உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w04 1/1 பக். 5-7
  • போருக்கு சாவு மணி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • போருக்கு சாவு மணி
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அவர்கள் கொல்ல கற்றுக்கொண்டார்கள்
  • போரை அல்ல, சமாதானத்தை கற்றுக்கொள்ளுதல்
  • உலக சமாதானத்திற்கு ஓர் உத்தரவாதம்
  • உண்மையான சமாதானம்—எந்த ஊற்றுமூலத்திலிருந்து?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • விரைவில்—போரில்லா ஓர் உலகம்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • யார் மனிதவர்க்கத்தைச் சமாதானத்துக்கு வழிநடத்துவார்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • உண்மையான சமாதானத்தை நாடி அதைப் பின்தொடருங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
w04 1/1 பக். 5-7

போருக்கு சாவு மணி

‘எங்களுக்கு 12 வயசுதான் ஆகுது. எங்களால அரசியலையோ போரையோ கட்டுப்படுத்த முடியாது, ஆனா வாழணுங்கிறது எங்களோட ஆசை. சமாதானம் வரும்ணு காத்துக்கிட்டு இருக்குறோம். நாங்க உயிரோட இருக்கிறப்பவே அது வருமா?’​—⁠ஐந்தாம் வகுப்பு படிக்கும் பிள்ளைகள்.

‘எங்களுக்கு பள்ளிக்கூடம் போக ஆசை, கடத்தப்படுவோமோ என்ற பயமில்லாம எங்க நண்பர்களையும் குடும்பத்தாரையும் போய் பார்க்க ஆசை. இதையெல்லாம் அரசாங்கம் காதில போட்டுக்கும்ணு நினைக்கிறேன். நல்ல வாழ்க்கை வாழணும், சமாதானமா வாழணும் அப்படிங்கிறதுதான் எங்க கனவெல்லாம்.’​—⁠14 வயது ஆல்ஹாஜி.

நெஞ்சை உருக்கும் இவ்வார்த்தைகள், உள்நாட்டு சண்டையால் வருஷக்கணக்காக அல்லல்பட்டுக் கிடக்கிற இளம் மொட்டுகளின் இதயப்பூர்வ ஆசையையே பறைசாற்றுகின்றன. இயல்பான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே அவர்கள் அனைவருடைய ஆசை. ஆனால் நம்பிக்கை நிழல்களை நிஜங்களாக மாற்றுவது அவ்வளவு சுலபமல்ல. போர் வாடையே இல்லாத உலகை என்றாவது நாம் காண்போமா?

சமீப வருடங்களில், சமாதான ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்படி எதிரெதிர் அணிகளை வற்புறுத்துவதன் மூலம் சில உள்நாட்டுப் போர்களுக்கு சாவுமணி அடிக்க சர்வதேச அளவில் பிரயத்தனங்கள் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய ஒப்பந்தங்களுக்கு உயிர் கொடுக்க சில நாடுகள் அமைதிப் படைகளை அனுப்பி வைத்திருக்கின்றன. ஆனால் அநேக நாடுகளுக்கு தூர தேசங்களைக் கண்காணிக்கும் ஆசையோ அதற்கான பணவசதியோ கிடையாது; பகைமையும் அவநம்பிக்கையும் ஆழமாக வேரூன்றியிருக்கும் அப்படிப்பட்ட தூர தேசங்களுக்கு இடையே ஏற்றப்படும் எந்தவொரு ஒப்பந்த விளக்கும் தொடர்ந்து எரிவதில்லை. போர் நிறுத்தம் கையெழுத்தான சில வாரங்களிலோ மாதங்களிலோ மறுபடியும் சண்டைகள் வெடிப்பது சர்வசாதாரணம். “படைவீரர்களுக்கு நெஞ்சுரமும் தொடர்ந்து சண்டையிடும் பலமும் இருக்கும்பட்சத்தில் சமாதானத்தை அடைவது கஷ்டம்” என ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.

அதேசமயத்தில், பூமியின் பெரும்பாலான பகுதிகளை பீடித்திருக்கும் தீர்க்கமுடியா இத்தகைய சண்டைகள் பைபிள் தீர்க்கதரிசனத்தை கிறிஸ்தவர்களுக்கு நினைப்பூட்டுகின்றன. சரித்திரத்திலேயே கொடிதான ஒரு காலப்பகுதியைப் பற்றி, அதாவது ஓர் அடையாளப்பூர்வ குதிரையில் சவாரி செய்யும் மனிதன் “சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்துப் போடும்” ஒரு காலப்பகுதியைப் பற்றி வெளிப்படுத்துதல் புத்தகம் பேசுகிறது. (வெளிப்படுத்துதல் 6:4) தீராத போரைப் பற்றி முன்னறிவிக்கும் இந்த வர்ணனை ஒரு கூட்டு அடையாளத்தின் அம்சமே; இந்த அடையாளம், ‘கடைசி நாட்கள்’a என பைபிள் விவரிக்கும் ஒரு காலத்தில் நாம் இப்பொழுது வாழ்ந்து வருகிறோம் என்பதை சுட்டிக்காட்டுகிறது. (2 தீமோத்தேயு 3:1) ஆனால் இந்தக் கடைசி நாட்களுக்கு அடுத்ததாக சமாதானம் வரும் என கடவுளுடைய வார்த்தை நமக்கு உறுதியளிக்கிறது.

மெய் சமாதானத்தை அடைய வேண்டுமென்றால் போருக்கு சாவு மணி அடிக்கப்பட வேண்டும், இந்தப் பூகோளத்தின் ஏதோ ஒரு பகுதியில் மட்டும் அல்ல, பூமியெங்கும் அடிக்கப்பட வேண்டுமென சங்கீதம் 46:9-⁠ல் பைபிள் விளக்குகிறது. அதோடு, பைபிள் காலங்களில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள்​—⁠வில், ஈட்டி, ரதங்கள் போன்ற ஆயுதங்கள்​—⁠அழிக்கப்படுவதைப் பற்றியும் இதே சங்கீதம் திட்டவட்டமாக குறிப்பிடுகிறது. இன்று எக்கச்சக்கமாக உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்களும் அவ்வாறே அழிக்கப்பட வேண்டும், அப்போதுதான் மனிதகுலம் சமாதானமாக வாழ முடியும்.

ஆனால், தோட்டாக்களோ துப்பாக்கிகளோ அல்ல, பகைமையும் பேராசையுமே போர் எனும் கொளுந்துவிட்டு எரியும் நெருப்பிற்கு எண்ணெய் வார்க்கின்றன. பேராசையே போருக்கு அடிப்படை காரணம், அதோடு பகைமையும் பெரும்பாலும் வன்முறைக்கு வழிவகுக்கிறது. இத்தகைய உணர்ச்சிகளை வேரோடு களைந்தெறிய மக்களின் மனதில் மாற்றம் நிகழ வேண்டும். அவர்களுக்கு சமாதான வழிகள் கற்பிக்கப்பட வேண்டும். ஆகவே, ஜனங்கள் ‘இனி யுத்தத்தைக் கற்காத’ போதுதான் போரே ஒழியும் என பூர்வ தீர்க்கதரிசியாகிய ஏசாயா எதார்த்தமாக சொல்கிறார்.​—⁠ஏசாயா 2:⁠4.

ஆனால், பெரியோருக்கும் சிறியோருக்கும், சமாதான நெறிமுறையை அல்ல, போர் தந்திரங்களை கற்பிக்கும் ஓர் உலகில் நாம் இப்பொழுது வாழ்கிறோம். பிஞ்சுக் கரங்களும் பிஸ்டல் பிடிப்பதற்கு பயிற்சி அளிக்கப்படுவது பரிதாபகரமாக இருக்கிறது.

அவர்கள் கொல்ல கற்றுக்கொண்டார்கள்

ஆல்ஹாஜி 14 வயதிலேயே இராணுவத்திலிருந்து நீக்கப்பட்ட படைவீரனாக இருந்தான். கலகக் கும்பல்காரர்கள் இவனை பிடித்தபோது இவனுக்கு பத்தே வயது; ஏகே-47 துப்பாக்கியில் சுட அவர்கள் பயிற்சி அளித்தனர். இவன் பலவந்தமாக படையில் சேர்க்கப்பட்ட பிறகு, உணவு தேடி ரெய்டுகள் நடத்த ஆரம்பித்தான், வீடுகளை தீக்கிரையாக்கினான். ஆட்களை கொன்றான், முடமாக்கினான். இன்றைக்கு போரை மறந்து இயல்பான வாழ்க்கை வாழ்வது ஆல்ஹாஜிக்கு பெரும் கஷ்டமாக இருக்கிறது. ஆபிரகாம் என்ற மற்றொரு குழந்தைப் போராளியும் கொலை செய்ய கற்றுக்கொண்டான், தனது போராயுதத்தை ஒப்படைத்துவிட அவனுக்கு மனம் வரவில்லை. அவன் கூறினான்: “துப்பாக்கியை பிடுங்கிக்கொண்டு அவுங்க என்னை விரட்டிவிட்டா, நான் என்ன செய்வேன், எப்படி சாப்பிடுவேன் என்றே எனக்குத் தெரியல.”

நம் கிரகத்தை ஆட்டிப்படைத்துவரும் உள்நாட்டு சண்டைகளில், 3,00,000-⁠க்கும் அதிகமான குழந்தைப் போராளிகள்​—⁠சிறுவர் சிறுமியர்​—⁠தொடர்ந்து போரிட்டுக்கொண்டும் செத்து மடிந்துகொண்டும் வருகிறார்கள். கலகக் கூட்டத் தலைவன் ஒருவன் இவ்வாறு கூறினான்: “இவர்கள் கட்டளைகளுக்கு கீழ்ப்படிகிறார்கள்; மனைவியிடமோ குடும்பத்தாரிடமோ திரும்பிப் போவதைப் பற்றி கவலைப்படுவதில்லை; அச்சமென்றால் அவர்களுக்கு என்னவென்றே தெரியாது.” ஆனால் இந்தப் பிள்ளைகள் மேம்பட்ட வாழ்க்கை வாழத் துடிக்கிறார்கள், அதற்கு அவர்கள் தகுதியானவர்களே.

வளர்ச்சி அடைந்த நாடுகளில், குழந்தைப் போராளி எதிர்ப்படும் அதிர்ச்சியூட்டும் சூழ்நிலைமை கற்பனை செய்ய கடினமாக தோன்றலாம். இருந்தாலும், மேலைநாட்டு பிள்ளைகள் தங்களுடைய சொந்த வீட்டிலேயே போரில் ஈடுபட கற்றுக்கொள்கிறார்கள். எப்படி?

தென்கிழக்கு ஸ்பெயினைச் சேர்ந்த ஹோசே என்பவனை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். ஜூடோ, கராத்தே போன்ற தற்காப்புக் கலைகளை பயிலுவதில் ஆர்வம் காட்டிய ஒரு டீனேஜ் பையன் இவன். சாமுராய் வாள்தான் இவனுடைய மதிப்புமிக்க பொக்கிஷம். கிறிஸ்மஸுக்காக இவனுடைய அப்பா இதை வாங்கிக் கொடுத்தார். வீடியோ கேம்ஸ், முக்கியமாக வன்முறை நிறைந்த வீடியோ கேம்ஸ் என்றால் இவனுக்கு கொள்ளை ஆசை. ஏப்ரல் 1, 2000-⁠ல், வீடியோ கேம்ஸில் வரும் கொடூர ஹீரோவை நிஜ வாழ்க்கையில் பின்பற்ற ஆரம்பித்தான். அப்பா வாங்கித் தந்த அந்த வாளைக் கொண்டே வெறித்தனமாக அப்பாவையும் அம்மாவையும் தங்கையையும் கொன்றுவிட்டான். “நான் மாத்திரமே இந்த உலகத்தில் இருப்பதற்கு ஆசைப்பட்டேன்; என்னுடைய பெற்றோர்கள் என்னை தேடிக்கொண்டிருக்க நான் விரும்பவில்லை” என போலீசாரிடம் அவன் கூறினான்.

வன்முறை விளையாட்டுக்களால் உண்டாகும் விளைவுகளைப் பற்றி குறிப்பிடுகையில், நூலாசிரியரும் இராணுவ அதிகாரியுமாகிய டேவ் கிரோஸ்மன் இவ்வாறு கூறினார்: “வேதனை உண்டாக்குவதும் துன்பம் உண்டாக்குவதும் பொழுதுபோக்காக ஆகியிருக்கும், உணர்ச்சியே இல்லாத மரத்துப்போன ஒரு நிலையை நாம் கிட்டத்தட்ட எட்டிவிட்டோம். அப்படிப்பட்ட சம்பவங்களை வெறுப்பதற்கு பதிலாக, ரசித்து மகிழ்கிறோம். பிறரை கொலை செய்ய கற்றுக்கொண்டு வருகிறோம், அதை விரும்பி செய்யவும் கற்றுக்கொண்டு வருகிறோம்.”

ஆல்ஹாஜியும் ஹோசேயும் கொலை செய்ய கற்றுக்கொண்டார்கள். இவர்கள் இருவருமே கொலையாளிகளாக மாற விரும்பவில்லை, ஆனால் ஏதோ ஒருவித பயிற்சி அவர்களுடைய சிந்தையை திரித்துவிட்டது. இத்தகைய பயிற்சி​—⁠அது சிறுவர்களுக்காக இருந்தாலும்சரி வயதுவந்தவர்களுக்காக இருந்தாலும்சரி​—⁠வன்முறை, போர் எனும் விதைகளையே விதைக்கிறது.

போரை அல்ல, சமாதானத்தை கற்றுக்கொள்ளுதல்

மக்கள் ஒருவரையொருவர் கொல்ல கற்றுக்கொள்ளும்போது நிரந்தர சமாதானத்தை ஒருபோதும் ஸ்தாபிக்க முடியாது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏசாயா தீர்க்கதரிசி இவ்வாறு எழுதினார்: “ஆ, என் [கடவுளுடைய] கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போல . . . இருக்கும்.” (ஏசாயா 48:17, 18) கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய திருத்தமான அறிவை மக்கள் பெற்று, அவருடைய சட்டதிட்டங்களை நேசிக்க கற்றுக்கொள்ளும்போது, வன்முறையும் போரும் அவர்களுக்கு அருவருப்பானவையாக மாறிவிடும். தங்களுடைய பிள்ளைகள் விளையாடும் விளையாட்டுக்கள் வன்முறைக்கு வித்திடாதவாறு இப்பொழுதே பெற்றோர்கள் பார்த்துக் கொள்ளலாம். பகைமையையும் பேராசையையும் சமாளிப்பதற்கு பெரியவர்கள் கற்றுக்கொள்ளலாம். ஆளையே மாற்றிவிடும் சக்தி கடவுளுடைய வார்த்தைக்கு இருப்பதை யெகோவாவின் சாட்சிகள் பலமுறை பார்த்திருக்கிறார்கள்.​—⁠எபிரெயர் 4:12.

உதாரணத்திற்கு ஓர்டென்ஷியோ என்பவரை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் ஓர் இளைஞராக இருந்தபோது பலவந்தமாக இராணுவத்தில் சேர்க்கப்பட்டார். இராணுவ பயிற்சியின் நோக்கமே “மற்றவர்களை கொலை செய்வதற்கான ஆசையையும், துளியும் பயமின்றி கொலை செய்வதற்கான துணிச்சலையும் மனதில் பதிய வைப்பதுதான்” என அவர் கூறுகிறார். ஆப்பிரிக்காவில் வெகுகாலமாக நடந்துவந்த உள்நாட்டுப் போரில் அவர் சண்டையிட்டார். “இந்தப் போர் என்னுடைய சுபாவத்தையே மிகவும் பாதித்துவிட்டது” என அவர் ஒப்புக்கொள்கிறார். “நான் செய்த ஒவ்வொன்றும் இன்றைக்கும் நினைவில் இருக்கிறது. பலவந்தத்தால் நான் செய்த செயல்களைக் குறித்து மிகவும் வேதனைப்படுகிறேன்.”

பைபிளைப் பற்றி சக படைவீரன் ஒருவன் ஓர்டென்ஷியோவிடம் பேசியபோது, அது அவருடைய இதயத்தைத் தொட்டது. எல்லா வகை போர்களையும் முடிவுக்குக் கொண்டு வருவதாக சங்கீதம் 46:9-⁠ல் கடவுள் தரும் வாக்குறுதி அவரை கவர்ந்தது. பைபிளை எந்தளவுக்கு அதிகமாக படித்தாரோ அந்தளவுக்கு சண்டையிடும் ஆர்வமும் குறைந்தது. சீக்கிரத்தில், அவரும் அவருடைய நண்பர்கள் இருவரும் இராணுவத்திலிருந்து நீக்கப்பட்டார்கள், அதனால் யெகோவா தேவனுக்கு அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை ஒப்புக்கொடுத்தார்கள். “என் விரோதியை நேசிப்பதற்கு பைபிள் சத்தியம் எனக்கு உதவியது” என ஓர்டென்ஷியோ கூறுகிறார். “போரில் சண்டையிடுவதன் மூலம் உண்மையில் நான் யெகோவாவுக்கு எதிராக பாவம் செய்துகொண்டிருந்தேன், ஏனென்றால் நம்முடைய சக மனிதரை கொலை செய்யக் கூடாது என அவர் சொல்கிறார். இத்தகைய அன்பை காட்டுவதற்கு, என்னுடைய சிந்தனையை மாற்றி, ஆட்களை என்னுடைய விரோதிகளாக கருதுவதை நிறுத்த வேண்டியிருந்தது.”

சமாதானத்தை முன்னேற்றுவிப்பதற்கு பைபிள் கல்வி தேவை என்பதை இத்தகைய நிஜ வாழ்க்கை அனுபவங்கள் காட்டுகின்றன. இது ஆச்சரியமல்ல. தெய்வீக கல்விக்கும் சமாதானத்திற்கும் நேரடியான தொடர்பு இருப்பதை ஏசாயா தீர்க்கதரிசி குறிப்பிட்டார். அவர் இவ்வாறு முன்னறிவித்தார்: ‘உன் பிள்ளைகளெல்லாரும் யெகோவாவால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்.’ (ஏசாயா 54:13) எல்லா தேசத்தாரும் யெகோவா தேவனுடைய வழிகளைக் கற்றுக்கொள்ள தூய வணக்கத்திற்கு திரண்டு வரும் காலத்தை இதே தீர்க்கதரிசி முற்காட்சியாக கண்டார். அவர்கள் அப்படி திரண்டு வருவதன் விளைவு? ‘அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.’​—⁠ஏசாயா 2:2-4.

இந்தத் தீர்க்கதரிசனத்திற்கு இசைய, யெகோவாவின் சாட்சிகள் ஓர் உலகளாவிய கல்வி புகட்டும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்; மனிதருடைய போர்களுக்கு ஆணிவேராக இருக்கும் பகைமையை பிடுங்கியெறிய ஏற்கெனவே லட்சோப லட்சம் மக்களுக்கு இந்தக் கல்வி உதவி செய்திருக்கிறது.

உலக சமாதானத்திற்கு ஓர் உத்தரவாதம்

கல்வியை வழங்குவதோடு, உலக சமாதானத்தைக் கொண்டுவரக்கூடிய ஓர் அரசாங்கத்தையும், அதாவது “ராஜ்யத்தை”யும் கடவுள் ஸ்தாபித்திருக்கிறார். கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசராகிய இயேசு கிறிஸ்து “சமாதான பிரபு”வாக பைபிளில் வர்ணிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. “அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை” என்றும் அது நமக்கு உறுதியளிக்கிறது.​—⁠ஏசாயா 9:6, 7.

கிறிஸ்துவின் ஆட்சி எல்லாவித போரையும் அடியோடு ஒழித்துக் கட்டும் என்பதற்கு நமக்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? ஏசாயா தீர்க்கதரிசி மேலும் இவ்வாறு கூறுகிறார்: ‘சேனைகளின் யெகோவாவுடைய வைராக்கியம் இதைச் செய்யும்.’ (ஏசாயா 9:7) கடவுளுக்கு நீடித்த சமாதானத்தை நிலைநாட்டுவதற்குரிய விருப்பமும் இருக்கிறது, திறமையும் இருக்கிறது. இந்த வாக்குறுதியில் இயேசு முழு நம்பிக்கை வைத்திருக்கிறார். அதனால்தான் கடவுளுடைய ராஜ்யம் வருவதற்காகவும் கடவுளுடைய சித்தம் பூமியில் செய்யப்படுவதற்காகவும் ஜெபிக்கும்படி தம்மை பின்பற்றுவோருக்கு கற்பித்தார். (மத்தேயு 6:9, 10) மனப்பூர்வமாக செய்யப்படும் இந்த விண்ணப்பத்திற்கு கடைசியில் பதில் கிடைக்கும்போது, இந்தப் பூமியில் மீண்டும் ஒருபோதும் போர் தலைதூக்காது.

[அடிக்குறிப்பு]

a நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோம் என்பதற்குரிய அத்தாட்சியை ஆராய்ந்து பார்ப்பதற்கு, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தில் 11-⁠ம் அதிகாரத்தைக் காண்க.

[பக்கம் 7-ன் படம்]

பைபிள் கல்வி உண்மையான சமாதானத்தை முன்னேற்றுவிக்கிறது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்