யுத்தம் முடிவடையுமென என்ன நம்பிக்கை இருக்கிறது?
முதல் உலக யுத்தம், 1914 முதல் 1918 வரை நடத்தப்பட்ட இது, எல்லா யுத்தங்களையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான யுத்தம் என்றழைக்கப்பட்டது. ஆனால் அதிலிருந்து, இதுநாள் வரை மிகப்பெரியதாகிய இரண்டாம் உலக யுத்தத்தையும் உட்படுத்தும், 200 யுத்தங்களுக்குமேல் நடத்தப்பட்டிருக்கின்றன.
தெளிவாகவே, யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மனிதரின் முயற்சிகள் ஒரு முழுதோல்வியாகவே இருந்திருக்கின்றன. அப்படியானால், “யுத்தங்கள் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கும்,” என்று அநேகர் கூறுவதில் ஏதேனும் ஆச்சரியமிருக்கிறதா? நீங்களும் அதைத்தான் நம்புகிறீர்களா?
யுத்தங்களால் சோர்வுற்ற மனிதருக்கு, யுத்தமே இல்லாத ஓர் உலகத்தைப்பற்றிய ஒரு நம்பிக்கை கொடுக்கும் எண்ணத்தோடுதான் இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின் 1945-ல் ஐக்கிய நாட்டுச் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த நம்பிக்கை நியூ யார்க் நகரத்தில் ஐ.மா. ப்ளாஸாவின் சுவற்றில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களில் வெளிப்படுத்தப்படுகிறது. அது வாசிக்கிறதாவது: அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்: ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை. இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.
வருந்தத்தக்கவிதத்தில், தேசங்கள் தங்களுடைய போர்நாட்டத்தால் அழகாகத் தெரிவிக்கப்பட்ட இந்தச் சமாதானத்திற்கான நம்பிக்கையை ஏளனத்துக்குரிய ஒன்றாக ஆக்கிவிட்டனர். இருந்தபோதிலும், இந்த வார்த்தைகள் நிறைவேற்றப்படும்! இதன் காரணம், இவை 2,500 ஆண்டுகளுக்குமுன், அபூரண மனிதர்களைவிட உயர்ந்த ஓர் ஊற்றுமூலத்தில் இருந்து தோன்றின. அவை சர்வவல்லமையுள்ள கடவுள் கொடுத்த ஒரு வாக்குறுதியைக் குறிக்கின்றன.—ஏசாயா 2:4.
ஒரு பொய் நம்பிக்கை
யுத்தமில்லா ஓர் உலகை உருவாக்குவதற்கான உதவிக்காக அநேகர் சர்ச்சுகளை நோக்கியிருந்தனர். ஆனால் சர்ச்சுகள், உண்மையில், வரலாற்றிலேயே மிக அதிகப் பிரிவினை உண்டாக்கும், போரிடும் சக்திகளில் ஒன்றாக நிரூபித்திருக்கின்றன. உதாரணமாக, முதல் உலக யுத்தத்தின்போது, பிரிட்டிஷ் படைப்பகுதியின் பொதுத்தலைவர், ஃப்ரேங் P. க்ரோஸர் சொன்னார்: “கிறிஸ்தவ சர்ச்சுகள் நாம் கொண்டிருக்கும், மற்றும் நாம் நன்கு பயன்படுத்திக்கொண்ட, இரத்தம் சிந்துதலின் மிகச் சிறந்த ஊக்குவிப்பாளர்களாகும்.”
இதன் காரணமாகவே, உண்மைக் கிறிஸ்தவத்திற்கும் பொய்க் கிறிஸ்தவத்திற்கும் நாம் வித்தியாசம் காணவேண்டியது முக்கியமாக இருக்கிறது. இதைச் செய்வதில் நமக்கு உதவ இயேசு ஓர் எளிய நியமத்தைக் கொடுத்தார்: “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.” (மத்தேயு 7:16) வார்த்தைகளை, அல்லது நம்பிக்கைகளை வெளிப்படுத்துதல் மட்டுமே போதாது. இதை விளக்க வான்கூவர் சன் செய்தித்தாளின் நிருபர், ஸ்டிவ் வைஸல் குறிப்பிட்டார்: “மெக்கானிக் போல காணப்பட்டாலுங்கூட, . . . அவர்கள் ‘நாங்கள் மெக்கானிக்குகள்’ என்று சொன்னாலுங்கூட, எண்ணெய்ப் படிந்த நீல மேலுடை அணிந்திருக்கும் அனைவருமே மெக்கானிக்குகள் ஆகிவிடமுடியாது.”
தன்னுடைய உதாரணத்தைக் கிறிஸ்தவத்துக்குப் பொருத்தி, வைஸல் கூறினார்: “கிறிஸ்தவத்தின்பேரில் இது அல்லது அது எவ்வாறு செய்யப்பட்டது என்பதைப்பற்றியும், அதைச் செய்வது எவ்வளவு மோசம் என்பதைப்பற்றியும் மக்கள் அடிக்கடி பேசுவதைக் கேட்டிருப்பீர்கள். ஆம், அது படுமோசம்தான். . . . ஆனால் அத்தகைய படுமோசமான காரியங்களைச் செய்தவர்கள் கிறிஸ்தவர்கள் என்று யார் சொன்னது?
“ஸ்தாபிக்கப்பட்ட சர்ச்சுகள்தான் அவ்வாறு சொல்கின்றன, என்றா நீங்கள் சொல்கிறீர்கள்? சரி, ஸ்தாபிக்கப்பட்ட சர்ச்சுகள் கிறிஸ்தவர்கள் என்று யார் சொன்னது?
“ஆமாம், அந்தப் போப் முசோலினியை ஆசீர்வதித்தார். இன்னும் கடந்த காலத்தில் மற்ற போப்கள் இதைவிட மிருகத்தனமான காரியங்களையெல்லாம் செய்திருக்கிறார்கள் என்பதற்கு அத்தாட்சி இருக்கிறது. அதனால், அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தார்கள் என்று யார் சொன்னது?
“ஒரு மனிதன் போப்பாக இருக்கிறார் என்பதனால் அவர் ஒரு கிறிஸ்தவராக இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? தான் மெக்கானிக் என்று சொல்லிக்கொள்கிற ஒருவன் எவ்வாறு மெக்கானிக்காக இல்லாமலிருக்கலாமோ, அதேபோல்—ஒரு மனிதன் ‘நான் கிறிஸ்தவன்’ என்று சொல்கிறான் என்ற காரணத்திற்காக, அவன் ஒரு கிறிஸ்தவன் என்று அர்த்தப்படாது.
“கிறிஸ்தவர்களைப்போல பாசாங்கு செய்கிற மக்களுக்கெதிராக பைபிள் கிறிஸ்தவர்களுக்கு எச்சரிக்கையும்கூட கொடுக்கிறது . . . எந்தக் கிறிஸ்தவனும் மற்ற கிறிஸ்தவனுக்கு எதிராக யுத்தம் செய்யமுடியாது—அது ஒரு மனிதன் தனக்குத்தானே சண்டை செய்துகொள்வதுபோலாகும்.
“உண்மைக் கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவுக்குள் சகோதரர்களும் சகோதரிகளுமாக இருக்கின்றனர். . . . அவர்கள் ஒருபோதும் ஒருவரையொருவர் மனப்பூர்வமாக புண்படுத்திக்கொள்வதில்லை.”
எனவே நாம் இயேசுவின் நியமத்தைப் பொருத்தி, சர்ச்சுகள் பிறப்பிக்கக்கூடிய கனிகளைக் கவனிக்கவேண்டும். ஆனால் எவ்வகையான கனிகள்? பைபிள் பின்வருமாறு சொல்வதன்மூலம், குறிப்பாக ஒரு கனியைச் சுட்டிக்காட்டுகிறது: “இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்பு கூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல. நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது. பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்கவேண்டாம்.”—1 யோவான் 3:10-12.
ஒருவனுடைய சகோதரனை சிநேகிப்பதற்கு உற்சாகப்படுத்துவதைவிட, சர்ச்சுகள் யுத்தத்தில் ஒருவனுடைய சகோதரனைக் கொல்லுவதை ஆதரித்தும் தூண்டுவித்தும்கூட இருக்கின்றன. இதனால், பூர்வீக எகிப்தியர், அசீரியர், பாபிலோனியர், ரோமர் போன்றோரின் மதங்களைப்போலவே, அவர்களும் நிச்சயமாக பிசாசாகிய சாத்தானின் சதுரங்கக்காய்களாக ஆகிவிட்டிருக்கின்றனர். இயேசு கிறிஸ்து சாத்தானை “இந்த உலகத்தின் அதிபதி” என்று அழைத்து, தம்மை உண்மையாய்ப் பின்பற்றுவோரைப்பற்றி மேலும் சொன்னார்: “நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.” (யோவான் 12:31; 17:16; 2 கொரிந்தியர் 4:4) எனினும், சர்ச்சுகள் தங்களை இந்த உலகத்தின் முழுமையான பாகமாக்கிக்கொண்டிருக்கின்றன.
அப்படியானால், தெளிவாகவே, யுத்தமில்லா ஓர் உலகை உருவாக்கும் தனது நோக்கத்தை நிறைவேற்ற கடவுள் இந்தச் சர்ச்சுகளை உபயோகப்படுத்துகிறதில்லை. மதகுருமார்களும் சர்ச் பிரதிநிதிகளும் என்னதான் சொன்னாலும், தேசங்களின் யுத்தங்களில் கடவுள் எப்பக்கத்தையும் ஆதரிக்கிறதில்லை.
யுத்தங்களை நீக்குவதற்கான கடவுளுடைய வாக்குறுதி எவ்வாறு நிறைவேற்றப்படும்? எந்த ஜனமாவது தங்களுடைய பட்டயங்களை உண்மையில் மண்வெட்டிகளாக அடித்துள்ளனரா? ஆம் சிலர் உண்மையில் அவ்வாறு அடித்திருக்கின்றனர்.
கடவுளுடைய வாக்குறுதியை நிறைவேற்றும் ஜனம்
பிரபல சர்ச் வரலாற்று ஆசிரியர் C. J. காடூ குறிப்பிட்டார்: “பூர்வ கிறிஸ்தவர்கள் இயேசுவின் வார்த்தைகளை நம்பினர் . . . தங்களுடைய மதத்தைச் சமாதானத்தோடு நெருங்க அடையாளப்படுத்தினர்; அதில் உட்பட்டிருந்த இரத்தம் சிந்துதலுக்காக யுத்தத்தை அவர்கள் கடுமையாக கண்டனம் செய்தனர். யுத்தக்கருவிகள் விவசாயக் கருவிகளாக மாற்றப்படுவதை முன்னறிவித்த பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனங்களைத் தங்களுக்குப் பொருத்திக்கொண்டனர்.”
ஆனால் நம்முடைய நாளைப்பற்றி என்ன? இயேசுவின் வார்த்தைகளை நம்பி, ஒருவரையொருவர் உண்மையிலேயே சிநேகிக்கும் ஒரு ஜனம் இருக்கிறதா? இவர்கள் அதன் காரணமாக, தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாக அடித்திருக்கின்றனரா? சரி, என்ஸைக்ளோப்பீடியா கானடியானா குறிப்பிடுகிறது: “யெகோவாவின் சாட்சிகள் செய்துவரும் வேலை, நம்முடைய சகாப்தத்தின் முதலாம், மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் இயேசுவாலும் அவருடைய சீஷர்களாலும் கைக்கொள்ளப்பட்ட ஆரம்ப கிறிஸ்தவத்தின் மறுமலர்ச்சியாகவும் மறு ஸ்தாபித்தலாகவும் இருக்கிறது . . . அவர்களெல்லாரும் சகோதரர்கள்.”
இவ்வாறு, ஒருவருக்கொருவர் அன்புகாட்டுங்கள் என்ற இயேசுவின் கட்டளையை மனதில்கொண்டு, யெகோவாவின் சாட்சிகள் தங்கள் சகோதரர்கள் வேறு இனம் அல்லது வேறு தேசத்தின் அங்கத்தினர்களாக இருந்தபோதிலும், அவர்களை வெறுக்கவோ, கொல்லவோ மறுக்கின்றனர். (யோவான் 13:34, 35) “காலா காலமாக, [சர்ச்சுகள்] யுத்தம், சேனைகள், போர்க்கருவிகள் போன்றவற்றை ஆசீர்வதிப்பதற்கு எப்போதுமே சம்மதித்திருக்கின்றனர். மேலும் கிறிஸ்தவனல்லாதவன் செய்கிறதைப்போலவுங்கூட தங்களுடைய எதிரி அழிந்துபோவதற்காக அவர்கள் ஜெபித்திருக்கின்றனர்,” என்று ஜெர்மனியிலுள்ள ஒரு புராட்டஸ்டன்ட் தலைவர், மார்ட்டின் நீமெளளர் குறிப்பிட்டார். எனினும், எதிர்மாறாக, சாட்சிகள் “யுத்தத்தில் சேவைசெய்யவும், மனிதர்களைச் சுடவும் மறுத்ததன் காரணமாக, நூற்றுக்கணக்கில் மற்றும் ஆயிரக்கணக்கில், சித்தரவதை முகாம்களுக்குச் சென்று மரித்திருக்கின்றனர்,” என்றும் அவர் கூறினார்.
ஆம், மற்ற மதத்தினரைப்போலல்லாமல், யெகோவாவின் சாட்சிகள் உண்மையிலேயே தங்களுடைய பட்டயங்களை மண்வெட்டிகளாக அடித்திருக்கின்றனர். கிறிஸ்து கட்டளையிட்டதுபோல, ‘உலகத்தின் பாகமாயிராததனால்’ அவர்கள் உண்மையிலேயே மற்ற மதத்தினரிடமிருந்து வித்தியாசமாக இருக்கின்றனர். (யோவான் 15:19) ரோமன் கத்தோலிக்க செயின்ட் அந்தோணிஸ் மெஸ்ஸெஞ்சர் குறிப்பிட்டது: “யெகோவாவின் சாட்சிகள் மற்ற ஸ்தாபனங்களுக்குப் புறம்பானவர்களாக நின்று, உலகப்பிரகாரமான அரசாங்கம் செய்ய தீர்மானிக்கும் எதையுமே ஆசீர்வதிக்கும் உத்தரவாதத்தை ஏற்றுக்கொள்வதில்லை.”
எல்லா தேசங்களிலுமுள்ள ஏதோ ஒரு சில லட்சம் தனியாட்கள் தங்களுடைய பட்டயங்களை மண்வெட்டிகளாக அடிப்பதன் விளைவாக மட்டுமே, போரொழிப்பதைப்பற்றிய கடவுளுடைய வாக்குறுதி நிறைவேற்றப்படுமா? இல்லவேயில்லை! கடவுளுடைய வாக்குறுதி இதைவிட இன்னும் மிகப் பெரியளவிலும், வியக்கத்தக்கவகையிலும் நிறைவேற்றப்படும்.
யுத்தத்திற்கு எவ்வாறு ஒரு முடிவு வரும்
சிருஷ்டிகராகிய யெகோவா தேவன், எல்லா படைத்தொகுதிகளையும், போருக்குக் காரணமானவர்களையும் நீக்கிப் போடுவதன்மூலம் யுத்தத்தை முடிவுக்குக்கொண்டுவருவார். பைபிள் சங்கீதக்காரர் ஒருவர் கிளர்ச்சியூட்டும் இந்த வாய்ப்பைப்பற்றி சிந்திக்கும்படி வாசகர்களை அழைத்தார். அவர் எழுதினார்: “பூமியிலே பாழ்க்கடிப்புக்களை நடப்பிக்கிற கர்த்தருடைய செய்கைகளை வந்து பாருங்கள். அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்.” (சங்கீதம் 46:8, 9) கவனத்தை ஈர்க்கும் என்னே ஒரு கிளர்ச்சியூட்டும் அறிவிப்பு!
யுத்தமில்லா ஓர் உலகத்திற்கான வாய்ப்பு நம்பமுடியாததாக இருக்கின்றதா? சந்தேகிப்பவர்கள் அப்படி நினைக்கலாம். இப்பத்திரிகையின் 9 முதல் 13 பக்கங்களில் தோன்றும் வாழ்க்கை சரிதையில் சொல்லப்பட்ட இராணுவ வரலாற்று ஆசிரியருங்கூட அப்படித்தான் நினைத்தார். ஆனால் ஆதாரங்களைக் கவனமாக ஆராய்ந்து பார்ப்பதற்கு அவர் சமயத்தை எடுத்துக்கொண்டார். அதன் விளைவாக, பைபிள் உண்மையிலேயே நம்பத்தக்கது என்று தனக்குத்தானே நிரூபித்துக்கொண்டார். வரலாற்றில் பூர்வீக சம்பவங்களைப்பற்றிய பைபிள் தீர்க்கதரிசனங்கள் தவறாமல், சரியான சமயத்தில் நிறைவேறின என்பதைக் கண்டுபிடித்தார். இது இனி நடக்கவிருப்பதாகத் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட அந்தச் சம்பவங்களும் சரியான கால அட்டவணையின்படி நடந்தே தீரும் என்று நம்புவதற்கான காரணத்தைத் தந்தது.
உதாரணமாக, இப்பொழுது சம்பவித்துக்கொண்டிருக்கும் பூமியைக்குலுக்கக்கூடிய சம்பவங்கள், இந்தக் காரிய ஒழுங்குமுறையின் கடைசி நாட்களைக் குறிப்பதாக, பைபிள் முன்னறிவித்த அந்தச் சம்பவங்களோடு எவ்வாறு முற்றிலும் ஒத்திருக்கின்றன என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். (மத்தேயு 24:3-14; 2 தீமோத்தேயு 3:1-5) இது “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக,” என்று தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு இயேசு கற்பித்த ஜெபத்தின் நிறைவேற்றமாக, அந்தக் கடவுளுடைய ராஜ்யம் வரும் சமயத்தில் நாம் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று அர்த்தப்படுத்துகிறது.—மத்தேயு 6:9, 10.
கடவுளுடைய ராஜ்யம் எவ்வகையில் வரும் என்று நாம் எதிர்பார்க்கவேண்டும்? இதைப்பற்றி பைபிள் தீர்க்கதரிசனம் ஒன்று கூறுகிறது: “அந்த ராஜாக்களின் [அதாவது, தற்போது ஆட்சிசெய்யும் அரசாங்கங்களின்] நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் [அல்லது, அரசாங்கங்களையெல்லாம்] நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ [கடவுளுடைய ராஜ்ய அரசாங்கம்] என்றென்றைக்கும் நிற்கும்.”—தானியேல் 2:44.
ஆம், முன்னறிவிக்கப்பட்ட உலகளாவிய ஜலப்பிரளயம் நோவாவின் காலத்தில் வந்ததுபோல, தற்போதைய எல்லா அரசாங்கங்களையும் நீக்க, கடவுளுடைய ராஜ்யம், ஒரு வியக்கத்தக்கவகையில் வரும். (மத்தேயு 24:36-39; 1 யோவான் 2:17) தற்போதைய எல்லா அரசாங்கங்களும், அவற்றை ஆதரித்துவரும் மதங்களும் அண்மையில் அழிக்கப்படப்போவதனால், நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்டவகையில் நம்முடைய சொந்த சூழ்நிலைமையை ஆராய்ந்துபார்க்கவேண்டியது மிக முக்கியம். யெகோவா தேவனைப்பற்றியும், அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்துவைப்பற்றியும் அறிந்து, அவர்கள் நம்மிடத்தில் கேட்பதைச் செய்ய முயற்சிசெய்வோமா? (யோவான் 17:3) நம்முடைய சகமனிதனுக்குத் தீங்குசெய்ய மறுத்து, நாம் ஒருவருக்கொருவர் அன்புகாட்டுவோமா? இவ்வாறு நாம் நம்முடைய பட்டயங்களை மண்வெட்டிகளாக அடித்துவிட்டோம் என்று காட்டுவோமா?
யுத்தம் நியாயமானதல்ல என்று நீங்கள் ஒப்புக்கொள்வீர்களேயானால், சமாதானம் உலகமுழுவதும் இருக்கும் காலத்தில் பூமியில் வாழ விரும்புவீர்களேயானால், யெகோவாவின் சாட்சிகளோடு தொடர்புகொள்ளுங்கள். கடவுளுடைய ராஜ்ய ஆட்சியின்கீழ், எவ்வாறு யுத்தம் விரைவில் இல்லாமல் போகப்போகிறது என்பதைப்பற்றி அறிய உங்களுக்கு உதவ அவர்கள் சந்தோஷமுள்ளவர்களாக இருப்பார்கள். (g93 4/22)
யெகோவாவின் சாட்சிகளுக்கான ஹிம்லரின் திட்டங்கள்
ஹைன்ரிக் ஹிம்லர் நாஸி SS அல்லது உயர்வகுப்புப் பாதுகாப்புப் படையின் தலைவராக இருந்தார். இரண்டாம் உலக யுத்தத்தின் போது, ஜெர்மனியில் அடால்ஃப் ஹிட்லருக்கு அடுத்த வல்லமைமிக்க நபராக இருந்தார். உலகை வெல்வதற்கான நாஸி திட்டங்களில் யெகோவாவின் சாட்சிகள் ஈடுபட மறுத்த காரணத்திற்காக, ஹிம்லர் அவர்களை வெறுத்தாலும், அவர் அவர்களை மதித்துவந்தார். கெஸ்டாப்போ தலைவர் எர்ன்ஸ்ட் கால்ட்டன்ப்ரூனருக்கு எழுதிய கடிதங்கள் ஒன்றில் ஹிம்லர் எழுதினார்:
“சமீப காலத்திய சில தகவல்களும் கணிப்புகளும் திட்டங்களை வகுக்கும்படி என்னை வழிநடத்தியிருக்கிறது. அவற்றை உமது கவனத்திற்குக் கொண்டுவர விழைகிறேன். இது யெகோவாவின் சாட்சிகளோடு சம்பந்தப்பட்டதாகும். . . . ரஷ்யாவின் பரந்த எல்லைகளைக் கைப்பற்றுவோமானால் . . . அதை நாம் எவ்வாறு ஆளுகை செய்து அமைதி நிலவச்செய்யப்போகிறோம்? . . . எல்லா வகை மதங்களும், சமாதானவாதிகளின் பிரிவுகளும் . . . , எல்லாவற்றிற்கும் மத்தியில் முக்கியமாக யெகோவாவின் சாட்சிகளுடைய நம்பிக்கைகளும் ஆதரிக்கப்படவேண்டும். இறுதியில் குறிப்பிடப்பட்டவர்கள் நமக்கு நன்மை பயக்கும், வியக்கத்தக்க தனிச்சிறப்பான குணாதிசயங்களைக் கொண்டவர்கள் என்பது நன்கு அறியப்பட்டதே: இராணுவ சேவையையும், யுத்தத்தோடு சம்பந்தப்பட்ட எந்தவொரு காரியத்தையும் மறுக்கிறார்கள் என்ற உண்மையைத் தவிர . . . , அவர்கள் வியக்கத்தக்க அளவு நம்பகமானவர்கள், மிதமிஞ்சி குடிப்பதில்லை, புகைப்பதில்லை, அயராதுழைப்பவர்கள், தனிச்சிறப்பானவகையில் நேர்மையானவர்கள். அவர்களுடைய வார்த்தை நம்பத்தகுந்தது. இவையே தகுந்த தனிச்சிறப்புள்ள . . . , மிகவும் விரும்பத்தக்க பண்புகள்.”
இல்லை, நாஸிகளுக்காக உழைக்கும்படி யெகோவாவின் சாட்சிகளை ஹிம்லர் ஒருபோதும் இணங்கவைத்திருக்கமுடியாது. சாட்சிகளின் சமாதானத்தை நேசிக்கும் பண்புகளைத் தனக்கோ, தன்னுடைய ஜனங்களுக்கோ அவர் விரும்பவில்லை. ஆனால் இந்தத் தகுதியான குணங்களை ரஷ்ய மக்கள் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று விரும்பினார். இது அவர்களைச் சமாதானத்தை நாடும் ஜனங்களாக்கி, அவர்களுடைய பட்டயங்களை மண்வெட்டிகளாக அடிக்கும்படிசெய்யும்.
[பக்கம் 8-ன் படம்]
கடவுளுடைய ராஜ்யம் போர் இயந்திரங்களை எல்லாம் நீக்கிப்போட்டு, மக்களைச் சமாதானம் நிறைந்த ஒரு புதிய உலகிற்குள் கொண்டுச்செல்லும்