின் தடயங்கள் மீந்திருக்கின்றன. அந்த அரண்மனை திரும்பக்கட்டப்பட்டு, இப்போதைய ஆபா அங்கு குடியிருக்கிறார். பூர்வீக மாநகரத்தை சுற்றி ஆழமான அகழி இருந்ததற்கான அத்தாட்சியை நீங்கள் பார்க்கலாம்; மேலும் நீங்கள் உற்று கேட்டால் மரத்தில் உளி ஏற்படுத்தும் டிக் டிக் டிக் என்ற மெல்லிய சத்தத்தை கேட்கலாம்.
ஜான்சன் என்ற மனிதன் பெனின் மாநகரில் 20 வருடங்களாக மர சிற்பங்களை செதுக்கிக்கொண்டிருக்கிறார். கடந்த நூற்றாண்டுகளில், மர மற்றும் வெண்கல தலைகள் இறந்தவர்களை நினைப்பூட்டின; மூதாதையர் வணக்கத்திற்குரிய இடங்களை அவை அலங்கரித்தன. ஆனால் ஜான்சன் செதுக்கும் தலைகள் முன்பு மத நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டவற்றை ஒத்திருப்பதில்லை. அவர் செதுக்குபவை அலங்காரத்திற்காக மட்டுமே உபயோகிக்கப்படுகின்றன.
சிற்பவேலைக்கு ஏற்றதாக இருக்கும் உறுதியான, எளிதில் உடையக்கூடிய மரமாகிய கருங்காலி மரத்தை ஜான்சன் இதற்குப் பயன்படுத்துகிறார். அவர் முக்கியமாக வைரப்பகுதியை, அல்லது உள்மரத்தை பயன்படுத்துகிறார். நைஜீரிய கருங்காலி மரத்தின் வைரப்பகுதியானது அடிக்கடி அட்டக்கறுப்பாக இருக்கிறது; என்றபோதிலும், சில மரங்கள் கோடிட்ட அல்லது சாம்பல்நிறம் முதல் கருப்புநிறம் வரையுள்ள வைரப்பகுதியை உடையவையாய் இருக்கின்றன. சிற்பவேலையில் அவர் சிறிதளவு மென்மரம் அல்லது வெளிமரத்தையும் சேர்க்கிறார்; இது கருப்பு நிறத்தை நிறைவுசெய்யும் ஒரு அழகிய சிகப்பு நிறத்தை சேர்க்கிறது. சிகப்பு மற்றும் கருப்பு கருங்காலி மரங்கள் மெருகேற்றப்படும்போது ஒரு அழகிய பளபளப்பை ஏற்கின்றன.
நைஜீரியாவில் கருங்காலி மரம் மிகவும் அதிகமாக இருக்கிறது. ஒரு கருங்காலி மரம் வெட்டப்பட்ட பின்பு, காய்வதற்காக அது சில மாதங்கள் காட்டிலேயே விடப்படுகிறது. கருங்காலி மரக்கட்டை தன் கடைக்கு வந்துசேர்ந்த பிறகும், தான் அதை உபயோகிக்குமுன்பு இன்னும் பல மாதங்கள் அந்தக் கட்டையை ஜான்சன் காயவிடுகிறார். காயாமலிருக்கும் மரம் வடிவம் மாறி, உடைந்துபோகக்கூடும்; ஆகையால் இது அத்தியாவசியமானது.
ஜான்சன் செதுக்க தயாராக இருக்கும்போது, ஒரு கை ரம்பத்தை வைத்து ஏறக்குறைய 38 சென்டிமீட்டர் நீளமுள்ள ஒரு துண்டை அறுக்கிறார். அந்தத் துண்டு வெடிப்பு விடாமலிருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள இன்னும் ஒரு வாரம் காத்திருக்கிறார்; பிறகு தான் செதுக்கவேண்டிய தலையின் வரைபடத்தை சுண்ணாம்புத்துண்டு கொண்டு அந்த மரத்தில் கோடிட்ட பின்னர், தன் வேலையை ஆரம்பிக்கிறார்.
முதலில் ஒரு தட்டையான உளி, பிறகு வளைந்த உளி, பின்னர் கூர்மையான உளி ஆகியவற்றை அவர் பயன்படுத்துகிறார். அதற்குப் பிறகு ஒரு முரட்டு அரத்தைக்கொண்டு அதை ராவி விடுகிறார். பிறகு சிற்பாசாரியின் கத்தியைக்கொண்டு சிறிய நுணுக்கங்கள் செதுக்கப்படுகின்றன. ஜான்சன் வேலை செய்யும்போது மரத்தில் அதிகமான கவனம் செலுத்துகிறார். கவனமின்மையானது விநோதமான புன்முறுவலுடைய அல்லது மாறுகண்ணுடைய ஒரு சிற்பத்தில் விளைவடையக்கூடும்.
சிற்பவேலை முடிந்தபிறகு, ஜான்சனிடம் கலைபயில்பவர்கள், அடுத்தடுத்து மென்மையான தரமுள்ள உப்புத்தாள்களைக்கொண்டு அந்தச் சிற்பத்தை தேய்க்கின்றனர். கடைசியாக, அவர்கள் மரப்பாலிஷ் அல்லது ஷூபாலிஷ் தடவி, ஒரு ஷூபிரஷ் கொண்டு அதற்கு பளபளப்பூட்டுகின்றனர். படங்களில் உள்ளதுபோல் ஒரு மரத்தலையை செதுக்க இரண்டு நாட்கள் எடுக்கும். அதைத் தேய்த்து, மெருகேற்ற இன்னும் மூன்று நாட்கள் எடுக்கும்.
சிற்பம் முழுமையாக முடிந்தபிறகு, அதில் எந்த வெடிப்பும் ஏற்படாமலிருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள ஜான்சன் அதை சில மாதங்களுக்கு தனியே வைக்கிறார். சிற்பவேலை ஆரம்பிக்குமுன் மரமானது முழுமையாக காய்ந்திருந்தால், அதில் எந்த விரிசலும் ஏற்படாது. அநேகமாக அப்படித்தான் இருக்கும். வெடிப்பு ஏதும் ஏற்பட்டுவிட்டால், அந்த வெடிப்பை நிரப்பி, தேய்த்து, மறுபடியும் மெருகேற்றுவதற்காக அந்தச் சிற்பம் திரும்ப கடைக்கு கொண்டுசெல்லப்படும்.
சிற்பாசாரியின் கலையை கற்றுக்கொள்ளுதல்
10 முதல் 18 வயது வரையுள்ள ஆறு பேர் ஜான்சனிடம் கலைபயில்கின்றனர். அவர்கள் சிற்பாசாரியின் கலையை கடைசியிலிருந்து, அதாவது கடைசி வேலையிலிருந்து முதல் வேலைவரை கற்றுக்கொள்கின்றனர். இந்த வரிசையில் கலைபயில்பவர் முதலாவது மெருகேற்றுவதை கற்றுக்கொள்கிறார். பிறகு தேய்ப்பதை கற்றுக்கொள்கிறார். பின்னர் ஒரு முரட்டு அரம் பயன்படுத்துவது எப்படி என்று கற்றுக்கொடுக்கப்படுகிறார். கடைசியாக, அவர் ஒரு தட்டையான உளியை எடுத்து புதிய மரக்கட்டை ஒன்றில் முதலாவது வெட்டுகளை ஏற்படுத்தும் அந்த நாள் வருகிறது.
“எல்லாரும் சிற்பாசாரியாய் ஆக முடியாது” என்று ஜான்சன் சொல்கிறார். “முதலாவதாக, உங்களுக்கு மனதை ஒருமுகப்படுத்தும் திறத்தோடு, விருப்பமும் இருக்கவேண்டும். உங்கள் முன்னேற்றத்தை குறித்து எவ்வாறு பொறுமையாக இருக்கவேண்டும் என்றும் தோல்விகளை எவ்வாறு சமாளிப்பது என்றும் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். உங்களுக்கு சகிப்புத்தன்மையும் தேவை; ஏனென்றால் சிற்பவேலையில் சிறந்து விளங்க குறைந்தது மூன்று வருடமாவது பிடிக்கும். ஆனால் அதுதானே முடிவல்ல—கற்றுக்கொள்வதற்கு முடிவேயில்லை. அதிக பழக்கம் ஏற்பட ஏற்பட நீங்கள் தொடர்ந்து முன்னேறலாம்.”
[பக்கம் 20-ன் பெட்டி]
எறும்பும் மர சிற்பாசாரியும்
வெள்ளை எறும்பு அல்லது கரையானுக்கு ஆப்பிரிக்க கலை கடன்பட்டிருக்கிறது என்று சிலர் கூறுகின்றனர். மர சிற்பாசாரி ஒரு சிற்பத்தை உண்டாக்குகிறார்; சில சமயங்களில் கொஞ்ச நாட்களுக்குள்ளேயே வெள்ளை எறும்பு (கொஞ்சம் வெப்பமண்டல சீதோஷ்ணத்தின் உதவியுடன்) அதை அழித்துவிடுகிறது! வெள்ளை எறும்பானது நூற்றாண்டுகளினூடே மர சிற்பாசாரியை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. அது முடிவேயில்லாத ஆனால் ஆக்கப்பூர்வமான ஒரு சுழற்சியாக இருந்திருக்கிறது: எறும்பு அழிக்கிறது; தன்னுடைய திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் கற்பனைத்திறனுடன் புதிய வடிவங்களை உண்டாக்கவும் சந்தர்ப்பங்களைப் பெற்றவராய் சிற்பாசாரி மறுபடியும் புதிதாக தொடங்குகிறார்.
ஆப்பிரிக்க ராஜ்யங்கள் என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “முந்தைய சிற்பாசாரிகளின் வேலையை பிற்கால சிற்பாசாரிகள் அப்படியே பின்பற்றவோ, அவர்கள் வேலையால் பாதிக்கப்படவோ இடங்கொடுக்காதபடி பூஞ்சணமும் சுறுசுறுப்பான வெள்ளை எறும்பும் அழித்திருக்கின்றன. அதன் விளைவாக, புதிய கலைப்படைப்புகளுக்கு தொடர்ந்து தேவை ஏற்பட்டதோடு, வித்தியாசமான வடிவங்கள் உருவாவதற்கு அதிக வாய்ப்பு ஏற்பட்டது; பார்த்து அப்படியே பின்பற்றுவது மிகவும் குறைந்தது, மேலும் தனிப்பட்ட திறமையிலும் கற்பனைத்திறனிலும் அதிகம் சார்ந்திருக்க வேண்டியதாயிற்று.”
எறும்பிற்கும் மர சிற்பாசாரிக்கும் இடையில் இருக்கும் இந்தத் தொடர்பு, ஆப்பிரிக்க கலையை அந்தளவுக்கு புகழ்பெற்றதாக ஆக்கியிருக்கும் கலைச்சிறப்பை விளக்க உதவுகிறது என்று சிலர் கூறுகின்றனர். நைஜீரிய உருவங்கள் என்ற தன் ஆங்கில புத்தகத்தில் அறிஞர் வில்லியம் ஃபாக் கூறுகிறார்: “நாம் . . . வெள்ளை எறும்பிற்கு நன்றி செலுத்துவோமாக; அதன் அநேக நடவடிக்கைகள் மனிதனுக்கு எவ்வளவுதான் பிடிக்காமல் இருந்தபோதிலும், நூற்றாண்டுகள் மற்றும் ஆயிரமாண்டுகளாக வெப்பமண்டல மர சிற்பாசாரியுடன் ஒரு தொடர்ச்சியான மற்றும் மிகப்பெரியளவு ஆக்கப்பூர்வமான உறவை உடையதாக அது இருந்துவருகிறது.”
[பக்கம் 5-ன் படம்]
ஒரு சிற்பத்தை செய்தல்:
1. மிகச் சிறந்த மரக்கட்டையை தெரிவு செய்தல்,
2. செதுக்கவேண்டிய தலையின் வரைபடத்தை கோடிடுதல்,
3. ஒரு உளியை பயன்படுத்துதல், 4. தேய்த்தல், 5. மெருகேற்றுதல்
[படத்திற்கான நன்றி]
Courtesy of Dr. Richard Bagine