இளைஞர் கேட்கின்றனர்
நான் அடிமையாகிவிட்டேன்! சூதாட்டத்தை எப்படி நான் நிறுத்துவது?
“நான் 13 வயதுள்ளவனாய் இருந்தபோது, ஆதாயம் தரும் சூதாட்ட [துளைவிளிம்பு (slot)] இயந்திரங்களில் (fruit machines) சூதாட ஆரம்பித்தேன்,” என டேவிட் ஒப்புக்கொள்கிறான். “ஆதாய சூதாட்ட இயந்திரங்களில் சூதாடாமல் அந்தப் பொழுதுபோக்கு அங்காடி வீதியை என்னால் கடக்கமுடியாது என்ற நிலையை அடைந்தேன்.” தாமஸ் என்ற பெயருடைய முன்னாள் சூதாட்டக்காரன் ஒப்புக்கொள்கிறான்: “என்னுடைய பழக்கத்தை ஆதரிப்பதற்கு என் நண்பர்கள், குடும்பத்தினர், சக வேலையாட்கள் ஆகியோரிடமிருந்து திருடவும்கூட செய்தேன். எதை வேண்டுமானாலும் வைத்துச் சூதாடினேன்.”
டேவிட், தாமஸ் இவ்விருவரும் கிறிஸ்தவர்களாக வளர்க்கப்பட்டனர். இருவருமே சூதாட்டத்திற்கு அடிமையானார்கள்—மரணத்திற்கேதுவான ஒரு வெறியில் சிக்குண்டனர். கவலைதருமளவு எண்ணிக்கையில் இளைஞர் இந்த மனச்சம்பந்தமான கேளிக்கைகளுக்குப் பலியாகியிருக்கின்றனர் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். “அமெரிக்காவில் உள்ள மதிப்பிடப்பட்டிருக்கும் 8 மில்லியன் சூதாட்ட வெறியர்களில் 1 மில்லியன் முழுவதும் பருவ வயதினராகவே இருப்பதாக” சூதாட்ட ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர், என்பதாக டைம் பத்திரிகை கூறுகிறது. ஐக்கிய மாகாணங்களில், பருவ வயதினரெல்லாரிலும் 4-லிருந்து 6 சதவீதத்தினர் சூதாட்டத்தை நோயாகக் கொண்டிருக்கின்றனர் என்பதாகச் சிலர் கருதுகின்றனர்.
இளைஞர் இத்தீய பழக்கத்தைப் பல்வேறு வடிவில் கைக்கொள்கின்றனர். ஜப்பானில், வயதுவராதோர் பந்தயம் கட்டுவதை (betting) தடைசெய்யும் கடுமையான சட்டங்கள் இருந்தபோதிலும், மைனிச்சி டெய்லி நியூஸ் செய்தித்தாளின்படி இளைஞர் “கவலைக்கிடமான அதிகரித்துவரும் ஒரு போக்குமுறையில், [பந்தயத் திடல்களிலும்,] பந்தயத் திடல்களுக்கு வெளியேயும், பந்தயம் கட்டும் ஸ்தாபனங்களிலும் அதிகம் காணப்படுவதற்கு நன்கு அறியப்பட்டவர்களாகி இருக்கின்றனர்.” பரிசுச்சீட்டு முறை, போட்டி விளையாட்டு நிகழ்ச்சிகளின்மேல் பந்தயம் கட்டுதல், சீட்டாட்டம் போன்றவையும்கூட பந்தயம் கட்டுதலின் வற்புறுத்தலுக்கு அடிபணியும் இளைஞர் மத்தியில் காணப்படும் பிரபலமான வழிகளாகும்.
சூதாட்டத்திற்கு அடிமையாதல் —பின்விளைவுகள்
ஃகேம்ப்ளர்ஸ் அனானிமஸ் நிறுவனத்தின் கோர்டன் மூடி இவ்வாறு சொல்கிறார்: “[சூதாட்டம்] முதலில், ஒரு பெரிய கண்டுபிடிப்பை நடத்துதல் அல்லது காதல் கொள்ளுதல் போன்ற, ஓர் அதிசயமான புதிய அனுபவமாகத்தான் இருக்கும். . . . தற்செயல் நிகழ்வுகளோடு விளையாடுதல் கிளர்ச்சியூட்டுவதாயும் கவர்ச்சியூட்டுவதாயும் இருக்கும்.” (சூதாட்ட வெறியை நிறுத்துங்கள் [Quit Compulsive Gambling]) ஆம், ஒரு வெற்றி மின்னலை அனுபவிப்பதும் அதைத் தொடர்ந்துவரும் அட்ரினல் இயக்குநீரின் பாய்ச்சலும் அநேகருக்குக் கிளர்ச்சியூட்டுவதாக இருக்கும். ஆனால் நீங்கள் என்றென்றுமாக அந்த அபூர்வ வாய்ப்புகளை வெல்ல முடியாது. இறுதியில் அந்தச் சூதாட்டக்காரன்தான் இழக்கிறான். கடனும் பண நஷ்டமும் அவனுடைய பிரச்னைகளின் தொடக்கமாகவே இருக்கின்றன.
அடிமையாக்கும் ஒரு பொருளைப்போலவே, அடிமையாக்கும் ஒரு பொழுதுபோக்கும், சொல்ல முடியாத அளவு ஆவிக்குரிய, உணர்ச்சிசம்பந்தமான, ஒழுக்கசம்பந்தமான அழிவுகளை விளைவிக்கலாம். அது “உங்களை இறுதியில் ஓர் அடிமையாக்கிவிடும் . . . மாறுபாடு” என்று கோர்டன் மூடி அழைப்பதை உங்களில் வளர்த்துவிடும். நாம் அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகளுக்கு ஞாபகப்படுத்தப்படுகிறோம்: “எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?” (ரோமர் 6:16) J. B. பிலிப்ஸின் மொழிபெயர்ப்பு இந்த வசனத்தை இவ்வாறு மொழிபெயர்க்கிறது: “நீங்கள் கீழ்ப்படியும்படி தெரிந்துகொண்ட சக்திக்கு சொந்தமாயிருக்கிறீர்கள்.” உங்களால் கட்டுப்படுத்த முடியாத ஒரு பழக்கத்தின் கொடுங்கோன்மையின்கீழ் இருப்பதைக் கற்பனை செய்துபாருங்கள்!
தன்னுடைய பழக்கத்தை ஆதரிக்க ஓர் இளைஞன் பொய்ச்சொல்லுதல், மாறுபட்டு நடத்தல், திருட்டுப் போன்றவற்றை அடிக்கடி நாடுவதால், அவனுடைய குடும்ப உறவுமுறைகளும் நிச்சயமாகப் பாதிக்கப்படும். “நீங்கள் ஒரு திருடனாக, பொய்யனாக, நீங்கள் நேசிக்கிற மற்றும் உங்களை நேசிக்கிற ஜனங்களுக்கு வீண்பாரமாக ஆகிவிட்டிருக்கிறீர்கள் என்று உணரும்போது உங்களுடைய தன்-மதிப்பு வீழ்ச்சியடைகிறது,” என்பதாகப் பிரிட்டனின் இளைஞர் இன்று (Young People Now) பத்திரிகை குறிப்பிடுகிறது. எனவே சூதாட்ட வெறியர்கள் “கடுமையான சோர்வினாலும், கவலையினால் வரும் கோளாறுகளாலும்,” மற்றும் ஜீரண கோளாறுகள், உறக்கமின்மை, தலைவலி, மிகை அழுத்தம், ஈளைநோய், முதுகுவலி, நெஞ்சு வலி போன்ற சரீரப்பிரகாரமான பிரச்னைகளாலும் துன்புறுவர் என்று தி ஹார்வர்ட் மென்ட்டல் ஹெல்த் லெட்டர் அறிக்கை செய்வது ஆச்சரியத்துக்குரியதல்ல.
இருப்பினும், எல்லாவற்றையும்விட மிகவும் அழிவுக்குரிய விளைவு, ஒருவருடைய ஆவிக்குரியநிலைக்கு ஏற்படும் பாதிப்பாகும். பேராசையையும் பண ஆசையையும் பைபிள் கண்டனம் செய்கிறது. (1 கொரிந்தியர் 5:10, 11; 1 தீமோத்தேயு 6:10) எந்தவொரு அடிமையாக்கும் பழக்கத்தையும்போலச் சூதாட்ட வெறி ‘மாம்சத்திலும் ஆவியிலும் உண்டாகும் அசுசியாகும்.’ (2 கொரிந்தியர் 7:1) எந்தளவுக்கு நீங்கள் சூதாடுகிறீர்களோ அந்தளவுக்கு உங்கள் மனச்சாட்சியையும் கடவுளோடுள்ள உங்கள் உறவுமுறையையும் கெடுத்துக்கொள்கிறீர்கள்.—1 தீமோத்தேயு 4:2-ஐ ஒப்பிடவும்.
நிறுத்திவிடுவதற்கான விருப்பம்
குறட்டுப்பிடியைப் போன்ற இப்பழக்கத்தின் பிடியை நீங்கள் எவ்வாறு முறியடிக்கலாம்? முதலாவது, நிறுத்துவதற்காக நீங்கள் உண்மையிலேயே விரும்பவேண்டும். “அடிமையானவன் மாறுவதற்கு உண்மையிலேயே விரும்பவில்லையெனில், எந்த அடிமைத்தனமும் ஒருபோதும் மேற்கொள்ளப்படமுடியாது,” என்று கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாதல் (Addictions) என்ற தனது புத்தகத்தில் சொல்கிறார் லிஸ் ஹாஜ்கின்ஸன். ‘தீமையை வெறுக்க,’ சூதாட்டத்தை வெறுக்க கற்றுக்கொள்வதை இது அர்த்தப்படுத்துகிறது. (சங்கீதம் 97:10) எப்படி? அதனால் கிடைக்கும் இன்பங்களைப்பற்றியல்ல, ஆனால் விளைவுகளைப்பற்றி எண்ணிப் பார்ப்பதன் மூலம். ‘அநித்தியமான பாவ சந்தோஷங்களை அனுபவிப்பது’—ஏதோவொரு விளையாட்டில் வெற்றி பெறுவதனால் வரும் அந்தக் கிளர்ச்சி—நித்திய ஜீவனை இழக்குமளவுக்கு மதிப்புள்ளதா? (எபிரெயர் 11:25) இந்த ரீதியில் சிந்திப்பது, நிறுத்துவதற்கான தீர்மானத்தை வளர்த்துக்கொள்ள உங்களுக்கு உதவலாம்.
இருந்தபோதிலும், “எந்த வகையான அடிமைத்தன பழக்கமும், அதை நிறுத்துவது ஓர் உடலுறுப்பை வெட்டியெறியவதைப்போல இருக்குமளவுக்கு, ஆழப்பதிந்துவிட்டிருக்கலாம்,” என்று ஆராய்ச்சியாளர் லிஸ் ஹாஜ்கின்ஸன் குறிப்பிடுகிறார். ஆனால் இயேசு சொன்னார்: “உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் [கெஹன்னாவில், NW] தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.” (மத்தேயு 5:29) கடவுளோடுள்ள உங்கள் உறவுமுறையைக் கெடுக்கும் எதுவாயிருந்தாலும் உங்கள் வாழ்க்கையிலிருந்து நீக்கப்படவேண்டும்!
இது சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்வதை அர்த்தப்படுத்துகிறது. திரும்பத்திரும்ப வரும் ஆசைகள் தன்னை மூழ்கடித்துவிட அப்போஸ்தலன் பவுல் அனுமதித்திருந்தால் அனுமதித்திருக்கலாம். ஆனால் தன்னுடைய ஆசைகளுக்கு அடிமையாய் இருக்க மறுத்துவிட்டார். “என் சரீரத்தை ஓர் அடிமையைப் போல் ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்,” என்று அவர் சொன்னார். (1 கொரிந்தியர் 9:27, NW) நீங்களும் உங்கள் ஆசைகள் உங்களைக் கட்டுப்படுத்த அனுமதிக்காமல், உங்களிடம் கடினமாக நடந்துகொள்ள கற்றுக்கொள்ளவேண்டும்.
பிரச்னையின் தொடக்கத்தைக் கண்டடைதல்
எனினும், இப்போராட்டத்தில் வெற்றி காண்பது மனவுறுதியைக் காட்டிலும் அதிகத்தைத் தேவைப்படுத்தும். கெட்ட பழக்கத்திற்கு அடிமையாதல் பெரும்பாலும் இன்னும் ஆழப்பதிந்து கிடக்கும் பிரச்னைகளைப் பிரதிபலிக்கின்றன. டிக் என்ற பெயருடைய ஒரு சூதாட்ட வெறியர் சொல்லுகிறார்: “என்னுடைய பிள்ளைப்பருவம் வித்தியாசப்பட்ட ஒன்றாக இருந்தது. என்னவானாலும் என்னுடைய குடும்பத்தில் அன்பு கிடையாது. . . . நான் எப்பொழுதுமே தாழ்த்தப்பட்டேன். என்னைப்பற்றி ஒரு கீழான அபிப்பிராயந்தான் வைத்திருந்தேன்.” அத்தகைய அழுத்தத்தின் விளைவாக, அவனுக்கிருந்த விடுதலைபெறும் வழி சூதாட்டமாக இருந்தது.
மனநல துறையைச் சேர்ந்த அநேகர் இப்பொழுது இருக்கும் பல்வேறு பழக்கங்களுக்கும் அடிமையாதலுக்கு, பிள்ளைப்பருவ துர்ப்பிரயோக மற்றும் புறக்கணிப்பின் உணர்ச்சிசம்பந்தமான அதிர்ச்சியைக் காரணமாகக் காட்டுகின்றனர். எது எப்படியிருந்தாலும், உங்களுடைய பிரச்னையின் தொடக்கத்தைக் கண்டுபிடிப்பது, நீங்கள் அதை மேற்கொள்வதற்கு உதவிசெய்யும். சங்கீதக்காரன் ஜெபித்தார்: “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.” (சங்கீதம் 139:23, 24) உங்களுடைய அமைதியைக் குலைக்கும் எண்ணங்களை முதிர்ச்சியுள்ள ஒரு கிறிஸ்தவரோடு, ஒருவேளை ஒரு சபை மூப்பரோடு கலந்தாலோசிப்பது நீங்கள் ஏன் சூதாடுகிறீர்கள், உங்களுடைய எண்ணம் மற்றும் நடத்தை முறைகளை மாற்ற நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பவற்றைப் புரிந்துகொள்வதில் உதவ அதிகத்தைச் செய்யக்கூடும்.a
“மேம்பட்ட ஒன்று”
சூதாட்ட வெறியை நிறுத்துங்கள் புத்தகத்தின்படி, நிறுத்துதல் “இந்தப் பிரச்னைக்கெதிரான போராட்டத்தில் முதலாவது [அடி] மட்டுமே.” உங்கள் வாழ்க்கை-பாணியில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவுங்கூடவேண்டும். இப்பழக்கத்திற்கு மீண்டும் அடிமையாதலைத் தவிர்க்க, உங்களுடைய முன்னாள் சூதாட்ட கூட்டாளிகளையும் சூதாட்ட அரங்குகள் (casinos), பந்தயங்கட்டி பில்லியர்ட் விளையாடும் பொது இடங்கள் (pool halls) இதைப்போன்ற மற்றப் பழைய சூதாட்ட இடங்களைத் தவிருங்கள். (நீதிமொழிகள் 13:20) இது மற்றவர்கள் மத்தியிலிருந்து உங்களையே தனிமைப்படுத்திக்கொள்வதை அர்த்தப்படுத்துகிறதில்லை. (நீதிமொழிகள் 18:1) கிறிஸ்தவ சபைக்குள்ளேயே ஆதரவளிக்கும், ஆரோக்கிய நட்புறவை வளர்த்துக்கொள்ளுங்கள். பலனளிக்கும் வேலையிலும், ஆவிக்குரிய நடவடிக்கைகளிலும், ஆரோக்கியமான பொழுதுபோக்குகளிலும் உங்களையே சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.
இருந்தபோதிலும், “இதைவிட நல்லது ஏதோ ஒன்று உண்டு—கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாதலைத் திருப்திப்படுத்தும் முயற்சியைவிட வாழ்க்கை அதிகத்தைக் கொடுக்கிறது என்பதைப் புரிந்துகொண்டால்” மட்டுமே அடிமையானவன் தன்னுடைய போராட்டத்தில் வெற்றி காணமுடியும் என்று ஹாஜ்கின்ஸன் நமக்கு நினைவூட்டுகிறார். சரி, பைபிள் கொடுக்கும் நம்பிக்கையைவிட மேம்பட்டது எதுவாக இருக்கமுடியும்?
ராடி என்ற பெயருடைய ஒரு மனிதர் இது உண்மையாக இருப்பதாகக் கண்டார். தான் பருவவயதினனாயிருந்த சமயத்திலிருந்தே, 25 வருடங்களாக, “சூதாட்டத்திற்கு முழுவதும் அடிமைப்பட்டவராக,” இருந்துவந்திருக்கிறார் என்று தன்னைப்பற்றியே விவரிக்கிறார். ராடி—குதிரைப் பந்தயம், நாய்ப் பந்தயம், கால்பந்தாட்ட முடிவுகளின் மேல் பந்தயம் கட்டுதல், சூதாட்ட அரங்குகளில் சீட்டாட்டம் போன்ற—எல்லா வகையான சூதாட்டங்களிலும் ஈடுபட்டுப் பார்த்தார். ஆனால் அவர் யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து கற்றுக்கொண்ட கடவுளுடைய வார்த்தையிலுள்ள சத்தியங்களைப் பொருத்திப் பிரயோகிக்கத் தொடங்கினார். “மூன்றே மாதங்களில் குறிப்பிடத்தக்க ஓர் உருமாற்றம் ஏற்பட்டது,” என்று ராடி சொல்கிறார். சூதாடுவதை அவர் நிறுத்தினார். இன்று அவர் கிறிஸ்தவ சபையில் ஒரு மூப்பராகச் சேவைசெய்கிறார்.
ஒருவேளை பைபிள் போதகங்களைப்பற்றி உங்களுக்கு ஏற்கெனவே ஓரளவு அறிவு இருக்கலாம். தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட டேவிடையும் தாமஸையும்போல, பைபிள் சத்தியங்களை உங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்ள நீங்கள் ஒருவேளை இதுவரை தவறியிருக்கலாம். அப்படியானால், பைபிளைக் கருத்தூன்றி ஆராய்வதன்மூலம், ‘தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று உங்களுக்கே ஏன் நிரூபித்துக்கொள்ளக்கூடாது?’ (ரோமர் 12:2) டேவிடும் தாமஸும் தாங்கள் கற்றுக்கொண்டதைப் பொருத்திப் பிரயோகித்து, உண்மையான விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வளர்க்கத் தொடங்கியபோது, சூதாட்டவெறியை அவர்களால் மேற்கொள்ள முடிந்தது. அது உங்களாலும் முடியும்!
பைபிள் படிப்பில் கருத்தூன்றுவீர்களேயானால், அது எதிர்காலத்திற்காகப் பைபிள் கொடுக்கும் நம்பிக்கையை உங்களுக்கு—சூதாட்டத்தைவிட மேம்பட்ட ஒன்றாக—உண்மையான ஒன்றாக ஆக்கும். அதே சமயம் கடவுளோடு ஒரு தனிப்பட்ட உறவுமுறையை வளர்த்துக்கொள்ளவும் அது உங்களுக்குதவும். இவ்வாறு அவர் உங்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்கிறார் என்ற நம்பிக்கையோடு, உதவிக்காக அவரிடம் ‘இடைவிடாமல் ஜெபிக்க’ இலகுவாக உணருவீர்கள். (1 தெசலோனிக்கேயர் 5:17; சங்கீதம் 103:14) சூதாட்டவெறிக்கெதிரான உங்களுடைய போராட்டத்தில் வெற்றிபெற தேவையான பலத்தைக் கொடுப்பதன் மூலம் உங்கள் விடாமுயற்சிக்கு அவர் பலனளிப்பார்.—கலாத்தியர் 6:9; பிலிப்பியர் 4:13. (g93 8/8)
[அடிக்குறிப்புகள்]
a கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாதலின் பிடியை முறியடிக்க மனநல நிபுணர்களின் ஆலோசனை தேவைப்படுகிறது என்று மனநலத் துறையைச் சேர்ந்த பெரும்பாலானோர் கருதுகின்றனர். ஒரு கிறிஸ்தவன் பைபிள் நியமங்களுக்கு முரண்பாடாக இல்லாத ஒரு சிகிச்சை பெறுவதைத் தெரிந்துகொள்வானேயானால், கண்டிப்பாக அது அவனுடைய சொந்த தீர்மானமாகவே இருக்கும்.
[பக்கம் 17-ன் படம்]
சூதாட்டக்காரர்கள் தங்களுடைய சூதாட்டப் பழக்கத்தை ஆதரிக்க பொய்ச்சொல்லுதல், திருட்டுப் போன்றவற்றை அடிக்கடி நாடுகின்றனர்