உடற்பயிற்சி வயதானவர்களுக்கு பலனளிக்கிறதா?
“உடற்பயிற்சி முதுமையடையும் போக்கை மாற்றியமைக்க முடியுமா?” கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு முன் வெளிவந்த தி நியூ யார்க் டைம்ஸில் இது ஒரு தலைப்புச் செய்தியாக இருந்தது. அந்தக் கட்டுரை தெரிவித்தது: “எடைகளை உபயோகித்து செய்யும் ஒரு தீவிர பயிற்சித் திட்டத்திற்கு உட்படுத்தப்பட்டால் தங்களின் 90-களில் உள்ள வயதானவர்கள்கூட பலமுள்ளவர்களாக ஆகலாம்; மேலும் தங்களின் தசைகளின் பருமனை அதிகரிக்கவும் செய்யலாம் என்று [பாஸ்டனில் உள்ள] டஃப்ட்ஸ் பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.”
வயதானவர்களும் உடற்பயிற்சியிலிருந்து உண்மையிலேயே பயனடைய முடியும் என்பதற்கான சான்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்திருக்கிறது. ஹார்வர்டு ஹெல்த் லெட்டரின் 1991 பிப்ரவரி இதழ், 1990-ன் ஓர் ஆராய்ச்சியைப்பற்றி அறிக்கை செய்தது. அது இவ்வாறு சொன்னது: “[மருத்துவ இல்லத்தில் தங்கியிருக்கும்] 87-க்கும் 96-க்கும் இடைப்பட்ட வயதிலுள்ள ஒன்பது பேர் பளுதூக்குதலைப் பயன்படுத்தும் இரண்டுமாத அதி-தீவிர உடற்பயிற்சியை முடித்துவிட்டனர்.” இந்த ஆராய்ச்சியைப்பற்றி, மேயோ க்ளினிக் நியூட்ரிஷன் லெட்டர் விவரித்தது: “பங்குகொண்டவர்கள் கால் தசையின் பலத்தை கிட்டத்தட்ட இரண்டு மடங்கும், தொடை தசையின் பருமனை 9 சதவீதத்திற்கும் அதிகரித்துக்கொண்டனர். மேலும் இயக்க ஆற்றல் சோதனைகளிலும் செயல்திறனை முன்னேற்றுவித்துக்கொண்டனர்.”
அந்த ஆராய்ச்சியாளர்கள் அறிக்கை செய்ததாவது: “பலமூட்டும் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டவர்களுடைய மிகவும் முதிர்ந்த வயது, ஓடியாடித் திரியும் பழக்கங்கள் அறவே இல்லாமை, பல்வேறு நெடுங்கால வியாதிகள், ஊனங்கள், ஊட்டச்சத்துக்குறைவுகள் போன்றவற்றைப் பார்க்கும்போது, இந்தப் பயிற்சிக்கான அவர்களின் சாதகமான பிரதிபலிப்பு குறிப்பிடத்தக்கது.” உடற்பயிற்சியின் மதிப்பு மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
உதாரணமாக, 90 வயதுள்ள ஜேக் சீபர்ட்டை எடுத்துக்கொள்ளுங்கள். இவர் 1979-ல் பாரிச வாயுவால் (stroke) ஒருமுறை தாக்கப்பட்டு, இது அவருடைய வலது பக்கத்தைச் செயலற்றுப்போகச் செய்து, ஊன்றுகோலின் உதவியின்றி நடக்கமுடியாதபடி செய்தது. நடைமுறையாகவே பத்து வருடங்களுக்குமேல், ஒவ்வொரு காலையும் படுக்கையில் கிடந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் தனது இடது காலை உயரத் தூக்கிப் பிடித்துக்கொண்டு ஒருவர் சைக்கிளை மிதிப்பது போன்று சுமார் 20 நிமிடங்கள் அதை சுற்றுவார். சில சமயங்களில் செயலற்றுப்போன வலது காலை (படத்தில் காட்டியிருப்பதுபோல) இடதுகாலின் மீது வைத்து இரண்டையும் சேர்த்து சுற்றுவார். அவர் இன்னமும் ஊன்றுகோலை பயன்படுத்தி நடக்க முடியுமளவுக்கு இந்த ஒழுங்கான உடற்பயிற்சி அவருடைய கால் தசைகளைப் பலப்படுத்தியிருப்பது மட்டுமின்றி, அவருடைய இரத்தவோட்ட அமைப்புகளை நன்கு பராமரித்துக்கொள்ள உதவிசெய்தும் மனதில் சுறுசுறுப்பாக இருக்கும்படியாகவும் செய்திருக்கிறது.
ஆகவே, உடற்பயிற்சி செய்யத் தொடங்குவது ஒருபோதும் தாமதமாகிவிடுவதில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 82 வயது ஜான் கெலீ 1990-ல் ஓடியதுபோல பாஸ்டன் மாரத்தானை—ஒரு 42 கிலோமீட்டர் ஓட்டத்தை—ஐந்து மணி ஐந்து நிமிட நேரத்தில் உங்களால் ஒருபோதும் ஓடிமுடிக்க முடியாது என்பது உண்மையே. அதைப்போல 1991-ல் 84 வயது கொள்ளுப்பாட்டி மேவிஸ் லின்ட்கிரன் ஓடிய அந்தத் தூரத்தை ஏழு மணி ஒன்பது நிமிட நேரத்தில் உங்களால் ஓடமுடியும் என்பதற்கான வாய்ப்பும் கிடையாது. இருந்தபோதிலும், அமெரிக்கர் இருதய சங்கத்தின் (American Heart Association) சர்க்குலேஷன் என்ற ஒரு பத்திரிகை: “சுறுசுறுப்பாய் இருப்பதற்கான வழிகளை ஆராயும் பழக்கத்தில் இறங்குவது முக்கியம்,” என்று கடந்த வருடம் வற்புறுத்திற்று.
அந்தப் பத்திரிகை விளக்கிற்று: “தினமும் செய்யப்பட்ட தீவிரமற்ற செயல்களும்கூட சில நீண்டகால உடல்நல பலன்களைக் கொண்டுவந்து, இருதய நோய்க்கான ஆபத்தைக் குறைக்கலாம். அத்தகைய செயல்கள் மகிழ்ச்சிக்காக நடத்தல், தோட்டமிடுதல், வீட்டுச் சுற்றுப்புறத்திலுள்ள வேலை, வீட்டுவேலை, நடனமாடுதல், சிபாரிசு செய்யப்பட்ட வீட்டு உடற்பயிற்சி போன்றவற்றை உட்படுத்துகின்றன.” (g93 10/22)
[பக்கம் 31-ன் படம்]
பாரிச வாயுக்குப் பலியான இந்த 90-வயது நபரைப் போன்று, ஊனமுற்ற வயதான ஒருவர் உடற்பயிற்சியால் பலனடையக்கூடும்