நீடித்த வாழ்நாளுக்கு என்ன நம்பிக்கை?
“பெண் வயிற்றில் பிறந்த மனிதன் சில நாட்களே வாழ்கிறான், அவையும் தொல்லை நிறைந்த நாட்களாய் இருக்கின்றன.”—யோபு ஆகமம் 14:1-ல் பதிவுசெய்யப்பட்ட யோபுவின் வார்த்தைகள், தமிழ் “கத்தோலிக்க பைபிள்.”
வாழ்க்கையின் குறுகியதன்மை எவ்வளவு அடிக்கடி கவிதை நடையில் விவரிக்கப்படுகிறது! யோபுவைப் போன்றே முதல் நூற்றாண்டு எழுத்தாளர் ஒருவரும் கூறினார்: “நொடிப்பொழுதில் தோன்றி மறையும் புகையே நீங்கள்.”—யாகப்பர் 4:14, கத்.பை.
வாழ்நாளானது பரிதாபகரமாக குறுகியிருக்கிறதை நீங்களும்கூட கவனித்திருக்கிறீர்களா? சுமார் 400 வருடங்களுக்கு முன், வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதினார்: “அணையப்போகும் அணையப்போகும் சிறியதாகிவிட்ட மெழுகுவர்த்தியே! வாழ்நாள் கடந்துபோகும் நிழல்தானே.” “வாழ்நாள் என்றால் என்ன?” என்று கடந்த நூற்றாண்டில், அமெரிக்க பழங்குடியினரின் தலைவர் ஒருவர் கேட்டார். பிறகு அவர் பதிலளித்தார்: “அது இரவில் மின்னி மறையும் மின்மினிப் பூச்சியின் ஒளியைப்போன்றது.”
தங்களுடைய ஆயுட்காலம் எவ்வளவு நீளமாக இருக்கக்கூடும் என்று மனிதர்கள் எதிர்பார்க்கலாம்? சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்னர், தீர்க்கதரிசி மோசே தம்முடைய நாளின் நிலைமையை விவரித்தார்: “எங்கள் ஆயுசு நாட்களெல்லாம் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கிரமாய்க் கடந்து போகிறது, நாங்களும் பறந்துபோகிறோம்.”—சங்கீதம் 90:10.
எழுபது வருடங்கள்—அதாவது 25,567 நாட்கள் மட்டுமே. 80 வருடங்கள் வெறும் 29,219 நாட்களையே கொண்டுள்ளன. உண்மையில், வெகு சொற்பமே! மனித வாழ்நாளை நீட்டிக்க ஏதாகிலும் செய்யப்படக்கூடுமா?
மருத்துவ விஞ்ஞானம் உதவுமா?
சயன்ஸ் பத்திரிகை குறிப்பிட்டதாவது: “1900-ல் பிறப்பின்போது 47 வருடங்களாக இருந்த ஆயுட்காலம் [ஐக்கிய மாகாணங்களில்] 1988-ல் 75 வருடங்களாக உயர்ந்துள்ளன.” சிறப்பான சுகாதார பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றின் மூலம் சிசு மரண விகிதம் குறைந்ததன் விளைவாக, ஐக்கிய மாகாணங்களில் இருக்கும் மக்கள் மோசே எவ்வளவு குறிப்பிட்டாரோ அவ்வளவு நீண்டகாலம் வாழ்வதற்கு இப்போது எதிர்பார்க்கலாம். என்றபோதிலும், மக்களில் அநேகர் எவ்வளவு காலம் வாழ்வர் என்பதில் ஏதாகிலும் திடீர் அதிகரிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றனவா?
குறிப்பிடத்தக்க விதத்தில், மூப்பியலின் முதன்மையான நிபுணர் லெனர்டு ஹேஃபிளிக், எப்படி மற்றும் ஏன் நாம் மூப்படைகிறோம் (ஆங்கிலம்) என்னும் தன் புத்தகத்தில் கூறினார்: “இந்த நூற்றாண்டின் உயிரியல் மருத்துவ ஆராய்ச்சியில் முன்னேற்றங்கள் மற்றும் முன்னேற்றுவிக்கப்பட்ட மருத்துவ பராமரிப்பை செயல்படுத்துதல் ஆகியவை மனிதனின் நீடித்த வாழ்நாளில் நிச்சயமாகவே பாதிப்பை ஏற்படுத்தின, ஆனால் மனித ஆயுட்காலத்தின் நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்பை, அதிகமான ஆட்கள் அணுக மாத்திரம் அனுமதிக்கிறது.” எனவே அவர் விளக்குகிறார்: “வாழ்நாளின் எதிர்பார்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது ஆனால் ஆயுட்காலம் அல்ல; இதன் வித்தியாசம் தவிர்க்கமுடியாதது.”
மனித ஆயுட்காலத்தின் “நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்பு” எவ்வளவு? சமீப காலத்தில் யாராவது ஒருவர் 115 வயதுக்கும் அதிகமாக வாழ்ந்திருக்கிறார் என்பது நிச்சயமற்றது என்று சிலர் கூறுகின்றனர். ஆயினும் சயன்ஸ் பத்திரிகை சொன்னதாவது: “1990-லிருந்து ஒரு தனிப்பட்ட நபர் 120 வயதுக்கும் சற்றே அதிகம்வரை வாழ்ந்ததுதான் உறுதிசெய்யப்பட்ட மிகவும் அதிகமான வயது.” இவ்வாண்டின் ஆரம்பத்தில், பிரான்ஸ் நாட்டின் சுகாதார மந்திரி, பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் புடைசூழ, பிரான்ஸில் உள்ள ஆரில்ஸிலிருக்கும் ஜான் கல்மான் அவர்களின் 120-வது பிறந்தநாளுக்கு முக்கியத்துவம் அளிக்க விஜயம் செய்தார். சராசரி வயதை வெகுவாக மிஞ்சி மோசேயும்கூட 120 வயதுவரை வாழ்ந்தாரே.—உபாகமம் 34:7.
மக்கள் அவ்வளவு காலம் அல்லது அதற்கும் அதிகமாக வாழலாம் என்ற நம்பிக்கையை விஞ்ஞானிகள் அளிக்கிறார்களா? இல்லை, பலர் அளிப்பதில்லை. டெட்ராய்ட் நியூஸ்-ல் தலைப்புச் செய்தி வாசித்ததாவது: “சராசரி ஆயுட்காலத்தின் உச்ச வரம்பு 85-ஆக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.” மூப்பியலின் அங்கீகாரம் பெற்ற நிபுணர் எஸ். ஜெய் ஆல்ஷான்ஸ்கீ கட்டுரை ஒன்றில் கூறினார்: “நீங்கள் 85 வயதுக்கு அப்பால் சென்றவுடனே, பல்வேறு உறுப்புக்கள் இயங்காமல் ஆட்கள் மரிக்கிறார்கள். அவர்கள் சுவாசிப்பதை நிறுத்திவிடுவார்கள். அடிப்படையில், மூப்பால் அவர்கள் மரிக்கிறார்கள். அதற்கு நிவாரணமே கிடையாது.” அவர் மேலும் கூறியதாவது: “மூலக்கூறு மட்டத்தில் மனிதன் மூப்படைதல் பின்னோக்கி செயல்பட்டாலொழிய வாழ்நாள் எதிர்பார்ப்பில் வேகமான அதிகரிப்புகள் முற்றுப்பெற்றுவிட்டன.”
ஒருவேளை “நீடித்த வாழ்வின் உச்ச வரம்பை ஏற்கெனவே எட்டிவிட்டிருப்பதால், மேற்கொண்டும் குறிப்பிடத்தக்கவிதத்தில் மரணவீதம் குறைதல் ஒருவேளை இருக்கவே முடியாது,” என்று சயன்ஸ் பத்திரிகை குறிப்பிட்டது. மரணச் சான்றிதழில் அறிவிக்கப்பட்டுள்ள மரணத்தின் அனைத்து காரணங்களையும்கூட ஒருவேளை நீக்கிவிட்டாலும், வாழ்நாள் எதிர்பார்ப்பு 20 வருடங்களுக்கும் குறைவாகத்தான் அதிகரிக்கப்பட முடியும் என்று சொல்லப்படுகிறது.
இவ்வாறாக, பல விஞ்ஞானிகள் மனிதனின் ஆயுட்கால அளவை விநோதமாக அல்லது மாற்றத்திற்கு உட்பட்டதாக நோக்குவதில்லை. ஆயினும், ஏற்ற காலத்தில் மனிதர்கள் இன்னும் நெடுநாள் வாழ்வார்கள் என்று நம்புவது ஏன் நியாயமானது?