ஸ்டிராய்டுகள் அவை உங்களுக்காகவும் உங்களுக்கும் என்ன செய்கின்றன
ஸ்டிராய்டுகள்! இந்த வார்த்தையே, கொரியக் குடியரசிலுள்ள சீயோலில் நடைபெற்ற 1988 ஒலிம்பிக் விளையாட்டுக்களின் மீது அவதூறின் நிழலைப் பரப்பியது. அநேக நம்பிக்கை நிறைந்த விளையாட்டு வீரர்கள் போத மருந்துகளை உபயோகப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு அகில உலக ஒலிம்பிக் குழுவினால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டனர். 100 மீட்டர் இறுதி ஓட்டத்தில், உலகிலேயே வேகமான குறைந்த தூர ஓட்டக்காரர், தன்னுடைய தங்கப்பதக்கத்தின் மகிமையில் திளைத்தார்—ஆனால் அதிக நாட்களுக்கு அல்ல. ஓட்டப்பந்தயத்திற்குப்பின் நடத்தப்பட்ட பரிசோதனைகள் ஸ்டிராய்ட் உபயோகத்தை வெளிப்படுத்தியது. அவர் தன்னுடைய பதக்கத்தையும் உலக சாதனையையும் இழந்தார்.
எனினும், இது விளையாட்டு உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தவில்லை. கானடாவிலுள்ள கல்கேரியில் நடைபெற்ற 1988 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில், பரிசோதனைக்குப் பின் ஸ்டிராய்டு உபயோகித்ததற்காக ஒரு விளையாட்டு வீரர் விளையாட்டுகளிலிருந்து தடை விதிக்கப்பட்டார். 1987-ல் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஜுரிச்சில் நடைபெற்ற, மதிப்பு வாய்ந்த உலகத் தரமுள்ள தட கள விளையாட்டுப் போட்டிகளில் ஸ்டிராய்டு பரிசோதனைகள் இருப்பதைத் தெரிந்து கொண்டதால் ‘சக்தி’ நிகழ்ச்சிகளில்—குண்டு வீசுதல், சுத்தி எறிதல், ஈட்டி எறிதல், தட்டு வீசுதல்—போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருந்த 28 விளையாட்டு வீரர்களில் பாதிபேர் வரவில்லை என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.
வெனிசுலாவிலுள்ள கராகஸில் 1983-ல் பான்–அமெரிக்கன் விளையாட்டுகளிலிருந்து ஸ்டிராய்டு உபயோகத்திற்காக 15 விளையாட்டு வீரர்கள் தடை செய்யப்பட்டனர். 1984 ஒலிம்பிக் விளையாட்டுகளும் ஸ்டிராய்டு அவமானமின்றி இருக்கவில்லை, ஏனெனில், வெற்றிவீரர்களிடமிருந்து பதக்கங்கள் பறிக்கப்பட்டன.
அநேகமாக ஒவ்வொரு விளையாட்டும் அதற்கே உரிய ஸ்டிராய்டு அவதூறைக் கொண்டுள்ளது—சிலவற்றைக் குறிப்பிட, தடகளம், உடற்கட்டு, பளுதூக்குதல், கால்பந்து போன்றவை. ஐக்கிய மாகாணங்களின் பல்வேறு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கால்பந்தாட்ட வீரர்கள் ஸ்டிராய்டு உபயோகத்தினால் பருவக்காலத்துக்குப் பின் நடைபெறும் பந்தெறியும் போட்டிகளிலிருந்து தடைசெய்யப்பட்டனர். கால்பந்தாட்டத்தைத் தொழிலாகக் கொண்டோரின் உலகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற 14 வருட NFL அனுபவசாலி குறிப்பிட்டதாவது: “சில குழுக்களில், 75-லிருந்து 90 சதவிகித விளையாட்டுவீரர்கள் ஸ்டிராய்டு உபயோகிக்கின்றனர்.” இன்றைய மனோதத்துவம் என்ற பத்திரிகை அறிவிப்பதாவது: “உடற்கட்டு போட்டியாளர்களில் ஸ்டிராய்டு உபயோகிப்பவர்கள் 100 சதவிகிதம் என்று பேட்டி காணப்பட்டவர்களில் பலர் கூறுகின்றனர்.”
மேலுமாக ஸ்டிராய்டுகளைத் தகாது உபயோகிப்பது கல்லூரி மற்றும் தொழிலாக விளையாடும் விளையாட்டுவீரர்களுடன் நின்றுவிடவில்லை. இன்று ஸ்டிராய்டுகள், ஆண் மற்றும் பெண் உடற்கட்டு வீரர்கள், விளையாட்டு வீரர்களினால் மட்டுமல்ல, தங்களுடைய பருவவயதை அடையாத சிறுவர்களாலும் பரவலாக உபயோகிக்கப்படுகின்றது.
ஐக்கிய மாகாண ஒலிம்பிக் போத மருந்து கட்டுப்பாட்டு இயக்கத்தின் உறுப்பினரான டாக்டர் வில்லியம் N. டெய்லர், போத மருந்து உபயோகமானது “தொற்றுநோய் அளவினை” எட்டிவிட்டதாக எச்சரிக்கின்றார். இந்தத் தொற்றுநோய் எந்த அளவுக்கு எட்டியிருக்கின்றது? விளையாட்டுவீரர்களுடன்கூட கணக்குப் பரிசோதகர்கள், பேராசிரியர்கள், மேலும் திறமையற்றத் தொழிலாளர்கள், காவல் அதிகாரிகளும்கூட ஸ்டிராய்டுகளைத் துர்ப்பிரயோகம் செய்கிறதாக டெய்லர் குறிப்பிடுகிறார். “இது இனிமேலும் ஒரு விளையாட்டுப் பற்றிய பிரச்னை அன்று,” அவர் சொல்கிறார், “இது ஒரு சமூகப் பிரச்னை. மேலும் இதை உபயோகிப்போர் வெடிகுண்டுடன் விளையாடுகின்றனர்.”
அனபாலிக் ஸ்டிராய்டுகள், டெஸ்டோஸ்டிரோன் என்ற ஆண் ஹார்மோன்களின் சக்திவாய்ந்த செயற்கை விவரிப்பாகும். வருடங்களினூடாக, ஸ்டிராய்டுகள், தாமதமாகிப்போன பருவமடைதலைக் கொண்டுவரவும், நோய் அல்லது அறுவைசிகிச்சையினால் சுருங்கிப் போன தசைகளை உண்டாக்கிக் கட்டவும், கதிரியக்கம் அல்லது கிமோதரபி சிகிச்சையின்போது இரத்த செல்களுக்குப் பாதுகாப்பளிக்கவும், எச்சரிக்கையான மேற்பார்வையின் கீழ் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டுவந்திருக்கிறது. மருத்துவர்களுக்குத் தெளிவாகத் தெரியும் இந்த மற்றும் வேறு உடலியல் பிரச்னைகளுக்கு, மருத்துவத் துறையின் கரங்களில் ஸ்டிராய்டுகள் ஒரு சக்திவாய்ந்த கருவியாக இயங்குகின்றன.
விளையாட்டுவீரர்களுக்கு அதிக அளவு டெஸ்டோஸ்டிரோன் ஆண் ஹார்மோன்களைக் கொடுப்பதினால், தசைகள் மற்றும் உடல்பொருட்கள் வேகமாக வளர்ந்து, அவர்களுடைய விளையாட்டுகளை மேம்படுத்தமுடியும் என்று 1950-களில், ரஷ்ய மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் கருதினர். அவர்களுடைய நோக்கமானது, மேலும் வேகமாக ஓடவும், உயரம் தாண்டவும், தட்டையும் ஈட்டியையும் தள்ளி எறியவும், அதிகப் பளுவைத்தூக்கவும் அவர்களுக்குச் சக்தியளித்து எல்லாச் சக்தி நிகழ்ச்சிகளிலும் சிறக்க வேண்டுமென்பதே. இதன் விளைவாக ரஷ்ய விளையாட்டுவீரர்கள் அகில உலக விளையாட்டுப் போட்டிகளின் உலக அரங்கத்தில், அன்றைய விளையாட்டு நிகழ்ச்சிகளில் அதிகாரம் செலுத்திக்கொண்டு குறிப்பிடத்தக்கவிதத்தில் மேற்கொண்டுச் சென்றனர்.
தேசீயம் தன்னுடைய அவலட்சணமானத் தலையைத் தூக்கியது. ஓர் அமெரிக்க மருத்துவர் சுலபமாகவும் மலிவாகவும் தயாரிக்கக்கூடிய, மாத்திரையாகவோ ஊசியாகவோ எடுத்துக்கொள்ளக்கூடிய ஒரு செயற்கை அனபாலிக் ஸ்டிராய்டை—டெஸ்டோஸ்டிரோனுக்கு சம்பந்தப்பட்ட ஒரு மருந்தை—தயாரிப்பதன் மூலம் விளையாட்டுப் போர்க்களத்தில் இருந்த வித்தியாசங்களை சரிசெய்ய முடிவு செய்தார். அந்த மருத்துவருடைய தயாரிப்பு அதிர்ச்சியூட்டும் விதத்தில் வெற்றியாக நிரூபித்தது. வேதியலின் மூலமாக இப்பொழுது பெரிய உடல்களும் மேம்பட்ட விளையாட்டு சாதனைகளும் சாத்தியமாகும். விளையாட்டு யுத்தம் தொடங்கியது!
தன்னுணர்வின் காரணமாக வந்தவர்களும் உண்டு. ஐக்கிய மாகாண உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் அதிகாரி ஒருவர் “முட்டுகின்ற தசைகளும் உட்படுகின்றன” என்று சொல்கிறார். “கடற்கரையில் பார்ப்பதற்கு நன்றாக இருக்கவேண்டுமென ஆண்கள் நினைக்கின்றனர். உயர்நிலைப் பள்ளிப் பிள்ளைகள் ஸ்டிராய்டுகள் அவர்களுடைய திறமையை மேம்படுத்தி ஒரு விளையாட்டு உதவித் தொகயைப் பெறவோ, விளையாட்டுகளில் விளையாடவோ அல்லது தங்கள் மனதின் பெண்ணை வெற்றிக் கொள்ளவோ உதவும் என்று நினைக்கின்றனர்.” தி வால் ஸ்டிரீட் ஜர்னல், அக்டோபர் 4, 1988 அறிக்கையிடுவதாவது: “நூறாயிரக்கணக்கான அமெரிக்க இளைஞர்கள் நன்றாக விளையாடவோ, பார்க்க நன்றாக இருப்பதற்காகவோ அனபாலிக் ஸ்டிராய்டுகளை வாய்மூலமாக அல்லது ஊசிமூலமாக எடுத்துக் கொள்கின்றனர்.”
அழுத்தம் இருக்கின்றது
விளையாட்டு உலகில் நட்சத்திரங்களாவதற்கு ஆசைப்படுகின்ற உயர்நிலைப் பள்ளி விளையாட்டுவீரர்களும் அவர்களுடைய பயிற்சியாளர்களும், அவர்களுடையப் பெற்றோர்களும், இன்னும் கொஞ்சம் அதிகமான எடையும் சரியான இடங்களில் கூடுதலாக கொஞ்சம் தசைகளும், புகழ்நிலைக்கும் சாதாரண நிலைக்குமிடையேயுள்ள வித்தியாசத்தை அர்த்தப்படுத்தக்கூடும் என்பதை அறிவர். நட்சத்திர அந்தஸ்தையும் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் அவர்களுடைய பயிற்சியாளர்களுக்கும் புகழையும் தேடித்தர விரும்புகிறவர்களுக்கு, தாராளமாக ஆறு அல்லது ஏழு இலக்க சம்பளம் கொடுக்கப்படுவதன் காரணமாகவும், அதோடு சேர்ந்து அவர்களுடையப் பெற்றோருக்கு அது கொண்டுவரப் போகிற மகிமையும் சேர்ந்து, ஸ்டிராய்டுகளின் உதவியை நாடி போட்டியில் வெற்றி பெறுவதற்கு எதிர்கால நட்சத்திரங்களின் மீது அழுத்தம் இருந்து கொண்டே இருக்கிறது.
இன்றைய மனோதத்துவம் பத்திரிகையில் எழுதுகையில் டாக்டர் டெய்லர் சொன்னார்: “சராசரி அளவிலிருக்கும் தங்கள் பிள்ளைகளைத் தோற்றத்தில் பெரியவர்களாகக்குவதற்கு விரும்பும் தகப்பன்மார்களிடமிருந்து அநேக அழைப்புகள் எனக்கு வந்திருக்கின்றன. வேதியல் செயல்முறையினால் பிள்ளைகளைக் கையாளுவதற்காக எனக்கு கோடிக்கணக்கான ரூபாய் அளிக்க முன்வந்திருக்கிறார்கள்.” உடற்பயிற்சிக் கல்வியில் நிபுணர் ஒருவர், உயர்நிலைப்பள்ளி விளையாட்டு வீரர்களுக்கு ஸ்டிராய்டு உபயோகத்தில் பெற்றோர் மற்றும் பயிற்சியாளர்களின் ஆதரவு இருப்பதாக தெரிவிக்கிறார்.
ஸ்டிராய்டு உபயோகிப்பவர்கள் மருந்து வேலை செய்வதை ஒப்புக் கொள்கிறார்கள்—அது எதிர்ப்பார்க்கப்படும் சதைப்பற்றையும் சக்தியையும் அளிக்கிறது. முன்பு மற்போரை தொழிலாகக் கொண்டிருந்தவர் சொல்வதாவது: “ஸ்டிராய்டுகளை நான் வாய்வழியாக, நாளுக்கு 15 மில்லிகிராம் எடுத்துக்கொண்டேன். 30 நாட்களில் 315 பவுண்டுகளாக இருந்தது 390 பவுண்டுகளானது. இயற்கையாக இதற்கு ஆறு மாதங்களாகும்.” பளு தூக்குபவர்கள் அதிகமான பளுவை நீண்ட நேரம் தங்களால் தூக்கிக் கொண்டிருக்க முடியும் என்றும் அவ்விதமாகச் செய்கையில், இழந்த வலுவை மீண்டும் பெறுவதற்கான கால இடைவெளி குறிப்பிடத்தக்க வகையில் குறைவுபடுவதாகும் தெரிவிக்கின்றனர்.
மற்ற தேசங்களிலும்கூட உடற்கட்டை உருவாக்குதல், வளர்ந்துவரும் ஓர் ஆர்வ வெறியாக இருக்கிறது. உதாரணமாக சீனாவில் ஆகஸ்ட் 1987, பெண்களின் விளையாட்டும் உடல்நலமும் பத்திரிகையின் பிரகாரம், சரீர உடல்நலமும் உடல் வளர்ச்சியும் “தேசம் முழுவதிலும் பிரபலமாக உள்ளது. உடற்கட்டை உருவாக்குவது பற்றி எழுதும் பத்திரிகைகள் எல்லாப் பெரிய நகரங்களிலும் இப்பொழுது கிடைக்கக்கூடியதாக இருக்கிறது.”
சீனாவிலிருந்து வெகுத் தொலைவிலுள்ள கிழக்கு ஜெர்மனியில், ஸ்டிராய்டுகள் விளையாட்டுவீரர்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கை வகிக்கின்றன. தி வால் ஸ்டீரீட் ஜர்னலின் இந்த மேற்கோள் போதுமானதாக இருக்கின்றது: “‘கிழக்கு ஜெர்மன் ஸ்டிராய்டுகள் மிகச் சிறந்தவை’, என்கிறார். கலிஃபோர்னியாவில் சட்டத்துறையிலுள்ள ஒரு மனிதர். ‘அவர்களுடைய விளையாட்டுவீரர்கள் மேம்பட்டவர்களாக, வீறியமுள்ளவர்களாக, வலுவுள்ளவர்களாக இருப்பதற்கு பெயர்பெற்றவர்களாக இருக்கின்றனர்.’”
மகிமைக்கு என்ன விலை?
“கொக்கேய்ன் பிரச்னை மிகப் பெரியது என்பதாக மக்கள் நினைக்கிறார்கள்” என்று விளையாட்டுவீரர்களுக்கு சிகிச்சையளிக்கும் பிரபல நபர் ஒருவர் குறிப்பிட்டார். “அனபாலிக் ஸ்டிராய்டுகளைப் போன்று அது அத்தனை அளவுக்கு மீறிய ஒன்று அல்ல. ஆனால் சிறுபிள்ளைகளின் மத்தியில் அது கொள்ளைநோயளவிலுள்ளது.” உலகம் முழுவதிலுமுள்ள இளைஞர்கள் ஸ்டிராய்டுக்கு ஆதரவுத் தர விரைகின்றனர். உடலை மேம்படுத்துவதற்காக அவர்கள் விளையாடும் இந்தக் கொடிய விளையாட்டுக்காக அதிகமான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்.
“சித்தபிரமை, மாயக்காட்சிகள், புகழில் ஏமாற்றம், வன்முறை மனச்சாய்வுகள் ஆகியவை தோன்றும் போதல்லாம் பயங்கரமாக இருக்கின்றன” என்பதாக இன்றைய மனோதத்துவம் குறிப்பிடுகிறது. “மாசச்சூட்ஸ் பெல்மான்டிலுள்ள மக்ளீன் மருத்துவமனையில் செய்யப்பட்டுவரும் ஆராய்ச்சியின்படி, ஸ்டிராய்டு பயன்படுத்தும், உடற்கட்டில் ஆர்வமுள்ளவர்கள், இப்படிப்பட்ட உளவியல் மற்றும் பித்துவெறி நோய்க்குறிகளுக்குச் சாதகமான மனச்சாய்வுடையவர்களாக இருக்கக்கூடும்.”
ஆண்களில் இந்தப் பக்கப் பாதிப்புகளோடுகூட, விதை சத்தின்றித் தேய்ந்துபோதல், அறுவை சிகிச்சையைச் சில சமயங்களில் தேவைப்படுத்தும் பெரிதாகிவிடும் மார்பகங்கள், மலட்டுத்தன்மை, ஆண்மையின்மை போன்ற ஆபத்துகளிருக்கின்றன. கல்லீரல் கட்டி, சிறுநீரகச் சேதம், வலிப்பு, இருதய நோய் மற்றும் வன்முறைக்கும் தற்கொலைச் சார்ந்த மனச்சாய்வுகளுக்கும் வழிநடத்தும் ஆள்தன்மையில் மாற்றங்கள் ஆகியவை ஏற்படும் ஆபத்து இருக்கிறது.
ஸ்டிராய்டு பக்கபாதிப்புகள் பெண்களில் மாற்ற முடியாத ஆண்மையை—உடலிலும் முகத்திலும் முடி, தாழ்வான குரல், மார்பகங்கள் சுருங்குதல், மாதவிடாய் சுழற்சியில் இடையூறு—உண்டுபண்ணக்கூடும்.
சரியான உடற்கட்டுக்கான திடீர் முயற்சி என்றழைக்கப்படும் இதில் பெருத்த மற்றும் மேம்பட்ட உடல்களை உருவாக்குவதற்கு மருந்துகளை உபயோகிப்பவர்களைப் பற்றி ஒருவர் சிந்திக்கையில், அது உண்மையில் சரியான உடற்கட்டா அல்லது சரியான உடற்கட்டுக் கற்பனையா என்பதாக ஒருவர் கேட்டுக் கொள்ள வேண்டும். மகிமை மறைந்தபின் உடற்கட்டுக்கு என்ன நேரிடுகிறது? தங்கள் இளமைக்கால வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்த்து, விளையாட்டு புகழ்நிலைக்கு அல்லது தற்காதல் கோளறுக்கும் வீண்தற்பெருமைக்கும் பேரளவான விலைக்கொடுத்திருப்பதாக முடிவுக்கு வருவார்களா? குறுகிய கால மகிமைக்காகவும் இந்தக் காரிய ஒழுங்கிலுள்ளவர்களால் பாராட்டப்படுவதற்காகவும் ஒருவரின் உடலை தியாகம் செய்வது உண்மையில் மனதுக்குச் சஞ்சலமாயிருப்பதை ஞானமான ஓர் இளைஞன் உணருவான். (g89 3/22)