உலக அரசாங்கம்—ஐக்கிய நாடுகள் சபை அதற்கான விடையா?
சமீபத்திய வருடங்களில் உலகில் ஐக்கிய நாடுகள் சபை, புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையையும் பாராட்டையும் பெற்றிருக்கிறது. கோடிக்கணக்கானோருக்கு, “ஐநா” என்ற சுருக்கக்குறியீடு வீரத்தீர காட்சிகளை மனதிற்குக் கொண்டுவருகிறது: சமாதானத்தை நிலைநாட்டுவதற்காக நீல தொப்பிகளை உடைய துருப்புகள் உலகின் தொந்தரவுமிக்க இடங்களுக்கு விரைந்து செல்வதை, ஆப்பிரிக்காவில் பட்டினியாயிருக்கும் அகதிகளுக்கு இடருதவி பணியாளர்கள் உணவு கொண்டு வருவதை, மேலும் தங்களையே அர்ப்பணித்த ஆண்களும் பெண்களும் ஒரு புதிய உலக ஒழுங்கு முறையை நிலைநாட்டுவதற்காகத் தன்னலமின்றி வேலை செய்வதை மனதிற்குக் கொண்டுவருகிறது.
இன்டர்நேஷனல் ஹெரால்ட் ட்ரிப்யூன் என்பதில் அறிக்கை செய்யப்பட்டதன் பிரகாரம், தி உவாஷிங்டன் போஸ்ட்டால் மேற்கொள்ளப்பட்ட ஒன்பது மாத ஆய்வின்படி, “அதன் செயல்திறத்திற்கு ஊறு விளைவிக்கும், துர்ப்பிரயோகங்களுக்கும் குறைபாடுகளுக்கும் கீழ்ப்படுத்தப்பட்ட ஒரு மிகப் பேரளவான, பெரிதும் கட்டுப்பாடற்ற அதிகாரவர்க்கமே” அக்காட்சிக்குப் பின்னிருக்கும் நிஜமாகும். ஆயிரக்கணக்கான பக்கங்களாலான ஆதாரச் சான்றுகள், தற்போதைய மற்றும் முன்னாள் ஐநா அதிகாரிகளுடன் பேட்டிகள் ஆகியவற்றின் அடிப்படையில் செய்யப்பட்ட அந்த ஆராய்ச்சி, பின்வரும் காட்சியை வெளிப்படுத்தியது.
ஆப்பிரிக்காவிற்கு உதவி: போர், பஞ்சம், வறுமை, மற்றும் நோய் ஆகியவற்றால் அழிக்கப்பட்ட ஒரு கண்டமாகிய ஆப்பிரிக்காவில் மிகவும் அத்தியாவசியமாகத் தேவைப்பட்ட உதவியாகிய கோடிக்கணக்கான டாலர்களை ஐநா வாரி இறைத்திருக்கிறது. எண்ணற்ற உயிர்கள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன.
இருப்பினும், திறமையற்ற செயலாண்மை, அலட்சியம், மேலும் சில நேரங்களில் ஊழல் காரணமாக ஆயிரக்கணக்கான உயிர்களும் லட்சக்கணக்கான டாலர்களும் இழக்கப்பட்டும் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் பல மக்கள் இறந்துகொண்டிருந்த பஞ்சத்தால் பீடிக்கப்பட்ட சோமாலியாவிற்கு ஐநா இடருதவி வழங்கியிருக்கிறது. ஆனால், மனித உரிமைகள் கவனிப்பின் (Human Rights Watch) செயல் இயக்குநர் ஆர்ய நேயர் சொல்வதாக ட்ரிப்யூன் மேற்கோள் காட்டுகிறது: “ஐக்கிய நாடுகள் சபையும் அதன் பல்வேறு அமைப்புகளும் சோமாலியாவின் துயர் நீக்க ஏறக்குறைய எந்தப் பங்கையுமே வகிக்கவில்லை என்று சொல்லும் அந்த அளவிற்கு அதிர்ச்சியூட்டத்தக்கவிதத்தில் அலட்சியமாகவும் செயல் திறமையற்றவையாகவும் இருந்திருக்கின்றன.”
உணவு உதவியை வேறு பக்கமாக திசைதிருப்புதல், மனிதாபிமான அடிப்படையில் வந்த உதவியைக் கையாடுதல், ஏமாற்று முறையில் பொருட்களையோ சேவைகளையோ பெறுதல், கள்ள வாணிகம் செய்தல், மற்றும் செலாவணி பரிமாற்றத்தில் சூழ்ச்சிமுறைகளைக் கையாளுதல் ஆகியவற்றில் சில ஐநா அதிகாரிகள் சிக்கியிருந்ததாகவும் அந்த அறிக்கை குற்றம் சாட்டியது. குறைந்தது ஏழு ஆப்பிரிக்க நாடுகளில் அத்தகைய ஏமாற்றத்திற்கான அத்தாட்சியை ஐநா விசாரணையாளர்கள் கண்டுபிடித்தனர்.
அமைதிகாத்தல்: அது 1945-ல் ஸ்தாபிக்கப்பட்டதைத் தொடர்ந்த வருடங்களில், நூற்றுக்கதிகமான மாபெரும் சச்சரவுகள் நடைபெற்று, 2 கோடி மக்கள் போரில் கொல்லப்பட்டிருந்தாலும், அமைதிகாத்தல் ஐநா-வின் ஒரு முக்கிய இலக்காகும். எனினும், 1987 முதல், ஐநா 13 அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் செயலாற்றி உள்ளது; அதற்கு முன்னான அதன் முழுச் சரித்திரத்தில் அதுவே அதிகமானது.
இந்த நடவடிக்கைகளுக்காகும் செலவு போரின் பயங்கர விலையை ஒப்பிடுகையில் பரவாயில்லை என்று சிலர் வாதாடக்கூடும் என்றாலும், காரியங்கள் வெகு தூரம் சென்றிருப்பதாக அநேகர் குறை கூறுகின்றனர். உதாரணமாக, பேச்சுவார்த்தைகள் முடங்கிய நிலையில் இருக்கையில், அமைதிகாக்கும் நடவடிக்கைகள் நூற்று லட்சக்கணக்கான டாலர்கள் செலவில் தொடர்ந்திருக்கின்றன. கம்போடியாவிலுள்ள ஐநா அமைதிகாக்கும் பணித்திட்டம், துருப்புகளுக்கு டிவி மற்றும் விசிஆர்-களுக்காக $10 லட்சத்திற்குமேல், பத்திரிகை மற்றும் செய்தித்தாள் சந்தாக்களுக்காக மேலும் $6,00,000-யும் ஒதுக்குகிறது.
சீர்திருத்தம்: ஐநா-விற்கு உள்ளே சீர்திருத்தத்திற்காக மிக பரவலான குரல்கள் எழுப்பப்படுகின்றன; ஆனால் எது சீர்திருத்தப்படவேண்டும் என்பதைக் குறித்து கருத்துகள் வேறுபடுகின்றன. தீர்மானம் எடுக்கும் நடவடிக்கையில் வளர்ச்சியடையும் நாடுகள் அதிகப்படியான செல்வாக்கு செலுத்த விழைந்து, பொருளாதார மற்றும் சமூக திட்டங்களை விரிவாக்கம் செய்ய விரும்பக்கூடும். இந்தத் திட்டங்களைக் குறைத்து, ஊழல், திறமையற்ற செயலாண்மை, மற்றும் வீண்செலவு ஆகியவற்றை நீக்குவதை தொழில்மயமாக்கப்பட்ட தேசங்கள் விரும்புகின்றன.
ஐநா-வின் உயர் அதிகாரி ஒருவர் சொன்னார்: “நிஜமாகவே சீர்திருத்துவதற்கு, ஓர் அதிகாரவர்க்கத்தில் முற்றிலும் சாத்தியமற்ற ஏதோவொன்றை நீங்கள் செய்ய வேண்டியதாய் இருக்கிறது: நீங்கள் அந்த இடத்தை சுத்தமாக்க வேண்டியுள்ளது. அர்த்தமுள்ள ஏதோவொன்றைச் செய்வதற்கு, 45 வருடங்களுக்குரிய பார்னக்கிள் சிப்பிவகைகளைச் சுரண்டி அகற்ற வேண்டியுள்ளது; அது மிக அதிகளவான பார்னக்கிள் சிப்பிவகைகளாக இருக்கின்றன.”
மனிதவர்க்கத்தின் விவகாரங்களை நிர்வகிப்பதற்கு ஒரே அரசாட்சி தொகுதிக்கான அவசியத்தைக் கிறிஸ்தவர்கள் காண்கிறபோதிலும், ஐக்கிய நாடுகள் சபையே அதற்கான விடை என்பதாக அவர்கள் நம்புவதில்லை. பதிலாக, இயேசு தம்மைப் பின்பற்றியவர்கள் ஜெபம் செய்யும்படி சொல்லிக்கொடுத்த அரசாங்கமாகிய, கடவுளுடைய ராஜ்யத்தை அவர்கள் எதிர்நோக்கி இருக்கின்றனர்.—மத்தேயு 6:10. (g93 9/22)