நீங்கள் எவ்வாறு ஞானமான தீர்மானங்கள் எடுக்க முடியும்?
“ஞானமுள்ளோர் செவிகொடுத்துக் கேட்டு, அநேக அறிவுரைகளை ஏற்றுக்கொள்வர்” என பூர்வ இஸ்ரவேலின் அரசனாகிய சாலொமோன் கூறினார். நம்மில் பெரும்பாலோர் சிலசமயங்களில் ஞானமற்ற தீர்மானங்களை எடுத்திருக்கிறோம். இதற்கு காரணம் பிறருடைய அறிவுரையை கேட்க தவறியதே.—நீதிமொழிகள் 1:5, NW.
சாலொமோன் உரைத்த இந்த வார்த்தைகளும், இதைத் தவிர அவர் இயற்றிய ‘மூவாயிரம் நீதிமொழிகளும்’ பிற்பாடு பைபிளின் பாகமாயின. (1 இராஜாக்கள் 4:32) அவருடைய ஞானமான பழமொழிகளை அறிந்து, அவற்றிற்கு செவிசாய்ப்பதன் மூலம் நாம் பயனடைய முடியுமா? ஆம், பயனடைய முடியும். “இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, புத்திமதிகளை உணர்ந்து, விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப் பற்றிய உபதேசத்தை அடையலாம்.” (நீதிமொழிகள் 1:2, 3) பைபிள் அடிப்படையிலான ஐந்து வழிகாட்டிகளை நாம் இப்பொழுது சிந்திக்கலாம், அவை ஞானமான தீர்மானங்கள் எடுக்க நமக்கு உதவும்.
நெடுங்கால விளைவுகளை சிந்தியுங்கள்
சில தீர்மானங்கள் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே, அவை எத்தகைய விளைவுகளாக இருக்கலாம் என்பதை முன்னதாகவே தீர்மானிக்க முயற்சி செய்யுங்கள். தற்காலிக நன்மைகள் மீது ஆசை வைத்து, நெடுங்கால விளைவுகளுக்கு—பெரும்பாலும் தீய விளைவுகளுக்கு—உங்களுடைய கண்களை குருடாக்க அனுமதிக்காமல் ஜாக்கிரதையாயிருங்கள். “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்” என நீதிமொழிகள் 22:3 எச்சரிக்கிறது.
குறுகியகால மற்றும் நெடுங்கால விளைவுகள் என்னென்ன என்பதையெல்லாம் ஒரு தாளில் பட்டியல் போட்டுக்கொள்வது நல்லது. குறிப்பிட்ட ஒரு வேலையை தேர்ந்தெடுப்பதால் வரும் குறுகியகால பலன்கள் ஒருவேளை நல்ல சம்பாத்தியமாக இருக்கலாம், மனசுக்கு பிடித்தமான வேலையாகவும் இருக்கலாம். ஆனால் நெடுங்கால விளைவுகளை எண்ணிப் பார்க்கும்போது எதிர்காலத்தில் முன்னேறுவதற்கு வாய்ப்பில்லாத வேலையாக இருக்கக் கூடுமா? அதனால் நீங்கள் கடைசியில் வேறெங்காவது மாறிச்செல்ல வேண்டியிருக்குமா, ஒருவேளை நண்பர்களையும் குடும்பத்தினரையும்விட்டு தூர செல்ல வேண்டியிருக்குமா? அது உங்களை ஆரோக்கியமற்ற சூழலில் தள்ளிவிடக் கூடுமா அல்லது உங்களை மிகுந்த மனச்சோர்வில் விட்டுவிடக் கூடுமா? சாதகங்களையும் பாதகங்களையும் எடைபோட்டுப் பாருங்கள், பின்பு எதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானியுங்கள்.
போதுமான நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்
அவசரப்பட்டு எடுக்கப்படும் தீர்மானங்கள் எளிதில் ஞானமற்ற தீர்மானங்களாக ஆகிவிடக்கூடும். நீதிமொழிகள் 21:5 (பொது மொழிபெயர்ப்பு) இவ்வாறு எச்சரிக்கிறது: “திட்டமிட்டு ஊக்கத்துடன் உழைப்பவரிடம் செல்வம் சேரும் என்பது திண்ணம்; பதற்றத்துடன் வேலை செய்பவர் பற்றாக்குறையில் இருப்பார்.” உதாரணமாக, மோக வலைக்குள் கிடக்கும் பருவ வயதினர் சட்டுபுட்டென்று கல்யாணம் பண்ணிக்கொள்வதற்குப் பதிலாக ஆற அமர யோசித்துப் பார்ப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், 18-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த வில்லியம் காங்ரீவ் என்ற ஆங்கில நாடகாசிரியர் கூறிய வார்த்தைகளின் உண்மையை அனுபவிக்க நேரிடலாம். அவர் இவ்வாறு கூறினார்: “அவசரப்பட்டு மணம் முடித்தால், சாவகாசமாக வேதனைப்படலாம்.”
ஆனால் போதுமான நேரம் எடுத்துக்கொள்வது என்பதை, தீர்மானம் எடுக்காமல் காலத்தை தள்ளிப்போட்டுக் கொண்டே இருப்பதோடு குழப்பிக்கொள்ளக் கூடாது. சில தீர்மானங்கள் மிகவும் முக்கியமானவையாக இருப்பதால் அவற்றை போதியளவு சீக்கிரத்தில் எடுப்பது ஞானமான போக்காகும். தேவையில்லாமல் தாமதிப்பது நமக்கோ அல்லது பிறருக்கோ பாதிப்பை உண்டுபண்ணலாம். ஒரு தீர்மானத்தை தள்ளிப்போட்டுக் கொண்டே போவதுதானே ஒரு தீர்மானமாக இருக்கலாம்—ஒருவேளை ஞானமற்ற தீர்மானமாக இருக்கலாம்.
ஆலோசனையை ஏற்றுக்கொள்ளுங்கள்
எந்த இரு சூழ்நிலைமைகளும் ஒன்றுபோல் இருப்பதில்லை என்பதால், ஒரேவிதமான பிரச்சினைகளை எதிர்ப்படும்போது இரண்டு பேர் எப்பொழுதும் ஒரே மாதிரி தீர்மானம் எடுக்காமலிருக்கலாம். என்றாலும், நாம் எதிர்ப்பட்டதைப் போன்ற சூழ்நிலைமைகளில் மற்றவர்கள் எப்படி தீர்மானம் எடுத்திருக்கிறார்கள் என்பதை கேட்பது பயனுள்ளது. அவர்கள் எடுத்த தீர்மானத்தை இப்பொழுது எப்படி கருதுகிறார்கள் என்பதை அவர்களிடம் கேளுங்கள். உதாரணமாக, ஒரு தொழிலை ஆரம்பிக்க விரும்பினால், அந்த தொழிலில் ஏற்கெனவே ஈடுபட்டவர்களிடம் அதன் இரண்டு பக்கங்களையும் சொல்லும்படி கேளுங்கள். அந்தத் தொழிலை தேர்ந்தெடுத்ததால் அவர்களுக்கு கிடைத்த நன்மைகள் என்னென்ன, தீமைகள் என்னென்ன, அதில் ஏதேனும் ஆபத்து இருக்கிறதா?
“ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போம்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்” என நமக்கு எச்சரிக்கை அளிக்கப்படுகிறது. (நீதிமொழிகள் 15:22) அதேசமயத்தில், மற்றவர்களுடைய ஆலோசனையை கேட்டு, அவர்களுடைய அனுபவத்திலிருந்து நாம் கற்றுக்கொண்டாலும், நாம்தாமே முடிவான தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதையும், அதனால் வரும் பொறுப்பை நாம்தாமே ஏற்க வேண்டும் என்பதையும் முழுமையாக புரிந்துகொள்ள வேண்டும்.—கலாத்தியர் 6:4, 5.
நன்கு பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சிக்கு செவிசாயுங்கள்
நம்முடைய வாழ்க்கையை அமைப்பதற்கு நாம் தேர்ந்தெடுக்கும் அடிப்படை நியமங்களுக்கு இசைய தீர்மானங்களை எடுக்க மனசாட்சி நமக்கு உதவும். அப்படியானால் கிறிஸ்தவர் ஒருவர் தன்னுடைய மனசாட்சியை கடவுளுடைய சிந்தைக்கு இசைவாக பயிற்றுவிக்க வேண்டும். (ரோமர் 2:14, 15) கடவுளுடைய வார்த்தை நமக்கு இவ்வாறு சொல்கிறது: “உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.” (நீதிமொழிகள் 3:6) சில விஷயங்களில், இரண்டு நபர்கள்—இருவரும் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியை உடையவர்கள்—வெவ்வேறு முடிவுகளுக்கு வந்து வெவ்வேறு தீர்மானங்களை எடுக்கலாம்.
ஆனால் ஒரு காரியத்தை கடவுளுடைய வார்த்தை நேரடியாக கண்டனம் செய்திருக்கும்போது, நன்கு பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சி இத்தகைய போக்கிற்கு இடங்கொடுக்காது. உதாரணமாக, பைபிள் நியமங்களால் பயிற்றுவிக்கப்படாத ஓர் ஆண் மற்றும் பெண்ணின் மனசாட்சி, தாங்கள் இருவரும் ஒத்துப்போகிறார்களா இல்லையா என்பதை பார்க்க கல்யாணம் செய்துகொள்வதற்கு முன்பு ஒன்றுசேர்ந்து வாழ அனுமதிக்கலாம். தாங்கள் ஞானமான தீர்மானமெடுத்திருப்பதாக அவர்கள் நினைக்கலாம்; இப்படி செய்வதன் மூலம், ஞானமற்ற விதத்தில் சட்டென்று திருமணத்திற்குள் காலடி எடுத்து வைப்பதை தவிர்க்கலாம் என அவர்கள் நியாயப்படுத்தலாம். அவர்களுடைய மனசாட்சி அவர்களுக்கு உறுத்தாமல் இருக்கலாம். இருந்தாலும், பாலுறவு மற்றும் திருமணம் சம்பந்தமாக கடவுளுடைய நோக்கையுடைய எவரும் இத்தகைய தற்காலிக மற்றும் ஒழுக்கயீனமான உறவுமுறையை ஏற்றுக்கொள்ள தீர்மானிக்க மாட்டார்கள்.—1 கொரிந்தியர் 6:18; 7:1, 2; எபிரெயர் 13:4.
உங்கள் தீர்மானங்கள் எவ்வாறு பிறரை பாதிக்கும்
நீங்கள் எடுக்கும் தீர்மானங்கள் அடிக்கடி மற்றவர்களை பாதிக்கலாம். ஆகவே, நண்பர்களுடன், உறவினர்களுடன், அல்லது எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளுடன் நீங்கள் வைத்திருக்கும் மதிப்புமிக்க உறவை கெடுக்கும் ஞானமற்ற தீர்மானத்தை—மடத்தனமான தீர்மானத்தை—வேண்டுமென்றே ஒருபோதும் எடுக்காதீர்கள். நீதிமொழிகள் 10:1 இவ்வாறு கூறுகிறது: “ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாயிருக்கிறான்.”
ஆனால், அதில் எந்த நட்பு முக்கியமானது என முடிவெடுப்பது சிலசமயங்களில் அவசியம் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். உதாரணமாக, ஒரு காலத்தில் நீங்கள் நம்பிய மதக் கோட்பாடுகள் வேதவசனங்களுக்கு முரணாக இருக்கிறதென இப்பொழுது அறிந்துகொள்ளும்போது அவற்றை ஒதுக்கித்தள்ள நீங்கள் தீர்மானிக்கலாம். அல்லது இப்பொழுது நீங்கள் ஏற்றுக்கொண்டுள்ள கடவுளுடைய வழிகளுக்கு இசைவாக உங்களுடைய வாழ்க்கையை அமைக்க விரும்பி, உங்கள் சுபாவத்தில் பெரும் மாற்றங்களை செய்ய தீர்மானிக்கலாம். உங்களுடைய தீர்மானம் நண்பர் அல்லது உறவினர் சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் கடவுளைப் பிரியப்படுத்தும் எந்தவொரு தீர்மானமும் ஞானமான தீர்மானமே.
மிகப் பெரிய தீர்மானத்தை ஞானமாக எடுங்கள்
வாழ்வா சாவா என்ற இரண்டுக்கும் இடையே தீர்மானிக்க வேண்டிய கட்டத்தில் ஒவ்வொருவரும் இருப்பதை மக்கள் இன்று பொதுவாக அறியாமல் இருக்கிறார்கள். பொ.ச.மு. 1473-ல், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் எல்லையில் கூடாரமிட்டிருந்த பூர்வ இஸ்ரவேலர் இதுபோன்ற சூழ்நிலைமையை எதிர்ப்பட்டார்கள். கடவுளின் சார்பாக பேசும் ஒரு பிரதிநிதியாக செயல்பட்டு, மோசே அவர்களிடம் இவ்வாறு கூறினார்: “நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்கு முன் வைத்தேன் என்று உங்கள் மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சி வைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு, கர்த்தர் உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே குடியிருக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர்.”—உபாகமம் 30:19, 20.
“கையாளுவதற்கு கடினமான கொடிய காலங்களில்” வாழ்கிறோம் என்றும், “இந்த உலகத்தின் காட்சி மாறிக்கொண்டே இருக்கிறது” என்றும் பைபிள் தீர்க்கதரிசனமும் அதன் காலக்கிரமமும் காட்டுகிறது. (2 தீமோத்தேயு 3:1, NW; 1 கொரிந்தியர் 7:31, NW) மனித ஒழுங்குமுறை அழிக்கப்படுகையில், முன்னுரைக்கப்பட்ட இந்த மாற்றம் உச்சக்கட்டத்தை அடையும்; அப்போது இவ்வுலகம் கடவுளுடைய நீதியுள்ள புதிய உலகமாக மாறும்.
நாம் அந்தப் புதிய உலகத்தின் வாசலில் நிற்கிறோம். கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ் பூமியில் என்றென்றும் வாழும் வாழ்க்கையை அனுபவிக்க நீங்கள் அதற்குள் நுழைவீர்களா? சாத்தானிய ஒழுங்குமுறை பூண்டோடு அழிக்கப்படுகையில் நீங்கள் இந்தப் பூமியிலிருந்து நீக்கப்படுவீர்களா? (சங்கீதம் 37:9-11; நீதிமொழிகள் 2:21, 22) எந்தப் பாதையை தேர்ந்தெடுப்பது என்பதை இப்பொழுது தீர்மானிப்பது உங்கள் கையில் இருக்கிறது, அது உண்மையிலேயே வாழ்வா சாவா என்பதை தீர்மானிக்கும் ஒரு விஷயம். சரியான, ஞானமான தீர்மானத்தை எடுப்பதற்கு கொடுக்கப்படும் உதவியை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?
ஜீவனுக்கான பாதையில் போக தீர்மானம் எடுப்பதற்கு முதலில் கடவுளுடைய சட்டதிட்டங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். இன்றைக்கு சர்ச்சுகள் கடவுளுடைய தராதரங்களைத் திருத்தமாக தெரியப்படுத்த பெரும்பாலும் தவறியிருக்கின்றன. அதன் தலைவர்கள், பொய்களை நம்பி கடவுளுக்குப் பிரியமில்லாத காரியங்களை செய்யும்படி மக்களை பெரும்பாலும் தவறாக வழிநடத்தியிருக்கிறார்கள். கடவுளை “ஆவியோடும் உண்மையோடும்” வணங்குவதற்கு தனிப்பட்ட தீர்மானம் எடுக்கும்படியான அவசியத்தை விளக்கத் தவறியிருக்கிறார்கள். (யோவான் 4:24) அதனால்தான் பெரும்பாலோர் கடவுளை ஆவியோடும் உண்மையோடும் வணங்குவதில்லை. ஆனால் இயேசு சொன்னதை கவனியுங்கள்: “என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.”—மத்தேயு 12:30.
கடவுளுடைய வார்த்தையைப் பற்றி நன்கு அறிந்துகொள்வதற்கு யெகோவாவின் சாட்சிகள் மகிழ்ச்சியுடன் மக்களுக்கு உதவி செய்கிறார்கள். அவர்கள் தனிப்பட்ட நபர்களுடன் அல்லது தொகுதிகளுடன் அவர்களுக்கு வசதியான நேரத்திலும் இடத்திலும் தவறாமல் பைபிளைப் பற்றி உரையாடுகிறார்கள். இந்த ஏற்பாட்டை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறவர்கள் உள்ளூரிலுள்ள யெகோவாவின் சாட்சிகளைத் தொடர்புகொள்ள வேண்டும் அல்லது காவற்கோபுரம் பத்திரிகையை பிரசுரிப்போருக்கு எழுத வேண்டும்.
ஒருவேளை ஏற்கெனவே சிலருக்கு கடவுளுடைய தராதரங்களைப் பற்றிய அடிப்படை அறிவு இருக்கலாம். அவர்கள் பைபிளின் சத்தியத்தையும் நம்பகத்தன்மையையும் குறித்து உறுதியாக நம்பவும் செய்யலாம். என்றாலும், அவர்களில் அநேகர் தங்களை கடவுளுக்கு ஒப்புக்கொடுப்பதற்கு தீர்மானம் எடுப்பதை தள்ளிப்போட்டிருக்கிறார்கள். ஏன்? அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
இதன் முக்கியத்துவத்தைக் குறித்து ஒருவேளை அவர்கள் உணராமல் இருக்கிறார்களா? “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை” என இயேசு தெளிவாக கூறினார். (மத்தேயு 7:21) பைபிள் அறிவு மட்டுமே போதுமானதல்ல; அதற்கேற்ப செயல்பட வேண்டும். இதற்கு ஆரம்பகால கிறிஸ்தவ சபை நல்ல உதாரணமாக திகழ்கிறது. முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களில் சிலரைப் பற்றி நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “தேவனுடைய ராஜ்யத்துக்கும் இயேசு கிறிஸ்துவினுடைய நாமத்துக்கும் ஏற்றவைகளைக் குறித்து, பிலிப்பு பிரசங்கித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, புருஷரும் ஸ்திரீகளும் ஞானஸ்நானம் பெற்றார்கள்.” (அப்போஸ்தலர் 2:41; 8:12) இவ்வாறு, ஒருவர் கடவுளுடைய வார்த்தையை இருதயப்பூர்வமாய் ஏற்றுக்கொண்டு, அது சொல்வதை நம்பி, கடவுளுடைய தராதரங்களுக்கு இசைவாக தனது வாழ்க்கையை அமைத்திருந்தால், ஒப்புக்கொடுத்தலுக்கு அடையாளமாக முழுக்காட்டுதல் எடுப்பதற்கு எது அவரை தடை செய்ய முடியும்? (அப்போஸ்தலர் 8:34-38) கடவுளுக்கு ஏற்கத் தகுந்தவராய் இருப்பதற்கு, இந்தப் படியை அவர் மனப்பூர்வமாகவும் ஆனந்த இருதயத்தோடும் எடுக்க வேண்டும்.—2 கொரிந்தியர் 9:7.
தங்களுடைய வாழ்க்கையை கடவுளுக்கு ஒப்புக்கொடுக்க தங்களுக்கு போதிய அறிவு இல்லை என சிலர் உணரலாம். ஆனால் வாழ்க்கையில் ஒரு புதிய பாதையை தொடங்கும் ஒவ்வொருவருக்கும் மட்டுப்பட்ட அறிவே இருக்கிறது. ஒரு வேலையில் சேர்ந்தபோது, இன்றைக்கு இருக்குமளவுக்கு தனக்கு அறிவு இருந்ததாக யார்தான் உரிமை பாராட்டுவார்? கடவுளுக்கு சேவை செய்ய தீர்மானிப்பதற்கு அடிப்படை பைபிள் போதனைகள் மற்றும் நியமங்கள் பற்றிய அறிவும், அதற்கேற்ப வாழ வேண்டுமென்ற உள்ளப்பூர்வ ஆசையுமே தேவை.
தீர்மானத்திற்கேற்ப வாழத் தவறிவிடக்கூடும் என்ற பயத்தினால் தீர்மானம் எடுக்க சிலர் தாமதிக்கிறார்களா? தவறிவிடுவோமா என்ற நியாயமான கவலை எல்லா ஒப்பந்தங்களிலும் உட்பட்டுள்ளது. திருமணம் செய்துகொண்டு ஒரு குடும்பத்தைக் கட்டிக்காப்பதற்கு தீர்மானிக்கிற ஒருவர் ஓரளவு தகுதியற்றவராக உணரலாம், ஆனால் அந்தப் பொறுப்பை ஏற்க ஒப்பந்தம் செய்வது தன்னால் இயன்றளவு செய்வதற்குரிய ஊக்கத்தை அளிக்கிறது. அதைப் போலவே, வாகனம் ஓட்டுவதற்கு சமீபத்தில் லைசென்ஸ் எடுத்திருக்கும் ஓர் இளைஞருக்கு, தனக்கு விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற பயம் ஓரளவு இருக்கலாம்; முக்கியமாக, வயதானவர்களைவிட இளைஞர்களே அதிகமாய் விபத்திற்குள்ளாகிறார்கள் என புள்ளிவிவரங்கள் காட்டுவதால் இப்படிப்பட்ட பயம் இருக்கலாம். ஆனால் இந்தப் புள்ளிவிவரங்களை தெரிந்து வைத்திருப்பது பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் மிகுந்த ஜாக்கிரதையோடு ஓட்டுவதற்கு அவை அவரை உந்துவிக்கும். ஆகவே, லைசென்ஸ் எடுக்காமலேயே இருந்துவிடுவது எந்த விதத்திலும் தீர்வு அல்ல!
ஜீவனுக்காக தீர்மானியுங்கள்!
தற்போதைய அரசியல், பொருளாதாரம், மதம் ஆகியவை சீக்கிரத்தில் இந்தப் பூமியிலிருந்து அழிந்துவிடும், அவற்றை ஆதரிப்போரும் அழிந்துவிடுவர் என பைபிள் காட்டுகிறது. ஆனால், ஜீவனுக்காக ஞானமாய் தீர்மானம் எடுத்திருப்போரும் அதற்கேற்ப செயல்படுவோரும் நிலைத்திருப்பர். புதிய உலக சமுதாயத்தின் மையக்கருவாக திகழும் இவர்கள், கடவுளுடைய ஆதி நோக்கத்தின்படி, இந்தப் பூமியை பரதீஸாக்குவதில் பங்குகொள்வர். கடவுளுடைய வழிநடத்துதலில் நடத்தப்படும் இந்த மகிழ்ச்சியான வேலையில் பங்குகொள்ள நீங்கள் விரும்புகிறீர்களா?
அப்படியானால், கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதற்கு தீர்மானியுங்கள். கடவுளைப் பிரியப்படுத்துவதற்கு அவருடைய தராதரங்களைக் கற்றுக்கொள்ள தீர்மானியுங்கள். அவற்றை பூர்த்தி செய்வதற்கு தீர்மானியுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் எடுக்கும் இந்தத் தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்ற தீர்மானியுங்கள். சுருக்கமாகச் சொன்னால், ஜீவனுக்காக தீர்மானியுங்கள்!
[பக்கம் 4-ன் படங்கள்]
முக்கியமான தீர்மானங்களுக்கு போதுமான நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்
[பக்கம் 5-ன் படம்]
ஒரு வாழ்க்கைத் தொழிலை தேர்ந்தெடுப்பதற்கு ஆலோசனையை நாடுங்கள்
[பக்கம் 7-ன் படங்கள்]
இப்போது கடவுளை சேவிக்க தீர்மானிப்பவர்கள் இந்தப் பூமியை பரதீஸாக்குவதில் பங்குகொள்வர்