உலகத்தைக் கவனித்தல்
சூனியக்காரி-வேட்டை இன்னும் இருக்கிறது
இந்திய ஆதிவாசிகளின் கிராமப்பகுதிகளில் இரண்டுமாத காலத்தில் ஒரு டஜனுக்கும் அதிகமான பெண்கள் சூனியக்காரிகள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, சீற்றங்கொண்ட கும்பல்களால் கொல்லப்பட்டனர் என இந்தியா டுடே அறிக்கைசெய்கிறது. “மற்றுமநேகப் பெண்கள் அடிக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, அம்மணமாக ஊர்வலத்தில் நடத்தப்பட்டு, மிருகங்களைப்போல் மிகவும் தாழ்வாக நடத்தப்பட்டு, தங்களுடைய கிராமங்களை விட்டுத் துரத்திவிடப்பட்டிருக்கின்றனர்.” கிராமம் கிராமமாகச் சென்ற மத ஊர்வலங்களைத் தொடர்ந்து இந்தத் திடீர்க் கிளர்ச்சி தொடங்கியது. இந்தப் பழக்கம் ஒரு சமுதாய சீர்திருத்த இயக்கத்திற்கும் குற்றச்செயல்களின் குறைப்புக்கும் வழிநடத்தியது. ஆனால் அந்த ஊர்வலங்களில் பங்கேற்ற சில பெண்கள் “ஆட்கொள்ளப்பட்டு,” உள்ளூர் பிரச்னைகளுக்குக் காரணமான சூனியக்காரிகள் என்று கிராமத்தின் சில பெண்களை அடையாளம் காட்டத் தொடங்கினர். யாரோ ஒருவரைக் கொலைசெய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தால் மரித்த ஒருவரை அவள் உயிர்ப்பிப்பது போன்ற குற்றமின்மையை மெய்ப்பிக்கும் ஒரு “சோதனையில்” தவறுதல் உடனடி தண்டனையை அர்த்தப்படுத்தியது. பில்லிசூனியத்தில் உள்ள நம்பிக்கையே இதற்கு அடிப்படை காரணமாகக் கூறப்படுகிறது. ஒரு மானிடவியல் நிபுணர் கூறுகிறபடி, “ஆதிவாசிகளின் சமுதாயத்தில், கண்ணூறுக்கு (evil eye) எதிராகச் செலுத்துவதற்கும் தங்களுடைய விருப்பமான குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கும் தங்களுடைய விருப்பத்தை மற்றவர்களிடம் புகுத்துவதற்கும் வல்லமையைப் பெற, இயற்கை கடந்த சக்திகளைப் பயன்படுத்திக்கொள்வதற்கான ஓர் உந்துவிப்பிலிருந்து தோன்றுகிறதாகும்” பில்லிசூனியம். (g93 7/22)
துப்புத்துலக்கும் பெண்கள்
“அடுத்த ஷெர்லாக் ஹோம்ஸ் ஒரு பெண்ணாகவும் இருக்கலாம்,” என்று ஜப்பானின் ஆஸாஹி ஈவ்னிங் நியூஸ் கூறுகிறது. டோக்கியோவில் உள்ள ஒரு புதிய பள்ளியில், முந்நூறு மாணவ மாணவிகள் துப்புத்துலக்குபவராவதற்குப் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கின்றனர். அவர்களில் மூன்றிலிரண்டு பகுதிக்கு அதிகமானோர், பெரும்பாலும் தங்களுடைய 20-களில் இருந்து 40-களின் தொடக்க வயதில் உள்ள பெண்கள். துப்பறிதல் அவர்களுக்குப் பல வித்தியாசமான காரணங்களுக்காகக் கவர்ச்சிகரமாக உள்ளது. “தகுந்த முறையில் மலர்களை அடுக்குவது எப்படி, கிமோனோ உடையணிவது எப்படி என்று பெண்களுக்குக் கற்பிக்கும் பழமையான படிப்புகள் அவளைத் திருப்திப்படுத்துபவையாக இல்லாததால் அதில் சேர்ந்துகொண்டதாக,” 46 வயது இல்லத்தரசி ஒருத்தி அறிக்கை செய்தாள். மற்றவர்களுக்கு இந்தப் பயிற்சி ஒரு விருப்பவேலையைவிட அதிகமான ஒன்றாக இருக்கிறது. அந்தப் பள்ளியில் பாதிக்குமேல் உள்ள இல்லத்தரசிகள் தங்களுடைய கணவன்மார்களுக்கு அறிவிக்கவே இல்லை. அவர்களில் சிலர் தங்களை ஏமாற்றும் தங்களுடைய துணைகளைச் சோதிப்பதற்கான திறமைகளை வளர்த்துக்கொள்ள வந்திருக்கின்றனர். (g93 8/8)
தகப்பன்களும் குற்றஞ்சாட்டப்படவேண்டும்
இப்பொழுது சிறிது காலமாக, தாய்மையை அடையப்போகும் பெண்கள் சாராயம், புகைத்தல் போன்ற பிறப்புக் குறைபாடுகளை ஏற்படுத்தும் பொருட்களைத் தவிர்த்து நல்ல சத்துள்ள உணவை உட்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். “இப்பொழுதோ, அதேபோன்ற முன்னெச்சரிக்கைகள் தகப்பனாகப் போகிறவர்களுக்கும் விடுக்கப்படுகின்றன,” என்று U.S.நியூஸ் & உவர்ல்ட் ரிப்போர்ட் கூறுகிறது. “ஓர் ஆண் ரசாயன விளைவுகளுக்குத் தன்னை ஆட்படுத்திக்கொள்வது குழந்தையைப் பிறப்பிப்பதற்கான அவனுடைய ஆற்றலைப் பாதிப்பது மட்டுமல்லாமல், அவனுடைய பிள்ளைகளின் எதிர்கால ஆரோக்கியத்தையும்கூட பாதிக்கிறது என்று புதிய ஆராய்ச்சி கூறுகிறது.” ஆண்கள் “தங்களுடைய மனைவிகளின் கருச்சிதைவுகளுக்கும் (miscarriages) தங்களுடைய பிள்ளைகளில் பல்வேறு இயல்பற்ற வளர்ச்சிகளுக்கும் (malformations) புற்றுநோய்களுக்கும், வளர்ச்சியில் ஏற்படும் தாமதங்களுக்கும் காரணமாக இருக்கின்றனர்,” என்று அத்தாட்சிக் காட்டுகிறது. போதை மருந்துகளும் (சிகரெட் புகைத்தலால் விளையும் கூட்டுப்பொருட்களையும் உட்படுத்தும்) மற்ற ரசாயனப் பொருட்களும் போதுமான பச்சைக் காய்கறிகள் மற்றும் வைட்டமின் C அதிகம் உள்ள பழங்கள் போன்றவை குறைந்த உணவுகளும் விந்துக்குக் கெடுதி விளைவிப்பதாக இப்போது தோன்றுகிறது. “வெகு காலமாக நாம் தாய்மார்களுக்கு மட்டும் கவனம் செலுத்தி வந்திருக்கிறோம். ஆரோக்கிய குழந்தைகளை உருவாக்குவதில் தகப்பனின் முக்கியத்துவம் அவ்வளவாகப் போற்றப்படாதிருந்திருக்கிறது,” என்பதாக நச்சு இயல் வல்லுநர் டேவ்ர லீ டேவிஸ் கூறுகிறார். (g93 7/22)
மற்றுமொரு ஃப்ளூ தாக்குதலா?
“இன்ஃபுளுவன்ஸா தொற்று நோய் ஒருவேளை அடுத்த சில வருடங்களில், தோன்றும்போது சந்தேகமின்றி அநேகமாக ஒரு பெரிய கொள்ளைநோயாக வரும்,” என தி நியூ யார்க் டைம்ஸ் மேகஸின் குறிப்பிடுகிறது. விஞ்ஞானிகள் கூறுகிறபடி, 1918-ல் தோன்றி 2 கோடி முதல் 4 கோடி மக்களைக் கொன்றதைப் போன்ற ஒரு ஃப்ளூ கொள்ளைநோய் வருவதற்குக் காலம் முற்றிவிட்டது. “அது ஒருமுறை தோன்றியதென்றால், மீண்டும் தோன்றுவதற்கு எல்லா எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன,” என்று மேரிலேண்டின் பெதெஸ்தாவில் உள்ள தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்கள் ஆராய்ச்சி நிலையத்தில் தொற்றுநோய்கள் துறையின் தலைவர் ஜான் R. லா மாண்டேக்னெ கூறுகிறார். எனினும், இன்ஃபுளுவன்ஸாவை ஏற்படுத்தும் தொற்றிப் பரவும் வைரஸ் வகையை உருவாக்கும் வைரஸின் வகைமாற்றம் ஏற்படுவது அபூர்வமே. இந்த நூற்றாண்டில் மூன்றே மூன்று தடவைகள்தான் அவை தோன்றியிருக்கின்றன: 1918-ன் ஸ்பேனிஷ் ஃப்ளூ என்றழைக்கப்படுவது, 1957-ன் ஆசிய ஃப்ளூ, மற்றும் 1968-ன் ஹாங்காங் ஃப்ளூ. இதில் கடைசி இரண்டும் ஒப்பிடும்போது அவ்வளவு கடுமையாக இருக்கவில்லை. இன்ஃப்ளுவன்ஸா வைரஸ் அடிக்கடி முன்கூட்டியே அறியமுடியாத வகையில் மாறுவதால், பொருத்தமான தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதற்குமுன் மரணத்துக்கேதுவான ஒரு திடீர்த்தாக்குதல் ஏற்படலாம். “வரலாறு ஒரு வழிகாட்டியாக இருக்குமானால், இந்த நூற்றாண்டு முடியுமுன் அந்த ஆண்டிஜன்களின் பெரிய மாற்றத்தை—கடுமையான ஃப்ளூவின் உலகளாவிய திடீர்த்தாக்குதலை நடத்துமளவுக்குப் பெரிதான ஒன்றை—நாம் ஒருவேளை எதிர்பார்க்கலாம்,” என்று கூறி அந்தக் கட்டுரை முடிவடைகிறது. (g93 7/22)
காதணிகளை மாற்றியணிதல் —ஓர் உடல்நல அபாயம்
“இரத்தத்தால் மாசுபடுத்தப்பட்ட காதணிகள் ஹெபடைடிஸ் B மற்றும் மனிதரில் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும் வைரஸ் [போன்றவற்றை உட்படுத்தும்] மிகப் பல உயிரிகளால் தாக்கப்படுவதற்கான ஒரு மூலமாக இருக்கிறது,” என்று ஒஹாயோ மாகாண பல்கலைக்கழகத்தின் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் மருத்துவர்களாகிய ஃபிலிப் D. உவால்சன் மற்றும் மைக்கல் T. ப்ராடி வலியுறுத்திக் கூறுகின்றனர். குழந்தை மருத்துவம் (Pediatrics) என்ற அமெரிக்க மருத்துவ பத்திரிகையில் வெளியிடப்பட்ட கூட்டுச் செய்திமடல் ஒன்றில், நுண்ணுயிர் நீக்கப்படாத காதணிகளை மாற்றியணியும் பரவலான பழக்கத்தைப்பற்றி கவலை தெரிவிக்கப்பட்டது. காதணிகளை மாற்றியணியும் வளரிளமைப் பருவத்தினரும் இளைஞரும் பாலுறவுகள் மற்றும் போதை மருந்து ஏற்றிக்கொள்ளும் ஊசிகளை மாற்றி உபயோகித்தல் போன்ற செயல்களால் ஏற்படும் உடல்நல அபாயங்களை அறிந்திருப்பர்; ஆனால் இந்தப் பழக்கத்தினால் வரும் அபாயங்களை அல்ல. “இரத்தத்தினால் தொற்றிப்பரவும் நோய்களைக் கடத்தும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது இது” என்று இரண்டு மருத்துவருமே கூறியிருக்கின்றனர். “தங்களுடைய நோயாளிகள் இப்பழக்கத்தைக் கைக்கொள்ளாதிருக்கும்படி அறிவுரை கூறுமாறு” மருத்துவர்களுக்குச் சிபாரிசு செய்தனர். (g93 8/8)
அபரிமித உணவு, ஆனாலும் ஊட்டக்குறைவு
உலக ஜனத்தொகை திடீரென அதிகரித்தபோதிலும், ஏழை நாடுகளில் 20 வருடங்களுக்கு முன் இருந்ததைவிட 15 கோடிக்கு அதிகமான எண்ணிக்கைக்குக் குறைவான ஜனங்களே ஊட்டச்சத்தின்றி இருந்தனர். “உண்மையிலேயே உணவு விநியோகமும் விவசாயிகளும் அதிகரிக்கும் ஜனத்தொகைக்கு நிகராக, அதைவிட அதிகமாகவும்கூட உற்பத்தி செய்திருக்கின்றனர்,” என்று ஐநா உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் இயக்குநர் ஜான் லூப்பின் கூறுகிறார். “உணவு உண்மையிலேயே தேவையிலுள்ள ஜனங்களுக்குச் சென்றெட்டுமானால், இப்பொழுதே, ஒவ்வொருவரையும் போஷிப்பதற்குப் போதுமான உணவு இருக்கிறது.” ஆனால் விசனகரமாக, “ஏழை நாடுகளில் சுமார் 780 [மில்லியன்] ஜனங்களுக்கு, அவர்களுடைய ஜனத்தொகையின் ஐந்தில் ஒரு பாகத்தினருக்கு உண்ண போதுமான உணவு கிடைப்பதில்லை. இரண்டு பில்லியன் ஜனங்கள் தங்கள் வயிற்றை நிறைத்துக்கொள்ள போதுமான உணவைப் பெற்றாலும், அவர்களுக்குத் தேவையான வைட்டமின்களும் தாதுப்பொருட்களும் கிடைப்பதில்லை. . . . ஒவ்வொரு நாளும் 40,000 சிறுபிள்ளைகள் வரை மரிக்கின்றனர். அதற்குப் பாதியளவு காரணம் போதுமான ஊட்டச்சத்து இல்லாதது எல்லா வகையான நோய்களுக்கும் அவர்களை ஆளாக வைத்தது,” என்று தி இகானமிஸ்ட் அறிக்கை செய்கிறது. மறுபட்சத்தில், மட்டுமீறிய ஊட்டச்சத்தும், சமுதாயத்தின் செழிப்பு மிகுந்த வகுப்பினர் மத்தியில் இருதய நோய், குறிப்பிட்ட புற்று நோய்கள் போன்றவற்றை உண்டுபண்ணுவதன் மூலம் கெடுதி விளைவிக்கிறது. (g93 7/22)
கெடுதி விளைவிக்கும் பொழுதுபோக்கு
“இழிவு, அம்மணம், பாலுறவு, வன்முறை, கொலைகள் போன்றவை நிறைந்த வரையறையற்ற திரைப்படங்களுக்காகத் திரைப்பட உலகு வெட்கப்படவேண்டும்.” இந்தக் கூற்று USA டுடே என்ற செய்தித்தாளில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு முழுப்பக்க விளம்பரத்தின் ஒரு பாகமாக இருந்தது. அவ்விளம்பரத்தின் பிரகாரம், பெரிய டிவி கட்டமைப்பு (network) ஒன்று “தற்புணர்ச்சியைப் பற்றியும் பிணத்தை அப்புறப்படுத்தும் பொறுப்பை மேற்கொள்பவர்கள் இறந்தவர்களோடு பாலுறவு கொள்ளுதல் பற்றியும் சிறு நாடகங்களைக் காட்டும், இளைஞருக்கு விருப்பமான” ஒரு நிகழ்ச்சியையும் வெறுக்கத்தக்க மற்ற நிகழ்ச்சிகளையும் அனுமதித்திருக்கிறது. டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதன் மூலம், “16 வயதுள்ள சராசரி பிள்ளை 2,00,000-க்கும் அதிகமான வன்முறை செயல்களையும் 33,000 கொலைகளையும் பார்த்திருக்கிறது,” என்று அவ்விளம்பரம் குறிப்பிட்டது. (g93 8/8)
காசு விழுங்கிகள்
காசுகளை விழுங்கியதால் அதிக செலவாகும் X கதிர்கள் எடுப்பதற்காக ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பிள்ளைகள் மருத்துவமனை அவசர சிகிச்சை அறைகளுக்குக் கொண்டுபோகப்படுகின்றனர். இவ்வாறு உட்சென்ற காசுகளில் பெரும்பாலானவை கெடுதி ஒன்றும் விளைவிக்காமல் வெளியே வந்துவிடுகின்றன. ஆனால் அவ்வப்போது ஒரு காசு உணவுக் குழாயில் சிக்கிக்கொள்கிறது. அது உணவுக் குழாயைத் துளைக்கும்போது, உள்ளுக்குள் இரத்தக் கசிவு, நோய்த் தாக்கல், சில நேரங்களில் மரணம் போன்றவற்றை விளைவிக்கிறது. விமான நிலைய பாதுகாப்புப் பணியில் சில நேரங்களில் பயன்படுத்தப்படுவதைப் போன்ற, ஓர் எளிய, முழுவதும் பாதுகாப்பான, கையில் வைத்து உபயோகிக்கும் உலோகக் கண்டுபிடிப்பு இயந்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதை உபயோகித்துக் குழந்தை மருத்துவர்கள் விழுங்கப்பட்ட காசு வயிற்றின் எப்பகுதியில் உள்ளதென்று கண்டுபிடிக்கலாம். இந்த இயந்திரம், “கண்டுபிடிப்பதற்கு $300-க்கு மேல் செலவாகும்” அவசர சிகிச்சை அறைகளுக்கு எடுத்துக்கொண்டு செல்லப்படுவதைத் தவிர்க்கலாம் என்று இல்லினாய்ஸில் உள்ள குழந்தைகள் அவசர மருத்துவ நிலைய இயக்குநரும், இத்தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தவருள் ஒருவருமான டாக்டர் சைமன் ரஸ் என்பவர் சொல்லுகிறார். அதன் திறமையாலும் குறைந்த செலவாலும் இத்தொழில்நுட்பம் விரைவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது என்று குழந்தை மருத்துவம் மற்றும் குழந்தை மருத்துவ அவசர சிகிச்சையின் பத்திரிகையில் (Journal of Pediatrics and Pediatric Emergency Care) அறிக்கை செய்யப்பட்டது. (g93 8/8)
கேஃபின் மீது பழிசுமத்துதல்
மிதமிஞ்சி காபி குடிப்பவர்கள் திடீரென தங்களுடைய பழக்கத்தை நிறுத்தும்போது தலைவலிகள், சோர்வு, களைப்பு, கவலை போன்றவற்றையும், தசைவலி, குமட்டல், வாந்தி போன்றவற்றையும்கூட தெரிவிக்கின்றனர். இப்போது, தினமும் ஓரிரு கப் காபி அல்லது டீ மட்டுமே குடிப்பவர்களுக்கும் அல்லது இரண்டு கேன்கள் சாராயமற்ற ஆனால் கேஃபின் (caffeine) அடங்கியுள்ள பானத்தைக் குடிப்பவர்களுக்கும் அவற்றை இரண்டு நாட்களுக்கு உட்கொள்ளாமலே இருப்பவர்களுக்கும்கூட இந்த நோய் அறிகுறிகள் ஏற்படுகின்றன என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். ஒரு மருத்துவரைக் காணவேண்டும் என்று அவர்கள் உணரும் அளவுக்கு நிறுத்தத்தின் விளைவுகள் மிகக் கடுமையாய் இருக்கலாம். வார இறுதிகளில் அலுவலக காபி மெஷினிலிருந்து விலகியிருப்பவர்களும் கேஃபின் இல்லாத சோடாக்களைக் குடிக்கத் தொடங்கியவர்களும் அறுவை சிகிச்சைக்குமுன் பட்டினி கிடக்கவேண்டிய நோயாளிகளும் பலியாட்களாகலாம். கேஃபின் நிறுத்தத்திற்குப் பொருந்துகிற தலைவலிகளையும் மற்ற நோய் அறிகுறிகளையும் தெரிவிக்கும் நோயாளிகள் கேஃபின் உட்கொள்ளும் அளவைப் பதிவு செய்து வைக்கும்படி மருத்துவர்கள் ஆலோசனை கொடுக்கப்பட்டிருக்கின்றனர். தங்களுடைய கேஃபின் உட்கொள்ளுதலைக் குறைக்க விரும்புபவர்கள் படிப்படியாகக் குறைக்கும்படி அறிவுரை வழங்கப்படுகின்றனர். கேஃபின், ஆகவே காபி, சரீரப்பிரகாரமாக அடிமைப்படுத்தக்கூடிய மருந்து என வகைப்படுத்தப்படவேண்டுமா என்ற கேள்வியையும் அந்த ஆராய்ச்சி எழுப்பிற்று. (g93 7/22)
கொலம்பியாவில் கருக்கலைப்புகள்
கொலம்பியாவில் சுமார் ஒன்றரைக் கோடி பெண்கள் குறைந்தது ஒரு முறையாவது கருக்கலைப்புச் செய்துகொண்டிருக்கின்றனர். அந்த எண்ணிக்கை அந்நாட்டில் குழந்தையை ஈன்றெடுக்கும் வயதிலுள்ள எல்லா பெண்களின் 20 சதவீதத்திற்கு அண்மையில் இருக்கிறது. கருக்கலைப்புச் சம்பந்தமான சிக்கல்களினால் அநேக பெண்கள் மரிக்கின்றனர். “பொகோடாவின் தாய்-சேய் நிலையத்தில், கருக்கலைப்புப் பெரும் எண்ணிக்கையில் தாய்மார்களின் மரணங்களை ஏற்படுத்துகிறது,” என்று செமான கொலம்பிய பத்திரிகை அறிக்கை செய்கிறது. கொலம்பியாவில் ஒவ்வொரு வருடமும் சுமார் 4,00,000 கருக்கலைப்புக்கள் செய்யப்படுவதாகக் கணக்கிடப்பட்டது. அதாவது ஒவ்வொரு மணிக்கும் சராசரி சுமார் 45 கருக்கலைப்புகள் செய்யப்படுகின்றன. (g93 8/8)