ஒரு மேம்பட்ட வாழ்க்கை வாக்களிக்கப்பட்டிருக்கிறது
வாழ்க்கையைக் கடினமானதாக ஆக்கும் பிரச்சினைகளிலிருந்து நீங்கள் விடுபட விருப்பமுள்ளவர்களாய் இருப்பீர்களா? இந்தப் பத்திரிகையின் முதற்பக்கத்திலும் கடைசி பக்கத்திலும் உள்ள அட்டைப்படத்தின் மூலம் தெளிவாகக் காண்பிக்கப்பட்டிருக்கும் காட்சியில் உள்ளதைப் போன்றே அத்தனை மகிழ்ச்சிநிரம்பிய வாழ்க்கை உள்ள ஒரு உலகில் நீங்கள் வாழ விரும்புகிறீர்களா? அந்தப் படத்தை நன்றாகப் பாருங்கள். மக்களுக்கு சாப்பிடுவதற்கு ஏராளமான உணவு உள்ளது. அவர்கள் உண்மையிலேயே அந்த சுவைமிக்க உணவை அனுபவித்து மகிழ்வர். எல்லாரும் சந்தோஷமாய் இருக்கின்றனர். வித்தியாசமான இனங்களைச் சேர்ந்த மக்கள் ஒருவரோடொருவர் சமாதானமாய் இருக்கின்றனர். மிருகங்களும்கூட சமாதானமாய் இருக்கின்றன! எவருமே சண்டை போட்டுக் கொண்டிருப்பதில்லை. எவருமே ஏழையாக இல்லை. எவருமே நோயுற்றிருப்பதில்லை. அங்கே நேர்த்தியான சுற்றுச்சூழல்கள், அழகான மரங்கள் மற்றும் மாசற்ற, சுத்தமான தண்ணீர் ஆகியவை இருக்கின்றன. என்னே ஒரு வனப்புமிக்க சுற்றுப்புறச் சூழல்!
இந்த பூமி எப்போதாவது அப்படி இருக்குமா? ஆம், அது ஒரு பரதீஸாக இருக்கும். (லூக்கா 23:43) ஒரு பரதீஸிய பூமியில் மானிடர்கள் மேம்பட்ட வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வர் என்று பூமியைப் படைத்த கடவுள் நோக்கம் கொண்டுள்ளார். நீங்களும் அங்கு இருக்கலாம்!
நீங்கள் எந்த வாழ்க்கையை விரும்பித் தேர்ந்தெடுப்பீர்கள்?
நாம் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் உலகிலிருந்து எதிர்காலத்தில் வரப்போகும் பூமிக்குரிய பரதீஸ் எப்படி வித்தியாசமானதாய் இருக்கும்? இப்போது 100 கோடிக்கும் மேற்பட்ட ஜனங்கள் ஒவ்வொரு நாளும் பசியாய் இருக்கின்றனர். ஆனால் இந்த பூமிக்காக கடவுள் நோக்கம் கொண்டிருக்கும் பரதீஸில் எல்லாருக்கும் சாப்பிடுவதற்கு ஏராளமான உணவு இருக்கும். பைபிள் வாக்களிக்கிறது: “சேனைகளின் கர்த்தர் இந்த மலையிலே சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சரசமும் . . . நிறைந்த விருந்தாயிருக்கும்.” (ஏசாயா 25:6) அங்கு உணவுப் பற்றாக்குறை இருக்காது, ஏனென்றால் பைபிள் சொல்கிறது: “பூமியிலே தானியம் ஏராளமாய் இருக்கும்; மலைகளின் உச்சியிலே நிரம்பி வழியும்.”—சங்கீதம் 72:16, NW.
இன்று அநேகர் குடிசைகளிலும் ஏழ்மையான குடியிருப்புகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர், அல்லது அவர்கள் வாடகை கொடுப்பதற்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இன்னும் மற்றவர்களுக்கு வீடுகள் இல்லை, ஆகையால் தெருக்களில் படுத்து உறங்குகின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின்படி, இவ்வுலகில் பத்து கோடிக்கும் மேற்பட்ட பிள்ளைகள் வீடில்லாமல் இருக்கின்றனர். ஆனால் வரப்போகும் பரதீஸில் எல்லாருக்கும் தங்களுடையது என்று சொல்ல சொந்தமான வீடுகள் இருக்கும். கடவுளுடைய வார்த்தை சொல்கிறது: “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள்.”—ஏசாயா 65:21.
அநேக மக்கள் தாங்கள் விரும்பாத வேலைகளில் கடுமுயற்சி செய்து ஈடுபடுகின்றனர். பெரும்பாலும் அவர்கள் மிகவும் கடினமாக அநேக மணிநேரங்கள் உழைக்கின்றனர், ஆனால் குறைவான சம்பளத்தையே பெற்றுக்கொள்கின்றனர். இந்த உலகில் சுமார் ஒவ்வொரு 5 நபர்களில் 1 நபர், ஒரு வருடத்துக்கு $500-க்கும் குறைவான ஊதியத்தையே பெற்று வாழ்கிறார். என்றபோதிலும், வரப்போகும் பரதீஸில் ஜனங்கள் தங்கள் வேலையை அனுபவித்து மகிழ்வர், அதிலிருந்து நல்ல பலன்களைக் காண்பர். கடவுள் வாக்களிக்கிறார்: “நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அனுபவிப்பார்கள். அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை.”—ஏசாயா 65:22, 23.
இப்போது உடல்நலமின்மையும் நோயும் எங்கும் உள்ளன. அநேகர் பார்வையில்லாமல் இருக்கின்றனர். சிலர் செவிடராய் இருக்கின்றனர். இன்னும் சிலர் நடக்க முடியாமல் இருக்கின்றனர். ஆனால் பரதீஸில் ஜனங்கள் உடல்நலக்குறைவிலிருந்தும் நோயிலிருந்தும் விடுபட்டிருப்பர். யெகோவா சொல்கிறார்: “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை.” (ஏசாயா 33:24) ஏற்கெனவே குறைபாடுகள் உள்ள நபர்களுக்கு, இருதயத்துக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் வாக்கு என்னவென்றால்: “அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். அப்பொழுது முடவன் மானைப் [கலை மானைப்] போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்” என்பதே.—ஏசாயா 35:5, 6.
தற்போதைய காலத்தில் துன்பமும் வருத்தமும், கவலையும் மரணமும் உள்ளது. ஆனால் பூமியின் மீது வரப்போகும் பரதீஸில், இவையனைத்தும் இருக்காது. ஆம், மரணம்கூட போய்விட்டிருக்கும்! பைபிள் சொல்கிறது: ‘தேவன்தாமே அவர்களோடேகூட இருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.’—வெளிப்படுத்துதல் 21:3, 4.
அப்படியென்றால், யெகோவா வாக்களித்திருக்கும் பூமிக்குரிய பரதீஸ், மனிதவர்க்கத்துக்கு ஒரு மேம்பட்ட வாழ்க்கையை அர்த்தப்படுத்தும் என்பது தெளிவாயிருக்கிறது. ஆனால் அது வரும் என்று நாம் எப்படி நிச்சயமாய் இருக்கலாம்? அது எப்போது, எவ்வாறு வரும்? அங்கு இருப்பதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்?