உலகத்தைக் கவனித்தல்
எலி வணக்கமா?
இந்தியாவின் டெஷ்நோக் கிராமத்திலுள்ள குர்னி மாதா கோயிலுக்கு ஒவ்வொரு நாளும் சுமார் 1,000 வணக்கத்தாரும் சுமார் 70 சுற்றுலாப் பயணிகளும் வருகிறார்கள். ஏன்? இந்தக் கோயிலில் பக்தர்கள் சிலைகளுக்குத் தங்கள் படையல்களைச் செலுத்திக்கொண்டிருக்கையில் சுமார் 300 எலிகள் தாராளமாக இங்குமங்கும் சுற்றித்திரிகின்றன. அந்த எலிகள் “பூஜிக்கப்பட்டு அவற்றின் ஒவ்வொரு தேவையும் செல்லங்கொடுக்கும் வணக்கத்தாரால் கவனித்துக் கொள்ளப்படுகிறது,” என்று சொல்கிறது நியூ ஜீலாந்தின் ஈவ்னிங் போஸ்ட். அந்தக் கோயிலின் அர்ச்சகர்களும் எலிகளும் அதே கிண்ணங்களில் உண்டு அதே தண்ணீரைக் குடிக்கின்றனர். அர்ச்சகர்களில் ஒருவர் “இவை எலிகளல்ல, இவை கடவுளின் தூதர்கள், தேவதையிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த ஒரு பரிசு,” என்று வலியுறுத்திக் கூறுகிறார். போஸ்ட் சொல்கிறபடி, அந்தக் கோயில் அர்ச்சகர்கள் மரிக்கும்போது, அவர்கள் எலிகளாகப் பிறப்பதன்மூலம் ரட்சிப்படைகின்றனர் என்பதாக அந்த அர்ச்சகர் சொன்னார். அந்த எலிகள் மரிக்கும்போது, அவை அர்ச்சகர்களாக மறுபிறவி அடைகின்றன என்றும் அவர் கூறினார். (g93 11/08)
பைபிளின் பாகங்கள் 2,000-க்கும் அதிக மொழிகளில்
1992-ன்போது பைபிளின் பாகங்கள் இன்னும் 31 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன; ஆகவே பைபிளின் குறைந்தபட்சம் ஒரு புத்தகமாவது கிடைக்கக்கூடிய மொழிகளின் எண்ணிக்கை 2,009-ஐ அடைந்தது என்பதாக யுனைட்டட் பைபிள் சொஸையிட்டீஸ் (UBS) அறிவிக்கிறது. UBS பைபிளின் பாகங்களை இன்னும் 419 கூடுதல் மொழிகளில் மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறது; ஆகவே இந்த எண்ணிக்கை விரைவில் இன்னும் உயரும். முழு பைபிள் இப்போது 329 மொழிகளிலும் “புதிய ஏற்பாடு” 770 மற்ற மொழிகளிலும் கிடைக்கின்றன. “உலகில் உள்ள மொத்த மொழிகளின் எண்ணிக்கை 5,000-லிருந்து 6,500 வரை என கணக்கிடப்படுகிறது,” என்று எக்யூமெனிகல் ப்ரஸ் சர்விஸ் எழுதுகிறது. ஆர்வமூட்டும் வகையில், உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டியால் 1993 வரை அச்சடிக்கப்பட்ட முழு பைபிள் அல்லது பைபிளின் பாகங்களுடைய மொத்த எண்ணிக்கை 8.3 கோடிக்கும் அதிகமாகும்.
பயனுள்ள பழைய ரப்பர் டயர்கள்
பிரேஸிலில் ஆண்டுதோறும் 1.7 கோடி கார் டயர்கள் மாற்றீடு செய்யப்பட வேண்டியிருக்கின்றன. எனினும், அத்தகைய பழைய டயர்கள் நல்ல முறையில் பயன்படுத்தப்படலாம், என்று சூப்பரிண்டரசாண்ட்டா பத்திரிகை தெரிவிக்கிறது. அதாவது, அந்த ரப்பரை மறுசுழற்சி செய்து நெடுஞ்சாலைகளின் மேற்பரப்பை புதுப்பித்தலில் பயன்படுத்தப்பட வேண்டியிருக்கும் புகைக்கீலுடன் (asphalt) சேர்க்கலாம். ரப்பர் டயர்களை மறுசுழற்சி செய்யும் கருத்து புதியதல்லவென்றாலும், டயர்களைப் புகைக்கீலில் உபயோகிப்பது புதிதாகும். இந்தச் செயல்முறை “இந்தக் கோளத்தில் சேர்ந்துகிடக்கிற பேரளவு குப்பைக்கூள மலைகளை பெரிதும் குறைக்கும்,” என நம்பப்படுகிறது. (g93 10/22)
காலராவோடு போராடுதல்
மான்ஷெட்டி என்ற பிரேஸிலிய பத்திரிகையின்படி சிவந்த திராட்சைமது காடி காலரா பரவுவதைத் தடுக்கலாம். மாசுபடுத்தப்பட்ட காய்கறிகளில் உள்ள நுண்ணுயிரிகளை அகற்றுவதில் வெளுப்பானைவிட சிவந்த திராட்சைமது காடி நூறு மடங்கு அதிக திறம்பட்டது. இவ்வாறு சாவோ பாலோவின் வேளாண்மை மற்றும் விநியோகத்தின் செயலாளரின் உணவு ஆராய்ச்சி நிலையத்தால் நடத்தப்பட்ட ஒரு சோதனை வெளிப்படுத்திற்று. இந்தக் காடி பால்கீரையில் (lettuce) உள்ள காலரா பேக்டீரியாவை 10,000 மடங்கு குறைத்தது, ஆனால் பாசிகச் செயற்படுத்தப்பட்ட தண்ணீர் (chlorinated water) இதை 100 மடங்கே குறைத்தது என்று அந்தப் பத்திரிகை அறிக்கை செய்கிறது. ஒவ்வொரு லிட்டர் தண்ணீரிலும் ஐந்து தேனீர் கரண்டி அளவு காடி சேர்க்கப்பட்ட ஒரு கலவையே சிபாரிசு செய்யப்படும் கரைசலாகும். (g93 11/08)
வெறிநாய்க்கடி திரும்பிவருகிறது
தென் ஆப்பிரிக்காவின் நட்டேல் மாகாணத்திலிருந்து ஒருகாலத்தில் ஒழிக்கப்பட்ட வெறிநாய்க்கடி, இப்போது அதிகரித்துவருகிறது. நட்டேலிலும் அடுத்துள்ள மொஸாம்பிக்கிலும், அநேகர் கிராமப்புறங்களை விட்டுவிட்டு தங்களுடைய செல்லப் பிராணிகளையும் தங்களோடு எடுத்துக்கொண்டு, நகர்ப்புறங்களுக்குக் குடியேறினர். அம்மைக் குத்தல் திட்டங்கள் குடிபெயர்ந்துவந்த இந்த ஜனங்கள் அனைவரையும் சென்றெட்ட முடியாமல் போயிற்று. 1992-ல் இந்தப் பகுதியிலிருந்து 300-க்கும் அதிகமான வெறிநாய்க்கடி நோயாளிகள் அறிக்கை செய்யப்பட்டனர். விளைவடைந்த 29 மரணங்களில் பெரும்பாலானவை பிள்ளைகளை உட்படுத்தின. கால்நடை சேவையின் மண்டல இயக்குநர் பால் க்ளூக், கடுகடுப்போடு குறிப்பிடுகிறார்: “முறைப்படி அமைக்கப்படாத குடியேற்றப் பகுதிகளில் வாழும் அநேக ஜனங்களைச் சென்றெட்டுவது மிகக் கடினமாகும்.” அவர் சொல்கிறார்: “அரசியல் வன்முறை, பண்பாட்டு எதிர்ப்புகள், கூடிவரும் கூட்டங்களைப் பற்றிய ஒரு பயம் இவையெல்லாம் எங்களுடைய திட்டங்களைத் தடைசெய்கின்றன.” (g93 10/22)
புத்தமதத்தோடு ஜாஸ்
ஒரு வினோதமான இணைப்பில், ஜப்பான் முழுவதிலிருந்தும் வந்த ஓராயிரம் புத்தமத குருக்கள் புகழ்பெற்ற ஜாஸ் இசைக் கலைஞருடன் டோக்கியோவின் பெரிய நிப்போன் புடோகானில் ஷோமியோ மற்றும் ஜாஸ் இசை நிகழ்ச்சிக்காக கூடிவந்திருந்தனர். ஷோமியோ என்பது அடிப்படையாகவே இந்தியப் பாணி சூத்திரங்களை முன் ஆயத்தமின்றி பாடுதல் அல்லது ஓதுதல் ஆகும். இது மேற்கத்திய இசையிலிருந்து மிகவும் விலகியிருக்கிறது. ஜாஸ் இசைக் கலைஞரின் இசை வித்தியாசப்பட்ட வகைகளாக இருந்தாலும், தங்களுடைய இசையை சூத்திரங்களுடன் இணைப்பதில் அவர்களுக்கு எந்தக் கஷ்டமும் இருந்ததில்லை. “முன் ஆயத்தமின்றி பாடுதல் எப்படியோ மதத்தில் ஆவிக்குரிய விழித்தெழுதலோடு நெருங்க சம்பந்தப்பட்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்,” என்று புகழ்பெற்ற ஒரு ஜாஸ் பியானோ இசைப்பவர் கூறுவதாக தி டெய்லி யொமியூரி மேற்கோள்காட்டியது. அவர் மேலும் கூறினார்: “சிலசமயங்களில் பியானோ வாசிப்பது நான் அல்ல, ஆனால் வித்தியாசமான ஓர் உலகிலிருந்துவரும் ஏதோவொரு வினோத சக்தியே என உணருகிறேன்.” (g93 10/22)
“உலகின் கொலை தலைநகரம்”
“ஜோஹன்ஸ்பர்க் உலகின் கொலை தலைநகரம் என்ற கேள்விக்குரிய தகுதிநிலையை உண்மையிலேயே அடைந்தது,” என்று தென் ஆப்பிரிக்க செய்தித்தாள் தி ஸ்டார் கூறிற்று. “காவல்துறை புள்ளிவிவரங்களின்படி, ஜோஹன்ஸ்பர்க்கும் சொவிட்டோவும் சேர்ந்து 1992-ல் 3,402 கொலைகளைக் கொண்டிருந்தது—நாளொன்றுக்கு 9.3 கொலைகள், அல்லது ஒவ்வொரு 2 1/2 மணி நேரத்திற்கும் ஒரு கொலை.” இது முந்திய “கொலை தலைநகர்” ரியோ டி ஜனீரோவை இரண்டாம் ஸ்தானத்திற்குத் தள்ளிற்று. கடந்த பத்து ஆண்டுகளாக ரியோ ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 8,722 கொலைகளைக் கொண்டிருந்தது. எனினும், ரியோவின் மக்கள்தொகை ஒரு கோடிக்கு அதிகமாக இருக்கிறது; ஆனால் ஜோஹன்ஸ்பர்க் மற்றும் சொவிட்டோ ஆகியவற்றின் கூட்டுமொத்த மக்கள்தொகை 22 லட்சம் என்று சொல்லப்படுகிறது. மக்கள்தொகையில் ஜோஹன்ஸ்பர்கிற்கு ஏறக்குறைய சமமாக இருக்கும் பாரிஸ், வருடத்திற்கு சராசரி 153 கொலைகளைக் கொண்டிருந்தது. கொலைசெய்யப்படுவதற்கான வாய்ப்புகள் கீழ்க்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளன: ஜோஹன்ஸ்பர்கில் 647-ல் 1; ரியோ டி ஜனீரோவில் 1,158-ல் 1; லாஸ் ஏஞ்சலிஸில் 3,196-ல் 1; நியூ யார்க்கில் 4,303-ல் 1; மியாமியில் 6,272-ல் 1; மாஸ்கோவில் 10,120-ல் 1; மற்றும் பாரிஸில் 14,065-ல் 1. (g93 11/08)
காணாமற்போகும் பிள்ளைகள்
இத்தாலியில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான பிள்ளைகள் எந்தவொரு துப்புமின்றி காணாமற்போகின்றனர். அநேகர் காலையில் பள்ளிக்குப் போக வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய், ஒருபோதும் திரும்பி வருவதில்லை. 1992-ல் மட்டும், வயது வராத 734 பேர் காணாமற்போயினர். இது முந்திய வருடத்தைவிட 245 பேர் அதிகம். இத்தாலிய உள்துறை அமைச்சரகத்தின் ஓர் அறிக்கையின்படி, புதிதாகத் தொடங்கப்பட்ட வழக்குகளின் மொத்த எண்ணிக்கை 3,063 ஆகும். பையன்களைவிட பெண்பிள்ளைகளே அதிகம் காணாமற்போகின்றனர். (g93 10/22)
உங்களை மகிழ்விப்பது எது?
தெளிவாகவே, அதிக பணத்தை வைத்திருப்பதுதானே மக்களை அதிக மகிழ்ச்சியுள்ளவர்களாக ஆக்குவதில்லை. சைக்காலஜி டுடே பத்திரிகை கூறுகிறது: “வறுமைக் கோட்டிற்கு மேல் வந்துவிட்டால், வருமானத்தில் ஏற்படும் அதிகரிப்பு ஆச்சரியகரமாக தனிப்பட்ட மகிழ்ச்சியோடு குறைந்தளவு தொடர்பையே கொண்டிருக்கிறது.” கீழ்க்கண்ட காரணிகள் மகிழ்ச்சிக்கு முக்கியமானவையாக சொல்லப்படுகின்றன: நம்பிக்கையான, ஆனால் நடைமுறையான மனநிலை; சகஜமாக பழகுதல் மற்றும் நண்பர்களை உருவாக்குதல்; ஒருவருடைய வாழ்க்கையைக் கட்டுப்பாட்டில் கொண்டிருத்தலின் உணர்ச்சி, இது ‘ஒருவருடைய நேரத்தைத் திறம்பட்ட வகையில் நிர்வகிப்பதை’ உட்படுத்துகிறது; மற்றும் ‘ஒரு சுறுசுறுப்பான மத விசுவாசத்தை’ கொண்டிருத்தல்.
நிறுத்துவதற்கு ஒருபோதும் வெகு தாமதமாகிவிடவில்லை
எவ்வளவு சீக்கிரம் புகைத்தலை நிறுத்துகிறீர்களோ, அந்தளவுக்கு நீங்கள் நுரையீரல் புற்றுநோயால் இறக்கவேண்டிய வாய்ப்பு குறைகிறது. 9,00,000 அமெரிக்கர்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு சமீப ஆராய்ச்சி கீழ்க்காணுமாறு வெளிப்படுத்திற்று என்று தி லேன்செட் தெரிவிக்கிறது. புகைக்காதோர் மத்தியில் 75 வயதுக்கு முன் நுரையீரல் புற்றுநோயால் மரித்த மக்களின் எண்ணிக்கை 1,00,000-க்கு 50-ஐவிட குறைவாகவே இருந்தது. தங்களுடைய 30-களில் புகைத்தலை நிறுத்திய ஆண்களுக்கு மரண வீதம் 1,00,000-க்கு சுமார் 100 என அதிகரித்தது. தங்களுடைய 60-களில் நிறுத்தியவர்களுக்கு மரணங்கள் 1,00,000-க்கு 550 என அதிகரித்தன. நிறுத்தவே நிறுத்தாத புகைப்போர் மத்தியில் இருந்த நுரையீரல் புற்றுநோய் மரணங்களின் எண்ணிக்கை 1,00,000-க்கு 1,250 ஆகும். பெண்களுக்கான நுரையீரல் புற்றுநோய் மரண வீதங்கள் குறைவாக இருந்தன, ஆனால் இதைப்போன்ற ஒரு மாதிரிப்படிவத்தையே காண்பித்தன.
சோதனைக்கூடத்தில் தவறுகள்
மருத்துவ சோதனைக்கூடங்களில் செய்யப்படும் தவறுகளினால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் மரிக்கின்றனர் அல்லது மிகவும் மோசமாக வியாதிப்படுகின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. நோயைக் கண்டுபிடித்து ஊர்ஜிதப்படுத்துவதற்காக இரத்தம் மற்றும் மனித திசுக்களைப் பரிசோதிப்பதில் சோதனைக்கூடங்கள் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன. தப்பான சோதனை முடிவுகள் தவறான பரிசோதனைக்கும் சிகிச்சைக்கும் வழிநடத்தலாம். ஏப்ரலில் உலகமுழுவதிலும் இருந்து 90-க்கும் அதிகமான நிபுணர்கள் இந்தப் பிரச்னையைக் கலந்தாலோசிக்க ஸ்விட்ஸர்லாந்திலுள்ள ஜெனீவாவில் கூடினர்.
“பெருநகர்கள்”
“இந்த நூற்றாண்டின் முடிவில், 10 மில்லியன் அல்லது அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட 21 ‘பெருநகர்கள்’ இருக்கும்” என டைம் பத்திரிகை கூறுகிறது. “இவற்றில், 18 உலகின் மிகவும் ஏழை நாடுகள் சிலவற்றை உட்படுத்தும், வளரும் நாடுகளில் இருக்கும்.” தங்களுடைய பெருநகர்ப் பகுதிகளில் ஏற்கெனவே பத்து மில்லியன் அல்லது அதிக மக்களைக் கொண்டிருப்பதாக பதிமூன்று நாடுகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. டோக்கியோ ஏறக்குறைய 2.6 கோடி குடிமக்களைக் கொண்டு முதலிடம் வகிக்கிறது. சாவோ பாலோ, நியூ யார்க் நகரம், மெக்ஸிகோ நகரம், ஷாங்காய், பம்பாய், லாஸ் ஏஞ்சலிஸ், போனஸ் அயர்ஸ், சியோல், பீஜிங், ரியோ டி ஜெனீரோ, கல்கத்தா, ஜகார்த்தா போன்ற நகரங்கள் அதைப் பின்தொடருகின்றன. ஆப்பிரிக்காவில் உள்ள சில நகரங்கள் ஆண்டுதோறும் 10 சதவீதம் வளர்ச்சியடைகின்றன. இது, இதுவரை பதிவுசெய்யப்பட்ட நகரமயமாகுதலின் மிக வேகமான வீதமாகும் என்று உலக வங்கி சொல்கிறது. அதிக மக்கள்தொகைகளோடு அடிக்கடி அதிகரித்த தூய்மைக்கேடும் நோயின் அச்சுறுத்தலும் சேர்ந்தே வருகின்றன.
பிள்ளை கொலையாளி
ஒவ்வொரு ஆண்டும் வளரும் உலகின் பிள்ளைகள் மத்தியில் ஏற்படும் 1.3 கோடி மரணங்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பகுதியை மூன்று நோய்கள் விளைவிக்கின்றன என்று ஆப்பிரிக்க செய்தித்தாள் லெஸோதோ டுடே குறிப்பிட்டது. நுரையீரல் அழற்சி, வயிற்றுப்போக்கு, மணல்வாரி அம்மை போன்றவையே இந்நோய்கள். கிடைக்கக்கூடிய மற்றும் செலவு செய்யமுடிந்த வழிகளில் இத்தகைய நோய்கள் குணப்படுத்தப்படவோ தவிர்க்கவோ முடியும் என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது. உதாரணமாக, மிகப் பெரிய பிள்ளை கொலையாளியாகிய நுரையீரல் அழற்சி, ஒரு வருடத்திற்கு 35 லட்சம் பிள்ளை மரணங்களுக்குக் காரணமாக இருக்கிறது. பெரும்பாலானவர்கள் விஷயத்தில் பிரச்னை பாக்டீரியாவாகவே இருக்கிறது. இது ஐந்து நாட்களுக்கு நோயுயிர்முறிகளை (antibiotics) உட்கொள்ளும் ஒரு சிகிச்சையால் கட்டுப்படுத்தப்படலாம். இதற்காகும் செலவு 25 செண்ட்டுகளே. வயிற்றுப்போக்கு ஒரு வருடத்திற்கு முப்பது லட்சம் இளம் உயிர்களைப் பலிகொள்கிறது. பெற்றோர் குறைந்த செலவுடைய வாய்வழி நீரூட்ட சிகிச்சையை (oral rehydration therapy) பின்பற்றியிருந்தால் அந்த மரணங்களில் பாதியளவு தவிர்க்கப்பட்டிருக்க முடியும். மணல்வாரி அம்மை ஒவ்வொரு வருடமும் 8,00,000 பிள்ளை மரணங்களை ஏற்படுத்துகிறது. இது அம்மைக் குத்துதலின் மூலம் தவிர்க்கப்படலாம் என அறிக்கை குறிப்பிட்டுக் காட்டுகிறது. மணல்வாரி அம்மை தடுப்பூசி மருந்துக்காகும் செலவு ஒரு பிள்ளைக்கு 50 செண்ட்டுக்கும் குறைவாகவே ஆகிறது. (g93 11/08)