பகுதி 5
அறிவியல்—சத்தியத்திற்காகத் தொடரும் மனிதவர்க்கத்தின் ஆராய்ச்சி
20-ம் நூற்றாண்டு ‘மாயவித்தையை’ நடப்பித்தல்
அசாத்திய “மாயவித்தை” என 19-ம் நூற்றாண்டில் தோன்றியது 20-ம் நூற்றாண்டில் உண்மையாக நடந்திருக்கிறது. ஒரே ஒரு தலைமுறைக்குள், ஜனங்கள் தங்கள் சொந்த மாடல் T ஃபோர்ட் காரை ஓட்டுவதிலிருந்து மனிதர் நிலவில் நடப்பதைக் கலர் டிவியில் பார்ப்பதன் கிளர்ச்சிவரை முன்னேறியிருக்கின்றனர். அசாதாரணம் என்று கருதப்படுவதைவிட, அறிவியல் ரீதியில் நடப்பித்த “அற்புதங்கள்” இன்று பெரும்பாலும் சாதாரணமாகவே கருதப்படுகின்றன.
“20-ம் நூற்றாண்டு தொடக்கத்தின் அறிவியல் சாதனைகள் பட்டியலிடப்படமுடியாத அளவுக்குக்கூட எண்ணற்றவையாய் இருக்கின்றன,” என தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா குறிப்பிடுகிறது. இருப்பினும், “ஒவ்வொரு பெரிய துறையிலும், முன்னேற்றம் 19-ம் நூற்றாண்டின் வெற்றிகரமான விரிவாக்கப்பட்ட ஆராய்ச்சியையே அடிப்படையாகக் கொண்டிருந்தது,” என்று சொல்வதன் மூலம் அது “பொதுப்படையான முன்னேற்ற மாதிரிபடிவம் ஒன்றை,” குறிக்கிறது. அறிவியல்—சத்தியத்திற்காகத் தொடரும் ஓர் ஆராய்ச்சி என்ற உண்மையை இது தெளிவாகக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
தொகுதிகளால் மாற்றீடு செய்யப்பட்டு
ஒன்று கூடிவந்து கருத்துக்களையும் தகவல்களையும் பரிமாறிக்கொள்ளும் விஞ்ஞானிகளின் தொகுதிகள், அறிவியல் சங்கங்கள், 17-ம் நூற்றாண்டிலேயே ஐரோப்பாவில் நிறுவப்பட்டன. புதிய கண்டுபிடிப்புகளைத் தெரியப்படுத்துவதற்காக, இச்சங்கங்கள் தங்களுடைய சொந்தப் பத்திரிகைகளையும்கூட பிரசுரிக்கத் தொடங்கின. இது மிகுதியான தகவல்களின் பரிமாற்றத்திற்கு வழிநடத்திற்று. இத்தகவல் பரிமாற்றம் கூடுதல் அறிவியல் முன்னேற்றங்களை ஏற்படுத்துவதற்கான ஆதாரத்தைத் திரட்டியமைப்பதற்கு உதவிற்று.
19-ம் நூற்றாண்டின்போது, பல்கலைக்கழகங்கள் அறிவியல் ஆராய்ச்சியில் ஆழ்ந்துவிட்டிருந்தன. அதைத் தொடர்ந்துவந்த ஆண்டுகளில் அவற்றின் ஆய்வுக்கூடங்கள் முக்கிய கண்டுபிடிப்புகளை நடத்தின.a வர்த்தக நிறுவனங்களும் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆராய்ச்சிக்கென்று ஆய்வுக்கூடங்களை அமைத்தன. இவ்வாய்வுக்கூடங்கள் காலப்போக்கில், புதிய மருந்துகள், (ப்ளாஸ்டிக்குகளை உட்படுத்திய) கூட்டிணைப்புப் பொருட்கள் (synthetic materials), மேலும் இதரப் பொருட்கள் போன்றவற்றைக் கண்டுபிடித்தன. இவற்றால் பொது ஜனங்கள் பயனடைந்திருக்கின்றனர், அந்த ஆராய்ச்சி நிறுவனங்களும் லட்சக்கணக்கான டாலர்களை லாபமாகச் சம்பாதித்திருக்கின்றன.
இந்த ஆய்வுக்கூடங்கள் மற்றும் ஆராய்ச்சி தொகுதிகள் நிறுவப்பட்டதுதானே, தனிப்பட்டவரின் முயற்சிக்கு நேர் மாறாக உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட ஆராய்ச்சியை நோக்கி சென்ற ஒரு போக்குமுறையைக் குறிப்பிட்டுக் காட்டியது. இது மிகச் சிறந்த ஓர் அணுகுமுறைதானா எனச் சில விஞ்ஞானிகள் சிந்தித்தனர். ஐரிஷ் இயற்பியல் வல்லுநரும், X-கதிர்கள் படிக அமைப்பாய்வியல் வல்லுநருமான, ஜான் D. பர்னல், 1939-ல் இந்தக் கேள்வியை விடுத்தார்: “திறம்படைத்த தனிநபர்கள் அவரவருடைய சொந்தப் புரிந்துகொள்ளுதலுக்கேற்ப இங்குமங்குமாக நடத்தப்படும் ஆராய்ச்சிகளை ஒருங்கிணைப்பதால் அறிவியல் முன்னேறவேண்டுமா, அல்லது ஆராய்ச்சியாளர்களின் தொகுதி அல்லது குழுக்கள் முன்வகுக்கப்பட்ட, இசைவிணக்கமுடைய திட்டத்தின்படி பரஸ்பரமாக ஒன்றுக்கொன்று ஒத்தாசை செய்து, தங்களுடைய ஆராய்ச்சியை ஒருங்கிணைத்து முழுமையாக்குவதால் அறிவியல் முன்னேறவேண்டுமா?”
ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள சிக்கல்களின் மற்றும் அதிக செலவின் காரணமாக, செயல் நடவடிக்கைகளை எவ்வாறு தகுந்தமுறையில் ஒழுங்கமைப்பது என்பது மட்டுமே பிரச்னை என்று சொல்லி, குழுக்களாக ஆராய்ச்சி செய்வதற்குச் சாதகமாக பர்னல் வாதாடினார். “ஒன்றுபட்ட குழு ஆராய்ச்சியே அறிவியல் ஆராய்ச்சியின் முறையாக இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன,” என்று அவர் முன்கணித்தார். ஐம்பது வருடங்களுக்குப் பின் இப்பொழுது, பர்னல் சொன்னது சரியே என்று தெளிவாகிறது. இந்தப் போக்குமுறை, 20-ம் நூற்றாண்டின் அறிவியல் ‘மாயவித்தையை’ நடப்பிக்கும் செயல்முறையைத் துரிதப்படுத்தி, தொடர்ந்துவந்திருக்கிறது.
“தேவன் என்னென்ன செய்தார்!”
மே 24, 1844-ல் இந்த மூன்று-வார்த்தை வியப்புரை, மார்ஸ் தந்திப்பதிவு குறியீட்டை (Morse code) கண்டுபிடித்த சாமுவேல் மார்ஸ் என்பவரால் 50 கிலோமீட்டருக்குச் சற்றுக் கூடுதலான தூரத்திற்கு வெற்றிகரமாகத் தந்தி அனுப்பப்பட்டது. தொடர்ந்துவரும் 20-ம் நூற்றாண்டின் தொலைத்தொடர்பு ‘மாயவித்தையின்’ 19-ம் நூற்றாண்டு வேர்கள், இப்போது ஊன்றப்பட்டுக்கொண்டிருந்தன.
சுமார் 30 வருடங்கள் கழித்து, 1876-ல், அலெக்ஸான்டர் க்ரஹாம் பெல் தன்னுடைய உதவியாளர் தாமஸ் உவாட்ஸனோடு ஓர் ஒலி அனுப்பியை (transmitter) சோதனை செய்வதற்காகத் தயார் செய்துகொண்டிருந்தார். அப்போது பெல் சிறிது அமிலத்தைக் கீழே சிந்திவிட்டார். “மிஸ்டர் உவாட்ஸன், இங்கு வாருங்கள். உங்களுடைய உதவி தேவைப்படுகிறது,” என்ற அவரது அழைப்பு, வெறுமனே உதவிக்கான அழைப்பைக்காட்டிலும் அதிகமான ஒன்றாக மாறியது. தனிவொரு அறையில், அமர்த்தப்பட்டிருந்த உவாட்ஸன், அந்தச் செய்தியைக் கேட்டார். இதுவரை தொலைபேசி மூலம் அனுப்பப்படும் தெட்டத்தெளிவாகக் கேட்கப்படக்கூடிய முதல் வார்த்தைகள் என்பதை அடையாளங்கண்டு, உவாட்ஸன் ஓடி வந்தார். அப்போதிலிருந்து தொலைபேசியின் மணியோசை பதிலளிப்பதற்காக ஜனங்களை ஓடவைத்திருக்கிறது.
கடந்த 93 ஆண்டுகளாக, தொழில் செய்நுட்ப அறிவோடுகூடிய (technical know-how) விஞ்ஞான அறிவு, முன்பு ஒருபோதும் சாதிக்கப்பட முடியாத வாழ்க்கை தராதரத்தை முன்பு எக்காலத்திலும் இருந்ததைவிட அதிக எண்ணிக்கை மக்களுக்குக் கொடுத்திருக்கிறது. தொலைத்தொடர்பு வசதிகளால் உலகம் சுருங்கிவிட்டதாகத் தோன்றுகிறது. “அசாத்திய” காரியங்கள் சாதாரணமானவையாக ஆகிவிட்டிருக்கின்றன. உண்மையிலேயே, தொலைபேசிகள், தொலைக்காட்சிகள், தானியங்கும் வாகனங்கள், விமானங்கள்—எண்ணற்ற 20-ம் நூற்றாண்டின் இதர “அற்புதங்கள்”—போன்றவை நம்முடைய உலகில் பெரும்பங்கை வகிக்கின்றன. இதனால் மனிதவர்க்கம் தன்னுடைய வாழ்நாட்களின் பெரும்பகுதியில் இவற்றைக் கொண்டிருந்ததில்லை என நாம் மறந்துவிடும் மனப்போக்கைக் கொண்டிருக்கிறோம்.
“அந்த நூற்றாண்டு தொடங்கியபோது, அறிவியலின் வெற்றிச் சிறப்புகள் அபரிமிதமான அறிவுக்கும் வல்லமைக்குமான நம்பிக்கையைக் கொடுப்பதாகத் தோன்றிற்று,” என்று குறிப்பிடுகிறது தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா. ஆனால் இதற்கிடையில் அடையப்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றங்கள், எல்லா இடங்களிலும் சரிசமமாக அனுபவிக்கப்படவில்லை. மேலும் அவை எல்லாமே சந்தேகத்திற்கிடமின்றி பயனுள்ளவை என்று வகைப்படுத்தப்படமுடியாது. அது மேலும் கூறுகிறது: “இதே வெற்றிச் சிறப்புகள் தங்களுடைய சமூக மற்றும் இயற்கை சுற்றுச்சூழலுக்குக் கொண்டுவரும் பிரச்னைகளை ஒருசிலரால் முன்கூட்டியே காணமுடிந்தது.”
பிரச்னைகளை உண்டாக்கியது எது?
நாம் அண்டத்தை நல்ல முறையில் விளங்கிக்கொள்ள நமக்கு உதவும் அறிவியல் உண்மைகளில் குற்றமேதும் காணமுடியாது. மனிதவர்க்கத்தின் நன்மைக்காக, நடைமுறையான வழியில் இவ்வுண்மைகளைப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தையும் குற்றங்கூற முடியாது.
அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய இவை இரண்டும் வெகு காலமாகவே உறவுகொண்டாடியிருக்கின்றன. ஆனால் “இப்பொழுது நன்கு அறியப்பட்டிருக்கும் அவற்றின் நெருங்கிய தொடர்பு சமீபகாலம்வரை முழுமையாக நிரூபிக்கப்படாமலிருந்தது,” என்று 1800-லிருந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றின் தோற்றம் (Science and the Rise of Technology Since 1800) புத்தகம் சொல்கிறது. தெளிவாகவே தொழிற்புரட்சியின் தொடக்கத்தின்போதும்கூட, அந்த உறவுமுறை அவ்வளவு நெருக்கமானதாயில்லை. புதிதாகப் பெறப்பட்ட விஞ்ஞான அறிவு புதிய பொருட்களைக் கண்டுபிடிப்பதற்கு உதவிசெய்ததுபோலவே தொழில் அனுபவம், கைத்திறன், இயந்திரத்தொழிலில் அனுபவம் போன்றவையும் உதவின.
எனினும், தொழிற்புரட்சி தொடங்கியபின், விஞ்ஞான அறிவைத் திரட்டுவது துரிதப்படுத்தப்பட்டது. இதனால் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதற்கான பரந்த ஓர் அடித்தளம் உருவாக்கப்பட்டது. புதிய அறிவூட்டப்பட்டு, தொழில்நுட்பம் வாழ்க்கையில் சலிப்பைப் போக்குதல், சுகாதாரத்தை மேம்படுத்துதல், ஒரு மேம்பட்ட மகிழ்ச்சியான உலகை உருவாக்குதல் போன்றவற்றிற்கான வழிகளைக் கண்டுபிடிக்க முயற்சிசெய்வதில் முனைந்தது.
ஆனால் விஞ்ஞான அறிவை ஆதாரமாகக் கொண்டிருக்கும் தொழில்நுட்பம் விஞ்ஞான அறிவைவிட மேம்பட்டதாய் இல்லாமலும் இருக்கலாம். விஞ்ஞான அறிவு குறையுள்ளதாயின், அதனை ஆதாரமாகக் கொண்டிருக்கும் எந்தத் தொழில்நுட்ப வளர்ச்சிகளும் அதேபோல் குறையுடையவையாகவே இருக்கும். பெரும்பாலும், கணிசமாகப் பெருந்தீங்கு செய்த பின்னரே பக்கவிளைவுகள் தெளிவாக வெளிப்படும். உதாரணமாக, க்ளோரோஃப்ளூரோகார்பன்களை அல்லது ஹைட்ரோகார்பன்களை உபயோகிக்கும் ஏரோசால் தெளிப்பான்கள், பூமியின் பாதுகாப்புப் படலமாகிய ஓசோன் படலத்தை ஒரு நாள் ஆபத்திற்குள்ளாக்கும் என்று யார் நினைத்தது?
வேறொன்றும்கூட இதில் ஈடுபட்டிருக்கிறது—உள்ளெண்ணம் (motive). தன்னையே அற்பணித்த ஒரு விஞ்ஞானி உண்மையிலேயே அறிவைப் பெறுவதில் அக்கறையுடையவனாய் இருக்கலாம். அதற்காகத் தன்னுடைய வாழ்நாளில் பல பத்தாண்டுகளை ஆராய்ச்சியில் செலவு செய்ய விருப்பமுடையவனாகவும் இருக்கலாம். ஆனால் லாபம் அடைவதிலேயே மிகவும் கண்ணாயிருக்கும் ஒரு வர்த்தகன், அவ்வறிவை உடனடியாக உபயோகிக்கும் ஆவலுடையவனாய் இருக்கிறான். தொழில்நுட்பத்தின் உடனடி உபயோகத்தால் தனக்கு அரசியல் ஆதாயம் கிடைக்குமென எண்ணுகிற எந்த அரசியல்வாதி அதை உபயோகிக்க பல பத்தாண்டுகள் பொறுமையோடு காத்திருப்பான்?
இயற்பியல் வல்லுநர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், “கட்டுப்பாடற்று உபயோகிக்கப்பட்ட அணு ஆற்றல், நாம் சிந்திக்கும் விதத்தைத் தவிர மற்றெல்லாவற்றிலும் மாற்றம் ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக நாம் இணையற்ற அழிவை நோக்கி செல்கிறோம்,” என்று சொல்வதன்மூலம் அந்தப் பிரச்னையை அடையாளம் காட்டினார். (தடித்த எழுத்துக்கள் எங்களுடையது.) ஆம், 20-ம் நூற்றாண்டு ‘மாயவித்தையால்’ உருவாக்கப்பட்ட பிரச்னைகளில் அநேகம், வெறுமனே குறையுள்ள விஞ்ஞான அறிவால் உண்டானவையல்ல, ஆனால் தன்னல அக்கறைகளால் தூண்டப்பட்டுத் துரிதமாக உருவாக்கப்பட்டுக் கட்டுப்பாடற்று உபயோகிக்கப்படும் தொழில்நுட்பத்தினாலுமாகும்.
உதாரணமாக, ஒலியும் ஒளியும் தூர இடங்களுக்குக் கடத்தப்படலாம் என்று அறிவியல் கண்டுபிடித்தது—தொலைக்காட்சி. அவ்வாறு கடத்துவதற்குத் தொழில்நுட்பம் தேவையான செய்நுட்ப அறிவை வளர்த்தது. ஆனால் இத்தகைய தனிச் சிறப்புவாய்ந்த அறிவையும் தொழில்நுட்பத்தையும், அமைதியான வீடுகளுக்குள் ஆபாசத் திரைப்படங்களையும் வன்முறை காட்சிகளையும் கொண்டுவர பயன்படுத்துவது, பேராசையுடைய வர்த்தகர்கள் மற்றும் வற்புறுத்தும் நேயர்கள் பாகத்தில் உள்ள தவறான எண்ணமாகும்.
அதைப்போலவே, பொருள் ஆற்றலாக மாற்றப்படலாம் என்று அறிவியல் கண்டுபிடித்தது. அதைச் செய்ய தேவையான செய்நுட்ப அறிவைத் தொழில்நுட்பம் வளர்த்தது. ஆனால் உலக சமுதாயத்தின் தலைமீது டேமக்ளிஸ் கத்தியைப்போல இன்னும் தொங்கிக்கொண்டிருக்கும் அணுகுண்டுகளைத் தயாரிக்க இந்த அறிவையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தியது தேசிய அரசியலின் பாகத்தில் உள்ள தவறான எண்ணமேயாகும்.
அறிவியலை அதற்குரிய இடத்தில் வைத்தல்
அடிமைகளாக உண்டாக்கப்பட்ட, தொழில்நுட்ப ரீதியில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களை எஜமானர்களாக இருக்க ஜனங்கள் அனுமதிப்பார்களேயானால், அது மேலுமொரு தவறான எண்ணத்தைச் சுட்டிக்காட்டுகிறது. டைம் பத்திரிகை 1983-ல், அதன் வழக்கமான இவ்வாண்டு மனிதனையல்ல, ஆனால் “இவ்வாண்டின் இயந்திரத்தை,” கம்ப்யூட்டரைத் தெரிந்தெடுத்தபோது, இந்த அபாயத்தைப்பற்றி எச்சரித்தது.
டைம் இவ்வாறு விவாதம் செய்தது: “ஜனங்கள் தங்கள் மூளையில் செய்துகொண்டிருந்த வேலைகளைச் செய்ய கம்ப்யூட்டரைச் சார்ந்திருப்பதால், அவர்களுடைய மூளைகளுக்கு என்ன நேரிடுகிறது? . . . கம்ப்யூட்டரின் நினைவகத்தில் வைக்கப்பட்டுள்ள ஓர் அகராதி எழுத்துக்கூட்டுவதில் உள்ள எந்தப் பிழைகளையும் எளிதில் திருத்த முடிகிறதென்றால், எழுத்துக்கூட்டக் கற்றுக்கொள்வதன் அர்த்தந்தான் என்ன? மனம் அறிவுப்பூர்வமான வழக்கமுறைகளிலிருந்து விடுவிக்கப்படுமானால், அது முக்கிய கருத்துக்களை நாடித்தேடுமா சோம்பலாகப் பெருமளவு வீடியோ விளையாட்டுகளில் அதன் அதிக நேரத்தைச் செலவு செய்யுமா? . . . கம்ப்யூட்டர் உண்மையிலேயே மூளையின் நடவடிக்கைகளைத் தூண்டிவிடுகிறதா, அதன் வேலையில் பெரும்பகுதியைச் செய்வதால், அதை மந்தமாக்குகிறதா?”
இருப்பினும், அறிவியலை மெய்யாகவே கடவுட்துவத்துக்கு உயர்த்தக்கூடிய அளவு சில ஜனங்கள் அறிவியல் சாதனைகளால் கவர்ந்திழுக்கப்பட்டிருக்கின்றனர். அறிவியல் ஒரு புனிதப் பசு (Science Is a Sacred Cow) என்ற தனது 1950-ன் புத்தகத்தில், விஞ்ஞானி அண்டனி ஸ்டேன்டன் இதை விவாதித்தார். ஸ்டேன்டன் ஓரளவு மிகைப்படுத்திக் கூறியிருந்தாலும், அவர் சொன்னதில் கவனிக்கத்தக்க கருத்து இருக்கிறது: “வெள்ளை மேலங்கி தரித்த விஞ்ஞானி . . . பொது ஜனங்களுக்கு ஏதாவது கூறுவானாகில், அவன் சொல்வது புரிந்துகொள்ளப்படாமல் இருக்கலாம், ஆனால் அவன் நம்பப்படுகிறான் என்பதில் நிச்சயமாய் இருக்கிறான். . . . அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், மதப் போதகர்கள், சமூகத் தலைவர்கள், தத்துவஞானிகள் போன்ற எல்லாரும் சந்தேகிக்கப்பட்டுக் குறைகூறப்படுகின்றனர்; விஞ்ஞானிகளோ—ஒருபோதும் சந்தேகிக்கப்படுவதில்லை. விஞ்ஞானிகள் புகழ்பெற்ற கெளரவத்தின் மிக உச்சியில் நிற்கும் உயர்த்தப்பட்ட ஆட்களாவர். ஏனென்றால் அவர்கள் ‘அது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது . . . ’ என்ற சூத்திரத்தின் செல்வாக்கைக் கொண்டிருக்கின்றனர். இந்தச் சூத்திரம் கருத்துவேறுபாடுகளுக்கான எல்லா வாய்ப்பையும் தள்ளிவிடுவதாகத் தோன்றுகிறது.”
இந்தத் தவறான எண்ணத்தின் காரணமாக, சிலர் அறிவியலுக்கும் பைபிளுக்கும் இடையே இருப்பதாகத் தோன்றும் முரண்பாடுகளை மத “மூடநம்பிக்கைக்கு” எதிரான அறிவியல் “ஞானத்தின்” அத்தாட்சி என்பதாகப் பிடித்துக்கொள்கின்றனர். முரண்பாடுகளாகத் தோன்றும் இவற்றிலிருந்து கடவுள் இல்லை என்பதற்கான அத்தாட்சியையும்கூட சிலர் காண்கின்றனர். எனினும், உண்மையில் இல்லாதிருப்பது கடவுளல்ல; ஆனால் அவருடைய வார்த்தையைத் தவறாக விளக்குவதனால் குருவர்க்கத்தால் உண்டாக்கப்படும் இந்தக் கற்பனை செய்யப்பட்ட முரண்பாடுகளே. அதன்மூலம் அவர்கள் பைபிளின் தெய்வீக ஆசிரியரை அவமதிப்பது மட்டுமல்லாமல், அறிவியல் உண்மைக்காகத் தொடரும் மனிதவர்க்கத்தின் ஆராய்ச்சிக்கும் ஊறு விளைக்கின்றனர்.
கூடுதலாக, இந்த மதத் தலைவர்கள் தங்களுடைய சர்ச் அங்கத்தினர்களை (parishioners) ஆவியின் கனிகளைப் பிறப்பிக்க பயிற்றுவிப்பதற்குத் தவறுகின்றனர். இதனால் தன்னலமிக்க ஒரு சுற்றுச்சூழலை வளர்க்கின்றனர். இது மக்கள் முக்கியமாகத் தங்கள் தனிப்பட்ட சுகத்திற்கான மற்றும் வசதிக்கான சொந்த ஆசைகளைப்பற்றியே சிந்திக்கும்படி அவர்களைத் தூண்டுவிக்கிறது. இது மற்றவர்களின் நலனை அற்பணித்து, சக மனிதர்களைக் கொல்வதற்காக விஞ்ஞான அறிவைத் துர்ப்பிரயோகம் செய்யுமளவிற்குக்கூட செய்யப்படுகிறது.—கலாத்தியர் 5:19-23.
பொய் மதம், அபூரண மனித அரசியல், பேராசைமிக்க வர்த்தகம் போன்றவை, மக்களை அவர்கள் இப்பொழுது உள்ளதுபோலத் தவறான எண்ணத்தால் ஆட்டிப்படைக்கப்படுகிற “தற்பிரியராயும், . . . நன்றியறியாதவர்களாயும், . . . இச்சையடக்கமில்லாதவர்களாயும்,” தற்புகழ்ச்சிக்காரர்களாயும் உருவாக்கியிருக்கின்றன.—2 தீமோத்தேயு 3:1-3.
21-ம் நூற்றாண்டின் சவால்களை உருவாக்கியிருக்கும் அமைப்புகளும் மனிதர்களும் இவர்களே. இந்தச் சவால்களைச் சமாளிக்கும்படியாகத்தான் அறிவியல் இப்பொழுது அழைக்கப்பட்டிருக்கிறது. அது வெற்றிபெறுமா? அதற்கான பதிலை எமது அடுத்த இதழில் வெளியாகும், இத்தொடர்வரிசைக் கட்டுரையின் இறுதி பாகத்தில் வாசியுங்கள். (g93 6/8)
[அடிக்குறிப்புகள்]
a உதாரணமாக, அணுகுண்டைக் கண்டுபிடித்த ஐ.மா.-வின் மிகுவிரைவுத் திட்டமாகிய (crash program) மண்ஹாட்டன் திட்டத்தின் ஆராய்ச்சியில் பெரும்பகுதி, சிகாகோ பல்கலைக்கழக மற்றும் பர்க்லியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வுக்கூடங்களில் நடத்தப்பட்டது.
[பக்கம் 13-ன் சிறு குறிப்பு]
விஞ்ஞான அறிவு குறையுள்ளதாயின், அதனை ஆதாரமாகக் கொண்டிருக்கும் வளர்ச்சிகளும் அதேபோல் குறையுடையவையாகவே இருக்கும்
[பக்கம் 15-ன் சிறு குறிப்பு]
அறிவியல் சாதனைகள் அனைத்துமே பயன்விளைவிக்கக் கூடியவையாக இல்லை