நீங்கள் எவ்வளவு காலத்திற்கு வாழலாம்?
வாழ்க்கைப் பாதையில் பிரச்னைகள் இருக்கின்றன என்பதை நம்மில் பலர் உடனே ஒத்துக்கொள்வோம். எனினும், நாம் உயிரோடிருப்பதற்காகச் சந்தோஷப்படுகிறோம். நாம் நம்முடைய குழந்தைப் பருவத்தோடு அல்லது ஒரு குறுகிய வாழ்நாட்காலத்தோடு மட்டுமே திருப்தியடைவதில்லை; நாம் பல வருடங்கள் வாழ விரும்புகிறோம். ஆனாலும், மரணம் தவிர்க்க முடியாததுபோல் தோன்றுகிறது. அது அப்படியா?
மரணத்தைத் தள்ளிப் போட முடியுமா? நம்முடைய வாழ்நாட்காலம் அதிகரிக்கப்பட முடியுமா?
அதிகரிக்கப்பட்ட வாழ்நாட்காலமா?
மனித வாழ்நாட்காலத்தை “நூற்றுப்பத்தாக” அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதாக ஒரு செய்தி அறிக்கை 1990-ல் அறிவித்தது. பைபிள் சங்கீதக்காரனாகிய மோசேயினுடைய பின்வரும் வார்த்தைகளின் மறைமுக மேற்கோளாக இது இருந்தது என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை: “எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டுகள்; பெலத்தின் மிகுதியால் எண்பது ஆண்டுகள், ஆனாலும் அதின் பெரும் பகுதி வருத்தமும் வீண் கவலையுமே; எனவே, அது சீக்கிரமாய்க் கடந்துபோகிறது, நாங்களும் பறந்துபோகிறோம்.” (சங்கீதம் 90:10, கிங் ஜேம்ஸ் வெர்ஷன்) எனவே பைபிள், 70 அல்லது 80 ஆண்டுகளை ஒரு சராசரி மனித வாழ்நாட்காலமாகக் குறிப்பிடுகிறது. ஆனால் இன்று ஒரு நபர் வாழும்படி எதிர்பார்க்கும் ஆண்டுகளின் உண்மையான எண்ணிக்கை என்ன?
1992-ல் உலகச் சுகாதார அமைப்பினால் (WHO) பிரசுரிக்கப்பட்ட அறிக்கை ஒன்று சராசரி வாழ்நாள் எதிர்பார்ப்பை 65 வருடங்கள் என்று கணக்கிட்டிருந்தது. WHO-வின் பிரகாரம், இது “அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் நான்கு மாதங்கள் அதிகரிப்பை அடையும்படி எதிர்பார்க்கப்பட்டது; முக்கியமாக இது ஏனென்றால் சிசுக்களின் மரணவீதம் குறைக்கப்படுவதால் ஆகும்.” எனினும், மருத்துவ அற்புதம் யாரேனும் ஒருவர் 50 வயதுக்கு முன் மரிப்பதைத் தடுத்தாலும்கூட, ஐக்கிய மாகாணங்களில் “சராசரி வாழ்நாள் எதிர்பார்ப்பு அதிகரிப்பு 31/2 ஆண்டுகளே,” என்று டைம் பத்திரிகை சொல்கிறது.
வாழ்க்கை ஏன் அவ்வளவு குறுகியதாய் இருக்கிறது?
நெதர்லாந்தின் ஆய்வு மூப்பியல் நிறுவனத்திலுள்ள டாக்டர் யான் ஃபேக், சில நோய்கள் மனித உடற்செல்களின் அமைப்பில் உள்ள குறைபாடுகளோடு தொடர்புடையதாக இருப்பதுபோல, மூப்பு அடைவதும் மரபியல் காரணிகளால் பாதிக்கப்படுவதுபோல் தோன்றுகிறது என்று வாதாடுகிறார். நாம் வயதாகும்போது, “ஒருசில முக்கியமான ஜீன்களை” மாற்றிவைக்கப்பட முடிந்தால் நாம் நீண்ட காலத்திற்கு வாழமுடியும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். மற்றவர்கள் இந்தப் புதுக் கருத்தை “போலித்தன எளிமை” என்று அடையாளப்படுத்துகின்றனர்.
எதுவாக இருந்தாலும், “மனித உடற்செல்களுக்குள் திட்டமைக்கப்பட்ட, தனக்குள் செயல்படும் ஒருவித உயிரியல் கட்டுப்பாடு இருப்பதுபோல் தோன்றுகிறது” என்று அறிவியல் அறிஞர்கள் ஒத்துக்கொள்கிறார்கள் என்பதாக டைம் பத்திரிகை அறிக்கைசெய்கிறது. நாம் “தொடர்ந்து உயிரோடிருக்கும்படி திட்டமைக்கப்பட்டிருக்கிறோம்” என்று வாதிடுபவர்களும்கூட “ஏதோ கோளாறாகிறது” என்பதை ஒத்துக்கொள்கிறார்கள். உண்மையில், பைபிள் சொல்வதுபோலவே, 65, 70, அல்லது 80 அல்லது சற்று கூடுதல் ஆண்டுகளில் வாழ்க்கை மரணத்தில் “சீக்கிரமாய்க் கடந்துபோகிறது.”
எனினும், பொ.ச. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுல், நம்பிக்கையோடு இவ்வாறு முன்னுரைத்தார்: “ஒன்றுமில்லாத நிலைக்குக் கொண்டுவரப்படும் கடைசி எதிரி மரணம்.” (1 கொரிந்தியர் 15:26, NW) மரணம் எப்படி முடிவிற்குக் கொண்டுவரப்படும்? அப்படி முடிவிற்குக் கொண்டுவரப்பட்டாலும், நாம் அன்பானவர்களின் மரணத்தை இன்று எப்படிச் சமாளிக்கலாம்?