போதைப் பொருட்கள்—“போட்டி விளையாட்டின் எய்ட்ஸ்”
“ஸ்டிராய்டுகள் நம் தேசிய ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்புக்கும் வளர்ந்துவரும் ஓர் அச்சுறுத்தலாக இருக்கின்றன.” —ஐ.மா. போதைப் பொருள் செயலாக்க நிர்வாக அதிகாரி
சீயோல் ஒலிம்பிக் விளையாட்டுகளைப் பார்த்துக்கொண்டிருந்த லட்சக்கணக்கான பார்வையாளர்கள் அதிர்ச்சியுற்றனர். அவர்களுடைய வெற்றி வீரன், 100 மீட்டர் ஓட்டத்தில் உலகிலேயே மிக வேகமாக ஓடி வெற்றிபெற்று தங்களைக் கவர்ந்த வெற்றி வீரன் தடை செய்யப்பட்ட வஸ்துக்களைப் பயன்படுத்தியதற்காக தகுதியற்றவன் என்று தீர்ப்பளிக்கப்பட்டு, வழங்கப்பட்ட தங்கப் பதக்கம் அவனிடமிருந்து திரும்ப எடுத்துக்கொள்ளப்பட்டது.
இப்படியாக போட்டி விளையாட்டுகளை மற்றொரு வாதை பாதித்திருக்கிறது—வெற்றி பெறும் ஆற்றலைப் பெருக்கும் மருந்து, அதை வேரோடு பிடுங்கி எறிதல் அவ்வளவு கடினமாக இருப்பதால், அது “போட்டி விளையாட்டின் எய்ட்ஸ்” என்று குறிப்பிடப்படுகிறது.
“மருந்து ஒலிம்பிக்குகள்”
இரண்டாம் உலக மகா யுத்தத்திற்குப் பின்புதானே சில ஓட்டப்பந்தய வீரர்கள் போட்டி நிகழ்ச்சிகளில் போதப் பொருட்களைப் பயன்படுத்த ஆரம்பித்ததாகத் தெரிகிறது. என்றபோதிலும், இப்பொழுது, நிபுணர்கள் கருத்துபடி, விளையாட்டு வீரர்கள் மத்தியில் போதப் பொருட்களின் பிரயோகம் அவ்வளவு அதிகமாக இருப்பதால், அது “பெரும்பாலும் போட்டி விளையாட்டுக் கூட்டமைப்புகளால் துவக்கப்பட்ட சிக்கலான, அதிக செலவு பிடிக்கும் அமைப்புகளைத் தேவைப்படுத்துகிறது, இவற்றின் நோக்கம் தெளிவாகவே மதிப்புக்குரிய பலன்களைப் பெறுவதும், விளம்பரதாரர்களைக் கவர்ச்சிப்பதும், பணம் சம்பாதிப்பதும், அதிகாரம் பெறுவதுமாகும்.” இந்த இயல்நிலை அவ்வளவு அதிகமாக பரவியிருப்பதால் இத்தாலிய மருத்துவ பத்திரிகை கொரியர் மெடிக்கோ 1984 லாஸ் ஆஞ்சல்ஸ் விளையாட்டுகளை “மருந்து ஒலிம்பிக்குகள்” என்று அழைத்தது.
உண்மை என்னவெனில், போட்டியில் வெற்றி பெறும் நிலையைப் பெறுவதற்காக போதப் பொருட்களையும் மற்ற சட்டவிரோதமான மருத்துவமுறைகளையும் கையாளுவது எல்லா நாடுகளிலுமே பல விளையாட்டுகளின் வாதையாயிருக்கின்றன. ஒவ்வொரு நாடும் இன்னொரு நாட்டைவிட மேன்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புவதால், விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கு போதப் பொருட்கள் கொடுப்பதை நிறுத்த எவரும் விரும்புவதில்லை. காலப் பொருத்தத்துக்கு உட்பட்ட விதத்தில் ஐரோப்பிய பாராளுமன்றம் குறிப்பிட்டதாவது, “பேராசையுடன்கூடிய எதிர்பார்ப்பும் அடிக்கடி நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளும் விளையாட்டு வீரன் நல்ல உடல் மற்றும் மனப் பக்குவத்தைக் காத்துக்கொள்வதற்காக ஏறக்குறைய சட்டப்பூர்வமான வழிகளைப் பயன்படுத்திடுவதற்கான சோதனையைக் கூட்டிடும் வகையில் அவனை அப்படிப்பட்ட அழுத்தத்தின்கீழ் வைக்கிறது. விளையாட்டுப் பயிற்சியாளர்களின் எதிர்ப்பு மிகக் குறைவாக இருக்கிறது என்ற உண்மைதானே சோதனையைக்கூட்டுகிறது.” ஆற்றல் பெருக்கும் மருந்துகள் இளம் பையன்களிலும் பிரயோகிக்கப்படுகிறது.
வெற்றி பெறும் ஆற்றலைப் பெருக்குவதற்குப் பிரயோகிக்கப்படும் பல்வேறு வழிகள்:
மருந்துகள் மூலம் வெற்றி பெறும் ஆற்றலைப் பெருக்குவதற்கு பல்வேறு வழிகள் இருக்கின்றன. உதாரணமாக:
ஸ்டிராய்டுகள், “ஒலிம்பிக் சரித்திரத்திலேயே மிக வினைமையான நிகழ்ச்சி” என்று விவரிக்கப்படும் காரியத்தில், சீயோல் 100 மீட்டர் ஓட்டத்தில் பதிவை ஏற்படுத்திய பென் ஜான்சன் தகுதியற்றவனாக்கப்பட்டதில் உட்பட்ட மருந்துகள். உடலில் அமினோ அமிலங்களின் உற்பத்தியைப் பெருக்கும் இந்த வஸ்துக்கள் தசையளவின் பெருக்கத்திற்கும், பலத்தைப் பெருக்குவதற்கும் அதே சமயத்தில் மூர்க்கத்தனத்தைக் கூட்டுவதற்கும் உதவுகிறது. உதாரணமாக, கடந்த பத்து ஆண்டுகளாக இருந்துவந்திருக்கும் பளு தூக்கும் போட்டிகளின் பதிவுகள் அனைத்துமே இந்த வஸ்துக்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதன் பலன்கள் என்பதாகச் சொல்லப்படுகிறது.
ஊக்கிகள், காஃபீன் மற்றும் ஸ்டிரைக்நீன் போன்ற ஊக்கிகள் கவனமாயிருப்பதையும் தாமதமாகக் களைப்படைவதையும் பெருக்க பயன்படுத்தப்படுகின்றன.
நோவகற்றும் வஸ்துக்கள், வேதனையை மறக்கச் செய்து அமைதியைத் தூண்டுகின்றன.
பீட்டா தடைகள், இதயத் துடிப்பைக் குறைத்து உடலை நிலைப்படுத்தும் வஸ்துக்கள் குறிப்பாக வில் வீரர்களாலும் குறிபார்த்து எய்யும் வல்லுநர்களாலும் பயன்படுத்தப்படுகிறது.
சிறுநீர்க் கழிவினைத் தூண்டும் மருந்துகள், எடையை வேகமாகக் குறைக்கவும், பரிசோதனைகள் செய்யப்படும் சமயத்தில் மற்ற வஸ்துக்கள் உடலில் இருப்பதை மறைப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
ஆற்றலைப் பெருக்கும் மருந்து பொருட்களாகப் பயன்படுத்தப்படுபவற்றில் இவை சில. ஆனால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடை செய்யப்பட்ட போதப் பொருட்களில் ஏறக்குறைய நூறு மருந்துகளைப் பட்டியலில் கொண்டிருக்கிறது. பிரச்னை என்னவென்றால், அவற்றில் ஒன்று தடை செய்யப்பட்டவுடனே, அல்லது அது உடலில் கலந்திருப்பதைக் கண்டுபிடிப்பதற்கான வழிகள் உருவாக்கப்பட்டவுடனே, வேறு வஸ்துக்களை உண்டாக்குவதற்கான பணியில் மருத்துவர்களும் மருந்து தயாரிப்பவர்களும் கொண்ட தொகுதிகள் முழு அளவில் இறங்கிவிடுகின்றனர்.
என்றபோதிலும், விளையாட்டு வீரர்கள் தங்களுடைய செயல் திறனை கூட்டிட நேர்மையற்ற வேறு வழிகளைத் தெரிந்துகொள்கிறார்கள். தண்ணீரில் தங்களுடைய நிலையை நன்றாக வைத்துக்கொள்ள, சில நீச்சல் வீரர்கள் தங்களுடைய சிறுகுடலை ஹீலியம் வாயுவால் நிரப்பியதுண்டு.
தங்களுடைய சகிப்புத்தன்மையை முன்னேற்றுவிக்க இரத்தமேற்றிக்கொண்டதாகப் பல விளையாட்டுப் போட்டி வீரர்கள் ஒப்புக்கொண்டார்கள். தங்களுடைய சொந்த இரத்தத்தின் சிவப்பு அணுக்கள் சற்று நேரத்துக்கு முன் எடுக்கப்பட்டு, பின்பு தங்களுக்கே ஏற்றப்படும்போது, தசைகள் உட்பட தங்களுடைய உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் பிராணவாயு தாராளமாகச் செல்கிறது என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
சில போட்டி விளையாட்டு வீராங்கனைகள் தங்கள் ஆற்றலைப் பெருக்குவதற்கு கர்ப்பமடையும் முறையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதைச் செய்திகள் அண்மையில் வெளிப்படுத்தின. கர்ப்பமாயிருக்கும் பெண்கள் இரத்தத்தின் பரும அளவு கூடுவதைக் காண்கிறார்கள். இது பிராணவாயு தசைகளுக்குச் செல்வதை அதிகரிக்கிறது. சில வீராங்கனைகள், விசேஷமாக அதிக உடல் பலம் உட்படும் போட்டிகளில் பங்குபெறுகிறவர்கள் தங்களுடைய செயல் திறனை மேம்படுத்துவதற்காகக் கர்ப்பமாயிருப்பதன் ஆரம்ப நிலைகளைத் தெரிந்தெடுத்திருக்கின்றனர். விளையாட்டுகள் முடிந்த பின்பு, அவர்கள் கருவைக் கலைத்துவிடுகிறார்கள்.
ஒரு கவலைக்கிடமான பிரச்னை
ஆனால் இந்தப் பிரச்னை எந்தளவுக்குப் பரவியிருக்கிறது? போதப் பொருட்களைப் பயன்படுத்தியதற்காக தகுதியற்றவர்களாய் நீக்கப்படும் அரிய சம்பவங்களை வைத்துப் பார்க்கும்போது, ஒரு சிறிய சதவீத வீரர்கள் தாமே வெற்றி பெறும் ஆற்றலைப் பெருக்குவதற்கான மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர் என்றும் தாங்கள் தெய்வங்களாகக் கருதும் அந்த வீரர்கள் அப்படி ஏதும் செய்ய மாட்டார்கள் என்றும் சில ரசிகர்கள் நினைக்கலாம். ஆனால் போட்டி விளையாட்டு உலகத்துடன் பழகியவர்கள் காரியங்களை வித்தியாசமாக நோக்குகிறார்கள்.
“அனபாலிக் ஸ்டிராய்டுகள் பொதுவாக நினைக்கப்படுவதைவிட அதிகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது,” என்றார் இத்தாலியைச் சேர்ந்த முன்னாள் டிஸ்கஸ் தட்டு எரியும் வீரர். மருந்து பொருளியல் நிபுணர் பேராசிரியர் சில்வியோ கராட்டினி கூறுகிறபடி, வெற்றி பெறும் ஆற்றலைப் பெருக்குவதற்காக மருந்துகளைப் பயன்படுத்தும் பிரச்னை இதுவரை கருதப்பட்டிருப்பதைக் காட்டிலும் அதிக கவலைக்கிடமானது. சிலர் குறிப்பிடுவதுபோல், உடல் ஆற்றல் பெற்றிருக்கும் விளையாட்டு வீரர்களில் 50 சதவீதத்தினர் தடை செய்யப்பட்ட வஸ்துக்களைப் பயன்படுத்துகின்றனர்.
விளையாட்டு வீரர்களுக்கு ஆபத்து
ஆற்றலைப் பெருக்குவதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதில் இருக்கும் பிரச்னை, நேர்மையற்ற விதத்தில் போட்டியில் நல்ல மாதிரியாகச் செய்யலாம் என்பதில் மட்டும் இல்லை. இன்றைய விளையாட்டு வீரன், விசேஷமாக போதப் பொருட்களை உட்கொள்ளுகிறவன், மறைந்திருந்தாலும் தேவைப்படும் தடை செய்யப்பட்ட வஸ்துக்களை பரிந்துரைக்கும் மருத்துவர்களை உட்படுத்தும் பெரியதொரு அணியின் பாகமாக இருக்கிறான். என்றபோதிலும், விளைவுகளை அனுபவிக்கவேண்டியது விளையாட்டு வீரன்தான்—கண்டுபிடிக்கப்படுவது அல்லது போட்டியிலிருந்து நீக்கப்படுவதில் உட்படும் அவமானம் மற்றும் அதைவிட முக்கியமானது கவலைக்கிடமான உடல் நலம் சார்ந்த ஆபத்துகள்.
அனபாலிக் ஸ்டிராய்டுகள் ஈரலுக்கும் இருதய நாளங்கள் அமைப்பு முறைக்கும் கேடு விளைவிப்பதாகவும் உடலுக்கு மற்ற பக்க பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது. இந்தப் போதப் பொருட்கள் சிறுநீர்க் கழிவினை முறைக்குக் கேடு விளைவிப்பதோடு, சில விளையாட்டு வீரர்களின் மூர்க்கத் தன்மைக்கும் காரணமாயிருக்கிறது.
ஊக்கிகள் போன்ற மற்ற போதப் பொருட்களைத் தவறாகப் பயன்படுத்துதல், “குழம்பிய நிலை, போதச் சார்பு, மாயக்காட்சிகளை” ஏற்படுத்துகின்றன. இரத்தமேற்றுதலைக் குறித்ததில், விஞ்ஞான பத்திரிகையாகிய மருத்துவர் குறிப்பிடுவதாவது, ஒரு விளையாட்டு வீரனின் சொந்த இரத்தத்தின் சிவப்பு அணுக்கள் அவனுக்கே ஏற்றப்படுவது அதன் ஆபத்துகளைக் கொண்டிராமல் இல்லை. இவற்றில் ஒன்று, “இரத்தத்தின் தன்னீர்ப்பாற்றல் அதிகரிப்பால் சில இடங்களில் இரத்த ஓட்டம் அளவுக்கு மிஞ்சி கூடுவதும் குறைவதுமாகும்,” மற்றும் இரும்புச் சத்து கூடிவிடுவது “ஈரல், சிறுநீரகம், இருதயம், சுரப்பிகள் போன்றவற்றின்மீது எதிர் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.”
வெற்றி பெறுவதற்காக மருந்துகள் எடுக்கும் பழக்கமுள்ளவர்களாக அறியப்பட்டிருக்கும் பலியானவர்களின் எண்ணிக்கை ஏராளம். நன்கு அறியப்பட்டவர்களில் டேனிஷ் சைக்கிள் ஓட்டும் பந்தயக்காரன் ஜென்சன், 1960 ரோம் ஒலிம்பிக்குகளின் போது மரித்தான். பிரிட்டிஷ் சைக்கிள் ஓட்டுநர் டாம் சிம்சன் 1967-ல் ஃப்ரான்ஸ் பயணத்தில் மரித்தான். டச் இடை தூர ஓட்டக்காரர் அகஸ்டினஸ் ஜாஸ்பர்ஸ் 1984-ன் லாஸ் ஆன்ஜல்ஸ் ஒலிம்பிக்கின்போது பந்தயம் முடிந்த உடனேயே மரித்தான்; மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த ஏழு போட்டிகளில் வெற்றிபெற்ற வீராங்கனை பர்ஜிட் டிரெசல் ஒரு விளையாட்டு மருத்துவரால் பல ஆண்டுகளாக பரிந்துரை செய்யப்பட்ட மருந்துகளின் நச்சால் கொல்லப்பட்டார்.
பல முறை ஒலிம்பிக் வெற்றி வீரனாகத் திகழ்ந்த கார்ல் லூயிஸ், “போட்டி விளையாட்டுக்குப் பரிதபிக்கப்படும் தன்மை இல்லை,” என்றார். “வெற்றிபெறுவதற்கென மருந்து அருந்துதல் ஆட்களைப் பலிவாங்கியிருக்கின்றன. விளையாட்டு அமைப்பாளர்கள் அதைப் பற்றி அறிந்திருக்கிறார்கள், ஒன்றும் சொல்வதில்லை.”
என்றபோதிலும், இந்தத் துயர்தரும் உண்மைகளை அறிந்திருந்தாலும், “உன்னை ஓர் ஒலிம்பிக் வீரனாக்கும் ஒரு மாத்திரையை நான் கொடுத்தால், அது உன்னை ஓர் ஆண்டுக்குள் கொன்றுவிடும் என்றாலும் அதை நீ எடுப்பாயா?” என்ற கேள்விக்கு விளையாட்டு வீரர்கள் எப்படி பதிலளிக்கிறார்கள்? பேட்டி காணப்பட்ட ஐ.மா. விளையாட்டு வீரர்களில் 50 சதவீதத்தினர் ஆம் என்றார்கள். இதே பதில் உலகின் மற்ற பகுதிகளில் வாழும் விளையாட்டு வீரர்களுடையதாகவும் இருக்கக்கூடும்.
இந்த வாதையை மருந்து துர்ப்பிரயோகத்துக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளுமா? நிபுணர்கள் கருத்துபடி, சரியான பரிசோதனையைச் செய்வதற்கான வசதிகளைக் கொண்டிருக்கும் மையங்கள் வெகு சில, பரிசோதனைகள் தாமே அதிக செலவை உட்படுத்துவதாயிருக்கின்றன. மேலும், பரிசோதனைகளின் கண்டுபிடிப்புகள் அநேக சமயங்களில் பொய்யாக்கப்பட்டிருக்கின்றன. இது சம்பந்தமாக அண்மையில் கொரியாவில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுகளின் சாதனைகள் இருந்தபோதிலும், ஆற்றலைப் பெருக்கும் புதிய வகை மருந்து முறைகள் அவற்றைக் கண்டுபிடிக்கும் சாதனையைக் காட்டிலும் ஒரு படி முன்னதாகவே இருக்கின்றன. என்றபோதிலும், போட்டி விளையாட்டுகளில் வெற்றி பெறுவதற்கான ஆற்றலைப் பெருக்கும் மருந்துகளை உட்கொள்ளுதலும், வன்முறயும் முடிவுக்கு வரும் என்று நம்புவதற்கு நல்ல காரணம் உண்டு. (g89 11/8)
[பக்கம் 9-ன் சிறு குறிப்பு]
“உன்னை ஓர் ஒலிம்பிக் வீரனாக்கும் ஒரு மாத்திரையை நான் கொடுத்தால், அது உன்னை ஓர் ஆண்டுக்குள் கொன்றுவிடும் என்றாலும் அதை நீ எடுப்பாயா?” பேட்டி காணப்பட்ட ஐ.மா. விளையாட்டு வீரர்களில் 50 சதவீதத்தினர் ஆம் என்றார்கள்
[பக்கம் 10-ன் சிறு குறிப்பு]
சோவியத் யூனியனில் 1986-க்கும் 1988-க்கும் இடையில் வெற்றி பெறும் ஆற்றலைப் பெருக்கும் போதைப் பொருட்களைப் பயன்படுத்தியதற்காக 290 விளையாட்டு வீரர்களும் பயிற்சியாளர்களும் தண்டிக்கப்பட்டார்கள்.—லெனின்ஸ்கோயி ஸ்நமியா, ஒரு சோவியத் பத்திரிகை
[பக்கம் 11-ன் சிறு குறிப்பு]
“ஸ்டிராய்டுகள் எடுக்கும் விளையாட்டு வீரர்கள் கீழ்த்தரமாகவும் மூர்க்கத்தனமாகவும் ஆகிவிடுகிறார்கள்.”—டாக்டர் ராபர்ட் வோய், ஐ.மா. ஒலிம்பிக் குழுவின் தலைமை மருத்துவ அலுவலர்