உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g93 7/8 பக். 30-31
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1993
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • தொற்றுநோயின் மறுதோற்றம்
  • கடைநிலை வாழ்க்கை
  • பருவவயது சாத்தானிய கொள்கை
  • வளிமண்டல வெப்ப சூறாவளி
  • தர்மம் யாருக்கு?
  • மணவிலக்கு நம்மைப் பிரிக்கும்வரை
  • சிட்சையின்மைக்குப் பெற்றோர் விலைகொடுக்கின்றனர்
  • பாதிரிகளின் மணவிலக்கு வீதம் அதிகரிக்கிறது
  • ஆயர்களின் இன்னிசை
  • நன்கு காக்கப்பட்ட மருத்துவ இரகசியம்
  • உடல் வெப்பநிலை மாற்றம்
  • நுண்ணுயிரிகள் பழிவாங்குதல்
    விழித்தெழு!—1996
  • இருபதாம் நூற்றாண்டில் கொள்ளைநோய்
    விழித்தெழு!—1997
  • தண்ணீர் சிவப்பாக மாறும்போது
    விழித்தெழு!—2001
  • உங்கள் பிள்ளைக்கு ஜுரம் அடிக்கும்போது
    விழித்தெழு!—2004
மேலும் பார்க்க
விழித்தெழு!—1993
g93 7/8 பக். 30-31

உலகத்தைக் கவனித்தல்

தொற்றுநோயின் மறுதோற்றம்

“தொற்றுநோய்களால் வரும் ஆபத்து ஒழிந்துபோய்விடவில்லை. அது மோசமாகிறது. நாம் காரியங்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மீண்டும் மும்முர நடவடிக்கைகள் எடுக்கவில்லையென்றால், HIV-யின் பரவலான பாதிப்பு அல்லது 1918-1919-ம் ஆண்டின் விஷ ஜுரத்தின் பரவலான பாதிப்பைப் போன்ற புதிய நெருக்கடி நிலைமைகளை நாம் எதிர்ப்பட வாய்ப்பிருக்கிறது,” என்று ஏல் பல்கலைக்கழகத்தின் ராபர்ட் ஷோப், ஐ.மா.-வின் நேஷனல் அகாடமி ஆஃப் சயன்ஸஸ் வெளியிட்ட ஓர் அறிக்கையைப் பற்றி கூறுகிறார். “எதிர்பாராதவிதமாய்த் தோன்றி, கடுந்துயரத்தையும் அதிக மரணத்தையும் ஏற்படுத்திய” நான்கு நோய்கள் ஏற்கெனவே “தோன்றியிருக்கின்றன,” என அந்த அறிக்கையைத் தயாரித்த கமிட்டியில் ஷோப்புடன் கூட்டுத் தலைவராய் இருக்கும் ஜாஷுவா லிடர்பர்க் மேலும் கூறுகிறார். அந்த நோய்கள்: மருந்துகளுக்குப் பிரதிபலிக்காத காசநோய், எய்ட்ஸ், லைம் நோய், சாவுக்கேதுவான ஸ்ட்ரெப்டோகாக்கையால் வரும் தொற்றுநோயின் ஒரு புதிய வகை போன்றவையாகும். கடந்த முப்பது ஆண்டுகளாக, அநேக மருந்துகளும், நுண்ணுயிர்க் கொல்லிகளும் (antibiotics) கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், நுண்ணுயிரிகள் அவற்றிற்கெதிராக பலவழிகளிலும் எதிர்ப்புச் சக்தியை வளர்த்துக்கொண்டன. உதாரணமாக, பாக்டீரியாக்கள், நுண்ணுயிர்க்கொல்லிகளை எதிர்ப்பதற்கான ஜீன்களையும் உட்படுத்தும், மரபணுக்கூறுகளையுங்கூட மாற்றிக்கொள்ளக்கூடும். இதன் விளைவாக, மருத்துவமனைகள், பகல்நேர குழந்தைகள் காப்பகம், வீடில்லாதோரின் காப்பகம் போன்ற இடங்கள், மருந்துகளுக்குப் பிரதிபலிக்காத தொற்றுநோய்களின் இனப்பெருக்க மையமாகிவிட்டிருக்கின்றன. மேலும் அதிகரித்துள்ள சர்வதேச பிரயாணம், “மருந்துகளுக்குப் பிரதிபலிக்காத இந்த நுண்ணுயிரிகளை (superbugs)” உலகம் முழுவதும் பரப்பியிருக்கிறது. நியூ யார்க்கின் ஆல்பர்ட் ஐய்ன்ஸ்டைன் மருத்துவக் கல்லூரியின் பேர்ரி ப்ளூம் கூறுகிறார்: “தொற்றுநோய்களைப் பொருத்தவரையில் நம்மிலிருந்து தொலைவாயிருக்கிற இடமுமில்லை மற்றும் தொடர்பற்றிருக்கிற ஆட்களுமில்லை.” (g93 3/22)

கடைநிலை வாழ்க்கை

இந்தியாவின் மூஷார்கள், சமுதாய “ஏணியின் கடைசி படியிலேயே எப்போதும் இருந்துவந்திருக்கின்றனர்,” இவ்வாறு தான் இந்தியா டுடே சமீபத்தில் கூறிற்று. முப்பது லட்சம் பேரைக் கொண்ட இவர்களுடைய ஜாதி தீண்டத்தகாதோர் சமுதாயம் என்று குறிப்பிடப்படுகிறது. இவர்கள் பெரும்பாலும் பீஹார் மாநிலத்தில் வாழ்கின்றனர். அறுபது வயதுள்ள ஒரு மூஷார் சொல்லுகிறபடி, பெரும்பாலானோர், “ஒரு முழுநிறைவுள்ள உணவு என்றால் என்ன என்பதை அறியாதிருக்கின்றனர்.” நாட்டுப்புறத்தில் உணவுக்காக அலைந்து திரிந்து, எலி வளைகளுக்குப் புகையிட்டு எலி கூட்டங்களைப் பிடித்து, தடியாலடித்துக் கொன்று, சுட்டுத்திண்ணும் மூஷார் குழந்தைகளின் ஒரு கூட்டத்தை இந்தியா டுடே மிகத் தெளிவாக விவரிக்கிறது. உள்ளூர் பாஷையில், “மூஷார்” என்றால் “எலி பிடிப்பவர்” என அர்த்தப்படுத்தும் என்று அந்தப் பத்திரிகை விவரிக்கிறது.

பருவவயது சாத்தானிய கொள்கை

தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்கில் உள்ள பள்ளிகளில் சாத்தானிய கொள்கை மிகவும் பிரபலமாகிக்கொண்டுவருகிறது. தி ஸ்டார் செய்தித்தாளின்பிரகாரம், தான் சாத்தானிய கொள்கையினால் பாதிக்கப்பட்ட அநேக மாணவர்களுக்குச் சிகிச்சையளித்ததாக ஒரு மனநல மருத்துவர் கூறுகிறார். போதை மருந்துகளை உட்கொண்ட மற்றும் பாலுறவு, கொடுமை விளைவிக்கும் சிற்றின்பச் செயல்கள் போன்றவற்றில் ஈடுபட்ட புறநகர்ப்பகுதி சூனியக்காரர்களின் தொகுதிகளைப்பற்றி பாதிக்கப்பட்டவர்கள் பேசினர். வழக்கத்திற்கு மாறாக, “இந்தக் குழந்தைகள் மதிப்புள்ள குடும்பத்திலிருந்து வந்தவர்கள்போல் காணப்பட்டனர்,” என்று அவர் மேலும் கூறுகிறார். நாடுமுழுவதுமுள்ள சாத்தானிய கொள்கையினரைப்பற்றி காவல்துறையினர் அறிந்திருக்கின்றனர் என்பதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தி ஸ்டார் செய்தித்தாளுக்குக் கூறினார். சாத்தானியக் கொள்கைதானே சட்டவிரோதமல்ல. எனினும் சாத்தானிய கொள்கை சடங்காச்சாரங்கள் சம்பந்தப்பட்ட குற்றச் செயல்கள்பேரில் தகுந்த நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் பின்தொடர்கின்றனர். ஒரு 38 வயது பெண்ணைக் கொலை செய்ததற்காக ஒரு பருவ வயது பெண்ணையும், அவளுடைய காதலனையும் அவர்கள் சமீபத்தில் கைதுசெய்தனர். அவர்கள் இருவரும் சாத்தானிய கொள்கையில் ஈடுபட்டிருந்தனர். பிசாசின் ஆதிக்கத்தின்கீழ் அந்தக் கொலையைச் செய்தனர் என்பதாக அவர்கள் காவல்துறையினரிடத்தில் கூறினர்.

வளிமண்டல வெப்ப சூறாவளி

சமீபத்தில் திடீரென ஏற்படும் பெருவாரியான கடும் சூறாவளிகள், மனிதர்கள் பூமிக்கு உண்டாக்கும் தூய்மைக்கேட்டின் காரணமாக வளிமண்டலம் வெப்பமடைதலோடு, சம்பந்தப்பட்டிருக்குமோ என்று விஞ்ஞானிகள் அநேகர் கவலையடைகின்றனர். நியூஸ்வீக் பத்திரிகையின்படி, சராசரி வெப்பநிலையில் ஒருசில டிகிரிகளே அதிகரித்தாலும், அது அத்தகைய சூறாவளிகளைக் கடுமையானதாக்கி, அவற்றை உருவாக்கும் கடலின் பரப்பளவையும் அதிகரிக்கும். அதன் தீவிரத்தின் அளவில் 5 புள்ளிகளை அடைந்தது, 1992-ல் ஏற்பட்ட ஆண்ட்ரு சூறாவளி, ஒரு காலத்தில் நூற்றாண்டு சூறாவளி என்றழைக்கப்பட்டிருக்கலாம். ஏனென்றால் இப்படிப்பட்ட அழிவுகள் பொதுவாக அவ்வளவு அபூர்வமே. ஆனால் 1989-ல் ஏற்பட்ட ஹியூகோ சூறாவளி 4 புள்ளியை அடைந்தது, 1988-ன் கில்பர்ட் 5 புள்ளியை அடைந்தது என்பதாக அந்தப் பத்திரிகை குறிப்பிடுகிறது. இவ்வாறு, விஞ்ஞானிகள் பலரின் கவலையை நியூஸ்வீக் சுருங்கச் சொல்கிறது: “ஆண்ட்ருவைப் பாருங்கள்; தூய்மைக்கேட்டின் விளைவாக அமையும் வளிமண்டல வெப்ப உலகம் அதுபோலத்தான் காணப்படலாம்.” (g93 3/22)

தர்மம் யாருக்கு?

அற நிலையங்கள் ஒவ்வொரு வருடமும் வசூலிக்கும் தொகைகள் எல்லாம் எங்குப் போகின்றன? அதன் பெரும்பகுதி அவற்றை நடத்துபவர்களுக்குப் போய்ச் சேர்கிறது. ஒரு சுற்றாய்வின்படி, ஐக்கிய மாகாணங்களில் உள்ள மிகப் பெரிய 100 அற நிலையங்களின் மூன்றிலொன்றுக்கும் அதிகமான அற நிலையங்களின் தலைமை நிர்வாகிகள், கடந்த வருடம் ஒவ்வொருவரும் 2,00,000 டாலருக்கும் அதிகம் மதிப்புள்ள சம்பளமும் மற்ற சலுகைகளும் பெற்றுப் பெருலாபமடைந்தனர். இவ்வாறு இன்டர்நேஷனல் ஹெரல்ட் ட்ரிப்யூன் அறிக்கை செய்கிறது. இந்த நிர்வாகிகளில் மூவர், ஒவ்வொருவரும் 5,00,000 டாலருக்கும் அதிகத்தைப் பெற்றனர். தவறான நிதி நிர்வாகம் மற்றும் மிதமிஞ்சி செலவுசெய்ததாகக் குற்றப்படுத்தப்பட்ட அறநிலைய தலைவர் ஒருவர் வேலைநீக்கம் செய்யப்பட்டதால் இந்தச் சுற்றாய்வு தூண்டப்பட்டது. அவர் வருடத்திற்கு 3,90,000 டாலர் சம்பாதித்தார். ஆனால் அவருக்குப் பிறகு வந்தவரோ 1,95,000 டாலர் “மட்டுமே” சம்பாதிக்கிறார்.

மணவிலக்கு நம்மைப் பிரிக்கும்வரை

ஜெர்மனியின் மணவிலக்கு நீதிமன்றங்களில் 1991-ல் 1,30,000-க்கும் அதிகமான திருமணங்கள் மணவிலக்கில் முடிவடைந்தன என்று ஆல்ஜிமைன ட்ஸைடுங் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. “உங்கள் மணவிலக்குக்குப் பாராட்டுதல்கள்” அல்லது “உங்கள் வாழ்வின் நன்னாட்களின் முதல் நாளுக்கு நல்வரவு” போன்ற வாசகங்களைக் கொண்ட மணவிலக்கு இரக்க அட்டைகள் பெருகிவருமளவுக்குத் திருமண முறிவு மிகவும் பொதுவான ஒன்றாகிவிட்டது. ஜெர்மனியில் இப்போது திருமணம் செய்கிற தம்பதிகளில் சுமார் 10 சதவீதத்தினர், திருமணத்திற்கு முன்னதாகவே தங்கள் மணவிலக்கிற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றனர். மணவிலக்கு ஏற்படுமானால் எந்தத் துணைவர் எதைப் பெறுவார்—வீடா, அறைகலன்களா (furniture)—என்பதையுங்கூட குறிப்பிட்டு ஒப்பந்தங்கள் உருவாக்கப்படுகின்றன. ஏன் இத்தனையநேக மணவிலக்குகள்? ஆல்ஜிமைன ட்ஸைடுங் இவ்வாறு குறிப்பிடுகிறது: “திருமணமாகி ஒரு சில வருடங்களிலேயே, 80 சதவீத பெண்கள் தங்கள் கணவன்மார் தங்களிடம் மிகக் குறைந்த அக்கறையே காட்டுகின்றனர் என்பதாக முறையிடுகின்றனர். . . . திருமணமாகி ஆறு வருடங்களுக்குப் பிறகு, அவர்கள் வழக்கமாகவே ஒரு நாளைக்கு வெறுமனே ஒன்பதே நிமிடங்கள்தான் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர், என்று 5,000 தம்பதிகளை உட்படுத்திய ஓர் ஆராய்ச்சி உறுதிப்படுத்தியது.”

சிட்சையின்மைக்குப் பெற்றோர் விலைகொடுக்கின்றனர்

ஜப்பானின் டோக்கியோவிலுள்ள ஒரு நீதிமன்றம், ஒரு மோட்டார் சைக்கிள் திருட்டுக் கும்பலைச் சேர்ந்த மூன்று பருவ வயது அங்கத்தினர்களின் பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் குற்றச்செயல்களுக்கான நஷ்டத்தை ஈடுசெய்வதில் உதவவேண்டும் என சமீபத்தில் தீர்ப்பு வழங்கிற்று. அவர்களுடைய மோட்டார் சைக்கிள்களின் சப்தத்தைப்பற்றி புகார் செய்ததன் காரணமாக, அந்தப் பையன்கள் ஓர் ஆளை அடித்து, அவருடைய வயிற்றில் மாறி மாறி உதைத்தனர். ஒரு மாதத்திற்குப் பின் அந்த ஆள் இறந்தார். “குற்றமென்னவெனில், அந்த நான்கு இளைஞர் வாழ்ந்திருந்த விதம், திரும்ப திரும்ப பள்ளிக்குப் போகாதது, குடிப்பழக்கம், புகைப்பழக்கம், மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் போன்றவையாகும்,” என்று நீதிபதி கூறியதாக மைனிச்சி டெய்லி நியூஸ் மேற்கோள்காட்டியது. “தங்களுடைய மகன்கள் வாழ்ந்திருந்த விதத்தை முழுவதும் அறிந்திருந்தும், அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த பிள்ளைகளின் பெற்றோர் அவர்களைச் சிட்சிக்கவில்லை,” என்று சொல்லி, இறந்த அந்த மனிதனின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக 8,30,00,000 யென் (சுமார் 7,00,000 ஐ.மா. டாலர்) கொடுக்கும்படி பெற்றோருக்கு ஆணையிட்டார். (g93 4/8)

பாதிரிகளின் மணவிலக்கு வீதம் அதிகரிக்கிறது

“ஜெர்மனியில் மூன்று திருமணங்களில் ஒன்று மணவிலக்கில் முடிவடைகிறது,” என்று தி ஜெர்மன் ட்ரிப்யூன் குறிப்பிடுகிறது. இதற்கிணையாக, “அதிகமதிகமான புராட்டஸ்டன்ட் ஊழியர்களின் திருமணங்களும் தோல்வியுற்று வருகின்றன.” “ஆண் மற்றும் பெண் பாதிரிகள் மத்தியில் மணவிலக்கு வீதம், இப்போது பொதுவாக மக்களிடத்தில் காணப்படும் அதே அதிகளவில் இருந்துவருகிறது,” என்று நசாவ் மற்றும் ஹெஸ்ஸியிலுள்ள புராட்டஸ்டன்ட் சர்ச்சின் தலைவரின் உதவியாளர், ஹான்ஸ்-மார்ட்டின் ஹொய்ஸல் ஒப்புக்கொள்கிறார். திருமண இணைப்புப் பிரிக்கப்படக்கூடாததென சர்ச் போதித்தாலும், “உண்மை, சர்ச் அங்கத்தினர் மத்தியிலுங்கூட, அதைவிட முழுவதும் வித்தியாசப்பட்டதாகவே இருக்கிறது. சொந்த கிறிஸ்தவ வாழ்க்கைமுறையும், சர்ச்சின் போதகமும், போதகர்களை உட்படுத்தும் மணவிலக்கில் வெகுவாக முரண்படுகின்றன,” என்பதாக ட்ரிப்யூன் கூறுகிறது. ஒரு சில விதிவிலக்குகளோடு, “மணவிலக்குச் செய்துகொண்ட போதகர், தனது பழைய இடத்திலோ, வேறு எங்கேயாவதோ போதகராகவே தொடர்ந்து இருக்கமுடியும்.”

ஆயர்களின் இன்னிசை

தெளிவாகக் காணமுடியாத வானிலை உள்ள மலைகளைச் சுற்றி இருக்கும் பசுக்களைக் குறைந்த நேரத்தில் கூட்டிச் சேர்க்கும் ஒரு மிகச் சிறந்த வழியை ஜப்பானிலுள்ள பால்பண்ணை தொழிலாளர்கள் தேடிக்கொண்டிருந்தனர். ஆகவே, இசையால் பசுக்களைக் கூட்டிச் சேர்ப்பது சாத்தியம்தானா என்று கண்டுபிடிக்க அவர்கள் பரிசோதனை ஒன்றை நடத்தினர். பதினாறு பசுக்களுக்கு, ஒரு முறை மூன்று நிமிடங்களுக்கு, ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து நான்கு முறைகள் வீதம் 13 நாட்களுக்கு ஹாரு நோ ஒகாவா (இளவேனிற்பருவ ஓடை) என்ற ஜப்பானிய மெட்டு ஒன்றை அவர்கள் இசைத்தனர். அதையடுத்து உடனே, அவை விரும்பி உண்ணும் உணவைக் கொடுத்தனர். பசுக்கள் கன்று ஈன்ற குளிர்கால இடைவெளிக்குப் பின், “பழக்கப்படுத்தப்பட்ட” பசுக்களில் பத்துப் பசுக்கள் தங்களுடைய ஒன்பது கன்றுக்குட்டிகளோடு மேய்நிலத்தில் மேய விடப்பட்டன. மீண்டும் அதே மெட்டு இசைக்கப்பட்டது. “இரண்டே நிமிடங்களில், சுமார் நான்கு மாதங்களாக கேட்காதிருந்த இசையினால் அவை கூட்டிச் சேர்க்கப்பட்டு, முழு மந்தையும் வந்து சேர்ந்தது,” என்பதாக அஷாஹி ஈவ்னிங் நியூஸ் அறிக்கை செய்கிறது.

நன்கு காக்கப்பட்ட மருத்துவ இரகசியம்

டேனிஷ் மருத்துவ கழகத்தால் மிக கவனமாக பாதுகாக்கப்பட்ட இரகசியங்களில் ஒன்றை, பேராசிரியர் மார்கரிடா மிக்கல்சன் என்ற ஓர் ஆலோசகர் வெளிப்படுத்தினார். பரம்பரையாகக் கடத்தப்படும் நோய்களுக்காக நோயாளிகளைப் பரிசோதிக்கும் மருத்துவர்கள், ஒரு குழந்தையின் தந்தை என்று சொல்லப்படுபவர், குரோமசோம்கள் ஒவ்வாமையின் காரணமாக, அக்குழந்தையின் இயற்கை தகப்பனாக இருக்க முடியாது என வழக்கமாக கண்டுபிடிக்கின்றனர். ஸூடட்சே ட்ஸைடுங் என்ற செய்தித்தாளின்படி டென்மார்க்கில் ஐந்திலிருந்து எட்டு சதவீத தந்தைமார்கள் தங்களுடைய பிள்ளைகளின் இயற்கை தந்தைமார்கள் அல்ல. இது ஒரு வருடத்தில் ஏற்படும் 60,000 பிறப்புகளில் 3,000 பிறப்புகளாவது, கணவன் மனைவியிடையே உண்மையாய் நடந்துகொள்ளாமைக்குக் காரணமாய் இருக்கக்கூடும் என்பதை அர்த்தப்படுத்துகிறது. எனினும், குடும்பம் சீர்குலைக்கப்படாதிருப்பதற்காக, ஆண்கள் இந்தக் கண்டுபிடிப்பைப்பற்றி அறிவிக்கப்படவில்லை.

உடல் வெப்பநிலை மாற்றம்

ஒரு நூற்றாண்டுக்கு மேலாக, மனித உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி சென்டிகிரேட் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இது 25,000 வயதுவந்தவர்களின் உடல் வெப்பநிலையைப் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட தடவைகள் அளந்ததன் அடிப்படையில், 1868-ல் கார்ல் வுன்டர்லிக் வெளியிட்ட ஓர் ஆராய்ச்சி வெளியீட்டின் விளைவாகும். இது வியப்பூட்டும் ஓர் அருஞ்செயலாகும். ஏனென்றால் வெப்பநிலையைப் பதிவு செய்ய வெப்பமானிக்குச் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தேவைப்பட்டது. மேலும் அவை கக்கத்தில் அதற்குரிய இடத்தில் இருக்கும்போதே பார்த்தளக்கவேண்டும். எனினும், மேரிலேன்ட் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியின் பிலிப் A. மகோவிக் இந்த எண் மாற்றப்படவேண்டும் என்கிறார். ஏனென்றால், 37 டிகிரி சென்டிகிரேட் “மொத்த சராசரி வெப்பநிலை அல்ல, எந்தச் சமயத்திலும் அளக்கப்பட்ட வெப்பநிலையின் சராசரியுமல்ல, நடுத்தர அளவு வெப்பநிலையோ, பதிவுசெய்யப்பட்ட வெப்பநிலைகளில் அடிக்கடி பதிவுசெய்யப்பட்டிருக்கும் ஒரே வெப்பநிலையோ கிடையாது,” என்பதாக அவருடைய ஆராய்ச்சி காண்பிக்கிறதாம். உண்மையிலேயே, பதிவுசெய்யப்பட்ட 700 அளவுகளில் 8 சதவீதம் மட்டுமே இந்த வெப்பநிலை அளவாக இருக்கிறது. மனித உடலின் சராசரி வெப்பநிலை, 36.8 டிகிரி சென்டிகிரேடாக இருக்கவேண்டும் என்று அவர் சொல்கிறார். (g93 3/22)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்