பைபிளின் கருத்து
மாயவித்தைகள் செய்வதில் ஆபத்து இருக்கிறதா?
‘மாயவித்தையின் ஒரு சூழ்நிலை நிலவுகிறது. திடீரென முழங்கும் முரசொலி அமைதியைக் கலைக்கிறது. துப்பாக்கிகளைச் சுமந்திருக்கும் சீருடையணிந்த இரு மனிதரையே எல்லா கண்களும் கூர்ந்து கவனிக்கின்றன. அவர்கள் தங்கள் துப்பாக்கிகளைத் தோளுக்கு நேரே வைத்து, டாம்பீகமாக உடையணிந்திருந்த சீன மாயவித்தைக்காரனை நோக்கி குறிவைக்கின்றனர். அவன் தன் நெஞ்சுக்கு முன் ஒரு சீன பிளேட்டைப் பிடித்திருக்கிறான். துப்பாக்கிகள் தீப்பொறி பறக்க முழங்குகின்றன. உடனடியாக மாயவித்தைக்காரன் இரத்த வெள்ளத்தில் தரையில் வீழ்கிறான். குண்டுகளைப் பிளேட்டினால் தடுத்து நிறுத்தும் மாயாஜாலம் துயரத்தில் முடிவடைகிறது.’ துப்பாக்கிகளில் ஒன்றின் வேலைசெய்யும் முறையில் ஏற்பட்ட தவறுதான் குண்டை விடுவித்து மாயவித்தைக்காரனின் நெஞ்சைத் துளைக்கும்படி செய்தது. இவ்வாறுதான் ஹென்றி கோர்டனின் மாயவித்தை உலகம் (Henry Gordon’s World of Magic) என்ற புத்தகம் விவரிக்கிறது.
வாழ்க்கையாகிய பரிசின் என்னே ஒரு விரயம்—எல்லாம் அவ்வகையான மாயவித்தையோடு தொடர்புள்ள மர்மம், கிளர்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்குப் போன்றவற்றுக்காகவே. நீங்களும் இவ்வாறுதான் பிரதிபலிக்கிறீர்களா? அல்லது வெறுமனே அப்படிப்பட்ட ஒரு காட்சியை அரங்கேற்றுவதோடு சம்பந்தப்பட்ட ஆபத்துக்களின் பாகம்தான் அது என்பதாக உணர்கிறீர்களா? உங்கள் பிரதிபலிப்பு என்னவாக இருந்தாலும், இந்த மாயாஜாலம் தவறியபோது அது மரணத்துக்கேதுவான ஆபத்தாக இருந்தது. இது நம்மை இவ்வாறு கேட்கத் தூண்டுகிறது: மாயவித்தைகளோடு சம்பந்தப்பட்ட அதிக நயவஞ்சகமான அபாயம் இருக்கிறதா? விடை காண, இந்தப் பழங்காலத்துக் கலையின் தொடக்கத்தைக் காண்போமாக.
வரலாறு முழுவதும் மாயவித்தையின் செல்வாக்கு
வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே, மனிதன் மாயவித்தையின் மர்மத்தால் சூழ்ச்சிசெய்யப்பட்டுக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறான். “‘மேஜிக்’ என்ற ஆங்கில வார்த்தை” “மேஜை” என்ற பெயரிலிருந்து வந்ததாகும். இது மாயமந்திர நடவடிக்கைகளில் தனித்திறம் பெற்ற பழங்கால பெர்சிய ஆசாரிய ஜாதி ஒன்றின் பெயராக இருக்கிறது. அதனுடைய மிகவும் அடிப்படையான அர்த்தத்தில், மாயவித்தை (magic) மனிதனின் இச்சைகளை நடப்பிக்க இயற்கை அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளைக் கட்டுப்படுத்தவோ வற்புறுத்தவோ எடுக்கும் ஒரு முயற்சியாக இருக்கிறது. பொ.ச.மு. 18-ம் நூற்றாண்டு எகிப்து மாயமந்திரத்தை நடப்பிக்கும் ஆசாரியர்களை உபயோகித்து வந்தது. பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டில் பாபிலோனியாவின் பண்டைக்கால கல்தேயரின் மதத்திலும் மாயவித்தை ஒரு முக்கிய பாகத்தை வகித்துவந்தது. (ஆதியாகமம் 41:8, 24; ஏசாயா 47:12-14; தானியேல் 2:27; 4:7) இந்தச் செல்வாக்குப் பூர்வீக கிரேக்கர்கள் மத்தியிலும் ரோமர்கள் மத்தியிலும் இடைக்காலங்களினூடே நம்முடைய 20-ம் நூற்றாண்டு வரை நிலவியிருந்தது.
மாயவித்தையின் வித்தியாசமான வகைகளை அநேக வழிகளில் பிரிக்கலாம். ராபர்ட் A. ஸ்டெபின்ஸ் மாயவித்தைக்காரன் (The Magician) என்ற தனது புத்தகத்தில் மாயவித்தையை மூன்று வகைகளாக பிரிக்கிறார்.
மாயவித்தையின் மூன்று வகைகள்
மர்ம மாயவித்தை என்பது “மாயமந்திரத்தின் ஒரு வெளிப்பாடாகும்.” “பொது அறிவுக்கு அல்லது விஞ்ஞான அறிவுக்கு முரண்பாடான நிகழ்ச்சிகள் அல்லது செயல்முறைகள் உண்மையாகவோ ஏற்றுக்கொள்ளக்கூடியவையாகவோ இருக்கின்றன,” என்று அது வலியுறுத்துகிறது. “மர்ம மாயவித்தை மாந்திரீகம், . . . பில்லிசூனியம், ரசவாதம் மற்றும், குறிப்பிட்ட சில நிலைமைகளின்கீழ், மதம் போன்றவற்றின் கையாளாக இருக்கிறது,” என்று மேலும் விவரிக்கிறார் ஸ்டெபின்ஸ்.
சுரண்டிப்பிழைப்பதற்கான மாயவித்தையில், “மாயம் காண்பிப்பவர்கள் உண்மையைப் புரிந்துகொள்வதற்கான பார்வையாளர்களின் திறமையைத் தங்களுடைய சொந்த செல்வாக்கைப் பெருக்கிக்கொள்ள உபயோகிக்கின்றனர் அல்லது கையாளுகின்றனர்.” தாங்கள் பொதுஜனங்களை ஏமாற்றுகின்றனர் என்று அவர்களுக்குத் தெரியும், ஆனாலும், ஸ்டெபின்ஸ் கூறுகிறபடி, “மாயவித்தையைக் காண்பவர்களை வேறு வகையில்—அதாவது, மாயவித்தைக்காரர்களாக, தங்களுக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி உள்ளது அல்லது அத்தகைய சக்தி உள்ளவர்களோடு விசேஷித்த தொடர்புகள் உள்ளன என்று நம்பும்படி உற்சாகப்படுத்துகின்றனர்.”
பொழுதுபோக்கு மாயவித்தை கிளர்ச்சியடையச் செய்யும் ஏமாற்று வேலைகளின் மூலம் வியப்பைக் கிளறிவிடுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இது ஐந்து அடிப்படை மற்றும் ஒன்றையொன்று தழுவும் முறைகளுக்குள் அடங்கியிருக்கிறது: “மேடை மாயவித்தை (stage magic), அருகில் நடத்தப்படுவது (close up), மாயாஜால கைத்திறமை (sleight of hand), மாயத்தோற்றம் (illusion), மனவசியம் (mentalism).”
கிறிஸ்தவர்களுக்கு ஆபத்து இருக்கிறதா?
முதலாவதாக நாம் மர்ம மாயவித்தைக்குக் கவனத்தைத் திருப்புவோம். மர்ம மாயவித்தை பல வழிகளில் செய்யப்படுகிறது. உதாரணமாக, “கறுப்பு” மற்றும் “வெள்ளை” மாயவித்தையை செய்துவரும் சாத்தானிய மதத்தினர் இருக்கின்றனர். “கறுப்பு” மாயவித்தை பகைவர்களுக்குக் கேடுவிளைவிப்பதற்காக மந்திரத்தால் கட்டுதல், விசேஷித்த சாபங்களை விடுதல், கண்ணூறு (evil eye) விடுதல் போன்றவற்றை உட்படுத்தியிருக்கிறது. மறுபட்சத்தில் “வெள்ளை” மாயவித்தையோ மந்திரத்தால் கட்டப்பட்டவர்களை விடுவிப்பதாலும் சாபங்களை ரத்து செய்வதாலும் நல்ல பலன்விளையும் நோக்கத்திற்காக செய்யப்படுவதாகும். இருப்பினும், இவையிரண்டுமே மந்திரம் அல்லது மர்மத்தின் வெளிப்பாடுகளாகவே இருக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் நல்ல விளைச்சல் கிடைப்பதற்கான அல்லது விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான முயற்சியிலும்கூட மர்ம மாயவித்தை செய்யப்படுகிறது. எனினும், இவ்வகையான ஆவிக்கொள்கை மாயவித்தையைக் குறித்து பைபிள் ஒளிவுமறைவின்றி இவ்வாறு சொல்லுகிறது: “சகுனம் பாராமலும், மாயவித்தை பழகாமலும் இருப்பீர்களாக.”—லேவியராகமம் 19:26, NW; உபாகமம் 18:9-14; அப்போஸ்தலர் 19:18, 19.
சுரண்டிப்பிழைப்பதற்கான மாயவித்தையில், என்ன ஆபத்து மறைந்திருக்கிறது? சிலவற்றைக் குறிப்பிடவேண்டுமானால், கைரேகை பார்ப்பவர்கள், குறிசொல்லுபவர்கள், விசுவாச சுகமளிப்பவர்கள், போன்றவர்கள் தங்களுடைய சொந்த அக்கறைகளை முன்னேற்றிக்கொள்வதற்காக சுரண்டிப்பிழைப்பதற்கான மாயவித்தையை உபயோகப்படுத்துகின்றனர். அவர்கள் தங்கள் தொழிலின்மூலம் ஒரு பொய்யினால் ஆன வாழ்க்கையல்லவா வாழ்கின்றனர்? கடவுளுடைய வார்த்தை சொல்கிறது: “நீங்கள் . . . வஞ்சனைபண்ணாமலும், ஒருவர்க்கொருவர் பொய் சொல்லாமலும் இருங்கள்.”—லேவியராகமம் 19:11.
தி என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா கூறுகிறது: “சில சந்தர்ப்பங்களில், மாயவித்தைகள் ஆவிகளை வற்புறுத்துவதற்குப் பயன்படலாம்.” அத்தகைய பிரதேசங்களில் மறைமுகமாகவும்கூட பொழுதுபோக்கில் ஈடுபடுவதனால் அந்தப் பேய் ஆவிகளிடமிருந்து பிரச்னையை வரவழைத்துக்கொள்ள நாம் விரும்புகிறோமா? வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்போமானால், அந்தப் பேய்கள் நம்மை நன்கு பயன்படுத்திக்கொள்ள முடியும் மற்றும் பயன்படுத்திக்கொள்ளும். அவர்கள் நல்ல ‘வசதியான நேரங்களுக்காக’ காத்துக்கொண்டிருக்கின்றனர், அதற்காக இடைவிடாமல் முயற்சி செய்துகொண்டும் இருக்கின்றனர்.—லூக்கா 4:13, NW; யாக்கோபு 1:14.
ஏமாற்றுவேலை, மாயத்தோற்றமளித்தல் போன்ற கலையில் கைதேர்ந்தவன் பிசாசாகிய சாத்தானைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் ஏதேன் தோட்டத்தில் ஒரு மனித ஜோடிக்கு முன்பு நடத்திய தனது முதல் செயல் நிறைவேற்றத்திலிருந்தே இந்தக் கலையை அவன் கொண்டிருக்கிறான். (ஆதியாகமம் 3:1-19) எந்தக் கிறிஸ்தவன்தான் அவனைப்போல் இருக்க விரும்புவான்? அதைவிட “தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி, தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள், பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்,” என்று கிறிஸ்தவர்கள் அறிவுரை கூறப்படுகின்றனர்.—எபேசியர் 5:1; யாக்கோபு 4:7.
இருந்தபோதிலும், பெரும்பாலான ஜனங்கள், “மேஜிக்” என்ற வார்த்தையைப் பொழுதுபோக்கோடு சம்பந்தப்படுத்திப் பார்க்கின்றனர். கண் கண்டுணருவதைவிட கை வேகமாக செயல்படமுடியும் என்பதை மனதில் கொண்டு, ஒரு நபர் தன் கைகளைக் கொண்டு மாயத்தோற்றங்களை உருவாக்கலாம் (மாயாஜால கைத்திறமை). இதற்கு ஒருவேளை பைபிள்பூர்வமான ஆட்சேபணை ஒன்றுமில்லாமலும் இருக்கலாம். எனினும், மாயாஜால வித்தையைப்போல தோன்றுமேயானால், இயற்கைக்கு அப்பாற்பட்ட அல்லது விவரிக்கமுடியாத ஏதோவொரு சக்தியைக் கொண்டிருக்கிறான் என்ற அபிப்பிராயத்தைக் கொடுக்க ஒரு கிறிஸ்தவன் எப்போதாவது விரும்புவானா? அந்த “மாயவித்தை” காட்சியால் மற்றவர்கள் தவறான ஓர் அபிப்பிராயம் கொடுக்கப்படுகின்றனர் என்றால், மற்றவர்களை இடறலடையச் செய்யாமலிருக்க ஒரு கிறிஸ்தவன் அப்படிப்பட்ட பொழுதுபோக்கை விட்டுவிட விரும்பமாட்டானா? (1 கொரிந்தியர் 10:29, 31-33) கூடுதலாக, ஒரு நபர் அந்த ஆழ்ந்த மாயவித்தைகளில் அதற்குமதிகம் செய்யத் தூண்டப்படும் ஆபத்தும் இருக்கிறது.
ஆகவே, ஆவிக்கொள்கையோடு தெளிவான தொடர்புடைய மாயவித்தை என்று வரும்போது, உண்மைக் கிறிஸ்தவர்கள் அதைச் செய்வதை ஞானமாக தவிர்க்கின்றனர். அதற்கு மேலாக, ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும்—வேலை, ஓய்வுநேர விருப்பவேலை அல்லது பொழுதுபோக்கு, போன்றவற்றை உட்படுத்தும் எந்த அம்சமாக இருந்தாலும்சரி—அவன் ஒரு ‘நல்மனச்சாட்சியுடையவனாக’—கடவுளுக்கோ மனிதனுக்கோ எதிரான எந்தக் குற்றத்தையும் அனுமதிக்காத ஒரு மனசாட்சியைக் கொண்டிருக்க விரும்புவான்.—1 பேதுரு 3:16; அப்போஸ்தலர் 24:16. (g93 9/8)
[பக்கம் 24-ன் படத்திற்கான நன்றி]
The Bettmann Archive