உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w94 1/15 பக். 5-7
  • விரைவில்—போரில்லா ஓர் உலகம்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • விரைவில்—போரில்லா ஓர் உலகம்!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மனதில் சமாதானத்தை வளர்த்தல்
  • கடவுள் எப்படி சமாதானத்தைக் கொண்டுவருவார்
  • மத சம்பந்தமான தடைகளை நீக்குதல்
  • உண்மையான சமாதானம்—எந்த ஊற்றுமூலத்திலிருந்து?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • உண்மையான சமாதானத்தை நாடி அதைப் பின்தொடருங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • யார் மனிதவர்க்கத்தைச் சமாதானத்துக்கு வழிநடத்துவார்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • போருக்கு சாவு மணி
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
w94 1/15 பக். 5-7

விரைவில்—போரில்லா ஓர் உலகம்!

டிசம்பர் 24, 1914 அன்று, ஜிம் ப்ரின்ஸ் என்ற ஓர் இளம் பிரிட்டிஷ் படைவீரர், ஒரு ஜெர்மானிய காலாட்படை வீரரிடம் பேசும்படி, போரிடும் அணிகளுக்கு இடைப்பட்ட இடத்தின் வழியாய் நடந்துசென்றார். “நான் ஒரு ஸாக்ஸன். நீர் ஓர் ஆங்கிலோ-ஸாக்ஸன். நாம் ஏன் சண்டை போடுகிறோம்?” என்று அந்த ஜெர்மானியர் அவரைக் கேட்டார். வருடங்கள் கழித்து, “இன்னும் அந்தக் கேள்வியின் பதில் எனக்குத் தெரியாது” என்று ப்ரின்ஸ் ஒத்துக்கொண்டார்.

1914-ல் ஒரு வழக்கத்திற்கு மாறான வாரம், பிரிட்டிஷ் மற்றும் ஜெர்மானிய படைவீரர்கள் தோழமைகொண்டு, உதைபந்தாட்டம் விளையாடி, கிறிஸ்மஸ் பரிசுகளைக்கூட பரிமாறிக்கொண்டனர். போரிடையே அந்த இடை ஓய்வு, நிச்சயமாகவே அதிகாரப்பூர்வமற்ற ஒன்றாக இருந்தது. போர் பிரச்சாரத்தால் சித்தரிக்கப்பட்டபடி “எதிரி” ஒரு கொடூரமான அரக்கன் அல்ல என்பதை துருப்புகள் கண்டுபிடித்துவிடுவதை தளபதிகள் விரும்பவில்லை. பிரிட்டிஷ் படைவீரர் ஆல்பெர்ட் மாரென் பின்னர் நினைவுகூர்ந்தார்: “அந்தப் போர் நிறுத்தம் இன்னொரு வாரத்திற்குத் தொடர்ந்திருந்தால், போரைத் திரும்பவும் தொடங்குவது மிகவும் கடினமாக இருந்திருக்கும்.”

அநேக பயிற்றுவிக்கப்பட்ட படைவீரர்கள்கூட போரைவிட சமாதானத்திற்காகவே ஏங்குகின்றனர் என்பதைத் தானாகவே ஏற்பட்ட அந்தப் போர் நிறுத்தம் தெரியப்படுத்துகிறது. போரின் கொடூரங்களை அறிந்திருந்த பெரும்பாலான படைவீரர்கள் இந்த ஸ்பானிய பழமொழியை ஆதரிப்பர்: “போர் என்றால் என்ன என்று தெரியாதவன் போருக்குச் செல்லட்டும்.” சந்தேகமின்றி, பொது மக்களிடையே நடத்தப்படும் ஓர் உலகளாவிய கருத்துச் சுற்றாய்வு, மிகப் பெரும்பான்மையானோர் போரைவிட சமாதானத்தையே விரும்புகின்றனர் என்பதை வெளிப்படுத்தும். ஆனால் சமாதானத்திற்கான இந்த உலகளாவிய ஆசை எப்படி போரில்லா ஓர் உலகமாக மாற்றியமைக்கப்பட முடியும்?

போர் நீக்கப்படுமுன் மனநிலைகள் மாறவேண்டும். ஐநா கல்வி, விஞ்ஞானம், கலாச்சார நிறுவனத்தின் விதித்தொகுதி குறிப்பிடுகிறது: “போர்கள் மனிதரின் மனங்களில் தொடங்குவதால், மனிதரின் மனங்களில்தானே சமாதானத்தின் தற்காப்பு கட்டப்படவேண்டும்.” இருப்பினும், அவநம்பிக்கையும் பகையும் மட்டுமீறியதாய் இருக்கும் நவீனநாளைய சமுதாயம், அதிக சீற்றமுடையதாகவே மாறிக்கொண்டிருக்கிறது, அதிக சமாதானமுள்ளதாக அல்ல.

இருந்தாலும், நீதியான மனச்சாய்வு கொண்டுள்ள மக்களின் மனங்களில் ஒருநாள் சமாதானம் பொறிக்கப்படும் என்பதாகக் கடவுள்தாமே வாக்களித்தார். தம்முடைய தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் மூலமாக அவர் சொன்னார்: “அவர் [கடவுள்] ஜாதிகளுக்குள் நியாயந்தீர்த்து, திரளான ஜனங்களை [குறித்ததில் காரியங்களைச் சரிசெய்வார், NW]; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.”—ஏசாயா 2:4.

மனதில் சமாதானத்தை வளர்த்தல்

சிந்தனையில் அப்படிப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படக்கூடுமா? போரை மகிமைப்படுத்துவதற்கு மாறாகச் சமாதானத்தைக் காப்பதற்கு மக்கள் எப்போதாவது கற்றுக்கொள்வார்களா? வால்ஃப்காங் குஸெரோவின் உதாரணத்தைக் கவனியுங்கள். இந்த 20 வயது ஜெர்மானியர் ‘போரைக் கற்றுக்கொள்ள மாட்டார்’ என்பதால் 1942-ல் நாசிகள் அவரைச் சிரச்சேதம் செய்தனர். அவர் ஏன் இறப்பதைத் தெரிந்துகொண்டார்? ஓர் எழுதப்பட்ட வாக்குமூலத்தில், அவர் “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக” மற்றும் “பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்துபோவார்கள்” ஆகியவற்றைப்போன்ற வேதப்பூர்வ நியமங்களை மேற்கோள் காட்டினார். (மத்தேயு 22:39; 26:52) பின்னர் அவர் குறிப்பிட்டுக் கேட்டார்: “நம் சிருஷ்டிகர் இவை யாவற்றையும் மரங்களுக்காகவா எழுதிவைத்தார்?”

பைபிளில் பதிவு செய்யப்பட்ட கடவுளுடைய வார்த்தை, ‘வல்லமை உள்ளதாய்’ இருக்கிறது; விளைவுகள் என்னவாக இருந்தாலும், சமாதானத்தைப் பின்தொடரும்படி அது இந்த இளம் யெகோவாவின் சாட்சியை உந்துவித்தது. (எபிரெயர் 4:12; 1 பேதுரு 3:11) ஆனால் வால்ஃப்காங் குஸெரோ என்ற ஒருவர் மட்டுமே அவ்வாறு சமாதானத்தைப் பின்தொடர்ந்தவர் அல்ல. ஒரு தொகுதியாக யெகோவாவின் சாட்சிகள் போர் கருவிகளைப் பயன்படுத்த மறுத்தனர் என்று சான்றுபகரும் அதிகாரப்பூர்வ நாசி ஆவணங்களை, சர்ச்சுகளின் நாசி துன்புறுத்தல் 1933-45 (The Nazi Persecution of the Churches 1933-45) என்ற புத்தகத்தில், J. S. கான்வே எடுத்துக்காட்டுகிறார். கான்வே சுட்டிக் காண்பிக்கிறபடி, அப்படிப்பட்ட தைரியமான நிலைநிற்கை உண்மையில் தங்களுடைய சொந்த மரண தீர்ப்பாணைக்குத் தாங்களே கையொப்பமிடுவதை அர்த்தப்படுத்தியது.

இன்று யெகோவாவின் சாட்சிகள் தங்கள் இனம் மற்றும் தேசத்தைப் பொருட்படுத்தாமல், தொடர்ந்து சமாதானத்தை நாடுகின்றனர். ஏன்? ஏனென்றால், கடவுளின் உண்மையுள்ள ஊழியர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாக அடிக்க வேண்டும் என்று அவர்கள் பைபிளிலிருந்து கற்றிருக்கின்றனர். இஸ்ரேலுக்கு 1987-ல் குடியேறிச் சென்றிருந்த ஆலேகான்ட்ரோ என்ற அர்ஜன்டினாவைச் சேர்ந்த ஓர் இளம் மனிதன், இந்த உண்மைக்குத் தனிப்பட்ட விதத்தில் சான்றளிக்க முடியும்.

ஆலேகான்ட்ரோ ஒரு பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டும் பல்வேறு ஹோட்டல்களிலும் உணவு விடுதிகளிலும் வேலை செய்துகொண்டும் இருந்தபோது, மூன்று வருடங்களாக யூத சமுதாய நல வேளாண்மைக் குடியமைப்பு (kibbutz) ஒன்றில் வாழ்ந்து வந்தார். இந்தச் சமயத்தில், அவர் பைபிளை வாசிக்க தொடங்கி, வாழ்க்கையில் ஒரு நோக்கத்தைத் தேடிக்கொண்டிருந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, மக்கள் சமாதானத்தையும் நியாயத்தையும் அனுபவிக்கக்கூடிய ஓர் உலகைக் காண விரும்பினார். யூதனாகிய ஆலேகான்ட்ரோ யூதர்களுடனும் அரபியர்களுடனும் சேர்ந்து வேலை செய்தார்; ஆனால் எந்தப் பக்கத்தையும் ஆதரிக்காமல் இருப்பதை விரும்பினார்.

யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படித்துக்கொண்டிருந்த ஒரு நண்பர் 1990-ல், ஹைஃபாவில் நடந்த ஒரு நாள் அசெம்பிளிக்கு ஆலேகான்ட்ரோவை அழைத்தார். அசெம்பிளியில் 600 யூதர்களும் அரபியர்களும் ஒன்றுகூடி மகிழ்ந்திருப்பதைக் காண்பதில் ஆச்சரியப்பட்டு, ‘மக்கள் வாழ்வதற்கு சரியான வழி இதுவே’ என்று அவர் தனக்குள்ளேயே நினைத்தார். ஆறு மாதங்களுக்குள், அவர்தானே ஒரு சாட்சியாகி, இப்போது தன் பெரும்பாலான நேரத்தை பைபிளின் சமாதான செய்தியைப் பிரசங்கிப்பதற்காக செலவிடுகிறார்.

கடவுள் எப்படி சமாதானத்தைக் கொண்டுவருவார்

இந்த உதாரணங்கள் உருக்கமானவையாக இருந்தாலும், இன்றைய உலகில் அவை பொது நியதியாக இல்லாமல் வழக்கத்திற்கு மாறானவையாகவே இருக்கின்றன. தற்போதைய ஒழுங்குமுறை சமாதானத்திற்கு உதட்டளவான சேவையை அளித்தாலும், அது போரின் விதைகளுக்கு நீர்ப்பாய்ச்சுகிறது. துப்பாக்கிகளுக்கும் வீட்டுப் பாதுகாப்பிற்கும் தங்களுடைய சம்பாத்தியத்தில் 7 முதல் 16 சதவீதத்தைச் செலவிடும் குடிமக்களைக் கொண்ட தெருவில் வாழ நீங்கள் விரும்புவீர்களா? செயல்முறையளவில், சமீபத்திய வருடங்களில் இராணுவ செலவுகளின் மூலமாக அதையே தேசங்கள் செய்துவந்திருக்கின்றன. ஆச்சரியத்திற்கு இடமின்றி, கடவுள் ‘திரளான ஜனங்களைக் குறித்ததில் காரியங்களைச் சரிசெய்யும்’ வரையில், ஒருபோதும் மனிதவர்க்கம் முழுமையாக அதன் பட்டயங்களை மண்வெட்டிகளாக அடிக்காது என்று ஏசாயா தீர்க்கதரிசனம் வெளிப்படுத்துகிறது. அவர் எப்படி அதைச் செய்வார்?

காரியங்களைச் சரிசெய்வதற்கான முக்கிய ஏது, யெகோவா தேவனின் ராஜ்யம். ‘பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழிக்கப்படாத ஒரு ராஜ்யத்தை எழும்பும்படி செய்வார்’ என்று தானியேல் தீர்க்கதரிசி முன்னறிவித்தார். இந்த ராஜ்யம் “அந்த ராஜ்யங்களையெல்லாம் [உலக அரசாங்கங்களை] நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்” என்று அவர் மேலுமாகச் சொல்கிறார். (தானியேல் 2:44) பூமியின் மீதெங்கும் கடவுளுடைய ராஜ்யம் தன்னுடைய ஆதிக்கத்தை உறுதியாக ஸ்தாபிக்கும் என்று இந்த வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன. தேசிய எல்லைகளை நீக்குவதன்மூலம், அந்த ராஜ்யம் பகைகளை இல்லாமற்போகச் செய்யும். மேலுமாக, அதன் குடிமக்கள் ‘யெகோவாவால் போதிக்கப்பட்டிருப்பதால்’ அவர்களுடைய சமாதானம் ‘மிகுதியாக இருக்கும்.’ (ஏசாயா 54:13) கடவுளிடம் ஜெபிக்கும்படி இயேசு பின்வருமாறு சொன்னதில் எவ்வித ஆச்சரியமுமில்லை: “உம்முடைய ராஜ்யம் வருவதாக”!—மத்தேயு 6:10.

மத சம்பந்தமான தடைகளை நீக்குதல்

சமாதானத்திற்குத் தடங்கலாக இருக்கும் மத சம்பந்தமான தடைகளையும் கடவுள் நீக்குவார். சரித்திரத்திலேயே மிக நீண்ட ஆயுத போருக்கு—பொ.ச. 1095-ல் போப் அர்பன் II-ஆல் தொடுக்கப்பட்ட சிலுவைப் போர்கள், அல்லது ‘பரிசுத்த போர்களுக்கு’—மதம் காரணமாக இருந்தது.a நம்முடைய நூற்றாண்டில் போர்களுக்காக, முழுமையாக உலகப்பிரகாரமான இயல்புடைய போர்களுக்காகக்கூட பிரபலமான ஆதரவைத் தூண்டி வெற்றிபெறுவதில் மத குருமார் பிரபலமானவர்களாய் இருந்திருக்கின்றனர்.

முதல் உலகப் போரின்போது பெயர் கிறிஸ்தவ சர்ச்சுகளின் பங்கைக் குறிப்பிடுகையில், சரித்திராசிரியர் பால் ஜான்ஸன் எழுதினார்: “மத குருக்கள், தேசப்பற்றிற்கு முன்னதாக கிறிஸ்தவ விசுவாசத்தை வைக்கக் கூடாதவர்களாயும், பெரும்பாலும் மனமற்றவர்களாயும் இருந்தனர். பெரும்பாலானோர் எளிதான வழியைத் தெரிந்துகொண்டு, கிறிஸ்தவத்தைத் தேசபக்தியோடு சரிசமமாக வைத்தனர். எல்லா பிரிவுகளையும் சேர்ந்த கிறிஸ்தவ போர்வீரர்கள் தங்களுடைய இரட்சகரின் நாமத்தின்பேரில் ஒருவரையொருவர் கொல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர்.”

சமாதானத்தைப் பேணுவதற்குப் பதிலாகப் போரைத் தூண்டுவிப்பதற்கு மதம் அதிகத்தைச் செய்திருக்கிறது. உண்மையில், பைபிள் பொய் மதத்தை உலக ஆட்சியாளர்களை இழிவான உணர்ச்சிகளுக்கு உள்ளாக்கும் ஒரு ‘வேசியாக’ சித்தரிக்கிறது. (வெளிப்படுத்துதல் 17:1, 2) பூமியில் கொல்லப்பட்ட எல்லாருடைய இரத்தம் சிந்துதலுக்கும் அவளே பிரதான குற்றவாளி என்று கடவுள் அறிவிக்கிறார். (வெளிப்படுத்துதல் 18:24) அதன் விளைவாக, யெகோவா தேவன் சமாதானத்திற்கான இந்தத் தடையை என்றென்றைக்குமாக நீக்கிப்போடுவார்.—வெளிப்படுத்துதல் 18:4, 5, 8.

அரசியல், பொய் மதம் போன்ற பிரிவினை கூறுகளின் மறைவுடன்கூட, எல்லாவற்றையும்விட போரை நாடும் மிகப் பெரியவன்—பிசாசாகிய சாத்தான்—நீக்கப்படாவிட்டால் சமாதானம் நிலையானதாக ஒருபோதும் இருக்காது. கடவுளுடைய ராஜ்யம், பூமிக்கு முழுமையான சமாதானத்தைக் கொண்டுவரும் அதன் திட்டத்தில் மேற்கொள்ளும் கடைசி வேலை அதுவே. பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதல், சாத்தான் ‘இனிமேலும் மக்களை மோசம்போக்காதபடிக்கு பிடித்து, கட்டப்பட்டு, அபிஸுக்குள் தள்ளப்படுவான்’ என்று விவரிக்கிறது. அதற்குப்பின் அவன் முழுவதுமாக அழிக்கப்படுவான்.—வெளிப்படுத்துதல் 20:2, 3, 10.

போருக்கான ஒரு முடிவைப்பற்றிய பைபிளின் வாக்குறுதி ஒரு வீண் கனவு அல்ல. சமாதானத்திற்கான யெகோவா தேவனின் ஏற்பாடு ஏற்கெனவே நிறுவப்பட்டிருக்கிறது. அவருடைய ராஜ்யம் பரலோகத்தில் ஸ்தாபிக்கப்பட்டு, உலகளாவிய சமாதானத்தை உறுதியளிக்கும் மேலுமான படிகளை அமல்படுத்த தயாராக உள்ளது. அதேசமயத்தில், இந்தப் பரலோக அரசாங்கத்தை ஆதரிக்கும் லட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள், சமாதானத்துடன் வாழ கற்றுக்கொண்டிருக்கின்றனர்.

அப்படியானால், தெளிவாகவே, போர்கள் தவிர்க்கப்பட முடியாதவை அல்ல என்று நம்புவதற்கு நாம் நல்ல காரணங்களைக் கொண்டிருக்கிறோம். இன்னும் அதிகமாக, யெகோவா போரை என்றென்றைக்குமாக இல்லாமல் போகச் செய்யும் அருகாமையில் உள்ள காலத்திற்காக நாம் எதிர்நோக்கி இருக்கலாம். (சங்கீதம் 46:9) விரைவில் போரில்லா ஓர் உலகம் இருக்கும்படி அவர் பார்த்துக்கொள்வார்.

a சிலநேரங்களில் மதத் தலைவர்கள்தாமே போர்வீரர்களானார்கள். ஹேஸ்டிங்ஸ் போரில் (1066), ஒரு பட்டயத்தை எடுப்பதற்கு மாறாக ஒரு தடியை வைத்து தான் பலமாக ஈடுபட்டதை கத்தோலிக்க பிஷப் ஓடோ நியாயப்படுத்தினார். இரத்தம் சிந்தப்படாவிட்டால், கடவுளின் மனிதன் ஒருவன் சட்டப்படி கொல்லலாம் என்று அவர் வலியுறுத்தினார். ஐந்து நூற்றாண்டுகளுக்குப்பின், கார்டினல் கிமேனெஸ் தனிப்பட்ட விதத்தில் வட ஆப்பிரிக்காவின் ஸ்பானிய படையெடுப்பை முன்நின்று நடத்திச் சென்றார்.

[பக்கம் 7-ன் படம்]

போரில்லா ஒரு புதிய உலகில் நீங்கள் வாழ முடியும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்