மரங்கொத்திகள் ஏன் தங்கள் கழுத்தை முறித்துக்கொள்வதில்லை?
மரங்கொத்தி ஒரு மரத்தில் துளையிடும் சப்தத்தை நீங்கள் எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா? உலகளாவ சுமார் 200 இன மரங்கொத்திகள் இருக்கின்றன. ஆகவே, அது இடைவிடாது அலகினால் கொத்திக்கொண்டிருப்பது, ஒரு இயந்திர துப்பாக்கியைப்போல ஒலிப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். ஒரு மரங்கொத்தியின் அலகு மரத்தின் அடிமரத்தைக் கொத்திக்கொண்டிருக்கிறவாறு நான் பார்த்தபோது, ‘அது ஏன் தனது கழுத்தை முறித்துக்கொள்வதில்லை அல்லது அதன் மூளை பாதிக்கப்படுவதில்லை?’ என்று அது என்னை சிந்திக்க வைத்தது. மனிதர்களாகிய நாம் அதேபோன்ற தீவிரமான செயலில் ஈடுபட்டிருந்தால், நமக்கு ஒரு வர்மமுறை மருத்துவரின் (chiropractor) சேவையோ ஒரு மூளை அறுவை மருத்துவரின் சேவையோ தேவைப்பட்டிருக்கும்! எனவே, அதன் ரகசியம் என்ன?
ஐக்கிய மாகாணங்களின் கிழக்குப் பாதியில் காணப்படும், சிவந்த வயிற்றையுடைய மரங்கொத்தியை ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். வட அமெரிக்க பறவைகளின் புத்தகம் (Book of North American Birds) இவ்வாறு கூறுகிறது: “அதன் கனமான, உளி-வடிவ அலகைக்கொண்டு, மரப்பட்டையின் அடியிலிருக்கும் பூச்சிகளைக் கொத்தி எடுக்கிறது, மரத்தில் துளையிடும் வண்டுகளைப் பெற கொத்தித் துளையிடுகிறது, ஒரு கூடு அமைக்க குழிதோண்டுகையில் மரத்துண்டுகளை வெட்டித் தள்ளுகிறது.” அது மரத்தூளிலிருந்து தன்னைத்தானே எவ்வாறு பாதுகாத்துக்கொள்கிறது? “அதன் நாசித் துவாரங்கள் மெல்லிய மயிரிழையிலான இறகுகளால் ஆகிய ஒரு சிறிய திரையால் வசதியாக மறைக்கப்பட்டிருக்கின்றன.”
தலை மோதுவதுப்பற்றி என்ன? “மூளைக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க . . . , உறுதியான ஒரு கழுத்தும், தடித்த ஒரு மண்டையோடும், தடித்த வெளிச் சவ்விற்கும் மூளைக்குமிடையே உள்ள அதிர்ச்சியைத் தவிர்க்கும் ஒரு இடைவெளியும் விசேஷ பாதுகாப்பாளர்களாக வேலை செய்கின்றன.”
மற்றொரு மரங்கொத்தி, மஞ்சள் வயிற்றையுடைய சாறுறிஞ்சி (sapsucker), மரப்பட்டையில் ஒழுங்கான வரிசைகளில் துளைகளை இட்டு, அவற்றிலிருந்து சாறை உறிஞ்சுகிறது. சிவந்த வயிற்றையுடைய மரங்கொத்தி நம்பமுடியாத அளவு நீளமும், உருளை வடிவமும் உள்ள ஒரு நாக்கைப் பெற்றிருக்கிறது. அது பூச்சிகளைக் குத்துவதற்கு ஒரு முனையையும் கொண்டிருக்கிறது. ஆனால் அதைப்போன்றல்லாமல் சாறுறிஞ்சியோ, சாறை நக்கிக் குடிப்பதில் உதவும் மெல்லிய மயிரிழைகளைப் பெற்றுள்ள குறுகிய ஒரு நாக்கைக் கொண்டிருக்கிறது.
நிச்சயமாகவே, அத்தகைய நேர்த்தியான வடிவமைப்பு, ஒரு வடிவமைப்பாளர், யெகோவா இருப்பதை குறிக்கிறது. “நீர் எல்லாம் செய்ய வல்லவர் என்பதையும் எந்தத் திட்டமும் உம் ஆற்றலுக்கு அப்பாற்பட்டதன்று என்பதையும் நானறிவேன்,” என்று சொன்ன யோபுவுடைய வார்த்தைகளை நாம் மனத்தாழ்மையோடு பிரதிபலிக்கவேண்டும். தாவீது எழுதினார்: “உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.”—யோபு 42:2, தமிழ்க் கத்தோலிக்க பைபிள்; சங்கீதம் 139:14.