நம் ஆயுள் கடிகாரம் எவ்வளவு காலம் ஓடும்?
பொதுவாகவே, ஜனங்கள் நீண்ட நாட்கள் வாழ்கின்றனர். இது, ‘நாம் எவ்வளவு காலம் வாழ முடியும்?’ என்று அநேகரை சிந்தனையில் ஆழ்த்துகிறது.
பையர் ஸூபர் என்பவரே ரொம்ப காலம் வாழ்ந்ததாக நம்பப்பட்டது என த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா (1995) குறிப்பிடுகிறது. 1814-ல் அவர் சாகும்போது அவருக்கு வயது 113. இன்னும் பலர், இதைவிட அதிக ஆண்டுகள் வாழ்ந்ததாக சொல்லப்படுவது என்னவோ உண்மைதான். ஆனால், அவர்கள் அவ்வளவு வயதுவரை வாழ்ந்தார்கள் என நம்புவதற்கு ஆதாரங்கள் ஏதுமில்லை. இருப்பினும், பையர் ஸூபரைவிட அதிக ஆண்டுகள் நிறையப் பேர் வாழ்ந்திருக்கின்றனர் என்பதை துல்லியமான ஆவணங்கள் ஆணித்தரமாக நிரூபித்து இருக்கின்றன.
ஸான் லூவீஸ் கல்மான் என்ற பெண்மணி, 1875-ம் ஆண்டு, பிப்ரவரி 21-ம் தேதி, தென்கிழக்கு பிரான்ஸில் இருக்கும் ஆர்ல் என்ற இடத்தில் பிறந்தார். 1997, ஆகஸ்ட் 4-ம் தேதி இறந்தார். 122-க்கும் அதிகமான வருடங்களுக்கு பிறகு சம்பவித்த அவரது மரணம், பெரும் விளம்பரத்தைப் பெற்றது. 1986-ல், தனது 120-வது வயதில், ஜப்பானைச் சேர்ந்த ஷீகெசீயோ ஈஸூமி காலமானார். 118 வயது சேரா நௌஸ் என்பவரே மிக அதிக வயதாகி இறந்ததாக கின்னஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் 1999 சொல்லுகிறது. அந்தப் பிரசுரம் தொகுக்கப்படும்போது, இவரே அதிக வயதுவரை வாழ்ந்து சாதனை படைத்ததாக பட்டியல் படுத்தியது. இவர், 1880, செப்டம்பர் 24-ம் தேதி, அ.ஐ.மா.-வில் உள்ள பென்சில்வேனியாவில் பிறந்தார். கனடாவில் இருக்கும் க்யூபெக்கைச் சேர்ந்த மேரீ-லுவீஸ் ஃபெப்ரோனீ மெயர் என்பவர், 1998-ல் இறந்தபோது அவரது வயது 118 ஆண்டுகள் 26 நாட்கள். அவர் சேராவைவிட 26 நாட்கள் அதிகம் வாழ்ந்தார்.
வயதான ஆட்களின் எண்ணிக்கை படுவேகமாக அதிகரித்து வருகிறது என்பது ஒத்துக்கொள்ள வேண்டியதே. அடுத்த நூற்றாண்டின் பாதிக்குள், நூறு வயதை எட்டியவர்களின் எண்ணிக்கை 22 லட்சத்திற்கும் மேல் உயரும் என கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. இதைப் போலவே, 1970-ல் 2.67 கோடியாக இருந்த 80 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுள்ளவர்களின் எண்ணிக்கை 1998-ல் 6.6 கோடியாக அதிகரித்துள்ளது. இது, 147 சதவீத உயர்வு! உலக மக்கள் தொகை அதிகரிப்போ வெறும் 60 சதவீதமே.
மக்கள் நீண்ட காலம் வாழ்கின்றனர் என்பது மட்டுமல்ல, 20 வயது இளவட்டங்கள் செய்ய திண்டாடுவதைக்கூட இவர்களில் பெரும்பாலானோர் சர்வசாதாரணமாக செய்கின்றனர். 1990-ல், 82 வயது ஜான் கெல்லி, 42,195 மீட்டர் மாரத்தான் ஓட்டத்தை ஐந்து மணி ஐந்து நிமிடங்களில் ஓடி முடித்தார். 1991-ல், 84 வயது கொள்ளுப்பாட்டி, மேவிஸ் லின்ட்க்ரென், இதே தூரத்தை ஏழு மணி ஒன்பது நிமிடங்களில் ஓடிக் கடந்தார். மிக சமீபத்தில், 91 வயது மனிதர் ஒருவர் நியூ யார்க் நகர மாரத்தானில் ஓடி சாதனை படைத்தார்!
பூர்வ காலங்களில் வாழ்ந்த வயதானவர்களும் இதில் சளைத்தவர்களல்ல. பைபிளில் சொல்லப்பட்டுள்ள குடும்பத்தலைவன் ஆபிரகாம், 99 வயதில் விருந்தாளிகளை ‘சந்திக்க ஓடினார்.’ காலேப்புக்கு 85 வயதாகும்போது, “யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது [45 வருடங்களுக்கு முன்] இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது” என பறைசாற்றினார். மோசே 120 வயதாய் இருக்கும்போதும்கூட, “அவன் கண் இருளடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை” என பைபிள் சொல்லுகிறது.—ஆதியாகமம் 18:2; யோசுவா 14:10, 11; உபாகமம் 34:7.
முதல் மனிதனாகிய ஆதாமையும், பேழையை கட்டிய நோவாவையும் சரித்திரப் புருஷர்களாக இயேசு குறிப்பிட்டார். (மத்தேயு 19:4-6; 24:37-39) ஆதாம் 930 வருடமும் நோவா 950 வருடமும் உயிர்வாழ்ந்தனர் என ஆதியாகமம் கூறுகிறது. (ஆதியாகமம் 5:5; 9:29) உண்மையிலேயே அவ்வளவு காலம் மனிதர்கள் வாழ்ந்தனரா? நாம் அதைவிட அதிக காலம் வாழமுடியுமா? என்றென்றுமாக? அடுத்த கட்டுரையில் இதற்கான அத்தாட்சிகளை தயவுசெய்து படித்துப் பாருங்களேன்.