உலகத்தைக் கவனித்தல்
உடற்பயிற்சியும் உறக்கமும்
“வயதானோருக்கு உடற்பயிற்சி செய்வதே நன்கு உறங்குவதற்கான பரிகாரமாக இருக்கலாம்,” என்று ஆர்த்ரைட்டீஸ் டுடே பத்திரிகை அறிக்கை செய்கிறது. அ.ஐ.மா.-வின் வட கரோலினாவில் சமீபத்தில் நடத்திய ஓர் ஆராய்ச்சியில், 60-லிருந்து 72 வயதுவரையுள்ள 24 ஆண்களைக்கொண்ட ஒரு தொகுதி இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. குறைந்தது ஒரு வருட காலத்திற்காவது, ஒரு பிரிவினர் ஒரு வாரத்திற்கு மூன்று முறையோ அல்லது அதற்கு அதிக முறைகளோ மும்முரமாக உடற்பயிற்சி செய்தனர். மற்றப் பிரிவினரோ ஒழுங்கற்று குறைந்தளவு உடற்பயிற்சி செய்தனர். ஒழுங்காகவும் மும்முரமாகவும் உடற்பயிற்சி செய்தவர்கள் ஒழுங்கற்றுக் குறைந்தளவு உடற்பயிற்சி செய்தவர்களைவிட சராசரி இருமடங்கு விரைவில் உறங்க ஆரம்பித்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் உடற்பயிற்சி செய்த நாட்களில் பரிசோதிக்கப்பட்டிருந்தாலும், செய்யாத நாட்களில் பரிசோதிக்கப்பட்டிருந்தாலும், இதுவே உண்மையாயிருந்தது. அந்தப் பத்திரிகை மேலும் கூறுகிறது: “இரவில் அவர்கள் உறங்கிய பிறகு விழித்திருந்த நேரமும் குறைவாகவே இருந்தது.”
இளமை குடிகாரர்கள்
“பிரிட்டனில் கிட்டத்தட்ட 90,000 பிள்ளைகள் மிதமிஞ்சி குடிப்பவர்களாகக் கருதப்படுகின்றனர்,” என்பதாக லண்டனின் தி ஸண்டே டைம்ஸ் அறிக்கை செய்கிறது. பிரிட்டிஷ் அரசாங்கம் ஆண்களுக்கு ஒரு வாரத்திற்கு அதிகபட்சம் 21 யூனிட்டுகள் என்றும் பெண்களுக்கு அதிகபட்சம் 14 யூனிட்டுகள் என்றும் குடிக்கும் ஆல்கஹாலின் அளவை நிர்ணயிக்கிறது. ஒரு யூனிட் என்பது ஒரு கிளாஸ் வைன் அல்லது ஓர் அளவு அதிக வெறியூட்டும் மது அல்லது அரைக்கால் காலனில் பாதியளவு பீர் ஆகும். பதினைந்து வயது பையன்களில் 11.5 சதவீதத்தினர் வயதுவந்தவர்களுக்குச் சிபாரிசுசெய்யப்பட்ட வார வரம்பைவிட அதிகம் குடித்தனர் என பிரிட்டனின் 18,000 பள்ளிப் பிள்ளைகளை வைத்து நடத்திய சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று கண்டுபிடித்தது. பெண் பிள்ளைகள் மத்தியில், 14 மற்றும் 15 வயதினரில் 20-ல் ஒருவர், வயதுவந்த பெண்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வரம்பைவிட அதிகத்தைக் குடித்துக்கொண்டிருந்ததாக ஒப்புக்கொண்டனர். கவலையை உண்டாக்கும் இந்தப் புள்ளிவிவரங்கள் பிரச்னையின் உண்மையான அளவைக் குறைவாக மதிப்பிடுகின்றன என்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
ஆபத்தாக வாகனம் ஓட்டுதல்
சாலை வரைபடங்களைப் பார்த்தல், ஒலிப்பதிவு நாடாக்களிடம் பேசிக்கொண்டிருத்தல், நடமாடும் தொலைபேசிகளை உபயோகித்தல், பெண்கள் தங்களுடைய காலுறையை மாற்றுதல். இவையெல்லாம், ஒரு தென்னாப்பிரிக்க செய்தித்தாள் தி ஸ்டார் கூறுகிறபடி, வாகனம் ஓட்டும்போது, சிலசமயங்களில் மணிக்கு 100 கிலோமீட்டருக்கும் அதிக வேகத்தில் ஓட்டும்போது, மக்கள் செய்யும் சில காரியங்கள். ஓட்டும்போது மக்கள் ஒரு மெல்லிய நூலைக்கொண்டு இரண்டு கைகளாலும் தங்களுடைய பற்களைச் சுத்தம் செய்வதை (flossing) அடிக்கடி காண்பதாகப் பாதுகாப்பு அலுவலர் ஒருவர் குறிப்பிடுகிறார்! ஓட்டுநர்கள் தங்களுடைய பற்களைத் துலக்கி கழுவுவதும்கூட கவனிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பெண் தன்னுடைய மகனைப் பள்ளிக்குக் கொண்டுசெல்லும்போது அவனுக்கு முடிவெட்டிவிட்டாள். ஒரு தாய் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டிக்கொண்டிருக்கும்போது தன்னுடைய குழந்தையின் துடைப்புக்குட்டையை (napkin) மாற்றிவிடுவது கவனிக்கப்பட்டிருக்கிறது. வாகனம் ஓட்டுபவர்கள் ஏன் தங்களை இவ்வளவு ஆபத்தில் வைத்துக்கொள்கின்றனர்? நெடுந்தூரங்களும், சாலைப் போக்குவரத்து நெருக்கடியும் அவர்கள் காரில் இருக்கும் நேரத்தை “நன்கு” பயன்படுத்திக்கொள்ள அவர்களைத் தூண்டுவிக்கலாம் என்று ஓர் அதிகாரி சொன்னார். இருப்பினும் இத்தகைய கவனத்திருப்பங்கள் ஆபத்தான விபத்துக்களில் விளைவடையும் என அவர் சுட்டிக்காட்டினார்.
அறுவைசிகிச்சை பிறப்புகள் பாதுகாப்பானவையா?
அறுவைசிகிச்சை மூலம் பிள்ளைபெறுவது பாதுகாப்பானது மற்றும் வேதனை குறைந்தது என்ற நம்பிக்கையில் அநேக பெண்கள் அறுவைசிகிச்சை மூலம் பிள்ளைபெறுவதைத் தெரிந்தெடுக்கின்றனர். சாதாரண “பிறப்பு பொதுவாக சராசரி 8-லிருந்து 12 மணிநேரம் எடுக்கிறது, அது நடைபெறுவதற்குக் குறிப்பிட்ட தேதி கிடையாது. ஆனால் அறுவைசிகிச்சையோ மிஞ்சினால் ஒரு மணிநேரமே எடுக்கிறது, இதற்கான குறிப்பிட்ட தேதியைத் திட்டமிடலாம்” என்பதனால் அநேக மருத்துவர்களும் அறுவைசிகிச்சை முறை பிள்ளைபேற்றையே விரும்புகின்றனர் என்று ஜார்னல் டோ ப்ராஸில் கூறுகிறது. எனினும், “அறுவைசிகிச்சை முறையில் பிள்ளைபெறும் பெண்கள் மத்தியில், அறுவையினால் ஏற்படும் நோய்த்தாக்குதலினாலும், இரத்தக்கசிவினாலும் விளையும் மரணத்தின் எண்ணிக்கை மிக அதிகம்,” என்று மகப்பேறு மருத்துவர் ஃபெர்னான்டோ எஸ்டெலிட லின்ஸ் கூறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளார். “கருப்பை வாய்க்குழாய் மூலம் பிள்ளை பிறப்பினால்” ஏற்படும் மகப்பேறு மரணம் “லட்சத்திற்கு 43; அறுவைசிகிச்சை மூலமோ இது லட்சத்திற்கு 95 ஆக இருந்தது,” என்பதாக பிரேஸிலில் நடத்திய ஆராய்ச்சி காண்பித்தது. (g93 6/22)
ஒழுங்கமைக்கப்பட்ட மதத்தைப் பருவவயதினர் புறக்கணிக்கின்றனர்
கனடா நாட்டுப் பருவவயதினர் மதத் தலைவர்களுக்குக் கவலையைத் தெரிவிக்கும் ஒரு செய்தியை அனுப்புகின்றனர்: குருவர்க்கம் கடவுளுடைய வார்த்தையின் போதகர்களாக இருக்கத் தவறிவிட்டது. எப்பொழுதிருந்ததையும்விட குறைந்த எண்ணிக்கையுடைய பருவவயதினரே ஒழுங்கமைக்கப்பட்ட மதத்தை ஆதரிக்கின்றனர் என சமீபத்தில் நடத்திய ஒரு தேசிய சுற்றாய்வு வெளிப்படுத்துகிறது. ஒரு மதப் பிரிவோடுள்ள ஈடுபாடு தங்களுடைய வாழ்க்கையில் முக்கியம் என 10 சதவீதத்தினர் மட்டுமே கருதுகின்றனர். எனினும், “80 சதவீதத்திற்கும் அதிகமானோர் பிறப்பு, திருமணம், இறப்புப் போன்றவற்றோடு சம்பந்தப்பட்ட ஆசாரங்களுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட மதத்திற்குத் திரும்புகின்றனர்,” என தி டோரன்டோ ஸ்டார் அறிக்கை செய்கிறது. ஆர்வமூட்டும்வகையில், 80 சதவீதத்தினர் கடவுள் இருக்கிறார் என்றும், 60 சதவீதத்தினர் மரணத்திற்குப் பிறகு வாழ்வுண்டு என்றும் நம்புகின்றனர். “பருவவயதினர் குருவர்க்கத்தைவிட, சகநண்பர்களாலும், செய்தித்துறை, திரைப்படங்கள், பிரபல இசை போன்றவற்றாலும் செல்வாக்குச் செலுத்தப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது,” என ஸ்டார் மேலும் கூறுகிறது. வாழ்க்கையின் முக்கிய பிரச்னைகளின்பேரிலான வழிநடத்துதலுக்காக ஒரு சிறு தொகுதி பருவவயதினரே சர்ச் தலைவர்களை நோக்குகின்றனர்.
மரணத்துக்கேதுவான அறைகள்
“மனிதனால் விளைவிக்கப்படும் வேறு எந்தத் தூய்மைக்கேட்டுக் காரணிகளையும்விட சுற்றுச்சூழலிலுள்ள புகையிலையின் புகை அதிக மரணத்தை விளைவிக்கிறது,” என்று தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனிலுள்ள சுகாதார மருத்துவ அலுவலர் டாக்டர் மைக்கேல் பாப்கிஸ் கூறுகிறார். போதுமான காற்றோட்டம் இல்லாததுதான் பிரச்னை என்று வலியுறுத்திய, தென்னாப்பிரிக்க புகையிலை ஆராய்ச்சி நிலையத்தால் வினியோகிக்கப்பட்ட ஒரு துண்டுப்பிரதிக்குப் பிரதிபலித்துக்கொண்டிருந்தார் அவர். “கட்டடங்களில் புகையிலை புகையின் அடர்த்திகள் பொதுவாக சுத்தமான காற்றின் சராசரி காற்றுத் தராதரங்களைவிட அதிகமாக இருக்கின்றன” எனவும், இது நுரையீரல் புற்றுநோய், மாரடைப்புகள், குழந்தைகளில் வளர்ச்சிக் குறைந்த நுரையீரல்கள் போன்றவற்றில் விளையலாம் எனவும் டாக்டர் பாப்கிஸ் விவரித்தார். ஒரு கட்டடத்தில் புகையிலை புகையே இல்லாமல் முழுவதும் சுத்தமாக்குவதற்கு அதிலுள்ள காற்றைச் சுத்தப்படுத்தவோ காற்றோட்டத்தை அதிகரிக்கவோ ஒரு வழியுமில்லை என்பதாக அவர் சொன்னார். அவர் மேலும் கூறினார்: “காற்றைச் சுத்தமாக வைத்துக்கொள்வதற்கு மிகச் சிறந்த முறையானது, காற்றின் தூய்மைக்கேட்டை விளைவிக்கும் காரணிகளை அதன் ஆரம்பத்திலேயே குறைப்பதேயாகும்.”
ஷாகஸ் நோயும் இரத்தமேற்றுதலும்
பிரேஸிலில் ஆண்டுதோறும், 20,000 பேர் ஷாகஸ் நோயினால் தாக்கப்படுகின்றனர். எனினும், “கிராமப்புற மக்கள் தீவிரமாகப் பெரிய நகரங்களுக்குக் குடியேறுவதன் காரணமாக, இந்நோய் நகர்ப்புறங்களிலும் பரப்பப்படலாம். இதன் காரணமாக நிலைமை மிக மோசமாகும்,” என்று தேசிய சுகாதார சங்கத்தின் தலைவர் ஜோவா கார்லஸ் டையஸ், க்ளோபோ சியென்ஷியா பத்திரிகையில் கூறுகிறார். இந்நோயை விளைவிக்கும் ஒட்டுண்ணி ‘இதயத்தையும் உட்படுத்தும் எந்த உறுப்பிலும் ஒட்டிக்கொள்வதால், இதயம் சரிவர இயங்காத காரணத்தால் பிணியாளி இறுதியில் இறக்கலாம்.’ மூட்டைப்பூச்சி கடியினால் 8,000 பேர் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர் என்று விவரிக்கும்போது, அந்தப் பத்திரிகை மேலும் கூறுகிறது: “மிகவும் அடிக்கடி நோய் தொற்றும் மற்றொரு வழி இரத்தமேற்றுதல் மூலமாகும். தாயிடமிருந்து குழந்தைக்குக் கடத்துவதன் மூலமோ (vertical transmission) அல்லது இரத்தமேற்றுதல் மூலமோ ஆண்டுதோறும் 12,000 பேர் புதிதாகப் பாதிக்கப்படுகின்றனர் என மதிப்பிடப்பட்டது.”
கடவுளுக்கு ஃபேக்ஸ் செய்திகளா?
ஃபேக்ஸின் மூலம் கடவுளை அணுகமுடியுமா? இஸ்ரேலின் தொலைபேசி நிறுவனமாகிய, பஸேக் தெளிவாகவே அவ்வாறுதான் கருதுகிறது. ஜெரூசலமில் உள்ள ஒரு ஃபேக்ஸ் எண் மூலம் மக்கள் கடவுளுக்குச் செய்திகளை அனுப்ப முடிந்த ஒரு சேவையை ஜனவரியில், பஸேக் நிறுவியது என இண்டர்நேஷனல் ஹெரல்ட் ட்ரிப்யூன் அறிக்கை செய்கிறது. ஃபேக்ஸைப் பெற்றதும், ஒரு பணியாள் பொ.ச. 70-ல் ரோம படைகளால் அழிக்கப்பட்ட யெகோவாவின் ஆலயத்தின் அழிபாடுகள் என்று நம்பப்படும் மேற்கத்திய சுவரில் உள்ள வெடிப்புகளில் ஒன்றில் செருகுவதற்காக அதை எடுத்துச் செல்கிறான். ட்ரிப்யூன் சொல்கிறபடி, எழுதப்பட்ட ஜெபங்களை அந்தச் சுவற்றில் உள்ள வெடிப்புகளில் போடும் இந்தப் பழக்கம் “ஓர் அதிர்ஷ்ட நடவடிக்கையாகும்.” இது நல்ல திருமணத் துணையைத் தேடுதல், நல்ல உடல்நலம் பெறுதல், அல்லது மற்ற இலக்குகளை அடைதல் போன்றவற்றிற்கான முயற்சியில் தெய்வீக உதவியைத் தேடும் பக்தர்களால் பின்பற்றப்படுகிறது. இந்த ஃபேக்ஸ் சேவை தொடங்கிய முதல் நாளில், 60 செய்திகள் வந்து சேர்ந்தன.
சோதிடவியல் வல்லுநர்கள் மீண்டும் தவறுகின்றனர்
ஜெர்மனியில் அறிவியலோடு ஒத்திருக்கும் துறைகளில் ஆராய்ச்சி நடத்தும் குழு, 1992-ன் தொடக்கத்தில், உலகமுழுவதிலுமிருந்து சோதிட வல்லுநர்கள் செய்த சுமார் 50 முன்கணிப்புகளை, வருட கடைசியில் அவற்றின் முடிவுகளை மதிப்பிடுவதற்காக, சேகரித்தனர். இந்தக் குழு 1991-லும் இதைப்போலவே சேமித்துவைத்திருந்தனர். (ஆங்கில விழித்தெழு! ஜூன் 8, 1992-ல் பக்கம் 29-ஐ பார்க்கவும்.) 1992-ன் முன்கணிப்புகள் 1991-ல் கணித்தவற்றைவிட திருத்தமாக இருந்தனவா? இல்லவே இல்லை. ஸூட்டாய்ச்ச ட்ஸைடுங் இவ்வாறு அறிக்கை செய்கிறது: “1991-ன் தெளிவற்ற முன்கணிப்புகள் அரைகுறையாவாவது வெற்றி கண்டன. ஆனால் 1992-ன் முன்கணிப்புகள் முழுமையாக நிறைவேறின ஒன்றைக்கூட கொண்டிருக்கவில்லை.” ஜார்ஜ் புஷ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவது, வெள்ளை மாளிகை தீயினால் அழிக்கப்படுவது போன்றவை 1992-ற்கான முன்கணிப்பில் உள்ளடங்கும். 1993-ஐ முன்னோக்கிப் பார்க்கையில், அந்தக் குழு இதையுங்கூட முன்கணிக்கும்படி அனுமதித்துள்ளது: “சோதிடவியல் வல்லுநர்கள் அடுத்த ஆண்டு மீண்டும் தவறுவார்கள்.”
அபாயகரமாக சுவாசித்தல்
போனஸ் அயர்ஸிலிருந்து பீஜிங் வரை, சியோலிலிருந்து கல்கத்தா மற்றும் கெய்ரோ வரை, உலகின் மிகப் பெரிய நகரங்களில் உள்ள காற்று சுவாசிப்பதற்கு மிக மிக ஆபத்தானதாகிக் கொண்டே வருகிறது. (கார்பன் மோனாக்ஸைடு, சல்ஃபர் டையாக்ஸைடு, ஓஸோன், ஈயம் போன்ற) காற்றின் தூய்மையைக் கெடுப்பவற்றின் அதிகரித்து வரும் நச்சளவுகள், பெரிய நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களின் உடல்நிலையைத் தெளிவாகவே அழித்துக்கொண்டு வருகின்றன. சில நகரவாசிகளின் அகால மரணத்திற்குங்கூட இதைக் காரணமாகக் காட்டலாம். இவ்வாறெல்லாம் ஐநா சுற்றுச்சூழல் திட்டமும் உலகச் சுகாதார நிறுவனமும் வெளியிட்ட ஓர் அறிக்கையைச் சுட்டிக்காட்டி, பிரெஞ்சு செய்தித்தாள் லி ஃபிகாரோ கூறுகிறது. தூய்மைக்கேட்டைக் குறைத்து, உலகின் நகர்ப்புறங்களில் வாழும் ஜனங்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க அவசர நடவடிக்கைகள் இப்பொழுதே எடுக்கப்பட வேண்டும் என்று இருபது நகரங்களில் நடத்திய 15 வருடகால ஆராய்ச்சி ஒன்றின் அடிப்படையில், இந்தக் கூட்டறிக்கை எச்சரிக்கிறது. 2000 ஆண்டில் பெரும்பாலும் மனிதவர்க்கத்தின் பாதியளவு நகர்ப்புறங்களில் வசிக்கும் என்று ஐக்கிய நாடுகள் சங்கம் மதிப்பிடுகிறது.
ஐரோப்பியர்கள் எவ்வாறு தங்களுடைய நேரத்தைச் செலவழிக்கின்றனர்
ஐரோப்பாவில் அனுதின வாழ்க்கையைப்பற்றி தகவல்களைப் பெறுவதற்கு, 20 தேசங்களில் 9,700 ஆட்களுக்கும் மேல் 1991-ன் இறுதியில் ஏன்ஃபார்மாஸ்யான் ஏ பப்ளிசிடே என்ற பன்முறை செய்தித் தொடர்பு (multimedia) பிரிவினால் வினவப்பட்டனர். அனுதின வாழ்க்கைமுறைகள் நாட்டுக்கு நாடு எவ்வாறு வித்தியாசப்படுகின்றன? கிரேக்கர்கள் மிகவும் தாமதமாக உறங்குகின்றனர் (12:40 a.m.), ஆனால் ஹங்கேரியர்கள் மிகவும் சீக்கிரம் எழுந்திருக்கின்றனர் (5:45 a.m.) என்று ஸூட்டாய்ச்ச ட்ஸைடுங் அறிக்கை செய்கிறது. அயர்லாந்து நாட்டவரும் லக்ஸம்பர்க் வாசிகளும் பெரும்பாலானோரைவிட அதிக நேரம் உறங்குகின்றனர். செக் இனத்தவரும் ஸ்லோவாக் இனத்தவரும் சுவிஸ் மக்களும் டிவிக்கு முக்கிய இடம் கொடுக்காமல், நாளொன்றுக்கு இரண்டே மணிநேரம் மட்டும் காண்கின்றனர். ஆனால் பிரிட்டனிலோ “டிவி செட் ஒரு நாளைக்கு பெரும்பாலும் நான்கு மணிநேரத்திற்குப் பார்க்கப்படுகிறது.” ஸ்வீடனில் ஒரு நாளைக்கு ஐந்து மணிநேரத்திற்குமேல் படிப்பதிலோ அல்லது வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்பதிலோ செலவழிக்கப்படுகிறது. ஆனால் டென்மார்க் நாட்டவர் நாள் ஒன்றுக்கு ஒன்றரை மணிநேர ஓய்வைத் திரைப்படங்களிலும், காட்சியரங்குகளிலும், அல்லது அதைப்போன்ற நிகழ்ச்சிகளிலும் கழிக்கின்றனர். (g93 7/8)