பகுதி 6
அறிவியல்—சத்தியத்திற்காகத் தொடரும் மனிதவர்க்கத்தின் ஆராய்ச்சி
21-ம் நூற்றாண்டின் சவால்களை சமாளித்தல்
ஒன்பது, எட்டு, ஏழு, எண்ணிக்கை தொடருகிறது! இறங்குமுகக் கணிப்பு எதற்கு, ராக்கெட் விடுவதற்கா? இல்லை, அதைவிட 21-ம் நூற்றாண்டின் அநிச்சயங்களுக்குள் மனிதகுலம் தள்ளப்படுவதற்குமுன் இன்னும் எஞ்சியிருக்கும் வருடங்களின் எண்ணிக்கைக்கே.a
21-ம் நூற்றாண்டு கொண்டுவரும் எந்தச் சவாலையும் அறிவியல் சமாளிக்க முடியும் என்று கடந்த நூற்றாண்டின் அறிவியல் சாதனைகள் அடிப்படையில் அநேகர் உண்மையில் நம்பலாம்.b அவர்கள் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு பிரெஞ்சு ஆசிரியர் இவ்வாறு உணர்ந்ததைப் போலவே உணரலாம். “இன்று அறிவியல் உலகை ஆளும்படி முன்தீர்மானிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் எழுதினார். “இப்பொழுதிலிருந்து உலக அரசுரிமை கடவுளுக்கு அல்ல, ஆனால் ஜனங்களுக்கு நன்மைபயக்குவதாகவும், மனிதவர்க்கத்திற்கு விடுதலையளிப்பதாகவும் இருக்கும் அறிவியலுக்கே உரியது.”
அறிவியல் இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவேண்டுமானால், அதன் உதவியால் உருவாக்கப்பட்ட பிரச்னைகளில் அநேகத்தை அது தீர்த்துவைக்க வேண்டியிருக்கிறது.
அறிவியல் காரணமாக இருக்கும் சுற்றுச்சூழலின் அழிவு பேரளவாயிருக்கிறது. இந்தக் கோளத்தைக் காப்பாற்ற 5000 நாட்கள் (5000 Days to Save the Planet) என்ற புத்தகம் இவ்வாறு உறுதியாகக் கூறுகிறது: “சுற்றுச்சூழலைப் பயன்படுத்தும் தற்போதைய போக்குமுறையில் நாம் தொடருவோமானால், கேள்வி, நவீன சமுதாயம் அடுத்த நூற்றாண்டைத் தப்பிப்பிழைக்குமா என்பதல்ல, ஆனால் அது ஒரு வெடியோசையோடு மறைந்துபோகுமா அல்லது தேம்பியழுதலோடு மறைந்துபோகுமா என்பதே.”
இது ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு தெரிவாகவே தோன்றவில்லை.
அறிவியலின் குறைபாடுகள்
“என்றாவது ஒருநாள் முழுமையான உண்மையையும் புரிந்துகொள்ளுதலின் எல்லையையும் அவர்கள் அடைந்தே தீருவார்கள் என . . . 19-ம் நூற்றாண்டின் ஆராய்ச்சியாளர்கள் அநேகர் அடிக்கடி உணர்ந்தனர்,” என்பதாக தி சயண்டிஸ்ட் என்ற புத்தகம் கூறுகிறது. “அவர்களைப் பின்தொடர்ந்து வந்தவர்கள்” அந்தப் புத்தகம் தொடர்ந்து கூறுகிறது, “‘அரைகுறை புரிந்துகொள்ளுதலையே அடைந்ததைப்பற்றியும்’ தொடர்ந்து உண்மைகளை அணுகி ஆனால் அதை முழுமையாக புரிந்துகொள்ள முடியாததைப்பற்றியும்தான் பேசுகின்றனர்.” முழு அறிவிற்கான இந்தக் குறையானது, அறிவியல் எதைச் செய்யவல்லதாய் இருக்கிறதோ அதை மிகவும் குறையுள்ளதாக்கிவிடுகிறது.
பல ஆண்டுகளினூடே அறிவியல் உண்மைகள் ஒருபோதும் மாறிவிடவில்லை, ஆனால் அறிவியல் கோட்பாடுகளோ—மீண்டும் மீண்டும்—மாறியிருக்கின்றன. உண்மையில், சில சமயங்களில் கோட்பாடுகள் ஒரு முனையிலிருந்து மறு முனை வரை தடுமாறியிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, உடல்நிலை மிகவும் மோசமாக உள்ள ஓர் ஆளின் உடலிலிருந்து இரத்தத்தை வெளியேற்றுவது அறிவியல்பூர்வமான காரியம் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஒரு காலத்தில் நினைத்தனர். பின்னர் இரத்தமேற்றுதல்தான் பதில் என்று கருதினர். இப்பொழுதோ இவ்விரண்டையும் செய்யாமலிருப்பதன் விவேகத்தையும் அதைவிட ஆபத்துக் குறைவான வேறு சிகிச்சைமுறைகளைக் கண்டுபிடிப்பதன் விவேகத்தையும் சிலர் உணரத் தொடங்கியிருக்கின்றனர்.
சந்தேகமின்றி, விஞ்ஞானிகள் அறிந்திருப்பது அவர்கள் அறியாதிருப்பதைவிட மிகக் குறைவே. தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா குறிப்பிடுகிறது: “ஒளிச்சேர்க்கை செயல்முறை சரியாக எவ்வாறு நடைபெறுகிறது என்பது தாவரவியல் நிபுணர்களுக்கு இதுவரை தெரியவில்லை. உயிர் எவ்வாறு தோன்றிற்று என்ற கேள்விக்கு உயிரியல் நிபுணர்களும் உயிர்வேதியல் நிபுணர்களும் இதுவரை பதில் கண்டுபிடிக்காமல் இருக்கின்றனர். இந்த அண்டம் எவ்வாறு தோன்றிற்று என்பதற்குத் திருப்திப்படுத்தும் ஒரு விளக்கத்தை வானியல் நிபுணர்கள் இதுவரை கண்டுபிடிக்காமல் இருக்கின்றனர். மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கும் உடலியங்கியல் (Physiology) நிபுணர்களுக்கும் புற்றுநோயின் காரணத்தையோ சிகிச்சையையோ அல்லது பல்வேறு வைரஸ் நோய்களையும் குணப்படுத்துவது எவ்வாறு என்றோ தெரியவில்லை. . . . உளநோய்க்கான எல்லா காரணங்களும் உளநோய் நிபுணர்களுக்குத் தெரியவில்லை.”
விஞ்ஞானம் விஞ்ஞானிகளாய் இருக்கும் ஆட்களைவிட எவ்வகையிலும் மேம்பட்டதாய் இருக்கமுடியாது. இந்த அர்த்தத்திலும் அறிவியல் குறைபாடுகள் உள்ளதே. அதாவது, ஒரு விஞ்ஞானியின் அறிவு குறைவு அவனுடைய அபூரணத்தினால் சிக்கலாக்கப்படுகிறது. “விசேஷ-நோக்க அமைப்புகள், மீண்டும் மீண்டும் . . . ஆராய்ச்சியைத் தவறாகக் கையாண்டிருக்கின்றனர், செலவு-லாப பகுப்பாய்வுகளை (cost-benefit analyses) புரட்டியிருக்கின்றனர், கேடுவிளைவிக்கும் பொருட்களை விற்பதற்கோ சுற்றுச்சூழலுக்கு நாசம் விளைவிக்கும் செய்கைகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கவோ தகவல்களை மறைத்திருக்கின்றனர்,” என்று கூறுகின்றனர் இந்தக் கோளத்தைக் காப்பாற்ற 5000 நாட்கள் என்ற புத்தகத்தின் ஆசிரியர்கள்.
விஞ்ஞானிகளில் பெரும்பாலானோர் நேர்மையுள்ளவர்களாக இருந்தாலும், அவர்களையோ அவர்களுடைய செய்கைகளையோ வீணாக புகழ்வதற்கு இது காரணமல்ல. “அவர்கள் மற்ற எல்லாரையும்போல் உள்ளவர்கள்தான். அவர்கள் எல்லாரும் தங்களுடைய குறைகளைக் கொண்டிருக்கின்றனர். சிலர் தங்களையே அற்பணித்திருக்கின்றனர், சிலரோ மற்றவர்களுக்குத் தீங்கு செய்ய தயங்காதவர்களாய் இருக்கின்றனர், சிலர் புத்திக்கூர்மை உள்ளவர்களாகவும் மற்றவர்கள் புத்தியில் மந்தமானவர்களாகவும் இருக்கின்றனர். அறிவியலின் சில மேன்மையான பெயர்களை, உலகத்திற்குப் பேரளவில் நன்மைசெய்த ஆட்களை நான் அறிந்திருக்கிறேன். சிறைவாசம் சென்ற எந்த விஞ்ஞானியையும் நான் அறியவில்லை என்றாலும், சிறையில் நிச்சயமாக அடைக்கவேண்டிய சிலரை நான் அறிந்திருக்கிறேன்,” என்று தானே ஒரு விஞ்ஞானியாக இருக்கும், பிரிட்டிஷில் பிறந்த எட்வர்ட் பெளவன் வாதாடுகிறார்.
தெளிவாகவே, அதன் பல குறைபாடுகளின் காரணமாக, நவீனகால அறிவியலுக்கு, 21-ம் நூற்றாண்டின் சவால்களைத் திருப்திகரமாக சமாளிப்பதற்குத் தகுதியில்லை. முக்கியமாக அது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கத் தவறியிருக்கிறது. மேலும் பூமியிலிருந்து யுத்தத்தை ஒழிக்க உதவுவதற்குப் பதிலாக பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களை உற்பத்திசெய்யவே உதவிபுரிந்திருக்கிறது.
அவசர நடவடிக்கை தேவை
விரைவில் ஏதாவது செய்யவேண்டும் என்று அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர். கடந்த நவம்பரில் நோபெல் பரிசு பெற்ற 99 பேரையும் உட்படுத்திய 1575 விஞ்ஞானிகளைக் கொண்ட ஒரு தொகுதி, “மனித குலத்திற்கு உலக விஞ்ஞானிகளின் எச்சரிக்கை” என்ற தலைப்பைக்கொண்ட ஓர் அறிக்கையை வெளியிட்டனர். அதில் அவர்கள் இவ்வாறு எழுதியிருக்கின்றனர்: “நம்மை இப்போது எதிர்ப்படும் அபாயங்களைத் தவிர்ப்பதற்கான வாய்ப்பை இழப்பதற்குமுன், மனிதகுலம் பிழைத்திருக்கும் வாய்ப்புப் பேரளவில் குறைவதற்குமுன் ஒரு அல்லது ஒருசில பத்தாண்டுகளே எஞ்சியிருக்கின்றன.” “மனிதர்களும் இயற்கை உலகமும் மோதிக்கொள்ளும் ஒரு பாதையில் இருக்கின்றன,” என அவர்கள் உறுதியாக கூறினர்.
முன்புகூட இதைப்போன்ற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. உண்மையில், 1952-ல், 20-ம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் தத்துவமேதையும் அறிவியலை ஆதரிப்பவருமான, பெர்ட்ரான்ட் ரஸ்ஸல், இவ்வாறு சொன்னார்: “அறிவியல் இருந்தபோதும் மனித உயிர் தொடர்ந்து இருக்க வேண்டுமானால், உணர்ச்சிகளின் ஒரு கட்டுப்பாட்டை மனிதவர்க்கம் கற்றுக்கொள்ளவேண்டும். இந்தக் கட்டுப்பாடு கடந்த காலத்தில் அவசியமாய் இருந்ததில்லை. மனிதர்கள் சட்டத்திற்கு—அது அநியாயமானது, ஓரவஞ்சனையுள்ளது என்றெல்லாம் அவர்கள் எண்ணும்போதுகூட—கீழ்ப்பட்டிருக்கவேண்டியுள்ளது. . . . அப்படி அது நடக்கவில்லையெனில் மனித இனம் அழிந்துபோகும், அறிவியலின் விளைவாக ஒழிந்துவிடும். ஐம்பது வருடங்களுக்குள்ளாக தெளிவான ஒரு தெரிவை, நியாயத்திற்கும் மரணத்திற்கும் இடையேயுள்ள தெரிவை செய்யவேண்டும். ‘நியாயம்’ என்று சொல்லும்போது ஒரு சர்வதேச அதிகாரத்தால் இயற்றப்பட்ட சட்டத்துக்குக் கீழ்ப்படிவதற்கான விருப்பத்தையே நான் அர்த்தப்படுத்துகிறேன். மனிதவர்க்கம் எங்கு மரணத்தைத் தெரிந்தெடுத்துவிடுமோ என நான் அஞ்சுகிறேன். நான் தவறாக புரிந்துகொள்ளப்பட்டேன் என்று நினைக்கிறேன்.”
உண்மை என்னவென்றால், நீதியான தராதரங்களைக் கடைப்பிடிக்க விருப்பமுள்ள ஜனங்கள் இன்றையதினங்களில் மிகக் குறைவாகவே இருக்கின்றனர். மனித உரிமையின் மறைந்த தலைவர் மார்டின் லூதர் கிங் சரியாகவே இவ்வாறு குறிப்பிட்டார்: “நம்முடைய அறிவியல் வல்லமை ஆவிக்குரிய வல்லமையைவிட மிகுதியாகிவிட்டிருக்கிறது. நாம் ஏவுகணைகளை வழிநடத்திவிட்டு, மனிதர்களை தவறாக வழிநடத்திவிட்டிருக்கிறோம்.” எனினும், மனிதவர்க்கம் “ஒரு சர்வதேச அதிகாரத்தால் இயற்றப்பட்ட சட்டத்துக்குக் கீழ்ப்படியவேண்டும்” என்று சொன்னபோது, உலக பிரச்னைகளுக்கான பரிகாரத்தை ரஸ்ஸல் தனக்குத் தெரியாமலேயே உண்மையில் கண்டுபிடித்துவிட்டார்.
பிரச்னையை யார் தீர்க்கமுடியும்?
ஒரு சர்வதேச அதிகாரத்தால் இயற்றப்பட்ட சட்டத்தைப்பற்றி பேசியபோது பெர்ட்ரான்ட் ரஸ்ஸல், தெய்வீக அதிகாரத்தைப் பற்றி குறிப்பிடவில்லை. எனினும், அப்படிப்பட்ட ஓர் அதிகாரத்தின் சட்டங்களுக்கான கீழ்ப்படிதல்தான் அங்கு சரியாக தேவைப்படுகிறது. மனித சட்டங்களும் மனித அதிகாரங்களும் நிச்சயமாக பதில் கிடையாது. அவை உலகை ஒருபோதும் மாற்றியமைத்து, இவ்வாறு ஏற்படும் அழிவைத் தவிர்க்க முடியாது. வரலாற்றின் இருண்ட பதிவு மனிதர்களுக்கு தெய்வீக ஆட்சி தேவைப்படுகிறது என்பதை நிரூபிக்கிறது.c
உண்மையிலேயே, 21-ம் நூற்றாண்டின் சவால்களைச் சமாளிக்க தேவையான வல்லமையோடும் திறமையோடும் கூடிய ஒரு சர்வதேச அதிகாரத்தை யெகோவா என்ற பெயருடைய, சர்வ வல்லமையுள்ள கடவுள் மட்டுமே கொடுக்கமுடியும். (சங்கீதம் 83:17) எல்லாரும் ஜீவனைப் பெறவேண்டுமானால், அவர்கள் அனைவரும் தங்களைக் கீழ்ப்படுத்திக்கொள்ளவேண்டிய அதிகாரம் கடவுளுடைய ராஜ்யமே. இது சிருஷ்டிகராகிய, யெகோவா தேவனால் ஸ்தாபிக்கப்படும் ஒரு பரலோக உலக ராஜ்யமாகும்.
வெகு காலத்திற்கு முன்பே இந்த அரசாங்கத்தைப்பற்றி பைபிள் முன்னறிவித்தது: “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்: அரசாங்கம் அவருடைய தோளின்மேலிருக்கும்: அவருடைய நாமம் . . . சமாதானப்பிரபு என்றழைக்கப்படும். அவருடைய அரசாங்கத்தின் பெருக்கத்துக்கும் சமாதானத்தின் அதிகரிப்புக்கும் முடிவில்லை.” (ஏசாயா 9:6, 7, கிங் ஜேம்ஸ் வெர்ஷன்) முன்னறிவிக்கப்பட்ட அந்தப் பாலகன், இயேசு கிறிஸ்து, கன்னி மரியாளால் அற்புதமாக கருத்தரிக்கப்பட்டு, யூதேயாவின் பெத்லகேமில் பிறந்தார்.—லூக்கா 1:30-33.
பூமியில் வாழ்ந்தபோது, “நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: ‘உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.’” என்று இயேசு சொன்னபோது, அவர் தம்முடைய சீஷர்களுக்குக் கடவுளுடைய ராஜ்யத்துக்காக ஜெபிக்கும்படி கற்றுக்கொடுத்தார். (மத்தேயு 6:9, 10) அவருடைய அரசாங்கத்தின் நீதியுள்ள சட்டங்களுக்கு இசைவாக விருப்பமுள்ள ஜனங்கள் தங்களுடைய வாழ்க்கையில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்த, யெகோவா தேவனின் வல்லமைமிக்க பரிசுத்த ஆவி அல்லது கிரியை நடப்பிக்கும் சக்தி மட்டும்தான் உதவக்கூடும். அறிவியல் இதைச் செய்யமுடியாது. ஆயிரக்கணக்கான வருடங்களாக நிலவிவரும் முரண்பாடுகளும் குழப்பங்களும் அறிவியல் இதைச் செய்ய முடியாது என்பதற்கான அத்தாட்சியாக இருக்கின்றன.
எல்லையற்ற திருத்தமான விஞ்ஞான அறிவையுடைய, யெகோவா தேவன், பூமி பரதீஸிய நிலைமைகளை அனுபவிப்பதைப் பார்த்துக்கொள்வார். அவர் முதல் மனித ஜோடியைப் படைத்தபோது, ஏதேன் தோட்டத்தில்கூட நிலைமைகள் அவ்வாறே இருந்தன. அந்தச் சமயம் அவர் அவர்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டார்: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி” கொள்ளுங்கள். (ஆதியாகமம் 1:28) அவர்கள் கீழ்ப்படிந்திருந்து அந்த உத்தரவாதத்தை நிறைவேற்றத் தவறினர். இருந்தாலும், இந்தப் பூமி ஒரு பரதீஸாக இருப்பதற்கான அவருடைய ஆதி நோக்கம் நிறைவேறுவதை யெகோவா தேவன் பார்த்துக்கொள்வார். “அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்,” என்று அவர் சொல்கிறார். (ஏசாயா 46:11) ஆனால் பூமிக்கான கடவுளின் ஆதி நோக்கம் எப்போது நிறைவேற்றப்படும்?
“கடைசி நாட்களில்,” கடவுளுடைய ராஜ்யம் மனித அரசாங்கங்கள் அனைத்தையும் மாற்றீடு செய்வதற்குச் சற்றுமுன் பூமியில் நிலவியிருக்கும் நிலைமைகளை இயேசு கிறிஸ்துவும் அவருடைய அப்போஸ்தலர்களும் விவரித்தனர். (2 தீமோத்தேயு 3:1-5; மத்தேயு 24:3-14, 37-39; 2 பேதுரு 3:3, 4) இங்குக் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த பைபிள் தீர்க்கதரிசனங்களைப் படிக்கும் ஒருவர் உலக நிகழ்ச்சிகளோடு அவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, கடவுளுடைய ராஜ்யம் நடவடிக்கை எடுக்கப்போகும் காலப்பகுதியில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பது தெளிவாகிறது. அந்த நடவடிக்கை பைபிளில் தானியேல் 2:44-ல் விவரிக்கப்பட்டிருக்கிறது: “அந்த ராஜாக்களின் [தற்போது ஆட்சிசெய்யும் மனித அரசாங்கங்களின்] நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”
வெகு அண்மையில் வாழ்க்கை
வெகு அண்மையில் உள்ள எதிர்காலத்துக்கு அது எதை அர்த்தப்படுத்தும் என்று கற்பனை செய்து பாருங்கள்! வரவிருக்கும் நூற்றாண்டில், அதற்குமுன்பே இல்லையென்றாலும், என்னே அதிசயமான காரியங்கள் நமக்காக வைக்கப்பட்டிருக்கின்றன! ஆயிரக்கணக்கான வருடங்களாக இருந்துவந்த அபூரண மனித அரசாட்சி, மாய்மாலமான மதம், பேராசைமிக்க வர்த்தகம், இவ்வுலகத்தின் அறிவியல் போன்றவற்றால் ஏற்பட்ட தீங்கான விளைவுகள் தெய்வீக ஆட்சியால் மாற்றீடு செய்யப்படப்போகின்றன. இவ்வாட்சி மனிதர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கும் மிகுதியாக அவர்களை ஆசீர்வதிக்கும்.
கடவுளுடைய நீதியுள்ள புதிய உலகில் நிச்சயமாக சம்பவிக்கப்போகும் நிகழ்ச்சிகளை பைபிள் இவ்வாறுதான் விவரிக்கிறது: “இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”—வெளிப்படுத்துதல் 21:3, 4.
ஆகவே, அந்த இறங்குமுகக் கணிப்பைக் குறித்து எச்சரிக்கையாய் இருப்பது உங்களுக்கு அதிமுக்கியமாய் இருக்கிறது. அக்கணிப்பு, உலகத்தின் வல்லமை வாய்ந்த காணக்கூடாத அதிபதியாகிய பிசாசாகிய சாத்தானின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் இந்த உலக ஒழுங்குமுறையின் அழிவின்போது விரைவில் முடிவடையும். (யோவான் 12:31; 2 கொரிந்தியர் 4:3, 4) நீங்கள் கடவுளுடைய சித்தத்தைக் கற்றுக்கொண்டு அதன்படி நடப்பது இன்றியமையாததாய் இருக்கிறது. ஏனெனில், “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்,” என்று பைபிள் வாக்களிக்கிறது.—1 யோவான் 2:17.
ஆகையால், வாய்ப்பு இருக்கும்போதே, கடவுளுடைய ரட்சிப்புக்கான ஏற்பாடுகளை ஞானமாய் பயன்படுத்திக்கொள்வீர்களாக. அப்படியானால் எதிர்காலத்தில் ஆம், வரவிருக்கும் 21-ம் நூற்றாண்டின்போதும், அதற்குப்பின் 22-ம், 23-ம், மற்றும் எண்ணற்ற நூற்றாண்டுகளின்போதும் வாழ்க்கையை அனுபவித்துக்களிக்கும் சிலாக்கியத்தை நீங்கள் கொண்டிருப்பீர்கள். (g93 6/22)
[அடிக்குறிப்புகள்]
a நுணுக்கமாக சொல்லப்போனால், 21-ம் நூற்றாண்டு ஜனவரி 1, 2001 அன்று தொடங்கும். எனினும், பரவலான பயன்பாடு, 1 முதல் 99 வரையுள்ள ஆண்டுகளை 1-ம் நூற்றாண்டு எனவும் (0 வருடம் இருந்ததில்லை), 100 முதல் 199 வரையுள்ள ஆண்டுகளை 2-ம் நூற்றாண்டு எனவும், அம்முறைப்படியே, 2000 முதல் 2099 வரையுள்ள ஆண்டுகளை 21-ம் நூற்றாண்டு எனவும் கருதுகிறது.
b இது விழித்தெழு! பத்திரிகையின் அறிவியல்பேரிலான ஆறு பகுதி தொடர்கட்டுரையின் கடைசிபகுதியாக இருக்கிறது.
c மனித அரசாட்சிகளின் திறமையின்மை, விழித்தெழு! பத்திரிகையில் (பிப்ரவரி 8, முதல் நவம்பர் 8, 1992) “மனித அரசாட்சி தராசுகளில் நிறுக்கப்பட்டுள்ளது” என்ற தலைப்பிலான ஒரு பத்து-பாக தொடர் கட்டுரைகளில் முக்கியப்படுத்திக் காட்டப்பட்டிருந்தது.
[பக்கம் 27-ன் பெட்டி]
துர்ச்செய்திக்கு மத்தியில் நற்செய்தி
அறிவியல் முன்னேற்றம் இருந்தபோதிலும் பட்டினிக் கிடக்கும் திரளான குழந்தைகளும், மெலிந்துபோன திரளான பெரியவர்களும் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் விரைவில் கடவுளுடைய மேசியானிய ராஜ்யத்தின்கீழ், “பூமியில் திரளான தானியம் இருக்கும்; மலைகளின் உச்சியில் நிரம்பிவழியும்.”—சங்கீதம் 72:16, NW.
அறிவியல் முன்னேற்றம் இருந்தபோதிலும் ஒடுக்குதலும் வன்முறையும் இன்னும் லட்சக்கணக்கானோரின் சூழ்நிலைகளாக இருந்துவருகின்றன. ஆனால் விரைவில் கடவுளுடைய மேசியானிய ராஜ்யத்தின் அரசர், “உதவிக்காக கூப்பிடுகிற எளியவனையும், அல்லல்படுகிறவனையும், உதவியற்றவனையும் விடுவிப்பார். . . . ஒடுக்குதலிலிருந்தும் வன்முறையிலிருந்தும் அவர்களுடைய ஆத்துமாக்களை ரட்சிப்பார்.”—சங்கீதம் 72:12-14, NW.
அறிவியல் முன்னேற்றம் இருந்தபோதிலும் வீடில்லாத ஜனங்களும், வீட்டு வசதி மற்றும் போதுமான உணவு போன்றவற்றிற்கான வாய்ப்பற்ற ஜனங்களும், உலகளாவ தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். ஆனால் விரைவில் கடவுளுடைய மேசியானிய ராஜ்யத்தின்கீழ், ஜனங்கள் “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், . . . அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனி புசிக்கிறதுமாயிருப்பதில்லை.”—ஏசாயா 65:21, 22.
மருத்துவ முன்னேற்றம் இருந்தபோதிலும், தடுக்கப்படவேண்டிய நோய்கள் லட்சக்கணக்கானோரைத் தொடர்ந்து கொன்று வருகிறது. ஆனால் விரைவில் கடவுளுடைய மேசியானிய ராஜ்யத்தின்கீழ், “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை.”—ஏசாயா 33:24.
[பக்கம் 28-ன் படம்]
பூமியில் எங்குப் பார்த்தாலும் வாழ்க்கை மகிழ்ச்சி மிகுந்த ஒன்றாக இருக்கும்