இளைஞர் கேட்கின்றனர்
“வெகு தூரம்” என்பது எவ்வளவு தூரம்?
“வெகு தூரம் செல்வதன் அபாயத்தைப்பற்றி தயவுசெய்து நீங்கள் மக்களை எச்சரிப்பீர்களா? . . . ‘இடைப்பட்டவை’ எல்லாம் கையாளப்படவேண்டும், ஏனென்றால் அதுவே பாலுறவுக்கு வழிநடத்துகிறது. என்னுடைய கேள்வி என்னவென்றால், அதன் வரம்பு எங்கே?”
இதைத்தான் ஒரு பெண் பருவ வயதினருக்கான ஒரு பத்திரிகையில் கேட்டாள். ஆனால் ஒருவேளை நீங்களும் யோசித்திருக்கக்கூடிய ஒரு கேள்வியாக இது இருக்கலாம்.
நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருப்பீர்களானால், 1 தெசலோனிக்கேயர் 4:3-6-ல் காணப்படும் இந்த வார்த்தைகளுக்கு ஆழ்ந்த கவனம் செலுத்துகிறீர்கள்: “நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து, . . . இந்த விஷயத்தில் ஒருவனும் மீறாமலும் தன் சகோதரனை வஞ்சியாமலும் இருக்கவேண்டும்; . . . இப்படிப்பட்ட விஷயங்களெல்லாவற்றையுங்குறித்துக் கர்த்தர் நீதியைச் சரிகட்டுகிறவராயிருக்கிறார்.”
ஆகவே, திருமணமாகாத கிறிஸ்தவர்கள் உடலுறவுகொள்வது தவறு என்று நீங்கள் உணர்ந்தாலும், இன்னும் எதிர்பாலர் ஒருவரை முத்தமிடுதல், கட்டியணைத்தல், அல்லது தொட்டுத்தடவி விளையாடுதல் போன்றவற்றை கடவுள் எவ்வாறு கருதுகிறார் என்று நீங்கள் யோசிக்கலாம்.
வளருவதன் ஒரு பாகமா?
முதலாவது, பாலுறவு ஈடுபாடுகளின்றி சரியான, சுத்தமான முறையில் அன்பை வெளிக்காட்டுவதை பைபிள் கண்டனம் செய்வது கிடையாது என்பதை மனதில் வைப்பது நல்லது. பூர்வ கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை நன்கு வெளிக்காட்டக்கூடியவர்களாக இருந்தனர். அவர்கள் பொதுவாகவே “ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்து”வார்கள். (ரோமர் 16:16; 1 கொரிந்தியர் 16:20) அதே பாலினத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்களும்கூட முத்தமிட்டு கட்டியணைத்துக்கொள்வார்கள்.—அப்போஸ்தலர் 20:38-ஐ ஒப்பிடவும்.
அநேக கலாச்சாரங்களில், முத்தமிடுதலும் கட்டித்தழுவுதலும் ஒருவர்மீதுள்ள அன்பைக் காட்டும் தகுதியான வழிகளாகவே இன்னும் கருதப்படுகின்றன. எனினும், இன்று அநேக இளைஞர் தகுதியானது எது என்பதன் நியாயமான விளக்கத்திற்கப்பால் செல்லக்கூடிய வழிகளில் அன்பைக் காண்பிக்கின்றனர். சுற்றாய்வு செய்யப்பட்ட இளைஞரில் இரண்டிலொரு பாகத்தினருக்கு அதிகமானோர் தாங்கள் அந்தரங்க உடலுறுப்புக்களைத் தடவிக்கொடுப்பதை உட்படுத்திய ஏதாவது ஒருவித கொஞ்சலில் ஈடுபட்டனர் என்று சொன்னதாக ஐ.மா. சுற்றாய்வு ஒன்று கண்டுபிடித்திருக்கிறது. அநேகர் 14 வயதாயிருக்கும்போதிலிருந்தே அவ்வாறு செய்ய ஆரம்பித்துவிட்டனர். மற்றொரு சுற்றாய்வில் கண்டுபிடிக்கப்பட்டபடி, 49 சதவீதத்தினர் உச்ச பாலுறவு உணர்ச்சியை அடையுமளவுக்குக் கொஞ்சலில் ஈடுபட்டிருக்கின்றனர்.
சிலர் இத்தகைய பாலுறவு சோதனை வெறுமனே வளர்ச்சியடைவதன் ஒரு பாகமாகவே இருக்கிறது என்று நியாயப்படுத்திக் காட்டுகின்றனர். வளரிளமை பருவத்தினரின் குடும்பக் கையேடு (The Family Handbook of Adolescence) என்ற புத்தகம் சொல்கிறபடி, “பாலின விளையாட்டுகளும் சோதனைமுறைகளும் பெரும்பாலும் சராசரி வளரிளமை பருவத்தினர் மத்தியில் பொதுவாகக் காணப்படுபவையாகும்.” கொஞ்சுதலை சிலர் சிபாரிசும் செய்கிறார்கள். “உடலுறவுகொள்ளுமுன் நிறுத்தப்படுவதால், பெரும்பாலான கொஞ்சல்கள் கவலையுணர்ச்சி இல்லாமல் அனுபவிக்கப்படலாம். மேலும் இது பாலின சக்தியை வெளியேற்றுவதற்கான அதிசயக்கத்தக்க ஒரு வழியாக இருக்கிறது,” என்று கேத்ரன் பர்க்கார்ட் எழுதிய க்ரோயிங் இன்ட்டு லவ் என்ற புத்தகம் வலியுறுத்துகிறது.
இருப்பினும், கேள்வி என்னவென்றால், அத்தகைய நடத்தையைக் கடவுள் எவ்வாறு நோக்குகிறார்?
ஒரு முத்தத்தில் என்ன இருக்கிறது?
நீங்கள் “இளமையின் மலரும் பருவத்தில்” இருக்கும்போது, பாலின ஆசைகள் பலமாக ஏற்படுகின்றன. (1 கொரிந்தியர் 7:36, NW) ஆகவே, எதிர்பாலர் ஒருவரை முத்தமிட்டால் எப்படியிருக்கும் அல்லது தொட்டால் எப்படியிருக்கும் என்பதைப்பற்றிய ஆர்வத்துடன் இருப்பது இயற்கைதான். ஆனால் வளரிளமை பருவத்தினரின் குடும்பக் கையேடு குறிப்பிட்டுக் காட்டுகிறது: “உணர்ச்சிப்பூர்வ முதிர்ச்சியடையுமுன், பாலுறவு ஆற்றல் பல வருடங்களுக்கு இருந்துவருகிறது.” ஒரு முத்தத்திற்கோ ஒரு தடவலுக்கோ பலமான காம உணர்ச்சிகளை அல்லது பாலுறவு வேட்கையைத் தூண்டிவிடும் வல்லமை இருக்கிறது என்பதை அநேக இளைஞர் உண்மையிலேயே முழுமையாக உணருவதில்லை.
ஆகவே, பாலுறவு உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் நடத்தையில் ஈடுபடுவதன் விளைவுகளுக்கு நீங்கள் ஞானமாக கவனம் செலுத்தவேண்டும். திருமணம் செய்துகொள்ள முடியாதளவுக்கு நீங்கள் சிறுவயதினராக இருந்தால் என்ன? அப்படியிருக்க உங்கள் பாலுறவு உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் ஒரு வழியில் முத்தமிட அல்லது எதையும் செய்வானேன்? இது சாதிப்பதெல்லாம் உங்களை ஏமாற்றமடையச் செய்வதுதான். இது ஏனென்றால், ஓர் உண்மைக் கிறிஸ்தவராக அந்தக் காம உணர்ச்சிகளை அவற்றின் நியாயமான முடிவுக்கு—உடலுறவுக்குக் கொண்டுசெல்ல உங்களுக்கு எந்தவொரு வழியுமில்லை. விவாகத்திற்குள் மட்டுமே அப்படிப்பட்ட உறவுமுறைகள் தகுதியானவையாக இருக்கின்றன என்று பைபிள் தெளிவாக்குகிறது.—1 கொரிந்தியர் 6:18.
உங்களுடைய காமச்செய்கையால் யாருடைய பாலின உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றனவோ அந்த மற்ற நபரையும்பற்றி சிந்தித்துப்பாருங்கள். நீங்கள் மணந்துகொள்ளும் நிலையில் இல்லாத அல்லது தகுதியான திருமணத் துணையாக ஆழ்ந்து சிந்திக்கக்கூட முடியாத ஒருவரை முத்தமிடுவதோ அல்லது தொட்டுத் தடவிக்கொடுப்பதோ ஏமாற்றுவேலையல்லவா, ஏன் கொடூரத்தனமுமல்லவா? (நீதிமொழிகள் 26:18, 19-ஐ ஒப்பிடவும்.) பைபிள் எச்சரிக்கிறது: “கடூரனோ தன் உடலை அலைக்கழிக்கிறான்.”—நீதிமொழிகள் 11:17.
காம உணர்ச்சியோடுகூடிய ஒரு தொடுதலோ ஒரு முத்தமோ பலமான பாலுறவு ஆசையைத் தூண்டிவிடும் என்பது பைபிள் மாணாக்கர் ஒருவருக்கு எந்தவித ரகசியமாகவும் இருக்கக்கூடாது. ஓர் இளைஞன் ஒரு வேசியால் வஞ்சிக்கப்பட்டதைப்பற்றி பைபிள் சொல்கிறது. “அவள் அவனைப் பிடித்து முத்தஞ்செய்”தாள் என்று அது சொல்கிறது. (நீதிமொழிகள் 7:13) அப்படிப்பட்ட ஒரு முத்தம் அல்லது தொடுதல் ஆற்றல்மிக்க சரீரப்பிரகாரமான பிரதிபலிப்பைத் தூண்டிவிடலாம். நெருக்கம் அதிகரிக்க அதிகரிக்க ஒரு பையனோ பெண்ணோ அதிகளவில் தூண்டப்படுகின்றனர். வெளிப்படையாக சொன்னால், அந்த உடல் உடலுறவுகொள்ள தயாராகிக்கொண்டிருக்கிறது.
ஒரு தம்பதியர் திருமணமானவரானால், அவர்கள் தங்களுடைய உணர்ச்சிகளைத் திளைப்பூட்டும் மற்றும் மதிப்பான ஒரு வழியில் திருப்திப்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் திருமணமாகாத ஒரு ஜோடி உணர்ச்சிகளைத் தூண்டும் பாலுறவு விளையாட்டில் ஈடுபட்டால், நிச்சயமாக பிரச்னைகள் உருவாகும். கொஞ்சுதலில் ஈடுபட்ட அநேக இளைஞர், அவர்கள் சொல்கிறவண்ணம், அவர்கள் வெறுமனே “முழு கட்டுப்பாட்டையும் இழந்தனர்,” என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டதாக ஒரு சுற்றாய்வில் எழுத்தாளர் நேன்சி வேன் பெல்ட் கண்டுபிடித்தார். இதற்குமுன் எப்போதும் செய்ததைவிட அதிகத்தைச் செய்ய வற்புறுத்தப்பட்ட இளம்பெண் ஓர் எடுத்துக்காட்டு. அவள் உடலுறவில் ஈடுபடவில்லையென்றாலும், அவளை நெருக்கமாக தொடுவதற்கு அந்தப் பையனை அனுமதித்தாள். அவள் சொல்கிறாள்: “நான் இப்போது மிகவும் பயங்கரமாக உணருகிறேன்.” அந்தப் பையன் தன்னிடம் எதைச் செய்ய அனுமதித்தாளோ அது உண்மையிலேயே தவறா?
“வெகு தூரம்” என்பது என்ன?
உடலுறவுகொள்ளாத வரை அவர்கள் வெகு தூரம் போய்விடவில்லை, அவர்கள் என்ன செய்கிறார்களோ அது உண்மையிலேயே தவறு அல்ல என்று சில இளைஞர் நம்புகின்றனர். பைபிள் அதற்கு எதிர்மாறாக காட்டுகிறது. கலாத்தியர் 5:19-21-ல் அப்போஸ்தலன் பவுல் சொன்னார்: “மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: . . . வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், . . . இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.”
வேசித்தனம் என்றால் என்ன? வேசித்தனத்திற்கான மூல கிரேக்க வார்த்தை போர்னியா. இது திருமணக் கட்டுகளுக்கு வெளியே பிறப்பு உறுப்புக்களின் உபயோகத்தை ஈடுபடுத்தும் பாலுறவு செய்கையைக் குறிக்கிறது. பதினேழு (Seventeen) என்ற பத்திரிகையில் மேற்கோள்காட்டப்பட்ட ஒரு பெண் தன்னுடைய காதலன் தன்னை வாய்வழி புணர்ச்சியில் (oral sex) ஈடுபடும்படி வற்புறுத்த அனுமதித்தாள். “உண்மையிலேயே நான் மடத்தனமாக உணருகிறேன்,” என்று அவள் சொன்னாள், “ஏனென்றால் என்னுடைய தோழிகளெல்லாம் தங்களுடைய காதலர்களோடு அதைச் செய்வதாகவும் நான் செய்யவில்லையெனில் நான் அவரை இழக்கப்போகிறேன் என்றும் சொல்கின்றனர்.” கவலைதரக்கூடிய எண்ணிக்கையில் இளைஞர் அந்த வகை ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டிருக்கின்றனர் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. இருந்தபோதிலும், அத்தகைய செய்கைகள் போர்னியாவுக்குச் சமமானவையாக இருந்து கடவுளுடைய கண்டனத்தைக் கொண்டுவருகின்றன.
அப்போஸ்தலன் பவுல் மேலும் வேசித்தனத்தை ‘அசுத்தத்தோடு’ இணைத்தார். மூல கிரேக்க வார்த்தையாகிய அகாதார்சியா, பேச்சு அல்லது செயல் போன்றவற்றில் உள்ளதைப்போன்ற எல்லா வகையான அசுத்தத்தையும் உள்ளடக்குகிறது. ஒருவருடைய கைகளை ஒருவருடைய உடைகளுக்குள் திரிய, ஒருவருடைய உடைகளைக் கழற்ற அல்லது மார்பகங்களைப்போன்ற மற்றவருடைய அந்தரங்க உடல் பாகங்களைத் தடவ அனுமதிப்பதும் நிச்சயமாகவே அசுத்தமாகும். ஏன், பைபிளில் மார்பகங்களைத் தொட்டுத் தடவிக்கொடுப்பது மணமான தம்பதிகளுக்கு மட்டுமே ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கும் மகிழ்ச்சியோடு தொடர்புபடுத்தப்படுகிறது.—நீதிமொழிகள் 5:18, 19; ஒப்பிடவும்: ஓசியா 2:2.
இருந்தபோதிலும் சில இளைஞர் துணிச்சலுடன் கடவுளுடைய இந்தத் தராதரங்களை மீறுகின்றனர். அவர்கள் மனமார அறிந்திருந்தும் வெகு தூரம் செல்கின்றனர் அல்லது பாலுறவு அசுத்தத்தில் தங்களோடு ஈடுபடுத்த அநேக துணைகளைப் பேராசையுடன் தேடியலைகின்றனர். இதன் காரணமாக அப்போஸ்தலன் பவுலால் அழைக்கப்பட்ட ‘காமவிகாரத்தை’ இழைத்த குற்றவாளிகளாகின்றனர்.
‘காமவிகாரத்திற்கான’ மூல கிரேக்க வார்த்தை (அசெல்ஜீயா) ‘இழிவான செயல்கள், வரம்புமீறியவை, திமிரானவை, கட்டுப்பாடற்ற வேட்கை, மற்றும் இழிவானத்தன்மை’ என்று அர்த்தப்படுத்துகிறது. காமவிகாரத்தை நடப்பிக்கிற இளைஞர் பவுல் குறிப்பிடுகிற அந்தப் புறமதத்தினரைப்போல இருக்கின்றனர். “தங்கள் இருதய கடினத்”தினால் அந்தப் புறமதத்தினர் “உணர்வில்லாதவர்களாய், சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும்படி, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்.” (எபேசியர் 4:17-19) நிச்சயமாகவே அத்தகைய கண்டனத்தின்கீழ் வருவதை நீங்கள் தவிர்க்க விரும்புவீர்கள்!
ஆகவே, யெகோவாவின் நோக்குநிலையிலிருந்து “வெகு தூரம்” செல்ல ஒருவர் உடலுறவு கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். திருமணம் செய்துகொள்ள உங்களுக்கு வயது போதாது என்றால், காம உணர்ச்சியுடன் தொடுதல், முத்தமிடுதல் போன்றவற்றில் ஈடுபடக்கூடாது. திருமணம் செய்துகொள்வதற்காக எதிர்பாலரோடு பழகுவதில் ஈடுபட்டிருப்பவர்கள் தங்கள் அன்பின் வெளிக்காட்டுதல்கள் அசுத்தமாகிவிடாதபடி கவனித்துக்கொள்ளவேண்டும். தெய்வீக தராதரங்களைக் கடைப்பிடிப்பது எளிதல்ல என்றே வைத்துக்கொள்வோமே. ஆனால் ஏசாயா 48:17-ல் “பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே,” என்று கடவுள் சொல்கிறார்.—கலாத்தியர் 5:16-ஐயும் பாருங்கள். (g93 10/22)
[பக்கம் 13-ன் படங்கள்]
நீங்கள் மணமாகாதவராக இருந்தால், காம உணர்ச்சியைத் தூண்டிவிடும் நடத்தையில் ஈடுபடுவது ஏமாற்றத்திற்கும் இன்னும் மோசமான நிலைக்கும் வழிநடத்தக்கூடும்