மூக்குக்கண்ணாடியை ஒரு நோட்டமிடுதல்
பிரிட்டனிலுள்ள விழித்தெழு! நிருபர்
இதை நீங்கள் மூக்குக்கண்ணாடியின் உதவியால் படித்துக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் தனித்தவரல்ல. உதாரணமாக, பிரிட்டிஷ் மக்கள்தொகையில் இப்பொழுது சுமார் 60 சதவீதத்தினர் மூக்குக்கண்ணாடிகளை அணிகின்றனர்.
உங்களுடைய நண்பர்கள் மூக்குக்கண்ணாடியைப்பற்றி ஏதாவது கருத்துத் தெரிவிக்கிறார்களென்றால், அது உங்களுடைய ஃப்ரேம் பாணியை மாற்றிவிட்டீர்கள் என்பதனாலோ அல்லது மூக்குக்கண்ணாடியை இனி அணியப்போவதேயில்லை என்று தீர்மானித்ததனாலோ இருக்கலாம். அந்தளவுக்குக் கண்ணாடி அணிவது மிகவும் பொதுவானதாகிவிட்டது. அது மூக்கில் கீழ்நோக்கி நழுவி வந்தால் அல்லது அதில் நீராவி படிந்தாலொழிய, மற்றபடி நம்மை அறியாமலேயே அதை முகத்தில் மாட்டி கழற்றுமளவுக்கு நாம் கண்ணாடி அணிவதைப் பழகிவிட்டிருக்கிறோம்.
கண்ணாடி அணியும் பெரும்பாலானோர் நவீன பாணியிலுள்ள ஃப்ரேம்களைவிட 20/20 பார்வைதூரம் அளவுகளை (20/20 vision) விரும்புகின்றனர். மூக்குக்கண்ணாடி ஒரு தொல்லையாகக்கூட இருக்கலாம். இருந்தபோதிலும் கண்பார்வையில் குறைபாடுள்ளவர்களுக்கு இப்பொழுது கிடைக்கிற உதவியைப் போன்ற அதிக உதவி இதற்கு முன் ஒருபோதும் கிடைக்கவில்லை.
முற்கால பார்வை உதவிகள்
ரோமப் பேரரசர் நீரோ, க்ளேடியடோரியல் என்ற சண்டை காட்சிகளைத் தெளிவாகப் பார்ப்பதற்கு மரகதத்தால் (emerald) செய்யப்பட்ட கண்ணாடி வில்லையை வைத்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. மங்கிவரும் பார்வையை முன்னேற்ற அது விலையுயர்ந்த ஆனால் திறனற்ற ஒரு வழியாகும். இதேபோன்று பண்டைக் காலங்களில் படிகக் கண்ணாடி (crystal glass) படிகக்கல் (quartz) செவ்வந்திக்கல் (amethyst) மணிக்கல் (beryl) புஷ்பராகம் (topaz) போன்றவற்றிலிருந்தும் கண்ணாடி வில்லைகள் செய்யப்பட்டன. எனினும், கிட்டத்தட்ட 1268-ம் வருடத்தின்போது, ஆங்கிலேய துறவி ராஜர் பேகன், கண்ணாடி கோளத்தின் ஒரு பகுதி எவ்வாறு படிப்பதற்கான ஓர் உதவியாக உபயோகிக்கப்படலாம் என்று விவரித்தார். கிட்டத்தட்ட இதே சமயத்தில்தான், முதல் மூக்குக்கண்ணாடி—மெருகேற்றப்படாத கண்ணாடி வில்லைகள் பொருத்தப்பட்ட ஃப்ரேம்—தோன்ற தொடங்கியது.
இதை முதலில் கண்டுபிடித்தது யார்—இத்தாலியர்களா அல்லது சீனர்களா? இந்தக் கண்டுபிடிப்பு இவ்விரு தேசங்களிலும் ஏறக்குறைய ஒரே சமயத்தில் உருவானதாகத் தோன்றுவதன் காரணமாக, இது விவாதத்திற்குரிய ஒரு விஷயமாக இருக்கிறது. ஒரு பக்கத்தில், இத்தாலியின் ஃப்ளாரென்ஸில் உள்ள ஒரு கல்லறை இந்த வாசகத்தைத் தாங்கியிருக்கிறது: “ஃப்ளாரென்ஸின் ஆர்மாடியின் ஸால்வினோ டார்மாடோ இங்கே கிடக்கிறார். மூக்குக்கண்ணாடியைக் கண்டுபிடித்தவர். கடவுளே இவருடைய பாவங்களை மன்னியும்.” இவர் எப்போது மரித்தார்—1285-லா, 1317-லா அல்லது 1340-லா—என்று யாருக்கும் நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனால் மறுபட்சத்தில் மகா இத்தாலிய ஆய்வுப்பயணி, மார்க்கோ போலோ, 13-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சீனாவில் முதன்முதல் வந்திறங்கியபோது, அங்குள்ள அநேக மக்கள் மூக்குக்கண்ணாடிகளை அணிந்திருந்ததைப் பார்த்ததாக ஞாபகப்படுத்திப் பார்த்தார். உண்மையிலேயே, பொ.ச. 500-லிருந்தே சீனாவில் மூக்குக்கண்ணாடிகள் அணியப்பட்டதாகப் புராணக்கதைகள் பதிவுகளைக் கொண்டிருக்கின்றன.
எவ்வளவுதான் பிற்பட்டிருந்தாலும், 16-ம் நூற்றாண்டிற்குள், வெனிஸிலும், நியூரம்பர்கிலும், மற்ற ஐரோப்பிய மையங்களிலும் மூக்குக்கண்ணாடி வியாபாரம் செழித்தோங்கிக்கொண்டிருந்தது. மூக்குக்கண்ணாடிகள் தெரு வியாபாரிகளாலும் பல நகரங்களில் விற்கப்படும் மிகத் தேவைப்படுகிற அணிகலன்களானது. ஆனால் என்னே பரிதாபம், அந்தத் தெரு வியாபாரிகள் தாங்கள் விற்பனை செய்த பொருளை விற்கும்போது எந்தப் பார்வை பரிசோதனையும் (vision test) நடத்தவில்லை. ஆகவே அதை வாங்குபவருடைய தோற்றத்தை முன்னேற்றுவித்திருக்கலாம், ஆனால் நிச்சயமாக அவருடைய பார்வையை முன்னேற்றுவித்திருக்கவேண்டும் என்பதல்ல!
இன்றைய மூக்குக்கண்ணாடிகள்
மூக்குக்கண்ணாடிகள் படிப்படியாக முன்னேறின. அவை ரிப்பன்களால் காதோடோ அல்லது ஸ்ப்ரிங் க்ளிப்பினால் மூக்கோடோ கட்டப்பட்டிருந்தன. பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தின்போது யாரோ ஒருவர் காதோடு இணைத்துக்கொள்ளும் உறுதியான சட்டங்கள் மூக்குக்கண்ணாடிகளைத் தாங்கிநிற்கும் ஓர் அமைப்பைப்பற்றிய கருத்தைத் தோற்றுவித்தார். இதுவே இன்றும் மிக பரவலாகப் பயன்படுத்தப்படும் முறையாக உள்ளது.
கண்ணாடி வில்லை உற்பத்தியும் திடீர் முன்னேற்றத்தைக் கண்டது. உயர்ந்த ரக கண் கண்ணாடிகள் இறுதியாக ஒளி ஊடுருவும் படிகப்பொருட்களை மாற்றீடு செய்தன. சர் ஐசக் நியூட்டன் 17-ம் நூற்றாண்டில் பட்டகங்களைக்கொண்டு நடத்திய சோதனைகள் ஒளி விலகலைப்பற்றிய புரிந்துகொள்ளுதலுக்கு வழிநடத்தின. இதன் காரணமாக அறிவியல் துல்லியத்தோடு துல்லிய கண்ணாடி வில்லைகளைச் செய்யமுடியும்.
அமெரிக்க அரசியல்மேதை பெஞ்சமின் ஃப்ராங்க்ளின், 1784-ல், தன்னுடைய மூக்குக்கண்ணாடியோடு தனக்கிருந்த பிரச்னைக்கு ஒரு புத்திக்கூர்மையுள்ள பரிகாரத்தைக் கண்டுபிடித்தார். அவர் படிக்க உபயோகித்த கண்ணாடி அவருடைய தூரப் பார்வையைப் பாதித்தது, அவருடைய தூரப் பார்வைக்கான கண்ணாடி அவர் படிப்பதற்குப் பொருத்தமாக இல்லாமலிருந்தது. எனவே இரண்டு வித்தியாசமான கண்ணாடிகளையும் அடிக்கடி மாற்றிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, இவ்விரண்டு வகை கண்ணாடி வில்லைகளையும் ஒரே மூக்குக்கண்ணாடியில் ஏன் பொருத்தக்கூடாது என்று அவர் யோசித்துப் பார்த்தார். இவ்வாறு இரு குவிய கண்ணாடிகள் (bifocals) கண்டுபிடிக்கப்பட்டன. இருப்பினும், அவற்றை மிகவும் திறம்பட்ட வகையில் தயாரிக்கும் முறையை உருவாக்குமுன் மற்றொரு நூறு ஆண்டுகள் கடந்துபோயின.
விசேஷித்த தேவைகளைப் பூர்த்திசெய்ய வித்தியாச வகை கண் கண்ணாடிகளும் கிடைக்கின்றன. அடுக்காக வைத்தமைக்கப்பட்ட அல்லது வலிவுள்ளதாக்கப்பட்ட கண்ணாடி வில்லைகள் பாதுகாப்புக் கண்ணாடிகளில் பொருத்தப்படலாம். இதனால் பறந்துவரும் பொருட்களிலிருந்து பணியாட்களின் கண்கள் பாதுகாக்கப்படுகின்றன. சில கண்ணாடி வில்லைகள் ஃபோட்டோசென்ஸிடிவ் வில்லைகளாக இருக்கின்றன: பிரகாசமான சூரிய ஒளி படும்போது அவை இருளடைகின்றன. நிழலில் அல்லது அறைகளுக்குள் இருக்கும்போதோ மீண்டும் அவை தெளிவடைகின்றன. இன்னும் மற்றவை பிளாஸ்டிக் வில்லைகள் ஆகும். இவை கண்ணாடியின் எடையைப் பேரளவில் குறைத்துத் தடிப்பு அதிகமுள்ள கண்ணாடிகளை அணிபவர்கள் இலகுவாக உணரும்படி செய்கின்றன.
‘எனக்கா? மூக்குக்கண்ணாடியா?’
ஒருவேளை, தெளிவான பார்வை கிடைக்கப்பெற்ற ஒருசில பாக்கியவான்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். ஒருவேளை நீங்கள் வெகுகாலம் அவ்வாறு இருக்கமுடியாது.
‘என்றாவது ஒரு நாள் நான் கண்ணாடி அணியவேண்டிவரலாம் என்று சொல்கிறீர்களா?’ என்று கேட்கிறீர்கள். ஆம், இப்பொழுது உங்கள் பார்வை தெட்டத்தெளிவாக இருந்தாலும், என்றாவது ஒரு நாள் நீங்கள் கண்ணாடி அணியவேண்டிய வாய்ப்பிருக்கிறது. ஏன்? ஒரு காரணமானது, நீங்கள் 45 வயதையோ அல்லது அதற்கு மேற்பட்ட வயதையோ அடையும்போது வெள்ளெழுத்தின் (presbyopia) பாதிப்பை ஒருவேளை உணருவீர்கள். அந்த வார்த்தையைக் கேட்டு இப்பொழுதே பயந்துவிடாதீர்கள். அதனுடைய அர்த்தமெல்லாம் உங்கள் கண்களில் உள்ள கண்மணிகள் (lenses) நீங்கள் இளமையிலிருந்தபோது குவிமையத்தை (focus) அண்மையிலிருந்து தொலைவிற்குத் திறம்பட்டவகையில் மாற்றியதுபோல மாற்றாது என்பதே. மூக்குக்கண்ணாடி வெறுமனே வயோதிபத்தின் தண்டனைகளில் ஒன்று.
உங்கள் பெற்றோர் கண்ணாடி அணிந்திருக்கிறார்களா? பார்வையில் ஏற்படும் பிரச்னைகள் பரம்பரையாக வருகின்றன என அநேகர் நினைக்கின்றனர். அப்படியானால், என்றாவது ஒரு நாள் நீங்கள் கண்ணாடி அணியவேண்டியிருப்பது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருக்கலாம்.
எனினும், காலப்போக்கில், வயது, ஜீன்கள், பழக்கவழக்கங்கள் போன்றவை கேடுண்டாக்கும் பாதிப்பில் விளைவடைந்து, தூரப் பார்வை (hyperopia), அண்மைப் பார்வை (myopia), சிதறல் பார்வை (கருவிழி ஒழுங்கற்று வளைந்திருப்பது) (astigmatism), மாறுகண் (strabismus) போன்ற பொதுவான கண் நோய்களை உண்டாக்குகின்றன. மேற்கூறிய ஏதாவதொன்றால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் (விழிப்பார்வைத் தேர்வாய்வாளர் [optometrist] போன்ற) கண் மருத்துவர் ஒருவரிடம் சென்றுவருவது நல்லது. அதற்குப் பிறகு வெறுமனே உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் ஒரு ஃப்ரேமைத் தேர்ந்தெடுப்பதுதான் பாக்கி.—பெட்டியைப் பார்க்கவும்.
உங்கள் மூக்குக்கண்ணாடிகளைப் பராமரித்தல்
மூக்குக்கண்ணாடிகள் மிகவும் விலையுயர்ந்தவையாய் இருக்கக்கூடும். மேலும் உங்கள் அன்றாட வழக்க வேலைகளைச் செய்வதற்கு நீங்கள் அவற்றைச் சார்ந்திருக்கலாம். ஆகவே, அவற்றைத் தகுந்தமுறையில் பராமரியுங்கள். அவற்றை நீங்கள் கழற்றும்போது அதன் வில்லைகள் கீழ்நோக்கியிருக்கும்படி ஒருபோதும் கீழே வைக்காதீர்கள். மேலும் ஆட்கள் தவறி அதன்மேல் உட்காரக்கூடிய அல்லது மிதிக்கக்கூடிய இடங்களில் வைக்காமல் இருக்க நிச்சயமாய் இருங்கள். மூக்குக்கண்ணாடிகள் எளிதில் அழுக்கடைந்துவிடக்கூடும். எனவே அவற்றின் வில்லைகள் ஒரு மிருதுவான உலர்ந்த துணியால் தினமும் பாலிஷ் செய்யப்பட்டு, அதன் ஃப்ரேம் வெதுவெதுப்பான சோப்புத் தண்ணீரால் அவ்வப்போது கழுவப்படவேண்டும். கண்ணாடி அணியும் சிறு குழந்தைகள் உங்களுக்கு இருப்பார்களேயானால், அவர்களுடைய கண்ணாடியை மிகவும் அடிக்கடி சுத்தப்படுத்தவேண்டிய தேவை இருப்பதை நீங்கள் ஒருவேளை காண்பீர்கள்.
உங்களுடைய கண்ணாடியின் இணைப்புகளெல்லாம் தளர்ந்துபோய்ச் சரியாகப் பொருந்தாமல் இருக்குமேயானால் என்ன? நீங்களே சரிசெய்து அதை மேலும் மோசமாக்கும் வாய்ப்பை ஏற்படுத்துவதைவிட கண்ணாடி கடைகளில் கொடுத்துச் சரிசெய்துகொள்ளுங்கள்.
தகுந்த முறையில் பராமரிப்பீர்களேயானால் உங்களுடைய கண்ணாடி நன்கு உழைக்கும். அது அவ்வப்போது ஒரு சிறு தொல்லையாக இருக்கலாம், ஆனால் அது உங்கள் பார்வையைத் தெளிவாக்கும்—மேலும் உங்களுடைய தோற்றத்தையுங்கூட முன்னேற்றும். நிச்சயமாகவே அந்தச் சிறு தொல்லையைப் பொறுத்துக்கொள்வது தகுதியானதல்லவா? (g93 7/8)
[பக்கம் 14-ன் பெட்டி]
மூக்குக்கண்ணாடிகளும் நவீன பாணியும்
கண்ணாடி அணியவேண்டும் என்று சொல்லும்போது ‘மூக்குக்கண்ணாடி என் தோற்றத்தைக் கெடுத்துவிடும்!’ என்று அநேகர் கூறுகின்றனர். எனினும், மூக்குக்கண்ணாடி பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய ஓர் அலங்கரிப்புப் பொருளாகவுங்கூட ஆகலாம். அந்தளவுக்கு நவீன பாணி வடிவமைப்பாளர்கள் கண்ணாடிகளை வடிவமைப்பதில் தங்களுடைய திறமைகளை மிகச் சிறந்தவகையில் பயன்படுத்தியுள்ளனர்.
அதற்கு ஒரு காரணம் என்னவென்றால், ஃப்ரேம் தயாரிப்பாளர்கள் புதிய இலகுவான, நீடித்துழைக்கக்கூடிய பிளாஸ்டிக்கை நன்கு உபயோகித்து, நிறத்திலும் அளவிலும் பெரும்பாலும் எல்லையற்ற தெரிவுகளை உண்டாக்கியிருக்கின்றனர். அதோடுகூட, உயர்ந்த ஒளிவிலகல் விகித எண்ணையுடைய கண்ணாடியை (high-refractive-index glass) பயன்படுத்தி அதிகம் ஒளிவிலகலால் உருப்பெருக்கும் கண்ணாடி வில்லைகளையும் (strong-prescription lenses) முடிந்தளவு மிகவும் மெல்லியதாக உண்டாக்குகின்றனர். ஒளி எதிரொளிப்பைத் தடுக்கும் ஒரு படலத்தை (antireflection film) அதன்மீது ஒட்டும்போது கண்ணாடி வில்லைகள் பெரும்பாலும் காணமுடியாததாய் ஆகின்றன.
நீங்கள் நவீன பாணியைப்பற்றிய உணர்வுள்ளவரானால், மூக்குக்கண்ணாடி ஃப்ரேம்களைத் துணி அலமாரியின் துணைப்பொருட்களாகத் தெரிந்தெடுக்கலாம். உங்கள் முகத்தின் வடிவத்திற்கு ஏற்றவாறு, முகத்தின் நல்ல அம்சங்களை நன்கு எடுத்துக்காட்டி அவ்வளவு நல்லதல்லாத அம்சங்களை மறைக்கக்கூடிய ஃப்ரேமைத் தெரிந்தெடுங்கள் என்று கண்கண்ணாடி தகவல் கழகத்தினரால் (பிரிட்டன்) தயாரிக்கப்பட்ட ஒரு கையேடு சிபாரிசு செய்கிறது. உதாரணமாக, உங்கள் முகம் மெலிந்து காணப்பட விரும்புகிறீர்களா? அப்படியானால், இடை இணைப்புக் கம்பிப்பகுதியில் (bridge) ஆழ்ந்தும் விளிம்புப்பகுதியை நோக்கிக் குறைந்துகொண்டும்போகும் நிறத்தைக்கொண்ட ஃப்ரேமைத் தேர்ந்தெடுங்கள் என்று அந்தக் கையேடு கூறுகிறது. உங்கள் கண்கள் நெருக்கமாக அமைக்கப்பட்டிருக்கிறதா? அப்படியானால் இடை இணைப்புக் கம்பிப்பகுதியில் நிறமற்றும் விளிம்புகளில் ஆழ்ந்த நிறத்தையுமுடைய ஃப்ரேமைத் தேர்ந்தெடுங்கள். பல பாணியிலுள்ள கண்ணாடிகளையும் அணிந்து பார்த்து, வித்தியாசமான விளைவுகளைச் சோதித்துப் பாருங்கள். ஓர் உண்மையான அபிப்பிராயத்தைக் கொடுப்பதற்கு நம்பகமான ஒரு நல்ல நண்பனை உங்களோடு அழைத்துச் செல்லுவது உதவியாய் இருக்கிறது.
மூக்குக்கண்ணாடி உங்களுக்குத் தொல்லையாயிருப்பதாய்க் கண்டீர்களேயானால், விழியொட்டிக் கண்ணாடிகளை அணிவதைப்பற்றி யோசியுங்கள். அநேக மக்கள் அவற்றை வசதியாக நாள் முழுவதும் அணிந்துகொள்ளலாம்.