பைபிளின் கருத்து
வாடகை தாய்மை—அது கிறிஸ்தவர்களுக்கா?
“ஒரு மனிதன் நற்பண்புகள் உள்ளவனாயிருக்கும் வரை, அவன் எந்தப் பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அது முக்கியமில்லை,” என பூர்வ ரோம புலவர் ஹாரஸ், எழுதியபோது வாடகை தாய்மையைப்பற்றி அவர் ஒன்றும் அறியாதிருந்தார். “எங்கு நற்குணம் இல்லையோ அங்குப் பிறப்பும் ஒன்றுமில்லை,” என்ற 17-ம் நூற்றாண்டின் பிரெஞ்சு எழுத்தாளருடைய முதுமொழியும், வாடகை பிறப்புக் கருத்துச் சட்டப்பூர்வமான ஒரு புதைசேறாக ஆவதற்கும் வெகுகாலத்திற்கு முன்னே எழுதப்பட்டது. ஆனால் Ms. பத்திரிகையில் மேரி டாமினால் அறிக்கை செய்யப்பட்டதுபோல, புதிய இனப்பெருக்க கலையில், “முட்டையை உற்பத்தி செய்பவர், குழந்தையாகவிருக்கும் கருவை அடைகாப்பவர், பிறந்த குழந்தையைப் பேணுபவர் ஆகியோரின் வேலைகள்” இரண்டு அல்லது மூன்று “தாய்மார்கள்” மத்தியில் பகிர்ந்துகொள்ளப்படலாம். “நற்குணம்” மற்றும் “முக்கியத்துவம்” ஆகிய கருத்துக்கள் சந்தேகத்திற்குரியவையாயும், சிக்கலானவையாயும் மாறிவிட்டன.
வாடகை தாய்மார்களை உபயோகிக்கும் பழக்கம் 1970-களின் மத்திபத்தில் உலகக் காட்சியில் திடீரெனத் தோன்றிற்று. இது இதற்குமுன் எதிர்ப்படாத சமூக, ஒழுக்க சம்பந்தமான, சட்டப்பூர்வமான பிரச்னைகளைத் தோற்றுவித்தது. மலடான சில தம்பதிகள் இந்த நவீன இனப்பெருக்க முறையைப் பயன்படுத்திக்கொள்ள ஆர்வமுடனிருந்தனர். மறுபட்சத்தில், மருத்துவர்களும், வழக்குரைஞர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், வளர்ந்துவரும் இனப்பெருக்க கலையைத் தொடர்ந்து முன்னேற்றுவிக்க போராடினர். இது நெறிமுறை மற்றும் ஒழுக்க சம்பந்தமாக எழுப்பப்படும் கேள்விகளைக் கையாளுவதற்கான வழிமுறைகளைத் தொகுப்பதற்கான முயற்சியேயாகும்.
வாடகை தாய்மை என்பது என்ன?
வாடகை அல்லது ஒப்பந்த தாய்மை என்பது செயற்கை முறை கருத்தரிப்புச் செய்யப்பட்ட ஒரு பெண்ணைக் கொண்டு மற்றொரு பெண்ணுக்காக ஒரு குழந்தையைப் பெறச்செய்வது. பாரம்பரிய வாடகை தாய்மைத்துவம் என்றழைக்கப்படுவது, ஒரு வாடகை தாய் தன்னோடு ஒப்பந்தம் செய்துகொண்ட தம்பதியிலிலுள்ள கணவனின் விந்துவைக்கொண்டு செயற்கை கருத்தரிப்பு முறையில் கருத்தரிக்கச் செய்யப்படும்போது நிறைவேறுகிறது. இதன் காரணமாக இந்த வாடகை தாய் அக்குழந்தையின் பிறப்பு மூலத்துக்குரிய தாயாக இருக்கிறாள். கருக்கால வாடகைத்துவம் (Gestational surrogacy) என்பது மனைவியின் முட்டையும் கணவனின் விந்துவும் கருப்பைக்கு வெளியே In-vitro (சோதனைக் குழாய்) கருவுறுதல் என்ற ஒரு செயல்முறையில் இணைக்கப்படுகிறது. இதிலிருந்து உண்டாகும் கரு, வாடகை தாயின் கருப்பையில் கருவைச் சுமப்பதற்காக வைக்கப்படுகிறது.
வாடகை தாய்மையில் ஏன் இந்த அதிகரிப்பு? ஒரு காரணமானது, அதி தொழில்நுட்ப விஞ்ஞானம் பெண்கள் குழந்தைகளைப் பெறுவதற்கு உதவிசெய்ய பலவழிகளைக் கண்டுபிடித்திருக்கிறது. தம்பதிகள் ஒரு குழந்தையைப் பெற அதிக ஆவலுள்ளவர்களாக இருக்கலாம். ஆனால் மலடு, அசெளகரியம், தத்தெடுப்பதற்கு ஆரோக்கியமான குழந்தைகள் இல்லாமை, போன்ற காரணங்களால் அவர்கள் ஒரு குழந்தையைப் பெறமுடிவதில்லை. ஆகவே ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதற்காக மற்றொரு ஆளின் உடலை வாடகைக்கு எடுக்கின்றனர். அதிகளவு பணம் இதில் உட்படுவதால், வாடகை தாய்மைத்துவம், “விருப்பத்திற்குட்படாத கட்டாய வேலை மற்றும் அடிமைத்தனம்,” மற்றும் “ஏழைகளின் கருவுறுதிறனைச் சுயநலத்திற்காக பயன்படுத்திக்கொள்ளுதல்” போன்ற முகஸ்துதியற்ற வார்த்தைகளில் விவரிக்கப்படுகிறது.
ஐக்கிய மாகாணங்களில், நியூ ஜெர்ஸியின் உச்ச நீதிமன்றம் பணக்காரர்கள் ஏழைகளைத் தங்களுடைய சுயநலனுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகளை உணர்ந்திருந்தது. அது வாடகை தாய்மை வழக்கு ஒன்றில் இவ்வாறு கூறிற்று: “முடிவாக, வேலை, அன்பு, அல்லது உயிர் போன்ற எதுவாக இருந்தாலும் சரி, பணக்காரர்களால் வாங்கமுடிந்ததைக் கொடுப்பதைவிட, அதிக முக்கியம் என்று சமுதாயம் கருதுகிற மதிப்பீடுகளும் உள்ளன.” பிரான்ஸின் உச்ச நீதிமன்றம் வாடகை தாய்மை ஒரு பெண்ணின் உடலை சீர்குலைக்கிறது, மற்றும் “மனித உடல் கடன் கொடுக்கப்படவோ, வாடகைக்குவிடப்படவோ, விற்பனை செய்யப்படவோ கூடாது,” என்பதாகக் கூறிற்று.
வாடகை தாய்மையின் பிரச்னைகள்
வாடகை தாய்மை அநேக பிரச்னைகளைக் கொண்டுவருகிறது. அதில் ஒன்று, குழந்தையைப் பிறப்பிக்கும் தாய் அக்குழந்தையை வைத்துக்கொள்ள விரும்பினால் வரும் வெட்கக்கேடான சட்டப்பூர்வமான வழக்குகளுக்கான வாய்ப்பாக இருக்கிறது. அது யாருடைய குழந்தை, பெற்றெடுக்கிற பெண்ணுடையதா அல்லது கருவைக் கொடுக்கிற பெண்ணுடையதா? வழக்கமாகவே சந்தோஷித்து மகிழுவதற்கான நேரமாகிய ஒரு குழந்தையின் பிறப்பு, சிலநேரங்களில் ஒரு நீதிமன்ற வழக்குக்கு வழிநடத்துகிறது. மற்றொரு பிரச்னை: வாடகை தாயாவதற்கு ஒப்புக் கொண்ட சில பெண்கள், ஒப்பந்தம் செய்யப்பட்ட குழந்தை வளர்ந்து, பிறக்கும்போது தங்களுடைய உணர்ச்சிகள் மாறுவதைக் காண்கின்றனர். சில மாதங்களுக்கு முன் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வது அதிகக் கடினமாகிக்கொண்டே வருகிறது. தாய்க்கும் அவளது வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் இடையே அதிக வலிமையுள்ள, கட்டும் ஓர் உறவுமுறை உருவாக்கப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு கட்டை எதிர்பார்த்திராத ஒரு வாடகை தாய் அந்தக் குழந்தையைக் கொடுப்பதைப்பற்றிய தன்னுடைய உணர்ச்சிகளை இவ்வாறு விவரிக்கிறாள்: “அது யாரோ ஒருவர் இறந்துபோனது போல் இருந்தது. என் மகளுக்காக என் உடல் கதறிக்கொண்டிருந்தது.”
மேலும், அத்தகைய ஒரு பிறப்பு, வாடகை தாயின் மற்ற குழந்தைகள்மீதும், அக்குழந்தையை ஏற்றுக்கொள்ளும் குடும்பத்தினர்மீதும், அந்தக்குழந்தையின் மீதும்கூட என்ன நீடித்த பாதிப்புகளைக் கொண்டிருக்கும்? அல்லது ஒரு வாடகை தாய்க்குப் பிறந்த ஒரு குழந்தைக்கு ஒரு பிறவி குறைபாடு இருக்குமானால் என்ன? அந்தத் தந்தை அக்குழந்தையை எடுத்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறாரா? இல்லையெனில், அந்தக் குழந்தையைப் பராமரிக்கும் செலவுகளை ஏற்பது யார்? அதைவிடவும் மிக முக்கியமான கேள்வி, வாடகை தாய்மையைக் கடவுள் எவ்வாறு கருதுகிறார்?
வாடகை தாய்மை திருமணத்தைக் கனப்படுத்துகிறதா?
கடவுள் திருமணத்தைப் புனிதமான ஒன்றாகக் கருதுவதாக அவருடைய வார்த்தை நமக்குக் கூறுகிறது. உதாரணமாக, எபிரெயர் 13:4 இவ்வாறு கூறுகிறது: “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும், விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.”a அனைத்துக் கிறிஸ்தவர்களும் திருமணத்தைக் கனமுள்ளதாகக் கருதி அவ்வாறு கடைப்பிடிக்கும்படி கடவுள் எதிர்பார்க்கிறார். திருமணத்தைக் கறைப்படுத்துவது எது? திருமணத்திற்கு முன்னதாகவே திருமணத்தைக் கனவீனப்படுத்தும் வேசித்தனமும், திருமண உறவில் நுழைந்த பின்னர் கனவீனப்படுத்தும் விபசாரமுமேயாகும்.
வாடகை தாய்மை விவாகத்தைக் கனப்படுத்தி, விவாகமஞ்சத்தை அசுசிப்படுத்தாதிருக்கிறதா? சுருங்கச் சொன்னால், இல்லை. பாரம்பரிய வாடகை தாய்மைத்துவம், கொடுப்பவரின் விந்துவினால் பெண்ணைச் செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்வதைத் தேவைப்படுத்துகிறது. லேவியராகமம் 18:20-ல் (NW) பைபிளின் கருத்தைக் காணலாம். அது இவ்வாறு சொல்கிறது: “பிறனுடைய மனைவிக்கு உன்னுடைய விந்தணுக்கசிவைக் கொடுத்து, அதனால் நீ உன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாதே.” உடலுறவின் மூலம் விந்துக்களை ஏற்றுதல் மற்றும் கொடுப்பவரின் விந்தைச் செயற்கை முறையில் ஏற்றுதல், இவ்விரண்டையும் வித்தியாசப்படுத்திக் காட்ட பைபிள் அடிப்படை ஒன்றுமில்லை. ஆகவே, இந்த இரண்டு விஷயங்களிலும், பெண்ணின் சட்டப்பூர்வமான கணவன் அல்லாத ஓர் ஆணின் விந்துவினால் செயற்கை முறையில் கருத்தரிப்பு நிறைவேற்றப்படும்போது விபசாரம் அல்லது வேசித்தனம் செய்யப்படுகிறது.
கருக்கால வாடகைத்துவத்தைப்பற்றி (Gestational surrogacy) என்ன? இதுவும்கூட விவாகமஞ்சத்தை அசுசிப்படுத்துகிறது. கருவுற்ற முட்டை கணவன் மனைவி ஆகிய இருவரின் ஒரு கூட்டினாலே உருவாகிறது என்பது உண்மையே. ஆனால் அதன் பிறகு, அது மற்றொரு பெண்ணின் கருப்பையில் வைக்கப்பட்டு, உண்மையில், இதனாலே அவள் கருத்தரிக்கப்படுகிறாள். இந்தக் கருத்தரிப்பு, வாடகை தாய் மற்றும் அவளுடைய சொந்த கணவன் ஆகிய இருவருக்கிடையே ஏற்பட்ட உடலுறவின் விளைவல்ல. இதன் காரணமாக, அவளுடைய இனப்பெருக்க உறுப்புகள் இப்போது தன்னுடைய சொந்த விவாகத் துணையல்லாத வேறொருவரால் உபயோகப்படுத்தப்படுகிறது. இது, ஒரு பெண் தன்னுடைய சொந்த கணவனுக்கு மட்டும் தான் பிள்ளைப் பெறவேண்டும் என்ற பைபிளின் ஒழுக்க நியமங்களுக்கு எதிராக இருக்கிறது. (உபாகமம் 23:2-ஐ ஒத்துப்பார்க்கவும்.) வாடகை தாயின் சொந்த கணவனல்லாத ஓர் ஆள் அவளுடைய இனப்பெருக்க உறுப்புகளைப் பயன்படுத்துவது தகுதியற்றதாயிருக்கும். அது விவாகமஞ்சத்தைத் தகாத ஒரு வழியில் பயன்படுத்துவதாகும். இதன் காரணமாக, வாடகை தாய்மை கிறிஸ்தவர்களுக்கு அல்ல. (g93 3/8)
[அடிக்குறிப்புகள்]
a நியூ டெஸ்டமண்ட் உவோர்ட் ஸ்டடீஸ் நோக்கீட்டுக் குறிப்பு எபிரெயர் 13:4-ன் “விவாக மஞ்சம்” அதன் நிலையை மட்டும் அல்ல, ஆனால் திருமணத்தின் பயனையும்கூட கறைப்படுத்தக்கூடாது என்று அர்த்தப்படுத்துகிறது.