உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g93 12/8 பக். 5-8
  • இனம் ஏன் அத்தகைய ஒரு பிரச்னை?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இனம் ஏன் அத்தகைய ஒரு பிரச்னை?
  • விழித்தெழு!—1993
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அடிமை வியாபாரமும் இனத்தவரும்
  • மதமும் இனத்தவரும்
  • போலி அறிவியலும் இனத்தவரும்
  • இனக்கொள்கையின் வெறுக்கத்தக்க விளைவுகள்
  • எல்லா இனத்தவரும் சமாதானத்தோடு ஒன்றுசேர்ந்து வாழும்போது
    விழித்தெழு!—1993
  • இனவேற்றுமை உணர்வுகள் சார்ந்த தப்பெண்ணங்களை நான் எவ்விதம் மேற்கொள்ளலாம்?
    விழித்தெழு!—1989
  • இனத்தைப் பற்றி கர்வம் கொள்ளலாமா?
    விழித்தெழு!—1998
  • இனம் என்பது என்ன?
    விழித்தெழு!—1993
மேலும் பார்க்க
விழித்தெழு!—1993
g93 12/8 பக். 5-8

இனம் ஏன் அத்தகைய ஒரு பிரச்னை?

பதிவுசெய்யப்பட்ட வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே, “அவர்களுக்கும்,” “எங்களுக்கும்,” என்ற கருத்து ஜனங்களுடைய எண்ணத்தில் மேலோங்கி இருந்துவந்திருக்கிறது. தாங்கள் மட்டும்தான் எல்லாவற்றையும் சரியான வழியில் செய்யத் தெரிந்த இயல்பான மனிதர்கள் என்று அநேகர் தங்களைப்பற்றி தாங்களே நம்பிக்கை வைத்திருக்கின்றனர். இதைத்தான் விஞ்ஞானிகள் இனமையக் கொள்கை (ethnocentrism) என்றழைக்கின்றனர். இது ஒருவருடைய சொந்த ஜனங்கள் மற்றும் அவர்களுடைய வழிகள் மட்டும்தான் மதிப்புள்ளவை, முக்கியத்துவம் வாய்ந்தவை என்ற கருத்தாகும்.

உதாரணமாக, பண்டைய கிரேக்கர்கள், ‘காட்டுமிராண்டிகளைப்பற்றி’ அதிக உயர்வாக நினைக்கவில்லை. கிரேக்கர் அல்லாத ஒருவரைக் குறிக்க அவர்கள் இந்தப் பதத்தைப் பயன்படுத்தினர். “காட்டுமிராண்டிகள்” (barbarians) என்ற அந்த வார்த்தை, கிரேக்கர்களின் காதுகளுக்கு பிறமொழிகள் அர்த்தமில்லாத “பார்-பார்” (bar-bar) என்பதைப்போன்று ஒலித்த விதத்திலிருந்து உருவானது. அவர்களுக்கு முன் வாழ்ந்திருந்த எகிப்தியர்களும் அவர்களுக்குப் பின் வாழ்ந்துவந்த ரோமர்களும்கூட மற்ற ஜனங்களைக் காட்டிலும் தங்களை உயர்ந்தவர்களாகவே எண்ணினர்.

நூற்றாண்டுகளாக சீனர்கள் தங்கள் நாட்டை ட்ரூங் கூயா, அல்லது மைய ராஜ்யம் என்று அழைத்துவந்தனர். காரணம் சீனா, இந்த அண்டத்தின் மையமாக இல்லாவிடினும், இந்த உலகத்தின் மையமாக திகழ்கிறது என்று அவர்கள் நம்பிவந்தனர். பின்னர், சிவந்த மயிரையும் பச்சை கண்களையும் செவ்வண்ண தோலையும் கொண்ட ஐரோப்பிய மிஷனரிகள் சீனாவுக்கு வந்தபோது, சீனர்கள் அவர்களுக்கு “வெளிநாட்டுப் பிசாசுகள்” என்று பெயர் சூட்டினர். அதேபோல, கிழக்கத்திய நாட்டவர் முதன்முதலாக ஐரோப்பாவுக்கும் வட அமெரிக்காவுக்கும் சென்றபோது, அவர்களுடைய சரிந்த கண்களும் விநோதமாகக் கருதப்பட்ட அவர்களுடைய பழக்கவழக்கங்களும் அவர்களைக் கேலிக்கும் சந்தேகத்திற்கும் எளிதில் இலக்காகும்படி செய்தன.

எனினும், மனிதவர்க்க வகைகள் என்ற புத்தகம் சொல்லுகிறபடி, கவனிப்பதற்கு ஒரு தனித்தன்மை வாய்ந்த உண்மை இருக்கிறது: “ஒருவருடைய [இன] உயர்குலத்தன்மையில் (superiority) நம்பிக்கை வைத்திருப்பது ஒரு காரியம்; ஆனால் அறிவியல் கண்டுபிடிப்புகளை உபயோகித்து அதை நிரூபிக்க முயற்சி செய்வது முற்றிலும் வேறுபட்ட காரியம்.” ஓர் இனத்தவர் மற்ற இனத்தவரைவிட உயர்வானவர்கள் என்று நிரூபிக்க எடுக்கும் முயற்சிகள் ஒப்பிடுகையில் புதியனவையே. “மனம் மற்றும் உடல் சார்ந்த வகையில் ஒன்றுக்கொன்று வேறுபடும் மனிதவர்க்கத்தின் இயற்கை அல்லது உயிரியல் இனத்தவர் இருக்கின்றனர் என்ற கொள்கை பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை உருவாகியிராத கருத்தாக இருக்கிறது,” என்பதாக மானிடவியல் வல்லுநர் அஷ்லீ மான்டகு எழுதினார்.

இன உயர்குலத்தன்மையைப்பற்றிய பிரச்னை 18-ம் மற்றும் 19-ம் நூற்றாண்டுகளில் அவ்வளவு பிரபலமாக ஆனது ஏன்?

அடிமை வியாபாரமும் இனத்தவரும்

அந்தக் காலத்திற்குள் லாபகரமான அடிமை வியாபாரம் அதன் உச்ச நிலையை அடைந்திருந்தது ஒரு முக்கிய காரணமாகும். லட்சக்கணக்கான ஆப்பிரிக்கர்கள் பலாத்காரமாக கொண்டுச்செல்லப்பட்டு ஐரோப்பாவிலும் அமெரிக்க நாடுகளிலும் அடிமைகளாக்கப்பட்டனர். ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் உலகின் வெவ்வேறு பாகங்களுக்கும் அனுப்பப்பட்டதால், அடிக்கடி குடும்பங்கள் சிதைந்துபோய் ஒருவரையொருவர் ஒருபோதும் பார்க்க முடியாமல் போயிற்று. கிறிஸ்தவர்களாக உரிமை பாராட்டிக்கொண்ட பெரும்பாலான அடிமை வியாபாரிகளும் அடிமை உரிமையாளர்களும் அத்தகைய மனிதாபிமானமற்ற செய்கைகளை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்?

கறுப்பு ஆப்பிரிக்கர்கள் இயற்கையிலேயே தாழ்ந்த இனத்தினர் என்ற கருத்தைப் பரப்புவதன் மூலம். “எல்லா நீக்ரோக்களையும், பொதுவாகவே மற்ற எல்லா இனத்தவர்களையும், இயற்கையிலேயே வெள்ளையருக்குத் தாழ்ந்தவர்கள்தான் என நான் சந்தேகப்படுவது பொருத்தமானதுதான்,” என்று 18-ம் நூற்றாண்டு ஸ்காட்லாந்து தத்துவஞானி டேவிட் ஹியூம் எழுதினார். உண்மையிலேயே, “[நீக்ரோக்கள்] மத்தியில் புத்திக்கூர்மையுடைய கண்டுபிடிப்புகளோ கலைகளோ அறிவியல்களோ ஒன்றுமில்லை,” என்பதை ஒருவர் காணமுடியும் என வலியுறுத்திக் கூறினார் ஹியூம்.

இருப்பினும், அத்தகைய உரிமைபாராட்டல்கள் தவறாகவே இருந்தன. தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா (1973) பின்வருமாறு குறிப்பிட்டது: “நூற்றுக்கணக்கான வருடங்களுக்குமுன் ஆப்பிரிக்காவின் பல்வேறு பாகங்களிலும் மிகவும் முன்னேற்றமடைந்த நீக்ரோ ராஜ்யங்கள் நிலவியிருந்தன. . . . 1200 மற்றும் 1600-க்கு இடையே, மேற்கு ஆப்பிரிக்காவின் டிம்பக்டூவில் ஒரு நீக்ரோ-அரேபிய பல்கலைக்கழகம் செழித்தோங்கியது. அது ஸ்பெய்ன், வட ஆப்பிரிக்கா, மற்றும் மத்தியக் கிழக்கு முழுவதிலும் புகழ்பெற்றுத் திகழ்ந்தது.” இருந்தபோதிலும், அடிமை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், கறுப்பர் வெள்ளையரைவிட தாழ்ந்த இனத்தவர், உண்மையில், மனித இனத்தவருக்கும் கீழ்ப்பட்ட இனத்தவராககூட இருந்தனர் என்ற ஹியூமைப் போன்ற தத்துவஞானிகளின் கருத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டனர்.

மதமும் இனத்தவரும்

அடிமை வியாபாரிகள் தங்களுடைய இனக்கொள்கை கருத்துக்களுக்கு மதத் தலைவர்களிடமிருந்து பேராதரவைப் பெற்றனர். 1450-களிலேயே, ரோமன் கத்தோலிக்க போப்புகளின் ஆணைகள் “புறமதத்தினர்,” “கிறிஸ்தவ எதிரிகள்” போன்றோரின் “ஆத்துமாக்கள்” ‘கடவுளுடைய ராஜ்யத்திற்காக’ ரட்சிக்கப்படும்பொருட்டு அவர்களைக் கீழ்ப்படுத்தி, அடிமைப்படுத்திக் கொள்வதற்காக அனுமதி கொடுத்தன. சர்ச்சின் ஆசீர்வாதங்களைப் பெற்ற காரணத்தால், ஆரம்பகால ஐரோப்பிய கடற்பயணிகளுக்கும் அடிமை வியாபாரிகளுக்கும் சொந்த நாட்டவரை மிருகத்தனமாக நடத்துவதைப்பற்றி அவர்களுடைய மனச்சாட்சி உறுத்தவில்லை.

“வரவிருக்கும் பத்தாண்டுகளில் உண்மையாய் இருப்பதுபோலவே, 1760-களில் கத்தோலிக்க, ஆங்கிலிக்கன், லூத்தரன், ப்ரிஸ்பிட்டேரியன், சீர்திருத்த சர்ச் போன்ற சர்ச்சுகளின் அங்கத்தினர்களாலும் இறைமையியலராலும் கறுப்பரை அடிமையாக்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டது,” என்று அடிமைத்தனமும் மனித முன்னேற்றமும் (Slavery and Human Progress) என்ற புத்தகம் கூறுகிறது. “எந்த நவீன சர்ச்சும் அல்லது பிரிவும் தங்களுடைய அங்கத்தினர் கறுப்பர் அடிமைகளைக் கொண்டிருக்கவோ அல்லது கறுப்பர் அடிமை வியாபாரத்தில் ஈடுபடுவதையும்கூட தடைசெய்ய முயற்சி செய்யவில்லை.”

சர்ச்சுகளில் சில சர்வலோக கிறிஸ்தவ சகோதரத்துவத்தைப்பற்றி பேசின. ஆனாலும் அவை இன முரண்பாட்டைத் தீவிரப்படுத்திய போதனைகளை ஆதரித்துவந்தன. உதாரணமாக, என்ஸைக்ளோப்பீடியா ஜுடெய்க்கா இவ்வாறு கூறுகிறது: “நீண்டகால போராட்டங்களுக்கும் நீண்ட இறைமையியல் பேச்சுவார்த்தைகளுக்கும் பின்னரே, ஸ்பெய்ன் நாட்டவர் தாங்கள் அமெரிக்காவில் கண்ட சொந்த இனத்தவரை ஆத்துமாக்களையுடைய மனிதர்களாக அங்கீகரித்தனர்.”

அதன் கருத்து என்னவென்றால், அத்தகைய சொந்த இனத்தைச் சேர்ந்த ஜனங்களின் “ஆத்துமாக்கள்” கிறிஸ்தவத்திற்கு மாற்றப்படுவதன் மூலம் ‘ரட்சிக்கப்படுமேயாகில்,’ சரீரப்பிரகாரமாக அவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டனர் என்பது முக்கியமற்றது என்பதே. மேலும் கறுப்பரின் நிலைமை என்று வரும்போது, எப்படியிருந்தாலும் அவர்கள் கடவுளால் சபிக்கப்பட்டவர்கள்தானே என்று அநேக மதத் தலைவர்கள் வாதாடினர். இதை நிரூபிக்கும் முயற்சியில் வேத எழுத்துக்கள் தவறாக பொருத்திக் காட்டப்பட்டன. ராபர்ட் ஜேமஸன், A. R. ஃபாஸெட், டேவிட் ப்ரெளன் போன்ற பாதிரிமார், பைபிளின்பேரிலான தங்களுடைய குறிப்புரையில்: “கானான் சபிக்கப்பட்டவன் [ஆதியாகமம் 9:25]—என்ற இந்தத் தீர்ப்பானது—எகிப்தியரின் சீரழிவு, காமின் வம்சத்தாராகிய ஆப்பிரிக்கரின் அடிமைத்தனம்—போன்றவற்றால் ஏற்பட்ட கானானியர்களின் அழிவில் நிறைவேற்றப்பட்டது.”—முழு பைபிளின்பேரில் திறனாய்வும் விளக்கவுரையும் (Commentary, Critical and Explanatory, on the Whole Bible).

கறுப்பினத்தவரின் முற்பிதா சபிக்கப்பட்டவர் என்ற போதனை வெறுமனே பைபிளில் போதிக்கப்படவில்லை. உண்மை என்னவென்றால், கறுப்பினத்தவர் கானான் வம்சத்திலிருந்தல்ல, ஆனால் கூஷ் வம்சத்தில் வந்தவர்களாவர். கறுப்பர்களுடைய இயற்கை உரிமைகளைப் பறித்து, அவர்களை அடிமைப்படுத்துவதை நியாயப்படுத்த, இந்த பைபிள் சாபத்தை உபயோகிப்பதுதானே, “உறுதியான நியமங்களால் ஆளப்படும்படி உண்மையுடன் விரும்புகிற எந்த நபருக்கும் இதை மனதில் ஏற்றுக்கொள்ள மிகக் கொடுமையானதாக இருக்கும் ஓர் ஊகமாகும்,” என்று 18-ம் நூற்றாண்டில், ஜான் ஊல்மன் வாதாடினார்.

போலி அறிவியலும் இனத்தவரும்

கறுப்பர் ஒரு தாழ்ந்த இனத்தவர் என்ற கொள்கையை ஆதரிக்கும் முயற்சியில் போலி அறிவியலும்கூட குரலை எழுப்பியது. இனத்தவரின் உயர்வுதாழ்வின்பேரில் கட்டுரை (Essay on the Inequality of Races) என்ற புத்தகத்தை 19-ம் நூற்றாண்டில் எழுதிய பிரெஞ்சு எழுத்தாளர் ஜோஸப் ட காபீனோ, தொடரவிருந்த அநேக அத்தகைய ஆராய்ச்சிகளுக்கு அடிகோலினார். அதில் காபீனோ, மனிதவர்க்கத்தின் சிறப்புத்தன்மையின் இறங்கு வரிசையில் அதை மூன்று தனி இனத்தவராகப் பிரித்தார்: வெள்ளை, மஞ்சள், மற்றும் கறுப்பு. ஒவ்வொரு இனத்தவரின் தனித்தன்மை வாய்ந்த பண்புகளும் இரத்தத்தின் வழியாக கடத்தப்பட்டன. இதன் காரணமாக கலப்புத் திருமணத்தால் ஏற்படும் எந்தக் கலப்பும் அந்த உயர்குலத்தன்மையின் குறைவிலும் அழிவிலும் விளைவடையும் என்று வலியுறுத்தினார் அவர்.

ஒரு காலத்தில், வெள்ளைநிற தோல், உயரமான உடல், இளம் பழுப்புநிற மயிர், நீலக் கண்கள் போன்றவற்றைக் கொண்ட மக்களாலான தூய்மையான இனத்தவர் வாழ்ந்து வந்ததாக காபீனோ வாதாடினார். அவர்களை ஆரியர்கள் என்று அவர் அழைத்தார். இந்தியாவுக்கு நாகரிகத்தையும் சமஸ்கிருதத்தையும் அறிமுகப்படுத்தியவர்களும் பூர்வீக கிரீஸ் மற்றும் ரோமின் நாகரிகங்களை ஸ்தாபித்தவர்களும் இந்த ஆரியர்களே என்று அவர் வாதாடினார். ஆனால் உள்ளூரின் தாழ்ந்த ஜனங்களோடு கலப்புத் திருமணங்கள் செய்துகொண்டதன் வழியாக, ஒரு காலத்தில் மேன்மை பொருந்திய இந்த நாகரிகங்கள், ஆரிய இனத்தவரின் மேதைகளோடும் சிறந்த பண்புகளோடும் இழக்கப்பட்டனர். தூய்மையான ஆரியருக்கு ஒத்திருக்கிற இன்னும் வாழ்ந்துவரும் ஜனங்கள் வட ஐரோப்பாவில் நார்டிக்கு மற்றும், விரிவு பொருத்தத்தில் ஜெர்மானிய ஜனங்களிடையே காணப்படுகின்றனர் என்பதாக காபீனோ உறுதிப்படுத்தினார்.

காபீனோவின் அடிப்படைக் கருத்துக்கள்—மூவின பிரிவு, இரத்த வம்சாவழி, ஆரிய இனத்தவர்—போன்றவை எந்தவொரு அறிவியல் ஆதாரத்தையும் கொண்டிருக்கவில்லை. இன்றைய அறிவியல் சமுதாயத்தால் அவை முழுவதும் நிராகரிக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், அவை மற்றவர்களால் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவர்களுள் ஹூஸ்டன் ஸ்டூவர்ட் சேம்பர்லின் என்ற ஆங்கிலேயர் ஒருவராக இருந்தார். அவர் ஜெர்மனியில் குடியேறி, ஜெர்மானியர்கள் மூலமாக மட்டுமே ஆரிய இனத்தவரின் தூய்மைத்தன்மை பாதுகாக்கப்படும் நம்பிக்கை இருக்கிறது என்ற கருத்தை வெற்றிச்சிறக்கச் செய்யுமளவுக்கு காபீனோவின் கருத்துக்களால் கிளர்ச்சியூட்டப்பட்டார். சேம்பர்லின் எழுதிய கருத்துக்கள் ஜெர்மனியில் பரவலாக படிக்கப்பட்டது, அதனுடைய விளைவும் வெறுக்கத்தக்கதாகவே இருந்தது என்று சொல்லவேண்டிய தேவையே இல்லை.

இனக்கொள்கையின் வெறுக்கத்தக்க விளைவுகள்

அடால்ஃப் ஹிட்லர், மைன் காம்ப்ஃப் (என் போராட்டம்) என்ற தனது புத்தகத்தில் ஜெர்மானிய இனத்தவர்தான் இந்த உலகை ஆளுவதற்கென தோன்றிய ஆரிய உயரினத்தவர் என வலியுறுத்திக் கூறினார். ஜெர்மானிய பொருளாதாரத்தைச் சீர்குலைத்ததற்குக் காரணமாயிருந்ததாக அவர் சொன்ன யூதர், இந்த மகிமையான முடிவுக்கு ஒரு தடையாக இருந்ததாக ஹிட்லர் கருதினார். இதன் காரணமாகவே யூதரையும் ஐரோப்பாவின் மற்ற சிறுபான்மையினரையும் முற்றிலும் அழிப்பது தொடர்ந்தது. இது மறுக்கமுடியாத வகையில் மனித வரலாற்றிலேயே உள்ள மிக இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாக இருந்தது. காபீனோ, சேம்பர்லின் போன்றோரை உட்படுத்திய இனக்கொள்கையினரது கருத்துக்களின் அழிவுக்கேதுவான விளைவு இதுவே.

எனினும், அத்தகைய வெறுக்கத்தக்க விளைவு ஐரோப்பாவிற்கு மட்டுப்படுத்தப்பட்டதாய் இல்லை. சமுத்திரத்தின் குறுக்கே அமைந்துள்ள புதிய உலகம் என்றழைக்கப்படும் பாகங்களிலும் இதேபோன்ற ஆதாரமற்ற கருத்துக்கள் அப்பாவி மக்களின் தலைமுறைகளுக்குச் சொல்லமுடியாத அளவு துன்பத்தைக் கொண்டுவந்தது. ஐக்கிய மாகாணங்களில் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு இறுதியாக ஆப்பிரிக்க அடிமைகள் விடுதலையாக்கப்பட்டனர். இருந்தாலும், அநேக மாகாணங்களில் மற்ற குடிமக்கள் அனுபவிக்கும் பல தனிச் சலுகைகளைப் பெறுவதிலிருந்து கறுப்பினத்தவரைத் தடைசெய்யும் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன. ஏன்? கறுப்பு இனத்தவருக்கு ஆட்சிப் பொறுப்புகள், அரசாங்கம் போன்றவற்றில் பங்கேற்க தேவையான அறிவுத் திறமை இல்லை என்பதாக வெள்ளை குடிமக்கள் கருதினர்.

அத்தகைய இனவேறுபாட்டுணர்ச்சிகள் எவ்வளவு ஆழமாக வேரூன்றியிருந்தன என்பது, இனக்கலப்புக்கு எதிரான ஒரு சட்டத்தை உட்படுத்திய ஒரு வழக்கினால் எடுத்துக்காட்டப்படுகிறது. இந்தச் சட்டம் வெள்ளையருக்கும் கறுப்பருக்கும் இடையே திருமணங்களைத் தடைசெய்தது. இந்தச் சட்டத்தை மீறிய ஒரு தம்பதிக்குத் தண்டனையளிக்கும்போது, ஒரு நீதிபதி இவ்வாறு சொன்னார்: “சர்வவல்லமையுள்ள கடவுள், வெள்ளையர், கறுப்பர், மஞ்சள், மலாய், சிவப்பு போன்ற இனத்தவரைப் படைத்து, அவர்களைத் தனித்தனி கண்டங்களில் இடமமர்த்தினார். அவருடைய இந்த ஏற்பாட்டை மீறுவதைத் தவிர இப்படிப்பட்ட திருமணத்துக்கு வேறு காரணங்கள் இருக்கமுடியாது.”

இந்த நீதிபதி ஏதோ 19-ம் நூற்றாண்டில் ஏதோ ஒரு பிற்பட்ட குக்கிராமத்திலிருந்து இதைச் சொல்லிவிடவில்லை. ஆனால் 1958-ல்—ஐ.மா. சட்டப்பேரவையிலிருந்து 100 கிலோமீட்டருக்குள் இருந்துகொண்டு அவ்வாறு சொன்னார்! உண்மையிலேயே, 1967 வரை ஐ.மா. உச்ச நீதிமன்றம் இனக்கலப்புத் திருமணங்களுக்கு எதிரான சட்டங்களைச் செல்லாதவையாக்கவில்லை.

அப்படிப்பட்ட பாரபட்சமுள்ள சட்டங்கள்—பள்ளிகளிலும் சர்ச்சுகளிலும் மற்ற பொது நிறுவனங்களிலும் பாகுபாடுகள், வேலைவாய்ப்பு மற்றும் வீட்டுவசதி அளிப்பதில் ஓரவஞ்சனை போன்றவை—உள்நாட்டுக் கலவரம், ஆர்ப்பாட்டங்கள், வன்முறை போன்றவற்றிற்கு வழிநடத்தின. இவை ஐக்கிய மாகாணங்களிலும் மற்றநேக இடங்களிலும் வாழ்க்கையின் உண்மைகளாகியிருந்தன. இவற்றால் ஏற்பட்ட உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஆகியவற்றை ஒரு பொருட்டாக கருதவில்லையென்றாலும், கவலை, வெறுப்புணர்ச்சி, தனிப்பட்டவரின் அவமதிப்புகள், துன்பங்கள் போன்றவை நாகரிகமடைந்த சமுதாயம் என்று அழைக்கப்படும் சமுதாயத்தின் அவமானமாகவும் வெட்கக்கேடாகவுமே கருதப்படமுடியும்.

இவ்வாறு, இனக்கொள்கை மனித சமுதாயத்தைத் துயருறச் செய்யும் பலமான பிரிவினை சக்திகளில் ஒன்றாகிவிட்டிருக்கிறது. நிச்சயமாக, நாம் அனைவரும் நம்முடைய சொந்த இருதயங்களை ஆராய்ந்து, நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்ளவேண்டியது அவசியமாக இருக்கிறது: ஓர் இனத்தவர் மற்றொரு இனத்தவரைவிட உயர்வானவர் என்று வெளிப்படையாக வலியுறுத்தும் போதனைகளை நான் தள்ளிவிடுகிறேனா? என்னில் எஞ்சியிருக்கும் இன உயர்குலத்தன்மையைப்பற்றிய உணர்ச்சிகளை என்னிலிருந்து அறவே அகற்றிவிட முயற்சிசெய்திருக்கிறேனா?

இதையும்கூட நாம் கேட்டுக்கொள்வது பொருத்தமாக இருக்கிறது: இன்று தலைவிரித்தாடும் இனவேறுபாடுகளும் கலவரங்களும், எப்பொழுதாவது ஒழிக்கப்படும் என்ற என்ன நம்பிக்கை இருக்கிறது? வேறுபட்ட பல நாட்டவரும் மொழியினரும், பண்பாட்டினரும் சமாதானத்தோடு ஒன்றுசேர்ந்து வாழமுடியுமா?

[பக்கம் 7-ன் படம்]

கறுப்பர் மனித இனத்தினருக்கும் கீழானவர்களாக அநேக வெள்ளையரால் கருதப்பட்டனர்

[படத்திற்கான நன்றி]

Reproduced from DESPOTISM—A Pictorial History of Tyranny

[பக்கம் 8-ன் படம்]

நாசிகளின் அழிப்பு முகாம்கள் இனக்கொள்கையினரது கருத்துக்களின் அழிவுக்கேதுவான ஒரு விளைவாக இருந்தன

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்