இலங்கையில் உள்ள நாகப்பாம்புகள் சப்தத்தைக் கேட்கின்றன
“பாம்பாட்டிகள் ஊதும் சத்தத்திற்குச் செவிகொடாதபடிக்குத் தன் காதை அடைக்கிற நாகத்தைப்போல்.”—சங்கீதம் 58:4, 5, NW.
ஜனவரி 10, 1954 தேதியிட்ட தி நியூ யார்க் டைம்ஸில் “பாம்புகள் இசையினால் ‘மகிழ்விக்கப்படுகின்றனவா?’” என்ற தலைப்பின்கீழ், சங்கீதம் 58:4, 5-ன் மீதான பின்வரும் அறிக்கை காணப்பட்டது: “[அ.ஐ.மா.], பால்டிமோரில் உள்ள மவுண்ட் சைனாய் மருத்துவமனையின் மருந்தியல் ஆராய்ச்சி வல்லுநர் டாக்டர் டேவிட் I. மாக்ட், நாகப்பாம்பின் நஞ்சைப்பற்றிய விஷயத்தில் உலகிலேயே தலைசிறந்த நிபுணர்களில் ஒருவர். (நாகப்பாம்பின் நஞ்சு, உதாரணமாக, இரத்தத்தில் ஏற்படும் கோளாறுகளுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மருந்தாகும்.) நாகப்பாம்புகளைப்பற்றியும் நாகப்பாம்புகளின் நஞ்சைப்பற்றியும் ஆராய்ச்சி செய்யும்போது, இந்தியாவின் பல பாகங்களிலிருந்துவந்த, நன்கு படித்த அநேக இந்துமத மருத்துவர்களோடு தான் பழகியிருப்பதாக டாக்டர் மாக்ட் தெரிவித்தார். நாகப்பாம்புகள் குழல் அல்லது இசைக்குழலிலிருந்து வரும் ஏதாவது குரலிசைக்குப் பிரதிபலிப்பதாக அவர்கள் எல்லாருமே ஒப்புக்கொண்டனர். இப்பிராணிகளை ஒரு சில வகை இசைகள் மற்ற வகைகளைவிட அதிகம் கிளர்ச்சியடையச் செய்கின்றன என்பதாக அந்த மருத்துவர்கள் தெரிவித்தனர். நாட்டுப்புறத்தில் வாழும் இந்தியப் பிள்ளைகள், அவர்களுடைய சப்தங்கள் நாகப்பாம்புகளைக் கவராதிருக்க, இரவு நேரங்களில் பாடக்கூடாதென எச்சரிக்கப்பட்டும்கூட இருக்கின்றனர் என்று அவர் சொன்னார். பாம்புகளைச் செவிடு என்று திரும்பத் திரும்ப குறிப்பிட்ட ஷேக்ஸ்பியர் . . . வெறுமனே பொதுவாக நிலவியுள்ள ஒரு தவறான எண்ணத்தையே திரும்ப குறிப்பிட்டுள்ளார் என டாக்டர் மாக்ட் குறிப்புக் கூறினார். மறுபட்சத்தில் பாம்புகளுக்குக் கேட்க முடியும் என்று உரையாடல் பாணியில், 58-ம் சங்கீதம் 5-ம் வசனத்தில் மறைமுகமாகக் குறிப்பிட்டுக்காட்டும் சங்கீதக்காரன் சரியாகவே சொன்னார் என்று டாக்டர் மாக்ட் கூறினார்.”
அதைப்போலவே, ஜிமக்ஸ் டிர் சில்மன்ஸ் டிர்வல்ட் (ஜிமக்ஸின் விலங்கு, சில்மன்ஸின் விலங்குலகம்) என்ற ஜூலை 1981 தேதியிட்ட, ஜெர்மானிய விலங்கியல் பத்திரிகையின் 34, 35 பக்கங்களில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், அதன் ஆசிரியர் இலங்கையிலுள்ள தனது எஸ்டேட்டில் இருந்த ஒரு கரையான் புற்றில் வாழ்ந்த ஒரு நாகப்பாம்பைப்பற்றி கூறுகிறார். பழக்கப்படுத்தப்படாத அந்தப் பாம்பைப் பிடித்து ஆடவைக்கும்படி ஒரு பாம்பாட்டியை அவர் கேட்டுக்கொண்டார். அந்த ஆசிரியர் தெரிவிக்கிறார்: “அங்கு உண்மையில் ஒரு நாகப்பாம்பு வாழ்ந்தது என்று நான் உறுதிசெய்த பின் என்னால் அழைக்கப்பட்டவர் அந்தப் புற்றின் முன் உட்கார்ந்து, தனது குழலை ஊத ஆரம்பித்தார். வெகுநேரத்திற்குப் பின்—ஒன்றுமே நடக்காது என்றுதான் நான் நம்பியிருந்தேன்—அந்த நாகப்பாம்பு ஒரு துளைக்கு வெளியே பல சென்டிமீட்டர் உயரத்திற்குத் தன் தலையை உயர்த்திற்று. அந்தப் பாம்பு தன் வாயைத் திறப்பதற்கு முன்பே அந்தப் பாம்பாட்டி விரைவாகப் பாய்ந்து தன் பெருவிரலுக்கும் மற்ற இரண்டு விரல்களுக்குமிடையே அதன் தலையைப் பிடித்தார்.” அதற்குப் பின் அந்த இந்தியர் அப்பாம்பை உண்மையிலேயே ஆடவைத்தார்.
ஆகவே, நாகப்பாம்பு ‘பாம்பாட்டிகள் ஊதும் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது’ என்பதற்கு அத்தாட்சி இருக்கிறது.—பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன் (New World Translation of the Holy Scriptures—With References), பிற்சேர்க்கை 7A, பக்கம் 1583. (g93 7/22)