பார்சிலோனா ஒலிம்பிக்—அம்மகிமையின் பிரயோஜனம்?
ஸ்பெய்னிலிருந்து விழித்தெழு! நிருபர்
ஜூலை 25, 1992 அன்று, ஓர் ஒற்றைக்கற்றை விளக்கின் பேரொளியால் சூழப்பட்டுத் தனித்து நின்ற ஒரு வில்லெரிபவன் தன்னுடைய வில்லை இழுத்தான். அவனுடைய தீ-முனையைக்கொண்ட அம்பு சரியாக இரவு வானில் நேரே உயர்ந்து சென்றது. அது கீழ்நோக்கி இறங்கி வர ஆரம்பித்து, அந்தப் பரந்த விளையாட்டரங்கிற்கு மேல் அமைக்கப்பட்டிருந்த ஒரு ராட்சச விளக்கின்மீது மிருதுவாகக் கடந்து சென்றது. அந்த ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது. பார்சிலோனா ஒலிம்பிக் தொடங்கிவிட்டது.
பதினோராயிரம் விளையாட்டு வீரர்கள் 172 நாடுகளிலிருந்து 1,691 ஒலிம்பிக் பதக்கங்களுக்காகப் போட்டியிட வந்திருக்கின்றனர். ஒலிம்பிக்கின் குறிக்கோளுக்கு இசைவாக, பங்கேற்பவர்கள் எப்போதும் இருந்ததைவிட ‘அதிக விரைவாகவும் அதிக உயர்வாகவும் அதிக வலிமையாகவும்’ இருக்கக் கடும் முயற்சி செய்தனர்—அதில் சிலர் வெற்றியடைந்தனர். கணக்கிடப்பட்ட 3,50,00,00,000 தொலைக்காட்சி பார்வையாளர்கள் வெற்றிகளையும் ஏமாற்றங்களையும் பகிர்ந்துகொண்டனர்.
விளையாட்டு வீரர்கள் பெரும்புகழில் திளைக்கும் நேரம் தற்காலிகமாக இருந்தாலும், ஒலிம்பிக் வெற்றி மகிமையையும் செல்வத்தையும் கொண்டுவரும் வாய்ப்பைக் கொண்டிருக்கிறது. பார்சிலோனா ஒலிம்பிக் இதற்கு விதிவிலக்கு அல்ல. புகழ்பெற்ற போட்டியாளர்கள் சிலர், விளையாட்டு உடைகள், ஓட்டக் காலணிகள், வெயில் காக்கும் முகக் கண்ணாடிகள், மின்னணு சாதனம் போன்றவற்றைச் சிபாரிசு செய்வதனால் ஏற்கெனவே பல லட்சக்கணக்கான டாலர்களைச் சம்பாதித்து வந்தனர்.
தியாகம் —ஒலிம்பிக் மகிமைக்குத் திறவுகோல்
பல விளையாட்டு வீரர்கள்—முக்கியமாகக் கட்டுடல் பயிற்சியாளர்களும் (Gymnasts) முக்குளிப்போரும்—தங்களுடைய அருஞ்செயல்களைத் தெளிவாகவே சாதாரணமாக செய்து முடித்தாலும், அப்படிப்பட்ட சாகசங்களின் பின் வருடக்கணக்கான கடுமுயற்சி உள்ளடங்கியிருக்கிறது. சிலர் தாங்கள் ஐந்து வயதாயிருக்கும்போதிலிருந்தே பயிற்சியிலிருந்திருக்கின்றனர். ஒரு விளையாட்டு வீரன் வெற்றியை அனுபவிக்கவேண்டுமானால் விளையாட்டு முழுமையான முதலிடம் பெறவேண்டும்.
மல்லாக்க நீந்துதலின் (Backstroke) 200-மீட்டர் பந்தயத்தில் வென்ற, ஸ்பானிய நீச்சல் வீரன் மார்ட்டின் லோப்பஸ் சூபேரோ—ஒருவேளை குறைந்த மிகைப்படுத்துதலோடு சொன்னார்: “என்னுடைய வாழ்நாளில் மூன்றிலொரு பகுதியைத் தண்ணீரில் செலவழித்திருக்கிறேன்.” அவருடைய பயிற்சி அட்டவணை அதிகாலை ஐந்து மணிக்குத் தொடங்கும். ஒரே வருடத்தில் அவர் 8,000 கிலோமீட்டர் நீந்தியிருப்பதாக அவர் கணக்கிடுகிறார்.
பயிற்சி என்பது வெறுமனே தன்னலனை மறுத்துக்கொள்வது மட்டுமல்ல, ஆனால் அது துன்புறுத்தலாகும். பார்சிலோனாவிலும் சியோலிலும் ஏழு நிகழ்ச்சிப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற வீராங்கனை, ஜாக்கி ஜாய்னர்-கெர்ஸி விவரிக்கிறார்: “போட்டி கவர்ச்சியானதுதான். ஆனால் பயிற்சி அல்ல. . . . எந்த விளையாட்டு வீரரை வேண்டுமானாலும் கேளுங்கள்: நாங்கள் எல்லாரும் எல்லா சமயங்களிலும் காயப்படுத்தப்படுகிறோம். ஏழு வித்தியாசமான வேலைகளைச் செய்யும்படி நான் என் உடலைக் கேட்கிறேன். அதை வேதனை தராதிருக்கும்படி கேட்பது மிக அதிகமாகும்.” கட்டுடல் பயிற்சியாளர்கள் சிறப்பாக, சகிப்புத்தன்மையைக் காட்டுவதில் கைதேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். கணுக்கால் அல்லது மணிக்கட்டுச் சுளுக்குதல், இணைப்பிழைகளில் மற்றும் தசைகளில் பிடிப்பு, அதிர்வினால் ஏற்படும் எலும்புமுறிவு போன்றவற்றால் உண்டாகும் வேதனை இருக்கிறதோ இல்லையோ, அவர்கள் தங்களுடைய தினசரி-இருமுறை பயிற்சி அட்டவணையைக் கடைப்பிடிக்கவேண்டும். ஆனால் இறுதி ஆய்வில், இப்படிப்பட்ட தியாகம்தான் வெற்றிவீரர்களையும் அந்தக் கண்கொள்ளா காட்சியையும் உருவாக்குகின்றன.
ஒலிம்பிக் மினுமினுப்பும் தங்கமும்
ஒலிம்பிக் காட்சி மனதைக் கவர்வதாக இருக்கக்கூடும் என்பதில் சந்தேகமில்லை. கூட்டங்களுக்குக் கிளர்ச்சியூட்டும் நேரத்தையும் கவனத்தை ஈர்க்கக்கூடிய உடற்பயிற்சி செயல்களுக்கு ஒரு காட்சியரங்கையும் அது கொடுக்கிறது. பார்சிலோனா இதற்கு விதிவிலக்கல்ல.
பெலோரஸ் கட்டுடல் பயிற்சியாளர் விட்டாலி ஷெர்போ ஆண்களுக்கான கட்டுடல் போட்டியில், பெறுவதற்கான வாய்ப்பிருந்த எட்டுத் தங்க பதக்கங்களில் ஆறு பெற்று ஒரு புதிய சாதனை புரிந்தார். சீன கட்டுடல் பயிற்சியாளர் ஷாயோசாஹ்வான் லி, கள உடற்பயிற்சியில் வியக்கத்தக்க மூன்று-குட்டிக்கரணமிட்டார். (Triple Somersault) தொடர்ந்து மூன்றாவது முறையாக நீளம் தாண்டுதலில் வெற்றி பெற்று உலக வரலாற்றை ஏற்படுத்தினார் கார்ல் லூயிஸ். மறுபட்சத்தில், பெண்களுக்கான மாரத்தான் ஓட்டத்தில் வெள்ளி பதக்கத்தை வென்ற ஜப்பானிய பெண் யுகோ ஆரிமொரி நன்னடத்தைக்காக ஆரவாரக் கைதட்டுதலைப் பெற்றாள். அவள் முழுச்சோர்வடைந்திருந்தாலும், குனிந்தபடி விளையாட்டரங்கத்தைச் சுற்றியுள்ள கூட்டங்களுக்கும் பிறகு வெற்றிபெற்றோருக்கும் ஜப்பானிய பாணியில் வணக்கம் செலுத்தினாள்.
ஒலிம்பிக்கின் வியாபார வாய்ப்புகள் பன்னாட்டு நிறுவனங்களால் அசட்டை செய்யப்பட்டிருக்கவில்லை. ஒலிம்பிக் போட்டிகளை அல்லது தேசீய ஒலிம்பிக் குழுக்களை ஏற்று ஆதரிப்பதன் மூலம் ஒலிம்பிக் மகிமையில் மூழ்கி திளைக்க அவை மிகப்பெரிய தொகையைக் கொடுக்கின்றன.
மகிமைக்கு வழிநடத்தும் போதைமருந்து பாதை
இடைவிடா கடுமுயற்சியும் இயற்கை திறனும்—முக்கியமானவையாக இருந்தபோதிலும்—இவை மட்டுமே ஒலிம்பிக் வெற்றிக்கான திறவுகோல்கள் கிடையாது. அநேக விளையாட்டு வீரர்கள் போட்டியில் தங்களுக்கு ஓர் அனுகூலம் கிடைப்பதற்காக போதை மருந்துகள்மீது சார்ந்திருக்கிறார்கள். இந்தப் போதை மருந்துகள் தசைக்கட்டுவதற்கான, (முக்கியமாக பளுதூக்குவதற்கும் களப்போட்டிகளுக்கும் பிரபலமான) வளர்வினை ஊக்க மருந்துகளாகவோ (Anabolic Steroids) மனித வளர்ச்சி இயக்கு நீர்களாகவோ இருக்கலாம்; இருதயத்துடிப்பின் வேகங்குறைப்பதற்கான (வில்லெரிதலிலும் துப்பாக்கிச் சுடுதலிலும் முடிவுகளை முன்னேற்றுவிக்க), இருதய செல்களில் அட்ரிலினை உறிஞ்சுவதைத் தடைசெய்யும் மருந்துகளாகவோ (Beta blockers) இருக்கலாம்; அல்லது (சைக்கிள் ஓட்டுதலிலும் நெட்டோட்டங்களிலும் உதவிசெய்ய) இரத்த சிகப்பணுக்கள் உற்பத்தியைப் பெருக்கும் இரித்ரோபுரோட்டீனாகவுங்கூட இருக்கலாம்.
விளையாட்டு வீரர்கள் இதனுடைய தீங்குகளைப்பற்றி அறிந்திருந்தாலும், தடைசெய்யப்பட்ட மருந்துகளை உபயோகிப்பதற்கான அழுத்தம் மிக அதிகமாக இருக்கிறது. வித்தியாசமான 20 போதை மருந்துகளை உட்கொண்டதால் 1987-ல் மரித்த பர்கிட் ட்ரஸல் என்பவருடைய அணியின் சகவீராங்கனையும் ஜெர்மனியைச் சேர்ந்தவருமான காபி புஸ்மான் விவரிக்கிறார்: “போதை மருந்துகளின்றி ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதிபெறமுடியாத சில விளையாட்டுப் பிரிவுகள் உள்ளன.”
இந்தப் போதை மருந்து உபயோகத்தில் வழக்கமாகவே விளையாட்டு வீரர்களின் பயிற்சியாளர்களும் பங்காளர்களாக இருக்கின்றனர்; அவர்கள் அதைச் சிபாரிசு செய்பவர்களாகவுங்கூட இருக்கலாம். “நீங்கள் ஒலிம்பிக் போட்டிகளுக்குப் போகவேண்டுமானால், இதை [போதை மருந்துகளை உட்கொள்ளுதல்] நீங்கள் செய்தேதீரவேண்டும், என்று அவர்களிடம் சொன்னேன்,” என்பதாக ஒப்புக்கொள்கிறார் கிழக்கு ஜெர்மனியின் முன்னாள் பயிற்சியாளர், வின்ஃப்ரிட் ஹைனிக்க. சந்தேகமின்றி, ஒரு கணிசமான எண்ணிக்கையுள்ள போட்டியாளர்கள் வெற்றியை நேர்மையைவிட—தங்களுடைய உடல்நலத்தையும்விட—அதிகமாக மதிக்கின்றனர். தங்களை வெற்றியாளர்களாக மாற்ற உத்தரவாதம் தரும் ஒரு புனைவான ஆச்சரிய மருந்து, தங்களை மகிமையின் உச்சியில் ஐந்து வருடங்கள் வைத்திருந்தபின் கொன்றாலும் சரி, அதை மிகப்புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களில் 52 சதவீதத்தினர் உபயோகிப்பர் என்று சமீபத்தில் நடத்திய சுற்றாய்வு ஒன்று வெளிப்படுத்திற்று.
பிரிட்டிஷ் விரைவோட்டக்காரர் ஜேஸன் லிவிங்ஸ்டன் வளர்வினை ஊக்கிகளை உபயோகித்ததாகச் சோதனை காண்பித்தபோது, அவமதிப்பூட்டும் வகையில் பார்சிலோனாவிலிருந்து வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்தவரும், 400 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனைபுரிந்தவருமான ஹேரி ரெனால்ட்ஸ், போட்டியில் ஓடவேயில்லை. போதை மருந்து உபயோகத்தைத் தடுப்பதற்காக 1990-ல் நடத்தப்பட்ட ஒரு சோதனை இரண்டு வருட தற்காலிக நீக்கத்திற்கு வழிநடத்தியது. இது கிடைப்பதற்கான வாய்ப்பிருந்த ஒலிம்பிக் பதக்கத்தை மட்டுமல்லாமல் ஏற்பாதரவு வாய்ப்புகளில் வரவிருந்த பத்து லட்ச டாலர்களையும் இழக்கச்செய்தது.
போதை மருந்து உபயோகிக்கும் பெரும்பாலானோர் பிடிக்கப்படுவதில்லை. பார்சிலோனா போட்டிகளின்போது போதைப்பொருள் உபயோகிப்பதைக் கண்டுபிடிப்பதற்கான ஏறக்குறைய 2,000 பரிசோதனைகள் உபயோகிக்கப்பட்டன. இருப்பினும் நேர்மையற்ற விளையாட்டு வீரர்கள், சிறுநீர் சோதனைகளில் வெளிக்காட்டாத வேறுவகையான போதை மருந்துகளை மாற்றி உபயோகித்ததனால் கண்டுபிடிக்கப்படுவதைத் தவிர்க்கமுடிந்திருக்கிறது. “வெற்றிக்காகவும் பணத்துக்காகவும் உள்ள பேராசை ஓர் இருளடைந்த உலகை வெளிப்படுத்தியது. இதில் நல்லொழுக்கத்திலிருந்து நேர்மையின்மையைப் பிரித்தறிவது கடினமாகிறது,” என்பதாக ஸ்பானிய செய்தித்தாள் எல் பாயிஸ் குறிப்பிட்டது.
சந்தேகமின்றி, பதக்கங்களை வென்ற அநேகர், போதை மருந்துகளால் அல்ல, ஆனால் வெறுமனே வருடக்கணக்கான தங்கள் சுயதியாகத்தால் வென்றிருக்கின்றனர். இத்தியாகங்கள் பிரயோஜனமானவையாக இருக்கின்றனவா?
ஒரு நீடித்திருக்கும் மகிமை
பெண்களுக்கான 100-மீட்டர் விரைவோட்டத்தின் எதிர்பாரா வெற்றியாளர் கேயல் டெவர்ஸ், தன்னுடைய வெற்றிக்குப் பிறகு திளைத்துப்போய்விட்டார். “கனவுகள் நனவாகும் என்று யாரேனும் நம்பினால், அது நானே,” என்று அவர் சொன்னார். இரண்டு வருடங்களுக்குச் சற்று முன், அவர் நடக்கமுடியாமல் இருந்தார். மேலும் கிரேவின் நோய் சிகிச்சையில் ஏற்பட்ட சிக்கலின் காரணமாக அவருடைய இரண்டு கால்களையுமே நீக்குவதைப்பற்றி பேசப்பட்டது. பட்டாம்பூச்சி நீச்சலின் 100-மீட்டர் போட்டியில் ஒரு தங்கப் பதக்கத்தை வெல்வதற்காக, நீந்துதலிலிருந்து ஓய்வுபெற்று, ஒலிம்பிக் தொடங்குவதற்கு ஒரு வருடத்திற்கு முன்புதான் திரும்பி வந்த பாப்லோ மோரால்ஸ் ஒப்புக் கொண்டுச் சொன்னார், “கடைசியில் இது என்னுடைய காலம், ஒரு கனவு நனவாகிறது.”
தவிர்க்கமுடியாமல், பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் ஒருபோதும் வெற்றிவீரர்களாவதில்லை. “ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றிபெறுவதல்ல, ஆனால் பங்கேற்பதுதான் முக்கியம்,” என்று சிலர் உணருகிறது உண்மையே. ஆனால் வெற்றிவீரர்களாக ஆவதற்கு எதிர்பார்த்திருந்த சிலரோ, தங்களுடைய சிதறிய கனவுகளோடே வீடு திரும்பினர். பளு தூக்குபவரான இப்ராகிம் சாமாடோஃப் ஒரு தங்கப் பதக்கம் பெற தீர்மானித்திருந்தார்—ஆனால் தன்னுடைய நிகழ்ச்சியில் மூன்றாவது இடத்தைத்தான் வகித்தார். “ஒரு தங்கப் பதக்கம் கிடைத்திருந்தால், என்னுடைய வாழ்க்கைக்கு நல்ல வழி காண்பித்திருக்கமுடியும், நல்ல ஒரு வேலைக்குப் படித்தும் என் குடும்பத்துக்கு உதவிசெய்துமிருக்கமுடியும். இப்பொழுது எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை,” என்று சொல்லி பெருமூச்சுவிட்டார் அவர். தங்களுடைய செயல்திறன் குறைய தொடங்கும்போது வெற்றியாளர்களுங்கூட அதிர்ச்சியை எதிர்ப்படுகின்றனர்.
சோவியத்தின் முன்னாள் டென்னிஸ் வீரர் அனா ட்மியிட்ரீவ சொன்னார்: “[சோவியத்] விளையாட்டு நிறுவனம் மக்களைப் பற்றி அக்கறை காட்டவில்லை. ‘நீ போனால் உன்னைப்போல் இன்னும் 10 பேரைக் கண்டுபிடித்துக்கொள்வோம்,’ என்பதாக நினைத்தனர்.” அதேபோல் டோக்கியோவில் 1964-ல் இரட்டை தங்கப் பதக்கத்தை வென்ற, ஹென்றி கார் ஒப்புக்கொண்டார்: “ஒருவர் மிகச்சிறந்தவரானாலும் அது ஏமாற்றமே. ஏன்? ஏனென்றால் அது நிலையானதல்ல, உண்மையிலேயே திருப்தியளிப்பதுமல்ல. நட்சத்திரங்கள் விரைவில் மாற்றீடு செய்யப்பட்டுப் பொதுவாக மறக்கப்படுகின்றனர்.”
விரைவில் மறைந்துபோகிற ஒலிம்பிக் மகிமை, தன்னைச் சேவிக்கிறவர்களுக்குக் கடவுள் வாக்களிக்கும், நித்திய ஜீவன் என்ற பரிசோடு ஒப்பிடமுடியாது. இந்தப் பரிசு உடற்பயிற்சியைவிட ஆவிக்குரிய பயிற்சியை வற்புறுத்துகிறது. இவ்வாறு, பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதினார்: “சரீரமுயற்சி [சொல்லர்த்தமாக, “கட்டுடல் பயிற்சியாளனாக பயிற்சி செய்தல்”] அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.”—1 தீமோத்தேயு 4:8.
ஒலிம்பிக் போட்டிகள்—எவ்வளவு நல்ல சூழ்நிலையிலும் தற்காலிகமான—சரீரமுயற்சியின் பலன்களை ஆதரிக்கிறது. தியாகம் மற்றும் தன்னலனை மறுத்துக்கொள்வது போன்றவற்றின் மூலம் விளையாட்டு வீரன் எதைச் செய்யமுடியும் என்று அவை காண்பிக்கின்றன. கிறிஸ்தவ ஓட்டத்தில் வெற்றிபெறுவதற்கும் இந்தப் பண்புகள் தேவைப்படுகின்றன. இந்த ஓட்டம் எந்த ஒலிம்பிக் நிகழ்ச்சியையும்போலில்லாமல், அந்த ஓட்டத்தை முடிக்கிற எல்லாருக்கும் நீடித்த பலன்களைக் கொண்டுவரும். ஆகவே, கிறிஸ்தவர்கள், ‘பயிற்சியை முடித்து, ஓட்டத்தில் பொறுமையோடே ஓடுவதன்’ மூலம் விளையாட்டு வீரர்களையல்ல, ஆனால் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவது நல்லது.—1 பேதுரு 5:10; எபிரெயர் 12:1.
[பக்கம் 23-ன் படங்கள்]
முக்குளிப்போர் ஒலிம்பிக்கில் போட்டியிடுகிறார்கள். பின்னணியில் பார்சிலோனா
[படத்திற்கான நன்றி]
Photo: Sipa Sport
[பக்கம் 24-ன் படம்]
இணைக் கம்பிகளின்மேல் போட்டியிடுதல்
[படத்திற்கான நன்றி]
Photo: Sipa Sport
[பக்கம் 25-ன் படம்]
இறுதிகட்ட 100-மீட்டர் ஓட்டத்தில், வலது பக்கம் கடைசியில் உள்ள ஓட்டக்காரர் தங்கத்தை வென்றார்