திருமண வாழ்க்கை—அதை மகிழ்ச்சியுள்ளதாக்குதல்
திருமணத்தை வெற்றிகரமானதாக ஆக்கக்கூடியது எது?
யாருடைய வழிநடத்தல் திருமண மகிழ்ச்சிக்கு வழிநடத்தக்கூடும்?
பேச்சுத் தொடர்பு பிரச்னைகள் எவ்வாறு தீர்க்கப்படலாம்?
பெண்களுடைய விடுதலையின் பேரில் தாங்கள் படித்த புத்தகத்தால் செல்வாக்குச் செலுத்தப்பட்டு, யாசுஹிரோவும் அவனுடைய காதலி காயோகோவும் ஒன்றாக வாழத் தொடங்கினர். தங்களுடைய உறவுமுறையை எப்போதுவேண்டுமானாலும் முறித்துக்கொள்ளலாம் என நினைத்தனர். காயோகோ கருத்தரித்த பிறகுதான் தங்களுடைய திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்கினர். இருப்பினும் யாசுஹிரோவுக்குத் திருமண ஏற்பாட்டின் மீதான சந்தேகங்கள் தொடர்ந்து இருந்துவந்தன. பணப் பிரச்னைகளும் இசைவு பொருத்தமின்மையின் ஓர் உணர்வும் தலைதூக்கியபோது, மணவிலக்குச் செய்துகொள்வதிலிருந்து அவர்களை எதுவும் தடுக்கவில்லை.
தங்களின் மணவிலக்குக்குச் சிறிது காலத்திற்குப் பிறகு, ஒருவருக்கொருவர் அறியாமலேயே, யாசுஹிரோவும் காயோகோவும் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிக்கத் தொடங்கினர். சிறிது காலம் கழித்து, இதைக் கற்றுக்கொண்டு, பைபிள் நியமங்களைப் பொருத்தி பிரயோகிப்பதன் மூலம் மற்றவரின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களை ஒவ்வொருவரும் காணமுடிந்தது. அவர்கள் மீண்டும் திருமணம் செய்துகொள்ள தீர்மானித்தனர். திருமணத்தைப்பற்றிய தெய்வீக நோக்குநிலையைக் கொண்டவர்களாய், இப்போது, அவர்கள் தங்களுடைய பிரச்னைகளைத் தீர்க்க தியாகங்களைச் செய்ய தயாராயிருக்கின்றனர்.
அவர்களுடைய இரண்டாம் திருமணத்தை வெற்றிகரமானதாக ஆக்கியது எது? திருமணத்தை ஏற்படுத்தினவருக்கான அவர்களுடைய மரியாதையே. (ஆதியாகமம் 2:18-24) மிகவும் அனுபவம் மிக்க திருமண ஆலோசகராகிய, யெகோவா தேவனால் கொடுக்கப்பட்ட வழிநடத்துதலே, திருமண மகிழ்ச்சிக்கான நுழைவாயிலைத் திறக்கும் திறவுகோலாகும்.
திருமண மகிழ்ச்சிக்கான திறவுகோல்
“உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே,” என்று இயேசு கிறிஸ்து சொன்னதை இரு துணைகளுமே பொருத்திப் பிரயோகிக்கும்போது விவாகப் பிரச்னைகள் தீர்க்கப்பட்டு, விவாகங்களும் காப்பாற்றப்படுகின்றன. (மத்தேயு 22:37-39) திருமண மகிழ்ச்சிக்கான திறவுகோல் இதிலேதான் இருக்கிறது. கணவன் மனைவி இருவரும் தங்களையோ அல்லது ஒருவருக்கொருவரையோ அன்புகூருமுன் அவர்கள் யெகோவாவில் அன்புகூரவேண்டும். இவ்வுறவுமுறையை ஒரு முப்புரி நூலுக்கு ஒப்பிடலாம். “ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்துநிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது.”—பிரசங்கி 4:12.
கடவுளுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரில் அன்புகூருவதாகும். ஆகவே மனித நடத்தையின் பேரிலான கடவுளுடைய நியமங்களையும் சட்டங்களையும் கணவனும் மனைவியும் தங்களுடைய வாழ்க்கையில் முதலாவதாக வைக்கவேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் ஒரு முப்புரி நூலை உண்டாக்குகின்றனர். அம்முப்புரிகளில் மிக உறுதியானது யெகோவாவுக்காக அவர்கள் கொண்டிருக்கும் அன்பாகும். மேலும், “அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல,” என்று 1 யோவான் 5:3 சொல்லுகிறது.
இது திருமணத்தை நிரந்தரமான ஓர் ஏற்பாடாகக் கருதுவதற்கு வழிநடத்துகிறது. (மல்கியா 2:16) அத்தகைய ஓர் அஸ்திபாரத்தைத் தங்கள் திருமணத்தில் கொண்டிருக்கும்போது, மணவிலக்குச் செய்துகொண்டு பின்வாங்குவதற்குப் பதிலாக, திருமண பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ளும்படி ஒரு தம்பதி அசைவிக்கப்படுவர்.
உங்களுடைய மிக நெருங்கிய அயலாருக்கு அன்பு காட்டுதல்
உங்களுடைய துணைவருடன் ஒரு நிரந்தர கட்டைக் கொண்டிருக்க வேண்டுமானால், உங்களுடைய மிக நெருங்கிய அயலாராகிய அவனுக்கான அல்லது அவளுக்கான உங்களுடைய அன்பைப் பேணி வளர்க்கவேண்டும். இந்த அன்பு தன்னலமற்றதாய் இருக்கவேண்டும். பைபிள் இந்த நியமத்தை எவ்வாறு உற்சாகப்படுத்துகிறது என்பதைக் கவனியுங்கள்: “நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து . . . ஒன்றையும் வாதினாலாவது வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.”—பிலிப்பியர் 2:2-4.
இந்தச் சுயநல உலகில் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது எதையும் செய்யாதிருப்பது கடினம் என்று வைத்துக்கொள்வோமே. அன்பு காட்டுவதற்கு உங்கள் துணை முன்வராதிருக்கும்போது, தன்னலமின்றியிருப்பது அதைவிட இன்னும் கடினமே; ஆனால் மனத்தாழ்மையைக் கொண்டிருப்பதனாலும், உங்களுடைய துணையை உங்களிலும் மேன்மையானவராக எண்ணுவதாலும், உங்களுடைய துணையின் அக்கறைகளைக் கருத்தில் கொள்வதை எளிதானதாகக் காண்பீர்கள். கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையையே கொண்டிருக்கும்படி பைபிள் நமக்கு அறிவுரை கூறுகிறது. அவர் வல்லமையுள்ள ஓர் ஆவியாய் இருந்தார்; ஆனால் அவர் “அடிமையின் ரூபமெடுத்து” ஒரு மனிதனானார். அதுமட்டுமல்லாமல், அவர் பூமியில் இருந்தபோது “மரணபரியந்தம் . . . தம்மைத்தாமே தாழ்த்தினார்.” இது அவரை வரவேற்காத மனிதருக்கும்கூட பயனளித்தது. (பிலிப்பியர் 2:5-8) இத்தகைய மனநிலையைக் காண்பித்ததால், இயேசு தம்மை எதிர்த்த அநேகரின் இருதயங்களையும் வென்றார். இயேசுவைப் பின்பற்றி அவருடைய சீஷர்களும் அதையே செய்தனர். (அப்போஸ்தலர் 6:7; 9:1, 2, 17, 18) உங்கள் விஷயத்திலும் இது நடக்கலாம். உங்களுடைய துணையை உங்களிலும் மேன்மையானவராய் எண்ணுவதன் மூலமும், உங்கள் துணையின் காரியங்களில் தனிப்பட்ட அக்கறை காட்ட கவனமாய் இருப்பதனாலும், அவனுடைய அல்லது அவளுடைய இருதயத்தை நீங்கள் படிப்படியாக வெல்லலாம்.
எனினும், உங்களுடைய துணையை மேன்மையானவராய் எண்ணுவதுதானே, கிழக்கத்திய நாடுகளில் இருந்துவந்ததைப்போல, கணவனின் கொடுங்கோன்மைக்கு ஒரு மனைவி சாத்வீகமாக அடங்கிப்போதலைத் தேவைப்படுத்துகிறதில்லை. கணவன் மனைவி இருவருமே ஒருவருக்காக ஒருவர் தியாகங்களைச் செய்ய தயாராயிருக்கும் காரியத்தில் ஒருவரையொருவர் மேன்மையானவரென்று எண்ணவேண்டும். ஒரு தம்பதி மனத்தாழ்மையோடு தங்களுடைய பிரச்னைகளைப் பேசி, ஒருவரிலொருவர் தன்னலமற்ற அக்கறையைப் பிரதிபலித்து, தெய்வீக அறிவுரையைப் பின்பற்றும்போது, தங்களுடைய பிரச்னைகளை நன்கு தீர்த்துக்கொள்ளும் நிலையிலிருக்கின்றனர். இப்பொழுது நாம் கடவுளுடைய அறிவுரைகளில் சிலவற்றைக் கவனிப்போம்.
“விவாகமஞ்சம் அசுசிப்படாததாய் இருப்பதாக”
திருமண ஏற்பாட்டைத் தொடங்கிவைத்தவரான, யெகோவா, ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையில் இருக்கவேண்டிய தகுதியான உறவைப்பற்றி ஓர் அமைப்புத் திட்ட வரைபடத்தை (blueprint) கொண்டுள்ளார். எல்லா காரணத்திற்காகவும் தன்னுடைய மனைவியை ஒருவன் மணவிலக்குச் செய்யலாமா என்று கேட்டபோது, இயேசு கிறிஸ்து சொன்னார்: “தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்.” மணவிலக்குக்கும் மறுமணத்திற்கும் ஒரே ஒரு காரணந்தான் உண்டு என்பதை அவர் மேலுமாக இவ்வாறு கூறியதன் மூலம் சுட்டிக்காட்டினார்: “எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்.”—மத்தேயு 19:3-9.
அன்பின்பேரில்கூட, திருமணத்திற்கு வெளியே பாலுறவுகொள்வது, இருதரப்பினருக்கும் அன்பான காரியமாக ஆகிவிடாது. மத்திய ஜப்பானில் உள்ள ஓர் ஆள் தன்னுடைய திருமணத்திற்கு வெளியே பல பெண்களிடத்தில் உறவுமுறைகளைக் கொண்டிருந்தான். அவனுடைய மனைவி சந்தேகப்படுபவளாகவும் ஏமாற்றப்பட்டவளாகவும் உணர்ந்தாள். அவர்களுடைய திருமணம் நெருக்கடியை எதிர்ப்பட்டது. பின்னர் அவனுடைய காதலிகளில் ஒருத்தி, தங்களுக்குள் இருக்கும் உறவை அவனுடைய மனைவிக்குத் தெரியப்படுத்தப்போவதாகச் சொல்லி தன்னை மணந்துகொள்ளும்படி கோரிய நாள் வந்தது. “அத்தகைய உறவுகள் ஒருவரையும் சந்தோஷப்படுத்தாது,” என்று மனவருத்தத்தோடு நினைவுபடுத்திப்பார்க்கிறான் அவன். உட்பட்டிருந்த ஒவ்வொருவரையும் புண்படுத்திய பிறகே அவனால் இந்தச் சேற்றிலிருந்து வெளிவர முடிந்தது. இந்த விஷயத்தின்பேரிலான பைபிள் தராதரம் மிகத் தெளிவாக இருக்கிறது. “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.” (எபிரெயர் 13:4) இந்தக் கட்டளையைக் கைக்கொள்வதன் மூலம், ஒருவர் பாலுறவு நோய்கள், திருமணத்தில் ஏற்படும் நெருக்கடி, கள்ளக்காதலின் அழுத்தம் போன்றவற்றைத் தவிர்க்கிறார்.
கணவன்மாரே, உங்கள் மனைவிமாரை நேசித்துப் பேணுங்கள்
குடும்பத்திற்குள் தலைமைத்துவத்தின் நியமமும்கூட கடவுளால் வரையறுக்கப்பட்டிருக்கிறது. “மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்,” என்று சொல்லுகிறது எபேசியர் 5:22, 23. இக்கட்டளையைப் பொருத்திப் பிரயோகிப்பது அவ்வளவு சுலபம் அல்ல. “அது மலைப்போன்ற ஒரு சவாலாக இருந்தது எனக்கு,” என ஒப்புக்கொள்கிறாள், இறுதித் தீர்மானங்கள் எடுப்பதற்கான தன் கணவனின் உரிமையைத் தன்வசம் பறித்து வைத்துக்கொண்டிருந்த ஷோகோ. அவனுடைய 20-களின் பிற்பகுதி வயதை அடைந்ததும் ஓர் ஆண் ஒரு வீட்டை வாங்கவேண்டும் என்று எண்ணி, தன் கணவனையும் முந்திக்கொண்டு அவள் பார்த்து வைத்திருந்த ஒரு வீட்டை வாங்கும்படி அவனைக் கட்டாயப்படுத்தினாள். இருப்பினும், அதில் உட்பட்டிருந்த பைபிள் நியமங்களை அவள் கற்றறிந்தபோது, தன்னுடைய கணவனை அவள் வித்தியாசப்பட்ட ஒரு வெளிச்சத்தில் பார்க்கத் தொடங்கினாள். மந்தமுள்ள, ஆடவரின் குணாதிசயங்கள் இல்லாத ஓர் ஆளைப்போலத் தோன்றிய அவனோ, தகுந்த நோக்குநிலையில் பார்த்தபோது, இப்போது பகுத்துணர்வுள்ளவனாகவும், மனத்தாழ்மையுள்ளவனாகவும், சாந்தமுள்ளவனாகவும் காணப்பட்டான்.
இந்த நியமம், கணவன்மார்கள் தாங்கள் கிறிஸ்து இயேசுவின் உயர்ந்த அதிகாரத்தின்கீழ் இருக்கின்றனர் என்று உணருவதைத் தேவைப்படுத்துகிறது. (1 கொரிந்தியர் 11:3) ஒரு கணவன் கிறிஸ்துவின் அதிகாரத்தின்கீழ் இருப்பதால், இயேசு தன்னுடைய சீஷர்களை நேசித்ததுபோல அவனும் தன்னுடைய மனைவியை நேசித்துப் பேணவேண்டியிருக்கிறான். (எபேசியர் 5:28-30) இவ்வாறு, ஒரு கிறிஸ்தவ கணவன் தீர்மானங்களை எடுக்குமுன் தன் மனைவியின் உணர்ச்சிகளையும், விருப்பங்களையும், குறைபாடுகளையும் யோசனையோடு மனதில் கொள்வான்.
“உப்பால் சாரமேறினதாய்”
ஹிசாகோ தன்னுடைய கணவனிடம் பேச்சுத் தொடர்புகொள்வதில் பிரச்னைகளைக் கொண்டிருந்தாள். எப்பொழுதெல்லாம் அவனிடம் எதைப்பற்றியாவது கலந்தாலோசிக்க வேண்டுமென்று முயற்சிக்கிறாளோ அப்பொழுதெல்லாம் அவன்: “உனக்கு எது இஷ்டமோ அதையே செய்,” என்று சொல்லி தட்டிக் கழித்துவிடுவான். ஹிசாகோ ஞாபகப்படுத்திப் பார்க்கிறாள்: “என்னுடைய பாகத்தில் கனிவில்லாததுதான் எங்களுக்குள் இருந்த பிரச்னைக்குக் காரணம் என்று நினைக்கிறேன். நான் சிறிது உணர்ச்சிவேகக்குறைவுடன் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.” இன்று அவளும் அவளுடைய கணவனும் முகத்தில் புன்முறுவலோடு காரியங்களைக் கலந்தாலோசிக்க முடிகிறது. “அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக,” என்ற இந்த அறிவுரையை ஹிசாகோ பொருத்திப் பிரயோகித்ததிலிருந்து இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. (கொலோசெயர் 4:6) உப்பால் சாரமேற்றப்பட்ட உணவு அதிக சுவையாக இருப்பதுபோல, நன்கு யோசனையோடு பரிவுடன் சொல்லப்பட்ட வார்த்தைகளை ஏற்றுக்கொள்வது எளிதாயிருக்கிறது. (நீதிமொழிகள் 15:1) உண்மையிலேயே, வெறுமனே நீங்கள் எவ்வகையில் பேசுகிறீர்கள் என்பதில் கவனமாயிருப்பதால் மட்டுமே, அடிக்கடி திருமண முரண்பாடுகளை நீங்கள் தவிர்க்கலாம்.
ஆம், யெகோவா தேவனை நேசித்து அவருடைய நியமங்களுக்கு மரியாதை செலுத்துவது உண்மையிலேயே பலனளிக்கிறது. யெகோவாவுக்கான அன்பு, திருமணம் நிரந்தரமான ஒரு கட்டு எனக் கருதும்படி உங்களைத் தூண்டுவித்து, அதைப் பாதுகாக்கும்படி தீர்மானமாய் இருப்பதற்கு உங்களுக்கு உதவுகிறது. அவை எவ்வளவு பெரிய மலைபோலத் தோன்றினாலும், உங்கள் திருமண முரண்பாடுகளைக் கையாண்டு, உங்களுடைய பிரச்னைகளைத் தீர்த்துவைக்க உதவக்கூடிய தலைசிறந்த வழிநடத்துதல்களைக் கடவுள் கொடுத்திருக்கிறார். இல்லை, பெரும்பாலானோருடைய விஷயங்களில் மணவிலக்கு அல்ல, ஆனால் பைபிள் நியமங்களைப் பொருத்திப் பிரயோகித்தலே மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கைக்கு நுழைவாயிலாக இருந்திருக்கிறது. யெகோவாவுக்கான உங்களது அன்பை வளர்ப்பதன் மூலம் அந்த நுழைவாயிலை நீங்கள் திறக்கலாம். மிகவும் நம்பகமான திருமண வழிகாட்டி புத்தகமாகிய பைபிளிலிருந்து அவருடைய அறிவுரையைப் பற்றி அதிகத்தை நீங்கள் ஏன் கற்றுக்கொள்ளக்கூடாது? (g93 7/8)
[பக்கம் 9-ன் பெட்டி]
மணவிலக்கு ஒரு தெரிவாக இருக்கும்போது
பைபிள் வேசித்தனத்தின் அடிப்படையில் மட்டும் மணவிலக்குக்கும் மறுமணத்திற்கும் இடமளிக்கிறபோதிலும், அந்த விபசாரம் தானாகவே கணவன் மனைவிக்கு இடையே உள்ள உறவை முடிவுக்குக் கொண்டுவருவதில்லை. குற்றம் செய்யாத துணை மணவிலக்குச் செய்துகொள்ளவோ செய்துகொள்ளாமல் இருக்கவோ தெரிவைக் கொண்டிருக்கிறார்.—மத்தேயு 19:9.
யாசுகோ இப்படிப்பட்ட தீர்மானத்தையே எதிர்ப்பட்டாள். அவளுடைய கணவன் தன்னுடைய காதலியோடு மற்றொரு வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருந்தான். அவளுடைய கணவனின் தாய், “என் மகன் இப்படி நடந்துகொள்வதெற்கெல்லாம் நீ தான் காரணம்,” என்று யாசுகோ மீது பழிசுமத்தினாள். யாசுகோ இரவும் பகலும் அழுதுகொண்டிருந்தாள். அவளுக்கு அநேகர் புத்தி சொன்னார்களே தவிர அவளுடைய கணவனின் விவகாரங்களை யாருமே கண்டனம் செய்யவில்லை. பின்னர், பைபிளைப் படிக்கத் தொடங்கியிருந்த அவளுடைய சொந்தத் தாய், “விபசாரம் செய்வது தவறு என்று பைபிளில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது,” என்று அவளிடம் சொன்னாள். (1 கொரிந்தியர் 6:9) இன்னும் இந்த உலகில் நன்மை தீமைக்கான ஒரு தராதரம் இருக்கிறதென்பதை அறிந்து யாசுகோ மனதில் மிக இலகுவாக உணர்ந்தாள்.
இப்பொழுது யாசுகோ ஒரு தெரிவைக் கொண்டிருந்தாள். தன் கணவனை மணவிலக்குச் செய்துகொள்ள அவள் நினைத்திருந்தபோதிலும், யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்த பின்னர் தானும் தன்னுடைய பாகத்தைச் சரிவர செய்யவில்லை என்பதை அவளால் காணமுடிந்தது. எனவே, தன்னுடைய பிரச்னைகளைத் தீர்ப்பதில் பைபிள் நியமங்கள் பலனளிக்கின்றனவா என்று பரிசோதிக்க தீர்மானித்தாள். அவற்றைப் பொருத்திப் பிரயோகிக்கத் தொடங்கினாள். (எபேசியர் 5:21-23) “அது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. மீண்டும் மீண்டும் நான் தவறிக்கொண்டிருந்தேன். அநேகமுறை யெகோவாவிடம் நான் கண்ணீரோடே ஜெபித்திருக்கிறேன்,” அவள் ஞாபகப்படுத்திப் பார்க்கிறாள். அவள் மாறியதுபோலவே, அவளுடைய கணவனும் படிப்படியாக மாறினான். சுமார் ஐந்து வருடங்கள் கழித்து, அவளுடைய கணவன் அவனுடைய காதலியோடிருந்த எல்லா தொடர்புகளையும் அறுத்துவிட்டான். “கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவது நிச்சயமாகவே பலனளிக்கிறது என்பதில் எனக்கு நல்ல நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது,” என்று கூறி முடிக்கிறாள் யாசுகோ.
[பக்கம் 10-ன் படம்]
பைபிள் நியமங்களுக்கு மரியாதைக் காட்டுவது ஒரு தம்பதி எளிதில் பேச்சுத் தொடர்புகொள்ள உதவும்