நாகப்பாம்பை நீங்கள் சந்திக்க விரும்புவீர்களா?
இந்தியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
அது சரி, நீங்கள் விரும்புவீர்களா? வயதுவந்தவர்களில் பெரும்பாலானோர் தாங்கள் விரும்புவதில்லை என்று கூறலாம். ஆனால் ஒரு குழந்தை அவ்விதம் கூறாது. நாகப்பாம்பு உட்பட, பாம்புகளுக்கான பயம் இளம் குழந்தைகளில் இருக்கும் ஓர் உள்ளியல்பு அல்ல, விலங்குகளிலும் அவ்விதமே ஓர் உள்ளியல்பு அல்ல. நம்பத்தகுந்ததல்லாத தகவல், மிகைப்படுத்தப்பட்ட கதைகள், கட்டுக்கதைகள், தவறான அபிப்பிராயங்கள் ஆகியவற்றால் பாம்புகளுக்கான வெறுப்பு ஏற்படலாம்.
உண்மையில், ஒரு நாகப்பாம்பை நீங்கள் சந்திக்கும்படி நாங்கள் உங்களை அழைக்கையில், ஒரு பாதுகாப்பான தூரத்திலிருந்தே அவ்விதம் செய்யும்படி நாங்கள் பொருள் கொள்கிறோம்! நாகப்பாம்புகள் மிகவும் நஞ்சுள்ளவை, ஆகவே, அப்படிப்பட்ட ஒன்றிடம் சென்று அதை நம் கையால் வருடிவிட நாம் விரும்பமாட்டோம். அந்த நாகப்பாம்பு தானேயும் நம்மை எதிர்ப்படும்படியாகக் காத்துக் கொண்டிருப்பதுபோலும் தெரிவதில்லை; நம் சந்தடியைக் கேட்டவுடனேயே, அது மறைவான ஓரிடத்துக்கு விரைந்தோடும். ஆகவே ஆர்வத்தைத் தூண்டும் இந்தப் பிராணியைப் பற்றிய வசீகரிக்கும் உண்மைகள் சிலவற்றை அறிந்துகொள்ளுவதன்மூலம் மாத்திரமே அந்த நாகப்பாம்பை சந்திப்பதில் நாம் திருப்தியடைவோமாக.
நாகப்பாம்புகள், சர்பன்ட்டிஸ் என்ற உள்வரிசையின்கீழ் வரும், குழிந்த நச்சுப்பற்களையுடைய நச்சுப்பாம்புகளுக்குக் கொடுக்கப்பட்ட பெயராகிய இலப்படே குடும்பத்தைச் சேர்ந்த ஊர்வனவாகும். சுமார் 12 வகையைச் சேர்ந்த நாகப்பாம்புகள், ஆஸ்திரேலியாவிலிருந்து ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் வெப்பமண்டலப் பிரதேசங்களின் வழியாக, அரேபியா மற்றும் மிதவெப்பமண்டலப் பிரதேசங்கள் வரையிலும் பரவியுள்ளன. அதிகளவில், நாகப்பாம்புகளிலேயே மிகவும் பயப்படத்தக்கவை ராஜநாகம், அல்லது ஹேமட்ரையாட் என்னும் வகையாகும். மூன்றிலிருந்து ஐந்து மீட்டர் நீளமுடையதாய், இதுதான் உலகத்திலேயே மிகவும் நீளமான நச்சுப்பாம்பாகும். அதிகளவில் மழை பெய்யும் இடங்களான, அடர்ந்த புதர்ச்செடிகளைக் கொண்ட காடுகளில் அல்லது சதுப்புநிலங்களில் வாழ்வதைத் தெரிவு செய்வதாய், அது சீனா, பிலிப்பீன்ஸ் தீவுகள், இந்தோனேஷியா, மலேசியா, மயன்மார், மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் காணப்படலாம். ஓர் அடர்ந்த கறுப்புநிறமுள்ள வாலும், வெவ்வேறு நிற வரிகளையுடைய, வயது அதிகரிக்கையில் அடர்ந்த ஆலிவ் பச்சைநிறமாய் மாறும் பசுமை கலந்த மஞ்சள் நிறமுடைய உடலும், அதன் படத்தின்மீதுள்ள சிறு புள்ளிகளின் தொகுதிகளும் அது மிகுந்த அழகுடன் தோன்றும்படிச் செய்கின்றன.
நாகப்பாம்பின் பிற வகைகள் சராசரியாக ஒன்று முதல் இரண்டு மீட்டர் வரை நீளமுடையன. இந்தியாவிலேயே தோன்றி, அங்கு மட்டுமே பரவலாக வாழும் இனம், இந்திய நாகம் எனப்படும் மூக்குக் கண்ணாடியை ஒத்த தனித்தன்மையுடைய குறிகளை அதன் படத்தின்மீது கொண்ட நாகப்பாம்பாகும். அது கறுப்புநிறமுடையதாய், அடர்ந்த பழுப்பு நிறமுடையதாய் அல்லது மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் அகன்ற, அடர்ந்த கழுத்துப்பட்டையையும், உடல் முழுவதும் வெள்ளை நிறப் பொட்டுகளையும் மஞ்சள் நிறப்பட்டைகளையும் உடையதாயும் இருக்கலாம். இலங்கையிலும் கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவிலும் காணப்படும் ஒற்றைக் கண்ணாடி நாகம், வெளிறிய நிறமுடைய, சிறிய, வெண்ணிறத்தில் ஓர் ஒற்றை வட்டத்தையுடைய, நன்றாகவே வட்டவடிவமான படத்தையும் உடையதாய் இருப்பதால், அதற்கு அந்தப் பெயர் பொருத்தமானதாய் உள்ளது. வடமேற்கு இந்தியாவிலும் பாகிஸ்தானிலும், அடர்ந்த கறுப்பு நிறமுடைய நாகப்பாம்பை நாம் காணமுடியும். ஆப்பிரிக்காவில், மற்ற வகைகளோடுகூட, ரிங்கல்ஸ் அல்லது துப்பும் நாகம் என்ற வகையும், எகிப்திய நாகம் என்ற வகையும் காணப்படுகிறது. அநேகமாக, அடர்ந்த ஒடுக்கமான படமுடைய பாம்பாகிய எகிப்திய நாகம்தான் கிளியோப்பட்ரா ராணியின் மரணத்தோடு சம்பந்தப்படுத்திக் கூறப்படும் பாம்பு வகையாக இருக்கலாம்.
பாம்புகள் ஒரு தனித்தன்மையுடைய கஸ்தூரி மணத்தினால் கவரப்படுவதால், தங்கள் சொந்த வகைகளோடுதான் இணைசேருகின்றன. மற்ற பாம்புகளைவிட, நாகப்பாம்புகள் அதிகமான குடும்பப் பிணைப்பை உடையன; அவை, பொதுவாக ஆணும் பெண்ணுமாகச் சேர்ந்தே வாழ்கின்றன. புற்றை அமைப்பதாய் அறியப்பட்டுள்ள சில பாம்பு வகைகளில் பெண் ராஜநாகமும் ஒன்றாகும். அது சருகுகளைச் சேகரித்து சுமார் 30 சென்டிமீட்டர் உயரமுள்ள ஒரு மேடாகச் செய்து, அதில் 20 முதல் 50 வரை முட்டைகளை இடுகிறது. பிறகு தன் உடலை அந்த மேட்டைச் சுற்றி வளைத்துக்கொண்டு அங்கேயே இருக்கிறது, அப்போது குஞ்சு பொரிக்கும் வரையில் அதாவது கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் வரையில் உணவு ஏதும் உட்கொள்ளாமல் அங்கேயே இருக்கிறது, ஆண் பாம்பும் அதற்கு அருகிலேயே தங்குகிறது. பிற நாகப்பாம்புகள், புற்றை அமைக்காமலேயே, தங்கள் முட்டைகளைப் பாதுகாக்கும்படி அருகிலேயே வாழ்கின்றன.
பாம்புக் குஞ்சுகள் பின்னர் விழுந்துவிடும் தன்மையுள்ள, மூக்கின் நுனியிலுள்ள ஒரு தற்காலிகப் பல்லைக் கொண்டு முட்டையோட்டைப் பிளந்து தாமாகவே வெளிவருகின்றன. அவ்வாறு வெளிவரும்போதே அவை முற்றிலும் சுதந்திரமானவையாய், முழு வளர்ச்சியுற்ற நச்சு சுரப்பிகளையும் நச்சுப் பற்களையும் உடையனவாய் இருக்கின்றன. அவை தங்கள் நாக்குகளை அடிக்கடி நீட்டி நக்குவதன்மூலம், சுற்றுப்புறத்தின் சுவையை அறிகின்றன, மேலும் வாயின் மேற்பகுதியில் அமைந்துள்ள ஜேக்கப்ஸன்ஸ் உறுப்பு எனப்படும் ஒன்றுக்கு இரசாயனத் தகவலைக் கடத்துகின்றன. இது மணத்தை உணரும் திறத்தோடு இணைக்கப்பட்டுள்ளது; சுவையும் மணமும் ஒன்றுசேர்கையில், அது, பாம்பானது தன் இரையைத் தேடிச் செல்வதற்கு, ஒரு துணையைத் தேடுவதற்கு, அல்லது கொன்றுதின்னிகளிடமிருந்து தப்பிச்செல்வதற்கு உதவுகிறது.
இளம் பாம்பு வேகமாய் வளருகிறது, மிகவும் இறுக்கமாகிவிட்ட அதன் வெளித்தோலை வெகு சீக்கிரத்திலேயே உரிக்கிறது. நாகப்பாம்பின் வாழ்நாளாகிய, 20 ஆண்டுகளுக்கும் மேலாக அது வளர்ந்துகொண்டேயிருப்பதால் இந்த அசாதாரணமான இயல்நிகழ்ச்சி ஒழுங்கானரீதியில் திரும்பத்திரும்பச் செய்யப்படுகிறது. தோலை உரிப்பதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்பு, அந்தப் பாம்பு சோம்பேறித்தனமுள்ளதாகிறது, அதன் தோல் மங்குகிறது, அதன் கண்கள் தெளிவற்ற நீலநிறமானதாக மாறுகின்றன. பிறகு திடீரென்று கண்கள் தெளிவாகி, அதன் தலையைக் கற்களில் வைத்துத் தேய்ப்பதன்மூலம் அந்தப் பாம்பு பழைய தோலை அதன் வாய்ப்பகுதியில் கிழிக்கிறது. இப்போது அவற்றின் கண்களுக்கு மேலேயுள்ள கண்ணாடி போன்ற மூடிப்பகுதியிலிருந்து வால் வரைக்கும் உள்ள அதன் தோல் உரிகையில், பாம்பு சொல்லர்த்தமாகவே அதற்குள்ளிருந்து தவழ்ந்து வெளிவருகிறது. இப்போது ஓர் உயிர்த்துடிப்புள்ள, பளபளப்பான, புதிய தோற்றத்துடன்கூடிய பாம்பு தன் வழக்கமான நடவடிக்கையில் ஈடுபடத் தயாராயுள்ளது.
காற்றின் தட்பவெப்பநிலை நாகப்பாம்புகளை மிகவும் பாதிக்கிறது. வானிலை குளிரடைகையில், அவை மந்தமடைந்து செயலற்றும்கூட ஆகிவிடுகின்றன, பிறகு தட்பவெப்பநிலை அதிகரிக்கும்போதுதான் அவை அசைகின்றன. அளவுக்கதிகமான வெப்பம் அவற்றைக் கொன்றுவிடக்கூடும். பாம்புகளையே தின்று வாழும் ராஜநாகத்தைத் தவிர, மற்ற நாகப்பாம்பு வகைகள் எலிகள், சுண்டெலிகள், தவளைகள், பல்லிகள், பறவைகள், பிற சிறிய விலங்குகள் முதலியவற்றை உணவாக உட்கொள்கின்றன. இரையைப் பிடித்தபிறகு, நச்சை உட்செலுத்துவதன்மூலம், அதை அசையவிடாமல் ஆக்குகிறது. நாகப்பாம்பு உணவை சவைப்பதற்கு ஏற்றாற்போன்ற அமைப்பைப் பெற்றிராதபடியால், இரையானது அப்படியே உட்செலுத்தப்படுகிறது. நாகப்பாம்புடைய தோலின் விரிதன்மையும், தாடையின் துவளும் தன்மையும், அது தன் தலையைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு பெரிதாயுள்ள இரைவிலங்கைக்கூட விழுங்குவதை அனுமதிக்கின்றன. பலியாக்கப்பட்ட இரையால் பாம்பின் வாய் முற்றிலும் அடைக்கப்பட்டிருக்கையில், அது நீந்துபவர் ஒருவர் ஒரு ஸ்நார்க்களைப் பயன்படுத்துவதைப்போலவே, காற்றுக்குழாயின் நுழைவாயிலை அந்த இரைக்கு அப்பால் முன்னோக்கி இழுப்பதன்மூலம் சுவாசிக்கிறது. இப்போது பின்புறம் வளைந்துள்ள பற்களின் வரிசைகள் இரையை பாம்பின் உடலுக்குள் தள்ளுகின்றன. அந்த உணவு மெதுவாக செரிக்கும்படி, அது ஓர் அமைதியான இடத்திற்குப்போய், ஒருவேளை மறுபடியும் பலநாட்களுக்கு உணவு ஏதும் உட்கொள்ளாமல் ஓய்வெடுக்கிறது. நாகப்பாம்பு உணவு ஏதும் உட்கொள்ளாமல், அதன் உடலிலேயே சேமிக்கப்பட்டிருக்கும் கொழுப்புப் பொருளை எடுத்துக்கொள்வதன்மூலம், மாதக்கணக்கில் உயிர்வாழ முடியும்.
பாம்புகள் வினாவுள்ளவை. (மத்தேயு 10:16-ஐக் காண்க.) நாகப்பாம்பு ஒருவேளை ஒரு பாறைக்கு அடியில் ஊர்ந்து செல்லுவது, அல்லது அதன் வீடாகிய எலி-வளைக்குள் போய்விடுவது ஆகிய விதங்களில் தப்பி ஓடுவதும், கண்டுபிடிப்பதைத் தவிர்க்கும்படியாக அசையாமல் கிடப்பதும் அதன் தற்காப்பு நடவடிக்கையில் அடங்குகின்றன. நேருக்குநேர் எதிர்ப்படுகையில், அது உயர எழும்பி, அதன் படத்தை விரித்து, எதிரியைப் பயமுறுத்தும் வகையில் சீறுகிறது. தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியாத கட்டத்தில்தான் கடித்துவிடுகிறது.
பாம்புக்கடி
ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் கிராமப்புறங்களில் பாம்புக்கடிகள் அறிக்கை செய்யப்படாமலே போகின்றன, ஆனால் உலகளவில் ஒவ்வொரு வருடமும் சுமார் பத்து லட்சம் மக்கள் நச்சுத்தன்மையுள்ள பாம்புகளால் கடிக்கப்படுவதாகத் தோன்றுகிறது. மரண விகிதங்களில் இந்தியா ஒரு பதிவை ஏற்படுத்துகிறது—ஒரு வருடத்தில் சுமார் 10,000—ஒருவேளை பெரும்பாலான மரணங்கள் இந்திய நாகத்தால் ஏற்படுவதாகும். நாகப்பாம்புக் கடிகளில் சுமார் 10 சதவீதம் மரணத்தை ஏற்படுத்துகின்றன.
பல பாம்பு வகைகளைவிட நாகப்பாம்பு மெதுவாகவே செயல்படுகிறது; அதன் முக்கிய எதிரிகளில் ஒன்றான விரைதிறமுடைய கீரி, அதை வெல்லக்கூடும். பாம்பினிடம் பாய்ந்துசென்று, பாம்பு கொத்தும்படி தாக்குகையில் அதைப் போக்குக் காட்டுவதன்மூலம் அந்தக் கீரி, நாகப்பாம்பை உறுதிகுலையவும் தயக்கம் கொள்ளவும் செய்யும். கீரி பாம்பின் படத்திற்குப் பின்னாலிருந்து தாக்குவதன்மூலம் அதன் கழுத்தை முறிக்கிறது. பல பாம்புகள் அவற்றின் தலை எங்குள்ளது என்றறிய முடியாதவாறு சுருண்டிருக்கும் நிலையில் தாக்குகின்றன, ஆனால் நாகப்பாம்பு அதன் உடலை உயர்த்தி நேராகக் கீழ்நோக்கித் தாக்குகிறது. அது தாக்கும் தூரம் கணிக்கப்படலாம், ஆகவே ஒருவர் அது மெதுவாகச் செயல்படுவதற்குள் அதன் எல்லையை விட்டுத் தூரமாகப் போய்விடலாம்.
ரிங்கல்ஸ் வகை, தென்னாப்பிரிக்காவின் கறுப்புக் கழுத்தைக் கொண்ட நாக வகை, வடகிழக்கு இந்தியாவிலுள்ள நாக வகை ஆகியவற்றைப் போல, சில நாகப்பாம்புகள், துப்புவதன்மூலம் தங்களைத் தற்காத்துக் கொள்ளுகின்றன. அந்தப் பாம்பு எழும்பி, பலியாளுக்கு நேராக அதன் பற்களைக் குறிவைத்து வெளியேற்றப்பட்ட காற்றோடு சேர்த்து, இரண்டு மீட்டர் தூரத்துக்கும் மேலாக தன்னிடமுள்ள நஞ்சை நுண்ணிய வகையில் இரட்டையாகத் தெளிக்கக்கூடும். தோலின்மீது படும்போது இது எவ்வித சேதத்தையும் ஏற்படுத்துவதில்லை, ஆனால் கண்களுக்குள் சென்றால், அது தற்காலிகக் குருட்டுத்தன்மையை ஏற்படுத்தலாம், சீக்கிரமாகக் கழுவாவிட்டால், நிரந்தரக் குருட்டுத்தன்மையை ஏற்படுத்தலாம். வினோதமாக, அந்தப் பாம்பு கண்களைக் குறிவைக்கும் திறமையுடையதாய் உள்ளது.
ஒரு நாகப்பாம்பு உங்களைக் கடிக்கிறதாக வைத்துக் கொள்ளுவோம். நீங்கள் என்ன செய்ய வேண்டும்? பாம்பின் கன்னங்களிலுள்ள நஞ்சுப்பையிலிருந்து நச்சுப்பொருள் அதன் தாடையின் முற்பகுதியில் நிலையாக அமைந்துள்ள இரு குட்டையான, உள்ளீடற்ற பற்களின் வழியாகப் பிதுக்கப்படுகிறது. இந்த நச்சுப்பற்கள் தோலைத் துளையிட்டு, அடித்தோலில் ஏற்றப்படும் ஊசி செயல்படுவதைப்போல நச்சை உடலுக்குள் செலுத்துகிறது. பாம்புக்கடிக்கான ஒரே பரிகாரம், நான்கு வித நச்சுப்பாம்புகளின் நச்சிலிருந்து தயாரிக்கப்பட்ட எதிர்நச்சுதான். 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், எதிர்நச்சைப் பரவலாக பயன்படுத்திய முதல் நாடு இந்தியாவாகும். எதிர் நச்சுப்பொடி குளிர்பதனமின்றியே ஐந்து ஆண்டுகள் வரை வீரியமுடையதாய் இருக்கிறது; அது மறுபடியும் மாற்றியமைக்கப்பட்டு ஊசிமூலம் உட்செலுத்தப்படுகிறது.
நாகப்பாம்புக் கடியின் அறிகுறிகள் வலி, கடிபட்ட இடத்தில் வீக்கம், மங்கலான பார்வை, நிலையற்ற தன்மை, குரல்வளை முறிவு, மூச்சுத் திணறல் ஆகியனவாகும். அதிகளவு நச்சு உடலுக்குள் செலுத்தப்பட்டு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படாதிருக்கையில் சுமார் இரண்டு மணிநேரத்தில் மரணம் நேரிடுகிறது.
பாம்பாட்டி
பாம்பாட்டம் என்பது பொழுதுபோக்கின் ஒரு மிகப் பழைய அம்சமாகும். அது பெரும்பாலும் கிழக்கே கடைப்பிடிக்கப்படுகிறது, சில மேற்கத்திய சர்க்கஸ்கள் தங்கள் காட்சிகளில் இதையும் சேர்த்திருக்கின்றன. இந்திய நாகம், அதன் அபூர்வமான படத்திற்காகவும் எளிதில் கிளர்ச்சியுறும் தன்மைக்காகவும் பாம்பாட்டத்திற்காகப் பயன்படுத்தப்படும் பிரசித்தி பெற்றுள்ளது, ஆனால் ராயல் ஸ்நேக், ரெட் ஸான்ட் போவா போன்ற கவனத்தைக் கவரும் மற்ற பாம்புகளும் பயன்படுத்தப்படுகின்றன. பாம்பாட்டியாக, ஒரு திறமை வாய்ந்த விளையாட்டுக்காட்டி, தன் குழல்களை இசைக்கையில், நாகப்பாம்பு அதன் கூடையிலிருந்து எழும்பி, படமெடுத்து, வழக்கமாகத் தன்னைத் தற்காக்கும் நிலையில் அமைத்துக் கொள்கிறது. பாம்பாட்டியின் அசைவுகள் அப்பாம்பில் ஓர் எதிர்ச்செயலை ஏற்படுத்துகின்றன; ஏனென்றால் அது அவனை ஒரு கண்வைத்து, எந்நேரத்திலும் தாக்குவதற்குத் தயாராயுள்ளது. பாம்பாட்டிகளால் அவ்வாறு பயன்படுத்தப்படும் பெரும்பாலான நாகப்பாம்புகளின் நச்சுப்பற்கள் நீக்கப்படுகின்றன, ஆனால் சில பாம்பாட்டிகள் நச்சுப்பாம்புகளோடேயே துணிந்து விளையாடுகின்றனர்.
பண்டைய இந்தியாவில், ஊரூராகப் போகும் பாம்பாட்டி, மதசம்பந்தமான கருத்துக்களையும் கட்டுக்கதைகளையும் விவரித்துச் சொல்பவனாயுங்கூட இருந்தான், அதன்மூலம் அவன் பிரசித்தி பெற்றான். தங்கள் காமிராவை வைத்துக்கொண்டு அடிக்கடி சுற்றுப்பயணம் செய்பவர்கள் தங்கும் ஓட்டல்களுக்கு வெளியே அவ்வாறு செய்து காட்டுவது இன்று அதிக இலாபகரமானதாய் உள்ளது. சில பாம்பாட்டிகள் வீடுகளுக்குச் சென்று, அந்த வீட்டுக்காரரது பெரிய தோட்டத்தில் பாம்புகள் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று அவரிடம் சொல்லுகின்றனர். ஒரு குறிப்பிட்ட பண ஒப்பந்தத்தின்பேரில், தான் அவற்றைப் பிடிப்பதாக ஒப்புக்கொள்கிறான். அவன் தோட்டத்திற்குள் சென்று மறைகிறான், சற்று நேரத்திற்குப் பிறகு, ஒரு பைநிறைய பாம்புகளோடு திரும்புகிறான். இதற்கிடையில் அவனது குழலின் ஓசையைக் கேட்க முடிகிறது. சந்தேகமின்றி, அந்த வீட்டுக்காரர் அவனை மேற்பார்வை செய்வதன்மூலம், அல்லது அவன் வரும்போதே தன்னோடு ஒரு பை நிறைய பாம்புகளைக் கொண்டு வந்திருந்தானா என்று சரிபார்ப்பதன்மூலமாவது ஞானமாக இருந்திருப்பார்!
பாம்பு சரணாலயங்கள் கற்பிக்கின்றன
பாம்பு சரணாலயங்கள், ஊர்வனவற்றைப் பற்றி சிரத்தையெடுக்கும்படி உத்வேகப்படுத்துகின்றன. அவை ஆராய்ச்சி செய்வதை ஆதரிக்கின்றன, பாம்புக்கடி தடுப்பு மற்றும் பரிகாரம் பற்றி கற்பிக்கின்றன, மேலும் மனிதனின் பேராசை மற்றும் அறியாமையிலிருந்து பாம்புகளைப் பாதுகாப்பதற்காக உழைக்கின்றன. பெல்ட்டுகள், பர்ஸ்கள், ஷூக்கள், பிற ஆடம்பரப் பொருட்கள் ஆகியவற்றைத் தயாரிக்கப் பயன்படும் அவற்றின் அழகிய தோல்களுக்காக நாகப்பாம்புகள் கொல்லப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் தோல் நிறுவனங்களுக்காக ஒரு வருடத்தில் ஒரு கோடி பாம்புக்கும் அதிகமாகக் கொல்லப்பட்டன. பாம்புகள் கொல்லப்பட்டு உடனடியாக தோலுரிக்கப்படுகின்றன. தோலுக்கு நிறமளிப்பதற்காக தாவர சாயங்கள் இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் அது கண்ணாடியை வைத்து மெருகேற்றப்படுகிறது, அதோடுகூட சில சமயங்களில் அது பளபளப்பாயிருப்பதற்கும் நீர் உட்புகமுடியாமல் செய்வதற்கும் அதன்மீது வார்னிஷ் பூசப்படுகிறது.
நாகப்பாம்பின் மதிப்பு கணக்கிடப்பட முடியாததாய் உள்ளது. அது எலிகளையும், தீங்கு விளைவிக்கும் பிற விலங்குகளையும் கொல்லுவதன்மூலமாக டன் கணக்கான தானியங்களைச் சேதமாவதிலிருந்து காக்கிறது. அதன் நச்சு எதிர்நச்சு தயாரிப்பதற்கும், வலிநீக்கும் மருந்து தயாரிப்பதற்கும், பிற மருந்துகளைத் தயாரிப்பதற்கும் பயன்படுகிறது. பம்பாயிலுள்ள தி டாடா மெமோரியல் கான்ஸர் இன்ஸ்ட்டிட்யூட், கான்ஸர் செல்களின்மீது நாகப்பாம்பின் நச்சு ஏற்படுத்தும் விளைவைக் குறித்து ஆய்வு செய்து வருகிறது.
அந்த நாகப்பாம்பை சந்திப்பதை நீங்கள் அனுபவித்து விட்டீர்களா? அழகானது, பயனுள்ளது, எச்சரிக்கையுள்ளது, தன்னைத்தான் காத்துக்கொள்ளுவதில் நன்கு அமையப்பெற்றது. அதை மேம்பட்ட விதத்தில் அறிய வருவதானது, விலங்குலகிலேயே மிகவும் தவறாக அறிவிக்கப்படும் ஒரு பிராணியைப் போற்றுவதில் நமக்கு உதவக்கூடும்.
[பக்கம் 19-ன் பெட்டி]
நாகப்பாம்பு வழிபாடும் மூடநம்பிக்கையும்
பண்டைய காலங்களிலிருந்தே நாகப்பாம்பு வழிபாடு இருந்திருக்கிறது. தொல்லியலாளர்களால் பூமியிலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட மிகப் பழைய நாகரிகங்களில் ஒன்றாயிருந்த மொகஞ்சதாரோவிலுள்ள முத்திரைகளில் நாகப்பாம்பின் உருவத்தை முனைத்து கலைவேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பொ.ச.மு. மூன்றாவது ஆயிராண்டிலிருந்து இன்று வரையாக, இந்தியாவிலுள்ள லட்சக்கணக்கானோர் நாகப்பாம்பை மூடநம்பிக்கை கலந்த பக்தியோடு நோக்கியிருக்கின்றனர். அக்கறையூட்டும் விதத்தில், நாகப்பாம்பைப் பற்றிய பல கதைகள் உண்மையான வரலாற்று நிகழ்ச்சிகளோடு சேர்த்து கட்டுக்கதைகளாகத் திரித்துக் கூறப்பட்டவையாகவே அறியப்படுகின்றன.
படைப்பு பற்றிய ஒரு “கதை” இந்த அண்டத்தில் ஒளியே இல்லாதிருந்த ஒரு சமயத்தைப் பற்றிக் கூறுகிறது. இருள்சூழ்ந்த பிரபஞ்சத்திலிருந்த நீர்நிலைகளிலிருந்து ஒளிவீசும் விஷ்ணுபிரான் முதலாவதாகப் படைக்கப்பட்டார், அதற்குப் பிறகு வானம், பூமி, கீழுலகம் ஆகியவை படைக்கப்பட்டன. மீந்திருந்த பொருட்களிலிருந்து, ஷேஷா என்றழைக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான நாகப்பாம்பு (மீந்திருக்கும் பகுதி என்ற பொருளுடையது) படைக்கப்பட்டது. ஷேஷாவுக்கு 5 முதல் 1,000 வரை தலைகள் இருந்ததாகக் கட்டுக்கதை கூறுகிறது, அதன்படி வரையப்படும் உருவங்கள், சுருண்டிருக்கும் ஷேஷாவின்மீது விஷ்ணு பள்ளி கொண்டிருப்பதாகவும், ஷேஷாவின் பல தலைகளிலுள்ள விரிக்கப்பட்ட படங்களால் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் சித்தரிக்கின்றன. பூமியதிர்ச்சிகள் ஷேஷா விடும் கொட்டாவியால் ஏற்படுகின்றன என்றும், அவன் வாயிலிருந்து புறப்படும் நெருப்பு அல்லது அவனது நச்சு ஒரு யுகத்தின் முடிவில் இந்த உலகத்தை அழிக்கிறது என்றும் கூறப்படுகிறது.
நாகர்கள் என்றழைக்கப்பட்ட ஒரு நாகப்பாம்பு இனத்தினர், நாகலோகம் அல்லது பாதாளம் எனப்படும் கீழுலகத்தில் வாழ்வதாக இந்து புராணம் சித்தரிக்கிறது. “முழுநிறை யுகத்”தில், எல்லா மனிதரும் புனிதர்களாக இருந்ததாகவும், அப்போது ஒரே ஒரு மதம் மட்டுமே இருந்ததாகவும், பேய்களோ நாகர்களோ இல்லாதிருந்தனர் என்பதாகவும் மனிதக்குரங்கு-தெய்வமாகிய அனுமான் கூறுகிறது. அந்த சர்ப்பங்கள் பூமியின் செல்வ வளங்களுக்குப் பாதுகாப்பாளர்களாயின, மிகுந்தளவில் அறிவையும் மந்திரசக்தியையும் பெற்றிருந்தன. வாசுகி என்றும் சில சமயங்களில் அழைக்கப்படும் ஷேஷா, சிரஞ்சீவியாய் இருக்கச்செய்யும் ஒருவித மதுவாகிய அமிர்தத்தைப் பெறும்படியாக பாற்கடலைக் கடைவதற்கு தேவர்களால் பயன்படுத்தப்பட்டது. நாகர்களால் ஆளப்பட்ட கீழுலகம், மிகவும் விரும்பத்தக்க ஓரிடமாகச் சித்தரிக்கப்படுகிறது; யுத்தத்தில் மரிக்கும் போர்வீரர்கள் அங்குச் சென்று கற்பனை செய்யமுடியாத அளவில் இன்பங்களைப் பெறுவர் என்பதாக வாக்களிக்கப்படுகின்றனர்.
என்றபோதிலும், புராணத்தில் சித்தரிக்கப்படும் எல்லா நாகப்பாம்புகளும் சாதகமான வகையில் கருதப்படுகிறதில்லை. விஷ்ணுவின் ஓர் அவதாரமான கிருஷ்ணனுக்கும், தீங்கிழைக்கும் தன்மையுள்ள ஒரு பெரிய பேய் நாகமான கலியானுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதைப் பற்றி ஒரு “கதை” விவரிக்கிறது. அந்த பெரிய சர்ப்பத்தின் தலைமீது தன் காலை வைத்திருக்கும் வகையில் வெற்றிசிறந்த கிருஷ்ணனை உருவங்கள் காட்டுகின்றன.
நாகர்களின் ராணியான மனாஸா அல்லது துர்கம்மா, தங்கள் குழந்தைகளை பாம்புக்கடியிலிருந்து பாதுகாக்கும் வகையில் பெண்களால் வணங்கப்படுகிறாள். நாகபஞ்சமி பண்டிகையின்போது, பாம்பு பக்தர்கள் பாலையும் இரத்தத்தையும்கூட பாம்பின் உருவங்களின்மீதும், பாம்புப் பொந்துகளுக்கு உள்ளேயும் ஊற்றுகின்றனர். தாங்கள் ஓர் ஆண் குழந்தையைக் கருத்தரிக்க வேண்டி, கோயில்களில் கல்லால் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட பாம்பின் உருவங்கள் பெண்களால் வணங்கப்படுகின்றன, நன்கொடையாகவும் அளிக்கப்படுகின்றன.
திரைப்படங்களில் நாகப்பாம்பு
இந்தியாவில் தயாரிக்கப்படும் திரைப்படங்களில், புராணங்களில் வரும் நாகப்பாம்பு ஒரு பிரபலமான பொருளாய் உள்ளது—1928-லிருந்து 40-க்கும் மேலாக தயாரிக்கப்பட்டுள்ளன. நற்குணத்தைப் பாதுகாப்பதாகவும், அதன் பக்தர்களுக்குத் துணையிருப்பதாகவும், துஷ்டர்களை அழிப்பதாகவும் பொதுவாக நாகப்பாம்பு சித்தரித்துக் காட்டப்படுகிறது. மனித உருவெடுக்கும் சக்தி படைத்தவையாய்க் கூறப்படும் இச்சதாரி நாகங்களைப் பற்றிய கட்டுக்கதை பேர்போனது. அவற்றிற்கு ஒரே ஒரு பக்தியுள்ள துணை இருப்பதாகக் கூறப்படுகின்றன. தன் துணை கொல்லப்படுகையில், அந்த நாகப்பாம்பு இறந்துபோன அப்பாம்பின் கண்களிலிருந்து அதைக் கொன்றவரின் உருவத்தைப் பார்க்க முடிகிறது, அவரைப் பழிவாங்கும் பொருட்டு அவரது மோப்பத்தை வைத்துப் பின்தொடரும் வகையில் புறப்படுகிறது. இதுவே பல திரைப்படங்களின் உயிரூட்டமுள்ள அடிப்படைக் கருத்தாய் அமைகிறது. அக்கதையில் மேம்பட்டு நிற்பவை எவையென்றால், பாம்பு நடனங்கள்; நடனமாடுபவர்கள், பாம்பாட்டியின் இசையைப் போன்ற இசையுடன், அந்தப் பாம்பு அசைவதைப் போலவே அசைந்து ஆடுகின்றனர், தரையில் நழுவிச்செல்லவும் செய்கின்றனர்.
ஓர் உண்மைக் கதையை விளக்கும் திரைப்படமான சக்தி, ஒவ்வொரு ஆகஸ்ட் மாதத்திலும் லட்சக்கணக்கான பாம்பு வழிபாட்டாளர்கள் பாலைவனத்தில் கூடிவரும் இடமான இந்தியாவைச் சேர்ந்த ராஜஸ்தானில் ஒரு பண்டிகையின்போது திரைப்படம் எடுக்கப்பட்டது. அவர்கள் 50 டிகிரி செல்ஸியஸுக்கும் மேலான வெப்பநிலையுள்ள கொதிக்கும் வெப்பத்தில், இரும்புத்தடிகளால் தங்களை அடித்துக்கொண்டு, இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கும் மேலாக, பொசுக்கும் மணலின்மீது தங்கள் வயிற்றால் ஊர்ந்து ஒரு பாம்பு-தெய்வமான கோகாவின் கோயிலுக்குச் செல்கின்றனர். பொ.ச. பத்தாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த வரலாற்றுப் புகழ்பெற்ற ஓர் அரசனாகிய கோகா, பாம்பு நிறைந்த ஒரு பகுதிக்கு எதிரியை வழிநடத்திச் செல்வதன்மூலம் அந்தச் சேனையினர் பாம்புக்கடியால் கொல்லப்படும்படி செய்து, இவ்விதமாக தன் மக்களை முஸ்லீம் முற்றுகையாளரிடமிருந்து காப்பாற்றியிருந்தான் என்பதாகக் கூறப்படுகிறது.
[பக்கம் 20-ன் பெட்டி]
நாகப்பாம்பால் காப்பாற்றப்பட்டனர்
இந்தியாவின் சஸ்துர் கிராமத்தைச் சேர்ந்த இரு குடும்பத்தினர் ஒரு நாகப்பாம்புக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளனர். செப்டம்பர் 30, 1993-ல் காலை சுமார் 3:50 மணியளவில், அவர்களது வீட்டிலிருந்து வெளியேறிய ஒரு நாகப்பாம்பின் உரத்த சீறலினால் அவர்கள் விழிப்பூட்டப்பட்டனர். அதைக் கொல்லுவதற்காக வயல்களுக்குள் துரத்திச் சென்றனர். காலை 4:00 மணிக்கு மத்திப இந்தியாவில் ஏற்பட்ட பயங்கரமான பூமியதிர்ச்சி கிட்டத்தட்ட எல்லாரையும் கொன்று, அவர்களுடைய கிராமத்தைத் தரைமட்டமாக்கியது. அந்த இரு குடும்பங்களும் தப்பிப்பிழைத்தன. நாகப்பாம்பின் முன்னெச்சரிப்பு முறைக்கு நன்றி!
[பக்கம் 16, 17-ன் படங்கள்]
ஆசிய நாகத்தின் பின் பக்கமும் முன் பக்கமும்
உட்படம்: ஒரு வெதுவெதுப்பான பாறையின்மீது ஒரு கறுநாகம் குளிர்காயும்போது அதன் படத்தை விரித்தல்
[படத்திற்கான நன்றி]
Pictures on pages 16 to 20: A. N. Jagannatha Rao, Trustee, Madras Snake Park Trust
[பக்கம் 18-ன் படங்கள்]
ஒரு கறுநாகத்தின் முன் பக்கமும் பின் பக்கமும்