உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g94 2/8 பக். 24-27
  • படுகொலையின் காணக்கூடிய அத்தாட்சி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • படுகொலையின் காணக்கூடிய அத்தாட்சி
  • விழித்தெழு!—1994
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நினைவில் வைக்கவேண்டிய ஒரு சுற்றுலா
  • கல்விபுகட்ட ஓர் அருங்காட்சியகம்
  • படுகொலையைத் தப்பிப்பிழைத்தவர்கள்
  • அந்த அருங்காட்சியகத்தின் மதிப்பு
  • நாசிக்கொள்கையின் தீமைகள் அம்பலப்படுத்தப்படுகின்றன
    விழித்தெழு!—1995
  • நெதர்லாந்தில் நாஸி அடாவடிக்கு அஞ்சாத நெஞ்சங்கள்
    விழித்தெழு!—1999
  • அந்தப் படுகொலை பலியாட்களா அல்லது இரத்தசாட்சிகளா?
    விழித்தெழு!—1990
  • யெகோவாவின் சாட்சிகளும் இனப்படுகொலையும்—பைபிள் என்ன சொல்கிறது?
    வேறுசில தலைப்புகள்
மேலும் பார்க்க
விழித்தெழு!—1994
g94 2/8 பக். 24-27

படுகொலையின் காணக்கூடிய அத்தாட்சி

மனிதவினத்தைக் கீழ்த்தரமாகக் காண்பிக்கும் ஓர் இடத்திற்குள் நீங்கள் நுழையும்போது, கல்லில் பொறிக்கப்பட்டிருக்கும் இந்தப் பரிசுத்த பைபிளின் வார்த்தைகளைக் காண்பது விநோதமாகத் தோன்றுகிறது: ‘நீங்கள் எனக்குச் சாட்சிகளாய் இருக்கிறீர்கள்.’ இருப்பினும், ஒருவேளை இதுவே பைபிளை, குறைந்தபட்சம் அந்தக் குறிப்பிட்ட வசனத்தையாவது, மேற்கோள்காட்டவேண்டிய இடமாக இருக்கிறது.—ஏசாயா 43:10.

ஏப்ரல் 22, 1993-ல் தொடங்கிவைக்கப்பட்ட, வாஷிங்டன் D.C.-யில் உள்ள ஐக்கிய மாகாண படுகொலை நினைவு அருங்காட்சியகம் (The United States Holocaust Memorial Museum), மக்கள் உணர்ச்சிகளைக் கிளறிவிட்டு பயன்படுத்திக்கொள்ளும் நெறியற்ற தலைவர்களால் தொழில்நுட்பம் சொல்லித்தீராத மரண இயந்திரமாக மாற்றியதைப் பற்றிய வெளிப்படையான மற்றும் அமைதியான ஒரு நினைவுச் சின்னமாகத் திகழ்கிறது. நாசி கொடுங்கோண்மையினால் கொலைசெய்யப்பட்ட, பாதுகாப்பற்ற பலியாட்களின் பட்டியல் மனதை மரத்துப்போகச் செய்கிறது—சுமார் 60 லட்சம் யூதர்களும், லட்சக்கணக்கான மற்ற ஜனங்களும். இது போலந்து நாட்டவர், ஸ்லாவிய இனத்தவர், யெகோவாவின் சாட்சிகள், நாடோடிகள், ஒத்த பாலினப் புணர்ச்சியினர், ஊனமுற்றோர் போன்றவர்களை உள்ளடக்குகிறது.

நினைவில் வைக்கவேண்டிய ஒரு சுற்றுலா

உங்களை முதல் மாடி சாட்சி மன்றத்திலிருந்து (Hall of Witness) நான்காம் மாடிக்குக் கொண்டுபோகும் குளிர்ந்த, சாம்பல் நிற ஸ்டீல் உயர்த்தியில் (lift) அந்தச் சுற்றுலா துவங்குகிறது. பார்வையாளர்கள் அங்கிருந்து மெல்ல நடந்து கீழே வருகையில் அவர்கள் படுகொலையின் எல்லா கட்டங்களின் காட்சிப் பொருட்களையும் கண்டு கடந்துவருகின்றனர். இவை ஹிட்லர் ஆட்சிக்கு வருவதற்கான நாசியின் பிரச்சாரத்திலிருந்து மரண முகாம்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக பலியாட்களை ஒன்றுகூட்டி விடுவித்தது வரையுள்ள கட்டங்களை உட்படுத்துகின்றன. நித்திய தீக்கொழுந்து எரிந்துகொண்டிருக்கும் நினைவு மன்றத்தில் (Hall of Remembrance) சுற்றுலா முடிவடைகிறது. நேரில் கண்ட சாட்சிகள், சலனமற்ற மற்றும் சலனப் படங்கள், இசை மற்றும் ஓவிய வேலைப்பாடுகள்—போன்ற அனைத்தும் இந்தக் கொடூரமான கதையைச் சொல்வதில் உதவும்படி பயன்படுத்தப்படுகின்றன.

கடுமைதனியாமல் நினைவூட்டும், உறுதிவாய்ந்த நிலையான ஒரு கண்காட்சியின் மூன்று நிலைகளைப் பார்வையாளர்கள் கண்டனர். அதிக அச்சமூட்டும் கொடூரமான காட்சிப் பொருட்களில் சில பிள்ளைகளால் எட்டிப்பார்க்கமுடியாத வகையில் 1.2 மீட்டர் உயரமுள்ள தனிப்பட்ட தடுப்புச் சுவர்களுக்குப் பின்னால் ஒளிந்து கிடந்தன.

கல்விபுகட்ட ஓர் அருங்காட்சியகம்

அந்த அருங்காட்சியகத்தின் படுகொலை ஆராய்ச்சி நிலையம் (Holocaust Research Institute) விரிவான ஒரு நூலகத்தையும் ஆவணக்காப்பகத்தையும் தன்னுள் கொண்டிருக்கிறது. படுகொலைப் பற்றிய கல்வியின் சர்வதேசிய மையமாகவும் இது திகழும். “பொதுமக்களுக்குப் போதிப்பதற்காகவும் கல்விபுகட்டுவதற்காகவும் நாங்கள் அற்பணிக்கப்பட்டிருக்கிறோம்,” என்கிறார் அருங்காட்சியக நூலகத்தின் இயக்குநர் டாக்டர் எலிசபெத் கோனிக். அந்த நூலகம் சித்திரவதை முகாம்களில் இருந்த சிறுபான்மை தொகுதிகள் சிலவற்றைப்பற்றிய தகவல்களைக் கொண்டிருக்கும். “ஏற்கெனவே யெகோவாவின் சாட்சிகளைப்பற்றி ஏராளமான தகவல்கள் எங்களிடம் இருக்கின்றன,” என்று அவர் சொல்கிறார்.

யெகோவாவின் சாட்சிகளைத் துடைத்தழிக்க ஹிட்லர் 1933-ல் ஒரு செயல்திட்டத்தைத் தொடங்கிவைத்தார். ஜெர்மனி, ஆஸ்திரியா, போலந்து, முன்னாள் செக்கோஸ்லோவாகியா, நெதர்லாந்து, பிரான்ஸ், மற்ற நாடுகள்—போன்ற தேசங்களிலிருந்து ஆயிரக்கணக்கான சாட்சிகள் சித்திரவதை முகாம்களுக்குக் கொண்டுவரப்பட்டனர். அவர்கள் மதசம்பந்தமான காரணங்களுக்காக மட்டுமே துன்புறுத்தப்பட்டனர். இந்த முகாம்களைத் தப்பிப்பிழைத்த இருவர் இந்த அருங்காட்சியகத்தின் திறப்புவிழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

படுகொலையைத் தப்பிப்பிழைத்தவர்கள்

தப்பிப்பிழைத்த ஒருவராகிய, 73 வயதுள்ள ஃப்ரான்ஸ் வோல்ஃபார்ட், தன்னுடைய நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களில் மொத்தம் 15 பேர் யெகோவாவின் சாட்சிகளாக இருந்ததற்காக கைதுசெய்யப்பட்டதைக் கண்டார். “அவர்களில் ஏழுபேர், பெரும்பாலானோர் தலைவெட்டு இயந்திரத்தால் (guillotine) கொல்லப்பட்டனர். ஒருவர் விஷவாயு அறையில் அடைத்துக் கொல்லப்பட்டார், மற்றவர்கள் சித்திரவதை முகாம்களிலும் கெஸ்டப்போ சிறைகளிலும் மரித்தனர்,” என்று அவர் நினைவுபடுத்திப்பார்க்கிறார்.

அவர் அந்த முகாம்களிலிருந்து எப்போதாவது தப்பிப்பிழைப்பார் என்று நினைத்துப்பார்த்தாரா? “அது எனக்கு உண்மையிலேயே சந்தேகம்தான்,” ஃப்ரான்ஸ் கூறுகிறார். “ஜெர்மனி போரில் தோற்றுப்போனாலும், இன்னும் என்னைக் கொல்லுவதற்குப் போதுமான ஆயுதங்களைக் கொண்டிருப்பர் என்று அநேகமாக ஒவ்வொரு நாளும் நான் நினைவுப்படுத்தப்பட்டேன்.”

தன்னுடைய மத நம்பிக்கைகளுக்காக ஒரு சிறைக் கைதியாக இருந்திருப்பதற்காக அவர் மனம் வருந்துகிறாரா? அந்த எண்ணம்தானே தன்னுடைய தீர்மானமான மனநிலைக்கு அவமானம் எனக் கருதி “ஒருபோதும் இல்லை! ஒருபோதும் இல்லை!” என்று ஃப்ரான்ஸ் கூறுகிறார். “நாங்கள் எப்போதுமே ஒரு சந்தோஷமான மனநிலையில் இருந்தோம். ‘இவ்வளவு துயரத்திற்கு மத்தியிலும், உன் முகத்தில் இன்னுமா புன்சிரிப்புக் காணப்படுகிறது? உனக்கு என்ன ஆயிற்று?’ என்று கேட்கும் பாதுகாப்புப் படையினரால் பலமுறை நான் நிறுத்தப்பட்டேன். பின்னர் நான் சொல்வேன்: ‘சிரிப்பதற்கு எனக்கு ஒரு காரணமுண்டு, ஏனென்றால் நாங்கள் இந்தக் கஷ்டமான காலத்திற்கு அப்பால் ஒரு நம்பிக்கையைக் கொண்டிருக்கிறோம். அதுதான் கடவுளுடைய ராஜ்யத்தில் உள்ள ஒரு நம்பிக்கை. இன்று நாங்கள் அனுபவிக்க வேண்டியிருப்பதற்கெல்லாம் சேர்த்து அந்த ராஜ்யத்தில் எல்லா காரியங்களும் மேம்படுத்தப்பட்டு எல்லா காரியங்களும் திரும்பப் பெறப்படும்.’”

1910-ல் பிறந்த, யோசெஃப் ஷோன், ஆஸ்திரியாவில் பைபிள் பிரசுரங்களை ரகசியமாக அச்சடித்து பல இடங்களுக்கு அனுப்பும் வேலையில் சுறுசுறுப்பாக வைத்திருக்கப்பட்டிருந்தார். இவரால் எப்போதும் கெஸ்டப்போவிடமிருந்து தப்பிச்செல்லமுடிந்தது. இவர் 1940-ல் அவர்கள் இவரைக் கைதுசெய்ததுவரை இவ்வாறு செய்துவந்தார். 1943-லிருந்து 1945 வரை, இவர் தொடர்ந்து மரண அச்சுறுத்தலில் இருந்துவந்தார். 1943-ல் சித்திரவதை முகாமின் தலைவர், கூடிவந்திருக்கும் ஆட்கள் அனைவர் முன்னிலையிலும், யோசெஃபிடம் தன் கவனத்தை ஒருமுகப்படுத்தி கத்தினார், “நீ இன்னுமா அந்த யெகோவா கடவுளைப் பிடித்துக்கொண்டிருக்கிறாய்?”

“ஆம், இன்னும் பிடித்துக்கொண்டுதான் இருக்கிறேன்” யோசெஃப் பதிலளித்தார்.

“அப்படியானால் உன் தலை உருளப்போகிறது!”

1945-ம் ஆண்டு யோசெஃப் கொல்லப்பட டாக்கெயுவிற்கு பயணமானார். “சரீரப்பிரகாரமான நோக்குநிலையில் நான் தளர்ந்துபோனேன்,” அவர் நினைவுபடுத்திப் பார்க்கிறார். “எனினும், அந்தப் பயணத்தின்போது என் விசுவாசத்தில் உறுதியாய் இருந்ததுபோல நான் ஒருபோதும் என் விசுவாசத்தில் உறுதியாய் இருந்ததில்லை.”

இப்போது, அந்த அருங்காட்சியகத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு தான் சிறைப்பட்டுக் கிடந்த நாட்களைப்பற்றி ஞாபகப்படுத்துபவராக, அவர் கூறுகிறார்: “அப்போது நான் கொஞ்சம்கூட பயப்படவில்லை. உங்களுக்குத் தேவையானதை, உங்களுக்குத் தேவைப்படும்போது யெகோவா தருகிறார். யெகோவாவின் மீது சார்ந்திருப்பது எப்படி என்றும் மிகவும் மோசமான சூழ்நிலை ஏற்படும்போது அவர் எவ்வளவு நிஜமாக இருக்கிறார் என்றும் நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும். எல்லா புகழும் அவருக்கே. எங்களில் யாரும் சாதனை புரிந்தவர்களாக இருந்தது கிடையாது. நாங்கள் வெறுமனே யெகோவாவின் மீது சார்ந்திருந்தோம்.”

அந்த அருங்காட்சியகத்தின் மதிப்பு

“இந்த அருங்காட்சியகத்திற்கு பேரளவு முக்கியத்துவம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்,” என்கிறார் இங்கிலாந்திலுள்ள ஸ்டாஃபோர்ட்ஷயர் பல்கலைக்கழகத்தின் மாற்றுத் துணைவேந்தரும் (pro-vice chancellor) வரலாற்று ஆசிரியையுமான டாக்டர் கிறிஸ்டீன் எலிசபெத் கிங். “முதலாவதாக அது வைத்திருக்கும் நிகழ்ச்சிகளின் பதிவு ஆகும். ‘இது ஒருபோதும் நடக்கவில்லை’ என்று கூறுபவர்களோடு வாதாட இதோ இது இங்கிருக்கிறது. அதிகளவான அத்தாட்சி இருக்கிறது, அந்தப் படுகொலையைத் தப்பிப்பிழைத்து வாழ்ந்துவரும் சாட்சிகளும் இருக்கின்றனர். இரண்டாவதாக, இந்த அருங்காட்சியகம் கல்விபுகட்டும் மிகச் சிறந்த ஒரு கருவியாக இருக்கிறது.”

அவர் தொடர்ந்து கூறுகிறார், “மேலும் துன்பப்பட்ட, இறந்துபோன, தங்களுடைய உயிரைக் கொடுத்த தங்களுடைய சகோதர சகோதரிகளைக் காணமுடிவது யெகோவாவின் சாட்சிகளுக்கு மிக முக்கியமாக இருக்கிறது. பதிவுசெய்யப்பட்ட அவற்றைக் காண்பது ஏதோ மிக விசேஷித்த ஒன்றாக இருக்கிறது.” (g93 11/08)

[பக்கம் 26-ன் பெட்டி]

“யெகோவாவின் சாட்சிகள்”

“யெகோவாவின் சாட்சிகளுடைய நாசி துன்புறுத்தல் 1933-ல் தொடங்கிற்று. அவர்கள் ராணுவ சேவையையும் அந்த ஆட்சிக்குத் தங்கள் பற்றுறுதியைக் காட்டவும் மறுத்ததனால், யெகோவாவின் சாட்சிகள் தேசத்துக்கு விரோதமாக வேவு பார்ப்பதாகவும் சதித்திட்டம் தீட்டுவதாகவும் அடிக்கடி குற்றம்சாட்டப்பட்டனர். எதிர்கால சீர்கேடான நிலைமையைப் பற்றிய சாட்சிகளின் முன்னுரைப்புகள் புரட்சியின் அச்சுறுத்தல்கள் என்றும் யூதர்கள் பாலஸ்தீனத்திற்குத் திரும்பிப்போதலைப் பற்றிய அவர்களுடைய தீர்க்கதரிசனங்களை, யூத தாயக இயக்கத்தவரின் அறிக்கைகள் என்றும் நாசிகள் விளக்கிக் கூறினர்.

“இருப்பினும், யெகோவாவின் சாட்சிகள் தொடர்ந்து கூடிவந்தும் பிரசங்கித்தும் பிரசுரங்களை விநியோகித்தும் கொண்டிருந்தனர். அவர்கள் தங்களுடைய வேலைகளையும் ஓய்வூதியங்களையும் குடிமக்களின் உரிமைகள் அனைத்தையும் இழந்தனர். 1937-ல் தொடங்கி அவர்கள் சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். அங்கு நாசிகள் அவர்களுக்கு ‘மனமுவந்து வந்த சிறைக்கைதிகள்’ என்று பெயரிட்டனர்: தங்களுடைய நம்பிக்கைகளை மறுதலித்த யெகோவாவின் சாட்சிகள் விடுவிக்கப்படக்கூடும். அவர்களில் ஒருவர்கூட மறுதலிக்கவில்லை.”

[பக்கம் 27-ன் பெட்டி]

“அது சொல்வதற்கான ஒரு முக்கியமான கதை”

“யெகோவாவின் சாட்சிகள் மிகவும் குறிப்பிடத்தக்க கதைகளில் ஒன்றாக இருக்கின்றனர். தங்களுடைய மத நம்பிக்கைகளின் காரணமாக, நாசி ஜெர்மானிய அரசாங்கத்தால் 1933-ல் . . . முதன்முதல் தடைசெய்யப்பட்ட மதங்களில் அவர்கள் ஒரு தொகுதியினராவர். அது வெறுமனே ஓர் உயர்ந்த சட்டத்திற்கு, கடவுளின் சட்டத்திற்கான அவர்களுடைய இணக்கத்தையும் அவர்களுடைய கடமையுணர்ச்சியையும் அவர்கள் கண்டதனால் மட்டுமே. இதன் விளைவாக, யூதர்களையும் நாடோடிகளையும் இரக்கமின்றி துன்புறுத்தியதைப் போலவே அவர்களும் துன்புறுத்தப்பட்டு, சித்திரவதை முகாம்களில் வைக்கப்பட்டனர். அங்கு அவர்களில் அநேகர் தங்கள் உயிரை இழந்தனர்.

“அது சொல்வதற்கான ஒரு முக்கியமான கதை. ஒருவேளை அதன் மிகவும் துயரம் நிறைந்த அம்சமாக [இருந்தது] யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகளுடையதுதான். தங்களுடைய அப்பாவை ஒரு முகாமுக்குக் கொண்டுசெல்ல வேண்டியிருந்து, அம்மா கைதுசெய்யப்பட்ட நிலையில் இருந்தபோது, அவர்கள் பள்ளியின் பின்வரிசை ஒன்றில் யூத மற்றும் நாடோடி பிள்ளைகளோடு உட்காரவைக்கப்பட்டனர். அந்தப் பிள்ளைகள் ‘ஹைல் ஹிட்லர்!’ வணக்கம் தெரிவிக்கவோ அல்லது நாசி தேசத்திற்கு வேறு எந்த வணக்கம் தெரிவிக்கவோ விருப்பமில்லாமல் இருந்தால் அவர்கள் இளம் குற்றவாளிகள் என்று வகைப்படுத்தப்பட்டனர். இது அவர்களுடைய நம்பிக்கைகளைவிட வேறு எதற்கும் அல்ல. இந்தப் பிள்ளைகள், சந்தேகமேயின்றி, தங்களுடைய பெற்றோர் இழைத்ததாய் பொய்யாக காண்பிக்கப்பட்ட மற்றும் வீணாக சுமத்தப்பட்ட குற்றச்செயல்களுக்காக மட்டுமல்ல, ஆனால் அவர்களுடைய பிள்ளைகளாக இருந்த உண்மைக்காகவும் பாடு அனுபவித்தனர்.”—டாக்டர் சிபல் மில்டன், அருங்காட்சியக தலைமை வரலாற்று ஆசிரியை.

[பக்கம் 24-ன் பெட்டி]

கருஞ்சிவப்புநிற முக்கோண குறியீட்டுச் சின்னத்தையுடைய சித்திரவதை முகாம் மேல் உடுப்புகள் யெகோவாவின் சாட்சிகளை அடையாளப்படுத்தின

[பக்கம் 25-ன் பெட்டி]

“பலியாட்கள்” என்ற காட்சியறையில் படுகொலையைத் தப்பிப்பிழைத்தோர் ஃப்ரான்ஸ் வோல்ஃபார்ட்டும் (இடதுபக்கம்) யோசெஃப் ஷோனும் வரலாற்று ஆசிரியை டாக்டர் கிறிஸ்டீன் கிங்குடன்

[பக்கம் 25-ன் பெட்டி]

இதற்கொத்த பெட்டி வண்டிகள்தான் வோல்ஃபார்ட்டையும் ஷோனையும் சித்திரவதை முகாம்களுக்கு வாரிக்கொண்டு சென்றன

[பக்கம் 26-ன் பெட்டி]

மேலே: யெகோவாவின் சாட்சிகளையும் உட்படுத்திய “தேசத்தின் எதிரிகள்” என்ற வீடியோ வரலாற்று காட்சியில் தப்பிப்பிழைத்தோர் வோல்ஃபார்ட்டும் (இடதுபக்கம்) ஷோனும்

பத்திரிகையில் உள்ள வாசகம் வாசிக்கிறது:

[பக்கம் 26-ன் பெட்டி]

கீழே: மரியாவின் அண்ணன் யோஹான் ஷ்டோசிரின் பைபிளையும் உள்ளடக்கிய காட்சிப்பொருட்கள் மத்தியில் மரியா மற்றும் ஃப்ரான்ஸ் வோல்ஃபார்ட். “இது கண்டுபிடிக்கப்படுமுன் வெகுகாலமாக யோஹான் எப்படியோ இதை ஒளித்து வைத்திருந்தார்,” என்று சொல்கிறார் ஃப்ரான்ஸ். “அவர் கொல்லப்பட்ட பின்னர் அவருடைய அம்மாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட அவருடைய ஒரே உடைமை இந்த பைபிள் மட்டுமே”

[பக்கம் 26-ன் பெட்டி]

காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் அந்த பைபிளுக்கு அருகில் உள்ள வாசகம் வாசிக்கிறது: “இந்த பைபிள் ஸாக்சன்ஹவுஸன் சித்திரவதை முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்த, யோஹான் ஷ்டோசிர் என்ற ஒரு யெகோவாவின் சாட்சிக்குச் சொந்தமானது. அந்த முகாமிலுள்ளோரை சோவியத் படைகள் விடுவிப்பதற்கு சற்றுகாலத்திற்கு முன் ஷ்டோசிர் மரித்தார்.”

[பக்கம் 27-ன் பெட்டி]

“நாகரிகத்தின் பாதுகாப்புகள் எவ்வளவு பலவீனமானவை,” என்று இந்த அருங்காட்சியகத்தின் அர்ப்பணத்தின்போது ஐ.மா. ஜனாதிபதி க்ளின்டன் கூறினார். “மதிப்பீடுகளிலிருந்து விலக்கித் தள்ளப்பட்ட அறிவு மனித தொல்லைகளை ஆழப்படுத்தவே உதவுகிறது என்பதையும், இதயம் இல்லாத ஒரு தலை மனிதாபிமானம் ஆகிவிடமுடியாது என்பதையும் இந்தச் சர்வநாசம் நமக்கு என்றென்றுமாக நினைவுபடுத்துகிறது”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்