எவ்வகையான உலகை நீங்கள் விரும்புகிறீர்கள்?
உங்களுக்கு வல்லமை இருந்திருந்தால், ஒரு புதிய உலகை, இன்று மனிதரை அலைக்கழிக்கும் எல்லா பிரச்னைகளிலிருந்தும் விடுபட்ட ஓர் உலகைப் படைப்பீர்களா? நீங்கள் படைப்பீர்களானால், வல்லமை மிகுந்த நம்முடைய அன்பார்ந்த சிருஷ்டிகராகிய யெகோவா தேவன், நீதியான ஒரு புதிய உலகை உருவாக்குவார் என எதிர்பார்ப்பது நியாயமானதல்லவா?
பைபிள் சொல்கிறது: “கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலுமுள்ளது. நீர் உமது கையைத் திறந்து, சகல [ஜீவன்களின், NW] வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.” (சங்கீதம் 145:9, 16) உங்களுடைய ஆசைகளில் சில யாவை? எவ்வகையான உலகிற்காக நீங்கள் ஏங்குகிறீர்கள்?
ஆரோக்கியமும் மகிழ்ச்சியுமான ஒரு வாழ்க்கை: ஒரு குடும்பக் கையேடு (A Sane and Happy Life: A Family Guide) என்ற தங்களுடைய புத்தகத்தில் ஏப்ரஹேம் மற்றும் ரோஸ் ஃப்ரான்ட்ஸ்ப்ளாவு எழுதினர்: “எவ்வகையான உலகில் நாம் அனைவரும் வாழ விரும்புகிறோம் என்பதன்பேரில் உலக மக்களிடையே நாம் வாக்கெடுப்பு நடத்தி மனிதகுலத்தோடு ஆலோசனை நடத்தவேண்டியிருந்தால், ஒருசில குறைந்தபட்ச தேவைகளின்பேரில் நாம் அனைவருமே ஒப்புக்கொண்டிருக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.”
இந்த டாக்டர்களால் பட்டியலிடப்பட்ட தேவைகளை நாம் ஆராய்ந்து, நீங்கள் விரும்புவதும் அதே தேவைகளைத்தானா என்று பார்க்கலாம். அதைச் செய்கையில், நம்முடைய அன்பார்ந்த சிருஷ்டிகர் அதே தேவைகளைப் பூர்த்திசெய்வதாக வாக்களித்திருக்கிறாரா என்றும்கூட நாம் கவனிப்போமாக.
முதல் தேவை
அந்த டாக்டர்கள் முதலாவதாக பட்டியலிட்டிருப்பது “யுத்தமில்லாதொரு உலகம்.” பயங்கரமான அநேக யுத்தங்களால் துன்புற்றபின், மக்கள் இனி ஒருபோதும் சண்டையிட்டு ஒருவரையொருவர் கொல்லாத ஓர் உலகத்திற்காக அநேகர் ஏங்குகின்றனர். நியூ யார்க் நகரத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் ப்ளாஸாவின் சுவற்றில் பொறிக்கப்பட்ட வார்த்தைகளில் அவர்களுடைய நம்பிக்கை வெளிப்படுத்தப்படுகிறது. அது வாசிக்கிறதாவது: அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்: ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை. இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.
அந்த வார்த்தைகள் யெகோவா தேவனால் அளிக்கப்பட்ட ஒரு வாக்குறுதியின் பாகமாக இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்த வார்த்தைகள் பரிசுத்த பைபிளில் ஏசாயா அதிகாரம் 2, வசனம் 4-ல் (கிங் ஜேம்ஸ் வெர்ஷன்) பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. சங்கீதம் 46:8, 9-ஐப் படிப்பதாலும், எல்லா ஆயுதங்களையும் அழிப்பதும் “பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணு”வதுமே கடவுளின் நோக்கமாக இருக்கிறது என்பதைக் காண்பீர்கள். கடவுளின் கைவண்ணமாகிய, சமாதானம் நிறைந்த, யுத்தமில்லா உலகில், இந்தத் திளைப்பூட்டும் பைபிள் தீர்க்கதரிசனம் நிறைவேற்றப்படும்: “அவனவன் தன்தன் திராட்சச் செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்.”—மீகா 4:4.
‘யுத்தமில்லாதொரு உலகை’ நீங்கள் விரும்பும் வகையான உலகிற்கான, ஓர் அடிப்படையான தேவையாக பட்டியலிடமாட்டீர்களா? சற்று யோசித்துப் பாருங்கள், நம்முடைய மகத்தான சிருஷ்டிகர் அதைத்தான் வாக்களித்திருக்கிறார்!
அபரிமிதத்தின் ஓர் உலகம்
உங்களுடைய இரண்டாம் தேவை என்னவாக இருக்கும்? அது கொடுக்கப்பட்ட அடுத்ததைப் போலவே இருக்குமா, “பஞ்சமும் ஏழ்மையும் என்றென்றுமாக அகற்றப்பட்ட பட்டினியில்லாதொரு உலகம்”? பட்டினி கிடக்கும் ஒரு குழந்தை இனி ஒருபோதும் இல்லாதிருந்தால் அது வியக்கத்தக்கதாக இருக்காதா? நிச்சயமாகவே அபரிமிதத்தின் ஓர் உலகத்தில் நீங்கள் வாழ விரும்புவீர்கள். ஆனால் யார் இதற்கு உத்தரவாதமளிக்க முடியும்?
கடவுள் எதை வாக்குறுதியளிக்கிறார் என்று கவனியுங்கள்: “பூமி தன் பலனைத் தரும்.” “பூமியின்மேல் திரளான தானியங்களிருக்கும்.” (சங்கீதம் 67:6; 72:16) ஆம், கடவுளுடைய புதிய உலகில், தரமான உணவு அபரிமிதமாக இருக்கும். யெகோவா “சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சரசமும், ஊனும் நிணமுமுள்ள பதார்த்தங்களும், . . . நிறைந்த விருந்தாயிருக்கும்,” என்று பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது.—ஏசாயா 25:6.
பட்டினியில்லாதொரு உலகத்தைக் கொண்டுவருவது மனிதரின் திறமைக்கு அப்பாற்பட்டதாய் இருந்தபோதிலும், அதை உருவாக்குவது கடவுளின் சக்திக்கு அப்பாற்பட்டதாய் இல்லை. கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ் எல்லாருக்கும் உணவளிப்பது பிரச்னையாகவே இருக்காது என்று அவருடைய குமாரன், இயேசு கிறிஸ்து நிரூபித்தார். அவர் பூமியிலிருந்தபோது, இயேசு ஒருசில அப்பத்துண்டுகளையும் சில மீன்களையும் அற்புதமாக பன்மடங்காக்கி ஆயிரக்கணக்கானோரை போஷித்தார்.—மத்தேயு 14:14-21; 15:32-38.
வியாதியில்லாதொரு உலகம்
நாம் அனைவரும் விரும்பும் வகையான உலகில் வியாதிப்பட்டிருக்கும் ஓர் ஆளை நீங்கள் எங்கேயும் பார்க்கமாட்டீர்கள். ஆகவே மூன்றாவது தேவை ஆச்சரியத்திற்குரியதொன்றுமல்ல. “அது வியாதியில்லாதொரு உலகமாக,” அந்த டாக்டர்கள் எழுதினர், “ஆரோக்கியமாக வளர்வதற்கும் தங்களுடைய வாழ்நாளில் தடுக்கப்படக்கூடிய மற்றும் குணப்படுத்தப்படக்கூடிய நோய்களிலிருந்து விடுபட்டு வாழ்வதற்கான வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்கக்கூடிய ஓர் உலகமாக இருக்கும்.”
யாரும் எப்போதும் ஜலதோஷத்தினாலோ வேறெந்த நோயினாலோ பாதிக்கப்படுவதில்லை என்றால், அது கொண்டுவரும் விடுதலையைப்பற்றி நினைத்துப் பாருங்கள்! மனிதர்களால் வியாதியைத் துடைத்தழிக்கமுடியாது, ஆனால் யெகோவா தேவனால் முடியும். தம்முடைய புதிய உலகில் “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை,” என்று அவர் வாக்களிக்கிறார். அதற்குப்பதிலாக, “அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்.” (ஏசாயா 33:24; 35:5, 6) ஆம், தேவன் “அவர்களுடைய கண்ணீர் யாவையும் . . . துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை.”—வெளிப்படுத்துதல் 21:4.
இயேசு கிறிஸ்து பூமியிலிருந்தபோது, கடவுளுடைய புதிய உலகில் ஒரு மாபெருமளவில் நாம் எதை எதிர்பார்க்கலாம் என்பதை செய்துகாட்டினார். குருடருக்குப் பார்வையளித்தார், செவிடர்களின் காதுகளைக் கேட்கவைத்தார், ஊமையர்களைப் பேசவைத்தார், முடவர்களை நடக்கவைத்தார், மரித்தோரையும்கூட மீண்டும் உயிருக்குக் கொண்டுவந்தார்.—மத்தேயு 15:30, 31; லூக்கா 7:21, 22.
எல்லாருக்கும் திருப்தியளிக்கும் வேலையும் நீதியும்
சந்தேகமின்றி, நீங்களும் பெரும்பாலான மற்றெல்லாரும் விரும்பக்கூடிய உலகில் எல்லாருக்கும் திருப்தியளிக்கும் வேலையும் நீதியும் இருக்கும். ஆகவே அந்த டாக்டர்கள் எழுதினர்: “நான்காவதாக, அது தங்களுக்கும் தங்களுடைய குடும்பத்துக்கும் பிழைப்பதற்கு தேவையானவற்றைக் கொடுக்க உழைக்க விரும்புவோருக்கு வேலை கிடைக்கும் ஓர் உலகமாக இருக்கும்.” அவர்கள் தொடர்ந்து கூறினர்: “ஐந்தாவதாக, சட்டத்தின்கீழ் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரத்தை அனுபவித்துக் களிக்கும், எல்லாருக்கும் நீதி கிடைக்கும் ஓர் உலகமாக அது இருக்கும்.”
மகிழ்ச்சியுள்ள வாழ்க்கைக்கான இந்தத் தேவைகளைப் பூர்த்திசெய்ய மனித ஆட்சியால் ஒருபோதும் முடியாமல் போயிருக்கிறது. ஆனால் கடவுளுடைய புதிய உலகம் பூர்த்திசெய்யும். அப்போது மக்கள் செய்யப்போகும் பலனளிக்கும் வேலையைப்பற்றி பைபிள் இவ்வாறு வாக்களிக்கிறது: “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். . . . நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள். அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை.”—ஏசாயா 65:21-23.
எல்லாருக்கும் சுதந்திரமும் நீதியும் கிடைப்பதைப்பற்றி என்ன? மனித ஆட்சியாளர்கள் எவ்வளவுதான் மனமார்ந்த ஊக்கத்தோடு முயற்சி செய்திருந்தபோதிலும், ஒவ்வொருவருக்கும் இவற்றைக் கொடுக்க அவர்கள் தவறியிருக்கின்றனர். அநீதியும் ஒடுக்குதலும் உலகம் முழுவதையும் தொடர்ந்து ஆட்டிப்படைக்கின்றன. ஆகவே மனிதர்கள் இத்தேவையை ஒருபோதும் பூர்த்திசெய்யமுடியாது. ஆனால் சர்வவல்லமையுள்ள கடவுளால் முடியும். அவருடைய நியமிக்கப்பட்ட ஆட்சியாளர் உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு கிறிஸ்துவே. அவரைப்பற்றி யெகோவா கூறுகிறார்: “நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; . . . அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.”—ஏசாயா 42:1; மத்தேயு 12:18.
ஆம், கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ் “சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும்,” என்று பைபிள் வாக்குறுதியளிக்கிறது. (ரோமர் 8:20) எல்லாருக்கும் சுதந்திரமும் நீதியும் கிடைக்கும்போது அது என்னே ஒரு மகிழ்ச்சிக்குரிய புதிய உலகமாக இருக்கும்!
வாய்ப்புகளும் ஓய்வுநேரமும்
நீங்கள் விரும்பும் வகையான உலகில், நிச்சயமாகவே குடிமக்கள் இன அல்லது தேச பேதமின்றி எல்லாரும் சம வாய்ப்புகளைக் கொண்டிருப்பர். ஆகவே, அந்த டாக்டர்களால் பட்டியலிடப்பட்ட ஆறாவது குறைந்தபட்ச தேவை: “அது ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய ஆற்றல்களையும் திறமைகளையும் முழு அளவுக்கு வளர்த்து, தன்னுடைய முயற்சிகளுக்காக ஓரவஞ்சனையின்றி பலனடையக்கூடிய வாய்ப்பைக் கொண்டிருக்கும் ஓர் உலகமாக இருக்கும்,” என்பதில் ஆச்சரியமொன்றுமில்லை.
மக்கள் எல்லாரும் சமமாக நடத்தப்படுவதை அனுபவித்துக் களிக்கும் ஓர் உலகத்தை மனிதர்களால் ஒருபோதும் ஸ்தாபிக்க முடியாமற்போயிருக்கிறது. விரும்பப்படாத சிறுபான்மையினர் மீதுள்ள தப்பெண்ணமும் துன்புறுத்தலும்கூட தணியாது தொடர்ந்து வந்திருக்கின்றன. எனினும், கடவுளுடைய புதிய உலகத்தின் அரசர், இயேசு கிறிஸ்து, தம் தகப்பனாகிய யெகோவாவின் முன்மாதிரியைப் பின்பற்றுவார். யெகோவா “பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, [லஞ்சம், NW] வாங்குகிறவரும் அல்ல.” (உபாகமம் 10:17; ரோமர் 2:11) வரவிருக்கும் புதிய உலகை அவ்வளவு அற்புதமானதாக்குவது என்னவென்றால், யெகோவா தேவனின் பட்சபாதமற்ற தன்மையைப் பின்பற்றும்படி மக்கள் போதிக்கப்படுவது மட்டுமல்லாமல் அவர்கள் அதை நடைமுறையிலும் செய்வர்.—ஏசாயா 54:13.
அடிக்கடி மக்களின் வாழ்க்கை, சிறிதளவு ஓய்வோ அல்லது ஓய்வே இல்லாமலோ இடைவிடா கடும் உழைப்புக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அடுத்த குறைந்தபட்ச தேவையோடு நிச்சயமாக நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள், அதாவது: “ஏழாவதாக, தங்களுடைய வாழ்க்கையில் நல்லதாக கருதக்கூடிய காரியங்களை மகிழ்ந்தனுபவிக்க எல்லா மனிதருக்கும் போதுமான ஓய்வு கிடைக்கக்கூடிய ஓர் உலகமாக இருக்கும்.”
ஓய்வான மற்றும் தளர்ந்த நேரங்களுக்கான மனிதனுடைய தேவையை அறிந்தவராக, யெகோவா தேவன் தமது பூர்வீக சட்டத்தில் வாராந்தர ஓய்வு நாளுக்கான ஏற்பாட்டை செய்திருந்தார். (யாத்திராகமம் 20:8-11) ஆதலால், தமது புதிய உலகில், தளர்ந்த நேரங்கள் மற்றும் ஆரோக்கியமான பொழுதுபோக்குகளுக்கான நம்முடைய தேவை பூர்த்திசெய்யப்படுவதைக் கடவுள் பார்த்துக்கொள்வார் என்பதில் நாம் நிச்சயமாக இருக்கலாம்.
குடிமக்கள் தன்மை
அந்த டாக்டர்களால் கொடுக்கப்பட்ட கடைசி அத்தியாவசியம் “நாம் அனைவரும் வாழ விரும்பும் வகையான உலகில்” குடியிருக்கப்போகும் குடிமக்களின் பண்புகளை விவரிக்கிறது. அவர்கள் பட்டியலிடும் பண்புகள் அத்தியாவசியம்தான் என்று நீங்கள் கருதுகிறதில்லையா என்று பாருங்கள். “எட்டாவது, அது புத்திக்கூர்மை மற்றும் படைப்புத்திறன், கனம் மற்றும் உத்தமத்தன்மை, அன்பு மற்றும் உண்மைத்தவறாமை, தன்-மதிப்பு மற்றும் சுயநலமின்மை, தன்னுடைய சக மனிதர்களுக்கான கரிசனை போன்ற பண்புகள் மிக உயர்வாய் மதிக்கப்படும் ஓர் உலகமாக இருக்கும். அப்பண்புகளே மனிதனைத் தாழ்ந்த உயிரினங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன.”
ஒவ்வொருவரும் உத்தமத்தன்மை, அன்பு, உண்மைத்தவறாமை, சுயநலமின்மை, சக மனிதர்களுக்கான கரிசனை போன்ற ஒழுக்க பண்புகளை வெளிக்காட்டும் ஓர் உலகில் வாழ்வதை நீங்கள் அனுபவித்துக் களிக்கமாட்டீர்களா? நிச்சயமாக இவ்வகையான உலகைத்தான் நீங்கள் விரும்புகிறீர்கள்! எந்த மனித ஆட்சியாளர்களும் இதை ஒருபோதும் கொடுக்கமுடியாது. யெகோவா தேவனால் மட்டுமே முடியும். அவர் அதைக் கொடுப்பார். காரணம் அவருடைய புதிய உலகம் ஒரு நிஜமற்றதல்ல, மனக்கோட்டையுமல்ல.—சங்கீதம் 85:10, 11.
அது எப்போது வரும்?
முந்திய கட்டுரையில் குறிப்பிடப்பட்டதுபோல, இயேசு கிறிஸ்துவின் நெருங்கிய கூட்டாளி ஒருவர் எழுதினார்: “[கடவுளுடைய] வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.” (2 பேதுரு 3:13) இயேசு குறிப்பிட்டதுபோல, இந்த வாக்குறுதியின் நிறைவேற்றத்துக்கான காலம், “மறு-படைப்பிலே, மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்” காலமாக இருக்கும்.—மத்தேயு 19:28, NW.
கடவுள் முதல் மனித ஜோடியான ஆதாமையும் ஏவாளையும், வைத்த பரதீஸிய பூங்காவை விரிவுபடுத்தும்படி அவர்களுக்கு அவர் ஆதியிலே கட்டளையிட்டார். அவர்கள் பிள்ளைகளைப் பெற்று, அவர்களைக் கொண்டு இந்த முழு பூமியையுமே ஓர் அழகான ஏதேன் தோட்டமாக மாற்றும்படி அவர் விரும்பினார். (ஆதியாகமம் 1:26-28; 2:7-9, 15) இந்த நோக்கத்தை நிறைவேற்ற ஆதாமும் ஏவாளும் தவறினாலும், கிறிஸ்து ராஜ்யத்தில் அரசாட்சி செய்யும் அந்த மறு-படைப்பில், அந்தப் பூமிக்குரிய பரதீஸ் மீண்டும் நிலைநாட்டப்படும். இறுதியில், ஏதேனிய நிலைமைகள் முழு பூமிக்கும் விரிவாக்கப்படும். இவ்வாறு நம்முடைய அன்புள்ள சிருஷ்டிகர், சமாதானமும் நீதியும் நிறைந்த ஓர் உலகத்திற்கான தமது ஆதி நோக்கத்தை நிறைவேற்றுவார். ஆனால் அது எப்போது வரும்?
‘ம், அது ஏதோ ஒரு காலத்தில் வரும், ஆனால் நம்முடைய வாழ்நாட்காலத்தில் அல்ல,’ என்று அநேகர் சொல்வதைப்போல நீங்களும் நினைக்கிறீர்களா? எனினும் உங்களுக்கு எப்படி தெரியும்? இதற்குமுன் ஒருபோதும் இருந்திராத உலக வேதனை நிலவிவரும் நம்முடைய காலம், கடவுளுடைய புதிய உலகம் அண்மையிலிருக்கிறது என்பதற்கான ஓர் அடையாளமாக இருக்கக்கூடுமா? நாம் எப்படி தெரிந்துகொள்ளலாம்?
[பக்கம் 7-ன் படம்]
புதிய உலகில், சமாதானமும், பரிபூரண ஆரோக்கியமும், செழிப்பும் இருக்கும்
[பக்கம் 8-ன் படம்]
புதிய உலகில், ஜனங்கள் பலன்தரும் வேலையை அனுபவித்துக் களிப்பர்
[பக்கம் 9-ன் படம்]
புதிய உலகில், ஓய்வுநேர செயல்நடவடிக்கைகளுக்கு நேரம் இருக்கும்