பகுதி 3
அறிவியல்—சத்தியத்திற்காகத் தொடரும் மனிதவர்க்கத்தின் ஆராய்ச்சி
மதமும் அறிவியலும் ஒரு கெட்ட கலவை
ஆயிரக்கணக்கான வருடங்களாக அறிவியல் உண்மைகளைத் தேடிவருவதானது, தொடர்ந்து வந்த ஆராய்ச்சிக்கான ஓர் உறுதியான ஆதாரத்தை நிலைநாட்டியதாகத் தோன்றியது. நிச்சயமாகவே மென்மேலும் ஏற்படக்கூடிய முன்னேற்றத்தை எதுவும் தடை செய்யமுடியாது. இருப்பினும், தி புக் ஆஃப் பாப்புலர் சயன்ஸ் சொல்லுகிறது: “கி.பி. மூன்றாம், நான்காம், மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளினூடே அறிவியல் உண்மையிலேயே அதிக முன்னேற்றத்தைக் காண்பிக்கவில்லை.”
இரண்டு நிகழ்ச்சிகள் இந்த நிலைமைக்குக் குறிப்பிடத்தக்கவகையில் பங்களித்தன. முதல் நூற்றாண்டின்போது, இயேசு கிறிஸ்து வந்ததனால் ஒரு புதிய மத யுகம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் பல பத்தாண்டுகளுக்கு முன்பே, பொ.ச.மு. 31-ல், ரோமப் பேரரசு ஸ்தாபிக்கப்பட்டதோடு ஒரு புதிய அரசியல் யுகமும் பிறப்பிக்கப்பட்டது.
அவர்களுக்கு முன்பு வாழ்ந்திருந்த கிரேக்க தத்துவ ஞானிகளைப் போலல்லாமல், ரோமர்கள் “உண்மையின் சாரத்தைத் தேடுவதைவிட, அனுதின வாழ்க்கையின் பிரச்னைகளைத் தீர்ப்பதில் அதிக ஆர்வமுடையவர்களாக இருந்தனர்,” என்பதாக மேற்குறிப்பிடப்பட்ட புத்தகம் கூறுகிறது. அப்படியானால், நியாயமாகவே, “தூய தனிநிலை அறிவியலுக்கு அவர்கள் அளித்த பங்கு மிகச் சிறிதேயாகும்.”
இருந்தபோதிலும், அந்தக் காலம் வரை சம்பாதித்து வைக்கப்பட்டிருந்த விஞ்ஞான அறிவைக் கடத்துவதில், ரோமர்கள் உறுதுணையாயிருந்தனர். உதாரணமாக, ப்ளைனி மூத்தவர் முதல் நூற்றாண்டின்போது நேச்சுரல் ஹிஸ்டரி என்றழைக்கப்பட்ட ஓர் அறிவியல் தொகுப்பை உருவாக்கினார். குற்றமற்றதாக இல்லாதிருந்தபோதிலும், மற்றபடி எதிர்கால சந்ததிகள் இழந்துவிட்டிருக்க வாய்ப்புடையதாய் இருந்த பல வகையான அறிவியல் விவரங்களை அது பாதுகாத்துவைத்தது.
மதத்தைப் பொருத்தளவில், அதிவிரைவில் வளர்ந்துகொண்டிருந்த கிறிஸ்தவ சபைக்கு அக்கால அறிவியல் ஆராய்ச்சியில் எந்த ஈடுபாடும் இல்லாதிருந்தது. கிறிஸ்தவர்கள் அறிவியல் ஆராய்ச்சிக்கு எதிராக இருந்தனர் என்பதல்ல, ஆனால் கிறிஸ்துவே வகுத்து வைத்ததுபோல, கிறிஸ்தவ முன்னுரிமை தெளிவாகவே மத சத்தியங்களைப் புரிந்துகொள்வதற்கும் அவற்றைப் பரப்புவதற்குமாகவே இருந்தது.—மத்தேயு 6:33; 28:19, 20.
முதல் நூற்றாண்டு முடிவதற்குள், விசுவாசதுரோக கிறிஸ்தவர்கள் தாங்கள் பரப்பும்படியாக தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மத சத்தியத்தை ஏற்கெனவே கலப்படம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். முன்னுரைக்கப்பட்டிருந்ததுபோலவே, இது பின்னர் ஒரு விசுவாசதுரோக கிறிஸ்தவத்தை ஸ்தாபிக்க அவர்களை வழிநடத்தியது. (அப்போஸ்தலர் 20:30; 2 தெசலோனிக்கேயர் 2:3; 1 தீமோத்தேயு 4:1) மத சத்தியத்தை அவர்கள் உதறித்தள்ளியதோடுகூட அறிவியல் சத்தியத்தின்பேரில் அக்கறையற்ற ஒரு மனப்பான்மையும்—சில சமயங்களில் எதிர்க்கும் மனநிலையுங்கூட—சேர்ந்துவந்தது என்பதாக அதைத் தொடர்ந்து சம்பவித்த நிகழ்ச்சிகள் காண்பித்தன.
“கிறிஸ்தவ” ஐரோப்பா தன் முன்னிலையை இழக்கிறது
இடைக்காலத்தின்போது (5-ம் நூற்றாண்டிலிருந்து 15-ம் நூற்றாண்டுவரை) “ஐரோப்பாவில் அறிஞர்கள் இயற்கையின்பேரிலான ஆராய்ச்சியைவிட இறையியல் அல்லது மதத்தைப்பற்றிய ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் உடையவர்களாக இருந்தனர்,” என தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா விவரிக்கிறது. எனவே “இயற்கையைப்பற்றிய கண்டுபிடிப்பைவிட இரட்சிப்பின்பேரில் அவர்கள் வைக்கும் அழுத்தம், அறிவியலுக்கு ஓர் ஊக்குவிப்பாக இருந்ததைவிட ஒரு தடங்கலாகவே இருந்திருக்கிறது,” என்பதாக கால்லியர்ஸ் என்ஸைக்ளோப்பீடியா சுட்டிக்காட்டுகிறது.
கிறிஸ்துவின் போதனைகள் ஒரு தடங்கலாக இருக்கவேண்டும் என்று கருதி கொடுக்கப்பட்டவையல்ல. இருப்பினும், கிறிஸ்தவ மண்டலத்தின், அழியாததாகக் கருதும் ஆத்துமாவின் இரட்சிப்பைப்பற்றிய அளவுக்குமீறிய அழுத்தத்தையும் உட்படுத்தும், பொய்மதக் கருத்துக்களாகிய அரும்புதிர் இம்மாற்றத்தை ஊக்குவித்தது. பெரும்பாலான பயிலுதல் சர்ச்சுகளின் கட்டுப்பாட்டின்கீழாகும், மேலும் மடங்களில் முக்கியமாக வளர்க்கப்பட்டது. மதத்தைப்பற்றிய இந்த மனநிலை அறிவியல் உண்மைகளுக்கான ஆராய்ச்சியை மந்தப்படுத்திவிட்டது.
பொது சகாப்தத்தின் ஆரம்பத்திலிருந்தே அறிவியல் காரியங்கள் இறையியலுக்கடுத்த ஸ்தானத்தையே வகித்தன. குறிப்பிடத்தக்க வகையில் உண்மையிலேயே ஏற்பட்ட ஒரே ஒரு முன்னேற்றம் மருத்துவத் துறையிலாகும். உதாரணமாக, “ரோமர்களின் ஹிப்பாக்ரட்டிஸ்” என்றழைக்கப்பட்ட பொ.ச. முதல் நூற்றாண்டின் ரோம மருத்துவ எழுத்தாளர், ஏவுலுஸ் கெல்சுஸ், தலைசிறந்தமருத்துவ நூலாக இப்போது கருதப்படும் ஒன்றை எழுதினார். நீரோவின் ரோம ராணுவத்தில் ஒரு மருத்துவராக இருந்த கிரேக்க மருந்தியல் வல்லுநர், பெடேனியுஸ் டயஸ்கோரடிஸ், நூற்றாண்டுகளாக பரவலாகப் பயன்படுத்தப்பட்ட தனிச்சிறப்புள்ள மருந்தியல் பாடநூல் ஒன்றை எழுதிமுடித்தார். கேலன் என்ற இரண்டாம் நூற்றாண்டு கிரேக்கர் ஒருவர் ஆய்வு உடலியங்கியலை (experimental physiology) ஏற்படுத்தியதன் மூலம் தம்முடைய காலத்திலிருந்து இடைக்காலத்தினூடே மருத்துவ கொள்கையிலும் செயல்முறையிலும் மாறுதல்களை ஏற்படுத்தினார்.
அறிவியலில் ஏற்பட்ட தேக்கம் 15-ம் நூற்றாண்டுக்குப் பிறகுங்கூட தொடர்ந்திருந்தது. இந்தக் காலப்பகுதியில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்புகளைச் செய்தனர் என்பது உண்மையே. ஆனால் முக்கியமாக அவை முதல்முறை கண்டுபிடிப்புகளாய் (original) இருந்ததில்லை. “[சீனர்கள்தான்] உலகிலேயே முதல் அறிவியல் ஆசான்களாக இருந்திருக்கின்றனர். எவ்வாறு திசைக்காட்டியை உபயோகிப்பது, காகிதம் மற்றும் வெடிமருந்து உற்பத்தி செய்வது, அசையும் அச்சுக்களை உபயோகித்து அச்சடிப்பது என்றெல்லாம் ஐரோப்பியர்களைவிட வெகுகாலத்திற்கு முன்பே அறிந்திருந்தனர்,” என்று டைம் பத்திரிகை குறிப்பிடுகிறது.
இவ்வாறு, “கிறிஸ்தவ” ஐரோப்பியரின் அறிவியல் சிந்தனையில் நிலவியிருந்த பொதுவான வெற்றிடத்தின் காரணமாக, கிறிஸ்தவர்களல்லாத பண்பாட்டினர் முன்னிலை வகித்தனர்.
அறிவியல் முன்னேற்றம்
ஒன்பதாம் நூற்றாண்டின்போது, அராபிய விஞ்ஞானிகள் அறிவியல் விஷயங்களில் விரைவில் முன்னிலையைப் பெற்றுக்கொண்டிருந்தனர். குறிப்பாக 10-ம் மற்றும் 11-ம் நூற்றாண்டுகளின்போது—கிறிஸ்தவ மண்டலம் காலத்தை வீணடித்தபோது—அவர்கள் சாதனையின் ஒரு பொற்காலத்தை அனுபவித்துமகிழ்ந்தனர். மருத்துவம், வேதியியல், தாவரவியல், இயற்பியல், வானவியல், எல்லாவற்றையும்விட, கணிதம் போன்ற துறைகளிலெல்லாம் மதிக்கத்தக்க பங்குகளை அளித்தனர். (பக்கம் 18-ல் உள்ள பெட்டியைப் பாருங்கள்.) “நவீன கோணவியல் (trigonometry), குறிக் கணக்கியல் (algebra), வடிவியல் (geometry), போன்றவற்றின் கணிசமான பகுதி அராபியரின் படைப்புகளேயாகும்,” என்று கொலம்பியா பல்கலைக்கழகத்தின் அராபிய துறையின் துணைப் பேராசிரியர் மாயேன் Z. மாடின கூறுகிறார்.
இந்த விஞ்ஞான அறிவின் பெரும்பகுதி முதல்முறை கண்டுபிடிப்பாகும். ஆனால் அதில் சிறுபகுதி கிரேக்க தத்துவத்தின் பரந்த ஆதாரத்தின்மீது இருக்கிறது. அது ஆச்சரியகரமாக, மத ஈடுபாட்டின் காரணமாக பெறப்பட்டதாகும்.
ஒப்பிடுகையில் பொது சகாப்தத்தின் தொடக்கத்தில், கிறிஸ்தவ மண்டலம் பெர்சியாவிலும் அதன் பிறகு அரேபியாவிலும் இந்தியாவிலும் பரவியது. ஐந்தாம் நூற்றாண்டின்போது, கான்ஸ்டான்டிநோப்பிளின் முற்பிதாவாகிய நெஸ்டோரியஸ், ஒரு முரண்பாட்டில் சிக்கிக்கொண்டார். இது கிழக்கத்திய சர்ச்சுக்குள் ஒரு பிளவுக்கு வழிநடத்திற்று. இது நெஸ்டோரியர்கள் என்ற ஒரு தொகுதி உருவாவதற்கு வழிநடத்திற்று.
ஏழாம் நூற்றாண்டில், இஸ்லாம் என்ற புதிய மதம் உலகக் காட்சியில் திடீரென தோன்றி, அதன் பரவுதலுக்கான திட்ட செயல்நடவடிக்கையைத் தொடங்கியது. அப்போது நெஸ்டோரியர்கள் தங்களை வென்ற அராபியர்களுக்குத் தங்களுடைய அறிவை உடனடியாகக் கடத்தினர். தி என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ரிலிஜன் சொல்லுகிறபடி, “கிரேக்க பாடங்களைச் சிரியா மற்றும் அரபு மொழிகளில் மொழிபெயர்ப்பதன் மூலம், கிரேக்க அறிவியலையும் தத்துவத்தையும் வளர்ப்பதில் நெஸ்டோரியர்கள் முதலாவதாகத் திகழ்ந்தனர். முதன்முதல் கிரேக்க மருந்துகளை பாக்தாதிற்குள் அறிமுகப்படுத்தியவர்களும்” இவர்களே. அராபிய விஞ்ஞானிகள் தாங்கள் நெஸ்டோரியர்களிடமிருந்து கற்றுக்கொண்ட காரியங்களை மென்மேலும் முன்னேற்றுவித்தனர். அராபியப் பேரரசில் அறிவியலின் மொழியாக, அரபு மொழி சிரிய மொழியை மாற்றீடு செய்தது. அது அறிவியலை எழுதுவதற்கு மிகவும் பொருத்தமான ஒரு மொழியாக நிரூபித்தது.
ஆனால் அராபியர்கள் அறிவைப் பெற்றுக் கொள்வது மட்டுமல்லாமல் பிறருக்கும் கொடுத்தனர். ஆப்பிரிக்க இஸ்லாமிய கலப்பினத்தவர் (Moors)—700 வருடங்கள் தங்குவதற்காக—ஸ்பெய்ன் வழியாக ஐரோப்பாவிற்குள் குடியேறியபோது, தங்களுக்குக் கற்பிக்கப்பட்ட முஸ்லிம் பண்பாட்டையும் தங்களோடு கொண்டுச்சென்றனர். கிறிஸ்தவ சிலுவைப்போர்கள் என்று அழைக்கப்படும் எட்டுப் போர்களினூடே, 1096-க்கும் 1272-க்கும் இடையில், மேற்கத்திய சிலுவைப்போர் வீரர்கள் தங்களுக்குத் தொடர்பு ஏற்பட்ட முன்னேற்றமடைந்த இஸ்லாமிய நாகரிகத்தால் கவரப்பட்டனர். அவர்கள் திரும்பிப் போகும்போது, ஓர் ஆசிரியர் விவரித்தபடி, “பல புதிய கருத்துக்களோடு” போனார்கள்.
எளியமுறை அரபுக் கணிதம்
ஐரோப்பாவிற்கு அராபியர்கள் அளித்த குறிப்பிடத்தக்க ஒரு பங்கானது, எழுத்துக்களை உபயோகிக்கும் ரோம பயன்பாட்டை மாற்றீடு செய்ய அரபு எண்களை அறிமுகம் செய்ததாகும். உண்மையில், “அரபு எண்கள்” என்பது தவறாக வழங்கும் பெயராகும். மிகவும் திருத்தமான பதம் ஒருவேளை “ஹிந்து-அரபு எண்கள்” என்பதாக இருக்கலாம். இந்த முறையைப்பற்றி அல்-க்வாரிஸ்மி என்ற ஒன்பதாம் நூற்றாண்டின் அராபிய கணித மற்றும் வானியல் வல்லுநர் எழுதியது உண்மையே. ஆனால் ஆயிரம் வருட காலங்களுக்கு முன்பே, பொ.ச.மு. மூன்றாம் நூற்றாண்டில் அதைக் கண்டுபிடித்த இந்திய கணித மேதைகளிடத்திலிருந்து, அதை அவர் பெற்றார்.
புகழ்பெற்ற கணித மேதை, லியனார்டோ ஃபிபோநாட்சி (பிஸாவின் லியனார்டோ என்றும் கூட அறியப்பட்ட இவர்) லிபர் ஆபாகி (பரற்கட்டையின் நூல்) நூலில் 1202-ல் அறிமுகப்படுத்துமுன் அந்த முறை ஐரோப்பாவில் அறியப்படாதிருந்தது. அந்த முறையின் நன்மைகளைக் காண்பிக்கும்வண்ணம் அவர் விவரித்தார்: “9 8 7 6 5 4 3 2 1 என்பவை அந்த ஒன்பது இந்திய இலக்கங்களாகும். இந்த ஒன்பது இலக்கங்களையும் 0 . . . என்ற குறியையும் உபயோகித்து எந்த எண் வேண்டுமானாலும் எழுதப்படலாம்.” தொடக்கத்தில் ஐரோப்பியர்கள் மந்தமாகவே பிரதிபலித்தனர். ஆனால் இடைக்காலத்தின் இறுதியில் இந்தப் புதிய எண்ணிக்கை முறையை ஏற்றனர். அதன் எளிமைத்தன்மை அறிவியல் முன்னேற்றத்தை ஊக்குவித்தது.
முன்பு உபயோகப்படுத்தப்பட்ட ரோம எண்களைவிட ஹிந்து-அரபு எண்கள் சுலபமானதுதானா என சந்தேகிப்பீர்களேயானால், LXXIX-ஐ MCMXCIII-லிருந்து கழிக்க முயற்சி செய்யுங்களேன். திணறிவிட்டீர்களா? ஒருவேளை 79-ஐ 1993-லிருந்து கழிப்பது ஓரளவு எளிதாக இருக்கலாம்.
ஐரோப்பாவில் அணைகிற தீயைக் கிளறிவிடுதல்
பன்னிரண்டாம் நூற்றாண்டில் தொடங்கி, முஸ்லிம் உலகில் பிரகாசமாக சுடர்விட்டெரிந்த கற்றலின் தீ மங்க ஆரம்பித்தது. இருப்பினும், அறிஞர்களின் தொகுதிகள் ஐரோப்பாவில் நவீன பல்கலைக்கழகங்களின் முன்னோடிகளை அமைக்கத் தொடங்கியபோது இந்தத் தீ மீண்டும் கிளறிவிடப்பட்டது. பன்னிரண்டாம் நூற்றாண்டின் இடையில், பாரிஸ் மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் 13-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொடர்ந்தது. அதன் பிறகு 14-ம் நூற்றாண்டில் பிரேகு மற்றும் ஹீடல்பர்க் பல்கலைக்கழகங்கள் இரண்டும் நிறுவப்பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டின்போது, பல்கலைக்கழகங்கள் அறிவியல் ஆராய்ச்சியின் முக்கிய மையங்களாகத் திகழ்ந்தன.
தொடக்கத்தில் இந்தப் பல்கலைக்கழகங்கள் மதத்தால் பெரிதும் ஆதிக்கம் செலுத்தப்பட்டன. பெரும்பாலான ஆராய்ச்சிகள் இறையியலைச் சுற்றியோ நோக்கியோ இருந்தன. ஆனால் அதே சமயத்தில், அந்தப் பல்கலைக்கழகங்கள் கிரேக்க தத்துவத்தை, குறிப்பாக அரிஸ்டாட்டிலால் எழுதப்பட்டவற்றை, ஏற்றுக்கொண்டன. தி என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ரிலிஜன் சொல்லுகிறபடி “இடைக்காலம் முழுவதும் . . . இப்பல்கலைக்கழக முறை . . . பொருளை விளக்குவதிலும் அதன் பிரச்னைகளைத் தீர்த்துவைப்பதிலும், சொற்பொருள் விளக்கம் தந்து, பிரித்து, நியாயங்காட்டுதல் என்ற அரிஸ்டாட்டிலின் நியதியின்படி அமைக்கப்பட்டிருந்தது.”
அரிஸ்டாட்டிலின் கல்வியைக் கிறிஸ்தவ இறையியலோடு இணைக்க உத்தேசித்த ஒரு 13-ம் நூற்றாண்டு அறிஞர் தாமஸ் அக்வைனஸ் ஆவார். இவரே பிறகு “கிறிஸ்தவ அரிஸ்டாட்டில்” என்றழைக்கப்பட்டார். ஆனால் சில விஷயங்களில் அவர் அரிஸ்டாட்டிலோடு கருத்து வேறுபாட்டைக் கொண்டிருந்தார். உதாரணமாக, உலகம் எப்போதும் இருந்து வந்திருக்கிறது என்ற கொள்கையை அக்வைனஸ் தள்ளிவிட்டு, அது படைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லும் வேத எழுத்துக்களை ஏற்றிருந்தார். “ஆதாரத்தின் வெளிச்சத்தில் புரிந்துகொள்ளக்கூடிய ஒழுங்குப்படுத்தப்பட்ட ஒன்றாகும் நம்முடைய அண்டம் என்ற நம்பிக்கையை உறுதியாக” பற்றிக்கொண்டு, “நவீன அறிவியலின் வளர்ச்சிக்கு விலைமதிப்புள்ள பங்கை அளித்தார்” அவர் என்று தி புக் ஆஃப் பாப்புலர் சயன்ஸ் கூறுகிறது.
எனினும், முக்கியமாக, அரிஸ்டாட்டில் தாலமி, கேலன் போன்றோரின் போதனைகள் வேதவாக்காக, சர்ச்சுகளாலும்கூட, ஏற்றுக்கொள்ளப்பட்டன. மேற்குறிப்பிடப்பட்ட நூல் இவ்வாறு விவரிக்கிறது: “இடைக்காலத்தில், அறிவியல் ஆய்வுகளிலும், நேரடி காட்சிப் பதிவிலும் ஆர்வம் குறைந்திருந்த சமயத்தில், அரிஸ்டாட்டில் சொன்னதுதான் சட்டமாயிருந்தது. இடைக்கால பல்கலைக்கழக அறிஞர்கள் ‘அறிவியல்’ கவனிப்புப் பதிவுகள் பலவற்றின் உண்மையை நிரூபிக்க இப்செ டிக்ஷிட் (‘அவரே சொல்லிவிட்டார்’) என்ற வாதத்தையே உபயோகித்துவந்தனர். இத்தகைய சூழ்நிலைகளின் கீழ் அரிஸ்டாட்டிலின் தவறுகள், குறிப்பாக இயற்பியலிலும் வானவியலிலும் உள்ள தவறுகள், அறிவியல் முன்னேற்றத்தைப் பல நூற்றாண்டுகளாக தாமதித்தன.”
பழைய கருத்துக்களுக்கான இந்தக் கண்மூடித்தன பின்பற்றுதலைச் சவால் விட்டவர் 13-ம் நூற்றாண்டின் ஆக்ஸ்ஃபோர்ட் அங்கத்தினர் ரோகர் பேகன் என்பவரே. அநேகமாக “இடைக்கால அறிவியலின் மிகச் சிறந்த அறிஞர்,” என்றழைக்கப்படும் பேகன் ஒருவர் மட்டும்தான், அறிவியல் உண்மைகளைக் கற்பதற்கான ஒரு வழி சோதனைமுறை என்று பரிந்துரை செய்துவந்தார். அவர், 1269-லேயே, தெளிவாகவே இந்த உண்மைகளை மற்றவர்கள் உணருவதற்கு நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே, தானியங்கி ஊர்திகள், ஆகாய விமானங்கள், இயந்திர கப்பல்கள் போன்றவற்றின் கண்டுபிடிப்பைப்பற்றி முன்னுரைத்தார்.
எனினும், முன்னறிவுடனும் புத்திக்கூர்மையுடனும் இருந்தபோதிலும், உண்மைகளைப்பற்றிய தன்னுடைய அறிவில் பேகன் குறைவுபட்டவராய் இருந்தார். சோதிடம், மாயவித்தைகள், இரசவாதம் போன்றவற்றில் உறுதியாக நம்பினார் அவர். இது அறிவியல் உண்மையிலேயே சத்தியத்திற்காக தொடரும், எப்பொழுதுமே மாற்றத்துக்குட்பட்ட, ஆராய்ச்சி என்பதை நிரூபிக்கிறது.
அறிவியல் ஆய்வு 14-ம் நூற்றாண்டில் செயலற்றுக் கிடப்பதாகத் தோன்றியிருந்தாலும், 15-ம் நூற்றாண்டு அதன் முடிவை நெருங்கியபோது, அறிவியல் உண்மைகளுக்கான மனிதவர்க்கத்தின் ஆராய்ச்சி இன்னும் முடிவடைவதாக இல்லை. உண்மையில், அடுத்த 500 வருடங்கள் அதற்குமுன் நடைபெற்றவற்றையெல்லாம் மிகவும் விஞ்சிவிடும். ஓர் அறிவியல் புரட்சியின் நுழைவாயிலில் உலகம் நின்றது. ஒவ்வொரு புரட்சியையும்போல, இப்புரட்சியும் தன்னுடைய கதாநாயகன்களையும் வில்லன்களையும் எல்லாவற்றுக்கும் மேலாக அதனுடைய பலியாட்களையும் கொண்டிருக்கும். எமது அடுத்த இதழில் வெளியாகும் “அறிவியல்—சத்தியத்திற்காகத் தொடரும் மனிதவர்க்கத்தின் ஆராய்ச்சி”யின் 4-ம் பகுதியில் அதிகத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். (g93 5/8)
[பக்கம் 18-ன் பெட்டி]
அரபு அறிவியலின் பொற்காலம்
அல்-க்வாரிஸ்மி (எட்டாம்-ஒன்பதாம் நூற்றாண்டு), ஈராக்கின் கணிதமேதையும் வானவியல் வல்லுநருமாவார்; “முறிந்த பாகங்களின் இணைப்பு” என்று அர்த்தப்படும் ஆல்ஜிப்ர என்ற பதத்திலிருந்து, “அல்ஜீப்ரா” என்ற வார்த்தையைக் கண்டுபிடித்ததற்காக புகழ்பெற்றவர்.
அபு மூசா ஜபிர் இபன்ஹையன் (எட்டாம்-ஒன்பதாம் நூற்றாண்டு), அரபு வேதியியலின் தந்தை என்றழைக்கப்பட்ட, இரசவாதக்காரர்.
அல்-பட்டேனை (ஒன்பதாம்-பத்தாம் நூற்றாண்டு) வானவியல் வல்லுநரும், கணிதமேதையும் ஆவார்; தாலமியின் வானவியல் கணக்கீடுகளை முன்னேற்றுவித்தார், இதன் காரணமாக வருடத்தின் மற்றும் பருவங்களின் கால அளவுகள் மிகவும் துல்லியமாக தீர்மானிக்கப்பட்டன.
அர்-ரேஸை (ராஸேஸ்) (ஒன்பதாம்-பத்தாம் நூற்றாண்டு) பெர்சியாவில் பிறந்த நன்கு அறியப்பட்ட மருத்துவர்களில் ஒருவர்; பெரியம்மையையும் தட்டம்மையையும் முதன்முதல் வேறுபடுத்தி, எல்லா பொருட்களையும் விலங்கைச் சார்ந்தவை, தாவரத்தைச் சார்ந்தவை, தாதுவைச் சேர்ந்தவை என வகைப்படுத்தினவர்.
பஸ்ராவின் அபூ ஆலை அல்-ஹாசான் ஹிபனல்ஹைதம் (10-ம்-11-ம் நூற்றாண்டு), கணிதமேதை இயற்பியல் வல்லுநர்; எதிரொளித்தல், ஒளிவிலகல், பைனாகுலர் காட்சி, மற்றும் வளிமண்டல விலகல் போன்றவற்றை உட்பட ஒளியியல் கொள்கைக்குக் குறிப்பிடத்தக்கவகையில் பங்களித்தார்; ஒரு பொருளிலிருந்து கண்ணுக்கு வரும் ஒளியின் விளைவுதான் காட்சி என்பதாக முதன்முதல் சரியாக விவரித்தவர்.
ஒமர் கயாம் (11-ம்-12-ம் நூற்றாண்டு), புகழ்பெற்ற பெர்சிய கணிதமேதை, இயற்பியல் வல்லுநர், வானவியல் நிபுணர், மருத்துவர், தத்துவஞானி; தன்னுடைய கவித்திறனுக்காக மேற்கத்திய நாடுகளில் நன்கு அறியப்பட்டவர்.
[பக்கம் 16-ன் படங்கள்]
அரிஸ்டாட்டிலும் (மேலே) ப்ளேட்டோவும் (கீழே) அறிவியல் கருத்தின்மீது நூற்றாண்டுகளாகப் பெருத்தச் செல்வாக்குச் செலுத்தினர்