சூதாட்ட வெறியர்—எப்போதும் இழப்போர்
“குடிவெறி, போதைப்பொருள் அடிமை ஆகியவை வியாதிகளாய் இருப்பது போன்றே சூதாட்ட வெறியும் ஒரு வியாதி ஆகும். இது மருந்தே இல்லாத அடிமையாக்கும் பழக்கமாகும். . . . தாங்கள் அடிமையாகி விட்டதை அதிக அதிகமான ஆட்கள் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள்,” என்று பிரான்ஸிலுள்ள பேராசிரியர் ஸான் அட அறிவித்தார். சூதாட்ட வெறியர் பெரும் தொகையை தோற்றபோதிலும், தோற்றதை சூதாடி மீட்கவேண்டும் என்ற தேவையால் பீடிக்கப்படுவதால் இன்னுமதிகத்தைத் தோற்கிறார்கள். “தோல்வியடைந்தோரில் பலர் தங்களுடைய ஏமாற்றத்தை விரைவிலேயே மேற்கொண்டுவிடுவர். ஆனால் சிலருக்கு சூதாடுவதற்கான தூண்டுதல் கட்டுப்படுத்தமுடியாத அளவில் இருப்பதால், அது அவர்களுடைய வாழ்க்கையை அழித்துவிடலாம்,” என்று பிரான்ஸிலுள்ள செய்தியாளர் ஒருவர் எழுதினார். “இந்தப் பழக்கத்தை விட்டுவிடுவதாக, தங்களுக்குத் தாங்களே வாக்குறுதி கொடுத்துக்கொண்டே இருப்பார்கள், ஆயினும் இது எப்போதுமே அவர்களை தன் கட்டுப்பாட்டில் வைக்கும். அவர்கள்தான் சூதாட்ட அடிமைகள்.”
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சூதாடி ஒருவர் ஒப்புக்கொண்டார்: “நீங்கள் ஒரு சூதாட்ட அடிமை என்றால், ரூலட் சக்கரத்தின் அருகில் அல்லது பிளாக்ஜாக் மேசையின் அருகில் உட்கார்ந்திருக்கையில், வேறு எதைப்பற்றியும் பொருட்படுத்தமாட்டீர்கள். அதிகளவான அண்ணீர் (adrenalin) உங்களுடைய நரம்புகளின் ஊடே செல்லும். உங்களிடத்தில் இருக்கும் ஒரு நயா பைசாவையும் விடாமல், ஒரே ஒரு சுற்றிற்காக அல்லது சீட்டு விழுவதற்காகப் பந்தயம் கட்டுவீர்கள். . . . உடலில் சுரக்கும் அண்ணீரின் துணையைக் கொண்டு, பல இரவும் பகலும் தொடர்ச்சியாக விழித்துக்கொண்டும் சீட்டுக்களையும் எண்களையும் பார்த்துக்கொண்டும் எப்போதும் ஏமாற்றும் அந்தப் பெரிய தொகையை ஜெயிப்பதற்காக காத்துக்கொண்டும் இருப்பீர்கள்.” பிறகு அவர் இவ்வாறாக முடிக்கிறார்: “சில நூறு ராண்டுகள் அல்லது சில ஆயிர ராண்டுகளோடு நிறுத்தாத என்னைப் போன்றவர்கள் பலர் இருக்கிறார்கள். எங்களிடமிருக்கும் அனைத்தையும் தோற்கும் மட்டும் தொடர்ந்து சூதாடுவோம். எங்களுடைய குடும்ப உறவு சரிசெய்ய முடியாத அளவுக்கு நொறுங்கி உள்ளது.”
ஜெயித்தாலும்சரி தோற்றாலும்சரி சூதாடவேண்டும் என்னும் ஆசை அவ்வளவதிகம் இருப்பதால், “பல சூதாடிகள் பல நாட்கள் தூக்கமின்றி, சாப்பிடாமல், கழிவறைக்கும்கூட போகாமல் இருப்பார்கள் என்று செயின்ட் ஜான் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் ஹென்ரி ஆர். லஸ்யுஃபுர் எழுதினார். ஆட்டத்தில் மூழ்கிவிடுவதால் மற்ற எல்லா காரியங்களையும் ஒதுக்கிவிடுவர். ஆவலோடு காத்திருக்கும் அந்த நேரத்தில் ஒரு ‘கிளர்ச்சி’யும்கூட இருக்கிறது. இது வியர்க்கும் உள்ளங்கைகள், வேகமான இதயத் துடிப்பு, குமட்டல் போன்றவற்றால் அடையாளம் காணப்படுகிறது.”
தன் நீண்டகால பழக்கத்திற்கு, ஜெயிப்பது ஒரு உந்தும்சக்தியாக இருக்கவில்லை, ஆனால் சூதாட்டத்திற்கே உரிய “கிளர்ச்சி”தான் காரணம் என்பதை முன்னாள் சூதாட்ட அடிமை ஒருவர் ஒப்புக்கொள்கிறார். “சூதாட்டம் மிதமிஞ்சியளவில் தீவிரமான உணர்ச்சிகளைத் தேவைப்படுத்துகிறது” என்று அவர் கூறினார். “ரூலட் சக்கரம் சுழன்றுகொண்டிருக்கிறது, சந்தர்ப்பம் பதிலளிக்க காத்துக்கொண்டிருக்கிறீர்கள், உங்களுடைய தலை சுற்றி மயங்கி விழும் ஒரு தருணமும் இருக்கிறது.” “நீங்கள் 10,000 பிரான்ஸ் பிராங்கை குதிரையின் மீது பந்தயம் வைத்து, அது ஓடி முடிப்பதற்கு 100 மீட்டர் தூரமே மிச்சமிருக்கையில், யாராவது வந்து உங்களுடைய மனைவி அல்லது அம்மா இறந்துவிட்டதாக கூறினாலும், அதைப்பற்றி பொருட்படுத்த மாட்டீர்கள்,” என்பதாக பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த சூதாடி ஆன்டரா ஒப்புக்கொள்கிறார்.
ஆன்டரா தான் அதிகப் பணத்தை இழந்த பின்னரும் எவ்வாறு தொடர்ந்து சூதாடமுடிந்தது என்பதை விவரிக்கிறார். அவர் வங்கிகள், நண்பர்கள், மிக உயர்ந்த அளவு வட்டிக்கு கடன் கொடுப்போர் ஆகியவர்களிடமிருந்து கடன் வாங்கினார். அவர் காசோலைகளைத் திருடினார், தபால் நிலையத்தின் சேமிப்பு கணக்குப் புத்தகங்களை மோசடி செய்தார். அவர் சூதாட்ட அரங்கங்களுக்குச் செல்கையில் தனிமையில் இருக்கும் பெண்களை மயக்கி, பின்னர் அவர்களுடைய கடன் அட்டையுடன் மறைந்துவிடுவார். “அப்போது ஆன்டரா தன்னுடைய அவலமான பணநிலவரத்தை எப்போதேனும் ஒழுங்குபடுத்த முடியுமா என்று இனிமேலும் கவலைப்படவில்லை. அவர் அலைந்து திரிந்ததற்கெல்லாம் ஒரே காரணம் சூதாட்டம் அவரை ஆட்டிப்படைத்ததுதான்,” என்று பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் எழுதினார். அவர் குற்றச்செயலினிடமாக திரும்பினார், சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருடைய திருமணம் முறிந்தது.
அநேக சந்தர்ப்பங்களில், போதைப்பொருள் அடிமைகள், குடிவெறியர் ஆகியோர் போன்றே சூதாட்ட வெறியரில் பலர் தொடர்ந்து சூதாடுவார்கள். இதனால் அவர்களுடைய வேலை, தொழில், ஆரோக்கியம், இறுதியில் அவர்களுடைய குடும்பம் பலியானபோதிலும் தொடர்ந்து சூதாடுவார்கள்.
சமீப காலத்தில் சூதாட்டத்திற்கென்று பிரான்ஸில் பல நகரங்கள் தங்களுடைய கதவுகளைத் திறந்துள்ளன. மற்ற தொழில்கள் நலிந்தபோது, அடகுக்கடைகள் தங்கள் தொழிலில் செழித்தோங்குகின்றன. சூதாடிகள் பெரும்பாலும் தங்களுடைய எல்லா பணத்தையும் தோற்றுவிடுவார்கள், வீட்டிற்கு செல்ல பெட்ரோலுக்காக தங்களுடைய மோதிரங்கள், கடிகாரங்கள், துணிகள் மற்றும் ஏனைய விலை உயர்ந்த பொருட்களை அடகு வைப்பார்கள் என்று முதலாளிகள் கூறுகின்றனர். ஐக்கிய மாகாணங்களில், கடற்கரை நகரங்களில் புதிய அடகுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன; சில இடங்களில் மூன்று அல்லது நான்கு கடைகள் வரிசையாக உள்ளன.
சிலர் சூதாட்டப் பழக்கத்தை ஆதரிப்பதற்காக, குற்றச்செயல் புரியும் வாழ்க்கையிடமாகவும்கூட திரும்பியுள்ளனர். சமீபகாலம்வரை எடுக்கப்பட்ட சுற்றாய்வு, பேராசிரியர் லஸ்யுஃபுரின் பிரகாரம், “சூதாட்ட வெறியரிடையே பல்வேறு சட்டவிரோத நடத்தைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன . . . போலி காசோலை, மோசடி, திருட்டு, அபகரிப்பு, ஆயுதங்களுடன் கொள்ளையடித்தல், பந்தயம் வைத்தல், பணமோசடி, ஏமாற்றுதல், திருட்டுப் பொருட்களை விற்பனைசெய்தல்.” இவற்றோடுகூட சூதாடிகள் தங்களுடைய முதலாளிகளிடமிருந்து திருடும் உடலுழைப்பு தேவைப்படாத குற்றங்களையும் (white-collar crimes) புரிகின்றார்கள். சூதாட்ட வெறியருக்கான கல்வி மற்றும் மருத்துவ நிலையத்தின் இயக்குநர் கிர்ரே டி. ஃப்யுகர் கூற்றின்படி, ஆயிரக்கணக்கானோரில் 85 சதவீத சூதாட்ட வெறியர் என்று நிரூபணமானவர்கள், தங்களுடைய முதலாளிகளிடத்திலிருந்து திருடியதாக ஒப்புக்கொண்டார்கள். “பார்க்கப்போனால், முழுக்கமுழுக்க பொருளாதார கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால், சூதாட்ட வெறி தெள்ளத்தெளிவாகவே, குடிவெறி, போதைப்பொருள் அடிமை ஆகியவற்றைக் காட்டிலும் மிகவும் கொடியது,” என்று கூறினார்.
மேற்கொண்டு நடத்தப்பட்ட சுற்றாய்வில், சுமார் மூன்றில் இரண்டு பங்கு சிறையிலடைக்கப்படாத சூதாட்ட வெறியர்களும், சிறையிலடைக்கப்பட்டவர்களில் 97 சதவீதத்தினர், சூதாடவும், சூதாட்டம் சம்பந்தமான கடனை அடைக்கவும் பணத்தை பெறுவதற்காக சட்டவிரோத செயலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்கள். ஐக்கிய மாகாணங்களில், மெக்ஸிகோ கடற்கரையோர நகரங்களில் அரசாங்க அனுமதிபெற்ற சூதாட்டம் செழித்தோங்கும் இங்கு, 1993-ல் 16 வங்கி கொள்ளைகள் நடந்தன, இது கடந்த ஆண்டைவிட நான்குமடங்கு அதிகரிப்பு ஆகும். தன் சூதாட்டப் பழக்கத்தில் தொடர்ந்து ஈடுபடுவதற்காக ஒருவர் மட்டும் மொத்தம் எட்டு வங்கிகளில், தொகை $89,000-ஐக் கொள்ளையடித்தார். மற்ற வங்கிகள் கடன்காரர்களுக்குப் பெரும் தொகையைத் திருப்பிக்கொடுக்கவேண்டிய கட்டாயத்தால், துப்பாக்கி முனையில் சூதாடிகளால் கொள்ளையடிக்கப்பட்டன.
“சூதாட்ட வெறியர், பழக்கத்தை விடுவதற்கு முயற்சி செய்யும்போது புகைபிடிப்போர் அல்லது போதைப்பொருள் அடிமை போன்றே பின்னடைவு அறிகுறிகளை அனுபவிக்கிறார்கள்,” என்று தி நியூ யார்க் டைம்ஸ் கூறுகிறது. ஆயினும், சூதாட்டப் பழக்கத்தை ஒழிப்பது மற்ற பழக்கங்களைக்காட்டிலும் மிகவும் கடினம் என்று சூதாடிகள் ஒப்புக்கொள்கிறார்கள். “எங்களில் சிலர் குடிவெறி பழக்கம், போதைப்பொருள் பழக்கம் இவற்றையும் கொண்டிருந்தோம். மற்ற எந்தப் பழக்கத்தைக் காட்டிலும் சூதாட்ட வெறி மிகவும் கொடுமையானது என்பதை நாங்கள் அனைவரும் ஒத்துக்கொள்கிறோம்,” என்று ஒருவர் கூறினார். ஹர்வார்டு பல்கலைக்கழகத்திலுள்ள அடிமையாதல் ஆய்வு மையத்தின் டாக்டர் ஹவர்டு ஷஃப்பர் கூறுகையில், பழக்கத்தை நிறுத்த முயலும் சூதாட்ட வெறியரில் குறைந்தபட்சம் 30 சதவீதத்தினர் “எரிச்சலடைதல், வயிற்றுக்கோளாறு, சீரற்ற தூக்கம், இயல்புக்கும் உயர்வான இரத்த அழுத்தம், நாடித் துடிப்பு போன்ற அடையாளங்களை வெளிக்காட்டுகிறார்கள்.”
அ.ஐ.மா., மெரிலாண்டிலுள்ள பால்டிமோரில் உள்ள சூதாட்ட நோய்க்குறியியல் தேசிய மையத்தின் இயக்குநர் டாக்டர் வலரி லுரன்ஸ் கூறியபோது, அவர்கள் தொடர்ந்து சூதாடிக்கொண்டிருந்தாலும் வெறிகொண்ட “சூதாடிகள் மருத்துவ பிரச்சினைகளை எதிர்ப்படுகிறார்கள்: தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி, சுவாசிப்பதில் கடினம், இருதயவலி, இருதய குருதி ஊட்டக் குறைவு, கை கால் மரத்துவிடுதல்.”
பிறகு, தற்கொலைகளும் இருக்கின்றன. பிரபலமாக அறியப்பட்டுள்ள “சாவுக்கேதுவல்லாத அடிமையாதல்” மரணத்தை ஏற்படுத்துகிறதென்றால், அதைவிட எது கொடியதாக இருக்கமுடியும்? உதாரணமாக, அமெரிக்காவின் ஒரு மாவட்டத்தில், சமீபத்தில் சூதாட்ட அரங்குகள் திறக்கப்பட்டன. அங்கு, “தற்கொலையின் வீதம் விளக்கமுடியாத வகையில் இரட்டித்துள்ளது. இந்த அதிகரிப்பை உடல் ஆரோக்கிய அதிகாரிகள் எவரும் சூதாட்டத்துடன் இணைக்க விரும்பவில்லை,” என்று தி நியூ யார்க் டைம்ஸ் மேகஸின் அறிக்கை செய்தது. தென் ஆப்பிரிக்காவில் மூன்று சூதாடிகள் ஒரே வாரத்தில் தற்கொலை செய்துகொண்டார்கள். சூதாட்டத்தினால் மற்றும் அதற்காக சட்டப்படி அல்லது சட்டவிரோதமாக ஏற்பட்ட கடனால் நிகழ்ந்த தற்கொலைகளின் எண்ணிக்கை அறியப்படவில்லை.
குறடைப்போல் பிடித்திருக்கும் சூதாட்டத்தின் பிடியிலிருந்து விடுபடுவதற்கான வழி தற்கொலை என்பது மிகவும் பரிதாபத்திற்குரியது. எவ்வாறு சிலர் இந்தப் பழக்கத்தை நிறுத்தும் வழியைக் கண்டார்கள் என்பதை அடுத்தக் கட்டுரையில் கவனியுங்கள்.
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
அடகுக்கடைகள் செழித்தோங்குகின்றன—அவ்விதமே குற்றச்செயலும்