ஒரு புதிய உலகம்—அது எப்பொழுதாவது வருமா?
ஏப்ரல் 13, 1991 அன்று, ஐக்கிய மாகாணங்களின் அப்போதைய ஜனாதிபதி, ஜார்ஜ் புஷ், அலபாமாவின் மான்ட்கோமரியில், “ஒரு புதிய உலக ஒழுங்குமுறைக்கான சாத்தியம்,” என்ற தலைப்பில் உரையாற்றினார். முடிவுரையில் அவர் சொன்னார்: “நம்மை எதிர்நோக்கியிருக்கும் அந்தப் புதிய உலகம் . . . , அது கண்டுபிடிப்பின் ஒரு வியத்தகு உலகமாகும்.”
இரண்டு மாதங்கள் கழித்து, கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிஸ்ட் ஆட்சிகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, “சமாதானம், நீதி, மக்களாட்சி போன்றவற்றின் அடிப்படையிலான ஒரு புதிய உலக ஒழுங்குமுறை அண்மையில் இருப்பதாகத் தோன்றியது,” என அணு விஞ்ஞானிகளின் செய்தி வெளியீடு (The Bulletin of the Atomic Scientists) கூறிற்று.
ஒரு புதிய உலகைப்பற்றிய அப்படிப்பட்ட பேச்சு 1993-னூடேயும் தொடர்ந்திருக்கிறது. அணு ஆயுதக் குறைப்புகளை உறுதியளித்த ஓர் ஒப்பந்தத்தின்பேரில் தி நியூ யார்க் டைம்ஸ் ஜனவரியில் அறிக்கை செய்தது. அந்தச் செய்தித்தாள் சொன்னதாவது: “ஜனாதிபதி புஷ்ஷின் நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளில், அது அமெரிக்காவையும் ரஷ்யாவையும் ‘நம்பிக்கையின் ஒரு புதிய உலக நுழைவாயிலில்’ வைக்கிறது.”
இரண்டு வாரங்களுக்குப்பின் ஐ.மா.-வின் புதிய ஜனாதிபதி, பில் க்ளின்டன், தன்னுடைய தொடக்கவிழா உரையில்: “இன்று, ஒரு பழைய ஒழுங்குமுறை கடந்துபோகையில், அந்தப் புதிய உலகம் அதிக சுதந்திரமுள்ளதாக இருக்கிறது ஆனால் அவ்வளவு நிலையானதல்ல,” என்று பறைசாற்றினார். அவர்: “இந்தப் புதிய உலகம் ஏற்கெனவே லட்சக்கணக்கான அமெரிக்கர்களின் வாழ்க்கையை வளங்கொழிக்கச் செய்திருக்கிறது,” என்றும்கூட வலியுறுத்திக் கூறினார்.
ஆகவே ஒரு புதிய உலகைப்பற்றி—வித்தியாசமான மற்றும் மேம்பட்ட ஒன்றைப்பற்றி—ஏராளமான பேச்சு இருந்துவந்திருக்கிறது. ஓர் எண்ணிக்கையின்படி, ஜார்ஜ் புஷ் பொதுக்கூட்ட பேச்சுகளில், ஒப்பிடுகையில் ஒரு குறுகிய காலப்பகுதியில், ஒரு “புதிய உலக ஒழுங்குமுறை”யைப்பற்றி 42 தடவைகள் பேசியுள்ளார்.
ஆனால் அப்படிப்பட்ட பேச்சு தனிச்சிறப்பு வாய்ந்ததுதானா? இதற்குமுன் இதைப்போன்ற பேச்சு கேட்கப்பட்டிருக்கிறதா?
உண்மையில் புதியதொன்றுமல்ல
மே 1919-ல், முதல் உலக யுத்தம் முடிந்தவுடனேயே, அமெரிக்காவில் உள்ள ஃபெடரல் கவுன்சில் ஆஃப் தி சர்ச்சஸ் ஆஃப் க்றைஸ்ட், ஒஹாயோவிலுள்ள கிளீவ்லாண்டில் ஒரு கூட்டத்தை நடத்திற்று. அதில் ‘மேம்பட்ட, ஒரு புதிய உலகத்திற்கான சாத்தியத்தைப்பற்றி’ அறிவிக்கப்பட்டது. ஒரு பேச்சாளர் இவ்வாறு உறுதியளித்தார்: “போட்டியிடுதலின் கொள்கை கூட்டுறவு மற்றும் தோழமையின் கொள்கைக்கு இடமளித்திருக்கும் ஒரு புதிய உலகமாக அது இருக்கும். அது பிரிவினையின் கொள்கை ஐக்கியத்தின் கொள்கையினால் மாற்றீடு செய்யப்பட்டிருக்கும் ஒரு புதிய உலகமாக இருக்கும் . . . அது சகோதரத்துவமும் நட்பும், துன்மார்க்கத்திற்கெதிரான போரைத் தவிர மற்றெல்லா பகைமைகளையும் நீக்கிவிட்டிருக்கும் ஒரு புதிய உலகமாக இருக்கும்.”
இந்தப் புதிய உலகம் எவ்வகையில் வரும் என்று சர்ச்சுகள் நம்பின? பைபிளில் வாக்களிக்கப்பட்டுள்ள கடவுளுடைய ராஜ்ய அரசாங்கத்தின் மூலமா? இல்லை. அத்தகைய ஒரு புதிய உலகைக் கொண்டுவர அவர்கள் ஓர் அரசியல் அமைப்பை எதிர்நோக்கினர். “சர்வதேச சங்கம் என்று நாம் இன்று பேசுவதானது,” ஒரு சர்ச் தலைவர் சொன்னார், “இவ்வுலகில் நம்முடைய எல்லா கிறிஸ்தவ விசுவாசம் மற்றும் முயற்சியின் இன்றியமையாத மற்றும் தவிர்க்கமுடியாத விளைவாக இருக்கிறது.” அந்தக் காலக்கட்டத்தின் சர்ச் தலைவர்கள் சர்வதேச சங்கத்தை, “பூமியின் மீது கடவுளுடைய ராஜ்யத்தின் அரசியல் தோற்றம்” என ஆதரித்தும்வந்தனர்.
ஆனால் மறுபட்சத்தில், ஜெர்மனியின் வல்லமைவாய்ந்த ஒரு தலைவர், அடால்ஃப் ஹிட்லர், சர்வதேச சங்கத்தை எதிர்த்து 1930-களில் ஜெர்மனியின் மூன்றாம் ரெய்ச்சை நிறுவினார். ரெய்ச் ஓராயிரம் ஆண்டுகள் நிலைத்து நின்று, கடவுளுடைய ராஜ்யம் மட்டுமே நிறைவேற்றக்கூடும் என்று பைபிள் கூறுகிறவற்றை நிறைவேற்றும் என்பதாக அவர் உரிமைபாராட்டினார். “நான் இளைஞரைக் கொண்டு தொடங்குகிறேன்,” ஹிட்லர் சொன்னார். “அவர்களைக் கொண்டு என்னால் ஒரு புதிய உலகைப் படைக்க முடியும்.”
நாசியின் வல்லமையை வெளிக்காட்ட ஹிட்லர் நூரெம்பர்கில் ஒரு மிகப் பெரிய விளையாட்டரங்கைக் கட்டுவித்தார். குறிப்பிடத்தக்க வகையில், கிட்டத்தட்ட 1,000 அடி நீளமுள்ள ஒரு மேடையில் பிரமாண்டமான 144 தூண்கள் எழுப்பப்பட்டன. ஏன் 144 தூண்கள்? ‘ஆட்டுக்குட்டியானவராகிய’ இயேசு கிறிஸ்துவோடு அரசாளும் 1,44,000 பேரைப் பற்றியும், அவர்களுடைய அரசாட்சி ஆயிரம் வருஷம் நிலைத்திருக்கும் எனவும் பைபிள் பேசுகிறது. (வெளிப்படுத்துதல் 14:1; 20:4, 6) தெளிவாகவே, நூரெம்பர்க் விளையாட்டரங்கத்தில் எழுப்பப்பட்ட 144 தூண்கள் ஒன்றும் தற்செயலான எண்ணிக்கை அல்ல. காரணம் நாசி அதிகாரிகள் பைபிள் மொழிநடையையும் அடையாள அர்த்தங்களையும் உபயோகித்தது சான்றுகளுடன் நன்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கடவுளுடைய ராஜ்யத்தால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்று பைபிள் சொல்கிறவற்றை நிறைவேற்ற எடுக்கப்பட்ட மனித முயற்சிகளின் முடிவு என்னவாக இருந்தது?
மனித முயற்சிகளின் தோல்வி
சர்வதேச சங்கம் சமாதானத்தின் ஒரு புதிய உலகிற்கு வழிநடத்திச் செல்லத் தவறிற்று என்பதற்கு வரலாறு நயமாக சான்றளிக்கிறது. தேசங்கள் இரண்டாம் உலக யுத்தத்தில் மூழ்கியபோது அந்த அமைப்பு வீழ்ச்சியடைந்தது. மேலும், பன்னிரண்டே வருடங்கள் கழித்து, மூன்றாம் ரெய்ச் தகர்ந்து அழிபாடுகளாகியது. அது ஒரு முழுத்தோல்வியாக, மனித குடும்பத்திற்கு அவமானமாக இருந்தது.
வரலாறு முழுவதும், சமாதானம் நிறைந்த ஒரு புதிய உலகைப் படைப்பதற்கான மனித முயற்சிகள், யாதொரு மாற்றமுமின்றி பயனற்றவையாகவே இருந்துவந்திருக்கின்றன. “எக்காலத்திலும் நிலவியிருந்த ஒவ்வொரு நாகரிகமும் இறுதியில் அழிந்துபோயிருக்கிறது,” என்று ஐ.மா.-வின் முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிங்கர் குறிப்பிட்டார். “வரலாறு, தோல்வியடைந்த முயற்சிகள், நிறைவேற்றப்படா பேரவாக்கள் போன்றவற்றின் ஒரு கதையாகவே இருக்கிறது.”
அப்படியானால், உலக தலைவர்கள் சமீபத்தில் பெருமையடித்துக்கொண்டிருந்த அந்தப் புதிய உலக ஒழுங்குமுறையைப் பற்றி என்ன? இனக்கலவர வன்முறையின் திடீர் அதிகரிப்புகள் அப்படிப்பட்ட ஒரு புதிய உலகத்தைப்பற்றிய கருத்தை ஒரு கேலிக்கூத்தாக மாற்றியிருக்கின்றன. உதாரணமாக, கடந்த மார்ச் 6-ல், கட்டுரையாளர் உவில்லியம் ப்ஃபாஃப் இவ்வாறு கேலிசெய்தார்: “புது உலக ஒழுங்குமுறை வந்துவிட்டது. படையெடுப்பையும் ஆக்கிரமிப்பையும் இனவழிப்பையும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய சர்வதேசிய நடத்தையென புனிதப்படுத்துவதில், அது நன்றாக, உண்மையிலேயே புதிதாகத்தான் இருக்கிறது.”
கம்யூனிஸ்ட் கொள்கையின் வீழ்ச்சிக்குப்பின் இடம்பெற்ற பயங்கர சண்டைகளும் அட்டூழியங்களும் திகைப்பூட்டுபவையாய் இருக்கின்றன. ஜனவரியில் பதவியிலிருந்து விலகுவதற்குச் சற்றுமுன், ஜார்ஜ் புஷ்ஷும், “புதிய உலகம், காலப்போக்கில், பழையதைப் போன்றே அச்சுறுத்துவதாய் இருக்கும்,” என்பதாக ஒப்புக்கொண்டார்.
நம்பிக்கைக்கான காரணம்?
இது நிலைமை நம்பிக்கையற்றதாய் இருக்கிறது என்று அர்த்தப்படுகிறதா? புதிய உலகம் ஆசைகள் நிறைந்த வெறும் கனவுதானா? தெளிவாகவே, மனிதர்கள் ஒரு புதிய உலகைப் படைக்கமுடியாதவர்களாய் இருந்திருக்கின்றனர். ஆனால் அதைச் செய்வதற்கான சிருஷ்டிகரின் வாக்குறுதியைப்பற்றி என்ன? “அவருடைய [கடவுளுடைய] வாக்குத்தத்தத்தின்படியே . . . புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்,” என்பதாக பைபிள் சொல்கிறது.—2 பேதுரு 3:13.
கடவுள் வாக்குத்தத்தம் செய்திருக்கிற புதிய வானங்கள் பூமியின் மீதான ஒரு புதிய ஆட்சிமுறையாகும். இந்தப் புதிய ஆட்சிமுறைதான் கடவுளுடைய ராஜ்யம், அவருடைய பரலோக அரசாங்கம். இதற்காக ஜெபிக்கும்படிதான் இயேசு மக்களுக்குக் கற்றுக்கொடுத்தார். (மத்தேயு 6:9, 10) அந்தப் பரலோக அரசாங்கம் அப்போது இயேசு கிறிஸ்துவாலும் 1,44,000 உடன் ஆட்சியாளர்களாலும் உருவாக்கப்பட்டிருக்கும். அந்தப் புதிய பூமி ஒரு புதிய மக்கள் சமுதாயமாக இருக்கும். ஆம், அவர்கள் மகிமையான ஒரு புதிய பூமியில் வாழ்ந்து, கடவுளுடைய அரசாட்சியை உண்மைத்தவறாது ஆதரித்து வருவார்கள்.
கடவுளுடைய ராஜ்ய அரசாங்கம் உறுதியளிக்கப்பட்ட புதிய உலகத்தின்மேல் ஆட்சிசெய்யும். ஆகவே இந்தப் புதிய உலகம் மனிதனால் உண்டாக்கப்பட்டதாய் இருக்காது. “கடவுளுடைய ராஜ்யம் மனிதர்களால் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையையோ அவர்களால் அமைக்கப்பட்ட ஓர் ஆட்சியையோ ஒருபோதும் அர்த்தப்படுத்தாது,” என்று ஒரு பைபிள் கலைக்களஞ்சியம் விவரிக்கிறது. “அந்த ராஜ்யம் ஒரு தெய்வீக செயலாகும், மனித சாதனையல்ல, ஒப்புக்கொடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களின் சாதனையும்கூட அல்ல.”—தி ஸோன்டர்வேன் பிக்டோரியல் என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் தி பைபிள்.
கடவுளுடைய ராஜ்யத்தின் கீழான புதிய உலகம் வருவது நிச்சயம். அது வருவதைப்பற்றிய வாக்குறுதியின்மேல் நீங்கள் நம்பிக்கையாய் இருக்கலாம். காரணம் அந்த வாக்குறுதி ‘பொய்யுரையாத தேவனால்’ கொடுக்கப்பட்டிருக்கிறது. (தீத்து 1:3) கடவுளுடைய புதிய உலகம் எவ்வகையான உலகமாக இருக்கப்போகிறது என்று தயவுசெய்து கவனியுங்கள்.
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
NASA photo