விசுவாசத்தோடு இருங்கள் ஞானமான தீர்மானம் எடுங்கள்!
“கொஞ்சம்கூட சந்தேகப்படாமல் விசுவாசத்தோடு கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.”—யாக். 1:6.
1. காயீன் தவறான தீர்மானம் எடுக்க எது காரணமாக இருந்தது, அதனால் வந்த விளைவு என்ன?
பாவமுள்ள தன்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதா அல்லது அந்த உணர்ச்சிகள் தன்னுடைய செயல்களைக் கட்டுப்படுத்தும்படி விட்டுவிடுவதா? இதுதான் காயீன் எடுக்க வேண்டிய ஒரு முக்கியமான தீர்மானமாக இருந்தது! சரியான தீர்மானம் எடுத்தால், அதனுடைய பலன்களையும், தவறான தீர்மானம் எடுத்தால், அதனுடைய விளைவுகளையும் அவன் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க வேண்டியிருக்கும். காயீன் என்ன தீர்மானம் எடுத்தான்? அவன் தவறான தீர்மானம் எடுத்ததாக பைபிள் சொல்கிறது. அந்தத் தீர்மானம், அவனுடைய சகோதரன் ஆபேலுடைய உயிரைப் பறித்தது. அதோடு, படைப்பாளரோடு அவனுக்கு இருந்த நட்பையும் நாசமாக்கியது.—ஆதி. 4:3-16.
2. சரியான தீர்மானங்கள் எடுப்பது ஏன் முக்கியம்?
2 நாம் எல்லாரும் நம்முடைய வாழ்க்கையில் தீர்மானங்கள் எடுக்க வேண்டியிருக்கிறது. நாம் எடுக்கும் சில தீர்மானங்கள், முக்கியமானவையாக இருக்கலாம்; மற்றவை அந்தளவு முக்கியமானவையாக இல்லாமல் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் சரி, நாம் எடுக்கும் நிறைய தீர்மானங்கள் நம்முடைய வாழ்க்கையைப் பெரியளவில் மாற்றிவிடலாம். நாம் சரியான தீர்மானங்கள் எடுத்தால், நம் வாழ்க்கையில் பிரச்சினைகளைக் குறைக்கலாம். அதோடு, சமாதானமாகவும் வாழலாம். ஆனால், தவறான தீர்மானங்கள் எடுத்தால், நம்முடைய வாழ்க்கையில் பிரச்சினைகளும் ஏமாற்றங்களும்தான் இருக்கும்.—நீதி. 14:8.
3. (அ) ஞானமான தீர்மானங்கள் எடுக்க வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? (ஆ) என்னென்ன கேள்விகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்?
3 நாம் ஞானமான தீர்மானங்கள் எடுக்க வேண்டுமென்றால், கடவுள்மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அதாவது, கடவுள் நமக்கு உதவ ஆசைப்படுகிறார் என்றும், நல்ல தீர்மானங்கள் எடுப்பதற்குத் தேவையான ஞானத்தைக் கொடுப்பார் என்றும் நாம் நம்ப வேண்டும். அதோடு, கடவுளுடைய வார்த்தையின் மீது நமக்கு விசுவாசம் இருக்க வேண்டும், அதில் இருக்கிற ஆலோசனைகளையும் நம்ப வேண்டும். (யாக்கோபு 1:5-8-ஐ வாசியுங்கள்.) யெகோவாவிடம் நாம் நெருங்கிப் போக வேண்டும், அவருடைய வார்த்தையை அதிகமதிகமாக நேசிக்க வேண்டும். அப்போது, நமக்கு எது சிறந்தது என்பது அவருக்குத் தெரியுமென்று நாம் உறுதியாக நம்புவோம். அப்படி நம்பினால், தீர்மானங்கள் எடுப்பதற்கு முன்பு கடவுளுடைய வார்த்தை அதைப் பற்றி என்ன சொல்கிறது என்று ஆராய்ந்து பார்ப்போம். ஆனால், சரியான தீர்மானங்கள் எடுப்பதற்கான திறமையை நாம் எப்படி வளர்த்துக்கொள்ளலாம்? நாம் ஒரு தீர்மானம் எடுத்துவிட்டால் அதை எப்போதும் மாற்றவே கூடாதா?
நாம் எல்லாரும் தீர்மானம் எடுக்க வேண்டும்
4. ஆதாம் என்ன தீர்மானத்தை எடுக்க வேண்டியிருந்தது, அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்பட்டன?
4 மனித சரித்திரத்தின் ஆரம்பத்திலிருந்தே மக்கள் முக்கியமான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்தது. முதல் மனிதனான ஆதாம், தீர்மானம் எடுப்பதற்குத் தயாராக இருந்தான். ஆனால், தன்னுடைய படைப்பாளரின் பேச்சைக் கேட்பதா அல்லது தன்னுடைய மனைவியின் பேச்சைக் கேட்பதா என்று அவன் தீர்மானம் எடுக்க வேண்டியிருந்தது. அப்போது அவன் என்ன செய்தான்? தன்னுடைய மனைவியின் தூண்டுதலால் அவன் ஒரு மோசமான தீர்மானத்தை எடுத்தான். அதனால், ஏதேன் தோட்டத்தில் வாழும் வாய்ப்பை இழந்தான். கடைசியில், தன்னுடைய உயிரையும் இழந்தான். அவன் எடுத்த அந்த மோசமான தீர்மானத்தால் இன்றுவரை நாம் வேதனையில் தவித்துக்கொண்டிருக்கிறோம்!
5. தீர்மானங்கள் எடுப்பதை நாம் எப்படிக் கருத வேண்டும்?
5 ‘தீர்மானமே எடுக்காம இருந்தா வாழ்க்கை எவ்ளோ நல்லா இருக்கும்’ என்று சிலர் நினைக்கிறார்கள். நீங்களும் அப்படித்தான் நினைக்கிறீர்களா? மனிதர்களை யெகோவா எப்படிப் படைத்திருக்கிறார் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். யோசிக்கவோ தீர்மானங்கள் எடுக்கவோ முடியாத ஒரு ரோபோட்டைப் போல அவர் மனிதர்களைப் படைக்கவில்லை. யெகோவா நமக்காக பைபிளைக் கொடுத்திருக்கிறார். ஞானமான தீர்மானங்கள் எடுப்பதற்கு அது நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. நாம் தீர்மானங்கள் எடுக்க வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார்; அப்படித் தீர்மானங்கள் எடுப்பது நம்முடைய நன்மைக்காகத்தான், தீமைக்காக அல்ல! இப்போது, சில உதாரணங்களைப் பார்க்கலாம்.
6, 7. இஸ்ரவேலர்கள் என்ன தீர்மானம் எடுக்க வேண்டியிருந்தது, அந்தத் தீர்மானத்தை எடுப்பது அவர்களுக்கு ஏன் கஷ்டமாக இருந்தது? (ஆரம்பப் படம்)
6 வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தில் இருந்தபோது, யெகோவாவை வணங்குவதா அல்லது மற்ற கடவுள்களைக் கும்பிடுவதா என்று இஸ்ரவேலர்கள் தீர்மானிக்க வேண்டியிருந்தது. (யோசுவா 24:15-ஐ வாசியுங்கள்.) அது ஒரு சாதாரண தீர்மானம் போல் இருந்திருக்கலாம். ஆனால், அவர்களுடைய வாழ்வும் சாவும் அந்தத் தீர்மானத்தில்தான் அடங்கியிருந்தது. நியாயாதிபதிகளின் காலத்திலும், இஸ்ரவேலர்கள் தொடர்ந்து தவறான தீர்மானங்களை எடுத்தார்கள். யெகோவாவை வணங்குவதை நிறுத்திவிட்டு, பொய்க் கடவுள்களைக் கும்பிட ஆரம்பித்தார்கள். (நியா. 2:3, 11-23) பிறகு, தீர்க்கதரிசியான எலியாவின் காலத்திலும், யெகோவாவை வணங்குவதா அல்லது பொய்க் கடவுளான பாகாலைக் கும்பிடுவதா என்று கடவுளுடைய மக்கள் தீர்மானிக்க வேண்டியிருந்தது. (1 ரா. 18:21) ‘யெகோவாவுக்குச் சேவை செய்வது எப்போதுமே சிறந்தது என்பதால் அவர்கள் தீர்மானம் எடுப்பதொன்றும் அவ்வளவு கஷ்டம் இல்லையே’ என்று நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம். சொல்லப்போனால், உயிரில்லாத கடவுளைக் கும்பிட ஞானமான ஒருவர் விரும்ப மாட்டார். அப்படியிருந்தும், இஸ்ரவேலர்களால் ஒரு தீர்மானத்துக்கே வர முடியவில்லை. அவர்கள் “இரண்டு கருத்துகளுக்கு நடுவே நொண்டி நொண்டி” நடந்ததாக பைபிள் சொல்கிறது. அப்போது, எலியா ஒரு ஞானமான விஷயத்தைச் செய்தார். அதாவது, உண்மைக் கடவுளான யெகோவாவை வணங்கும்படி அவர்களை உற்சாகப்படுத்தினார்.
7 ஞானமான ஒரு தீர்மானத்தை எடுப்பது இஸ்ரவேலர்களுக்கு ஏன் கஷ்டமாக இருந்தது? முதல் காரணம், யெகோவாமீது இருந்த விசுவாசத்தை அவர்கள் இழந்திருந்தார்கள்; அவருடைய பேச்சையும் அவர்கள் கேட்கவில்லை. யெகோவாவை அவர்கள் நம்பவில்லை; அவரைப் பற்றியும் அவருடைய ஞானத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ள அவர்கள் நேரம் ஒதுக்கவும் இல்லை. அப்படி நேரம் ஒதுக்கியிருந்தால், தாங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களை வைத்து, அவர்களால் ஞானமான தீர்மானங்கள் எடுத்திருக்க முடியும். (சங். 25:12) இரண்டாவது காரணம், மற்ற நாடுகளிலிருந்த மக்கள் தங்களைக் கட்டுப்படுத்தும்படி அவர்கள் விட்டுவிட்டார்கள். அவர்கள் யோசிக்கும் விதத்தை அந்த மக்கள் மாற்றினார்கள், ஏன், அவர்களுக்காக அந்த மக்களே தீர்மானங்கள் எடுத்தார்கள். அதனால், பொய்க் கடவுள்களை வணங்கிய அந்தக் கூட்டத்தை அவர்கள் பின்பற்ற ஆரம்பித்தார்கள். ஊர் உலகத்தோடு ஒத்துப்போகாதபடி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று பல வருஷங்களுக்கு முன்பே யெகோவா அவர்களை எச்சரித்திருந்தார்!—யாத். 23:2.
நமக்காக மற்றவர்கள் தீர்மானங்கள் எடுக்க வேண்டுமா?
8. இஸ்ரவேலர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
8 இஸ்ரவேலர்களுடைய உதாரணத்திலிருந்து நாம் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ளலாம். ஞானமான தீர்மானங்கள் எடுக்க வேண்டுமென்றால், கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும். அவரவர் எடுக்கும் தீர்மானங்களுக்கு அவரவர்தான் பொறுப்பு என்று கலாத்தியர் 6:5 சொல்கிறது. தீர்மானங்கள் எடுக்க வேண்டிய பொறுப்பை நாம் மற்றவர்களிடம் விட்டுவிடக் கூடாது. கடவுளுடைய பார்வையில் எது சரியாக இருக்கிறது என்பதை நாம் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டும், அதன்படி செய்ய வேண்டும்.
9. நமக்காக மற்றவர்கள் தீர்மானம் எடுக்கும்படி விட்டுவிடுவது ஏன் ஆபத்தானது?
9 தவறான தீர்மானங்கள் எடுப்பதற்கு மற்றவர்கள் நம்மைக் கட்டாயப்படுத்த நாம் அனுமதித்தால், நமக்காக மற்றவர்கள் தீர்மானம் எடுக்கும்படி விட்டுவிடுகிறோம் என்று அர்த்தம். (நீதி. 1:10, 15) இது ஆபத்தில் போய் முடியலாம்! மற்றவர்கள் என்னதான் நம்மைக் கட்டாயப்படுத்தினாலும், பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியின்படி நடந்துகொள்வது நம்முடைய பொறுப்பாக இருக்கிறது. நமக்காக மற்றவர்கள் தீர்மானங்கள் எடுக்கும்படி விட்டுவிட்டால், நாம் அவர்களையே பின்பற்ற தீர்மானித்து விட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்தத் தீர்மானம் நம்மைப் பிரச்சினையில் கொண்டுபோய் விட்டுவிடும்.
10. கலாத்தியர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் என்ன எச்சரிப்பு கொடுத்தார்?
10 தங்களுக்காக மற்றவர்கள் தீர்மானங்கள் எடுக்கும்படி விட்டுவிடக் கூடாது என்று அப்போஸ்தலன் பவுல் கலாத்தியர்களை எச்சரித்தார். (கலாத்தியர் 4:17-ஐ வாசியுங்கள்.) கலாத்தியாவில் இருந்த சில சகோதரர்கள், சபையில் இருந்த மற்றவர்களுக்காக தாங்கள் தீர்மானங்கள் எடுக்க வேண்டும் என்று விரும்பினார்கள். ஏன்? சகோதர சகோதரிகள், அப்போஸ்தலர்களைப் பின்பற்றுவதற்குப் பதிலாகத் தங்களையே பின்பற்ற வேண்டும் என்று அந்தச் சுயநலவாதிகள் ஆசைப்பட்டார்கள். தீர்மானங்கள் எடுப்பதற்கு மற்றவர்களுக்கு இருந்த உரிமையை அவர்கள் மதிக்கவில்லை; அவர்கள் எல்லை மீறி நடந்தார்கள்!
11. மற்றவர்கள் தீர்மானம் எடுக்க வேண்டியிருக்கும்போது நாம் எப்படி அவர்களுக்கு உதவலாம்?
11 அப்போஸ்தலன் பவுலிடமிருந்து நாம் எல்லாரும் நல்ல பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். தீர்மானம் எடுக்கும் உரிமை தன்னுடைய சகோதரர்களுக்கு இருக்கிறது என்பதை அவர் புரிந்துவைத்திருந்தார், அந்த உரிமையை மதிக்கவும் செய்தார். (2 கொரிந்தியர் 1:24-ஐ வாசியுங்கள்.) தீர்மானம் எடுப்பது சம்பந்தமாக ஒரு சகோதரரோ சகோதரியோ தங்களிடம் ஆலோசனை கேட்கும்போது, மூப்பர்கள் பவுலின் உதாரணத்தைப் பின்பற்றுகிறார்கள். அந்த விஷயத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று அவர்களிடம் சொல்கிறார்கள். ஆனால், தீர்மானங்கள் எடுக்கும் பொறுப்பை மட்டும் அவர்களிடமே விட்டுவிடுகிறார்கள். ஏனென்றால், அவரவர் எடுக்கும் தீர்மானங்களுக்கு அவரவர்தான் பொறுப்பு. இதிலிருந்து என்ன முக்கியமான பாடத்தை நாம் கற்றுக்கொள்ளலாம்? தங்கள் சூழ்நிலைக்குப் பொருந்துகிற பைபிள் ஆலோசனைகளைப் புரிந்துகொள்ள சகோதர சகோதரிகளுக்கு நாம் உதவலாம். ஆனால், தீர்மானங்கள் எடுப்பதற்கான உரிமையும் பொறுப்பும் அவர்களுக்குத்தான் இருக்கிறது. அவர்கள் ஞானமான தீர்மானங்கள் எடுத்தால் நல்ல பலன்களை அனுபவிப்பார்கள். நம் சகோதர சகோதரிகளுக்காகத் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் நமக்கு இருப்பதாக நாம் ஒருபோதும் நினைத்துவிடக் கூடாது!
தீர்மானங்கள் எடுப்பதற்கு கற்றுக்கொள்ள அன்பான மூப்பர்கள் மற்றவர்களுக்கு உதவுகிறார்கள் (பாரா 11)
தீர்மானங்கள் எடுக்கும்போது உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காதீர்கள்
12, 13. நாம் கோபமாக இருக்கும்போதோ மனமுடைந்து போயிருக்கும்போதோ முக்கியமான தீர்மானங்கள் எடுப்பது ஏன் ஆபத்தானது?
12 ‘என் மனசுக்கு பட்டதை நான் செய்வேன்’ என்று சொல்லிக்கொண்டு இன்று நிறைய பேர் தீர்மானங்கள் எடுக்கிறார்கள். ஆனால், இப்படிச் செய்வது ஆபத்தில் போய் முடியலாம். பாவ இயல்புள்ள நம்முடைய இதயத்தின் அல்லது நம்முடைய உணர்ச்சிகளின் அடிப்படையில் நாம் தீர்மானம் எடுக்கக் கூடாதென்று பைபிள் நம்மை எச்சரிக்கிறது. (நீதி. 28:26) நம்முடைய இதயத்தை நாம் நம்ப முடியாது. ஏனென்றால், “எதை நம்பினாலும் நம்பலாம், ஆனால் மனுஷனுடைய இதயத்தை மட்டும் நம்பவே முடியாது; அது எதையும் செய்யத் துணியும்” என்று பைபிள் சொல்கிறது. (எரே. 17:9) பாவ இயல்புள்ள இதயத்தை நம்பியதால் மோசமான விளைவுகளை சந்தித்த நிறைய பேருடைய உதாரணங்கள் பைபிளில் இருக்கின்றன. (1 ரா. 11:9; எரே. 3:17; 13:10) ஒருவேளை, தீர்மானங்கள் எடுக்கும்போது நாம் நம்முடைய இதயத்தை நம்பினால் என்ன ஆகும்?
13 முழு இதயத்தோடு தன்மீது அன்பு காட்ட வேண்டும் என்றும், நம்மேல் அன்பு காட்டுவதுபோல் மற்றவர்மீதும் அன்பு காட்ட வேண்டும் என்றும் யெகோவா நமக்குக் கட்டளை கொடுத்திருக்கிறார். (மத். 22:37-39) அதனால், ஒரு கிறிஸ்தவருக்கு இதயம் ரொம்ப முக்கியம். ஆனால், நம்முடைய இதயமோ உணர்ச்சிகளோ நம்முடைய யோசனைகளையும் செயல்களையும் கட்டுப்படுத்தும்படி விட்டுவிடுவது ஆபத்தானது. இதைத்தான் முந்தின பாராவில் குறிப்பிடப்பட்டிருக்கும் வசனங்கள் காட்டுகின்றன. உதாரணத்துக்கு, கோபமாக இருக்கும்போது நம்மால் சரியான தீர்மானம் எடுக்க முடியாது. (நீதி. 14:17; 29:22) அதே போல, மனமுடைந்து போயிருக்கும்போதும் நம்மால் ஞானமான தீர்மானம் எடுக்க முடியாது. (எண். 32:6-12; நீதி. 24:10) கடவுளுடைய சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறபடி நம்முடைய யோசனைகள் இருக்க வேண்டும். (ரோ. 7:25) முக்கியமான தீர்மானங்கள் எடுக்கும்போது, நம்முடைய உணர்ச்சிகள் நம்மை கட்டுப்படுத்தும்படி விட்டுவிட்டால் நாம் ஏமாந்துவிடுவோம்.
நாம் எடுத்த தீர்மானங்களை எப்போது மாற்றிக்கொள்ள வேண்டும்?
14. நாம் ஏற்கெனவே எடுத்த தீர்மானங்களை மாற்றிக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை என்று ஏன் சொல்லலாம்?
14 நாம் ஞானமான தீர்மானங்கள் எடுக்க வேண்டும் என்பது உண்மைதான்! ஆனால், ஏற்கெனவே எடுத்த தீர்மானத்தைப் பற்றி மறுபடியும் யோசிக்க வேண்டும் என்பதும், தேவைப்பட்டால் அதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதும் ஞானமுள்ள ஒருவருக்குத் தெரியும். இந்த விஷயத்தில் யெகோவா நமக்கு அருமையான முன்மாதிரியாக இருக்கிறார். யோனாவின் நாட்களில் நினிவே மக்களுடைய விஷயத்தில் அவர் எப்படி நடந்துகொண்டார்? “ஜனங்கள் தங்களுடைய மோசமான வழிகளைவிட்டுத் திருந்தினார்கள்; அதை உண்மைக் கடவுள் பார்த்தார். அதனால், தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு அவர்களை அழிக்காமல் விட்டுவிட்டார்” என்று பைபிள் சொல்கிறது. (யோனா 3:10) நினிவே மக்கள் தங்களை மாற்றிக்கொண்டதையும், கெட்டது செய்வதை விட்டுவிட்டதையும் யெகோவா பார்த்ததால் தன்னுடைய தீர்மானத்தை மாற்றிக்கொண்டார். யெகோவா நியாயமுள்ளவர், மனத்தாழ்மையுள்ளவர், கரிசனையுள்ளவர் என்பதை இது காட்டுகிறது. இன்று நிறைய பேர், யோசிக்காமல் கோபத்தில் ஏதாவது செய்துவிடுகிறார்கள். ஆனால், யெகோவா அப்படிச் செய்வதில்லை!
15. நம்முடைய தீர்மானத்தை நாம் ஏன் மாற்ற வேண்டியிருக்கலாம்?
15 நம்முடைய சூழ்நிலைகள் மாறும்போது, நாம் ஏற்கெனவே எடுத்த தீர்மானத்தைப் பற்றி யோசித்துப் பார்ப்பது நல்லது. யெகோவாவும் தன்னுடைய தீர்மானங்களைச் சில சமயங்களில் மாற்றிக்கொண்டார். (1 ரா. 21:20, 21, 27-29; 2 ரா. 20:1-5) நமக்குப் புதிய தகவல்கள் கிடைக்கும்போதும், நாம் ஏற்கெனவே எடுத்த தீர்மானத்தைப் பற்றி யோசித்துப் பார்க்கலாம். தாவீது ராஜாவின் உதாரணத்தைக் கவனியுங்கள். சவுலின் பேரன் மேவிபோசேத்தைப் பற்றி தனக்குக் கிடைத்த தவறான தகவலை வைத்து அவர் ஒரு தீர்மானம் எடுத்தார். ஆனால், சரியான தகவல் கிடைத்தபோது தன்னுடைய தீர்மானத்தை மாற்றிக்கொண்டார். (2 சா. 16:3, 4; 19:24-29) சில சமயங்களில் நாமும் இப்படிச் செய்வது ஞானமானதாக இருக்கும்.
16. (அ) தீர்மானங்கள் எடுப்பதற்கு என்னென்ன ஆலோசனைகள் நமக்கு உதவும்? (ஆ) நாம் ஏற்கெனவே எடுத்த தீர்மானங்களைப் பற்றி ஏன் யோசித்துப் பார்க்க வேண்டும், அதை எப்படிச் செய்யலாம்?
16 முக்கியமான தீர்மானங்கள் எடுக்கும்போது அவசரப்படக் கூடாதென்று பைபிள் சொல்கிறது. (நீதி. 21:5) எல்லா விஷயங்களையும் கவனமாக யோசித்துப் பார்ப்பதற்கு நேரம் ஒதுக்க வேண்டும்; அப்போதுதான், நம்மால் ஞானமான தீர்மானம் எடுக்க முடியும். (1 தெ. 5:21) தீர்மானம் எடுப்பதற்கு முன்பு பைபிளையும் நம்முடைய பிரசுரங்களையும் ஆராய்ச்சி செய்து பார்ப்பதற்கு ஒரு குடும்பத் தலைவர் நேரம் ஒதுக்க வேண்டும். அதோடு, குடும்பத்தில் இருக்கிறவர்களுடைய கருத்துகளையும் கேட்க வேண்டும். ஆபிரகாம் தன்னுடைய மனைவியின் பேச்சைக் கேட்க வேண்டுமென்று யெகோவா ஆபிரகாமிடம் சொன்னார். (ஆதி. 21:9-12) மூப்பர்களும் ஆராய்ச்சி செய்வதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். தங்களுக்குக் கிடைத்த புதிய தகவலின் அடிப்படையில், ஏற்கெனவே எடுத்த தீர்மானத்தை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தால், மூப்பர்கள் அதைச் செய்ய வேண்டும். நியாயமாக, மனத்தாழ்மையாக இருக்கும் மூப்பர்கள், மற்றவர்களின் மரியாதையை இழந்துவிடுவோமோ என்று பயப்படுவதில்லை. தேவைப்படும்போது, தங்களுடைய யோசனைகளையும் தீர்மானங்களையும் மாற்றிக்கொள்ள அவர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்களுடைய முன்மாதிரியை நாம் எல்லாரும் பின்பற்றுவது நல்லது. சபை சமாதானமாகவும் தொடர்ந்து ஒற்றுமையாகவும் இருக்க இது உதவும்.—அப். 6:1-4.
நீங்கள் எடுத்த தீர்மானத்தின்படி செய்யுங்கள்
17. நாம் எடுக்கும் தீர்மானங்களில் வெற்றி பெற எது நமக்கு உதவும்?
17 சில தீர்மானங்கள் மற்ற தீர்மானங்களைவிட மிக முக்கியமானவையாக இருக்கலாம். உதாரணத்துக்கு, கல்யாணம் செய்ய வேண்டுமா வேண்டாமா அல்லது யாரை கல்யாணம் செய்ய வேண்டும் என்பதெல்லாம் மிக முக்கியமான தீர்மானங்கள். முழுநேர ஊழியத்தை எப்போது ஆரம்பிக்க வேண்டும் என்பதும் மிக முக்கியமான தீர்மானம்தான். இதுபோன்ற தீர்மானங்கள் எடுப்பதற்கு முன்பு, நம்முடைய சூழ்நிலையைப் பற்றி நன்றாக யோசித்துப் பார்க்க வேண்டும். யெகோவாவின் உதவிக்காக ஜெபம் செய்ய வேண்டும். இதையெல்லாம் செய்வதற்கு நிறைய நேரம் தேவைப்படலாம். ஆனால், ஞானமான தீர்மானம் எடுக்க வேண்டுமென்றால், யெகோவாவை நம்பியிருக்க வேண்டும், அவருடைய ஆலோசனைகளைக் கேட்க வேண்டும், அவருடைய வழிநடத்துதலின்படி செய்ய வேண்டும். (நீதி. 1:5) தன்னுடைய வார்த்தையாகிய பைபிளில் யெகோவா நமக்கு மிகச் சிறந்த அறிவுரைகளைக் கொடுத்திருக்கிறார். அதனால், பைபிளை நன்றாக ஆராய்ச்சி செய்ய வேண்டும். யெகோவாவின் வழிநடத்துதலுக்காக ஜெபம் செய்ய வேண்டும். அப்படிச் செய்யும்போது, யெகோவாவின் விருப்பத்திற்கு ஏற்றபடி தீர்மானங்கள் எடுப்பதற்குத் தேவையான குணங்களை வளர்த்துக்கொள்ள அவர் நமக்கு உதவி செய்வார். முக்கியமான தீர்மானங்கள் எடுப்பதற்கு முன்பு இப்படி யோசித்துப் பாருங்கள்: ‘எனக்கு யெகோவாமீது அன்பு இருக்கிறது என்பதை என்னுடைய தீர்மானம் காட்டுகிறதா? நான் எடுக்கும் தீர்மானம் என்னுடைய குடும்பத்துக்கு சந்தோஷத்தையும் சமாதானத்தையும் தருமா? நான் பொறுமையாகவும் கனிவாகவும் இருக்கிறேன் என்பதை என்னுடைய தீர்மானம் காட்டுகிறதா?’
18. நாமாகவே தீர்மானங்கள் எடுக்க வேண்டுமென்று யெகோவா ஏன் எதிர்பார்க்கிறார்?
18 தன்மீது அன்பு காட்ட வேண்டும் என்றும் தனக்குச் சேவை செய்ய வேண்டும் என்றும் யெகோவா நம்மைக் கட்டாயப்படுத்துவது இல்லை. அந்தத் தீர்மானத்தை எடுப்பதற்கான சுதந்திரத்தை அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார். நாம் அவரை வணங்குவதா வேண்டாமா என்ற தீர்மானத்தை எடுப்பதற்கான பொறுப்பும் உரிமையும் நமக்கு இருக்கிறது; யெகோவா இதை மதிக்கிறார். (யோசு. 24:15; பிர. 5:4) அதோடு, தன்னுடைய வார்த்தையின் அடிப்படையில் நாம் எடுத்த தீர்மானத்தின்படி செய்ய வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார். யெகோவாவுடைய வழிநடத்துதல்களின் மீது விசுவாசம் வைக்கும்போதும், அவர் கொடுத்திருக்கிற நியமங்களை வாழ்க்கையில் பின்பற்றும்போதும் நம்மால் ஞானமான தீர்மானங்கள் எடுக்க முடியும். அதோடு, நம்முடைய வழிகள் எல்லாவற்றிலும் நாம் உறுதியாக இருக்கிறோம் என்பதையும் காட்ட முடியும்.—யாக். 1:5-8; 4:8.