இளைஞர் கேட்கின்றனர்
அதிக செல்வச் செழிப்புள்ள ஒரு நாட்டுக்கு நான் மாறிப்போகவேண்டுமா?
தாரா தன்னுடைய சொந்த நாடாகிய ட்ரினிடாடை விட்டுச் சென்றாள், ஷீலா ஜமைக்காவை விட்டுச் சென்றாள், எரிக் சூரினாமை விட்டுச் சென்றான். இந்த மூன்று இளைஞரும் ஓர் அதிக செல்வச் செழிப்புள்ள நாட்டுக்கு மாறிப்போய்விட்டனர். ஏன்?
“ட்ரினிடாடில் உள்ள இளைஞராகிய நாங்கள், டி.வி.யிலும், பத்திரிகைகளிலும் பார்ப்பவற்றால் அதிகம் செல்வாக்குச் செலுத்தப்படுகிறோம். வருந்தத்தக்கவகையில், இது ஐக்கிய மாகாணங்களைப்பற்றியும் மற்ற செல்வச் செழிப்புள்ள நாடுகளைப்பற்றியும் எங்களுக்கு ஒரு கற்பனைக் காட்சியைத் தந்துவிடுகிறது,” என்று தாரா விளக்குகிறாள்.
ஷீலாவின் கதையும் இதேபோலத்தான்: “இலவசக் கல்வி மற்றும் அதிக வேலைவாய்ப்புகள் போன்றவற்றைப்பற்றி எனக்குச் சொல்லப்பட்டதை நான் நினைத்துப் பார்க்கிறேன்.” அவள் மேலும் கூறினாள், இருந்தாலும்: “அந்த நாடுகளுக்குச் சென்று வந்தவர்கள் ஒருபோதும் கதையின் மறுபக்கத்தைச் சொல்லவேயில்லை. அது ஏனோ தெரியவில்லை. ஒருவேளை அங்கு நிலைமைகள் தாங்கள் எதிர்பார்த்தளவுக்கு இல்லாமல் போனதை ஒப்புக்கொள்வதற்கு வெட்கப்பட்டார்கள் போலும்.”
எனினும், ஜனங்கள் இடம் விட்டு இடம் செல்கின்றனர். லாஸ் ஏஞ்சலிஸ் டைம்ஸ் செய்தித்தாளின் ஓர் அறிக்கை காட்டியதாவது: 1980 முதல் 1990 வரை, மற்ற நாடுகளுக்கு மாறிச்செல்கிற மக்களின் எண்ணிக்கை இரட்டித்தது. இது 2000 ஆண்டில் மீண்டும் இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் 7,00,000-க்கும் அதிகமான மக்கள் ஐக்கிய மாகாணங்களுக்கு மாறிச்செல்கின்றனர். ஆஸ்திரேலியா, கனடா, கோட் டி வாயர், சவுதி அரேபியா போன்ற இந்நாடுகள் ஒவ்வொன்றும் 50,000-க்கும் அதிகமான ஆட்களை ஒவ்வொரு வருடமும் பெற்றுவருகின்றன. இவர்களில் அநேகர் ஓர் அதிக செல்வச் செழிப்புள்ள வாழ்க்கையைத் தேடி செல்கின்றனர்.
நீங்கள் ஓர் ஏழை நாட்டிலோ ஒரு வளரும் நாட்டிலோ வாழ்வீர்களேயானால், ஒரு செழிப்பான நாட்டுக்குச் சென்றால் உங்கள் எதிர்காலம் பிரகாசமானதாய் இருக்குமோ என்று நீங்களும்கூட சிந்தித்திருப்பீர்கள். இது ஒரு முக்கியமான தீர்மானம். நீங்கள் எவ்வாறு ஞானமாகத் தேர்ந்தெடுக்கக்கூடும்?
அவசரப்பட்டுத் தீர்மானிக்காதீர்கள்
ஒருபோதும் அவசரப்பட்டுச் செயல்படக்கூடாது, முதலாவது உங்களால் முடிந்த அளவு அதிகம் தகவல்களைச் சேகரிக்கவேண்டும் என்று நம்புகிறான் சூரினாமிலுருந்து வரும் எரிக். “சூரினாமிலுங்கூட பெரும்பாலான குடும்பங்கள் செல்வச் செழிப்பான தேசங்களில் வாழும் உறவினர்களைக் கொண்டிருக்கின்றனர். எனவே தற்கால தகவல்களைப் பெறுவதும், உலக பொருளாதார நிலைமைகளைப்பற்றிய உண்மைகளை அறிந்துகொள்வதும் உங்களுக்குச் சாத்தியமானதே,” என்கிறான் அவன்.
நீங்கள் தீர்மானிக்குமுன், இதை நினைவில் கொள்ளுங்கள்: “ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போம்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.” (நீதிமொழிகள் 15:22) ஆகையால் உங்களுடைய பெற்றோரிடமும், கிறிஸ்தவ மூப்பர்களிடமும், உங்கள்மீது அக்கறைகாட்டும் அனுபவமிகுந்தவர்களிடமும் உங்களுடைய அபிப்பிராயங்களை மனம் திறந்து கலந்தாலோசியுங்கள்.
கேட்பதனைத்தையும் நம்பாதீர்
செல்வச் செழிப்புள்ள நாடுகளைப்பற்றி மிகவும் நம்பிக்கையான அறிக்கைகளை நீங்கள் கேள்விப்படும்போது, ஆரோக்கியமான சிறிது சந்தேகம் இருப்பது பொருத்தமானதாயிருக்கலாம். ஒரு ஞானமான நீதிமொழி இவ்வாறு சொல்கிறது: “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.”—நீதிமொழிகள் 14:15.
ஜமைக்காவில் வாழ்ந்த ஷீலா சொன்னாள்: “ஐக்கிய மாகாணங்களுக்கு மாறிச்செல்வதுதான் நான் எப்போதும் செய்யக்கூடிய காரியங்களிலேயே மிகச் சிறந்ததாக இருக்கும் என என் ஆங்கில ஆசிரியர் வலியுறுத்திக் கூறினார். நான் கனடாவுக்கோ, ஐக்கிய மாகாணங்களுக்கோ, அல்லது இங்கிலாந்துக்கோ போனால், எந்தத் துறையை நான் தேர்ந்தெடுத்தாலும் பலனடைவேன் என்று வயதுவந்தவர்கள் சிலர் கூறினர். சுருங்கச் சொன்னால், அத்தகைய ஒரு வாய்ப்பை நான் உதறித்தள்ளினால் நான் முட்டாளாகிவிடுவேன்.”
அவள் ஐக்கிய மாகாணங்களுக்கு மாறிச்சென்றது அவளுக்கு உண்மையிலேயே உதவிற்றா? “அநேக வழிகளில் என் வாழ்க்கை முன்னேற்றமடைந்தது. ஆனால் ஜமைக்காவிலேயே இருந்த என் தோழிகள்கூட தங்களுடைய வாழ்க்கையில் முன்னேறினார்கள். வழக்கமாகவே ஒரு பிரச்னையை ஒழித்து மற்றொரு பிரச்னையை வாங்குகிறீர்கள். நீங்கள் எங்கு வாழ்கிறீர்கள் என்பது தானாகவே அதிக வித்தியாசத்தை உண்டுபண்ணிவிடாது.”
ட்ரினிடாடிலிருந்து ஐக்கிய மாகாணங்களுக்கு மாறிச்சென்ற, தாரா ஒப்புக்கொள்கிறாள்: “மக்கள் செல்வச் செழிப்புள்ள நாடுகளை—படிக்கவும், வேலைசெய்யவும், பணம் சம்பாதிக்கவும், நல்ல நிலைமைகளில் வாழவும்—வாய்ப்பைத் திறந்துவைக்கும் தேசங்கள் என்பதாகக் காட்டினர். ஆனால் அவ்வாறு மாறிப்போனவரில் அநேகர், நிலைமைகள் எல்லா இடங்களிலும் மோசமாகிக்கொண்டிருக்கின்றன என்பதாக உணர்கின்றனர். சிலர் தாயகம் திரும்பிக்கூட வந்திருக்கின்றனர்.”
நன்மை, தீமைகளைச் சீர்தூக்கிப் பாருங்கள்
சமநிலையான ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு, மற்ற தேசங்களிலுள்ள அபரிமிதமான செல்வங்களைப்பற்றிய கவர்ச்சிகரமான அறிக்கைகளைவிட அதிகத்தைச் சிந்தித்துப் பாருங்கள். மாறிப்போவது உட்படுத்தக்கூடிய—பொருளாதார, சமூக, ஒழுக்கசம்பந்தமான, ஆவிக்குரிய—நன்மை, தீமைகளைச் சீர்தூக்கிப் பாருங்கள்.
உதாரணமாக, நீங்கள் வசிக்குமிடத்தில் பொருளாதாரம் ஒருவேளை மோசமாக இருக்கலாம். ஆனால் உள்ளூரிலேயே வேலை வாய்ப்புகள் இல்லையா? தாரா சொல்கிறாள், “எங்களுடைய சொந்த தேசத்தில் வேலையில்லாத் திண்டாட்டம், குறிப்பாக மேற்படிப்பு இல்லாதவர்களுக்கு, மிகக் கடுமையாக இருந்தது.” எனவே அவள் மாறிச்சென்றாள்; அவளுடைய சகோதரர்களோ சொந்த நாட்டிலேயே இருந்துவிட்டனர். “என்னுடைய இளைய சகோதரர்கள் இருவரும் மரச்சாமான்கள் மற்றும் மெத்தைகள் உண்டாக்கும் ஒரு படிப்பை மேற்கொண்டனர். இப்போது அவர்கள் தொழிற்சாலைகளில் வேலைசெய்துவருகின்றனர். மேலும் அவர்களுடைய வேலையை விரும்புகிற ஆட்களிடமிருந்து, அவர்களுக்குத் தனிப்பட்ட வேலைகளும் அதிகம் கிடைக்கின்றன. நான் இந்த ‘வாய்ப்பைத் திறக்கும் தேசத்தில்’ இருந்துவருவதைவிட சொந்த நாட்டில் அவர்கள் நன்றாகவே இருந்து வருகிறார்கள்.”
நீங்கள் அவ்வாறு மாறிச்செல்வீர்களேயானால், பண்பாடுகளின் வித்தியாசம் ஏற்படுத்தும் சில பிரச்னைகளை எதிர்ப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏன், நீங்கள் உயர்வாக மதித்துவரும் ஒழுக்கசம்பந்தமான நியமங்கள்மீது ஒருவேளை தாக்குதல் ஏற்படலாம். அத்தகைய ஓர் ஆபத்தை எதிர்ப்படுமளவுக்கு நீங்கள் மாறிச்செல்வது, தகுதிதானா? பின்னர், செல்வம் செழித்தோங்கும் நாடுகளில் பொருளாசை தலைவிரித்தாடுகிறது. அது ஆவிக்குரிய வகையில் உங்களை எவ்வாறு பாதிக்கலாம்?
ஏசாவின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்
தீர்மானங்களின் நன்மை, தீமைகளைச் சீர்தூக்கிப் பார்ப்பது வந்தபோது, பைபிள் கால ஏசாவுக்கு வினைமையான ஒரு பிரச்னை இருந்தது. அவன் மீண்டும் மீண்டும் மிகவும் இன்றியமையாத சில காரியங்களைக் கவனத்தில் வைக்கத் தவறினான்—அவனுடைய மற்றும் அவனுடைய குடும்பத்தின் ஆவிக்குரிய தன்மை. அதன் விளைவாக, அவனுடைய மிகப் பெரிய தீர்மானங்களில் சில பேரழிவாக மாறின.
“ஒருவேளை போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போல,” உள்ள ஆட்களுக்கு எதிராக பைபிள் எச்சரிக்கிறது. (எபிரெயர் 12:16) இந்தச் சேஷ்டபுத்திரபாகம் புனிதமானது. மனிதவர்க்கம் முழுவதின் இரட்சிப்புக்கும் திறவுகோலாயிருக்கிற மேசியாவின் வம்சாவழியிலிருக்க ஏசாவின் குடும்பத்திற்குக் கடவுள் ஒரு வாய்ப்பை உண்டாக்கித் தந்திருந்தார். (ஆதியாகமம் 22:18) எனினும் “ஏசா சேஷ்டபுத்திரபாகத்தை அலட்சியம் பண்ணினான்.” அந்தச் சிகப்புக் கூழாலான ஒருவேளை போஜனத்திற்காக அதை அவன் உடனே விற்றுவிட்டான்! (ஆதியாகமம் 25:30-34) உங்களுடைய மிகப் புனிதமான உடைமை, உங்களுடைய சிருஷ்டிகரிடமாக உள்ள உங்களுடைய உறவுமுறையே. அதை விற்றுவிடாதீர்கள், அசட்டை செய்துவிடாதீர்கள், அல்லது வேறு எந்தப் பொருளாதார நன்மைக்காகவும் அதை ஆபத்துக்கு உள்ளாக்கிவிடாதீர்கள்.—மாற்கு 12:30.
பின்னர், ஏசா தான் வளர்ந்த இடத்திலிருந்து வேறு தேசத்திற்கு மாறிச்சென்றபோது, அவன் இரண்டு ஏத்திய பெண்களை மணம் செய்துகொண்டான். ஒருசில காரணங்களுக்காக இத்திருமணங்கள் நடைமுறையானவையாகத் தோன்றியிருக்கலாம். ஆனால் ஆவிக்குரியவிதத்தில் அது பிரச்னைகளைத் தான் கொண்டுவந்தது. காரணம், அந்தப் பெண்கள் ஏசாவின் பெற்றோராகிய ஈசாக்கும், ரெபெக்காளும் வழிபட்ட கடவுளை வழிபடவில்லை. அந்த மனைவிகள் அவனுடைய பெற்றோருக்கு “மனநோவாயிருந்தார்கள்.”—ஆதியாகமம் 26:34, 35.
அதிக செல்வச் செழிப்பான ஒரு தேசத்தில் நுழைவதற்காக மட்டும் திருமணம் செய்துகொள்வது இளைஞருக்கு வழக்கத்திற்கு மாறானதல்ல. அறிக்கை செய்யப்பட்டபடி, ஐக்கிய மாகாணங்களுக்கு, இந்தியாவிலிருந்து ஒரு வருடத்தில் 4,000 திருமணத்துணைகள் போகின்றனர். மேலும், இன்னும் 10,000 பேர் அவ்வாறு போவதற்காக காத்திருப்பதாக கணக்கெடுக்கப்பட்டது. எனினும், திருமணம் கடவுளிடமிருந்து கிடைத்த அருமையான ஒரு பரிசாகும். அது மலிவானதாக ஆக்கப்படக்கூடாது, ஓர் எல்லையைக் கடப்பதற்கான வெறும் சீட்டாகப் பயன்படுத்தப்படக்கூடாது. நீங்கள் ‘அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படவேண்டியிருந்தால்,’ யெகோவாவையும், உங்களுடைய உண்மையான குடும்ப அங்கத்தினர்களையும் அது எவ்வாறு புண்படுத்தும் என்று யோசித்துப்பாருங்கள்.—2 கொரிந்தியர் 6:14.
உங்கள் தீர்மானத்தை வெற்றிகரமானதாக்குங்கள்
உங்களுடைய தீர்மானத்தைவிட, அத்தீர்மானத்திற்கிசைய எந்தளவுக்குச் செயல்படுகிறீர்கள் என்பதே மிக முக்கியமாக இருக்கலாம். நீங்கள் வசிக்கும் இடத்திலேயே இருந்தாலும் சரி அல்லது மாறிச்செல்ல தீர்மானித்தாலும் சரி, நீங்கள் எடுத்த தீர்மானத்தை மிகவும் வெற்றிகரமானதாக்குவதே முக்கியமான காரியமாக இருக்கிறது.
நீங்கள் வசிக்கும் இடத்திலேயே இருந்தால்: மாறிச்செல்பவர்களைக் குறைகூறாதீர்கள். அவர்களுடைய தீர்மானம் அவர்களுடைய சொந்த உத்தரவாதமாகும். (ரோமர் 14:4; கலாத்தியர் 6:4, 5) உங்கள் சொந்த நாட்டிற்கே உரிய தனிச்சிறப்பான அழகையும், நன்மைகளையும் போற்ற கற்றுக்கொள்ளுங்கள். மக்கள்மீது அதிக அன்பையும், அவர்களின் போராட்டங்களுக்கும், சவால்களுக்கும் ஒத்துணர்வையும் வளர்த்துக்கொள்ளுங்கள்.
மாறிச்சென்றால்: நீங்கள் புதிய பழக்கங்களை, ஒருவேளை ஒரு புதிய மொழியைக் கற்கும்போது, முக்கியமான காரியங்களை ஞானமாக நிர்ணயம் செய்யுங்கள். வெறுமனே உங்களுக்கு இதற்குமுன் ஒருபோதும் தேவைப்படாதிருந்த பொருட்களைச் சம்பாதிப்பதற்காக நீண்ட நேரம் வேலைசெய்யும் பிடியில் மட்டும் சிக்கிவிடாதீர்கள். இல்லையென்றால் விரைவில் ஆவிக்குரிய காரியங்களைச் செய்வதற்கு அதிக வேலையையுடையவராக ஆகிவிடுவீர்கள்.
“இன்றைய உலகில் ஒரு வேலையைக் கொண்டிருப்பது மிக முக்கியமாக இருக்கிறது. இருப்பினும், குடும்பமும், நண்பர்களும், ஆவிக்குரிய காரியங்களும் மிக முக்கியமாக இருக்கின்றன. வேறு எல்லாம் கைவிட்டாலும், இவைதான் நமக்குத் துணை நிற்பவை,” என்று ஷீலா ஒப்புக்கொள்கிறாள். ‘இவ்வுலகத்தின் வேஷம் கடந்துபோகிறபடியால், [உலகத்தை] முழுமையாய்ப் பயன்படுத்து’வதற்கெதிராக பைபிள் ஞானமாக நமக்கு அறிவுரை கூறுகிறது. (1 கொரிந்தியர் 7:31) உண்மையிலேயே வெற்றியடைவோர், வேலை மற்றும் பணம் போன்றவற்றிற்கான தங்களுடைய அக்கறைகளைத் தகுந்த இடத்தில்—குடும்பத் தேவை மற்றும் ஆவிக்குரிய காரியங்களுக்கு அடுத்து—வைக்கின்றனர்.
புதிய நண்பர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுங்கள். எரிக் சொல்கிறான்: “கட்டியெழுப்பும் வாழ்க்கைப் பாணியை வளர்க்கும் நண்பர்களோடுள்ள தொடர்பைக் காத்துக்கொள்ளுங்கள்.”
உங்கள் உண்மையான தேவைகளை நினைத்துப் பாருங்கள்
மகிழ்ச்சிக்காக நமக்கு உண்மையில் தேவைப்படும் காரியங்கள் மாறுவதில்லை. “நாம் எங்கு வாழ்ந்துவந்தாலும், யெகோவாவிற்கு நாம் செய்யவேண்டிய காரியங்கள் மாறாதிருக்கின்றன,” என்பதாக ஷீலா கூறுகிறாள். அவை யாவை? இயேசு சுருக்கமாகச் சொன்னார்: தங்களுடைய “ஆவிக்குரியத் தேவையைக்குறித்து உணர்வுடையவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்.” போதுமான உணவையும் உடையையும் பெறுவதைப்பற்றி ‘ஒருபோதும் கவலைப்படாதிருங்கள். ராஜ்யத்திற்கும் [தேவனுடைய] நீதிக்கும்’ முதலிடம் கொடுங்கள். “அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூட கொடுக்கப்படும்.”—மத்தேயு 5:3 (NW); 6:31, 33.
இந்த நியமங்களைப் பின்பற்றி வாழ்வது, எந்தத் தேசத்திலும் ஒரு நல்ல வாழ்க்கையை அனுபவிக்க உங்களுக்கு உதவக்கூடும். (g93 4/22)
[பக்கம் 15-ன் படங்கள்]
செழிப்புள்ள தேசங்கள் அவை உண்மையில் இருப்பதைவிட அதிகக் கவர்ச்சிகரமாகத் தோன்றலாம்